Friday, May 21, 2010

395. இடப்பங்கீடு -- ஆதியிலிருந்து ........

*

முகவுரை

 
சிங்கைப் பதிவர்கள் கட்டுரைப் போட்டி நடத்தியதும், அதில் ஒரு பகுதியில் எனது கட்டுரை முதலிடம் பெற்றதும் மிக மகிழ்ச்சியான நிகழ்வு. அக்கட்டுரையை இங்கு ஒரு பதிவாக இடுகிறேன்.

இப்பதிவை  வாசித்த ஒரு நண்பர் 'அதென்ன, விளக்குமாற்றுப் போராட்டங்கள்' என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்களே அப்படியென்றால் என்ன?' என்று  கேட்டார். அந்தப் போராட்டத்தின் விளக்கம் இல்லாவிட்டால் இப்பதிவின் முழு நோக்கம் அவருக்குப் புரியாது என்பதற்காக ஒரு விளக்கமாக சில நிழற்படங்களை இங்கு சேர்த்திருக்கிறேன். அதோடு 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ...' என்ற ஒரு வரியையும் சேர்த்திருக்கிறேன் - கொஞ்சம் அதிக விளக்கத்திற்காக ... !

கீழே உள்ள இருபடங்களில் முதல் படத்தில் சிலர் விளக்குமாற்றோடு 'திருக்காட்சி'யளிக்கிறார்கள்.  கக்கூஸில் பீ அள்ளும் உனக்கெல்லாம் எதற்கு I.I.T., A.I.I.M.s போன்ற இடங்களில் படிப்பு என்ற அறிவுசார்ந்த ஒரு கேள்வியை எழுப்புகிறார்களாம்!

இன்னும் சில மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு தெருவில் உட்கார்ந்து செருப்பு தைப்பது போல் ஒரு காட்சி. செருப்பு தைப்பவனுக்கு எதற்கு உயர்நிலைக் கல்வியில் இடம்? என்ற உயர்ந்த கொள்கைப் பிடிப்போடு அப்படி ஒரு நிலைப்பாடு !


அடுத்த படத்திலோ ரிசர்வேஷன் வேண்டும்னா ரயில் டிக்கட்டை ரிசர்வ் பண்ணிக்க முயற்சி செய் என்ற புத்திமதி.


சாதியை ஏன் முன்னெடுக்க வேண்டியதுள்ளது என்பதைப் பற்றிய எத்தகைய சிந்தனையும் இன்றி தாங்கள் மட்டும் இதுவரை கட்டியாண்ட அரியாசனங்களுக்குப் போட்டியா என்ற மனத்துடன் ”உயர் சாதியினர்”  நடத்தும் பலவகை நாடகங்களில் இவையிரண்டும் ஓரிரு சான்றுகள்.

***********
ஒரு வேண்டுகோள்:

என் பதில்கள், முடிவுரை என்ற இக்கட்டுரையின் கடைசிப் பகுதிகளை வாசித்து அதற்கான உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


ஒரு நன்றி

பல கட்டுரைகளிலிருந்து தேவையானவற்றை தெரிந்து இக்கட்டுரையை எழுதினேன். அதில் நம் பதிவர் புருனோவின் கட்டுரை மிக மிக உதவியது. அவருக்கு என் நன்றி.


*************


சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்*

பலமும் பலவீனமும்



-- தருமி --




* இட ஒதுக்கீடு என்ற சொல் காலனிய ஆதிக்கத்தின் எச்சம். Reservation என்ற ஆங்கிலச் சொல்லை அடிப்படையாக வைத்து வந்த சொல்லே இட ஒதுக்கீடு. இந்தச் சொல் குறிப்பிட்ட சிலருக்கு சலுகையாகத் தருவதான பொருளில் வருகிறது. அப்படியின்றி, அது அவர்களது உரிமை என்ற பொருளில் இட ஒதுக்கீடு என்றில்லாமல் “இடப்பங்கீடு” என்று அழைக்கப்படுவதே சரி. – பேரா. தெ.பொ.மீ.

ஆகவே இனி இக்கட்டுரையில் இட ஒதுக்கீடு இல்லை; இடப்பங்கீடே உண்டு.




முன்குறிப்பு:


பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறுடைய நம் நாட்டில் யார் இந்த நாட்டின் முதல் குடிமக்கள், யார் யாரெல்லாம் பின் வந்தவர்கள் என்பது போன்ற ஆராய்ச்சிகளால் கிடைக்கப் போவது சரியான பதில்களாக இருக்குமா? அக்கேள்விக்கு ஒரே விதமான பதில்கள்தான் கிடைக்குமா? என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் உறுதியான பதிலாக இருக்கும். அதோடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஒன்றாயிருந்து விட்டு இன்னும் என் சாதியின் gene pool அப்படியே ஒன்றாய் ‘தீட்டுப் படாமல்’ இருந்து வந்துள்ளது என்றால் அது வெறும் கேலிக்கூத்தே. எல்லாரும் மனிதர்கள்; எல்லாரும் ஒன்றாய் வாழ்ந்திருக்கின்றோம். gene pool-களைக் கட்டிப் போட்டோ, கட்டுப் போட்டோ காவலிருக்க முடியாது. மனித குலமே ஒரே மனிதனிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்பது பரிணாமக் கொள்கையாக இருக்க, human genome என்று ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட, இன்றும் நாம் நமக்குள் சாதி வித்தியாசம் பார்ப்பதும், அதில் மேலுங்கீழுமாய் தரம் பிரிப்பதும் வேதனையான ஒன்றுதான்.


ஒரு சாதி உயர்ந்தது; மற்றவை தாழ்ந்தவை என்று காலங்காலமாய் இப்படிக் கூறிவருவது வேதனையும் வேடிக்கையும்தான். ஆனாலும் மதத்தோடு கலந்த காரணத்தால் இந்த சாதி வேறுபாடுகள் நம் சமூகத்தின் அடி வரைக்கும் ஊடுறுவி, நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளன. நீர்த்துப் போக விடாமல் சாதியக் கட்டுப்பாட்டுக்குள் நாம் வளைய வந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுப்பாட்டுகளால் சிலர் தங்களையே உயர்த்திக் கொண்டவர்களாகவும், பலர் அவர்களுக்குக் கீழே “தரங்கள்” பிரித்து படிக்கட்டு முறையில், ஒரு தேவையற்ற கட்டுக்காப்போடு பலகாலம் வாழ்ந்தாயிற்று. மேலே இருந்தவர்களுக்கு எல்லோரும் சமம் என்ற மனநிலை இன்னும் வந்தபாடில்லை; கீழே இருப்பவர்களுக்கோ இன்னும் நாமும் மற்றவர் போல் சமமான மனித ஜென்மங்கள்தான் என்ற மனநிலை வர மறுக்கிறது.


ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் என்ற நம்பிக்கைக் கீற்றைக் கூடக் காண முடியாத இன்றைய சூழ்நிலையின் நிதர்சனங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்.


சாதிகள் இல்லை என்றோ, 'நம்மைப் போன்றவர்களுங்கூட' சாதிப் பிரிவினைகளைப் பற்றிப் பேசுவது தவறு என்றோ நினைத்தால் நாம் கண்களை மூடிக்கொண்ட பூனைகளாகத்தான் இருப்போம். நம்மிடையே சாதிகளும், சாதீய உணர்வுகளும் ஆழமாகவே பதிந்துள்ளன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன. கீழ்நிலை படுத்தப்பட்டவரைப் பார்த்து, அவருக்குச் சாதீயத் தரவரிசையில் சற்றே மேலேயுள்ளவர்கள் 'அவன்' மேலே வந்துவிடக் கூடாதே என்ற நச்சு நினைவோடு, 'கீழ்சாதிக்காரன்' எப்போதுமே தன் அடிமையாகவும் தான் எப்போதுமே 'ஆண்டானாகவும்' இருக்கவேண்டும் என்ற மன வெறியை எல்லா சாதி நிலைகளிலும் பார்க்க முடிகிறது. இந்தக் காழ்ப்பு உணர்வு வெறியாக மாறி நித்தம் நித்தம் நம் முன் நடந்தேறும் கொடூர நடப்புகள்தான் எத்தனை எத்தனை. வெண்மணியும், திண்ணியமும், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, உத்தாபட்டி நடப்புகளும் ஒரு புறம் என்றால், கையில் செருப்புகளோடும், விளக்குமாறுகளோடு நடத்தப்படும் 'புனிதப் போராட்டங்கள்' மறுபுறம்.


இச்சூழலில், நம் சமூக உயர்வில் பங்களிக்காதவர் யார்? ஏதோ ஒரு வழியில் அரசுக்கு வரும் வருமானத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்கவில்லையா? அப்படியானால் அரசு தரும் service-களில் எல்லோருக்கும் பங்குபெற உரிமை உண்டா இல்லையா? அந்த உரிமை மத நம்பிக்கைகளால் சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினருக்கு - 75% விழுக்காட்டுக்கு மேல் - மறுக்கப்பட்டு வந்துள்ளது உண்மையில்லையா? மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்களுக்கு உரிமைகள் என்றில்லாவிட்டாலும் 'சலுகைகள்' என்ற பெயரிலாவது இனியாவது புதிய கதவுகளைத் திறப்பது அரசின் முதல் கடமை இல்லையா? இந்தச் சலுகைகள் அல்லது உரிமைகள், இடப்பங்கீடு என்ற முறையில் சமச் சமூக நீதி கிடைப்பதற்காக பல காலமாய் பல்வேறு போராட்டங்கள் மூலம் கிடைத்த ஒரு வழிமுறை.


இடப்பங்கீடு ஏன் என்ற கேள்விக்கு ஒரே வரியிலும் பதில் தரமுடியும்: To provide level playing field என்பதே அது. மண்டல் தன் அறிக்கையில் கூறுவது:

"சமமானவர்களிடம்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமாக இல்லாதவர்களை சமமானவர்களாகக் கருதுவதே சமத்துவமின்மை ஆகும்." ஒரே அமைப்பில் ஒரு பகுதியினர் கல்வியோடு தொடர்பு கொண்டவர்களாகவும், மற்றொரு பகுதியினர் பொது சமூகநலனுக்காக 'உழைக்கும் வர்க்கமாகவும்' வெகுகாலமாய் பிரித்து வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே தங்களை 'அறிவாளிகளாகப்' புனைந்து கொண்டு கல்வி தங்களுக்கே உரிய ஒரு விஷயமாகக் கற்பித்துக்கொண்டு இருப்பதுவும், மற்றவருக்குத் 'தகுதி' இல்லையென்ற கூற்றை கோயபல்ஸ் தனமாக திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்?



நேற்று :


• ஆர்ய வர்க்கம் என்ற ஒன்று நம் நாட்டுக்குள் ‘வந்தேறிகளாக’ உள்ளே நுழைந்தார்கள் என்று ஒரு கருத்தும், இல்லை, அது ஐரோப்பியர்கள் கொடுத்த வரலாற்றுக் குறிப்பு என்றும் மாறி மாறிக் கூறுவோர் பலருண்டு.

• அந்த வர்க்கம் வந்த பின்பே இங்கு இருந்த திராவிட இனத்தை அது மேலாண்மை செய்து தங்கள் தாக்கத்தை நம் சமூகத்தின் மேல் கோலோச்சியது என்ற ஒரு கருத்தும் உண்டு.

• அவர்கள் கட்டிக் காத்த இந்து மத மனுசாஸ்த்திராவில் ..

• " Every act that is considered the privilege of the Brahman, such as saying prayers, the reciting of the Veda, and offering of sacrifices to the fire, is forbidden to him, to such a degree that when, a Sudra or a Vaisya is proved to have recited the Veda, he is accused by the Brahmans before the ruler, and the latter will order his tongue to be cut off. However, the meditation on God is not prohibited.-- [ al-B.ii.127 Ch.LXIV ] " . (கடவுளைக் கும்பிடுவதில் வேதங்களைக் கூறுவதற்குக் கூட மற்றவருக்கு உரிமையில்லை; ப்ராமணர்களுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு.)


• சிந்துவெளி நாகரீகம் யாருடையது என்பதிலும் வேறு வேறு கருத்துக்கள் உண்டு.


---- வரலாற்றுக் கருத்துக்கள் இப்படி வெவ்வேறாக இருந்தாலும் அதில் ஒரே ஒரு அடிப்படை உண்மை மட்டுமே மேலோங்கி நிற்கிறது: இந்து மதம் சாதியமைப்புகளை உருவாக்கியது; அது இன்றும், என்றும் இந்துமதக் காவலர்களால் காத்து வரப்பட்டுள்ளது. இந்து மதத்தைக் காத்திருப்போர் சமூகத்தில் காலங்காலமாய் தங்களை ‘உயர்த்திக் கொண்டவர்களாக’  (‘உயர்ந்த சாதி’க்காரர்கள் என்று நான் இக்கட்டுரையில் அவர்களை எங்கும் சொல்வதில்லை; இன்னொரு வேதனையான ஊடகச் சொல்லாடல்: சாதி இந்துக்கள். அப்டின்னா யாரு அது?) காண்பித்தே வருகிறார்கள். இந்த வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாதென்பதே இப்போது நமக்குத் தேவையானது.


இந்த சாதீய வேறுபாடுகளால் சமூகம் பல நிலைப்படிகளில் கட்டுண்டு சிலரை எட்டா உயரத்திலும் இன்னும் பலரைப் படு பாதாளத்திலும் அன்றிலிருந்து இன்று வரை வைத்திருக்க உதவுகிறது. அதன் பாதகம் புரியவே பல நூற்றாண்டுகளாக ஆகிப் போனது. இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் இத்தகைய ‘பிறப்புக்கு’ கடவுளே காரணம் என்பதும், ‘தலைவிதி’ என்ற தத்துவங்களையும்தான் காரணமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர உண்மையான சமூகக் காரணங்களை இன்னும் முழுவதுமாகக் காண ஆரம்பிக்கவில்லை. தங்களுக்காக அரசுகள் திறந்து விட்டிருக்கும் சில உரிமைகளைக் கூட இன்னும் பலர் தெரிந்துகொள்ளவில்லை என்பது மிகுந்த சோகம்.


நம்மைச் சுற்றியுள்ள பலர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்று மட்டுமில்லாமல், தங்கள் கரங்களால் மனிதக் கழிவுகளைத் தலையில் சுமக்கும் நிலையினைக் கண்டும் ‘ஒன்றும் பதறாத மனதை’ நம்மில் பலருக்குத் தந்த நம் சமூக விந்தை கண்டு நெஞ்சம் பொறுக்குதில்லையே.

இந்தச் சாதியினருக்கு இந்த வேலை என்று காலங்காலமாய் கொண்டுவந்த நம் சமூகத்தில் இன்றும் அதே நிலை நீடிப்பது மிகவும் கேவலம். இந்தக் கேவலங்களிலிருந்து – இந்த வகை ‘இடப்பங்கீட்டிலிருந்து’ (!) - ஒடுக்கப்பட்டோரை மீட்டெடுக்கக் கொண்டுவந்த இடப்பங்கீடு முறையும், இன்றும் அதனை ஒடுக்க நினைக்கும் உயர்த்திக் கொண்டோர் எடுக்கும் முயற்சிகளும் ஒரு பெரிய நீள்கதை …


நாம் எப்போதுமே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க நாட்டில் 1964-லேயே Proactive Employment Law என்ற சம வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தொகை, (race) இனம் - இவைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசு வேலைகளுக்கு மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்ற சட்டம் இயற்றப் பட்டுள்ளது. சரியான இன்னுமொரு சான்று வேண்டுமெனின், டெட்ராய்ட் மாநிலத்தில் பாதிக்கு மேல் ஆஃப்ரோ-அமெரிக்கர்கள் இருந்தும் பல அரசு வேலைகளில் அதுவும் காவல் துறையில் மேல்பதவியிலிருப்பவர்கள் பலரும் வெள்ளையர்கள் என்பதை எதிர்ப்பு செய்தமையால், 50:50 என்ற அளவில் இரு சாராருக்கும் பதவிகள் கொடுக்கப்பட அதை எதிர்த்து வெள்ளையர் நீதி மன்றம் சென்ற போது நீதி மன்றம் மக்களின் விகிதாசார அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதே சரியென்று தீர்ப்பும் அளித்தது.


ஆனால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பை இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கே ஒரு பக்க நியாயம் - அதுவும் முற்படுத்திக்கொண்டோரின் நியாயம் - மட்டுமே படியேறும்.


ஆங்கிலேயர் ஆட்சியில் 1773-ல் இந்தியர்களும் பங்கு பெற இடப்பங்கீட்டு முறை கொண்டுவரப்பட்டாலும், மீண்டும் 1786-ல் இந்தியர்களின் நிர்வாகத் திறன் குறைவு என்ற கருத்தாக்கத்தில் கார்ன்வாலிஸ் என்ற ஆளுநரின் காலத்தில் இந்தியர்களுக்கு அரசில் இடமில்லை என்று ஒதுக்கினார். மீண்டும் இந்தியர்கள் 1858 வரை காத்திருக்க வேண்டியதிருந்தது. அப்போது மெக்காலே ஆங்கில அறிவு இருந்தாலே அரசுப்பணி என்றறிவித்ததால், சென்னை மாகாணப் பார்ப்பனர்களும், வங்காள பாட்ரலோக்களும் அரசுப் பணிகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தனர்.


அச்சமயத்தில்தான் லண்டனில் ஒன்றாகப் படித்து, ஒத்த சிந்தனையோடு இந்தியர் மூவர் – கோல்ஹாப்பூரின் சாகு சத்திரபதி, மைசூரின் அரசர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார், சென்னை தர்வாடு மாதவன் நாயர் – தாய்நாடு திரும்பியதும் பார்ப்பனரல்லாத சாதாரண மக்களுக்கு அரசு வேலைகளில் இடப்பங்கீடு தந்தனர். சாகு சத்திரபதி 1902-லும், மைசூர் மகாராஜா 1920-லும், நாயர் 1916-ல் நடேச முதலியார், சரி. பி. தியாகராயர் செட்டியார் இவர்களோடு இணைந்து அந்தந்த பகுதிகளில் இந்த ஏற்பாடுகளைச் செய்தார்கள். அதன் பின் மகாத்மா பூலே, வெங்கடாசல நாயர், பண்டிதர் அயோத்தி தாசர் (1891) இத்தகைய முற்போக்குச் சிந்தனைகளுக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்கள். அதன்பின் 1919 முதல் 1973 வரை பெரியாரும், 1920 முதல் 1956 வரை டாக்டர் அம்பேத்காரும்,1956 முதல் 1967 வரை டாக்டர் லோகியா அவர்களும் இந்த இடப்பங்கீட்டு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றார்கள்.


இந்தியாவில் முதன் முறையாக அரசினால் இடப்பங்கீடு சென்னை மாகாணத்தில்தான் கொண்டு வரப்பட்டது. 4.11.1927-லிருந்து ...


1. பார்ப்பனர் 16%
2. இஸ்லாமியர் 16%
3. இந்தியக் கிறித்துவர் & ஆங்கிலேயக் கிறித்துவர் 16%
4. பார்ப்பனர் அல்லாதஇந்துக்கள் 44%
5. தாழ்த்தப்பட்டோர் 8%


--- என்று வகுப்புவாரியான (சாதிவாரியாக இல்லை) இடப்பங்கீடு தரப்பட்டது. இதில் பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் என்பவர்களுக்காக கொடுக்கப்பட்ட இடங்கள் நிலவுடமையாளர்களாகவும் பணக்காரர்களாகவும் இருந்த சில உயர் சாதியினருக்கே சென்றதால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கென 1940-ல் தனி இடப்பங்கீடு கேட்கப்பட்டது. 1947-ல் சென்னை மாகாண முதல்வர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார் 21.11.1947-ல் புதிய ஆணையின் மூலம் கீழ்க்கண்டவாறு இடப்பங்கீட்டை அளித்தார்.


1. பார்ப்பனர் அல்லாத முற்பட்டோர் 44%
2.. பார்ப்பனர் அல்லாத பிற்பட்டோர் 14%
3. பார்ப்பனர் 14%
4. இஸ்லாமியர் 7%%
5. இந்தியக் கிறித்துவர்&ஆங்கிலோ இந்தியர் 7%
6. தாழ்த்தப்பட்டோர் 14%

ஆனால் இந்தச் சட்டத்தை 1950-ல் ஆரம்பித்த சென்னை உயர்நீதி மன்றமும், தில்லி உச்சநீதி மன்றமும் செல்லாது என செப்டம்பர் 30, 1950-ல் தீர்ப்பளித்து விட்டன. ஆளும் சக்திகளால் அந்த 45 நாள் மட்டுமே இடப்பங்கீட்டைப் பொறுத்திருக்க முடிந்தது போலும்!


1960-ல் ஆந்திர முதல்வர் 66%-க்கு இடப்பங்கீட்டை விரித்த போது, 1963-ல் உச்ச நீதிமன்றம் இடப்பங்கீடு எப்போதும் 50% விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாதென தீர்ப்பளித்தது. இதனால் தமிழ்நாட்டு அரசும் இடப்பங்கீட்டை 50-க்குள் கொண்டுவர முயற்சித்தது. ஆயினும் N.M.தாமஸ் vs கேரள அரசு (1976) வழக்கில்”ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிக அதிகமாக, மக்கள் தொகையில் 80% அளவிற்கு இருந்தால், அவர்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் வழங்க 80% வேலைவாய்ப்பை அரசு ஒதுக்கீடு செய்தால், அரசின் அச்செயல்பாடு முறையானது அல்ல என சொல்ல முடியுமா? இது அரசியல் சட்டம் 16(4) பிரிவை மீறியதாகுமா? நிச்சயமாக இல்லையென்ற பதில்தான் இருக்க முடியும்: என்று நீதிபதி மூர்டுஸ்சா பசல் அலி தீர்ப்பளித்தார் (AIR 1976, SC 490). இந்த தீர்ப்பின் பலத்தில்தான் மற்றைய மாநில அரசுகள் 50%க்கும் மேல் இடப் பங்கீட்டளவை அதிகரிக்க முடிந்தது.


மீண்டும் 16.11.1992-ல் மண்டல் வழக்கில் உச்ச நீதிமன்றம் 50%க்கு மேல் இடப்பங்கீடு இருக்கக்கூடாது என்றொரு தீர்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டிலோ 69% விழுக்காடு இடப்பங்கீடு இருந்து வந்தது. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் காட்டிய ஒருமித்த உணர்வால், மத்திய அரசும் குடியரசுத் தலைவருக்கு தமிழக இடப்பங்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தது. 19.07.1994 அந்த ஒப்புதல் கிடைத்தது. ஆயினும் ஒன்று போயின் அடுத்தது என்பது போல் தொடர்ந்து பல வழக்குகளில் பலவித தீர்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதே சமயத்தில் மண்டல் கமிஷனின் அறிக்கைகளை வி.பி. சிங் 7.8.1990 அன்று இடப்பங்கீட்டை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வழக்குகளும் தொடர்ந்தன.1991-ல் நடந்த மண்டல் வழக்கில் நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான 9 பேர் கொண்ட் நீதிக்குழு விசாரணை செய்து 16.11.1992-. தன் தீர்ப்பை வெளியிட்டது. இத்தீர்ப்பில் ...

27% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்பது ஒப்புக் கொள்ளப் பட்டது.

இடப் பங்கீடு 50%-க்கு மேலே போகக்கூடாது.

இப்படி சில கருத்துக்களோடு முதல் முறையாக creamy layer – ‘வளமான பிரிவினர்’ என்பது புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதோடு இதே வழக்கில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களின் பதவிகள், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் தொடர்பான உயர் பதவிகள் மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான உயர் பதவிகளுக்கு இடப்பங்கீடு பின்பற்றக் கூடாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.


மேலும், 14.8.2003-ல் லக்கோத்தி தலைமையில் 7 நீதிபதிகள் தனியார் நிறுவனங்களில் இடப்பங்கீட்டை முழுமையாக ரத்து செய்து விட்டனர்.

இடப்பங்கீடு இல்லாத காலத்திலும், இடப்பங்கீடு இல்லாத துறைகளிலும் ஆளும் வர்க்கமாகச் செயல்பட்ட உயர்த்திக்கொண்ட சமூகத்தினர் இடப்பங்கீட்டை எதிர்த்து பேசுவதோ, இடக்கு மடக்காகச் செயல்படுவதோ ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல. ஆனால் அந்த நிகழ்வுகளைப் பற்றிய அறிவோ தெளிவோ இல்லாமல் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இருந்து வருவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம். தங்களுக்குத் தரப்பட்டது என்னவென்றே கூட தெரியாமல் ‘சித்தன் போக்கு; சிவன் போக்கு’ என்று இருப்பவர்களே அதிகம். வரலாற்று அடிப்படையில் அடிபட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சில உரிமைகளைக் கூட புரிந்து கொள்ளாமல் அதைப் பயன்படுத்தாமல் இருக்கும் மக்களைப் பார்த்துக் கோபப்படுவதா; ஆச்சரியப்படுவதா; இல்லை, பாவப்படுவதா என்றே தெரியவில்லை. அந்த மாதிரியான மக்களுக்காகவே சில தடயங்களைத் தருவது தேவையான ஒன்றாகும்.

Illustrated Weekly’ என்ற இதழின் ஆசிரியரும், மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளருமான குஷ்வந்த் சிங் ‘பார்ப்பனர் சக்தி’ என்று 1990-ல் ஒரு கட்டுரை எழுதினார்.

மக்கள் தொகையில் 3.5 % மட்டுமே இருக்கும் இந்த சாதியினர் உயர் பதவிகளில் 70 %-க்கும் மேலாக இருந்து வருகிறார்கள்.

நிர்வாகத்துறைகளில் 500-ல் 310 பேர் பார்ப்பனர்கள். (63%)
26 மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களில் 19 பேர் ...
16 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் ...
330 உயர்நீதி மன்ற நீதிபதிகளில் 166 பேர் ...
3300 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் ...

அதுதான் போகட்டும் என்றால், அரசியலிலும் ...

530 மக்களவை உறுப்பினர்களில் 190 பேர் ...
244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் ...

மேலும் அவர் “3.5% உள்ள பார்ப்பனர்கள் 38 முதல் 83% வரை இடம் பிடித்திருக்கிறார்கள். எப்படி என்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பனர்கள் தங்கள் அறிவுக் கூர்மையால்தான் இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதை மட்டும் என்னால் நம்ப முடியவில்லை” என்றார். (23-29 டிசம்பர், 1990)

இது 1990-ல் மட்டுமல்ல இன்றும் நிலை அதுதான். தாழ்த்தப்பட்டவருக்கெல்லாம் குப்பை அள்ளுவதில் நூத்துக்கு நூறு இடப்பங்கீடுதான். ஆனால் உயர்த்திக் கொண்டோருக்கோ வெறும் 18% விழுக்காடு தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கிடைப்பதில், இன்னும் கொஞ்சம் அதிக விழுக்காட்டில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைப்பதில் மனம் வெறுத்து விடுகிறார்கள்.ஆகவே இன்றைய நிலையில் பல வழிகளில் இடப்பங்கீட்டைத் தவறான முறையில் கையாண்டு ‘‘கொடிகட்டிப் பறக்கிறார்கள்’. அதனால்தான் மண்டல் கமிஷன் அறிக்கையில் “"It is certainly true that reservation for Other Backward Classes will cause a lot of heart burning to others.(Mandal Commission Report)” என்று கூறப்பட்டுள்ளது.

இன்று :

உள்குத்துப் போராட்டங்கள் :

சாப்பிடாமல் பட்டினி கிடப்பது வேதனைதான். ஆனால் நமக்குன்னு வச்ச சாப்பாட்டை எவனோ நடுவில வந்தவன் எடுத்துப் போட்டு நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாப்பிட்டு விட்டு, ஏப்பம் விட்டு, நமக்கு வக்கணையும் காட்டினால் என்ன செய்வது? இந்த நிகழ்வுதான் இடப்பங்கீட்டு விஷயங்கள் பலவற்றிலும் நடந்து வருகிறது. நீதி மன்றங்களோ, அரசு தரப்புகளோ, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் அரசியல், சமூகத் தலைவர்களோ இதில் தங்களின் முழு தீவிரத்தைக் காண்பிப்பது இல்லை.

ஐ.ஏ. எஸ். தேர்வுகளில் குழப்படி

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும் மொத்த மதிப்பெண்களை வைத்து தரவரிசை செய்யப்பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது தரவரிசைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C. என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.

கதைபோல் தெரிகிறதா? எனக்கும் அப்படியே தோன்றியது. எப்படி இப்படிப்பட்ட உயர் அமைப்புகளில் விதிகளை இந்த அளவு மீறி (trickery and violation of law) தைரியமாக மிக மிக அநியாயமான ஒரு செயலைச் செய்திருக்க முடியும் என்பது ஆச்சரியமாகவும் கவலைக்குறிய ஒன்றாகவும் இருக்கிறது. எத்தனை பேரின் கூட்டில் இந்தச் சதி நடந்திருக்க முடியும்?

இந்த மோசடியின் ஒரு ஒற்றைப் பருக்கையாக ஒரு சென்னை நீதிமன்ற வழக்கும் அதன் தீர்ப்பும் இங்கே தரப்பட்டுள்ளது.

Merit lists of civil services exam quashed.

Court declares Rule 16 (2) of examination rules unconstitutional Declaring Rule 16 (2) of the Examination Rules for Civil Services Examination 2005 “unconstitutional, null and void,” the Madras High Court has quashed the merit lists prepared by the Centre and the Union Public Service Commission (UPSC).

By resorting to Rule 16 (2), the official respondents had deprived 31 OBCs and one SC candidate from getting their postings. It was seen that such vacancies created by the meritorious reserved candidates were then filled with other unreserved candidates. (Date:22/03/2008;URL: http://www.thehindu.com/2008/03/22/stories/2008032254370900.htm)

வழக்கமாக பல்லாண்டுகளாக இந்தத் தவறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை இங்கே மீண்டும் குறிப்பிட்டாக வேண்டும். இந்து தினசரியில் 07/07/2006 அன்று ராஜ்ய சபா உறுப்பினரும், ஜனதா தள் (United ) கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஷரத் யாதவ் அவர்கள் இந்துவில் பெரிய கட்டுரை ஒன்றின் மூலமும் இதைமுழுமையாகவெளிக்கொணர்ந்தார். (http://www.thehindu.com/2006/07/07/stories/2006070703771000.htm)

அந்தக் கட்டுரையிலிருந்து சில: People controlling the UPSC and DoPT are so strongly motivated against the candidates of reserved categories that they can go to any extent in their adventure to block the entry of reserved categories in the civil services.]

UPSC and the DOPT (department of personnel and training (DoPT)) are implementing reservation policy to ensure 50.50 per cent reservation for the unreserved categories that are supposed to form just 15 per cent of the Indian population. (UPSC & DoPT  இரண்டையும் கட்டுக்குள் வைத்திருப்போர் இடப்பங்கீட்டில் ஆட்சித் துறைக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு எந்த அளவுக்குத் தடைகள் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தடைகளை ஏற்படுத்துகின்றனர். 15 விழுக்காட்டிற்கு மட்டும் பாத்தியதையுள்ள இடப்பங்கீட்டுக்குள் வராத மாணவர்களை 50:50 என்ற விழுக்காட்டுக்குக் கொண்டுவந்து விடுகின்றனர்அதோடு மூன்று முக்கிய வழக்குகளையும் அக்கட்டுரையில் தந்துள்ளார்.

(a) India Shawnee v. Union of India, 1992 Supp. (3) SCC 217
b) Union of India vs. Virpal Singh Chauhan (1995) 6 SCC 684
c) Rithesh. R. Shah’s case (1996) 3 SCC 253

இந்த வழக்குகளையும் இக்கட்டுரையில் அந்த அமைச்சர் சொன்னவற்றையும் முழுமையாகப் புரிந்தால், ஒரு பக்கம் இடப்பங்கீட்டுக்கு எதிராக கோஷங்கள் போடுவதோடு நில்லாமல், அரசு இயந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அம்மக்கள் கொடுக்கப்பட்ட இடப்பங்கீட்டைத் தவறாக, தங்கள் வசதிக்கேற்றாற்போல் மாற்றிக்கொண்டு இடப்பங்கீட்டை நடைமுறையில் ஒரு செல்லா காசாக்கி விட்டார்கள். 15% மட்டுமே உள்ள மக்களுக்கு 50:50 என்ற விழுக்காட்டில் இடம் கிடைப்பதுபோல் மாற்றி காலங்காலமாய் கோலோச்சி வருகிறார்கள்

அரசு கண்டு கொள்ளவில்லை; அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை; மாணவர்களால் ஏதும் செய்ய முடிவதில்லை. ஏன்! இந்தக் கட்டுரையை எழுதிய ஷரத் யாதவ் இவ்வளவு பெரிய அழகான ஆழமான ஒரு கட்டுரையை எழுதி ஒரு முக்கியமான நாளேட்டில் பதிவிட்டிருகிறார். ஆனால் ஏன் அவர் இதை இப்படியே விட்டிருக்க வேண்டும். முனைப்பாக இதை நீதிமன்றம், UPSC என்று எல்லா இடங்களுக்கும் சென்று இந்த தீமையைக் களைய முற்பட்டிருக்கலாமே! ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
'ஆட்டுவித்தால் யாரொருவர் 
ஆடாதாரே கண்ணா ...'
உயர்த்திக் கொண்டோர் நம்மை வேடிக்கை பார்த்துக் கொண்டே நம் சாப்பாட்டை நமது முன்னாலேயே சாப்பிட்டு வக்கணம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் சாவியை வைத்திருக்கிறோம்; ஆனால் பெட்டியை அவர்கள் தூக்கிப் போய் நாளாகி விட்டது.

இன்னொரு எடுத்துக் காட்டு:

U.P.S.C. தேர்வுகளில் உயர் மதிப்பெண் எடுத்துத் தேர்வுபெறும் O.B.C., S.C.,/S.T. -களை O.C. quota-வில் காண்பிக்காது விட்டு,(இது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும்) இடப்பங்கீட்டு மோசடி நடந்து வருகிறது. இந்த வழக்கு பற்றிய 14.07.2007 இந்துவில் வந்துள்ள செய்தி:

The petitioners contended that the UPSC continued to flout the Centre’s directives and the Supreme Court rulings, besides the constitutional provisions, by not including successful candidates from reserved categories in the open category.

The petitions said nearly 60 candidates belonging to the open category were unlawfully included in the merit list.

2005-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ஒரு நண்பரின் கடிதத்திலிருந்து ...

நேர்முகத் தேர்வுகள் ஏன் சாதிவாரியாகப் பிரித்து நடத்த வேண்டும்? இதனால் தேர்வதிகாரிகளுக்கு யார் எந்தெந்த சாதி என்று ஏன் தெரியவேண்டும்?

Why does the U.P.S.C. conduct the 2005 civil service examination interviews to the SC/ST and BC candidates on separate dates, thereby openly disclosing the caste of the candidates to the interviewers and exposing him/her to their prejudices.)

இறுதி மதிப்பெண்களை மாணவர்களின் எண் அடிப்படை இன்றி அவர்கள் பிறந்த நாள் வைத்து பதிப்பிக்கிறார்கள். தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களை இப்படி ரகசியமாக வைக்க வேண்டிய காரணம் என்ன? (The final marks of the candidates can be seen in the U.P.S.C. web site only by typing their date of birth and not by their roll number. This prevents one to know the mains and interview marks of the successful co- candidates or rather the marks of cohorts belonging to other communities because everyone knows the roll numbers of the successful candidates but not their date of birth.)

ஏன் rank list-ம் சாதிப்பிரிவினைகளும் எல்லோரூக்கும் தெரியும்படியாக வெளியிடக்கூடாது? (Why doesn’t the U.P.S.C. reveal the rank list with the community rank side by side in its final result released recently.)

'ஆட்டுவித்தால் யாரொருவர் 
ஆடாதாரே கண்ணா ...'

இதற்கு ஏது பதில்கள் நம்மிடம்.



மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

I.I.T. & I.IMs.:

இடப்பங்கீட்டை முழு வீச்சில் கொண்டுவரும் முயற்சியில் I.I.T., A.I.I.M.S.களில் இடப்பங்கீட்டைக் கொண்டு வர முயற்சித்ததும், உயர்த்திக் கொண்டோர் பலவித போராட்டங்களை முடுக்கி விட்டார்கள். அதில் உயர்த்திக்கொண்ட மாணவர்கள் செருப்பும் விளக்குமாறும் கொண்டு நடத்திய போராட்டம் ஒன்று. விளக்குமாறு தூக்கியவனுக்கு இந்த மேல்படிப்பு தேவையா என்கிறார்கள்! அதோடு க்ரீமி லேயர், திறமை இல்லாதவனுக்கு எதற்கு உயர்கல்வி என்பது போன்ற கேள்விகளை முன் வைத்து பல போராட்டங்கள். ஊடகங்களோ அவர்கள் கையில். எழுத்து, ஒலி, ஒளி ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டங்களை பெரிது படுத்தின. பெரும் அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இன்போசிஸ் நாராயண மூர்த்தி முதல் எல்லோரும் ஒரே கோரஸ் பாட்டுப் பாடினார்கள். அரசு முழுமூச்சோடு ஈடுபட்டால் எல்லா போராட்டங்களையும் இழுத்து மூடியிருக்க முடியும்.

இந்தப் போராட்டங்களால் முற்படுத்திக் கொண்டோரிடமிருந்து பிறந்து அரசால் தத்து எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள இன்னொரு ‘பரிந்துரைப்பு’ - உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது. சும்மா சொல்லக் கூடாது - இது ஒரு நல்ல ராஜதந்திரம். கீழ்க்கண்ட கணக்கு அதைத் தெளிவுபடுத்தும்.

தற்போது I.I.T.களில்உள்ளமொத்தஇடங்கள் 4000
54%இடஅதிகரிப்பில்கூடும்இடங்கள் 2160
ஆகமொத்தஇடங்கள் 6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு B.C.(4000ல்27%) 1080
தாழ்த்தப்பட்டவர்களுக்கு SC(4000ல்15%) 600
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ST(4000ல்7.5%) 300
B.C.+S.C.+S.T.)(27%+15%+7.5%) 1980

மொத்த 6160 இடங்களில் வெறும் (6160/1980)= 32%

அதாவது இது ஏற்கெனவே உள்ள 49.5% யை வெறும் 32% ஆக மாற்றும் நல்ல ராஜதந்திரம். மீதியுள்ள 68% (51%க்குப் பதிலாக) இடங்கள் ‘விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு’ மட்டும்.

அகில இந்திய அளவில் மருத்துவ மேற்படிப்பு மற்றும் “எய்ம்ஸ்” ( AIIMS )

நுழைவுத்தேர்வுகளில் இடப்பங்கீட்டுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதைச் சில ஊடகங்களில் வெளிக் கொணர்ந்தனர். அதன் விளக்கம்: அதிக மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை பொதுப் போட்டியில் தேர்வு செய்ய தடை செய்துள்ளனர். அதன் இரு பெரும் விஷயங்கள் யாதெனில் --

முதலாவதாக, பிற்படுத்தப்பட்டோருக்கான இடப்பங்கீடு எத்தனை விழுக்காடு என்று குறிப்பிடப்படவில்லை.

இரண்டாவதாக அதில் காணப்பட்டிருப்பது: The Counselling shall only be done according to the category Rank (Unreserved, SC, ST, OBC & Other Physically handicapped) and not by the overall Rank.


அதாவது, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்கள் பொதுப் போட்டியில் கொண்டு வரப்படமாட்டார்கள். அவரவர்களுக்குரிய ஒதுக்கீட்டுப் பகுதியில் மட்டுமே கணக்கிடப்படுவார்கள். இதன்மூலம் சட்டப்படி இடப்பங்கீடு பெறாத பிரிவினரான உயர்ஜாதியினருக்கு மட்டுமே திறந்த போட்டியில் உள்ள அத்தனை இடங்களும் கிடைக்கும்.


இந்தத் திட்டத்தின்படி மொத்தமுள்ள 3200 இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 480 இடங்களும், மலைவாழ் மக்களுக்கு 240 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 9 விழுக்காடு கணக்குப்படி 290 இடங்களும், உயர்த்திக் கொண்ட ஜாதியினருக்கு 2190 இடங்களும் கிடைக்கும்.
'ஆட்டுவித்தால் யாரொருவர் 
ஆடாதாரே கண்ணா ...'

அடுத்து, மத்திய அரசின் உதவித் தொகையால் நடந்து வரும்

14 Central Govt. Universities
7 IITs
6 IIMs
6 IIScs
54 தொழில்-வணிகப் பயிற்சி நிறுவங்கள்

(உள்நோக்கத்துடன்) மைய அரசின் பிடியில் இருந்து வந்துள்ள இந்த உயர்கல்வி நிறுவங்களில் 50 ஆண்டு காலமாக ஒரே ஒரு விழுக்காடு இடப்பங்கீடு கூட பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப் படவில்லை. இந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முழுக்க முழுக்க மக்களின் வரிப் பணம் - அதிலும் 60 கோடிக்கும் மேலான OBC, BC, SC, & ST செலுத்தும் வரிப்பணமே.



க்ரீமி லேயர்:

1950-ம் ஆண்டு; அப்போது பாராளுமன்றம் செயல்பட ஆரம்பிக்கவில்லை. அப்போது செண்பகம் துரைராஜ் உச்ச நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரிக்கு சென்னை அரசின் இடப்பங்கீட்டு திட்டம் சரியில்லை என்று ஒரு வழக்கு நடந்து முடிந்திருந்தது. அந்த வழக்கினால் பிற்படுத்தப்பட்டோர் என்பதை ஆங்கிலத்தில் socially and educationally backward என்று கொண்டு வந்தார்கள். அப்போது இந்த இரு சொற்களோடு economically என்ற சொல்லையும் சேர்க்கச் சொல்லி வேண்டுகோள் வந்தது. நேருவும் அம்பேத்காரும் அதனை எதிர்த்தார்கள், இந்தச் சட்டம் 1951 ஜூன் மாதத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. ‘பொருளாதார’ என்ற சொல் வேண்டாம் என 243 பேரும், சேர்க்க வேண்டுமென 5 பேரும் ஓட்டளிக்க அந்தச் சொல் தவிர்க்கப் பட்டது. அப்படி 243:5 என்ற ஓட்டெடுப்பில் தோற்ற விஷயம் இப்போது க்ரீமி லேயர் என்ற புதுப்போர்வையில் மீண்டும் நுழைகிறது.


பிற்படுத்தப்பட்டோரில் சிலரை பணம் படைத்தவர்கள் என்ற பெயரில் புறந்தள்ளுவது ஏழை பிற்படுத்தப்பட்டோருக்கு லாபம் தான். அப்படியானால் இந்த வேண்டுகோள் பிற்படுத்தப்பட்டோரிடமிருந்து வரவேண்டும். ஆனால் தங்களை முற்படுத்திக் கொண்டோர் மட்டுமே இதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்கள். இதற்குரிய காரணம் ஆடு நனைகின்றதே என்ற ஓநாயின் அனுசரணம்தான். பல நேரங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தால், இப்படி நீக்கப்படும் எண்ணிக்கையை நிரப்பி, அதில் உயர்த்திக்கொண்டோரே வர முடியுமே என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு.

வரலாற்றிலிருந்து ஒரு பழைய பக்கம்:

இடப்பங்கீட்டை மறுக்கும் முற்படுத்திக் கொண்டோரின் தகுதி, திறமை குறித்து சந்திரபான் பிரசாத் என்பவர் Pioneer நாளிதழில் சில வரலாற்று உண்மைகளைப் பற்றிச் சொல்கிறார்:
" 1858-ம் ஆண்டில் சென்னையில் பட்டப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப்பட்டது. அன்று மேல்சாதி மாணவர்களால் 'இண்டர்மீடியட்' வகுப்பில் முதலாம், இரண்டாம் தரங்களில் தேர்ச்சி அடைய முடியவில்லை. தேர்ச்சிக்கான 40 மதிப்பெண்ணையும் பெற முடியவில்லை. மேல்சாதியினரின் வற்புறுத்துதலின் காரணமாக ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேருவதற்கான தகுதியைக் குறைத்தது. மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களும் பட்டப் படிப்பில் சேரத் தகுதி வாய்ந்தவர்கள் என அரசு அறிவித்தது. தேர்ச்சிக்கான மதிப்பெண் 40%-லிருந்து 33% ஆகக் குறைக்கப் பட்டது."

1901-ம் ஆண்டு கல்கத்தாவில் மெட்ரிகுலேசன் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 40%-லிருந்து 33% ஆகக் குறைத்திருக்காவிட்டால் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்று தேர்ச்சி அடைந்திருக்க முடியாது.
1922-1927-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கல்வி அறிக்கையின்படி மேல்சாதி மாணவர்களில் 45% மருத்துவப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை; 35% மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்ச்சி அடையவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த தங்களது 'தகுதியற்ற நிலையை' மறந்து உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடப்பங்கீட்டை எதிர்த்து இன்று அவர்களால் ஏதேதோ பேசப்படுகிறது!



நடப்பிலிருந்து ஒரு புதிய பக்கம்.


அது இடப்பாங்கீட்டின் பலம் பற்றிச் சொல்லும்:

1950கள் வரை முற்படுத்திக்கொண்ட சாதியினர் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், நன்றாகப் படிப்பவர்கள் என்றொரு 'மாயை' இருந்து வந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த மாயை, 60-களிலேயே சரியத் தொடங்கி, இன்றைக்கு அது முற்றிலுமாகத் துடைக்கப்பட்டு விட்டது. ஆராய்ச்சி, மருத்துவம், நீதித்துறை, ஆடிட்டிங், எழுத்து, ஊடகங்கள், படைப்பாளர்கள் - என்று அவர்கள் மட்டுமே கோலோச்சிய நிலையா இன்று? எல்லோரும், எங்கும் எதிலும் என நீக்கமற நிறைந்திருப்பது மட்டுமின்றி, இன்றைய டாப்-1 & 2 என கருதப்படும் கம்ப்யூட்டர், biotechnology என்ற இரு துறைகளிலுமே முற்படுத்திக்கொண்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அனைவருமே சமமான அளவு தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருக்கிறார்களே.

இடப்பங்கீட்டின் மூலம் வரும் மாணவர்கள் திறமை இல்லாதவர்களாக இருப்பார்கள்; தரத்திற்கு முதலிடம் கொடுத்தால்தான் நாடு உண்மையான முன்னேற்றம் காண முடியும். ஆகவே இடப்பங்கீடு கூடாது. அதுவும் உயர்கல்வியில் கூடவே கூடாது என்பது அடிக்கடி சொல்லப்படும் வாதங்கள். ஆனால், தனியார் கல்லூரிகளில் தங்கள் மானேஜ்மெண்ட் கோட்டாக்களில் எந்த மதிப்பெண்களோடும் மாணவர்களைச் சேர்க்கக் கோரிக்கையெழுப்பியபோதும், NRI மாணவர்களுக்கு ‘காசுக்கு சீட்டு’ என்று பேரம் பேசும் தனியார் கல்லூரிகளின் பேரங்கள் பற்றியும், தரம் பற்றி இப்போது பேசும் ஆட்கள் அன்று என்ன செய்தார்கள்?

cut-off மதிப்பெண்களில்தான் அதிக ஏற்றத்தாழ்வு இல்லையே; பின் எதற்காக இன்னும் இடப்பங்கீடு என்றொரு கேள்வி பலரிடமிருந்து. - இடப்பங்கீடு ஏன் என்ற கேள்விக்குரிய பதில் அவர்களுக்குப் புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதே பொருள். விளக்குமாறு போராட்டக்காரர்களோ “அவர்களையெல்லாம் இப்போது இருக்கும் இடத்திலேயே வைக்கவேண்டும்” என்ற தங்கள் மன நிலையை, மன வக்கிரத்தைத் தான் காண்பிக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? "....இன்னும்கூட அனைத்திந்திய அளவில் வழங்கப்படும் படைப்பாக்கத்திற்கான பரிசு - Innovation Awards - பெறுவோரில் 60-70% பேர் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியவர்கள்" என்கிறார் IIM -A முனைவர் அனில் குப்தா. அப்படியென்றால் IIM-ல் படித்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், நம் வரிப்பணத்தில் பெரிய படிப்பு படித்துவிட்டு பெரிய சம்பளத்திற்காக அயல் நாடுகளுக்குப் பயணம் போய்விடுகிறார்கள்.

ஆனால், மேல்குடி மக்களோடு ஒப்பிடும்போது கீழ்மட்டத்தாருக்குத் 'தகுதி'களில் சில குறைபாடுகள் உண்டுதான். இந்த வேறுபாடு நம் ஜீன்களில் இல்லை; நம் வாழ்வியல் முறைகளில் இருக்கிறது. இந்த வேறுபாடு பிறப்பினில் இல்லை; வளர்ப்பினில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பாலும், தாழ்த்தப்பட்டோர் கிட்டத்தட்ட முற்றிலுமே வறுமைச் சூழலிலிருந்தே வருகிறார்கள். மேற்படுத்திக்கொண்ட சாதியினரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வீட்டுச் சூழல், ஆயிரக்கணக்கில் பணம் கொட்டிக் கொடுத்து நுழைவுத் தேர்வுகளுக்காய் அவர்களைத் தயார் படுத்தும் பண வசதி - இவைகள் ஏதும் அவர்களிடம் இல்லை. அந்த வசதிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் - உனக்கு இதுதான் தொழில் என்று பிறப்பிலேயே தண்ணீர் தெளித்துவிட்டு விட்ட சாதீயக் கட்டுப்பாடுகள் தானே காரணம்? இந்தச் சாதீயக் கட்டுப்பாடுகள் எங்கிருந்து வந்தன? வேதங்களிலிருந்துதானே? வேதங்களை அன்றும் இன்றும் கட்டிக் காத்துக் காபந்து செய்து கொண்டிருப்பவர்கள் யார்? பஞ்சாபில் (மற்ற மாநிலங்கள் பற்றித் தெரியாது) 1947 வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உடமை தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. இப்படி விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் நில உடைமையைத் தடை செய்து விட்டு, இன்று நீ ஏழை, படிப்பறிவில்லாதவன், என்று கூறி அதோடு உனக்கு அறிவு இல்லை, திறமையும் இல்லை என்று பறையடிப்பதால்தானே பெரும்பான்மையான மக்களின் சமூகக் கோபம் முற்படுத்திக் கொண்டோரின் மீது உள்ளது. Level playing field கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்து விட்டு அதன் பின் எழுப்புவோம் திறமை பற்றிய கேள்விகளை.


கடைசியாக, cut-off மார்க்கை சிறிதே குறைத்து இட ஒதுக்கீட்டின் மூலம் இதுவரை பெரும்பான்மையோருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளவைகளில் பங்கு (அவர்களின் எண்ணைக்கையின் படி "சிறிய பங்கு"தான்) கேட்கும்போது 'திறமை' பற்றிய அரற்றல் வந்து விடுகிறது. கல்வித்தரம் அதள பாதாளத்தில் வீழ்ந்துவிடும் என்ற ஓலம் கேட்கிறது. 95 மார்க் வாங்குபவனுக்கும், 85 மார்க் வாங்குபவனுக்கும் (அவர்களது வாழ்க்கைச் சூழல், பொருளாதார வேற்றுமை என்பவை பற்றி இப்போது பேசாவிட்டாலும்) 'திறமை'யில் என்ன பெரிய வித்தியாசம்? சரி, 85 மார்க் வாங்கியவனுக்கு இடம் கொடுத்தாகி விட்டாச்சு; அதன் பின் படிப்பில், தேர்வில் அவன் 95 மார்க் வாங்கியவனுடந்தானே போட்டியிட வேண்டும். அவனுக்கென்று தேர்வுகளில் ஏதும் சலுகை உண்டா என்ன? அவனும் எல்லோரையும் போலவே முறையான தேர்வுகள் எழுதி தேறி வரவேண்டும். பின் end product-ல் தரம் எப்படி குறையும்? பொறியியலில் இடப்பங்கீட்டில் இடம் பெரும் மாணவன் கட்டும் வீடுகளும், கட்டிடமும் ஆடிக்கொண்டே இருக்கும் என்றும், வைத்தியனானால் அவன் பார்க்கும் நோயாளி மட்டும் 'பொசுக்'குன்னு போய்டுவான் என்றும் அறிவற்ற முறையில் பேசுவதை இந்த 'விளக்குமாறு போராட்டக்காரர்கள்' நிறுத்தினால் நல்லது.

எங்கேயும் திறமை :

தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500 மாணவர்களின் ஜாதி என்ன?
தர வரிசையில் முதல் 500 மாணவர்களில்...

• முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 55 மாணவர்கள்
• பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 293 மாணவர்கள்
• கிருத்தவர்கள் - பி.சி.சி - 29 மாணவர்கள்
• முஸ்லிம்கள் - பி.சி.எம் - 20 மாணவர்கள்
• மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 70 மாணவர்கள்
• அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 32 மாணவர்கள்
• பழங்குடியினர் - எஸ்.டி - 1 மாணவர்கள்
ஆக
• முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 11 %
• பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 58.6 %
• கிருத்தவர்கள் - பி.சி.சி - 5.8 %
• முஸ்லிம்கள் - பி.சி.எம் - 4 %
• மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 14 %
'அவனுக்குத்தான் படிப்பு வரும்; இவனுக்கெல்லாம் படிப்பா?' என்ற மமதையான நேற்றைய பேச்சு இன்றும், இன்னமும் செல்லுபடியாகுமா? திறமைகள் எல்லோரிடமும் உண்டு; எல்லோரிடமும் அதற்குரிய ஜீன்கள் உண்டு. அவைகளைக் வெளிக்கொணரத் தேவையானது சாதி அடையாளம் - caste label - இல்லை; வாய்ப்புகள் மட்டுமே. இருட்டுக்குள்ளேயே வைத்திருந்த செடியை வெயிலுக்குக் கொண்டு வந்ததும் வீறுகொண்டு வளருமே, அது போல தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் புதிய வாய்ப்புகள் தரும் உத்வேகங்கள் அவர்களை வேகமாகவே முன்னெடுத்துச் செல்ல வைக்கும். இதுவரை மறுக்கப்பட்ட வாய்ப்புகளைத் தங்கள் உரிமைகளாக அவர்கள் கேட்கிறார்கள்.



இன்று :

பலவீனம் பற்றிச் சில கேள்விகள்:

• 60 ஆண்டு காலத்திற்கும் மேல் இடப்பங்கீடு கொடுக்கப் படுகிறதே. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இது நடந்தேறும்?

• சாதிகள் பெயரால் இடப்பங்கீட்டை நீட்டிக் கொண்டே போனால் எப்போது சாதி பேதங்களில்லாத சமமான ஒரு சமுதாயத்தை படைக்க முடியுமா?

• திரும்பத் திரும்ப பிற்படுத்தப் பட்டோருக்கு இடப்பங்கீடென்றால் பணம் பெறுத்தவரோ, அல்லது ஏற்கெனவே கிடைத்த இடப் பங்கீட்டால் முன்னுக்கு வந்துவிட்ட பிற்படுத்தப் பட்டோரோ மீண்டும் மீண்டும் சலுகைகளை அனுபவிக்க முடியும். இது மற்றைய ஏழை பிற்படுத்தப் பட்டோரின் சலுகைகளை பறிப்பது போலல்லவா?

• எப்போதும் நம் நாட்டில் எல்லா சாதியினருக்கும் நடுவில் ஒரு கடும் போட்டி. எல்லா விதத்திலும் தன்னை உயர்த்திக் கொள்ளத்தான் மனிதன் ஆசைப்படுவான். ஆனால் சாதி விஷயத்தில் எல்லோருக்கும் தங்கள் சாதியினை மேலும் கீழ்ப்படுத்திக் கொள்ள முடியுமா; அதனால் கிடைக்கும் பலன்களைப் பெறலாமே என்ற ஆசை உண்டு. இப்படியானால் ஏறுமுகமாக அல்லாமல் மேலும் மேலும் பல சாதிகள் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்ள தயாராகும் நிலைதான் தொடருமா?


என் பதில்கள்:

• 60 ஆண்டு காலத்திற்கும் மேல் இடப்பங்கீடு கொடுக்கப் படுகிறதே. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இது நடந்தேறும்?

• திரும்பத் திரும்ப பிற்படுத்தப் பட்டோருக்கு இடப்பங்கீடென்றால் பணம் பெறுத்தவரோ, அல்லது ஏற்கெனவே கிடைத்த இடப் பங்கீட்டால் முன்னுக்கு வந்துவிட்ட பிற்படுத்தப் பட்டோறொ மீண்டும் மீண்டும் சலுகைகளை அனுபவிக்க முடியும். இது மற்றைய ஏழை பிற்படுத்தப் பட்டோரின் சலுகைகளை பறிப்பது போலல்லவா?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு சேர பதில் தர முயல்கிறேன்.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இருவருக்குள்ளும் கேள்வியில் சொல்லியுள்ளது போல் மீண்டும் மீண்டும் பலன் பெற்ற குடும்பத்தினரே பெறுவார்கள் என்றால், இடப்பங்கீடு தன் முழுப் பயனை மக்களுக்குக் கொண்டு சென்றதாகக் கொள்ள முடியாது. அதன் பயன்கள் முழு வீச்சில் பரவலாக்கப்பட வேண்டும். அதுவே நெல்லுக்கு இரைத்த நீராக இருக்க முடியும்.

முதல் தலைமுறையினருக்கு முழுதாக இடப்பங்கீட்டின் நன்மையைத் தந்து விட்டு, அடுத்த தலைமுறையினருக்கு முழுமையாக இல்லாமல், மதிப்பெண்கள் போல, (முன்பு கிராமத்து தலைமுறையினர் என்று கல்லூரி நுழைவில் மதிப்பெண் கொடுத்தது போல்), சரியாக ஒரு அளவுகோல் வைத்து மதிப்பெண் கொடுத்து அவர்களுக்கான இடப்பங்கீட்டு ‘உரிமையை’க் குறைத்து விடலாம். இப்படியாக மூன்று தலைமுறைகளுக்கு மட்டும் கொடுத்து விட்டு அதன் பின் அத்தலைமுறையினரை இடப்பங்கீட்டிலிருந்து நீக்கி விடலாம்.

உதாரணமாக, முதல்முறையாக போட்டிக்குள் நுழையும் ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவன் எடுக்கும் மதிப்பெண் 70 என்றால் அது அப்படியே எழுபதாக (100%) ஆக எடுக்கப்படும். ஆனால் இரண்டாம் தலைமுறையாக (இந்தப் பையனின் தகப்பனார் ஏற்கெனவே இடப்பங்கீட்டால் மேலே வந்திருக்க வேண்டும்.) வரும் பையனின் மதிப்பெண்ணுக்கு 75 % மட்டுமே அனுமதி உண்டு; அவன் முதல் மாணவனின் 70 மதிப்பெண்ணைத் தாண்ட 81 மதிப்பெண்கள் பெற வேண்டும். (75% of 81 = 60.75 அல்லது 61 மதிப்பெண்). அடுத்த தலைமுறைக்கு வெறும் 60 அல்லது 50 விழுக்காடு மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படியானால் மூன்றாம் நிலையில் வரும் மாணவன் அந்த முதல் முறை மாணவனை விடத் தாண்டுவது அரிதாகிவிடும்.

இன்று உயர்த்திக்கொண்ட சாதியினர் எப்படி மற்ற மாணவர்களை விடவும் அதிக மதிப்பெண் பெற்றாலே இடம் பெற முடியும் என்ற நிலையில் இருக்கிறார்களோ அதே நிலையை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இரண்டாம், மூன்றாம் தலைமுறை மாணவனுக்கும் கொடுக்க வேண்டும். அதுவே ஒரு உந்து சக்தியாக ஆகவேண்டும்.

முதல் தலைமுறை மாணவனின் தந்தை 60 மதிப்பெண் எடுத்து இடப்பங்கீட்டால் ஒரு தொழில் கல்வி பெற்று விட்டால் அவரது பிள்ளை அவரைப் போலவே 60 மதிப்பெண் எடுத்து கல்விச்சாலைக்குள் நுழைந்து விடக்கூடாது. அதையும் தாண்டி முயன்றால்தான் அவனால் தந்தை பெற்ற கல்வியைப் பெற முடியும். இந்த “சுய போட்டி’ இருப்பதால்தான் இன்றும் இத்தனை தடை தாண்டியும் உயர்த்திக் கொண்டோர் இன்னும் மேலும் மேலும் உயர்ந்து வருகிறார்கள். அத்தகைய hurdles jumping அடுத்த சாதியினருக்கும் வந்தால்தான் அவர்களும் உண்மையான முன்னேற்றம் காண முடியும். இல்லையென்றால் உயர்த்திக் கொண்ட சாதியினர் சொல்லும் ‘பணக்கார தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைமுறையினரே மேலும் மேலும் இடப்பங்கீட்டால் பயன்பெறுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டிலிருந்து வெளிவரவும் முடியும். அதைவிடவும் இத்தகையச் சுய போட்டிகளே எந்த சாதியினரையும் மேற்படுத்தி விட முடியும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் – பள்ளிகளிலேயே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த Damocle’s Sword பற்றிச் சொல்லிவிட வேண்டும். வளர வேண்டியது உன் கடமை என்ற பொறுப்புணர்வை ஒவ்வொரு மாணவனுக்கும் அவன் பெற்றோருக்கும் தெளிவாய் புரிய வைக்க வேண்டும். இதற்குத்தான் அந்தந்த சாதித் தலைவர்களின் பங்கு பெருவாரியாக உதவ வேண்டும். இப்போது இருக்கும், குற்றமாகவும் சாட்டப் படும் Unillateral growth – ஒருதலை வளர்ச்சி குறைந்து, பொது வளர்ச்சி நடைபெறும். (இந்த விழுக்காடுகள் ஒரு மாதிரியாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் முனைந்தால் இதைவிடவும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியுமெனக் கருதுகிறேன். மக்கள் பேசும் க்ரீமி லேயர் இந்த விஷயத்திலும் அடிபட்டுவிடும். பணத்தோடு சேர்ந்து இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தவும் முடியும் என்றே நம்புகிறேன்.)

ஆக மூன்று தலைமுறைக்கு மட்டுமே இனி இடப்பங்கீடு என்று கொண்டு வந்து, அதையும் முழுவதுமாக பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர்களிடம் தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட வேண்டும், அதன் பின் அவர்களுக்குக் கல்வி கற்க அரசின் பண உதவி, கடன் உதவி இவைகளைக் கொடுக்கலாம். ஆனால் மூன்று தலைமுறைக்குப் பின் இடப்பங்கீட்டில் அவர்கள் இடம் பெறக்கூடாது.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர்களுக்கான இடங்களில் அவர்கள் மட்டுமே பயன் பெறும் முறை கொண்டுவரப் பட வேண்டும். பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர் இல்லை ஆகவே அந்த இடங்களைப் பொதுப்பட்டியலில் சேர்த்து விடலாம் என்பதை அனுமதிக்கவே கூடாது.

• சாதிகள் பெயரால் இடப்பங்கீட்டை நீட்டிக் கொண்டே போனால் எப்போது சாதி பேதங்களில்லாத சமமான ஒரு சமுதாயத்தை படைக்க முடியுமா?

சாதிகளை இன்றே தூக்கியெறியுங்கள்; இட ஒதுக்கீடும் ஒரு மண்ணும் யாருக்கும் தேவையில்லை.

ஆனல் முதலில் சொன்னது நடக்குமா? நடப்பதற்குறிய எந்த அறிகுறியும் இல்லை. சனாதன தர்மமும் நிலைக்க வேண்டும்; சமூக நீதியும் கிடையாது என்பது என்னவிதமான மனப்பாங்கு?

• எப்போதும் நம் நாட்டில் எல்லா சாதியினருக்கும் நடுவில் ஒரு கடும் போட்டி. எல்லா விதத்திலும் தன்னை உயர்த்திக் கொள்ளத்தான் மனிதன் ஆசைப்படுவான். ஆனால் சாதி விஷயத்தில் எல்லோருக்கும் தங்கள் சாதியினை மேலும் கீழ்ப்படுத்திக் கொள்ள முடியுமா; அதனால் கிடைக்கும் பலன்களைப் பெறலாமே என்ற ஆசை உண்டு. இப்படியானால் ஏறுமுகமாக அல்லாமல் மேலும் மேலும் பல சாதிகள் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்ள தயாராகும் நிலைதான் தொடருமா?

குஜ்ஜாருகளுக்கான கோரிக்கைகள் இன்னும் ஓய்ந்திடவில்லை. அதே போல் இனியும் புதுப் புது சாதிகள் தங்களை இன்னும் அடுத்த கீழ்நிலைக்குக் கொண்டு போக முயற்சித்தல் நடக்கலாம். ஆனால் இனி, சுதந்திரம் பெற்று 60 ஆண்டிகள் தாண்டியபின்னும் இதில் இனி புதிய மாற்றங்கள் கொண்டுவரக் கூடாது. இனி சாதிகள் மேல்நோக்கி வேண்டுமானால் மாறலாம்; ஆனால் கீழ் நோக்கிய மாற்றங்கள் இருக்கக் கூடாது. மேல்நோக்கிய மாறுதல்களைக் கொண்டு வருவது மகிழ்ச்சியான ஒரு விஷயமாக இருக்கும்.




முடிவுரை :




ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னால் கவிப்பேரரசர் கண்ணதாசன் அவர்கள் இனி நடக்கும் எந்த வித கலப்புத் திருமணங்களுக்குப் பிறகு திருமணமான தம்பதிகளும் அவர்கள் குழந்தைகளும் ‘பாரதி’ என்ற புதுச் சாதியில் அழைக்கப் பட வேண்டும். இனி வரும் எல்லா இடப்பங்கீடோ மற்ற அரசியல் லாபங்களோ இந்த ஜாதியினருக்குத்தான் என்றால் அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஒரே ஜாதி மக்களாகி விடுவார்கள் என்றார். அன்று அது எனக்கும் பலருக்கும் வேடிக்கையாகத் தோன்றியது. இப்போது ஒருவேளை அது ஒரு நல்ல உடன்பாடோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் சாதிகளை ஒழிக்க, மாற்று வழி ஏதும் தெரியவில்லை.

நம் நாட்டு சாதியமைப்பில் எல்லா சாதியினரும் ஒரே தவறைச் செய்து வருகிறோம். இதில் மேல்சாதி, கீழ் சாதி என்றெல்லாம் ஏன்தான் சொல்லித் திரிகிறோமோ .. ஏனெனில் எல்லா சாதியினருமே தங்களுக்கு மேலே உள்ள சாதியினருக்கு ஒரு மரியாதையையும், கீழே உள்ளோருக்கு ஒரு “தனி மரியாதை”யையும் தருவது வழக்கமாகி விட்டது. இந்தப் படியமைப்புகள் மாறுவதற்கான எந்த சிறு அறிகுறியும் கண்களில் இன்னும் படவேயில்லையே. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒரு நல்ல தலைவரையும் காணவும் இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ என்றும் தெரியவில்லை. அதிலும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியின் தலைவர் அடுத்த ஒரு தாழ்த்தப்பட்ட சாதி’யினருக்கும் தலைவனாக இருக்க முடியும் என்பது கனவில் மட்டும்தான் சாத்தியம் போலும்.

இச்சூழலில் பொது ஆர்வலர்கள், தாழ்த்தப்பட்டவருக்கான சமூகத் தலைவர்கள் இரு முக்கிய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒன்று, இடப்பங்கீடு, அதன் பலன், கல்வியின் தேவை போன்ற அடிப்படை விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி, தலைவிதி, முன் ஜென்மத்துப் பாவம், கர்ம வினை போன்ற முட்டாள் தனங்களிலிருந்து அவர்களை விலகச் செய்ய வேண்டும். கல்வியை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அத்தகைய தலைவர்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். மற்றொரு உதவி - பல தாழ்த்தப்பட்டோருக்கு அவர்கள் சாதிக்கான சான்றிதழ்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருப்பதாகக் கேள்விப்பட்டதுண்டு. இந்த மக்களுக்கு அந்தந்த சாதித் தலைவர்களாவது இன்னும் சிரமம் ஏற்று அவர்களுக்கான சாதிச் சான்றிதழ்களைப் பெற்றுத்தர வேண்டும்.






************ **************






Thursday, May 20, 2010

394. ஊர் சுத்தப் போறேன் ...........



*


மணற்கேணி 2009 போட்டியின் "அரசியல் / சமூகம்" பிரிவின் வெற்றியாளர் "திரு.தருமி" அவர்களை தமிழ்வெளி மற்றும் சிங்கை வலைப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.


அரசியல் / சமூகம் பிரிவு கட்டுரைகள்


சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் – தருமி

--- இப்படி ஒரு வெற்றி கிடைத்ததும், 'அடடே! நமக்கா' என்று தோன்றியது. 'வாங்க சிங்கப்பூருக்கு' என்று சிங்கை தமிழ்ப்பதிவர்களின் அழைப்பும் வந்தது. ஒரு வழியாக புறப்பட ஆரம்பிச்சாச்சு. 21 மே இரவு சென்னையிலிருந்து பயணம். திரும்புவது 31 மே காலை. தங்ஸ் 'வரமாட்டேன், போ!' என்று சொன்னதால் தனிப்பயணம். தனிப்பயணம் இல்லை ... நண்பன் பிரபாகர் சென்னையிலிருந்து என்னோடு வருகிறார். தேவன்மாயம் எங்களுக்கு அடுத்த விமானத்தில் வருகிறார். I miss கையேடு.

சிங்கைப் பதிவர்கள் இந்தப் போட்டிக்காக தங்கள் உழைப்பு,  நேரம், ஆர்வம், காலம், பணம், பல முயற்சிகள்,  எல்லாவற்றையும் தாராளமாகக் கொடுத்து, அவர்கள்  செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கெல்லாம் தமிழ்ப்பற்று ஒன்றுதான் காரணம் என்பதை நினைக்கும்போது அவர்களுக்கு பெரும் பாராட்டும், நன்றியும் சொல்லியாக வேண்டும். வாழ்க .. வளர்க ..

போய்ட்டு வந்து மீதிக் கதை சொல்றேன். வர்ட்டா .......?


பி.கு.:

பதிவு போட்டதும் மதுரைப் பதிவர்களிடமிருந்து ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள் ... மதுரை திரும்பி வரும்போது எந்த சைஸில்  flexboard அடிக்கிறது; என்ன டிஸைன் போடணும்; தலைவா வா ... அப்டின்னு போடலாமா?, இளைஞரணியின் வழிகாட்டியே ..ன்னு போடவா? -- இப்படி எக்கச்சக்க கேள்விகள்.

உ.பிறப்புகளே & ர.ரத்தங்களே, இதெல்லாம் தயவு செய்து வேண்டவே வேண்டாம்.

:)

******************

ஆனானப்பட்ட இந்து தினசரியில் கிரிக்கெட்டுக்குப் பதிலா உலகக் கால்பந்து பற்றி நேற்றிலிருந்து (19 மே) செய்திகள் போட ஆரம்பித்து விட்டார்கள். நம் பதிவர்கள் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு பதிவு போடுவார்கள். ஆனால் பாவம் .. கால்பந்து. சரி, நாமளாவது ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாமா என்று நினைத்து .. நினைத்து .. காலமாகி விட்டது. உடன் சேர ஆர்வமானவர்களைத் தேட நினைத்தும் கைகூடவில்லை. சரி... நாமளா விளையாட்டைப் பார்த்து, போனதடவை ஆங்கிலப் பதிவில் சிறு குறிப்புகள் எழுதியது மாதிரி ஏதாவது எழுதி 'பசி'யை ஆற்றிக் கொள்ளலாமென நினைத்து விட்டேன். அதிலும் ஒரு பிரச்சனை, எந்த தொலைக்காட்சி ஒளிபரப்பப் போவது என்றும் தெரியவில்லை, அதோடு விளையாட்டு சேனல்கள் எல்லாவற்றையும் கடந்த சில வாரங்களாக முடக்கிப் போட்டு வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டுக்கு மட்டும் ஒரு சேனல். மற்றதெல்லாம் அரோகரா .. கேபிள்காரர்கள் சுமங்கலி அவற்றையெல்லாம் அடைத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஜூனில் ஆரம்பித்து விடுவோம் என்று சொல்கிறார்கள். அதென்னமோ .. கால்பந்துன்னா இப்படி ஒரு அலட்சியம். கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். சென்ற கால்பந்து உலகக் கோப்பைக்கும் இதே தகராறு இருந்து, பின் வந்தது.

கால்பந்து பார்க்கணும். எங்க ஊர் 'பெரியவர்' கண் திறக்கணும்.

***********



Thursday, May 13, 2010

393. WHY I AM NOT A MUSLIM .. 6 (இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன் )

*


ஏனைய பதிவுகள்:


*

377. WHY I AM NOT A MUSLIM .. 4 என்ற பதிவினில் குரானின் வரலாறு, அதிலுள்ள ஐயங்கள், கேள்விகள் பற்றி WHY I AM NOT A MUSLIM என்ற நூலில் இருந்த பகுதியினைக் கொடுத்திருந்தேன்,. அப்புத்தகத்தின் மற்றைய பகுதிகளைப் பார்ப்பதற்கு முன் தொடர்பு கருதி, குரானின் வரலாறு பற்றிய வேறு இரு நூல்களின் தொகுப்பை இங்கே பதிவேற்றப் போகிறேன்.

முந்திய பதிவு  god is not great என்ற  நூலிலிருந்து.

இப்போது இப்பதிவு: இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன் என்று நூலிலிருந்து.....

392. ஜாதீயம்

*

ஆரம்பமாகப் போகும் மக்கள் கணக்கெடுப்பில் சாதியையும் சேர்த்து கணக்கிடுவதா வேண்டாமா என்பது பற்றி எனக்கு இதுவரை ஒருமுடிவான கருத்து இல்லை.

Monday, May 10, 2010

391. பரிணாமம் -- 1

*


தொடர்புள்ள பதிவுகள்:

இது முதல் பதிவு
பரிணாமம் -- 2


*


முன்னுரை:

பிரபஞ்ச வெளியெங்கும் கோடானு கோடி கோளங்கள் பரவிக்கிடக்கின்றன என்பதை நம்பிக்கையாளர்கள் யாவரும் கேள்வி கேட்பதில்லை. அவை நம் கண் முன்னே இருக்கின்றன என்பதை விடவும், கண்ணையும் தாண்டி பிரபஞ்ச வெளியில் பரவிக்கிடப்பதை, வானியலாளர்கள் கண்டு கூறியதை நாமெல்லோரும் ஒப்புக்கொள்கிறோம்.