Sunday, April 05, 2009

304. பதிவர் சந்திப்பும் .. இன்னும் தொடரும் ஓட்டமும் ... 4


*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:
1.289. கூடல் நகரின் பதிவர் கூட்டம்...1
2.290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 2
3.293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்!
4.291. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 3


*

இரு நாட்களுக்கு முன்பு (மூன்றாம் தேதி) மாலை பதிவுலக நண்பர் ராம் வீட்டுக்கு வந்திருந்தார். இரு பதிவர்கள் மட்டுமே சந்தித்துப் பேசினாலும் அதுவும் ஒரு பதிவர் சந்திப்புதானே. அன்று என் பக்கத்து வீட்டு நண்பர் பழனியும் எங்களோடு இணைந்து கொண்டார். Two is company; three is crowd என்பதற்கேற்ப எங்கள் "கூட்டம்" இனிதே நடந்தது.

பழனி, ராம், நான் என மூவரும் சிறிது நிமிடங்கள் ஏதேதோ பேசியவர்கள் எப்படியோ முந்திய பதிவர் சந்திப்பைப் பற்றிய பேச்சு வர, அப்படியே தமிழ் எழுத்தைப் பற்றிய பழைய விவாதம் தொடர ஆரம்பித்தது. அது போனது ஏறத்தாழ இரண்டரை மணி நேரம்.ஒரு முக்கிய புள்ளியில் ராம் ஜாலி ம்பர், tbcd போலவே தமிழ் .. தாய் .. போன்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது தெரிந்தது. மற்ற எந்த மொழிக்காரர்கள் போலில்லாமல் தமிழ் மொழியை மட்டுமே '(தமிழ்க்) கடவுள்' என்ற நிலையில் வைத்திருக்கிறோம் நாம் என்றார் ராம். அதுதான் பிரச்சனையே என்றேன் நான். என் வீட்டு தொலைபேசியைப் போல் மொழி எனக்கு ஒரு கருவி; அது 'என்னுடைய' கருவி என்ற முறையில் அதன் மீது எனக்கு ஒரு பிடித்தம், நெருக்கம் இருக்கலாமேயொழிய அதை கன்னித்தமிழ், தமிழன்னை, தமிழ்க்கடவுள் என்றெல்லாம் உயர்த்துவதாலேயே பிற மொழிக் கலப்பு போன்றவைகள் உங்களைப் போன்ற தமிழன்பர்களுக்கு நிரம்பவே உறுத்துகிறது. மொழியை ஒரு கருவியாக மட்டும் பார்த்தால் இந்தப் பிரச்சனை இல்லையென்பது என் விவாதமாக இருந்தது. ராமால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றே தோன்றியது.தமிழ்க் காதலில் tbcd, ஜாலி ம்பர் போலவே ராமும் அவர்களை ஒத்திருந்தார். ஆனால், இவரது வேறொரு தமிழ்க்கொள்கை அவர்களிலிருந்து முற்றிலும் வேறாக, அடுத்த எதிர்முனையில் இருப்பது போல் தோன்றியது. ராம் இயல்பான தமிழில் பதிவுகள் எழுதும் கொள்கை பற்றிப் பேசினார். அதுவே புதிய பதிவர்களுக்கு எழுதும் ஆர்வத்தைத் தரும்; ஆகவே பேச்சுத் தமிழை எழுத்துத் தமிழாக எழுதுவது சரி என்று வாதிட்டார்.


இதைப் பற்றி நான் முன்பிட்டிருந்த பதிவைப் பற்றிக் கூறினேன். தமிழில் ஆங்கிலம் போலல்லாமல் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் மிகவும் ஒன்றோடொன்று விட்டு விலகி நிற்பவை.அதில் எழுத்துத் தமிழை முறையாகப் பயன்படுத்துதலே சரி. மொக்கை, ஜாலி பதிவுகள் என்ற முறையில் சில பதிவுகளை,பின்னூட்டங்களை பேச்சுத்தமிழில் எழுதுவது சரியாக இருக்கலாம். ஆனால் எப்போதும் அப்படி எழுதுவது தமிழ் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றேன். ராம் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. விவாதம் போய்க்கொண்டிருந்த போது, ராம், "இதைப் பற்றி ஆராய்ஞ்சி சொல்லணும்..." என்று சொல்ல, நான் அவரிடம் எழுதும்போது, 'இதைப்பற்றி ஆராய்ஞ்சி .. ' என்று எழுதலாமா, இல்லை, 'இதைப்பற்றி ஆராய்ந்து ...' என்று எழுதவேண்டுமா என்ற கேள்வியை வைத்தேன்.ராம் 'இதைப்பற்றி ஆராய்ஞ்சி .. ' என்று எழுதினால் போதும் என்றார். நான் அது தவறு என்றேன். 'ஆராய்ந்து..' என்றுதான் எழுதவேண்டும் என்றேன். எங்கள் விவாதம் அந்தப் புள்ளியில் முடிந்தது.

இங்கே விவாதம் தொடருவோமா ...

16 comments:

துளசி கோபால் said...

//தமிழில் ஆங்கிலம் போலல்லாமல் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் மிகவும் ஒன்றோடொன்று விட்டு விலகி நிற்பவை.//

அப்படியா நினைக்கிறீங்க?

இங்கே ஆங்கிலமே தாய்மொழியாக இருக்கும் மக்கள் (கொஞ்சம் கீழ்த்தட்டு நிலை, இது சாதியை வைத்து அல்ல, நிதிநிலையை வைத்து) பேசும்போது எவ்வளவு கொச்சையாகப் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்து வருகின்றேன்.

பேச்சுதான் இப்படி.... எழுதும்போது சரியாக எழுதுவாங்கன்னு சொல்ல முடியாது. இலக்கணப்பிழையும் எழுத்துப்பிழையும் வேற மலிஞ்சு கிடக்கும்.

குமரன் (Kumaran) said...

இதப்பத்தி நல்லா ஆராய்ஞ்சியே எழுதலாம் ஐயா.

ஆராய்ந்து எழுதுறவங்க நாப்பது பேரு இருந்தா ஆராய்ஞ்சி எழுதுறவங்க இன்னொரு நாப்பது பேரு இருக்கணும். ஆராய்ந்து எழுதுறவங்க மறந்துட்ட பல பழந்தமிழ் சொற்களை ஆராய்ஞ்சு எழுதுறவங்க இன்னும் பேச்சு வழக்குல வச்சிருக்காங்க. அதுக்காகவே பேச்சுத் தமிழும் அச்சிலேறணும்.

குமரன் (Kumaran) said...

ராம் பபு தலைக்கு மேல இருக்குற ஓவியம் நல்லா இருக்குங்க. ஆரு வரைஞ்சது?

தருமி said...

//இலக்கணப்பிழையும் எழுத்துப்பிழையும் வேற மலிஞ்சு கிடக்கும்.//

நீங்க சொல்ற மக்கள் கீழ்த்தட்டு மக்கள் என்று சொல்லியுள்ளீர்கள். வறுமையும் அதனால் உள்ள படிப்பறிவின்மையும் சேர்ந்த அவர்களை விட, கொஞ்சம் படித்த ஆங்கிலம் பேசும் மக்களிடம் நீங்கள் இந்த வேற்றுமையை அதேபோலவே அதிகமாகக் காண்கிறீர்களா?

என் பழைய பதிவையும் வாசித்துப் பார்க்க அழைக்கிறேன்.

தருமி said...

//பேச்சுத் தமிழும் அச்சிலேறணும்.//

அதப் பத்தியும் பேச்சு வந்திச்சே. கி.ரா. எழுதுறாரு. நம்ம பதிவுலகத்தில இளவஞ்சி, 'நல்லா இருங்கடே' ஆசிப் மீரான் ... இவங்கல்லாம் அதை நல்லாவே பண்றாங்க. மண்சார்ந்த விஷயங்களை எழுதும்போது அந்த மண்ணுக்குரிய தமிழிலே எழுதும் அழகே அழகு. ஆனால் மற்றவிடங்களில் ...?

தருமி said...

..ராம் பபு தலைக்கு மேல இருக்குற ஓவியம் நல்லா இருக்குங்க. ஆரு வரைஞ்சது?//

ரொம்ப சந்தோஷமா போச்சு, குமரன். அதனால் அத மட்டும் தனியாவும் ஒரு படமா போட்டாச்சுல்ல ..

கண்ணில பட்டதுமில்லாம அது உங்களுக்குப் பிடிச்சும் போனது ..சந்தோஷம் .. பெருமை... ஹி.. ஹி.. பேத்தி வரஞ்சதில்லா .. (வயசு: 5+) தலைப்பு அவள் சொன்னது.

சாலிசம்பர் said...

தருமி அய்யா,
கடவுளைப் போலவே மொழியையும் தூக்கிக்கடாசுவது நெருடலாகவே உள்ளது.கடவுளுக்குப் பருவடிவம் என்று ஒன்று இல்லை,ஆனால் தமிழ் மொழிக்கு கறாரான பருவடிவம் உள்ளது.திராவிட மொழிக்குடும்பத்தில் மிகத்தொன்மையான மொழி.இதனுடன் வேற்றுமொழிச்சொற்கள் கலந்து தான் வேறு வேறு மொழிகள் உருவாகியுள்ளன.நாற்பது,ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பிரவாள நடை இருந்தது,அதுதான் சிறப்பானது என்ற எண்ணமும் இருந்தது.தமிழ் ஆர்வலர்களால் அந்நிலை மாற்றப்படவில்லையா?.இப்போது தமிங்கிலிசு தவிர்க்க முடியாதது என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.

சாலிசம்பர் said...

தருமி அய்யா,
கடவுளைப் போலவே மொழியையும் தூக்கிக்கடாசுவது நெருடலாகவே உள்ளது.கடவுளுக்குப் பருவடிவம் என்று ஒன்று இல்லை,ஆனால் தமிழ் மொழிக்கு கறாரான பருவடிவம் உள்ளது.திராவிட மொழிக்குடும்பத்தில் மிகத்தொன்மையான மொழி.இதனுடன் வேற்றுமொழிச்சொற்கள் கலந்து தான் வேறு வேறு மொழிகள் உருவாகியுள்ளன.நாற்பது,ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பிரவாள நடை இருந்தது,அதுதான் சிறப்பானது என்ற எண்ணமும் இருந்தது.தமிழ் ஆர்வலர்களால் அந்நிலை மாற்றப்படவில்லையா?.இப்போது தமிங்கிலிசு தவிர்க்க முடியாதது என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.

தருமி said...

//கடவுளைப் போலவே மொழியையும் தூக்கிக்கடாசுவது நெருடலாகவே உள்ளது.//

நீங்க வேற .. கடவுளையே தூக்கிக் கடாசியாச்சி...!

//கடவுளுக்குப் பருவடிவம் என்று ஒன்று இல்லை,ஆனால் தமிழ் மொழிக்கு கறாரான பருவடிவம் உள்ளது.//

இங்கே ரூபம், அரூபம் என்பதில் எல்லாம் என்ன முக்கியத்துவம்?

//திராவிட மொழிக்குடும்பத்தில் மிகத்தொன்மையான மொழி.இதனுடன் வேற்றுமொழிச்சொற்கள் கலந்து தான் வேறு வேறு மொழிகள் உருவாகியுள்ளன//

so what?

TBR. JOSPEH said...

நீங்க வேற .. கடவுளையே தூக்கிக் கடாசியாச்சி...!//

கடவுள்னு ஒருத்தர் இருந்தாத்தானே அவர தூக்கி எறியறதுக்கு? நீங்கதான் கடவுளே இல்லைன்னு சொல்றவராச்சே:))

துளசி கோபால் said...

//வறுமையும் அதனால் உள்ள படிப்பறிவின்மையும்....//

பள்ளி இறுதிவகுப்பு வரை இங்கே கட்டாயக்கல்வி இருக்குதுங்க. வறுமை என்றும் சொல்ல முடியாது.....
வெல்ஃபேர் கவர்மெண்ட்.

தருமி said...

//கடவுள்னு ஒருத்தர் இருந்தாத்தானே அவர தூக்கி எறியறதுக்கு? //

சரி .. அப்போ இப்படி வச்சுக்குவோம் .. கடவுள் என்னும் concept-யையே தூக்கி எறிஞ்சாச்சு ..!

சாலிசம்பர் said...

//நீங்க வேற .. கடவுளையே தூக்கிக் கடாசியாச்சி...!

இங்கே ரூபம், அரூபம் என்பதில் எல்லாம் என்ன முக்கியத்துவம்?//

இல்லாத ஒன்றை புறக்கணிப்பதற்கும்,இருக்கின்ற ஒன்றை புறக்கணிப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் அந்த முக்கியத்துவம்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில்,சிந்தனையின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிப்பது 'உழைப்பு' என்பது மார்க்சியப்பார்வை.உழைப்பை விட முக்கியம் 'மொழி' என்பது மார்க்சுக்குப்பின் வந்த பின் நவீனத்துவப்பார்வை.

(இத்தகைய பின் நவீனத்துவ எழுத்துகளை நேரடியாக நான் வாசிக்கவில்லை.ஜமாலனின் எழுத்துகளிலிருந்து குத்துமதிப்பாக புரிந்து கொண்டது)

மொழி எந்த அளவுக்கு உயிர்போகும் பிரச்சினையாக இருக்கிறது என்பதை இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.எனவே கடவுள் கற்பிதத்திற்கு கொடுக்கும் அதே மரியாதையை மொழிக்கும் கொடுக்கலாகாது என்பது என் எண்ணம்.

தருமி said...

இலங்கைப் பிரச்சனை மொழியால் வேறுபட்ட இரு இனத்தாரின் நடுவில் வந்த பிரச்சனை. அது மொழியால் வந்த பிரச்சனையல்ல.

மொழி ஒரு கருவி; கருவி மட்டுமே.'மம்மி'யும் இல்லை; கடவுளும் அல்ல.

இராம்/Raam said...

ஐயா,

அங்க சொன்னதும்தான் இங்கனயும், இப்போ இருக்கிற ஆரோக்கியமான வலையுலகத்திலே நிறைய பதிவர்கள் வந்துட்டு இருக்காங்க!! அவங்கல்லாம் முறைப்படியா தமிழ் கத்துருக்க மாட்டாங்கன்னு நமக்கு நல்லாவே தெரியும்... அப்பிடியிருக்கிறப்போ அவங்களே அன்னியப்படுத்துறமாதிரி கடினமான எழுத்து நடை இருந்துச்சுன்னா எப்பிடி அவங்களுக்கு இந்த இடத்திலே interested (கிகிகி) ஆவாங்க?

எடுத்தவுடன் நீ எழுதுறதே தப்பு இருக்கு!? இதிலே இவ்வளவு எழுத்துபிழை இருக்கு!? பேசுறப்போ அப்பிடி பேசலாம், அச்செழுத்திலே(வலையெழுத்து) அப்பிடி எழுதக்கூடாதுன்னு ஆயிரத்தெட்டு விதிமுறைகள் போட்டா என்னாகுமின்னு நீங்களே சொல்லுங்க.. வேறென்ன பாரதி எழுதின மத்த வரிகளை விட்டுட்டு “தமிழ் இனி மெல்ல சாகும்”ன்னு தான் சொல்லமுடியும்!!!

ஆக அப்பிடியே அவங்க தப்பாதான் எழுதுவாங்க நாமே சகிச்சிக்கனுமின்னா கேட்டா அதுவும் இல்லே... படிப்படியா அவங்கிட்டே ஆர்வத்தை அதிகப்படித்தி பிழைகளை திருத்த உதவலாம்.

மொழியே புனிதபிம்பபடுத்தி கெடுத்து வைச்சிருக்கீங்கன்னு ஒங்க கருத்து முழுவதும் என்னாலே ஏத்துக்கவே முடியாது, தமிழ்மொழி தொன்மையானாது, அது கல்தோன்றா முன் தோன்றியது’ன்னு Boring Lecture கொடுக்கவும் முடியல. அதுல்லாம் ஒங்களமாதிரி பேராசிரியர்கள் பண்ணுறது... (கிகிகி) மனிதன் தன்னோட கருத்து பரிமாற்றத்துக்கு கண்டறிந்தது தான் மொழி, அதுனாலே நாமே அதை ஒரு கருவி’யா தான் பாவிக்கனுமின்னு சொல்லுறதே, தமிழ் மொழி பொருத்தமட்டிலே ஏத்துக்கமுடியலே.. ஒங்களோட இறைமறுப்பு கொள்கை பார்வையை இதிலேயும் புகுத்தி பார்க்கிறீங்கன்னு தான் சொல்லுவேன்.

இன்னும் இதை பத்தி நிரம்ப பேசலாம்... :)

பெறகு வாறேன்.... :))))

வால்பையன் said...

எழுத்து மொழியும் வேண்டும்!
பேச்சு மொழியும் வேண்டும்!

பேச்சு மொழி வட்டார இலக்கியங்களை வளர்க்கும்!

Post a Comment