Thursday, November 15, 2007

241# + * x $-% + @x& + ^() = தமிழ் சினிமா ! :(

மேலே தலைப்பில் குடுத்திருக்கிற 'கணக்கு' / பார்முலா புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். புதுப்படம் ஒண்ணு வரப்போகுதுன்னு வச்சுக்கங்க. நம்ம டைரடக்கர்கள், தொழில் விற்பன்னர்கள், அதில் வரும் நடிக, நடிகையர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமா சொல்ற பார்முலாதான் மேலே தலைப்பில் கொடுத்திருக்கிறது.

புரியலையா? எப்படிப் புரியும் உங்களுக்கு! விளக்கம் சொல்லியே ஓஞ்சி போயிடுவேன் போல இருக்கு !!

இப்போ பாருங்க. The officer and the gentleman அப்டின்னு ஒரு இங்கிலீசு படம் வந்திச்சி. நல்ல படம். நம்ம ஊரு ஃபேமஸ், டேவிட் கியர் ரிச்சர்ட் கியர் நடிச்ச படம். ரெண்டு நண்பர்கள். ஒருத்தர் நம்மாளு டேவிட் ரிச்சர்ட் கியர்; பட்டாளத்தில சேருவாங்க; கடுமையான ட்ரெய்னிங் இருக்கும்; ஒரு கருப்பர் அவங்களுக்கு ட்ரெய்னிங் குடுப்பாரு. இதுக்கு நடுவில நண்பருக்கு காதல் வந்து, கனியாம காயாகிப் போக அவரு தற்கொலை பண்ணிக்குவாரு. நம்மாளு, டேவிட் கியர் கடைசியில் ஆபிசரா ஆவாரு; அப்போ அந்த ட்ரெயினிங் கொடுத்தவரே இவருக்கு சல்யூட் அடிச்சி ஆபிசருக்கு மரியாதை செய்வாரு.

சுபம்.

இப்போ இதை நம்ம தமிழ்ப்படமா மாத்துவோமா?

"மீண்டும் The officer and the gentleman"

முதல்ல, முக்கியமா நம்ம ஹீரோ, அவர் நண்பர் இருவரையும் அறிமுகம் செய்றதுக்காக கதை ஆரம்பிச்ச உடனேயே ஒரு கோயில் செட் முன்னால ஒரு குத்துப் பாட்டு போட்டுர்ரோம். பாட்டு பாதி போனதும் கூட்டத்தில இருக்கிற கதாநாயகி பகல் கனவில் அவங்களும் சேர்ந்து அந்தக் குத்துப்பாட்டுல ஐக்கியமாயிருராங்க.

ஹீரோ யாரையும் லவ் பண்ணாம காரியத்திலேயே கண்ணாயிருப்பார். ஆனால் அந்த கதாநாயகி, அதாங்க அந்த ட்ரெய்னிங் சென்டரின் தலைவரின் பொண்ணு, அவரை விரட்டி விரட்டி லவ்ஸ் பண்ணுது. அதுக்கு அடிக்கடி கனவு காண்ற வியாதி வேற இருக்கு. அதனால் கலர் கலரா, வெளிநாடு உள்நாடுன்னு பல இடத்தில நூறு நூறு பேரோடு நம்ம ஹீரோவோடு கனவில டூயட் பாடுது.

நண்பர் காதலிப்பாரே ... அவருக்கு ஒரு மெலடி டூயட்; அத ஒரு பிறந்த நாள் விழாப் பாட்டா வச்சுக்குவோம். பிறந்த நாள் பாட்டை ரொம்ப சோகமா இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாடுவாங்க; பாட்டு வரிகள் இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் புரியும்; ஆனா வேற யாருக்கும் புரியாது. அவங்க எல்லாரும் பேசாம செம ஜாலியா, கேக் சாப்பிடுவாங்க. சரியா ..

அடுத்து, காதல் அம்போ ஆனதும் ஒரு pathos. இவரு ஒரு மலைக்கு இந்தப் பக்கம் இருந்து பாட, அந்த மலைக்கு அந்தப் பக்கம் இருந்து பதிலாக பொண்ணு பாடுது .. (என்னது, நிறைய தமிழ்ப்படத்தில இதுமாதிரி சீன் வந்திருக்கா .. அதே, அதே!)

நடுவில அந்த பொண்ணின் அண்ணன்காரங்கள் & அடியாட்கள் இவங்களுக்கும் நண்பனுக்கும் ஒரு ஃபைட். (என்னது, காதலுக்கு மரியாதை நினைவுக்கு வருதா; அதுக்கு நான் என்ன பண்றது?) ஆனா, பைட் பூராவும் Matrix பட ஸ்டைலில் வச்சுக்குவோம். ( Matrix படம் ஒரு fantasy அப்டின்றீங்களா? அதெல்லாம் கேட்கப் படாது) கதாநாயகன் திரும்பினா, கையைத் தூக்கினா அந்தப் பக்கம் நாலு இந்தப் பக்கம் நாலு - எல்லோரும் காத்தில பறந்து பறந்து போறாங்க. (பின்னே கயிறு கட்டி இழுத்தா போக மாட்டாங்க!) நிச்சயமா காத்தில நாலஞ்சு கரணம் அடிச்சி விழுகிறதுமாதிரி கொஞ்ச பேரைக் காண்பிக்கணும். இந்த சண்டை நடக்கும்போது நம்ம ஹீரோ உதவிக்கு வந்த பிறகுதான் சண்டை சூடு பிடிக்குது. ஹீரோ வந்தபிறகுதான் தள்ளு வண்டியில கலர் கலரா பொடி இருக்கு; அதில அடியாட்கள் விழுந்து கலர் எஃபெக்ட் கொடுக்குறாங்க; கையில அருவாளை வீசுறதில காய்கறிக்கடையில இருக்கிற புடலங்காயெல்லாம் வெட்டுப் படுது; ஒரே பயங்கரம்தான்!

இந்தமாதிரி ஆபீசர் ட்ரெய்னிங் அப்டின்னா அங்க ஒரு காமெடியன் இல்லாட்டி என்ன பண்றது? இந்த ரெண்டு நண்பர்களுக்கும் நடுவில ஒரு மூன்றாவது ஆளு. அவருக்கும் அந்த ட்ரெய்னிங் கொடுக்கிற கருப்பருக்கும் எப்போவும் லடாய். கருப்பர் 'குண்டக்க மண்டக்க' கேள்வி கேட்க நண்பர் தெறிச்சி ஓடுவார் எப்பவும். வசனத்தில நடிப்புல சிரிப்பு வராம போய்ட்டா என்ன பண்றது? அதனால நாலஞ்சி இடத்தில இந்த காமெடியன் போறவங்க வர்ரவங்க கிட்ட எல்லாம் அடி வாங்குறார்.

கடைசியில நண்பர் பேனாவினால 'விஷம்' அப்டின்னு எழுதி ஒட்டியிருக்கிற ஒரு சின்ன பாட்டில்ல இருக்கிறதை அப்படியே அண்ணாந்து வாயில ஊத்திக்கிடுறார். பேக்லலைட் எஃபெக்ட் இப்போ கொடுக்கிறோம். அப்போது நம்ம இரண்டாம் கதாநாயகி ஓடிவந்து காலி பாட்டிலைப் பார்த்துட்டு ஒரு பக்க வசனம் ஒண்ணு கடல் மடை திறந்தது மாதிரி பேசுறாங்க. பதிலுக்கு அவர் திக்கித் திக்கிப் பதில் வசனம் பேசுறார். வாயிலிருந்து ரத்தமெல்லாம் வருது. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறாங்க. அப்போ கதாநாயகன் வர்ரார். உயிரைக் கொடுத்தும் உன்னைக் காப்பாற்றுவேன் அப்டின்னுட்டு அங்க நிக்கிற கார், ஜீப் எதுவும் வேண்டாம்னுட்டு தோளில் தூக்கிப் போட்டுக்கிட்டு நடந்தே மருத்துவ மனைக்கி ஓடுறார் .. ஓடுறார். அந்தப் பொண்ணு சாமி சிலைக்கு முன்னால் நின்னு பாட ஆரம்பிச்சிர்ராங்க. சாமி சிலையில் இருந்து பூ ஒண்ணு கீழே விழுகுது. அதே நேரத்தில் அங்க ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் 'நல்ல வேளை, சரியான சமயத்தில கொண்டு வந்தீங்க; இன்னும் 27 நிமிஷம் லேட்டாயிருந்தாலும் ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது' அப்டின்னு சொல்லிக்கிட்டே கையைத் தொடச்சிக்கிட்டு வர்ரார்.

சுபம். இப்போ மறுபடியும் முதல் பத்தியைப் படியுங்க.

இப்போ புரிஞ்சிருக்கணுமே .. நம்ம தமிழ்ப்படம் எது புதுசா வந்தாலும் இயக்குனர்கள் இன்னும் மற்றவங்க எல்லோரும் சொல்றது: இந்தப் படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமும் இருக்கும் - பாட்டு, டான்ஸ், குத்துப் பாட்டு, சென்டிமென்ட், காமெடி - இப்படி எல்லாம் வச்சிருக்கோம். தயவுசெஞ்சி எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க அப்டிம்பாங்க. ஐயா, சாம்பார் செய்யும்போது சாம்பார் பொடி மட்டும்தானே போடணும்; ஸ்டாக்கில இருக்கிற பொடி எல்லாத்தையும் ஒண்ணா போடுவேன்னா, அது என்ன குழம்புன்னு சொல்றது. அதைச் சாப்பிட்டு தொலைக்க வேண்டியதிருக்கே ... (உன்ன யாரு படம் பார்க்கச் சொன்னா அப்டின்னு கேட்டுராதீக !)

நம்ம ஆளுங்களும் எந்த லாஜிக்கும் வேணாம்; இந்த ஃபார்முலாவே போதும் அப்டின்ற நிலைமையை விட்டு மாறவேயில்லை. படம் பார்க்குறது entertainment-க்குத்தான்; அதனால் இப்படித்தான் படம் இருக்கணும் அப்டின்னு மேதாவித்தனமா பேசிட்டு, அந்தப் பக்கம் போய் வெள்ளைக்காரன்னா வெள்ளைக்காரந்தான்யா, எப்படி படம் எடுக்குறாய்ங்க அப்டின்னு சொல்லிட்டு போறோம். அவனுங்க படத்திலேயும் காமெடி இருக்கு; பாட்டு இருக்கு; ஜுஜா வேலையிருக்கு - ஆனா அது அது தனித்தனி படமா இருக்கு. காமெடியையும் சீரியஸ் கதையையும் ஒண்ணா சேத்து பினைஞ்சி கொடுக்கிறதில்லை. நம்ம ஊர்ல நம்ம கதாநாயகன் வேல்கம்பை அப்டி ஊன்றி வச்சார்னா, அந்தக் குச்சி மட்டும் எதிராளிகளை ஒரு சுத்து சுத்திட்டு மறுபடி அவர்ட்டயே வந்து நிக்குது; தியேட்டர்ல விசில் பறக்குது. அட, அவங்களை மாதிரி நாமும் ரசனைகளைப் பிரித்து தனித்தனியே வேறு வேறு படங்களாக எடுக்கக் கூடாதா? genre அப்டின்னு சொல்லுவாங்களே அதத்தான் சொல்றேன். காமெடி படம்னு எடுத்தா அதில எத வேணும்னாலும் காமிக்கலாம். கரடி என்ன சிங்கம் கூட எதிர்த்தாப்பில வந்து மூஞ்சில எச்சி துப்பிட்டு போறது மாதிரி காமிக்கலாம். ஆனால், உதாரணமா, பம்பாய் சீரியஸ் படம் - சரி; பின் அதில எதுக்குக் குத்துப் பாட்டு? copy cat இருக்காரே - மணிரத்தினம் - அவரின் படங்களில் (கன்னத்தில் முத்தமிட்டால் தவிர)குத்துப் பாட்டு இல்லாத படம் இல்லை என்றே நினைக்கிறேன். பின் ஏன் இவரை இந்த மீடியாக்காரர்கள் இந்த அளவு தூக்கி வைத்துப் பேசுகிறார்களோ?

ஆக இந்த ஜென்மத்தில் நம் தமிழ்ப் படங்கள் அதுமாதிரி genre வாரியாக வரப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ...


"லிங்குசாமிக்கு ஜே!

"முருகதாஸுக்கு ஜே !

coffee with anu நிகழ்ச்சியில் சூர்யா, முருகதாஸ் கலந்துகிட்ட நிகழ்ச்சி. இப்ப இருக்கிற இளம் நடிகர்களில் விக்ரம், சூர்யா ரெண்டு பேரையும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பார்க்கிறதுக்கே நல்லா இருக்கு. ஒரு துடிப்போடு casual-ஆக இருக்கிறது நல்லா இருக்கு. ஆனா அந்த நிகழ்ச்சியில் பிடிச்சது முருகதாஸ் சொன்ன ஒரு விஷயம். தமிழ்த் திரைப்படங்களை அடுத்த தளத்துக்கு எடுத்திட்டுப் போகணும் அப்டின்னு சொல்லும்போது இந்த genre பற்றிச் சொன்னார் - இதே சொல்லைப் பயன்படுத்தினாரென்றே நினைக்கிறேன்.

அப்பாடான்னு இருந்திச்சி. அட ஒரு இயக்குனருக்காவது இந்த அடிப்படை விஷயத்தைப் பற்றிய தெளிவு இருக்கேன்னு சந்தோஷமா இருந்திச்சு. இனிம அந்த விஷயம் பரவி, மற்ற இயக்குனர்களை அதை பாதித்து அவங்களும் மாறி நம் மக்களும் மாறி ... ம்ம்..ம்.. இதெல்லாம் இப்ப நடக்குற விஷயம் இல்லைதான். இருந்தாலும் முதல் முதல்ல இதைச் சொன்ன-

"முருகதாஸுக்கு ஜே !

பி.கு.
ரிச்சர்ட் கியருக்குப் பதிலா டேவிட் கியர் ..
முருகதாஸுக்குப் பதிலா லிங்குசாமி ..

மாத்தி மாத்தி பேருகளைப் போட்டுட்டேன்; மன்னிச்சுக்கோங்க.
நமக்கு பெயரா முக்கியம் ..விஷயம்தான முக்கியமுங்க (கீழ விழுந்தாலும் ... அப்டின்னு என்னமோ சொல்லுவாங்க ,, இல்ல?!)

48 comments:

வடுவூர் குமார் said...

என்னவோ போங்க சார்.. இப்பதான் படம் பார்க்க போகலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் போது இந்த மாதிரி மொத்தத்தையும் சோல்லிட்டீங்க,இனிமேல் போக interest இல்லை.:-))
ஆமாம்,லின்ங்கு சாமி வீடியோ தொடுப்பு இல்லயா?

பூனைக்குட்டி said...

An officer and a gentleman என் ஃபேவரைட் படங்களில் ஒன்று. இன்னும் மனதிலேயே நின்றுகொண்டிருக்கும் படம்.

30 முறையாவது பார்த்திருப்பேனாயிருக்கும். ;)

nagarajan ramamurthy said...

Officer and Gentleman -

The hero is Richard Gere not David Gere

A.R.Murugadass m Surya vm allava
Coffee with Anu vil

nagarajan ramamurthy said...

It s Richard Gere in THE OFFICER AND A GENTLEMAN not David

பினாத்தல் சுரேஷ் said...

லிங்குசாமிக்கு ஜேவா? ஞாபகம் வருதே.. பீமாவும் வேஸ்ட்டா ;-))

வரீங்களா இந்த பார்முலாவுல ப்ளாஷ்லேயே ஒரு படம் எடுத்து விடலாம்?

ஒப்பாரி said...

ஐயா, இயக்குனர் முருகதாஸ் என்று நினைக்கிறேன்.

Unknown said...

பார்ட்னர்

ஆங்கில படங்களுக்கு ரசிகர் எண்ணிக்கை நூறு கோடியை தாண்டி இருக்கும்.உலகம் தழுவிய சந்தை அது.சயின்ஸ் பிக்ஷன் ரசிகர் என எடுத்தாலே சுமார் 10 கோடி ரசிகர்கள் இருப்பார்கள்.அவர்களை குறிவைத்து எடுத்தால் படம் ஓடும்.வரலாற்று படம் எடுத்தாலும்,மிருகங்களை பற்றிய படம் எடுத்தாலும் அதற்கு ரசிகர்கள் குறிப்பிட்ட அளவில் இருப்பார்கள்.படம் ஓடும்.

டிவிக்களை எடுத்து கொள்ளுங்கள்...ஆங்கிலத்தில் மிருகங்களுக்கு தனி சேனல், வரலாற்றுக்கு தனிசேனல்,ஜியாக்ரபிக்கு தனிசேனல்,பழைய படங்களுக்கு தனிசேனல்,காமடி படங்களுக்கு,ஆக்ஷன் படங்களுக்கு என வகை தொகை இல்லாமல் சேனல்கள் இருப்பது சாத்தியப்படுவது உலகம் தழுவிய பரந்துவிரிந்த மாபெரும் சந்தை இருப்பதால் தான்.

ஐந்துகோடி மக்கள் மட்டுமே ஆடியன்சாக இருக்ககூடிய தமிழ் சினிமாவுக்கும்,சேனல்களுக்கும் இதெல்லாம் சாத்தியமில்லை.மதியம் குழந்தைகள் நிகழ்ச்சி,.சாயந்திரம் சீரியல்,இரவு மிடநைட் மசாலா என ஒரே சானலில் பல்வேறு ஆடியன்சையும் திருப்திபடுத்த வேண்டிய நிலை.சினிமாவுக்கும் இதே நிலைதான்..

மார்க்கெட் செக்மென்டேஷன் சாத்தியமாக பரந்து விரிந்த சந்தை இருப்பது அவசியம்..

வால்பையன் said...

லிங்குசாமியின் ஆனந்தம் பார்த்து விட்டு நானும் அப்படி தான் நினைத்தேன்.
அருமையான குடும்ப சித்திரம்.
ஆனால் ரன் என்று ஒரு படம் எடுத்தவரும் அவரே, நீங்கள் சொல்வது போல் அரிவாள், ரத்தம், காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த மசாலா கலவை தான் அது,

//coffee with anu நிகழ்ச்சியில் சூர்யா, லிங்குசாமி கலந்துகிட்ட நிகழ்ச்சி//
உண்மையில் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. எல்லா டைரேக்டருமே
சொல்வது கலை படம் எடுக்க வந்தது போல தான்,
ஆனால் மசாலா தமிழர் வாழ்வில் இரண்டற கலந்து விட்டது.
பாலு மகேந்திராவின் '' ஜுலி கணபதி '' படத்திலேயே ஒரு குளியல் பாட்டு வைத்து விட்டார்.
நல்ல படம் வந்தால் கண்டிப்பாக சொல்லவும்
நன்றி
'' வால்பையன் ''

குட்டிபிசாசு said...

ஐயா,

சூர்யா & முருகதாஸ் தான் காபி வித் அனுவில் வந்தவர்கள்.

குட்டிபிசாசு said...

//அதே நேரத்தில் அங்க ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் 'நல்ல வேளை, சரியான சமயத்தில கொண்டு வந்தீங்க; இன்னும் 27 நிமிஷம் லேட்டாயிருந்தாலும் ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது' அப்டின்னு சொல்லிக்கிட்டே கையைத் தொடச்சிக்கிட்டு வர்ரார்.//

ட்ரிட்மெண்ட்க்கு முன்னாடி வர சீன் மறந்துடீங்களே!!

"கேஸ் ரொம்ப சீரியஸ், எங்களால முடிஞ்சத செய்யரோம், கடவுள் தான் காப்பாத்தணும்" அப்படினு கண்ணாடி கழட்டி ஒரு வசனம் பேசுவார் டாக்டர்.

தருமி said...

raju4u,
மன்னிக்கணும் ..

ரிச்சர்ட் சகோதரர் டேவிட் கியர். இவர் எங்க கல்லூரியில் ஓராண்டு இருந்தார். கொஞ்சூண்டு பழக்கம் உண்டு. அந்த ஞாபகத்தில 'கியரை' மாத்திப் போட்டுட்டேன்!

அது சரி...அப்போ நம்ம ஊரு இயக்குனர்கள் பெயரை எப்படி மாத்தினீங்க அப்டின்னு கேப்பீங்க! அது வயசுப் ப்ரொப்ளம் .. !
:(
பெயரை மாத்திர்ரேன் .. நன்றி

தருமி said...

ஒப்பாரி,
மேலேயுள்ள பின்னூட்டம் பாருங்க. மாத்திர்ரேன். சுட்டியமைக்கு நன்றி.

தருமி said...

பெனாத்தல்,
//பீமாவும் வேஸ்ட்டா ;-)) //

அடப் பாவி மனுஷா!

//வரீங்களா இந்த பார்முலாவுல ப்ளாஷ்லேயே ஒரு படம் எடுத்து விடலாம்?//

சொல்லுங்க சாரே! என்ன குற்றேவல் செய்யணும்னு சொல்லுங்க. செஞ்சிருவோம்.

(கைகட்டி, வாய் புதைத்து) தங்கள் சித்தம் என் பாக்கியம் ...

இலவசக்கொத்தனார் said...

பஞ்ச் டயலாக் பேசாத ஹீரோவை வெச்சு படமெடுத்த தருமி ஒரு டைரக்டரா?

அம்மா செண்டிமெண்ட் தங்கச்சி செண்டிமெண்ட் இல்லாமல் படமெடுத்த தருமி ஒரு இயக்குநரா?

பேதோஸ் பாடும் பொழுது மழை பெய்யாதது ஏன்?

முதல் சண்டையில் மார்க்கெட்டில் இருக்கும் காய்கறி, சட்டிப்பானை எதுவும் உடையாதது ஏன்?

கடைசி சண்டை ஒரு பாழடைந்த பங்களாவில் நடக்காதது ஏன்? அங்கு கடைசி நேரத்தில் போலீஸ் வராதது ஏன்?

கடைசி சீனில் கதாநாயகரும் கதாநாயகியும் முன்னாடி பாடுன பாட்டைப் பாடிக்கிட்டே குடும்பத்தோட போட்டோவிற்கு போஸ் குடுக்காதது ஏன்?

___________

என்ன படமெடுத்தாலும் நாங்க விமர்சனம் மட்டும் சரியா எழுதுவோமில்ல!

G.Ragavan said...

ஹா ஹா ஹா... இந்த ஃபார்முலாவ விட்டு வெளிய வாங்கன்னா வர மாட்டேங்குறாங்களே. பேசாம சினிமா எடுக்காம...சும்மா ஒரு அஞ்சு பாட்டுக. நாலஞ்சு காமெடிக் காட்சி. ரெண்டு மூனு சண்டைக்காட்சி. நாலு கிளுகிளுப்புக் காட்டி. மூனு அழுகைக் காட்சிய மட்டும் எடுத்துப் போட்டாப் போதாதா? அப்புறம் எதுக்கு சினிமா எடுக்குறேன்னு சொல்லிக்கிறாங்க? என்னவோ.....தமிழ் சினிமா இப்பிடியே வீணாப் போயிரும் போல. அப்படிப் பாத்தா மொழி மட்டுந்தான் இந்த வருசம் தேறும் போல.

KAYALVIZHI said...

thaliiva,
ithuthane,venanrathu.ni,inna,karadiya kathinalum namba thamil cinema shreya iduppai kaattiye ottida mattamakkum 100 naal.innanra?

நாகை சிவா said...

ஆனந்தவிகடனில் உங்கள் வலைப்பூ வந்ததை இப்பொழுது தான் பார்த்தேன்..

மிக்க மகிழ்ச்சி..

வாழ்த்துக்கள் பல :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்ன ஒரு கைதேர்ந்த கோடம்பாக்க மசாலா?? இப்பல்லாம் தமிழ் சினிமாக்களை ஒரு தனி ப்ராண்டாத்தான் (brand - தமிழில் என்னாங்க?) பார்க்க முடியுது, அப்பத்தான் இந்த ப்ராண்ட் நமக்கு ஒத்துக்காது என்று ஒதுங்க சுலபமாய் இருக்கும். எல்லாத்துக்கும் மேல ஒரு நல்ல படத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி.

Unknown said...

தமிழ் படத் தயாரிப்பாளர்களே இதனால்ல உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் எங்க தருமி சார் இப்போ தமிழ் படம் இயக்க எல்லாத் தகுதியையும் அடைஞ்சிட்டார்.. என்னா மாதிரி இங்கிலீஸ் படமாயிருந்தாலும் டிவிடி மட்டும் கொடுங்க அதைப் பார்த்துட்டு அதை அப்படியே தமிழ்ல்ல பொரட்டிப் போட்டு படையல் வச்சிருவார்ங்குறேன்...

தருமி சார் என்னை உங்க அசிஸ்டெண்ட்டாச் சேத்துக்குங்கோ ப்ளீஸ்..தமிழ் சினிமாவை இரண்டு தளம் தாண்டி கொண்டு போயிருவோம்... என்னமா திரைக்கதை அமைக்கிறீங்க...:-)

தருமி said...

நன்றி நாகை சிவா

இலவசக்கொத்தனார் said...

ஆனந்த விகடன் புகழ் அப்படின்னு அளப்பரை விட்டுக்கப் போகும் தருமி ஐயா வாழ்க!

ilavanji said...

:)

தருமிசார்,

இன்னும் நான் அழகிய தமிழ்மகன், பொல்லாதவன், கெட்டவன், பில்லா எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு! அதுக்குள்ள இப்படி பதிவெல்லாம் போட்டா நாங்க திருந்திருவோம்னு நினைக்காதீக!

இப்படி பார்ட் பார்ட்டா பிரிச்சு மேயறீங்களே? சொல்லப்போனா எங்களை விட நீங்கதான் மசாலாப்படங்களை ரசிச்சுப் பார்த்திருப்பீங்க போல!

மதுரக்காரருன்னா சும்மாவா?! :) வேல் மதுரல சக்கப்போடு போடுதாமே?! ( அடிக்க வராதிகப்பேய்.. :) )

கண்மணி/kanmani said...

vikatan pughaz tharumi sir....vaazthukkal
what happened to u?thamiz sinimava
pottu thaakkaringga

rv said...

செல்வன் சொல்லும் இந்த segmentation ஓரளவுக்கு உண்மைனாலும் முழுக்க என்னால ஒத்துக்க முடியல.

ஏன்னு நான் சொல்லலை. ஷங்கர் சொன்னாரு. நல்ல படங்களுக்கு உலகளவில் விழாக்களிலும் அதன் மூலம் கிடைக்கும் incentivesகளாலும் ப்ரேக் ஈவன் செய்வது கஷ்டம் இல்லை.

அவர் சொல்வது சரி என்பது மாதிரிதான் தோன்றுகிறது.

ஸ்பானிஷ், ரஷ்யன் மொழிகளை விடுவோம். பேசுவோர், புரிந்துகொள்வோர்களின் எண்ணிக்கை அதிகம் தான். ஆனால் அந்தக்காலத்திலேயே பெர்க்மன், குரோசாவா, ஃபெல்லினி, புனுவெல்னு (namesdropping போறுமா? imdb வாழ்க! :)) குட்டிகுட்டி நாடுகளிலிருந்து வந்தவர்கள் எடுத்தபடமெல்லாம் ஓரளவுக்கு கமெர்ஷியல் வெற்றிகளாகவும் இன்றளவும் உலகளாவிய நல்ல சினிமாவின் ரசிகர்களிடமும் பெயர் பெற்றிருக்கிறதே?

டைரக்டர் ஒரே ஜான்ராவுக்குள் உழலவேண்டியதில்லை என்பதற்கு பெர்க்மனே சிறந்த உதாரணம்.

தற்காலத்திற்கு வந்தால் மசாலா எடுத்தாலும் தரமான மசாலாவாக எடுக்கலாமே. kill bill, crouching tiger, house of flying daggersலாம் சட்னு நினைவுக்கு வருது. இன்னும் அரைச்ச மாவ அரைப்போமா, துவைச்ச துணிய துவைப்போமானு பாடி அதுக்கு புதுசுபுதுசா வியாக்கியானமும் சொல்லி நம்மள முட்டாளாக்க வேண்டிய அவசியமென்ன?

தீபாவளி பட்டிமன்றத்தில் பாரதிபாஸ்கர் பேசினது முழுக்க இந்த பதிவுக்கு பொருந்தும்.

அப்புறம் பெரீப்பா.. மதுரையின் மண்வாசனை எங்க? நேட்டிவிட்டி இல்லாம என்ன படம் எடுக்கறீங்க நீங்க? :P

துளசி கோபால் said...

என்னங்க தருமி,
இவ்வளோ பிரிச்சு மேய்ஞ்சுட்டு ஒரு முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டீங்க.

பாட்டு,ஆட்டம், சண்டை எல்லாம் தெர்ஞ்ச நயகனுக்குப் பியானோ (வும்)வாசிக்கத் தெரிஞ்சுருக்கணுமே.பிறந்தநாள் விழா மெலடி டூயட்லே வாசிக்கணுமா இல்லையா? :-)

ஆடுமாடு said...

//ஹீரோ வந்தபிறகுதான் தள்ளு வண்டியில கலர் கலரா பொடி இருக்கு; அதில அடியாட்கள் விழுந்து கலர் எஃபெக்ட் கொடுக்குறாங்க; கையில அருவாளை வீசுறதில காய்கறிக்கடையில இருக்கிற புடலங்காயெல்லாம் வெட்டுப் படுது; ஒரே பயங்கரம்தான்!//

கூடவே இதையும் சேர்த்துக்குங்க. 'பக்கத்துலயே ஏகப்பட்ட கண்ணாடி ஜன்னலிருக்கும். ஹீரோ வில்லனை ஓங்கி மிதிச்சதும், அதையெல்லாம் உடைச்சுட்டு நாற்பது அடி உயரத்துலயிருந்து எந்த அடியும் படாம விழுவார்.

//அப்பாடான்னு இருந்திச்சி. அட ஒரு இயக்குனருக்காவது இந்த அடிப்படை விஷயத்தைப் பற்றிய தெளிவு இருக்கேன்னு சந்தோஷமா இருந்திச்சு//

ம்ஹூம்...தமிழ்சினிமா பண்ற எல்லா இயக்குனர்களும் அறிவாளிகள்தான். சினிமா பற்றி அதிகம் தெரிந்தவர்கள்தான். ஆனால், பாரம்பரியமாக சினிமா போட்டு வைத்திருக்கும் ரூட்டை விட்டு வெளியே வர சில இயக்குனர்கள் மட்டுமே முயற்சிக்கிறார்கள்.

இயக்குனர் ஹரியின் (வேல்) சமீபத்திய பேட்டியில், என் படங்களில் பழைய கதைகளும், பழைய படங்களின் காட்சிகளும் இருப்பதை மறுக்கமாட்டேன். நான் சம்பாதிக்கவும் தயாரிப்பாளருக்கு சம்பாதித்துக்கொடுக்கவும்தான் வந்திருக்கிறேன். எனக்கும் ஈரானிய படங்களின் மீது பிரியம் இருக்கிறது. ஆனால், அதே போல் எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை"

இன்னொன்று:
கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்தான் சேரன்.

ரவிக்குமார் சொன்னது (எப்போதோ):
என்னால் சேரனைப் போல் படம் இயக்க முடியும். ஆனால், என் படங்களைப் போல் சேரனால் இயக்க முடியாது.

இதுவும் உண்மைதான்.

தருமி said...

வடுவூர் குமார்,
//இப்பதான் படம் பார்க்க போகலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் ...//

எந்த படம் சார்? நான் என்னத்த மொத்தத்தையும் சொல்லிட்டேன் அப்டின்றீங்க? நல்லா இருக்கே ..! :)
நீங்க பாட்ல படம் பாருங்க, சார்!




மோகன்தாஸ்,

அவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ நல்ல படமா அது!!! அந்த தற்கொலைக் கேசு எனக்குப் பிடிக்கலைங்க.


வால்பையன், ,

//நல்ல படம் வந்தால் கண்டிப்பாக சொல்லவும் ..//

சாரி'ங்க. அதுக்கு இப்போதைக்கு சான்ஸ் இல்லைங்க ..



குட்டிப் பிசாசு,

//அப்படினு கண்ணாடி கழட்டி ஒரு வசனம் பேசுவார் டாக்டர்.//

ஹ்ஹூம் .. தப்பு .. தப்பு .. கண்ணாடி கழட்டிட்டா ஆளு அவுட்டுன்னு அர்த்தமுங்க .. என்ன நீங்க ...

தருமி said...

கொத்ஸ்,

இது one line treatment-ங்க. knot எல்லாம் இனிமேதான் சேர்க்க வேண்டியிருக்கு. அதுக்குள்ள நீங்க அவசரப்பட்டா நானென்ன பண்ண முடியும்?

//பேதோஸ் பாடும் பொழுது மழை பெய்யாதது ஏன்? //

மழை உண்டு; கதாநாயகி மஞ்சள் ட்ரெஸ் போட்டிருப்பாங்க. இன்னும் சில scene descriptions உண்டு.

தருமி said...

ஜிரா,
ரொம்ப நன்றி.


பல்லவன் ,
//innanra?//
அய்யய்யோ ... நான் ஒண்ணும் சொல்லலைங்க ... நீங்க சொன்ன சரியாத்தான் இருக்குமுங்க ..


கிருத்திகா, கண்மணி,
ரொம்ப நன்றி.

தருமி said...

தேவ்,

இப்படி பப்ளிசிட்டி கொடுக்கிற ஆளைப் பக்கத்தில வச்சிக்கிட்டு இதுவரை பயன்படுத்தாம போய்ட்டேனே .. அசிஸ்டென்ட் என்னங்க …வாங்க இணைஇயக்குனர்களா சேர்ந்து உண்டு இல்லைன்னு பாத்ருவோம்.



துளசி,

இதுக்குத்தாங்க எப்பவுமே நம்ம கதையை வெளிய சொல்றதே இல்ல. இப்ப பாருங்க ஆளாளுக்குக் குத்தம் சொல்றீங்க… சரி…பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னது மாதிரி .. நீங்க சொன்னத நம்ம அசிஸ்டென்ட்டுகளோடு டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவெடுத்திர்ரேன். அதுக்கு முன்னாடி இணை இய்க்குனர் தேவ்-ட்ட கேட்டுக்கறேன்.

தருமி said...

இளவஞ்சி,
ரொம்ப நாளா இந்தப் பக்கமே ஆளைக் காணோமே!
படம் மோசம்னா ஏன், எதுக்கு, எப்படின்னு ஒரு ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு பாத்திர்ரதுதான். எல்லாம் ஒரு analytical approach-தான் !!

தருமி said...

இராமநாதன்,
//நேட்டிவிட்டி இல்லாம என்ன படம் எடுக்கறீங்க நீங்க? :P//
என்ன இப்படி சொல்லிட்டீங்க? கொத்ஸுக்கு சொன்னதுதான் உங்களுக்கும். இது just one line treatment-ங்க. இன்னும் எவ்ளோ இருக்கு! சரி…உங்ககிட்ட மட்டும் சொல்லிர்ரேன். அந்த மூணாவது காரக்டரை சுத்த மதுரைக்காரரா போட்ருவோம்ல ..

தருமி said...

ஆடுமாடு,
ரவிக்குமார் என்ன நினச்சி அதச் சொன்னாருன்னு எனக்குப் புரியலைங்களே ..

தருமி said...

பார்ட்னர்,

கோவிச்சுக்காதீங்க இது ரொம்ப அரதப் பழசான விவாதம். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த விவாதத்தைத் தொடர்ந்து கேப்பீங்க? இராமநாதனின் பின்னூட்டமே கூட உங்கள் கேள்விகளுக்குப் பதிலாகப் போதும். இன்னும் கொஞ்சம் சொல்லணும்னா …

வேற ஒண்ணும் வேணாங்க .. நம்ம பக்கத்து ஊருக்காரங்களைப் பத்தி இப்பத்தான் ஒரு பதிவு போட்டேன். கொஞ்சம் படிச்சி பாருங்க. ரொம்ப வருஷத்துக்கு முந்தி ஞாயிறு மதியம் பிறமொழி இந்தியப் படங்கள் போடுவாங்க. அஸ்ஸாமிய படங்களுக்காகக் காத்திருப்பேன். பார்த்தது நாலைந்து படங்கள்தான். ம்..ம்.. so simple yet fantastic movies. சமீபத்தில் ஈரானியப் படங்கள் ரொம்பவும் பேசப் படுகின்றன. எங்கள் கல்லூரியில் கூட ஈரானியப் பட விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம். இராமநாதன் சொன்னது போல் ஜப்பானியப் படங்களுக்கோ, கொரியா படங்களுக்கோ நீங்கள் சொல்ற உலகளாவிய மார்க்கெட் இருக்கிறதா என்ன? அதுவும் குரோசோவா காலத்தில் ஜப்பானிய படங்களுக்கு என்ன மார்க்கெட் இருந்திருக்கும்?

ஆங்கிலப் படங்களுக்கு உலகளாவிய சந்தை இருப்பதால் நிறைய செலவு செய்ய முடியும். அவர்களைப் போல நாம் செலவு செய்து படம் எடுக்க முடியாதுதான். (ஷங்கர் மாதிரி தர்த்திகள் அதிலும் போட்டி போட ஆரம்பித்துவிட்டுதுகள்.) ஆனால் நல்ல படங்களுக்கும் செலவுக்கும் தொடர்பில்லையே. சொல்லப் போனால் நல்ல படம் எடுக்க செலவு கம்மிதான் ஆகும்.

நீங்கள் சொல்வது போல் sci-fi, wild life என்று தனித்தனி வகைப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் என்பது சரிதான். அதெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டாமைய்யா. சாதாரணமா வாழ்க்கையோடு இயைந்த படங்கள் எடுக்கலாமே. அட! இப்போ எடுக்கிற படங்களையே கொஞ்சம் (நல்ல படங்கள் என்ற அளவுகோலின்படி) அர்த்தமுள்ளதாகவோ, இயல்பாகவோ எடுக்கக் கூடாதா?

காதல் “சுவை” தவிர வேறு எந்த ரசனையை இதுவரை நம் தமிழ்ப் பட இயக்குனர்கள் தந்திருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன். நல்லவேளை நகைச்சுவைப் படங்கள் என்று மட்டுமாவது தனிச்சுவைப் படங்கள் அவ்வப்போது வருகின்றன. இன்னொரு பதிவு ஒன்றில் கேட்டிருந்தேன்; பதில் தெரிந்து கொள்ள ஆசை; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்: காதலைத் தவிர்த்த படம் ஏதாவது 5 தமிழ்ப் படங்களின் பெயர்கள் சொல்லுங்கள் என்று கேட்டு எனக்குத்தெரிந்த 2 படங்கள் சொல்லியிருந்தேன். அந்தக் காலத்து ‘அந்த நாள்’. 2003-ல் ப்ரகாஷ்ராஜின் ‘நாம்’. இன்னும் ஒரு மூணு சொல்லுங்களேன். வாழ்க்கையில் காதல் மட்டும்தான் இருக்கிறதா?

3 மணிநேரம் படம் பார்க்க வர்ரவன் தன் வாழ்க்கை சோகத்தை மறக்கத்தான் வர்ரான்; அவனுக்கு ஏத்ததுமாதிரி படம் தர்ரதுதான் உண்மையான சேவை – இப்படி ஏதும் டயலாக் சொல்ல மாட்டீங்கன்னு நம்புகிறேன்.

நிறைய சொல்லலாம் பார்ட்னர். ஆனாலும் பயனில்லை என்பதால் ஒரே ஒரு விஷயம் சொல்லிட்டு முடிச்சிர்ரேன்.

நீங்க பார்ட்னர்; கோவிச்சிக்க மாட்டீங்க அப்டிங்கிற தைரியத்தில் ஒண்ணு சொல்றேன்:

நம்ம இயக்குனர்கள் மோசம்தான்; ஆனால் அவர்களைத் திருந்த விடாமல் செய்வது உங்களைப் போன்றவர்களின் ரசனையும், நீங்கள் கொடுக்கும் ஆதரவுகளும், சப்பைக் கட்டுகளும்தான்.

In that case who is more ‘dangerous’?

Unknown said...

பார்ட்னர்

ஒவ்வொரு மொழிக்கும்,நாட்டுக்கும்,கலைக்கும்,இலக்கியத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.பாரம்பரியம் இருக்கிறது.தமிழ்நாட்டு கலைகள் பலவும் அந்த மண்ணுக்கே உரியவை.வெளிநாடுகளுக்கு மட்டுமல்ல,வெளிமாநிலங்களுக்கு கூட அவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. குறள்,கம்பராமாயணம்..என்னதான் இவற்ரை மொழிபெயர்த்தாலும் தமிழை தாண்டி வேறு எந்த மொழியிலும் இவை இனிக்காது,சிறக்காது.இவை தமிழ் மண்ணுக்கே உரிய கலைகள்,நூல்கள்.

தமிழ் சினிமா நாடகத்திலிருந்து பிறந்தது.தியாகராஜ பாகவதர்,சின்னப்பா மாதிரி நாடக நடிகர்கள் நாடகத்தையே சினிமாவாக்கினார்கள்..தமிழ்நாடகம் என்பது முன்பெல்லாம் வெறும் பாட்டுதான்.ரெண்டுமணிநேரத்தில் 14 பாட்டு.இதுதான் டிராமா.அதனால் நமது ஆரம்பகால படங்கள் முதல் இன்றைய படங்கள் வரை எல்லாம் நாடகபாணியில் தான் இருக்கும்.முன்பு செட்டில் பாட்டு ஷூட் செய்வார்கள்..இன்று ஸ்விட்சர்லாந்து போய் பாட்டு எடுப்பார்கள்.முன்பு சம்பூர்ண ராமாய்னத்தில் ராமனும் ராவனனும் வில் அம்பால் சண்டை போடுவார்கள்.இன்று ரஜினியும் பிரகாஷ்ராஜும் துப்பாக்கியை வைத்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

ஜப்பான்,கொரியா,மலையாளம் இங்கெல்லாம் கலையும்,சினிமாவும் வளர்ந்த வரலாறு என்ன என்று எனக்கு தெரியாது....நம் ஊர் மண் வேற, கலாசாரம் வேற...இன்னைக்கு நீங்க கரிச்சு கொட்டும் ரஜினிபடம் தான் முதல் முதலா ஜப்பான்,கொரிய,சீன சந்தைகளை தமிழ் சினிமாவுக்கு திறந்துவிட்டிருக்கிறது.அதேசமயம் பாலக்காட்டை தாண்டினா மலையாள படம் எங்கேயும் ஓடாது(ஷகீலா படத்தை தவிர).சத்யஜித்ரே படங்கள் வங்காளத்தை தாண்டி எங்கேயாவது ஓடுதா என்பதும் எனக்கு தெரியலை.(அப்படி ஓடாதது குத்தமில்லை)

தமிழில் காதல், நகைச்சுவை, ஆக்ஷன், பக்தி, செண்டிமெண்ட், கல்லூரி மானவர்களுக்கான படம், ஹாரர் மூவி, குழந்தைகளுக்கான படம், பெண்களுக்கான படம் என்று ஆடியன்சின் டேஸ்டுக்கு ஏற்றமாதிரி வெரைட்டி உண்டு.ஆடியன்சின் எண்ணிக்கை பெருகினால் வெரைட்டி இன்னமும் அதிகரிக்கும்..

நல்ல படம் என்று நீங்கள் சொல்லும் படம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ரக படம்,அதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட வகை.அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த மாதிரி படங்களும் குறைவாக வருகின்றன.எல்லாமே டிமாண்ட் அன்ட் சப்ளைதான்.அந்த மாதிரி ரசிகர்களின் ரசனைதான் உயர்ந்தது,அவர்களை திருப்திபடுத்தும் படம்தான் உயர்ந்தது என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்..என்னை மாதிரி 'சினிமா உலகை கெடுக்கும் ஆபத்தான ஆசாமிகள்' அப்படி எல்லாம் நினைப்பதில்லை:).'உன் ரசனையும் ஒண்ணுதான்,என் ரசனையும் ஒண்ணுதான்' என்று சமத்துவ மனப்பான்மையில் தான் வாழ்கிறோம்.'இல்லை, உன் ரசனை முட்டாள்தனமானது, என் ரசனை தான் உயர்ந்தது' என்று சொன்னால் அதைப்பற்றி கவலைபடுவதில் அர்த்தமில்லை..இட்லி உயர்ந்ததா,பீட்சா உயர்ந்ததான்னு பட்டிமண்டபம் நடத்துனா எதாவது முடிவு கிடைக்குமா?பாம்பு,பல்லி,பூரானை எல்லாம் ருசிச்சு சாப்பிடறவன் உலகத்துல இருக்கான்.அவரவர் ரசனை அவரவர்க்கு

என்னவோ பல பதிவுகளில் நீங்களும் நானும் மற்றவர்களும் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதாக ஒரு பிரமை..:)).

ஜமாலன் said...

கலக்கிட்டீங்க.. மளமளவென ஐடியாக்கள்தரும் பின்னோட்டங்கள் வேறு. அருமை.

//நம்ம இயக்குனர்கள் மோசம்தான்; ஆனால் அவர்களைத் திருந்த விடாமல் செய்வது உங்களைப் போன்றவர்களின் ரசனையும், நீங்கள் கொடுக்கும் ஆதரவுகளும், சப்பைக் கட்டுகளும்தான்.//

ரிப்பீட்டேய்...

தருமி said...

//பாம்பு,பல்லி,பூரானை எல்லாம் ருசிச்சு சாப்பிடறவன் உலகத்துல இருக்கான்.அவரவர் ரசனை அவரவர்க்கு//

சரி பார்ட்னர்.

//'உன் ரசனையும் ஒண்ணுதான்,என் ரசனையும் ஒண்ணுதான்' என்று சமத்துவ மனப்பான்மையில் தான் வாழ்கிறோம்//

இல்ல பார்ட்னர்.

தருமி said...

நன்றி ஜமாலன்.

ஜமாலன் said...

செல்வனின் ஆதங்கம் புரிகிறது. ஆனால், சந்தை சீனா கொரியாவிற்கு பரவுவது முக்கியமர்? தரமுள்ள படங்களின் மூலம் மக்களின் வாழ்தளத்தை உணரவைத்து அவர்களது ரசனைகளை ஓரளவிற்கேனும் முன்னேற்ற முயல்வது முக்கியமா?

இந்த சந்தை விதிகள் தமிழ் படத்தின் தயாரிப்பு செலவுகளையும் கூட்டி படைப்பூக்கமிக்கவர்கள் நெருங்க முடியாததைச் செய்துள்ளது. இம்மாத தீராநதியில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் நேர்காணலை படியுங்கள். அதில் மாற்று சினிமா குறித்த ஆழ்ந்த விவாதங்கள் இருக்கிறது.

அதிக செலவில் குறைந்த லாபத்தைவிட குறைந்த செலவில் அதிக லாபம் என்பதே பொருளாதாரத்தின் சரியான விதியாக இருக்கும். இந்நிலை திரைப்பட அனுபவங்களைவிட திருட்டு வீசிடி அனுபவங்களையே அதிகப்படுத்தும்.

சிவாஜி போன்ற படங்கள் தமிழ் சினமாவை தாக்கும் இருமுனைக் கத்திகளைப் போன்றது. ஜான் ஆபரஹாம் மக்கள் பணத்தில் திரைப்படம் எடுக்க முயன்றவர் என்பதும் அவரால் அதை பேரளளவில் வெற்றியடைய வைக்கமுடியவில்லை என்பதும்.. இத்தகைய சந்தை விதிகளின் ஒரு கொடூரமான வினளவே ஆகும்.

மலையாளப் படங்கள் மலபார் தாண்டி ஓட வேண்டிய அவசியமில்லை. காரணம் அதன் தயாரிப்ப செலவிற்கு அவை எட்டும் இலக்கு போதுமானது. அங்க நடிகன் என்ற பெயரில் கோடிகளை சம்பளமாக யாரும் பெறுவதில்லை. மனிதனின் குற்ற உணர்ச்சிக் குறித்து அலசும் அரவிந்தனின் சிதம்பரம் போன்ற படங்களை நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது.

பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்பான என்னுயிர் தோழன் ஒரு இடைநிலைச் சினிமாவிற்கான முயற்சி. சீறிதர் ராஜனின் கண்சிவந்தால் மண்சிவக்கும், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் (தமிழின் பிரபலங்களைப் போட்டு எடுக்கப்ட்ட படம்) ஆகியவை ஓடவில்லை என்பதற்கு யாரை குறை சொல்வது? மக்களையா? அல்லது அவர்களிடம் ஒருவகை நாடக ரசனையை தாண்டி சினிமாவை அனுபவமாகச் செய்யாத பத்தரிக்கை மற்றும் பொதுவிவாதங்கள் செய்யும் நம்மையா? இங்கு நாம் என்பது சமூகப் பொறுப்புள்ளவர்களைக் குறிக்கிறது.

ஆக, நல்ல சின்மாவா? கெட்ட சினிமாவா? என்பதல்ல பிரச்சனை. முதலில் சினிமா என்கிற வடிவத்தை முழுமையாக மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளோமா? என்பதே கேள்வி.

தமிழ் சினமா நிறைவு செய்யும் பொதுமக்களின் உளவியல் கூறுகள் ஆழ்ந்து அவதானிக்கதக்கவை. சினிமா என்கிற கலை வடிவமே முழுமையாக பயிற்ச்சி செய்யப்படாத ஒரு சமூகத்தில்தான் இதனை பேசுகிறோம் என்பது எல்லாவற்றையும்விட கவலைத்தரம் விஷயம்.

Narayanaswamy G said...

தருமிக்கு இப்படிப்பட்ட ஆராய்ச்சி அவசியமா?

பெத்தராயுடு said...

//ஒவ்வொரு மொழிக்கும்,நாட்டுக்கும்,கலைக்கும்,இலக்கியத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.பாரம்பரியம் இருக்கிறது.தமிழ்நாட்டு கலைகள் பலவும் அந்த மண்ணுக்கே உரியவை.வெளிநாடுகளுக்கு மட்டுமல்ல,வெளிமாநிலங்களுக்கு கூட அவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. குறள்,கம்பராமாயணம்..என்னதான் இவற்ரை மொழிபெயர்த்தாலும் தமிழை தாண்டி வேறு எந்த மொழியிலும் இவை இனிக்காது,சிறக்காது.இவை தமிழ் மண்ணுக்கே உரிய கலைகள்,நூல்கள்.//

அப்படியா?
என்னால் 'M Tu Mama Tambien' போன்ற மெக்சிகோவில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் படங்களை ரசிக்க முடிகிறதே?

ஸ்பானிஷ் மொழி தெரியாவிட்டாலும் அப்படத்தில் காட்டப்படும் அரசியல் குடும்பங்களின் feudalistic behaviour, மெக்சிகோ கிராமங்களின் வாழ்க்கை என இந்தியாவின் பிம்பங்களுடன் ஒப்பிட்டு ரசிக்கலாம்.

அப்படி identify செய்துகொள்ள எதுவும் இல்லாவிட்டாலும் 'Run Lola Run' போன்ற அட்டகாசமான ஜெர்மன் படங்களை ரசிக்க முடிகிறதே.

American-pie, Dude Where is my Car, Roadtrip போன்ற நகைச்சுவை படங்களை தமிழில் எடுக்க 10,15 கோடிகளோ இல்லை அஜீத், விஜய், விஷால்களோ தேவையில்லையே?நகைச்சுவையா நடிக்கத் தெரிஞ்ச சந்தானம், ஜீவா, பாலாஜி, மனோகர் போன்றவர்களே போதுமே?

வால்பையன் said...

தருமி சார்,
நான் வலை பக்கங்களுக்கு புதுசு,
இதை பற்றிய சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை,
நான் பத்தாம் வகுப்பு வரையே படித்திருப்பதால் ஆங்கிலம் அவ்வளவாக வராது,
இதையே தட்டச்சு செய்ய அறை மணி நேரம் ஆகும் எனக்கு,
என்னுடைய சந்தேகங்களை கேட்க உங்கள் கை பேசி எண் தருவிர்களா
நானும் அடிபடையில் மதுரை தான், பசுமலையில் தான் படித்தேன்,
என்னுடைய மெயில் முகவரி arunero@gmail.com
எண் கை பேசி எண் 9994500540
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்

http://www.valpaiyan.blogspot.com/

இதற்கும் ஒரு முறை வந்து பாருங்கள்,
உங்கள் ஆலோசனையை எதிர் பார்க்கிறேன்

அருண்

வால்பையன் said...

மிக்க நன்றி, என் அழைப்பை ஏற்று வந்ததற்கு,
நிறைய சந்தேகங்கள் உள்ளன,
போட்டோ இணைப்பது
பிற பக்கங்களுக்கு இணைப்பு தருவது போன்று
என் ஒத்த கருத்துடயவராக இருப்பதால் உரிமையுடன் கேட்கிறேன்
உதவி செய்யுங்கள்,
உங்கள் மெயில் முகவரி தந்தால் தொடர்பு கொள்ள வசதியாயிருக்கும்

வால்பையன்

வால்பையன் said...

//காதலைத் தவிர்த்த படம் ஏதாவது 5 தமிழ்ப் படங்களின் பெயர்கள் சொல்லுங்கள்//
என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
குருதி புனல்
அப்புறம் நான் எடுக்க போகும்
தருமி சார் நடிக்கும்
வயசானாலும் வாத்தியார் தான்

வால்பையன்

வால்பையன் said...

தருமி சாரின் நண்பர்கள் தயவு செய்து ஒருமுறை
இதற்க்கு வந்திர்களேயனால் சந்தோசமடைவேன்,
நானும் தருமி சாரும் சந்தித்ததை பற்றி எழுதியுள்ளேன

http://valpaiyan.blogspot.com/2007/11/blog-post_25.html

Sambar Vadai said...

Dharumi Sir,

You are invited.

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

thanks in advance

(sorry I could not post this for a long time due to access issues)

ஹாரி said...

Such a nice post, indeed.

//ஹ்ஹூம் .. தப்பு .. தப்பு .. கண்ணாடி கழட்டிட்டா ஆளு அவுட்டுன்னு அர்த்தமுங்க .. என்ன நீங்க ...//
I cant stop laughing.

வால்பையன் said...

தயவு செய்து என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நண்பர்களே!

http://valpaiyan.blogspot.com/

Post a Comment