Tuesday, August 04, 2009

326. மதுரக்காரங்க - நாங்க ரொம்ப பொறுமைக்காரங்க ...

*

*

கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எங்க ஊரு தமுக்கத்தில ஒரு பாட்டுக் கச்சேரி. வைரமுத்து பாடல்விழா. பெரிய மேடை அமைப்பு; 12 காமிராக்கள்; பெரிய இரு திரைகளில் மேடைக்காட்சிகளின் ஒலி/ளி பரப்பு; அதென்னவோ, ஜாலி ஜம்ப் என்றோ வேறென்னவோ ஒரு பெயர் சொன்னார்கள் - ஒரு காமிரா அங்குமிங்கும் ஆடி ஆடி படம் எடுத்தது.

வைரமுத்து தன் தலைமையுரையில் 'மழை நீக்கி வரம்' ஒன்று கேட்டார். பரவாயில்லை -- "சாமி' முழுசா கேட்காவிட்டாலும், (விழாவின் இறுதி அரைமணி நேரத்தில் மிக மிகச் சின்ன சாரலடித்து, key boardகாரகளையும், மற்ற ஒலி, ஒளிபெருக்கியாளர்களையும் மிரள வைக்க முயற்சித்தது.) ஓரளவு மழையின்றி மாலை 7 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு 11.30 வரை தொடர்ந்தது.

'தமுக்க மைதானம்' என்றால் அந்தக் காலத்து ராசாக்கள் தமுக்கு அடிக்கும் இடமாதலால் அந்தப் பெயர் என்பதுதான் எங்களுக்குத் தெரிந்த விஷயம். ஆனால், வைரமுத்து திருமலை நாயக்கர் காலத்து, தெலுங்குச் சொல் அது என்றும், அதன் பொருள் 'யானைப் போர் புரியும் இடம்' என்றும், அரசர்கள் யானைகளைப் போரிட வைத்துக் காணும் இடம் என்பதே பொ்ருள் என்றும் சொன்னார்.

பாடல்கள் பாட உன்னி கிருஷ்ணன், சீனிவாசன், சுஜாதா, அவரது மகள் ஸ்வேதா என்ற நான்கு பாடகர்கள். முதலில் உன்னி கிருஷ்ணன் பாட வந்தார். அவருக்கு ஒரு மலைப்பு. இதுவரை இந்த மாதிரி "அமைதியான" கூட்டத்தில் பாடியதாக எனக்கு நினைப்பில்லை என்றார்! ஏறத்தாழ இரு வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரியில் நடந்த எஸ்.பி.பி. கச்சேரியிலும் இதே கருத்தை பாடகர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் சொல்றேன்: எங்க மதுரக்காரவுக எல்லோரும் ரொம்ப பொறுமைக்காரங்க .. சும்மா சத்தம் போடுறது; கைதட்டுறது; விசிலடிக்கிறது -- இதெல்லாம் என்னென்னே எங்களுக்கெல்லாம் தெரியாது; அம்புட்டு சுத்தம். கடைசிவரை கூட்டம் அப்படியே - அதாவது அந்த பொறுமைக்கார மூடிலேயே - இருந்தது. நானும் அப்பப்ப திரும்பி கூட்டத்தின் கடைசி, பக்க ஓரங்களில் ஏதாவது இளைஞர் கூட்டம் ஏதாவது டான்ஸ் அது இதுன்னு ஏதாவது செய்யுமான்னு பார்த்தேன். என்னே ஒரு அமைதி ! :)

விழா கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் நடுவிலும் வைரமுத்து தன் பாடல் எழுதிய அனுபவங்களைப் பற்றிச் சொல்லி, சில விளக்கங்கள் கொடுத்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். முதன் முதலில் எம்.எஸ்.வீ.க்கு ஒரு பாடல் எழுதியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். கண்ணதாசன் மருத்துவ விடுதியில் இருந்ததால் தன்னை அழைத்து, மனதில்லாமல் எம்.எஸ்.வீ. கொடுத்த இசைக்குப் பாட்டெழுதியதைக் கூறினார்.

பாடகர்கள் இனிதாகப் பாடினார்கள். ஆனால், நாங்க மதுரக்காரவுக ... எம்புட்டு நல்லா பாடினாலும் மெல்லிதாகக் கை தட்டினோம். முதலில் எல்லாமே melodies தான். பின் சில பாடல்கள் விரைவுப் பாடல்கள். எல்லாவற்றையும் ஒரே சீராக ஒரே தட்டில் வைத்து அடக்கமாகக் கை தட்டினோம்!

முன்பு சொன்னேனே .. அதுபோல் வைரமுத்து முதலில் எம்.எஸ்.வீ. பெயரை ஒரு முறை சொன்னாரா .. அதன் பின் ஒரே ஒரு இசையமைப்பாளரைப் பற்றி மட்டுமே பேசினார் - ரஹ்மான். வேறு எந்த இசையமைப்பாளருக்கும் அவர் பாட்டே எழுதவில்லையோ என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. நடுவில் சீனிவாசன் ஒரு பாட்டைப் பாடும் முன் 'இது ராஜா சார் பாடல்' என்றார். கூட்டத்தில் அதற்காகத் தனியாக ஒரு கைத்தட்டல்கள் இருந்தன. எனக்கு தோன்றியதுபோலவே வேறு சிலருக்கும் தோன்றியிருக்க வேண்டும். இறுதி நேரத்தில் தங்ஸிடம் 'பாரேன்; இளையராஜா பெயரைக்கூட இந்த ஆள் சொல்லலை பார்த்தியா?' என்று மெல்ல கேட்டேன். அப்போது கூட்டமும் வெகுவாகக் குறைந்திருந்தது. நான் அப்படிச் சொன்ன ஒரு சில நிமிடங்களில் எங்களுக்கு முன்பு இருந்த ஒரு குழுவில் ஒருவர் விரைவாக அடுத்த நபரிடம் சத்தமாகப் பேசியது என் காதில் விழுந்தது. நான் சொன்னதை ஏறத்தாழ அவர் அவரது நண்பரிடம் கூறிக்கொண்டிருந்தார். accusations ...

காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில் -- இப்படி பல படங்கள் என் மனதில் நினைவுக்கு வந்தன. அந்த மூவரும் - பாரதி ராஜா, இளையராஜா, வைரமுத்து - போட்டியிட்டு நடத்திய அந்த அழகான பாட்டுக்களை எப்படி இவரால் இப்படி மூட்டை கட்டித் தூக்கிப் போட முடியுது என்று தோன்றியது. இளையராஜாவின் பாடல்களைப் பற்றி ஏதும் கூறாமலேயே வைரமுத்து பேசிக்கொண்டிரு்ந்தார். ரொம்பவே நெருடலாக இருந்தது. அப்படி உங்களுக்குள் என்னதான் தகராறு? ego-வா .. இல்லை .. சாதியா .. எது உங்களைப் பிரித்துப் போட்டு .. எங்களைப் பட்டினி போட்டது? வருத்தமாக இருந்தது.

மழை சிறு தூறலாகப் போட ஆரம்பித்த போது கூட்டம் சிறிது கலைந்தது. இருந்தும் கடைசிப் பாட்டு வரையும் உட்கார்ந்திருந்தோம். கூட்டம் குறைந்த அந்த நேரத்தில் பேச வந்த வைரமுத்து, தன் வேண்டுகோளுக்கிணங்கி உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துப் பேச ஆரம்பித்த போது, நடுவில் உங்களுக்கெல்லாம் நான் 'முதல் மரியாதை' செய்ய வேண்டும் என்றார். ஏனென்ன்று தெரியவில்லை; கூட்டத்திலிருந்து 'அந்த வார்த்தைக்கே' தனி மரியாதை கிடைத்தது. என்னைப் போலவே பலரும் நினைத்திருந்தார்கள் என்பது தெளிவாயிற்று. அதனால்தானோ என்னவோ, எம்.எஸ்.வீ. பற்றிச் சொல்லிவிட்டு, அதன்பின் ரஹ்மானைப் பற்றி மட்டும் பேசியவர், முதல் மரியாதை படத்திற்கு தனக்கு முதல் தேசிய விருது கிடைத்தது பற்றிச் சொன்னார். அந்த மரியாதை மதுரைத் தமிழுக்குக் கிடைத்த பேரு என்றார். 'வீரபாண்டித் தேரு' என்று அந்த பாடலில் எழுதி தன் மண்ணின் பெயரை பாட்டில் ஏற்றியதற்குக் கிடைத்த பரிசு என்றார். கடைசியாக, அதுபோன்ற ஒரு காவியத்தை உருவாக்கிய பாரதிராஜாவுக்குப் பாராட்டும், பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு நன்றியும் என்றார். அப்பாடா ...! என்னமோ போங்க .. எல்லோரும் இம்புட்டு பெரிய மனுஷங்களா இருந்திட்டு ... :(

கூட்டம் குறைந்த பின் 12 தொலைபேசிப் பொட்டிகளுக்கு முன்னால் உட்கார்ந்து ஒளிக்காட்சியை ஒழுங்குபடுத்துவதையும், அந்த தொட்டில் காமிராவை இயக்குவது பற்றியும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன்.Z TV முக்கியமான ஸ்பான்சர் போலும். நல்லதாகப் போயிற்று. அதனால்தானே, அதில் வேலை பார்க்கும் நம்ம தல பாலபாரதி எனக்கு இரு அனுமதிச் சீட்டுக்களை கூரியரில் அனுப்பி வைத்தார்! வாழ்க தல. எங்கள் குடும்பமும், சில சீரியல்களுக்கும் இப்போது ஒரு திரைப்படத்திற்கும் இசையமைக்கும் நண்பனின் குடும்பமும் சேர்ந்து பார்க்க வைத்த தலைக்கு மீண்டும் நன்றி.*

19 comments:

மணிஜி said...

சுவாரசியம்..பிடியும் பொற்கிழியை

தருமி said...

இராம்/Raam said...

//மதுரக்காரங்க நாங்க ரொம்ப பொறுமைக்காரங்க ...//

அது... :)

வைரமுத்து இளையராசா பத்தி எதுவும் சொல்லாட்டியும் ராசா என்னிக்கும் ராசாதான்... :)

Raju said...

நாங்கல்லாம் மதுரைய விட்டு வந்துட்டோம்ல..
அதான் பயபுள்ளைக அமைதியா இருந்திருக்காய்ங்கே..!
:)

ஜோ/Joe said...

// வேறு எந்த இசையமைப்பாளருக்கும் அவர் பாட்டே எழுதவில்லையோ என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.//

இப்படிப்பட்ட இவர் மற்றவர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசும் போது தான் கடுப்பா இருக்கும்.

குட்டி said...

அன்பரே !வைரமுத்து என்றோ தேவர் சங்கத்தின் புரவலர் ஆகிவிட்டார். சமீபத்தில் அமேரிக்கா சென்ருரிந்த்தபோது அப்படட்டமாக அதனை வெளிப்படுத்தவும் செய்தார்

அப்படி உங்களுக்குள் என்னதான் தகராறு? ego-வா .. இல்லை .. சாதியா .?
சாதி சாதி சாதி சாதி .சாதியைத் தவிர வேறொன்றுமில்லை

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா.. நம்மள கழட்டி விட்டுட்டீங்களே.. கூப்பிட்டா நானும் வந்திருப்பேன்ல..

தருமி said...

கார்த்திகை,
ஒரு மாதிரி 'சோடி டிக்கெட்'டாக இருந்துச்சா, அதுனால உங்கள நினச்சிட்டு உட்டுட்டேன் ...

Unknown said...

இளையராஜாவும் வைரமுத்துவும் பாரதிராஜாவும் மீண்டும் ஒன்றாய்............. நினைக்க மிக மிக நன்றாய் இருக்கிறது. நடக்குமா

துபாய் ராஜா said...

// நம்ம தல பாலபாரதி எனக்கு இரு அனுமதிச் சீட்டுக்களை கூரியரில் அனுப்பி வைத்தார்! வாழ்க தல. எங்கள் குடும்பமும், சில சீரியல்களுக்கும் இப்போது ஒரு திரைப்படத்திற்கும் இசையமைக்கும் நண்பனின் குடும்பமும் சேர்ந்து பார்க்க வைத்த தலைக்கு மீண்டும் நன்றி //

நம்ம தல'பாலபாரதியின் பாசமே தனி. அது என்றென்றும் இனிக்கும் கனி.

"உழவன்" "Uzhavan" said...

அடடா.. அருமையான தொகுப்பு

Thekkikattan|தெகா said...

சிந்தனைக்கும் தினசரி வாழ்வு நடைமுறைக்கும் உள்ள இடைவெளி இவரிடத்தே(டயமண்ட்) கொஞ்சம் அதிகமாவே காணப்படுதோ...

தருமி, நேர்ல உங்க கூட மழை தூத்தல்ல நனைஞ்சிக்கிட்டே 'ராஜா' அரசியல் பேசின மாதிரியான ஒரு பதிவு ;)

தருமி said...

தண்டோரா,
பொற்கிழி நும் பெருமையைச் சாற்றுகின்றதே, அய்யா!

நன்றி/

தருமி said...

இராம்,

இருந்தாலும் சாதிதான் (அப்படித்தானென்று நினைக்கிறேன்) நடுக்கோடிடுகிறதென்றால் .. ஒரு கவலை; அம்புடுதான் .....

தருமி said...

டக்ளஸ்,
அப்போ எப்பவும் இதே மாதிரி அமைதியா இருந்திடட்டுமா?

தருமி said...

ஜோ,
உபதேசம் ஊருக்குத் தாண்டி; உனக்கில்ல -- அந்தக் கதை தெரியுமில்ல..?

தருமி said...

kuttyrmd,
வலுப்படுத்தியமைக்கு - வருத்தம் கலந்த நன்றி

தருமி said...

சுல்தான்,
அட நீங்க வேற .. அதெல்லாம் கனவுதாங்க ..

தருமி said...

நன்றி துபாய் ராஜா.

தருமி said...

//" உழவன் " " Uzhavan " said...

அடடா.. அருமையான தொகுப்பு//

அப்டியா சொல்றீங்க ...!

Post a Comment