Monday, January 31, 2011

471. அமினா - ஒரு பார்வை

*


எப்படியோ, ஒரு நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக இரு விருதுகளும் (1... , 2...) கிடைத்தன. மனதுக்கு மிக்க மகிழ்ச்சி.
நண்பர்கள்  சிலர் அதனை வாசித்து, நூலாய்வு செய்து, நேரில் வாழ்த்தி இம்மகிழ்ச்சியில் பங்கு பெற்றனர். பேரா. D. SAMUEL LAWRENCE நூலை வாசிக்கப் போவதாகக் கூறியதும், ‘சரி .. உம் தலைவிதி!’ என்றேன். என்னிடம் இருந்த நூலைத் தருகிறேன் என்றேன். ‘முடியாது. தொடர்ந்து  நான் விலைக்கு வாங்கித்தான் படிப்பேன்’ என்றார். தலைவிதி இப்படியா இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாசித்து முடிந்ததும் மிகவும் பாராட்டினார். It sounds more original என்று ஆங்கிலப் பேராசிரியர் அவர் சொன்னதும் ஜில்லாகிப் போனேன். (எப்போதும் உண்மை பேசுபவராக நான் அவரை நினைத்து வந்திருக்கிறேனே!)  காலம் கடந்தாலும்  ஒரு கட்டுரையாக அதை எழுதுவேன் என்றார். அதற்குள் அந்த நூல் அவர் கையிலிருந்து சென்று பல சுற்று சுற்றி வந்ததாலும், சொன்ன சொல் மறக்காமல் நூல் திரும்பி வந்ததும், கட்டுரையை எழுதி அனுப்பி வைத்தார். அக்கட்டுரையை மகிழ்ச்சியோடு இங்கு இடுகிறேன் ....


பள்ளியில் படிக்கும் பொழுது - தமிழ்க் கதைகள், நாவல்களை மணிக்கணக்கில் படித்ததுண்டு. கல்லூரிப் பருவத்தில், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்ட பொழுது, நாவல்கள், நாடகங்கள் போன்றவற்றை நேரம்போவது தெரியாமல் படித்ததுண்டு. ஆனால், காலப்போக்கில், அப்படிப் படிப்பதற்கு பொறுமையுமில்ல்லை; அத்தகைய புத்தகங்கள் என்னுடைய கைக்கு வரவுமில்லை. 

நீண்ட ... நீண்ட இடைவெளிக்குப் பிறகு,  ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்த பிறகு, முதலிலிருந்து கடைசி வரை சுவை குன்றாமல் படித்தேனென்றால் அது ‘அமினா’ தான். என் மனதை சுண்டி இழுத்து, கருத்தைக் கவர்ந்து, உணர்வுகளைத் தட்டியெழுப்பிய நாவல் இது. ‘மொழிபெயர்ப்பு’ என்பதே தெரியாத அளவிற்கு, உயிரோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. மொழி பெயர்ப்பு - காற்று போன பலூனைப் போல் இராமல், துள்ளிக் குதித்து வரும் புள்ளிமானைப் போல் நம்மை அப்படியே அள்ளி அணைத்துச் செல்லும் ஆற்று வெள்ளம் போல இனிக்கிறது. படிக்கப் படிக்க, இன்னும் மேலும் படிக்க வெண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டும் நடை. நம்மையறியாமலேயே நம்மை உந்தித் தள்ளும் சுவையும், வளமும், உணர்ச்சிப் பெருக்கும் எங்கும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. ‘தருமி’யின் முயற்சியும் ஆற்றலும் பாராட்டுக்குரியது. 

மொழியும் நடையும் வெளி அலங்காரங்கள் என்றால், கதையும், பாத்திரங்களும் தானே உயிர்; கருப்பொருள். இந்த நாவல் ஒரு பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கையை, நீதிக்கும் நியாத்திற்கும் போராடும் அவரது உள்ளத் திண்மையை, அவரது மனப்போராட்டத்தை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது! இது ஒரு தனிப்பட்ட நபரின் கதையாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும், மனசாட்சியின் உந்துதலால், சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களோடு, மிதித்து ஒதுக்கப்பட்டவர்களோடு தங்களை இணைத்துக் கொண்டு, அவர்களுக்காக - அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடும், - அதற்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாராக இருக்கும் போராளிகளைக் குறிக்கும். அவர்களின் எண்ணக் குமுறல்களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளை, உறுதியைத் தெளிவாக அமினா பிரதிபலிக்கிறது. தமிழில் தரம் குறையாமல் - இன்னும் சொல்லப் போனால் - மெருகேற்றப்பட்டிருக்கிறது.

‘அமினா’ சமுதாயத்தின் அவலங்களை, குறைகளை, அநியாயங்களை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேல்தட்டு மக்கள், ஆளும் வர்க்கத்தினர், ஆணாதிக்க வெறியர்கள் - வாழ்க்கையின் வளங்கள், வசதிகள் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வறுமையிலும், ஏழ்மையிலும் வாடும் மக்களைப் பற்றி எள்ளளவும் கவலையில்லாமல், கடவுளின் பெயரால், மதக்கோட்பாடுகளின் பெயரால், அதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தி, எல்லா அநியாயங்களையும், எந்த வித குற்ற உணர்வுமில்லாமல், தயக்கமின்றி செய்து வருகின்ற நிலையைத் தெளிவாக விளக்குகிறது.

இந்நாவலில், பெரிய, சிறிய கதா பாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு வகையில், நம்முடன் உறவாடி, தங்களுடைய கருத்துக்களால் பரிமாறுவதுபோல் இருக்கிறது. உயிரோடு உணர்வோடு கதை முழுவதும் உலவும் பாத்திரங்கள் பலர் இருந்தாலும், அமினா, பாத்திமா போன்ற சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியாது. 

அப்பாவியாக, அமைதியான வாழ்க்கை வாழும் அமினா, கணவனின் சொல்கேட்டு நடக்கும் - ஆனால் எதையுமே கூரிய பார்வையுடன் பார்க்கும் பெண், பாத்திமாவின் அனல் பறக்கும் கொள்கை வீச்சுகளால் ஆட்கொள்ளப்பட்டு, சிறிது சிறிதாக மனத்தளவிலும், பின்பு அன்றாட வாழ்விலும் அவளிடம் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதைக் காண்கிறோம். இறுதியில், சமூகத்தில் குறிப்பால் பெண்களுக்கு நீதி கிடைக்க தன்னாலியன்றதைச் செய்வதென்று முடிவெடுத்து, பெண்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, போராட்டத்தில் ஈடுபட்டு, எத்தகைய தியாகமும் செய்யத்  துணிகின்றாள். முன் வைத்த காலைப் பின்வைக்காமல் தொடர்ந்து போராடுகிறாள். எதிர்ப்பு, கேலி, அடி, உதை, சிறை வேதனைகளால் எதுவும் அவளது உள்ள உறுதியை அசைக்க முடியவில்லை. கொடூரமான சுயநலவாதியான  கணவன் மனதை அவள் வாழ்க்கை மாற்றுகிறது. சமூக உணர்வோடு நேர்மை நெஞ்சோடு வாழ்வேன்; அநியாயத்தை எதிர்த்துப் போராட, எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ்சமாட்டேன் என்பதற்கு அமினா ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

அவளது தோழி - முதலிலிருந்து கடைசி வரை - ஒரு ’அக்கினிக் குஞ்சு’தான். அவளுடைய திறமையும், தலைமைப் பண்பும், கொண்ட நிலையில் உறுதியும் எடுத்த முடிவில் காட்டும் துணிவும் - ஒரு வீரமிக்க போராளியாக முழுவதும் வலம் வரும் ஒரு பாத்திரம். லாராய் போன்ற அடித்தட்டு மக்கள் வறுமையில் உழன்று, வாழ்க்கையில் அடிபட்டு, வேதனைப் பட்டு இறப்பதெற்கென்றே படைக்கப்பட்டவர்களாக சமுதாயம் நினைக்கிறது. போராட்டத்திலும் பாவம் அவள்தான் பலியாகிறாள். மனதில் நிற்கும் இன்னொரு பாத்திரம் - வழக்கறிஞர் ராபி. கதையின் கடைசி நேரத்தில் சிறிது நேரம் வந்தாலும் தனது வாதத் திறமையால் உண்மையான அன்பினால் அமினா உட்பட போராளிகள் அனைவருமே விடுதலையாவதற்குக் காரணமாக இருக்கின்றாள். இப்படி  எத்தனையோ பாத்திரங்கள். 

இந்த நாவலைப் படிக்கின்ற பொழுது, மொழிபெயர்ப்பு நூலாகவே எனக்குத் தோன்றவில்லை. நல்ல சரளமான நடை; மொழி பெயர்ப்பாளர் ‘தருமி’யின் தனித் திறமையால் தமிழ் புது மெருகு பெறுகிறது. நாவலின்சுவையும் கூடுகிறது. கதாபாத்திரங்களிடையே நடக்கும் உரையாடல்கள், தர்க்கங்கள், தீட்டும் திட்டங்கள், அவர்கள் பரிமாறிக் கொள்ளும் எண்ணங்கள், கருத்துகள் - யாவுமே - தெளிந்த நீரோடை போல் அலட்டாமல் ஆரவாரமில்லாமல் வருகின்றன. இதுவே இப்புத்தகத்தின் சிறப்பு என்று நம்புகிறேன்.

புத்தகத்தைக் கையிலெடுப்பவர் படித்து முடிக்கும் வரை கீழே வைக்கமுடியாத அளவிற்கு உயிரோட்டமிக்க நடை. புத்தகத்தோடு ஒன்றிப் போகும் அளவிற்கு சுவையான நடை. தனித்தன்மை மேலோங்கி நிற்கும் சிறப்பான மொழிபெயர்ப்பு.

இந்நாவலைப் படிக்கின்ற பொழுது நமது சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் மதம், ஜாதி, அரசியல் போன்றவற்றின் பெயரால் நடக்கும் அநியாயங்களை எண்ணி வேதனைப்படாமல் இருக்க முடியாது. அமைதி காப்போர், வாய்மூடி மெளனியாக இருப்போர், எரிமலையாக வெடிக்கும் நாள் வர வேண்டும்; விரைவில் வரவேண்டும்; புதியதோர் நல்ல சமுதாயம் அமைய வேண்டும் என்ற விருப்பம் உணர்வுள்ளோர் மனதில் எழாமல் இருக்காது.

அட்டைப்படத்தை வடிவமைத்தவருக்குப் பாராட்டுகள். போகுமிடமெல்லாம்

Image and video hosting by TinyPic
அந்தக் “கண்” என்னைப் பின் தொடர்ந்து வருவது போலவே இருக்கின்றது.

அழகான தெளிவான கண்ணுக்கு இதமான அச்சு.  கலைநயம் பளிச்சிடுகிறது.

20 comments:

idroos said...

Ungalin iyarpeyar ennavendru arinthu kolla virumkiren.

தருமி said...

ஐத்ருஸ்
அதென்னங்க .. பெயர்தானே வேணும். இந்தாங்க .. இதை வாசிங்க

அது சரி.. அதென்ன உங்க பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!

idroos said...

Idroos enbathu en thanthai vazhi thathan peyar.artham theriyathu.
enna mozhi endrum theriyavillai.
Arabu mozhiyaka irukkalam enbathu en kanippu.

idroos said...

En thathavin peyar "idroos maraicoir".maraicoir enbathu vanibam seibar endru porul.
Maraicoir enbathu jaathi alla.
Nambunkal community certificate padi nan oru lebbai muslim.

saarvaakan said...

நண்பர் ஐத்ரிஸ்,

ஐத்ரிஸ்,(இத்ரிஸ்) என்பவர் இஸ்லாமில் ஒரு இறை தூதராக அறிய படுபவர்.
குரானில் இரு இடங்களில் குறிப்பிட படுபவர்.

19:56. (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.

21:85. இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!

பைபிளின் படி இவர் நூஹ்(நோவா)ன் தாத்தா.இவர் ஏனோஹ்(ஏனோக்கு) என்று அறியப் படுகிறார். உயிருடன் வானத்திற்கு இறைவனால் எடுத்துக் கொள்ளப் பட்டதாக நம்பபடுபவர்.

தருமி said...

saarvaakan
தல அப்டின்னு சொல்லி கட்டிப் பிடிக்கணும்போல இருக்கு!!
:)

saarvaakan said...

நன்றி
வசிஷ்டர் அளிக்கும் பிரம்ம ரிஷிப் பட்டம் போல் எடுத்துக் கொள்கிறேன்.உங்களை போன்ற ஆசான்கள் எழுதுவதை பார்த்துதான் எழுதவே ஆரம்பித்தேன்.மதம் என்பது போதை என்பது சரிதான் போலும் மதத்தை பின் பற்றுவனை விட ,விமர்சகனை மிக அதிகமாகவே ஈர்க்கிறது.அமினா புத்தக
வெற்றிக்கு வாழ்த்துகள்.

பின் குறிப்பு
குரானின் 21:85 குறிப்பிடும் துல்கிஃப்ல் என்பவர் எசேக்கியேல்.

http://en.wikipedia.org/wiki/Prophets_of_Islam

suvanappiriyan said...

விருதுகள் கிடைத்ததற்க்கு எனது வாழ்த்துக்கள் திரு தருமி! நானும் புத்தகம் கிடைத்தவுடன் படித்துப் பார்க்கிறேன்.

தருமி said...

//மதத்தை பின் பற்றுவனை விட ,விமர்சகனை மிக அதிகமாகவே ஈர்க்கிறது...

மிக மிகச் சரி.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

நன்றி சுவனப்பிரியன்

படித்தால் கருத்து சொல்லுங்கள்.

தருமி said...

சுவனப்பிரியன் & சார்வாகன்

சார்வாகன் கொடுத்த பட்டியலில் வரும் நபிகள் எல்லோரும் ஒரே ‘இனத்தை’ இடத்தைச் சார்ந்தவர்கள்ள்தானே? ஆனால் நபிகள் பல இனத்திற்கும், உலகின் பல இடத்திற்கும் வந்ததாக இஸ்லாமியர் சொல்வதுண்டே. அது எப்படி?

saarvaakan said...

___________
4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

இந்த வசன‌த்தின் படி திரு முகமதுக்கு வெளிப்படுத்தப்பட்ட தூதர்களின் பெயர்கள்(25) குரானில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
குரானில் குறிப்பிடப்பட்ட அனைவருமே யூத ,அராபியரே.
____________________

குரானில் குறிப்பிடாத தூதர்கள் உண்டு என்று இந்த வசனம் தெளிவாக கூறுகிறது.எவ்வளவு பேர்கள் என்று சில ஹதிதுகள் வேறுபட்ட எண்களை கூறுகின்றன.முகமதுவுக்கு கூறாத சில விஷயங்களை கடவுள் செய்தார் என்பது முகமதுவின் காலத்திற்கு முன்பு மட்டுமே என்று கூறலாம்.

இந்த வசனம் அதை சொல்கிறது.
________

5:19. வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் படி பார்த்தால் முகமதுவுக்கு முன்(கி.பி 570_632) ஈசா(கி.பி 4_40) வரை எந்த தூதரும் வரவில்லை.
முகமது இறுதி தூதர்(குரான் 33:40) என்பதால் அவருக்கு பின் தூதர்கள் வர முடியாது.

மற்ற இனத்திற்கும் தூதர்கள் அனுப்ப பட்டார்கள் என்றால் அவர்கள் அனைவருமே கி.பி 40க்கு முன்பே வந்து போயிருக்க வேண்டும்.

_______

பின் குறிப்பு: அஹமதியா முஸ்லிம்கள் கிருஷ்னரை இறைதூதராக ஏற்று கொள்கிறார்கள்.

suvanappiriyan said...

தருமி!

//சுவனப்பிரியன் & சார்வாகன்

சார்வாகன் கொடுத்த பட்டியலில் வரும் நபிகள் எல்லோரும் ஒரே ‘இனத்தை’ இடத்தைச் சார்ந்தவர்கள்ள்தானே? ஆனால் நபிகள் பல இனத்திற்கும், உலகின் பல இடத்திற்கும் வந்ததாக இஸ்லாமியர் சொல்வதுண்டே. அது எப்படி?//

ஆபிரஹாமில் இருந்து முகமது நபி வரை தொடராக வருவது, அரபு நாடுகளுக்கும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் அனுப்பப்பட்ட தூதர்களை இனம் காட்டுவதற்க்காகத்தான். குர்ஆனில் பெயர் கூறப்பட்ட தூதர்கள் தோராயமாக 25 மட்டுமே. இது போல் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட தூதர்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டதாக முகமது நபியின் ஹதீதுகளில் காணக் கிடைக்கிறது. மற்ற தூதர்கள் குறிப்பிட்ட இனத்துக்கும் குறிப்பிட்ட மொழிக்கும் அனுப்பப்பட்டவர்கள். முகமது நபி மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் தூதராகவும் இறுதியாகவும் அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திறக்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பினோம்' - குர்ஆன் 14:4

'முஹம்மதே! உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்' -குர்ஆன் 4:79

தருமி said...

//அஹமதியா முஸ்லிம்கள் கிருஷ்னரை இறைதூதராக ஏற்று கொள்கிறார்கள்.//

அஹமதியாக்கள் சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டிலில் இருந்தும் ஆரம்பிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சரியா..?

suvanappiriyan said...

ஒரு சராசரி முஸ்லிமை விட சார்வாகன் மிக அதிகமாகவே இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//பின் குறிப்பு: அஹமதியா முஸ்லிம்கள் கிருஷ்னரை இறைதூதராக ஏற்று கொள்கிறார்கள். //

அஹமதியாக்கள் காதியானி என்பவரை முஹமது நபிக்கு பின் வந்த தூதராக சித்தரிக்கிறார்கள். இது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக இருப்பதால் அவர்கள் இஸ்லாமிய வட்டத்துக்குள் வர இயலாது. எனவே தான் பாகிஸ்தானில் கூட அஹமதியர்களை தனி மதமாக அங்கீகரித்திருக்கிறார்கள்.

yasir said...

நாவலைப்பற்றிய விமர்சனமே முழுவதும் படிக்க ஆவலைத்தூண்டுகிறது. அமினாவுக்கு வெற்றி உறுதி வாழ்த்துக்கள்.

Kamaraj said...

அருமை! வாழ்த்துக்கள்!!! மொழி பெயர்ப்பில், தமிழ் மொழி பெயர்ப்பில் உள்ள இடர்பாடுகள், அதை எப்படி கையாண்டீர்கள், என்ன உத்திகளை பயன்படுத்தினீர்கள்... போன்றவற்றை பற்றிய‌ உங்கள் அனுபவங்கள் மிக பயனுள்ளதாக இருக்கும்.

தினேஷ் ராம் said...

நாவலை படிக்கும் அற்புத வாய்ப்பு கிட்டியது.

வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி :-)

Post a Comment