Wednesday, May 27, 2009

314. ஒரு திருட்டுப் பதிவு ... அட, கடவுளே!

*

தமிழ்ப்படை என்ற பெயரில் ஒரு பதிவு. வாசித்ததும் மிகவும் பிடித்தது. பதிவர் பெயர் தெரியாது. பதிவு வழியே தொடர்பு கொண்டேன். உங்களது இந்தப் பதிவை நான் என் பதிவில் மீண்டும் போட வேண்டுமென ஒரு வேண்டுகோள் விடுத்தேன். சரியென்றார். ஆனால் இப்போது அவரது பதிவைக் காணவில்லை. ஏனென்றும் தெரியவில்லை.

ஆகவே, இப்போது அப்பதிவை இங்கு இடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை அந்த இளைஞரின் (வயது கொஞ்சம் கம்மிதான் என்பது மட்டும் தெரியும்.) இந்தப் பரவலான சிந்தனை என்னை மிகவும் பிரமிப்பு கொள்ள வைத்ததால் மட்டுமே இதை என் பதிவிலும் இட நினைத்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள்; இதோ:
எங்கே? உன் கடவுள், எனக்குக் காட்டு!

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை "வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.

இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் "கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.

எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!'' "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.

புறவய உலகத்தின் "தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் "உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் "கண்டு', பிறகு அதனை "விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

முதலில் "படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.

"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், "உலகம் அழியுமா, அழியாதா?'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் "அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.

கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.

புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் "ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை "கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.

களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!

"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் "கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், "இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது "பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.

ஒருவேளை தோற்றுவிட்டால்? "40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.

"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், "அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, "தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?


வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் "காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் "இறங்குகிறார்' ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பியல் மருத்துவம்.

"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.

இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, "தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் "கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் "அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள், தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.

"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் "ஏசு அவர் முன் "தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.

"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.

"ஒருவேளை மூளையில் கடவுள் "குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. "கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?'' என்று அவர்களை "சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு "ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.

கோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!


Image and video hosting by TinyPicகாட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் "கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.

டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், "அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.

தியானத்தில் ஈடுபடும்போது, "தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற "பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.

இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் "அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட "ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.

மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று "ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், "இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.

எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. "மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத "பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.

ஏசு இறங்கினாரா? எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.


பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, "ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.

பொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்!

இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து "கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் "சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.

உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.

எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், "கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.

"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).

விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். "குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.

"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.

நன்றி: http://www.tamilcircle.net/

(இப்பதிவுக்குரிய பின்னூட்டங்களை அவரது பதிவில் போடச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அவரது பதிவு இல்லாததால் பின்னூட்டங்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஆசிரியரை இங்கு அழைக்கிறேன்.)


*

27 comments:

துளசி கோபால் said...

அடக்கடவுளே.......

கடவுள் மாத்திரை கண்டுபிடிச்சவுடனே எனக்கு அனுப்புங்க.

நானும், அலங்காரம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கணும்:-))))

சாலிசம்பர் said...

'வினவு' தளத்தில் வெளிவந்தது.

http://vinavu.wordpress.com/2008/10/16/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D/

Anbu said...

me the first

தருமி said...

ஜாலி ஜம்பர்,

அதிலும் எழுதியவரின் பெயர் கொடுக்கப் படவில்லையே ..?

தருமி said...

கடவுள் மாத்திரை கிடச்சதும் உலக உரிமை வாங்கிட்டு, உங்களுக்கு உங்க ஊர்ல விக்கிற உரிமையை தந்துடுவோம்...

நன்றி துளசி.

ரவி said...

வினவு பதிவில் கொஞ்சம் படங்களுமுண்டு...

நல்லாயிருக்கு...

இனிமேல் கடவுள் மறுப்பை மேலும் டெக்னிக்கலாக செய்யலாம்..

தருமி said...

//வினவு பதிவில் கொஞ்சம் படங்களுமுண்டு...//

இப்பதிவுக்காரரிடம் இப்பதிவை இங்கே போடுவதற்கு உத்தரவு பெற்றேன். அந்தப் படங்களுக்கும் கேட்டுப் பார்க்கணும்.

//கடவுள் மறுப்பை மேலும் டெக்னிக்கலாக செய்யலாம்..//

:-)

வால்பையன் said...

அருமையான பதிவு சார்!

பெருசாயிருந்தாலும் படிக்க படிக்க ஆர்வமா இருந்தது!

பின்னூட்ட வாதங்களை எதிர்பார்த்து!

தருமி said...

//பின்னூட்ட வாதங்களை எதிர்பார்த்து!//

அதெல்லாமா வரப் போகுது ...

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லலாம்னு நினைச்சா கடைசியா திருஷ்டி பொட்டு மாதிரி அமெரிக்கா ஏகாதிபத்தியம் பாட்டு பாடிடாரே ஐயகோ! :) நிசமாவே வருத்தப்பட்டுட்டேன் முழு மனசோட பாராட்ட முடியலையே இந்த பதிவைன்னு!!!

பதி said...

அருமையான பதிவு...

நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளேன் !!!!
:)

குமரன் (Kumaran) said...

அருமையான கட்டுரை தருமி ஐயா. படிக்கத் தந்தற்கு நன்றி. கொஞ்சம் பழைய கட்டுரை போலிருக்கிறது; சென்ற வருடம் எழுதப்பட்டிருக்கலாம் - அமெரிக்கத் தலைவர் தேர்தலைப் பற்றிய குறிப்பு இக்கட்டுரையில் இருக்கிறது.

தருமி said...

madura,

//அமெரிக்கா ஏகாதிபத்தியம் பாட்டு பாடிடாரே..//

அந்த ஒரு வரி தவிர சொன்ன அனைத்தும் உண்மைதானே .. இல்லையா?

தருமி said...

நன்றி குமரன்.

//அமெரிக்கத் தலைவர் தேர்தலைப் பற்றிய குறிப்பு // எதையும் மாற்ற விரும்பவில்லை; அதுவும் பதிவாளரைத் தெரியாத போது அதைச் செய்ய விரும்பவுமில்லை.

தருமி said...

மிக்க நன்றி பதி.

கையேடு said...

வியக்க வைக்கும் அறிவியல் தொகுப்பு.மிகவும் ஆர்வமாக வாசிக்க வைத்த கட்டுரை.
பகிர்ந்ததற்கு நன்றிகள் பல.

தருமி said...

நன்றி கையேடு. உங்கள் பழைய கேள்வி ஒன்றுக்குப் பதில் தெரியாததால் அப்படியே உட்டுட்டேன்.
மன்னிக்கணும்.........

பினாத்தல் சுரேஷ் said...

Angels & Demons கதையில் ஒரு பாதிரியார் (விஞ்ஞானி) கடவுளை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க ஆதாரங்களைக் கண்டுபிடித்துவிடுவார்.

அது மட்டும் நடக்கட்டும், நீங்கள்லாம் ப்ளாஸ்பமிக்கு என்னா தண்டனை வாங்கப்போறீங்களோ!

தருமி said...

பெனாத்ஸ்,

அத நாங்களும் வாசிச்சிட்டோம்ல... அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாதில்ல...

மணிநரேன் said...

அருமையான அறிவியல் தொகுப்பு.

//அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். //

இந்த இடத்தில் "அந்த" என்பதற்கு பதிலாக "எல்லா" என்று நான் பொருள் கொள்கின்றேன்.

பதிவிட்ட தங்களுக்கும்,எங்களுக்கு பகிர்ந்த நண்பர் பதிக்கும் நன்றிகள்.

உண்மைத்தமிழன் said...

முருகா..!

இந்தப் 'பெரிசு'க்கு நல்ல புத்தியைக் கொடு..

ஒரே ஒரு தடவை பழனிக்கு போய் மொட்டை போட்டுட்டு விபூதி பூசிட்டு சந்தனம் வைச்சிட்டு, குங்குமம் இட்டுட்டு, பஞ்சாமிர்த்தை அப்படியே உள்ளங்கைல வாங்கி நாக்குல வைச்சு ஒரு தேய் தேய்ச்சா..

சனியன், இது மாதிரி அறிவெல்லாம் ஓடிப் போய் மூளை சுத்தமாயிரும்..!

தருமி said...

உ.த.,

//இது மாதிரி அறிவெல்லாம் ஓடிப் போய் மூளை சுத்தமாயிரும்..!/

ஆமா .. இல்ல!

ரங்குடு said...

அப்படின்னா, இது வரைக்கும் கடவுளுக்கு பயந்து நான் பண்ணாத தப்பெல்லாம் வேஸ்ட்டா?

எனக்கு சொர்க்கம் கிடையாதா?

அடக் கடவுளே!

தருமி said...

ரங்குடு,

கடவுளென்ற மாயை ... 8-க்காகக் காத்திருங்கள்!

Sri said...

LHC / CERN கட்டடம் முன் நடனமாடும் சிவபெருமான் சிலை நிறுவப்பட்டுளதாம்.

http://www.mpg.de/english/illustrationsDocumentation/multimedia/mpResearch/2007/heft02/014/index.html

to quote "A graphic example of the diversity of cultures is a bronze statue of the dancing Shiva located on the CERN grounds. It is a gift from the Indian government and bears an inscription of a verse by Sri Adi Sankara as a dedication: “O Omnipresent, the embodiment of all virtues, the creator of this cosmic universe, the king of dancers, who dances the Ananda Tandava in the twilight, I salute thee.”


அவர்களுக்கே கடவுள் உண்டா இல்லையா என்கிற சந்தேகம் போலும் :)

Srini

வோட்டாண்டி said...

unmai tamilan avargalukku,

pazhanikku poga nermaillai..konjam panchamirdham prasadham mattum (O.Cla) enakku anuppi vaingalen..
ellam moolaiya sutham panradhukku dhaan..

arogaraaa..

Victor Suresh said...

அறிவியலை துஷ்பிரயோகம் செய்வதில் அமெரிக்காவின் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுக்கு சற்றும் இளைத்தவரில்லை இக்கட்டுரையின் ஆசிரியர்.

துகள்களை ஆய்வு செய்யும் இயற்பியலாளர்கள் கண்டுபிடித்த எது கடவுள் இல்லையென்று நிறுவுகிறதாம். கட்டுரையை மறுபடியும் படித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

நரம்பியல் ஆதாரங்களையும் மறுபடியும் படியுங்கள். கட்டுரையாளரே ஓரிடத்தில் சொல்கிறார்: "மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது." இதுதான் உண்மை. ஆனால், கட்டுரை நரம்பியல் கண்டுபிடிப்புக்களுக்கெல்லாம் காது, மூக்கு வரைகிறது. ஆதாரங்கள் இல்லாமலேயே "மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்" என்கிறது.

"மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத "பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன" என்று இன்னொரு இடத்தில் சொல்கிறது கட்டுரை. சரிதான். ஆனால் இக் கண்டுபிடிப்புகள் கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாகவும் சொல்ல முடியாதே.

Post a Comment