Friday, February 20, 2009

294. 'நான் கடவுள்' படம் பார்த்தேன்.

*

நம் பதிவுலக மக்களின் விமர்சனங்களை, அதுவும் கதை, திரைக்கதை, வசனம் என்று இன்னும் பலப்பல காரியங்களைப் புட்டு புட்டு வைக்கும் நம்ம உண்மைத் தமிழனின் விமர்சனம் வாசிக்கும் முன் 'நான் கடவுள்' படம் பார்த்துவிட வேண்டுமென ஏற்கெனவே நினைத்து வைத்திருந்தேன். இருந்தும் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்மணம் திறந்தபோது உ.த.வோடு சேர்ந்து இன்னும் இருவர் பயமுறுத்தவே தவ்வி தமிழ் மணத்துக்கு வெளியே குதித்து ஓடிவிட்டேன். இருந்தும் முதலில் நினைத்தது போல் அன்றே படம் பார்க்க முடியவில்லை.

அடுத்த நாள் இரவுக் காட்சிக்கு சென்று விடுவது என்று முடிவெடுத்து மாலையே புலன் விசாரணையில் இறங்கினேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த குரு தியேட்டரில் படம் ஓடியது. மாலையே அங்கே போய் விசாரித்தேன். வெளிச் சுவரில் இருந்த ஒரு ஜன்னல் மாதிரியான ஓட்டையைக் காண்பித்து அங்கு முதல் வகுப்புக்கு 9.30-க்கே டிக்கெட் கொடுத்துவிடுவார்கள்; 70 ரூபாய்; 10 மணிக்குத்தான் மற்றைய அனுமதிச் சீட்டுகள் கொடுக்கப்படும் என்றார் வாயில் காப்பாளர். சரியாக 9.20-க்கெல்லாம் தியேட்டருக்கு வந்துவிட்டேன்.காத்திருக்க வேண்டியதிருக்குமென்பதால் வாசிக்க புத்தகம் ஒன்றும் எடுத்துவிட்டு வந்துவிட்டேன். என்ன புத்தகம்' என்ன அதில் சொல்லியுள்ளது என்பதெல்லாம் தொடர் பதிவில் எழுத நினைத்திருக்கிறேன் - ஜாக்கிரதை!

நேரே அந்த ஓட்டைக்குப் பக்கத்தில் அல்லது எதிர்த்தாற்போல் நிற்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. யாரும் அப்போது அங்கு நிற்கவும் இல்லை. ஓரிரு பேர் வந்து நிற்பதைப் பார்த்ததும் நானும் அப்படியே மெல்ல நகர்ந்து ஓட்டைக்குப் பக்கத்தில் போனேன். ஏற்கெனவே நின்று கொண்டிருந்த இருவருமே இளைஞர்கள். என்னைப் பார்த்ததும் எனக்காக இடம் விட்டதுபோல் உணர்ந்தேன். ஆக நான்தான் டிக்கெட் கவுண்டரில் முதல் ஆளாக நின்று கொண்டிருந்தேன். ஆனாலும் யாரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நிற்காமல் தள்ளி தள்ளி நின்றுகொண்டிருந்தோம். அதற்குள் இன்னும் இரு வரிசைகளில் கூட்டம் நிறைய சேர ஆரம்பித்து விட்டது. வருவோர்கள் எங்களிடம் இது எத்தனை ரூபாய் டிக்கெட்டுக்கான வரிசை என்று கேட்டு பல சந்தேகங்களைக் கிளப்ப ஆரம்பித்து விட்டனர். 9.45க்கு டிக்கெட் கவுண்டர் திறக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அதற்குள் மற்ற டிக்கெட்டுகளைக் கொடுக்க ஆரம்பித்து எங்களுக்கு சூடேற்றி விட்டு விட்டனர். இதோ இப்போது கொடுக்கப் போகிறார்கள் என்று வாயில் காப்பாளர் வந்து சொல்லிவிட்டுப் போக நான் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தேன்.ஏனெனில் இப்போது கவுண்டரைப் பார்த்து, கையில் தயாராக காசோடு நிற்கவேண்டியதாயிருந்தது. இரண்டாம் நாள் .. இரவுக் காட்சி .. அதில் முதல் டிக்கெட் ... என்னவோ ஒரு தயக்கம் .. வெட்கம் .. ஏறக்குறைய 35 வருஷத்துக்கு முந்தி 'சவாலே சமாளி' படம் பார்க்க தேவி தியேட்டரில் டிக்கெட்டுக்காக என்னை வரிசையில் நிற்க வைத்துவிட்டு, நண்பன் ஆல்பர்ட் வழக்கமாகச் சொல்லும் பொய்யோடு - (C.T. Office அப்டின்னு சொல்லிக்கிட்டு போவான்; அவன் ராசி .. ஒருத்தரும் அவனைக் கண்டுகொள்ளாம விட்டுருவாங்க .. டிக்கெட் எடுத்துட்டு வந்திருவான்; நான் வரிசையிலிருந்து பிரிந்து அவனோடு சேர்ந்து கொள்வேன்; அது அந்தக் காலம்) - அந்த நினப்பெல்லாம் வந்தது. அதன் பின் அதே மாதிரி பாரதி ராஜா படத்துக்கு முதலிரு நாட்களிலேயே படம் பார்க்க முனைந்தது உண்டு. விமர்சனம் எதும் கேட்கும் முன் படம் பார்த்திரணும்னு ஒரு நினப்பு. ஆனால் 80களில், 90 களில் தயாராக டிக்கெட்டு எடுத்துத் தர ஆட்கள் ஏற்பாடு செஞ்சிட்டு போறதுதான். ஆனால், இப்போ இத்தனை வருசத்துக்கு அப்புறம் .. இந்த வயசில இப்படி வந்து நிற்கிறோமேன்னு ஒரு ஓரத்தில ஒரு சின்ன நினப்பு; தயக்கம். அடுத்து நிக்கிற இளைஞனை முதல் டிக்கெட் எடுக்கச் சொல்லிவிட்டு, இரண்டாவது டிக்கெட்டை வாங்கிட வேண்டியதுதான் அப்டின்னு நினச்சிக்கிட்டு நின்னப்போ, திடீர்னு 70 ரூபாய் டிக்கெட்டுக்கு இங்க உள்ளே வாங்கன்னு ஒரு அறிவிப்பு வர, கூட்டமா அங்கே உள்ளே போனால், அங்க கம்பி வலைக்குள்ள இருந்த ஒரு தற்காலிக கவுண்டர் வழியே டிக்கெட் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இங்கே க்யூவாவது ஒண்ணாவது .. நானும் கொஞ்சம் க்யூ மாதிரி ஒண்ணை ஆரம்பிக்கலாமேன்னு தயங்கி பின்னால நின்று கொண்டிருக்கும்போதே டிக்கெட் முடிஞ்சிருச்சின்னு சொல்லிட்டாங்க.

நமக்கு வந்த சோதனை அப்டின்னு நினச்சிக்கிட்டு இருக்கும்போது மீண்டும் காவலர் வந்து அடுத்த 60 ரூபாய் டிக்கெட்டை உள்ளே இருந்தே, வெளியேயிருந்து வரிசையில் வராமலேயே வாங்கிக் கொள்ள அழைத்துப் போனார். அங்கே ஏற்கெனவே வரிசையில் வந்து சீட்டு வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தகராறு செய்தால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது வாயில் காப்பாளரே மனது வைத்து என்னிடம் இருந்து காசை வாங்கி டிக்கெட் எடுக்க காத்திருந்த தம்பதிகளிடம் கொடுத்து 'சாருக்கும் ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்திருங்க' என்றார். என்ன முகராசியோ அப்டின்னு நினச்சிக்கிட்டேன். எப்படியோ டிக்கெட் வாங்கியாச்சி.

உள்ளே போனால் ஏ.சி. எல்லாம் போட்டிருந்தார்கள். முன்பு பாரதியார் படம் பார்க்கப் போனபோது பால்கனியில் மட்டும் தான் ஏ.சி. இருந்ததாக நினைவு. ஏ.சி.யை மட்டும் நம்பக்கூடாதுன்னு நினச்சி, மின்விசிறி எல்லாம் பார்த்து வசதியாக ஒரு இடம் பிடித்து உட்கார்ந்தேன். கையில் இருந்த புத்தகத்தில் இரண்டு மூன்று பக்கம் வாசிக்கும்போதே வெளிச்சம் குறைக்கப் பட சுற்றியுள்ளவர்களைப் பார்க்க ஆரம்பித்தேன். எல்லாரும் முப்பது முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள்; அதிலும் இளைஞர்கள் அதிகம்; பெண்கள் அனேகமாக 1% இருக்கலாம். எனக்குப் பக்கத்தில் ஒரு சீட் காலி. அடுத்து ஒரு இளைஞன்; அடுத்து ஒரு சீட் காலி. இரண்டு நண்பர்கள் சேர்ந்து எங்கள் வரிசைக்கு வந்தார்கள். அருகருகே உட்கார எண்ணி, நடுவில் இருந்த அந்த இளைஞனை ஒரு சீட் தள்ளி உட்காரச் சொல்லிக் கேட்டார்கள். என்ன ஆச்சரியம். அதற்கு அவன் முடியாதென்றான். வந்தவர்கள் சொல்லிப் பார்த்தார்கள்; இவனோ கேட்பதாயில்லை. இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சண்டைக்கிழுத்த நினைவு வந்தது. ஆனால் வந்தவர்கள் நல்ல மாதிரி போலும். அடுத்த வரிசைக்குச் சென்று விட்டார்கள். என்ன இது; பாலா மாதிரி டைரக்டர் படம் பார்க்க வந்திருக்கிறான்; இருந்தும் இப்படி இருக்கிறானேன்னு தோன்றியது. சில நிமிடங்களில் அடுத்து அதே போல் இருவர் வர, அவன் தள்ளி உட்கார மாட்டேனென்று சொல்ல, அவர்களும் வேறிடம் பார்த்துச் செல்ல... எனக்கு அவனிடம் ஏதாவது கேட்டுவிடலாமெவென தோன்ற ... அடக்கிக் கொண்டேன். ஆனால் எனக்கு அவனை விடவும், சாதுவாக சென்றவர்கள் மீது கொஞ்சம் எரிச்சல் வந்தது.

படம் ஆரம்பித்து, பார்த்து, முடிந்து வெளியே வரும்போது இரு சக்கர வண்டியை எடுக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. அவ்வளவு இளைஞர் பட்டாளம். காத்திருந்த போது காதில் விழுந்த சில விஷயங்களில் ஒன்று: இந்தப் படம் எடுக்க எதுக்கு எட்டு வருஷம்? ஆனால் மற்றபடி பலரும் ஒரு இறுக்கத்தோடு சென்றதாகவே தோன்றியது.


*

17 comments:

ilavanji said...

தருமிசார்,

// முகராசியோ அப்டின்னு //

இருந்தாலும் இருக்கும். இல்ல மன்னன் படத்துல ரஜினி செய்யறமாதிரி ஏதாச்சும் செஞ்சு டிக்கெட்டு வாங்கனீங்களா?! :)

படத்தைப்பத்தி உங்க பார்வை என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு ஆவலா வந்தேன். சொல்லவே இல்லையே! அடுத்த பதிவுல வருகிறதா?!

வால்பையன் said...

//இரண்டாம் நாள் .. இரவுக் காட்சி .. அதில் முதல் டிக்கெட் ... என்னவோ ஒரு தயக்கம் .. வெட்கம் .//

இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை,
வசதி வாய்ப்புகள் இருந்தும், சற்றே வயதான தோற்றம்(கவனிக்க தோற்றம் மட்டும் தான்) இருந்தும் எங்களை போல் ப்ளாக்கில் டிக்கெட் எடுக்காமல் Q வில் நின்றது, எங்களை போன்ற இளைஞர்களுக்கு செருப்படி

வால்பையன் said...

இது தான் நான் கடவுள் அனுபவம்.

எங்கே நீங்கள் விமர்சனம் எழுதி கொன்று விடுவீர்களோ என்று பயந்து விட்டேன்.

தலைப்புகேற்ப பதிவு!

வருண் said...

***எனக்குப் பக்கத்தில் ஒரு சீட் காலி. அடுத்து ஒரு இளைஞன்; அடுத்து ஒரு சீட் காலி. இரண்டு நண்பர்கள் சேர்ந்து எங்கள் வரிசைக்கு வந்தார்கள். அருகருகே உட்கார எண்ணி, நடுவில் இருந்த அந்த இளைஞனை ஒரு சீட் தள்ளி உட்காரச் சொல்லிக் கேட்டார்கள். என்ன ஆச்சரியம். அதற்கு அவன் முடியாதென்றான். வந்தவர்கள் சொல்லிப் பார்த்தார்கள்; இவனோ கேட்பதாயில்லை. ***

I loved this part, Mr. Dharumi LOL!

தருமி said...

வால்ஸ்,
அப்படியெல்லாம் தெனாவட்டா இருக்காதீங்க.

இளவஞ்சி,
உங்க கேள்விக்குப் பதில் கொடுத்தாச்சில்ல ...

இராம்/Raam said...

//இந்தப் படம் எடுக்க எதுக்கு எட்டு வருஷம்? //

அது மூணு வருசம்தான்....

நம்மூரூ பாசையிலே நல்லா லந்தை கொடுத்தீருங்க.... ஒங்களுக்கு இந்த படம் பிடிக்கலன்னா வேற எந்தமாதிரி படங்கள்தான் பிடிக்கும்???

தருமி said...

ராம்ஸ்,
உங்க வாத்தியார் உங்களை அந்தக் காலத்தில அவசரக் குடுக்கை என்றும், முந்திரிக்கொட்டை என்றும் கூப்பிடுவாராமே ...

Thekkikattan|தெகா said...

என்ன ஆச்சரியம். அதற்கு அவன் முடியாதென்றான். வந்தவர்கள் சொல்லிப் பார்த்தார்கள்; இவனோ கேட்பதாயில்லை. //

படத்தின் மையக் கருத்தை இதை விட யாரும் கவனித்து கூறியிருக்க முடியாது. அந்த நபர் "நான் கடவுள்" பார்க்க வந்திருக்கிறேன்னு ஆணித்தரமாக அடித்துக் கூறியதையும், அதனை கவனித்த நீங்களும்.... அடடடா :-)).

பாகம் ரெண்டு வருதா...??

Narayanaswamy G said...

நானும் பார்த்தேன்....

அந்த இறுக்கம் மிக மிக சத்தியம்!!!

அந்த மலையாளி என்ன ஆனார் என்று புரிந்ததா?

தருமி said...

கடப்பாரை,

//அந்த மலையாளி என்ன ஆனார் என்று புரிந்ததா?//

அடுத்த பதிவில் உள்ள u tube கட்டாயம் பாருங்க.......

உண்மைத்தமிழன் said...

அடடா..

பேராசிரியரே..

நம்மளை வைச்சு காமடி, கீமடி பண்ணியிருக்குற மாதிரி தெரியுது..

உங்களுக்காகத்தான் இந்தப் படத்துக்கு விரிவா விமர்சனம் எழுதக் கூடாதுன்னு நினைச்சிருந்தேன்.. பட்.. அந்த தடையுத்தரவை பாலாவே செஞ்சுட்டாரு.. தப்பிச்சிட்டீங்க போங்க..

எப்பவும் என்னையவே சொல்வீங்க.. இப்ப நீங்களே உள்ள போன கதையையும், படம் பார்த்த கதையையும் சொல்லிருக்கீங்க..

ஜெயமோகனின் வசனத்தையெல்லாம் கேட்டு உத்வேகமாயிட்டீங்களோ..!

தருமி said...

உ.த.,

படம் பார்த்த கதையைத்தானே சொன்னேன். படக்கதையையா சொன்னேன். அதுக்குத்தான் இருக்கவே இருக்கீங்களே நீங்க ..அந்த ஈரான் படக்கதை முழுசா வாசிச்சேன். நன்றி

Jayabarathan said...

அன்புமிக்க நண்பர் தருமி,

<< கற்பனை மெய்ப்பாடு >> என்ற சொற்றொடரில் "மெய்ப்பாடு" என்பது பிரதமச் சொல். "கற்பனை" என்பது அதன் பண்பாடை விளக்கும் தழுவி.

காலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டைன், அப்துல் கலாம் ஆகிய அனைத்து விஞ்ஞான மேதைகளும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்.

http://michaelcaputo.tripod.com/einsteinandgod/ [Einstein's View of God]

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

Raju said...

\\நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு பூரிப்படையச் செய்யும் பின்னூட்டங்கள்.//

அப்டின்னா எனக்கு முதல் முத்தம் கொடுத்தது நீங்கதான் தல...
நன்றி...

Raju said...

குரு தியேட்டரா...?அட ஆரப்பாளையம்...!
நீங்க மதுரையா பாசு...?
நம்ம சைடும் வந்துட்டு போங்க....
www.tucklasssu.blogspot.com

தருமி said...

//நீங்க மதுரையா பாசு...?//

ஆமாங்க ஆமா ... தருமி வேற எங்க இருப்பாரு?

தருமி said...

//\\நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. //

இதச் சொன்னது நானில்லைங்க ...

Post a Comment