Thursday, October 30, 2008

272. மதுரையில் இன்று ……….

*

*

இன்று 30.10.2008 முத்துராமலிங்கத் தேவரின் 100 / 101 வது குருபூசை. அதாவது அவர் பிறந்த & இறந்த நாள். மதுரையே குலுங்குகிறது. இது கூட பரவாயில்லை …

வி.வி.கிரி முத்துராமலிங்கத்தின் உருவச்சிலையைத் திறந்து வைத்தபோது நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டது: இந்தியாவின் முதல் குடிமகன் ஒரு சாதிப் பெயரைத் துறக்காத பெரியவரின் சிலை வைக்க சம்மதிக்கணுமா? இது கூட பரவாயில்லை …

நான் தினமும் இருமுறையாவது தாண்டிச்செல்லும் வழியில் இந்தச் சிலை. வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது வயசான பெண்கள் நாலைந்து பேர் அதைக் கழுவி, பூசை புனஸ்காரங்கள் செய்து அந்தப் பீடத்திற்குப் பக்கத்தில் பொங்கல் செய்து, அவரைத் தெய்வமாக்கும் நிகழ்ச்சி நடத்துவார்கள். இது கூட பரவாயில்லை …

சாதிக்கலவரம் என்றால் இதைச் சுத்தி ஒரே போலீஸ் காவல்.. அது இதுன்னு அந்த ஏரியாவே களேபரமாக ஆகிடும். இது கூட பரவாயில்லை …

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளைய ஊர்வலம் செல்லும் வழியில் மாட்டிகொண்டு முன்னும் செல்ல முடியாமல் பக்கத்தில் ஒதுங்கவும் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு ஊர்வலக்காரர்களின் திருவிளையாடல்களைக் கண்டபோது … இது கூட பரவாயில்லை …

இதனாலேயே மதுரையில் பல பள்ளிகளும் முழு அல்லது அரை நாள் விடுமுறை அளித்துவிடுவது வழமை. இது கூட பரவாயில்லை …

ஒவ்வொரு ஆண்டும் இந்த தேதியிலும் அதற்கு முந்திய நாளிலும் மதுரையில் ரோட்டில் போகவே பயம்தான். எந்த நேரத்தில் எந்த இடத்திலிருந்து இடைஞ்சல் வரும் என்பதே தெரியாது. இன்றைக்குக்கூட பழைய அனுபவத்தில் மாலை வரை வெளியே செல்லவே இல்லை. சாயுங்காலம் வெளியே சென்று வரலாமென சென்றபோது மாப்பிள்ளை விநாயகர் சந்திப்பில் பச்சை விளக்குக்காகக் காத்திருந்து சென்ற போது அந்தத் திருப்பத்தில் வலது பக்கத்தில் இருந்து இரு வண்டிகள் ஆனால் அது என்ன வண்டிகள் என்றுகூட தெரியாதபடி ஆட்களால் நிரம்பி வழிய எந்த வித முன்னறிவிப்புமின்றி பயங்கர கூச்சலுடன் குறுக்கே பாய்ந்து வந்தன. கூச்சல் வந்ததால் முன்னெச்சரிக்கையாக நானும், மற்றோரும் வண்டிகளை நிறுத்தி விட்டோம்; பிழைத்தோம். இந்த இரு நாட்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதும் காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் வழமை. இது கூட பரவாயில்லை …

இந்த நாளில் பசும்பொன்னில் குருபூஜை நடக்கும். இதற்கு உற்றார் உறவினர் தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் செல்வது சரியே. அதற்குரிய ஏற்பாடுகளைக் காவல்துறை செய்யட்டும். ஆனால் மற்ற ஜாதிக் கட்சிகள் தவிர மற்ற ஏனைய கட்சிகள் எல்லாம், அதிலும் ஒரே கட்சியேகூட பல குழுக்களாக –அதுவும் பார்வர்டு ப்ளாக் கட்சியில் எத்தனை குழுக்களோ அவர்களுக்கே தெரியாது அது – பசும்பொன்னுக்கு ஏன் செல்ல வெண்டுமென எந்தக் கட்சியும் யோசிப்பதுகூட இல்லாமல் மந்தை மந்தையாய் செல்கிறார்கள். (பொதுவுடமைக் கட்சிகள் செல்வதில்லையென நினைக்கிறேன்.) இது கூட பரவாயில்லை …

இந்த நாட்களில் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் தற்காப்புக்காக மூடப்படுகின்றன. அத்து மீறல்கள் சர்வ சாதாரணம். எங்கும் எதிர்ப்பு ஏதும் இருப்பதில்லை. இது கூட பரவாயில்லை …



ஆனால் …

அந்தச் சாதியினரில் வயதானோர் அவரைத் தெய்வமாகக் கொண்டாடட்டும். பழைய பழக்கம், tradition என்பதாக அதை வைத்துக் கொள்ளலாம். அப்படி இருந்தால் நாளாக நாளாக இந்தப் பழக்கம் மாறும்; அடுத்த தலைமுறையினராவது இந்த பக்தி மார்க்கத்திலிருந்து விடுபட்டு விடுவார்கள்; படிப்பறிவு கூடக் கூட இந்த தனிமனித ஆராதனை நின்று விடாவிட்டாலும் மிகவும் குறைந்துவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த ஊர்வலங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பது எல்லாமே மிக இளைஞர்கள். பதின்ம வயதில் இருப்பவர்களே. இவர்கள் மனத்தில் சாதிக்கு முக்கிய இடமிருப்பதலாயே இந்தக் கூட்டத்தில் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார்கள். அச்சமூகமே அதை ஊக்குவிப்பது மிகவும் துரதிருஷ்டம்.


இப்படி சாதி உணர்வுகளால் நிரம்பப்பட்டு, நிரப்பப்பட்டு வளரும் இந்த இளம் தலைமுறை வளர்ந்த பிறகு எந்தமாதிரியான சமூக அமைப்பை உருவாக்குவார்கள்?

எங்கே இது நம் சமூகத்தை இட்டுச் செல்லும்?

மேலும் மேலும் சாதிப் பித்துப் பிடித்து எந்தக் காலத்திலும் இந்த சாதிகளிலிருந்து நம் இளந்தலைமுறை விடுதலையாகாதா?

என்றும் இன்றுபோலவே நம் தமிழ்ச்சமூகம் சாதிக் கட்டுக் கோப்புகளிலிருந்து விடுதலையாகாமலே இருந்திட வேண்டியதுதானா?



*
பி.கு.
//மற்ற ஜாதிக் கட்சிகள் தவிர மற்ற ஏனைய கட்சிகள் எல்லாம், ...// - இப்படி எழுதும்போது ப.ம.க.வை மனதில் வைத்து எழுதினேன். ஆனால் இன்று காலை செய்தித்தாட்களில் பார்த்த பிறகுதான் ப.ம.க., பா.ஜ.க. எல்லாமே அங்கு சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. எல்லாம் ஓட்டுப் பிச்சைதான் ..
*

33 comments:

வால்பையன் said...

நான் தான் முதல் வருகையாளன்

வால்பையன் said...

சமீபத்தில் நான் மதுரைக்கு வந்திருந்த சமயம். யாரோ ஒருவர் கோரிபாளையத்தில் இருக்கும் சிலையை கழுவியிருக்கிறார்.
இரவு நேரம் என்பதால் னீரின் சுத்தத்தை அவர் கவனிக்கவில்லை.
தண்ணீர் அழுக்காக இருந்திருக்கிறது.
இது தெரியாமல் அவர் கழுவி செல்ல,
மறுநாள் காலையில் பார்த்தவர்கள் யாரோ வேண்டுமென்றே இதை செய்தது போல் பாவித்து ஏகப்பட்ட களேபரம்.

என்று திருந்துவார்களோ இந்த மனிதர்கள்

குமரன் (Kumaran) said...

கோரிப்பாளையத்தில் இருக்கும் தேவர் சிலையைத் தானே சொல்கிறீர்கள். நான் இதுவரை அதற்கு முன் பொங்கல் வைக்கப்படுவதைப் பார்த்ததில்லையே. ஒரு வேளை கவனிக்கவில்லை போல. ஆனால் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் மறவர் சாவடியில் இருந்த தேவர் சிலைக்குப் பொங்கல் வைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

துளசி கோபால் said...

சாதியை ஒழிக்காமல் இருக்கச் செய்யும் முயற்சியை இப்படிச் சொன்னா எப்படிங்க?

மறைந்த மனிதர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு வருமா?

மனக்கோயிலில் வச்சுக்கிட்டா ஆகாதா?

supersubra said...

I left Madurai 22 years back. I don't see any major growth or change in the city. Only it is worsened. More noise more pollution shrinking dilapidated roads. Lot of posters on so called brave political leaders. People of Madurai Please visit Coimbatore once and see the real growth.

ilavanji said...

தருமிசார்,

// ஆட்களால் நிரம்பி வழிய எந்த வித முன்னறிவிப்புமின்றி பயங்கர கூச்சலுடன் குறுக்கே பாய்ந்து வந்தன//

உங்கூரு மக்கா எனக்குக்கூட ஒரு தடவை இந்தமாதிரி கிலிகெளப்பியிருக்காய்க! காலேஜ்ஹவுஸ் ஹோட்டல் இருக்கற ரோட்டுல ஒரு மருந்துகடைல அல்சருக்கு மருந்து கேட்டுக்கிட்டு இருந்தேன். பின்னாடி ரோட்டில திடீர்னு ஒரு உலேபுலேன்னு சவுண்டு. திரும்பிப்பார்த்தா ரெண்டே ரெண்டு ஆட்டோல சும்மா 16 பேரு இருப்பாய்ங்க. கையில பொருளெல்லாம் இல்லை. சும்மா சவுண்டுக்கே எல்லா கடைகளும் படபடன்னு மூடிட்டாங்க. என்னைய கடைக்கு முன்னாடி வைச்சுக்கிட்டே மருந்துக்கடைகாரர் ஷட்டரை இழுத்துமூட மூடியகடையும் பின்னாடி ஆட்டோல ஆளுங்களும்னு பீதில நின்னேன். அவங்க ஒன்னுமே செய்யல. ச்சும்மா தமாசுக்கு வெயிட்டு காட்ட வந்தமாதிரி சிரிப்பும் அலப்பரையுமா போயிட்டாங்க. அப்பறமா கடையை திறந்து கடைக்காரரு “மன்னிச்சிக்கங்க சார்..” பலதடவை கேட்டாரு ( மரியாதைக்கும் மதுரதான்! :) ) இருந்தாலும் ரெண்டு டைஜினாப் போட்டுத்தான் வயித்தெரிச்சல் நின்னுச்சு :)

// இது கூட பரவாயில்லை … // இது நல்லதா கெட்டதானெல்லாம் சொல்லமாட்டேன். அடிமட்ட அடியாள்ல இருந்து மேல்மட்ட தலைவர்கள்வரை ( நாம் உட்பட )அவரவர்க்கு அவரவர் பிஜினெஸ் :)

ஆ.ஞானசேகரன் said...

இது கூட பரவாயில்லை சார்.... ஓட்டு பொரிக்கிகள் எல்லாம் போட்டி போட்டு வந்து நான்! நீ! என மாலை மரியாதை செய்கின்றார்களே.. என்னத்த சொல்ல...

Unknown said...

அப்ப அதெல்லாம் பரவாயில்லீங்களாய்யா?

இகூபா1 - பிறந்த நாள் வருவதெல்லாம் அதியசயமா? கோட்சே, ஹிட்லர் போன்றவர்களுக்குக் கூட வரும்.

இகூபா2 - உருவச்சிலை கலாச்சாரம் எப்பத்தான் ஒழியுமோ. உருவச்சிலை இல்லாமலேயே ஒருவர் வழி நடாத்துகிற முன்னுதாரணம் உண்டே. அவரை விட கூடுதலாக அவனியில் வேறெவரும் போற்றப்படுகிறாரா?

இகூபா3 - அதற்கு பூசை புனஸ்காரங்கள் வேறு. அவரை வேறு வழிகளில் பெருமைப்படுத்த இயலாதா? என்று திருந்துமோ?

மற்ற இகூபா - இந்த கெட்ட கலாச்சாரங்கள் மாறவாவது உருவச்சிலை கலாச்சாரம் மாறினால் என்ன என்று சிந்திக்கலாமே.

அது சரி. அப்ப உண்மையிலேயே அதெல்லாம் பரவாயில்லீங்களாய்யா?

தருமி said...

Athiyaman Karur R

திரு.பக்தவச்சலம் அறிக்கை : முதுகுளத்தூர் கலவரம்

http://egalaiva.blogspot.com/2007/10/blog-post_30.html

தருமி said...

வால்ஸ்,
நன்றி

தருமி said...

குமரன்,
long time .. no see!!

எது அந்த தேர் நிக்குமே அதுக்குப் பக்கத்திலேயா ... ?

தருமி said...

துளசி,
//சாதியை ஒழிக்காமல் இருக்கச் செய்யும் முயற்சியை இப்படிச் சொன்னா எப்படிங்க?//

என் வருத்தமும் அதாங்க ...

தருமி said...

supersubra,
ம்ம்..ம்.. நாங்க எல்லாம் 'பழையன இருத்தலும், புதியன மறுத்தலும்' டைப்புங்க!!

உங்களுக்குப் பிடிச்சதுகளில் நீங்கள் சொல்லியிருக்கிறதில அந்தக் கடைசி ஆளைத் தவிர மற்றதெல்லாம் எனக்கும் சரிங்க .. Erich von Daniken எப்படிங்க ... செம .. இல்ல!!

தருமி said...

இளவஞ்சி,

இதெல்லாம் இங்க சகஜமப்பா ..

//( நாம் உட்பட )அவரவர்க்கு அவரவர் பிஜினெஸ் :)//

சரியா சொன்னீங்க

தருமி said...

சுல்தான் பாய்,

நீங்க வேற .. உள்ளதே இந்த சாதிப் பிரச்சனை இப்படி இருக்கேன்னு வருத்தப்பட்டு எழுதியிருக்கேன். நீங்க என்னடான்னா, (என்னைப் பொருத்தவரை) அதைவிட பெரிய விஷயத்தை கோர்க்கிறீங்க ..

//அவரை விட கூடுதலாக அவனியில் வேறெவரும் போற்றப்படுகிறாரா?//

ஆமா .. போற்றப்படுகிறார்களே .. அவரவருக்கு அவரவர் "--" பெருசுதானே .. இல்லீங்களா..

தருமி said...

நன்றி ஏகலைவன்.

Thekkikattan|தெகா said...

இதெல்லாம் படிச்சா "இந்தியா எங்கே ஒளி(ந்து)ர்ந்து" கொண்டிருக்கிறதுன்னுதான் தெரிய வருகிறது.

நம்ம விவேக்கண்ணே சினிமா படங்களில் பணத்தை வாங்கிட்டு பொரட்சி கருத்தையெல்லாம் சொல்றாரு கவனிச்சிருப்போம், ஆனா, திரைக்குப் பின்னாடி இது போன்ற வீர தீர விசயங்களுக்கு கொடி பிடிக்கிறதா கேள்விப்பட்டேனே நிசந்தானுங்களா... அப்படியிருந்தா, நீங்க சொன்ன இளைஞர்கள் படை(அந்தப் படை இல்லீங்கோ) இந்த நிலையிலதான் இருக்கு...

ஆமா, நீங்க இதெல்லாம் பார்த்துப் பார்த்து இன்னும் நம்பிக்கை விடாம எப்படி இப்படி நின்னுகிட்டே இருக்கீங்க, வித்தையை கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல, before we get immune or numb to this :(.

Unknown said...

I remember reading, "Castesim is in the blood". Any level of education doesn't seem to change

Unknown said...

I remember reading somewhere, "Casteism is in the blood". Any level of education doesn't seem to change including youngsters. I'm surprised to see and hear the castesim talk even in US, that too from long time settlers. They do have sangams too..

Indians long way to go out of casteism. Maybe thats how we have been brought up and tedious to loose the "Born Identity"

Unknown said...

//ஆமா .. போற்றப்படுகிறார்களே .. அவரவருக்கு அவரவர் "--" பெருசுதானே .. இல்லீங்களா..//
இல்லை. நான் ஏதாவது சொல்லி, உங்களுக்கு புதுப்புது கேள்விகள் உருவாவதற்கு முன், முடிந்தால் கிறித்துவர் ஒருவரால் ஆய்நது எழுதப்பட்டட 'The Hundred' புத்தகம் பார்வையிடுங்கள்.

Che Kaliraj said...

Bharathiyar song is

" There are no caste baby"

ie, sathikal illaiyadi pappa.


but now a days many marriage invitation, to indicate caste name after name.


Must abolish it

மருத புல்லட் பாண்டி said...

அய்யா 30 வருசமா வாத்தி வேல பாத்தீகல்ல ஒரு சிங்கதயாவது திருத்தி இருக்கல்லாம்ல்ல அதவுட்டு வந்துடிக இது கூட பரவாயில்லை சொல்ல அப்பு ஒங்கல சுத்தி பாருங்க எவ்ளோ கப்பு அத கழுவுங்க முதல்ல

தருமி said...

அப்பு மருத புல்லட் பாண்டி,

நீங்க இந்த ரெண்டு நாள்ல அடிக்கிற கூத்துனால மத்தவங்களுக்கு அவர்மேல் இருக்கிற மரியாதை சுத்தமா போயிருமுன்னு உங்களுக்குப் புரியாம போறதுதான் வேதனை

:-(

மருத புல்லட் பாண்டி said...

அய்யா நாங்க வெறும் ஊதின பலூன் தான்

தருமி said...

சுல்தான்,

//நான் ஏதாவது சொல்லி, உங்களுக்கு புதுப்புது கேள்விகள் உருவாவதற்கு முன், ...//

கேள்விகள் உருவாவது தவறு என்பதுபோல் கூறுகிறீர்களே ...!!

தருமி said...

தெக்ஸ்,

கொஞ்சநாள் கார்த்திக், செந்தில், விவேக் என்ற three musketeers அடித்த கூத்து நல்லா இருந்திச்சி!!

Unknown said...

//எல்லாம் ஓட்டுப் பிச்சைதான் //
நீங்களே காரணத்த சொல்லிட்டீங்களே!
இதே மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலயும் ஏதாவது ஒரு சிலை முக்கியத்துவம் பெறுகிறது. பசும்பொன் சிலை எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது, காரணம் நிறய வோட்டு.

Bharath said...

அய்யா,

எனக்கு என்னமோ இன்னும் 20/25 வருடத்தில் தமிழகம் எங்கும் தேவர் கோவில்களும், அதற்கு போட்டியாக அம்பேத்கர் மற்றும் பெரியார் (அவர் பிறந்த நாளைக்கு திராவிட குஞ்சுகள் செய்யும் சேட்டைகள்) கோவில்களும் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.. பிற‌கு க‌ண‌ப‌தி ஊர்வ‌லம் போல‌ வருடாவ‌ருட‌ம் கோலாக‌ல‌ம் தான் :(

On second thougt.. this is bound to happen இந்த‌ மாதிரிதானே சாய்பாபா கோவில்க‌ளும், முனீச்வ‌ர‌ன் கோவில்க‌ளும் இன்று ப‌ர‌வி வ‌ருகின்ற‌ன‌..

தருமி said...

தீபா,
பரத்

நன்றி

வல்லிசிம்ஹன் said...

கோவிலில்லா ஊர் என்று யாரும் மதுரையைச் சொல்ல முடியாது.


இன்னும் கொஞ்ச நாட்களில் கோவில்கள் மட்டுமே குடியிருக்கும் ஊராகிவிடப் போகிறது:((

உண்மைத்தமிழன் said...

பெரியவரே..

ஓட்டுப் பொறுக்கி அரசியல் இருக்கும்வரையில் நமது இளைய சமுதாயத்தினருக்கு விழிப்பு இல்லை..

மூட நம்பிக்கையும், சாதிப் பித்தும் ஒரு சேரக் கலந்திருக்கிறது..

முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சிலைகளை அல்ல.. சிலை வைத்து பிஸினஸ் செய்ய நினைக்கும் நமது அரசியல் பொறுக்கிகளை..

வோட்டாண்டி said...

மசூதிய இடிச்சவரு தான் எங்க கட்சி பிரதமர் வேட்பாளர்னு ஒரு கட்சி சொல்லுது
கோடி கோடியா சுருட்டுன தலித் மகள் எங்க கட்சி வேட்பாளர்னு சிகப்பு தோழருங்க சொல்றாங்க
இதெல்லாம் விட நாட்டையே அமெரிக்கா காரன் கிட்ட அடகு வச்சிட்டு உக்கந்துருகார் இப்ப இருக்குறவரு

அத எல்லாம் விட இது ஜுஜூபி மேட்டர்.

தமிழ்நாட தவிர வேற எந்த மாநிலதுலையும் ஜாதிய அப்பட்டமா காட்டுற surnamea யாரும் துறந்தது இல்ல
அத வச்சி தான் ஐஸ்வர்யா ராயும் நம்ப லக்ஷ்மி ராயும் ஒரே வம்சம்னு தெரிஞ்சுது
அதுக்காக போப் ஆண்டவரும் பழனி ஆண்டவரும் ஒரே குடும்பமானு கேட்றாதீங்க..
அப்பறம் அதுல யார் அண்ணன் யாரு தம்பின்னு மத கலவரம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல

G.Ragavan said...

:( சாதியாம் சாதி. என்ன கொடுமைங்க இது. நாலு தலைமுறைக்கு முன்னாடி நாவிதன் சித்தப்பன்னு ஒரு சொலவடையிருக்கு. இது புரியாம இப்பிடிச் சாதிப்பித்துப் பிடிச்சு அலையுறாங்களே.... இருட்டறையில் உள்ளதடா உலகம். சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே.

ஐயா... இருக்குது. இந்தச் சாதீலதான் பொறந்தன்னு தெரியும். அதுக்காக அதைப் பிடிச்சித் தொங்கிக்கிட்டே திரியனுமா... ஒனக்கு ஒன்னுன்னா ஒஞ்சாதிக்காரந்தான் வருவான்னு ஒரு பயத்தோடத்தாண்டா சாதியப் பிடிச்சித் தொங்குறீங்க.

பேபல் கோபுரக் கதை நெனைவுக்கு வருது. அதுல மொழிக்குப் பதிலா சாதீன்னோ மதம்னோ இருந்திருக்கலாமோ! :(

Post a Comment