Saturday, November 22, 2008

283. நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல்

*

*
நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல் ... அசோகச் சக்கரவர்த்தியிடமிருந்து,


The House of Blue Mangoes நூலை எழுதி, அந்த முதல் புத்தகத்திலேயே புகழ் பெற்ற David Davidar எழுதிய THE SOLITUDE OF EMPERORS புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அவரது முதல் புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசித்துவிட்டு அப்படியே விட்டு விட்டேன். ஆனால் இது நம் இப்போதைய நாட்டு நடப்போடு, அதுவும் அரசியல் - மதங்கள் என்பவைகளோடு தொடர்புள்ளது என்று பின்னட்டையில் இருந்ததைப் பார்த்து ஆஹா, நம்ம விஷயமாச்சேன்னு எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். விட முடியவில்லை.

நவீனம்தான்; ஆனால் தன்மையில் தன் சுயசரிதை போல் எழுதியிருப்பதால் உண்மையிலேயே அவரது வாழ்க்கைச் சரிதம் தானோ என்றுதான் நினைத்தேன். அந்த அளவு இயற்கையாக விறு விறுப்புடன் ஒரு personal touch-ஓடு நன்றாக இருந்தது. நான் அந்தக் கதையையெல்லாம் இங்கே சொல்லப்போவதில்லை. மூன்று பேரரசர்கள் - அசோகர், பாபர்,காந்தி - இம்மூவர்களின் வாழ்ககையில் சில பகுதிகளை நம் சிந்தனைக்குத் தருகிறார். அதில் அசோகர் பற்றியுள்ள பகுதி எனக்குப் பிடித்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.


அசோகப் பேரரசர்

அவருடைய காலத்தில் உலகத்திலேயே பெரும் பேரரசை ஆண்டிருந்தாலும் அவரைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் மிகவும் குறைவே. 1837ல் ஜேம்ஸ் ப்ரின்செப் (James Prinsep) என்ற ஆங்கிலேயர் ப்ராமி((Brahmi) எழுத்துக்களைப் பற்றிய தன் ஆராய்ச்சியின் நடுவே பியா பியதாசி (Piya Piyadassi) (கடவுளுக்கு மிகப் பிரியமானவன்) என்ற ஒரு அரசரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற அதிலிருந்து அசோகரைப் பற்றிய முழு வரலாற்றுச் சித்திரம் உருவாக ஆரம்பித்தது.

மெளரிய பரம்பரையின் மூன்றாவது அரசனான அசோகன் (290 -232 B.C.)சண்டாள அசோகன் என்று அழைக்கப்படுமளவிற்கு பல கொடுமைகளைச் செய்ததாக அறியப்படுகிறார். நம்ம சிவாஜி நடித்த சாம்ராட் அசோகன் பார்த்திருப்பீர்களே, அதே போலவே கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்ற பின்னும் புத்த பிக்குவால் மனம் மாறி 'அன்பே மகா சக்தி' என்பதைப் புரிந்து இனி வாழ்நாளில் வாளெடுக்க மாட்டேன் என்று சூளுரைத்து, மக்கள் எல்லோரும் என் பிள்ளைகள் என்று பிரகடனப்படுத்தி சண்டாள அசோகன் என்றிருந்தவர் தர்ம அசோகர் என்றாகினார். புத்த மதத்தைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட அசோகர் கல்வெட்டுக்களில் சமயங்கள் சார்ந்த தன் கருத்துக்களைப் பதிந்துள்ளார். அது எப்போதைக்கும் அதிலும் இந்தக் காலகட்டத்தில் நமக்கும் / எல்லா சமயத்தினருக்கும் பொருத்தமானதாக இருப்பதால் அதை உங்களுக்குத் தர விரும்பினேன். இதோ …

கடவுளுக்கு மிகப் பிடித்தமானவனான ப்யாதாசி மதிப்பது …. எல்லா சமயங்களின் அடிப்படைக் கருத்துக்களும் வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்பதே.

இந்த வளர்ச்சியை பல வழிகளில் செய்ய முடியும்; ஆனாலும் அப்படி செய்யும்போது ஒவ்வொருவரும் தங்கள் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தங்கள் மதத்தை மட்டும் உயர்த்திக் காண்பிப்பதும், அடுத்த மதத்தினை காரணமின்றி தாழ்த்திப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும். விமர்சனங்கள் உண்டென்றாலும் அவைகளை மென்மையாக அந்த மதத்தினர் வருந்தாத அளவு செய்தல் வேண்டும். ஆனால் அதை விடவும் மற்ற மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதனால் உங்கள் மதத்தின் மேல் மற்றவருக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. இல்லாவிடில் உங்கள் மதம் அடுத்தவர் மதம் என இரண்டுக்குமே நீங்கள் கேடு விளைவிக்கிறீர்கள்.

தங்கள் மதத்தின் மேல் உள்ள அளப்பரிய ஈடுபாட்டால் தன் மதத்தை உயர்த்திப் பிடித்து, ‘என் மதத்தை மகிமைப் படுத்த வேண்டும்’ என்ற நினைப்பில் அடுத்த மதங்களைச் சாடும்போது நீங்கள் உங்கள் மதங்களுக்கே கேடு விளைவிக்கிறீர்கள். மதங்களுக்குள் சீரான, ஆரோக்கியமான உறவு தேவை. அடுத்த மதத்தினரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காதுகொடுத்துக் கேட்கும் மனமும், அவைகளுக்கு மனமார்ந்த மரியாதை அளிக்கும் மாண்பும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

மக்கள் எல்லோரும் தங்களின் மாற்று மதங்களின் அடிப்படைக் கொள்கைகளையும், அறிவுரைகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பதே ப்யாதாசியின் விருப்பம்.




*

*

22 comments:

யூர்கன் க்ருகியர் said...

// தங்கள் மதத்தை மட்டும் உயர்த்திக் காண்பிப்பதும், அடுத்த மதத்தினை காரணமின்றி தாழ்த்திப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும்.//

சில இடுகைகள் இவ்வாறு அல்லாமல் தமிழ்மணத்தில் வெளிவருகிறது.ஏன் இப்படி?

பாச மலர் / Paasa Malar said...

அடிக்கோடிட்ட வரிகள் பின்பற்றப்பட்டாலே போதும்..உலகின் ப்ரச்னைகள் அநேகம் இல்லாமல் போவதற்கு..

Unknown said...

//விமர்சனங்கள் உண்டென்றாலும் அவைகளை மென்மையாக அந்த மதத்தினர் வருந்தாத அளவு செய்தல் வேண்டும். ஆனால் அதை விடவும் மற்ற மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.//
//அடுத்த மதத்தினரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காதுகொடுத்துக் கேட்கும் மனமும், அவைகளுக்கு மனமார்ந்த மரியாதை அளிக்கும் மாண்பும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.//
இதை நான் முழுவதுமாக ஏற்கிறேன். இயன்றவரை கடைபிடிக்கவும் முயற்சிக்கிறேன்.
என் கொள்கையின் மீது மற்றவருக்கு மரியாதை ஏற்பட வேண்டும் என்பதை விட வீணாக குறை சொல்வதை தவிர்த்து விட வேண்டும், மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதை முக்கியமாகக் கருதுகிறேன்.

கபீஷ் said...

//தங்கள் மதத்தை மட்டும் உயர்த்திக் காண்பிப்பதும், அடுத்த மதத்தினை காரணமின்றி தாழ்த்திப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும்//

ஆமாம், அப்படி தாழ்த்தி பேசறவங்களின் கருத்துக்களை just ignore செஞ்சாலே போதும், அவங்களோட மத்தவங்க போய் மல்லுகட்ட வேண்டாம், முன் முடிவோட இருக்கற யாரையும் புரிய வைக்க முடியாது.

Unknown said...

//தங்கள் மதத்தை மட்டும் உயர்த்திக் காண்பிப்பதும், அடுத்த மதத்தினை காரணமின்றி தாழ்த்திப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும். // உபநிஷத்துக்கள் இதைச் சொல்கின்றன... நாம் எல்லோருமே இந்த குற்றத்தை தெரியாமலோ, தெரிந்தோ செய்திருக்கிறோம், இல்லையா:-))))

//எல்லா சமயங்களின் அடிப்படைக் கருத்துக்களும் வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்பதே.// மதம் வளர்ச்சிக்குட்பட்டது என்றால் மட்டுமே ஒரு மதத்தினன் சூழ்நிலை வளர்ச்சியைப் பொறுத்துக் கொண்டு தன் மதத்தில் இருக்க முடியும்.

எப்படியுமே கஷ்டம்:-)

புத்தகம் இங்கு நூலகத்தில் இருக்கான்னு பாக்கிறேன்.

தருமி said...

ஜுர்கேன் க்ருகேர்,
உங்க பெயரை வைத்து ஒரு research செய்து பார்த்தும் ஒண்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதென்ன பெயருங்க?

தமிழ்மணத்தில் மட்டுமா? எல்லாம் நம்ம மனசுக்குள்ள இருக்கிறதுதானே!

தருமி said...

//மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதை முக்கியமாகக் கருதுகிறேன்.//

அம்புடுதாங்க சுல்தான். அங்கேயே நம்ம பிரச்சனைகள் முடிஞ்சிருது!!

தருமி said...

நன்றி பாசமலர்

தருமி said...

//just ignore செஞ்சாலே ..//

இது எல்லாருக்கும் முடியுமாங்க ?

தருமி said...

கெக்கேபிக்குணி,

என்ன பெய்ருன்னு புரியமாட்டேங்குதே!
//புத்தகம் இங்கு நூலகத்தில் இருக்கான்னு பாக்கிறேன்.//

பாருங்க... புதின எழுதுறது ரொம்ப ஈசி அப்டின்றது மாதிரி தோணுற புத்தகம். எழுதினாதான் வரமாட்டேங்குது இதுமாதிரி!!

Thekkikattan|தெகா said...

நீங்களும் விடாம பதிவு விட்டு பதிவு அடிகோடிட்டு காட்டிட்டேதான் வாரீங்க, பரவாயில்லை காலப் போக்கில் சில பேராவது நீங்கள் சொல்ல வரும் கருத்தை மறு அசை போட்டுப்பார்த்தாலே உங்களின் முயற்சிக்கு கிடைத்த பலனாக எடுத்துக் கொள்வோம்.

Nara said...

இரயில் பயணத்தின் போது சில சமயம் அற்புதமான நண்பர்கள் கிடைப்பார்கள். மும்பை சென்னை பிராயணத்தில் பலவருடங்களுக்கு முன் ஒரு கேரளா ஆயுர்வேத மருத்துவர் நண்பராகக் கிடைத்தார். அவர் சொன்ன கருத்துக்கள் நெடு நாட்களாக என் மனதில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. அது தான் சரி என்ற சார்பு நிலையை நான் எடுத்து விட்டேன், அதனால் என்னால் அது சரிதானா என்று ஆராயவே இயலவில்லை. இதோ அந்த உரையாடலின் சாரம்.
====================================================================
அசோகர் கலிங்கத்துப் போருக்குப் பிறகு, என்னால் இத்தனை இழப்பா என்று உணர்ந்து மனம் மாறுவதை வரை சரி தான். ஆனால் அதற்காக இனி நான் போரே செய்யப் போவதில்லை என்ற நிலை எடுத்ததை சரி என்று சொல்ல முடியாது. மன்னனின் கடமை மக்களை காப்பது.இனி அராஜகமாகப் போர் தொடுப்பதில்லை என்பது சரியாக இருந்திருக்கும்.போர் வேண்டாம் என்பதால் அவன் வீரர்களுக்கு போர் பயிர்ச்சியே அழிக்கவில்லை. இவன் வழி வந்தவர்களும் ஒரு தலைப் பட்சமாக அஹிம்சையை கடைபிடித்ததால், எதிரிகள் அதை பலவீனம் என்று படித்தார்கள். அதனால் தான் நம் நாடு காலம் காலமாக எதிர்ப்பே இல்லாமல் வீழ்ந்தது வந்திருக்கிறது. மேலும் எதிரிக்கு தகுந்தவாறு நம் போர் அணுகுமுறையை மாற்ற வில்லை. நம் போர் தர்மப்படி ஆயுதம் இல்லாதவனை, முதியவரை, பெண்களை குழ்ந்தைகளை போரில் ஈடுபடாத பொது மக்களை அழிப்பதில்லை. தோற்றவனை கொல்வதில்லை. இந்த மாதிரி கொள்கைகளை நாம் செங்கிச்கானுக்கும் கஜினிக்கும எதிராக வைத்தோம், அதானால் பாதாளத்தில் வீழ்ந்தோம். இன்றும் கூட நாம் விட முயர்ர்சிக்கு கஜினியை உதாரணம் காட்டுகிறோம். அதுபோல இல்லாமல் ஒரு அந்நியன்-ஐ நம் மன்னன் 16 முறை தோற்கடித்து உயிருடன் அனுப்பினான், அதே அந்நியன் 17 வது முறை வெற்றி பெற்றதும் இந்தியமன்ணனை சித்தரவதை செய்து கொன்ன்றான் என்று சொல்லிப் பாருங்கள், நாகரீகத்தின் உச்சத்தில் நம் இருந்திருக்கிறோம் என்பது இங்கே சொல்லப்பட்டு நம் மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையாவது வளராமல் இருக்கும். அநீதியை எதிர்க்கும் போது போர் தர்மங்களை கடைப்பிடிக்க வேண்டியது கிடையாது. மகா பாரதத்தில் கிருஷ்ணன் பல் இடங்களில் தர்மத்தை மீறியிருக்கிறார். இராமன் வாலியை ஒளிந்து இருந்து கொன்றான். இது போல பல முன் உதாரணம்கள் இருந்தும் இந்திய மன்னர்கள் வெளி நாட்டு அக்கிரமான படைஎடுப்புகளை சமாளிக்கும் பொது தங்கள் போர் முறையை மற்றத் தவறியதே நம் தோல்விகளுக்கு கராணம் என்றார்.
=========================================================================
இந்தப் பதிவுக்கும இதற்கும் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, இங்கே பதிந்திருக்கிறேன். அதனால் பிரசுரிக்கமால் வேண்டுமானாலும் விடலாம். அசோகர் என்ற பெயரைப் பார்த்த உடனே இதைப் பதிந்து விட்டேன். உங்கள் கருத்து என்ன. முன் முடிவு ஏதும் இல்லாத நடுநிலயாளரின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். அன்புடன் மெச்சு

குமரன் (Kumaran) said...

பியாதசியின் கருத்து அருமை. இப்படித் தான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். :-) அறியாமல் தவறியிருக்க வாய்ப்புண்டு.

வடுவூர் குமார் said...

காதுகொடுத்துக் கேட்கும் மனமும்
என்ன சொல்லவருகிறார்கள் என்று கேட்கக்கூட மனம் இல்லாவிட்டால் எதுவே புரியாது.

வல்லிசிம்ஹன் said...

இன்னோரு மனிதனை மதிப்பது என்பது வளர்ந்தாலே போதும்.
நேசம் இருந்தால் முழுப் பிரச்சினையும் தீர வழியுண்டு. அருமையான சரித்திர உதாரணங்களுடன் எழுதி இருக்கிறீற்கள் தருமி. மிகவும் நன்றி.

தருமி said...

தெக்ஸ்,
//விடாம பதிவு விட்டு பதிவு அடிகோடிட்டு காட்டிட்டேதான் வாரீங்க, //

உன் கடமையைச் செய்; பலனை எதிர்பார் அப்டின்னுதான் இருக்கேன்!

தருமி said...

மெச்சு-அப்பா,
ஆயுர்வேத வைத்தியார் பயங்கரமான ஆளுதான்; நல்லாவே சொல்லியிருக்கிறார்.
//நம் நாடு காலம் காலமாக எதிர்ப்பே இல்லாமல் வீழ்ந்தது வந்திருக்கிறது. //

ஆனால் அசோகர் தன் காலத்தில் செய்தது எப்படி பிற்காலத்தில் நடந்ததுக்கு காரணியாக இருக்கும்?

ஆனால் அரசன் என்பவன் நாட்டைக் காக்க 'சத்திரியனா'கத்தான் இருக்க வேண்டுமென்பது சரியாகத்தானிருக்கு.

//ஒரு அந்நியன்-ஐ நம் மன்னன் 16 முறை தோற்கடித்து உயிருடன் அனுப்பினான், அதே அந்நியன் 17 வது முறை வெற்றி பெற்றதும் இந்தியமன்னனை சித்தரவதை செய்து கொன்றான்//
இதுவரை நான் நினைத்துப் பார்க்காத கோணம்!

நிச்சயமா சரியான கருத்துள்ள விஷயமா சொல்லியிருக்கிறார். ஆனால் அசோகர் எல்லாவற்றையும் வென்றபின் சாத்வீகியாக மாறியதால் நீங்கள் சொல்லும் பிரச்சனை அவர் காலத்தில் இல்லாமலிருந்தது என்று நினைக்கிறேன்.

it is high time you started your own blog! மெச்சுப் பக்கம்? Or just, மெச்சு ?

தருமி said...

குமரன்,
//இப்படித் தான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். :-) அறியாமல் தவறியிருக்க வாய்ப்புண்டு.//

ரிப்பீட்டேய் ...

தருமி said...

வடுவூர் குமார், வல்லியம்மா

மிக்க நன்றி

Nara said...

மெளரியப் பேரரசு பரந்து விரிந்ததாக இருந்தது, மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று காலகாலத்திற்கும் அவன் காண்பித்த வழியில் நடந்திருக்கலாம். காந்தி இன்று நம்மிடையேஇல்லை எனிலும் எத்தனை நல்ல இதயங்கள் (அரசியில்வாதிகள் அல்ல) அவரை நினைவில் நிறுத்தி செயல் படுகின்றன அது போல. அவர் காலத்திற்கு பிறக்கும் கூட அவர் தாக்கம் இருந்திருக்கலாம். அதனாலயே நம் நாடு ஒரு soft target ஆக மாறியிருக்கலாம். இப்படி தான் நான் நினைக்கிறன்.பாடத் திட்டத்திற்கு வெளியே நான் வரலாற்றை படித்ததில்லை. இனி மேல் படித்து தெளிய ஆசையுண்டு. விரைவில் ஆரம்பிக்க வேண்டியதுதான். பெயர் தான் நீங்களே கொடுத்து விட்டீர்களே ! மெச்சு அப்பா அல்லது மெச்சப்பா. அன்புடன் மெச்சப்பா

தருமி said...

மெச்சு அப்பா,
soft target சரிதான்னு நினைக்கிறேன். கேட்டா வந்தாரை வாழவைக்கும் அப்டின்றது ,, இல்ல?

சீக்கிரமா ஆரம்பிங்க .. வாழ்த்துக்கள்

ரொம்ப வித்தியாசமா நல்லா எழுதக்கூடிய ஆளுன்னு நிரூபிக்கிறீங்க..வாங்க .. வாங்க. நான் 'ஐ த ஃப்ர்ஸ்ட் போடணும்.

தருமி said...

டாக்டர்,
//தங்களுக்குத்தான் மதம் மேல் நம்பிக்கை இல்லையே!! ஏன் பின்னே அதைப்பற்றியே பேசி, எழுதவும் செய்கிறீர்கள்.. //

என்னங்க பண்றது? எனக்கு இல்லை .. ஆனா உங்க எல்லாத்துக்கும் இருக்கே!

அதோட இதெல்லாம் நானாங்க சொன்னேன். அசோக மவராசா சொன்னதில்லையா இது?

Post a Comment