Monday, July 02, 2007

226. மதுரைத் தேர்தல் துளிகள்

ஆளே ரொம்ப நாளா காணாம போயிருந்தாலும் வந்ததும் சுடச் சுட ரெண்டு பதிவு போட்டிருக்கிற தமிழினி தன் பதிவில் சொல்லியிருந்த ஒரு 'வசனம்' இது:
//கைநீட்டீ காசை வாங்கிட்டா சரியா குத்திடறான்.பண விஷயத்தில் துரோகம் செய்ய தமிழன் நினைக்கறதேயில்லை//

இதப் படிச்சதும் நம்ம நேரடி அனுபவத்தைச் சொல்லணும்னு நினப்பு வந்திருச்சி. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே இந்த காசு விவகாரம் தெரிய ஆரம்பிச்சது. மொதல்ல சொன்ன ரேட்டு 500 ரூபாய்தான். ரெண்டு பெரிய கட்சி பெயரையும் சொல்லியிருக்காங்க தங்கமணிட்ட படிக்கிற பசங்க. தங்கமணி வேலை பார்க்கிற பள்ளிக்கூடம் மதுரை மேற்குத் தொகுதியின் முக்கிய இடத்தில் இருக்கிறது. நாள் நெருங்க நெருங்க பணம் குடுக்கிறதில் ஆளும் கட்சியின் பெயர் மட்டுமே வந்தது. தங்கமணியுடன் வேலைபார்க்கும் ஒருவரே சொன்னாராம் அவங்க வீட்டுக்கு ரூபாய் 1500 பட்டுவாடா செய்யப் பட்டது என்று. பிக்ஸ் பண்ணினது ரூபாய் 2000; அதில் 'நெல்லுக்கு பாயும் நீர் புசியுமாமே அங்கே உள்ள புல்லுக்கும்' என்ற தத்துவத்தில் 1500 மட்டுமே இறுதியாகக் கொடுக்கப் பட்டது என்ற பேச்சும் இருந்தது.

எஸ். எஸ். காலனின்னு இன்னொரு பகுதி. அங்கிருக்கும் ஒரு நண்பர் சொன்னது: 'எங்க ஏரியாவில் யாரும் பணம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி விட்டோம்.' முதல்ல சொன்னது கொஞ்சம் ஏழைபாழைங்க இருக்கிற இடம்; இரண்டாவது மிடில்க்ளாஸ் & வசதிப் பட்டவங்க இருக்கிற இடம். பரவாயில்லையேன்னு நினச்சுக்கிட்டேன்.

காசு கொடுக்கிறதுக்கும் கட்சிகளுக்குள் ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கிட்டது மாதிரி முதல் சொன்ன பகுதியை ஆளுங்கட்சி எடுத்துக் கொண்டதாகவும், வேறு சில ஏரியாக்களை அடுத்த கட்சி தத்து எடுத்துக் கொண்டதாகவும், முதலில் இரு பெருங்கட்சிகளுக்கும் பணம் கொடுப்பதில் போட்டி இருந்தாலும் பின்னால் எதிர்க்கட்சி போட்டியில் பின் தங்கிவிட்டது / காசை அவர்களே வைத்துக் கொண்டார்கள் என்று பேச்சும் வந்தது.

தேர்தலுக்கு முந்திய நாள் பழக்கப்பட்ட ஆட்டோகாரர் தன் குடும்பத்துக்கும் மொத்தமா 1500 வந்ததாகச் சொன்னார். நான் ரொம்ப மேதாவித்தனமா, கொடுத்ததை வாங்கிகிட்டு ஓட்டை மாற்றிப் போட்டுவிட வேண்டியதுதானே என்றேன். அது சரியில்லை என்றார்.

"காசு கொடுக்கிறவங்களை அப்படித்தான் தண்டிக்கணும்; அப்பதான் அடுத்ததடவை காசு யாரும் கொடுக்க மாட்டாங்க".

"இல்ல சார், அது தப்பு".

"காசு கொடுக்கிறது தப்பு இல்லையா?", என்றேன்.

"காசு வாங்குறதும் தப்புதானே!", என்றார் பதிலடியாக.

அவரின் நியாய உணர்ச்சியும், அதனால் வாங்குன காசுக்கு ஓட்டு போட்டே ஆகணும் அப்டிங்கிற உணர்ச்சியையும் பார்த்து, எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் நின்றேன்.

அதன்பிறகு அவரே சொன்னார்: "நீங்க சொல்றது மாதிரியும் சில பேர் சொல்றாங்க; அதிலேயும் அந்த மாதிரி சொல்றவங்க, அவனுக்கும் வேண்டாம்; இவனுக்கும் வேண்டாம்; விஜயகாந்த கட்சிக்கு போடலாம்'னு சொல்றாங்க. பார்ப்போம் என்ன ஆகுதுன்னு" என்றார்.

இந்த நியாய உணர்வின் தாக்கமே 75 விழுக்காடு ஓட்டு விழுந்ததற்கும், விஜயகாந்த் கட்சிக்கு இந்த அளவு ஓட்டு விழுந்ததற்கும் உரிய காரணங்களாக இருக்கலாம். என்னென்னமோ நடக்குதுங்க அரசியலில்.

வாழ்க ஜனநாயகம்!

19 comments:

ஜோ/Joe said...

பணம் கொடுத்தது தான் ஆளும் கூட்டணி 50% -க்கு மேல் வாக்குகளை அள்ளியதுக்கு காரணம் என்பதை நன்பவும் முடியல்ல ..நம்பாம இருக்கவும் முடியல்ல.

ஆனா ஒண்ணுங்க..இரட்டை இலையில கழுதை நிண்ணாலும் குத்திப்புடுவாங்க மதுரைக்காரங்க-ண்னு சொல்லுறதெல்லாம் டுபாக்கூர்.

சிவபாலன் said...

சார்

விஜயகாந்த அடுத்த தேர்தலில்(MP தேர்தலில் கூட) ஒரு மறுக்க முடியாத சக்தியாக இருப்பார்..

விஜயகாந்த காட்டில் (பண) மழை! Ha Ha..

Sridhar V said...

முதல் அதிர்ச்சி - ஒரு ஒட்டின் விலை 1500 உரூபாயா? inflation ரொம்பத்தான் ஏறிவிட்டது போல...

முந்தைய பாராளுமன்ற தேர்தலில் எனக்கு நேர்ந்த அனுபவம். ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் இதே போல் தேர்தல் நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது, "அதிமுக காசு கொடுக்கிறாய்ங்க சார்... 300-400 வரை தர்றாங்க... மோகன் அப்படி எல்லாம் இல்ல சார். " என்று நியாயம் பேசினார். கம்யூனிஸ்ட் வேட்பாளரான் மோகன் அமோகமாக ஜெயித்தார்.

ஹ்ம்ம்ம்... என்னத்த சொல்ல....

தருமி said...

ஜோ,
வேலையில் வேகம் ஆளும் கட்சியிடம்தான் பார்க்க முடிந்தது.

//இரட்டை இலையில கழுதை நிண்ணாலும் குத்திப்புடுவாங்க மதுரைக்காரங்க-ண்னு ...//

ஆனாலும் மதுரக்காரங்களுக்கு ரொம்பவே நல்ல பேருதான் போங்க..!
மதுரைவீரன் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு என்னைக்கி வீர வாள் கொடுத்தாய்ங்களோ அன்னையிலிருந்தே இந்த பேருதான்!

தருமி said...

சிவபாலன்,
எனக்குஅப்படி தோணலை. பெரிய கட்சி ரெண்டுலயும் ஏதாவது பெருசா நடந்து அதனால் வி.காந்து காட்டில மழை பெஞ்சா உண்டு. இல்லைன்னா, இப்படியே கொஞ்ச நாள் கைக்காசு போற வரைக்கும் கேப்டன் கட்சி போகும்; அவ்வளவுதான்.

தருமி said...

ஸ்ரீதர் வெங்கட்,
ஓட்டுக்கு 1500 இல்லை. வீட்டுக்கு 1500. ஆனாலும் பணவீக்க எதிரொலி தெரிகிறது உண்மைதான்.

இலவசக்கொத்தனார் said...

வாங்கி எதாவது நல்ல காரியத்துக்கு டெனேட் பண்ணிட்டு, அப்புறம் நம்ம மனசுக்கு பிடிச்சா மாதிரி ஓட்டு போடலாம். வேண்டாமுன்னு சொன்னா அவங்க பாக்கெட்டுலதானே இருக்கும்.

தருமி said...

கொத்ஸ்,
வாங்கினத என்ன பண்றோம் அப்டின்றது ஒரு பக்கம். வாங்கியவனுக்கு எதிர்த்தாற்போல் ஓட்டுப் போட்டால் இந்த அசிங்கம் மறையாதோ என்றுதான் அவரிடம் கேட்டேன். ஆனால் மக்களது 'நன்றியுணர்வு' ஆச்சரியப்பட வைத்தது. அதோடு அந்த ஆட்டோகாரர் சொன்னாரே ' வாங்கியதால் நானும் தப்பு செய்கிறேனே' என்று அதற்குப் பதில் என்ன?

குட்டிபிசாசு said...

இதெல்லாம் அரசியல்ல சாதரணம் சார்

சாலிசம்பர் said...

காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கலையில் முன்னோடி அதிமுக.ஊழலை தமது பிறப்புரிமையாக கொண்டுள்ள கட்சியிடம் மோதும் போது திமுக நேர்மையாக நடந்து கொண்டால் காணாமல் போய்விடும்.

G.Ragavan said...

இதெல்லாம் ஜகஜம் தருமி சார். எரியிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி!

உண்மைத்தமிழன் said...

மதுரைக்காரங்களாவது காசு வாங்காம இருக்கிறதாவது.. பொணம் சுடுகாட்டுக்குப் போறப்போ நெத்தில இருக்குற ஒத்தை ரூபாயைக் கூட கணக்கா சுடுறவனுகளாச்சே.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம குத்தித் தள்ளிருக்காக.. விடுங்க.. அவுங்களுக்குத் தேவையானது நிலம், வீடு, டிவி. அதான் வரிசையா ஒண்ணொண்ணா கிடைக்குதே. அப்புறமென்ன?

பத்மா அர்விந்த் said...

தருமி
பணம் அதிகமா கொடுத்த கட்சி தோத்து போனா, ஏன் போடலைன்னு கேக்க மாட்டாங்களா? யார் போடலன்னு தெரியாட்டாலும், நிறைய பேர் ஏமாத்தினாங்கன்னு தெரியும்தானே.
கவலைப்பாடாதீங்க. இந்த பணம் கொடுத்து ஓட்டு வாங்குறது எல்லா ஜனநாயக நாட்டிலும் இருக்கு. உங்க ஊர்ல 1500 ரூபாய்னா, இங்க லப்டாப், இல்லாட்டி ஐபோன், ஐபாட் இப்படி ஏதாவது:))சாதாரண முனிசிபாலிட்டி தேர்தல்ல 300 டாலர் தந்தாங்களாம்.

தருமி said...

பத்மா,
நெஜமாலுமேவா ..
அடப் பாவமே .. அங்கேயும் அப்படியா? நம்புவதற்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு! 'நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து' வந்திருக்கும் செய்தி என்பதால் மட்டுமே நம்புகிறேன்.

தருமி said...

உண்மைத் தமிழன்,
//மதுரைக்காரங்களாவது காசு வாங்காம இருக்கிறதாவது.. //
என்னமோ திண்டுக்கல்லுக்காரக எல்லோரும் புடம் போட்ட தங்கக் கட்டிகள் மாதிரிதான் .. இல்ல..?

பாருங்க, அமெரிக்காவையே உதாரணம் காட்டியிருக்காங்க பத்மா. வாசிச்சிட்டு மதுரக்காரவுகளைப் பத்தி சொல்லுங்க.

தருமி said...

ஜாஜா,
அவனை நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்துறேன்' - தத்துவமா?

பத்மா அர்விந்த் said...

தருமி
இங்கேயும் கல்லறையில் இருப்ப்வர்கள் ஓட்டு போடுவதும், சற்றே தாமதமானால் உங்கள் ஓட்டு உங்களுக்காக போடப்படுவதும் உண்டு. நிறைய பண செலவழிப்பும் உண்டு. ஆனால் நம் நாட்டை போல பரவலாக இல்லாமல், இந்த கட்சியை சார்ந்தவர் என்று தங்கள் பெயரை தந்து இருப்பவர்கள் மத்தியிலும் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவரிடம் மட்டுமே நடக்கும். உதாரணமாக தோட்டத்தில் ஒரு கட்சி கொடியைஇ பறக்க அனுமதி தருபவர், கட்சி சார்பு கூட்டங்கள், டின்னர் என்று போகும் மக்களிடையை பிரபலம். சாதரணமாக நம் போன்றவர்களை பாதிக்காது. பிரச்சார கூட்ட சத்தங்கள், சுவரில் விளம்பர்ங்கள் சத்தமான பாடல்கள் இவையும் கிடையாது அனுமதி பெற்றால் தவிர. மற்றாடி கள்ள ஓட்டும் உண்டு காசு பரிமாற்றமும் உண்டு. இந்தியா இதில் முனைவர் பட்டத்தகுதி என்றால் அமெரிக்கா கல்லூரி படிப்பு, அவ்வளவுதான் வித்தியாசம்.

தருமி said...

கு.பி.,
ஜிரா,

அதுவும் சரிதான் .. நமக்கு இதுமாதிரி பல விஷயம் சகஜமாத்தான் ஆகிக்கிட்டு இருக்கு. அதுதான் பெரிய அபாயம். கொஞ்சம் ஒரு தார்மீகக் கோபமாவது நமக்குள்ளேயாவது கொள்வோமே என்றுதான் இதெல்லாம் எழுதுறது. வேறென்ன?

தருமி said...

பத்மா,
//பிரச்சார கூட்ட சத்தங்கள், சுவரில் விளம்பர்ங்கள் சத்தமான பாடல்கள் இவையும் ...//

நம்ம தேர்தல் கமிஷன் செய்த நல்ல காரியங்களில் முக்கியமான ஒன்று நீங்கள் சொல்லியுள்ள இந்த தொல்லைகள் பல இப்போது மிகக் குறைச்சல்.

Post a Comment