நீதிமன்றம் கொடுத்த ஒரு ஆணையின் படி மதுரையில் உள்ள பல தெருவோர ஆக்கிரமிப்புகள் இடிக்கப் பட்டன. அதென்னவோ எப்பவுமே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதைப் பார்க்கும்போது - அது குடிசையாயிருந்தாலும், கோபுரமாயிருந்தாலும் - எனக்கு ஒரு மகிழ்ச்சி. பல கதைகள் அந்த சமயத்தில் வெளி வந்தன. ஒரு தெருவோரக் கோயிலை இடித்த போது அந்தக் கோயிலுக்குக் கீழே ஒரு ரகசிய இருப்பிடம் இருந்ததாகவும், அது அந்தக் கோயிலை, அதிலுள்ள சாமியைக் 'காப்பாற்றி' வந்த ஒரு தாதாவின் மறைவிடமாகப் பயன்பட்டு வந்ததாகவும், அதுனுள்ளே பல ஆயுதங்கள், ரகசிய torture chamber ஒன்று இருந்ததாகவும் சேதிகள் வந்தன.அந்தக் கோயிலை இடித்ததற்காக அந்தப் பகுதி மக்களும், சிறப்பாக வியாபாரிகளும் மிகவும் சந்தோஷப் பட்டார்களாம். இந்தக் கோயில்களைப் பற்றிக் கேள்விப் படும்போது பராசக்தி வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
இன்னொன்று - பிளாட்பாரம் முழுவதையும் ஆக்கிரமித்து, ரோட்டையும் கொஞ்சம் விழுங்கி ஒரு கோயில். நான் மிக அடிக்கடி அதனைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தாலும்,அந்த எந்த சாமிக்குரிய கோயில் என்பது இதுவரை எனக்குத் தெரியாது. ஏனெனில் அந்தக் கோயிலை வெளியிலிருந்து பார்க்கும்போது பிரமாண்டமாகத் தெரிவது சாமி சிலையல்ல; சாமியாக ஆக்கப் பட்ட ஒரு சமூக, அரசியல்காரரின் சிலைதான். அதை இடிக்க நகராட்சி ஆட்கள் வந்தபோது நடந்ததாக நான் கேள்விப் பட்டது: அந்தக் கோயிலைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் பேசி, 'நீங்கள் இடிப்பதை விட நாங்களே இந்தக் கோயிலை முழுவதுமாக இடித்து விடுகிறோம்' என்று கேட்டுக் கொண்டார்களாம். அதிகாரிகளும் ஒத்துக் கொண்டு அந்தச் சிலையின் கால்பகுதியில் உள்ள ஓரிரு ஓடுகளை மட்டும் உடைத்துவிட்டு - ஒரு formality-க்குத் தான் - சென்றார்களாம். கதை அங்கேயே முடிந்துவிட்டது. அந்த சாமி தெரியாத அந்தக் கோயிலும், அதனுள்ளே இருந்த மனிதச் சிலையும் இன்னும் முழுவதுமாக பத்திரமாக இருக்கின்றன.
மாநகராட்சி அலுவலர்களுக்கு இடிப்பதற்காகச் செல்லும்போது போதுமான பாதுகாப்பு தரப்படவில்லை. அவர்கள் சிறப்புப் படி கேட்டு அது கொடுக்கப் படவில்லை. இடிக்கும் வேலைக்காக அவர்கள் வெளியே வந்தாலும் அலுவலக வேலையையும் பார்க்க வேண்டியிருந்ததால் அவர்கள் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் வேலையில் தொடர விரும்பவில்லை. - இப்படி பல காரணங்கள் சொல்லப் பட்டன. அது பற்றாது என்பது போல் பின்னால் நீதிமன்றமும் பல தடைகள் இட்டதாகவும் சேதி. இதனாலெல்லாம் வெகு வேகமாக நடந்த அந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நல்ல வேலை நடுவிலேயே நின்று போனது.
இந்த வேலை ஆரம்பித்தபோது இருந்த வேகத்தைப் பார்த்து 'ஆகா, நம் மதுரைக்குப் புதுமுகம் கிடைக்கப் போகிறது' என்று சந்தோஷமாக இருந்த எனக்கு 'அடப் போங்கப்பா, இவ்வளவுதானா?' அப்டின்னு ஆகிப் போச்சு.
இதில் இன்னொரு பெரிய வருத்தம். நான் பார்த்த ஒரு தெருக்கோயில் இடிபடாமல் போனதுதான் எனக்கு மிக வருத்தம். ஏனெனில், அந்தக் கோயிலை அந்த இடத்தில் அப்படிக்
கட்டியதை நினைக்கும் போது atrocious என்ற வார்த்தைதான் எனக்குத் தோன்றியது. எப்படி இப்படி மனசாட்சி இல்லாமல், எல்லோருக்குமே இடைஞ்சலான ஒரு செயலை அவ்வளவு தைரியத்துடன், அனாசியமாக,just like that, தான்தோன்றித்தனமாகச் செய்ய முடியும் என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அதிகாரங்களும், சட்டங்களும் யாருக்காக; அவைகளைச் செயல்படுத்த வேண்டிய சமூக அமைப்புகளும் எதற்காக என்றுதான் அதைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும். பேருந்துகள் செல்லும் முக்கியமான ஒரு ரோடு; அதனோடு நிறைய குடியிருப்புகள் இருக்கும் பகுதியிலிருந்து இந்த ரோட்டோடு வந்து சேரும் இன்னொரு பெரிய ரோடு. இந்த முக்கூட்டின் நடுவில், சாலையைப் பெருமளவு மறித்து, ரோட்டின் மேல் கட்டப் பட்டுள்ள இந்தக் கோயில்; இப்படி எல்லோருக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்தக் கோயிலுக்கு மிக அருகிலேயே ஒரு police outspost! அது எதற்காக இருக்கும் என்பதை நாமே கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான். நீங்கள் பார்க்க சில படங்கள் -
படம் 1. நீங்கள் நம்பித்தான் ஆகணும். சரியாக 3 ரோடு சேருமிடத்தில் கோவில்.
படம் 2. மேற்கிலிருந்து வரும் இந்த ரோடு கோயிலின் பின்புறச் சுவரில் 'கடவுளே!' என்று முட்டி நிற்கிறது.
படம் 3. முட்டி முடிந்து நிற்கும் சாலை
படம் 4.தெற்கிலிருந்து வரும் இப்பகுதிக்குரிய இம்முக்கிய சாலையின் முதுகில் முளைத்த கட்டியாய் தெருவை அடைத்து நிற்கும் கோவில்
படம் 5. அதே தெரு; வடக்கிலிருந்து தெற்காய். கோவிலுக்கு மிக அருகில் ஒரு சின்ன போலீஸ் அவுட் போஸ்ட். கடவுளைக் காக்கவா? கடவுளைக் காப்பவர்களைக் காக்கவா? (கடவுளுக்காய்?!) 'காத்திருந்து போகவும்' என்று ஒரு போர்ட் வேறு!
எத்தனை பேர் கடவுள் வழிபாட்டிற்காக இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். எத்தனை மக்கள் நித்தம் நித்தம் இதனைக் கடந்து செல்கிறார்கள். அதில் எத்தனையோ பேர் சட்டம் ஒழுங்கோடு தொடர்புள்ள வேலையில் உயர் பதவிகளில், மாநகராட்சியின் உயர்பதவிகளில், நீதிமன்றங்களோடு தொடர்புள்ள உயர்நிலையில் இருப்பவர்களாக இருக்கும். ஏன் இந்த சமூக மீறலைக் கேள்வி கேட்க யாருக்கும் தோன்றவில்லை என்பதுதான் எனக்குப் புரியாத ஒரு விஷயம்.
அதோடு இக்கோவிலைப் படம் எடுக்கப் போகிறேன் என்று அந்தப் பகுதியில் உள்ள நண்பனிடம் சொன்னேன். அதற்கு அவன் 'உனக்கு ஏண்டா, இந்தப் பொல்லாப்பு. அப்படியே எடுப்பதானால் சுத்தி முத்தி பார்த்து எடு' என்று பயமுறுத்தினான். அதோடு 'வேணும்னா ராத்திரி வந்து எடேன்' என்றான் அப்பாவியாக! ஆக நான் படம் எடுக்கும்போது கொஞ்சம் சுற்றுச் சூழல் எல்லாம் கொஞ்சம் பார்த்துக்கொண்டு, ஏதோ ஒரு investigative journalism செய்யும் போது உண்டாகும் tension-ஓடுதான் படங்களை வேக வேகமாக எடுத்தேன்.
நாத்திகன் என்பதால் வரும் கோபமில்லை இது; ஒரு குடிமகனாக வரும் கோபம்.
பி.கு.
இப்பதிவுக்கு "நம் யாருக்கும் **** இல்லை." என்று தலைப்பிட நினைத்தேன். Fill up the blank என்பது போல் தலைப்பில் இடம் விட்டு அதை உங்கள் இஷடத்திற்கு நிறைவு செய்து கொள்ளச் சொல்ல நினைத்தேன். நாம் யாருக்கும் வெட்கம் / சுய ஒழுக்கம் / நியாய உணர்வு / தார்மீகக் கோபம் / தைரியம் / பொறுப்பு இல்லை - இப்படி ஏதாவது ஒன்றைப் போட்டு பூர்த்தி செய்து கொள்ளலாமே என்று நினைத்தேன்.
இன்னொரு பி.கு.
இந்தக் கோவில் முதலிலே இருந்து வேறு வழியில்லாமல் இந்த ரோடுகள் போடப் படவில்லை. ஏற்கென்வே இருந்துவந்த சாலைகளை மறித்து சமீபத்தில் எழுந்த கோவில் இது.
... ... ... ... ... தொடரும் ....
... ... ... ... யாரைத்தான் நொந்து கொள்வதோ ...2