சல்மாவும், சல்மான் ருஷ்டியும்.
சல்மான் ருஷ்டியைப் பற்றிய செய்திகளை இரு நாட்களாக தினசரிகளில் வாசிக்கும்போது அதைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். ஆனால் இன்று (22.1.12) மாலை காலச்சுவடு நடத்தும் 'அற்றைத் திங்கள்' நிகழ்ச்சியில் சல்மா அவர்களது சந்திப்பு நடந்தது. அதனைப் பற்றியும் எழுத நினைத்தேன். இரண்டுக்கும் தான் தொடர்புண்டே .. இருவருமே பாவப்பட்ட மக்கள் தானே!
வெறும் ஒன்பதாம் வகுப்பு மட்டும் படித்த, அதன்பின் படிப்பு மறுக்கப்பட்ட சல்மாவின் பேச்சில் இருந்த நேர்மையும், தீவிரமும் மிக அழகானவை. படிப்பை நிறுத்திய பின் நான்கு சுவர்களுக்குள் இறுக்கமான ஒரு வாழ்வு. தீவிர வாசிப்பால் விரிந்த சிந்தனைகள், சிறு சிறு இளம்பிராயத்துக் கவிதைகளோடு ஆரம்பித்து, அவைகள் பதிக்கப்பட்ட பின் அவர் பெயர் இதழில் வந்ததால் எழுந்த சமூக, குடும்பச்சிக்கல்கள், இளம் வயதுத் திருமணம் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள், யாருக்கும் தெரியாமல் எழுதிய கவிதைகளை இதழ்களுக்கு அனுப்புவது என்று தன் வாழ்வில் சந்தித்த எதிர்ப்புகளை மீறி தன் படைப்பாற்றலை வளர்த்த முறை பற்றி கூறினார். சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து புனைப்பெயர் சூட்டிக் கொண்டு எழுதிய கவிதைகள் வெளியிடப்படும் விழாவிற்கு 'தலைமறைவாக' வந்தது பற்றியும் சொன்னார். எங்கள் மதம் சொல்லாதவற்றை ஆணாதிக்கச் சமூகம் தொடர்ந்து, பொதுவாக கல்வி, அதிலும் பெண்களுக்கான கல்வியைத் தடை செய்வது பற்றிச் சொன்னார். பொதுவெளிகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்ளாததைப் பற்றியும் சொன்னார். (வந்திருந்த கூட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள் அதிகம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது! எனக்குத் தெரிந்து ஒரு பெண் வந்திருந்தார். இஸ்லாமியர் இக்கூட்டத்தில் அதிகமில்லை என்று சல்மா சொன்ன போது ஓரிரு குரல்கள் நாங்களும் இருக்கிறோம் என்று ஒலித்தன!)
பெண்கள் கவிதை எழுதுவதைப் புதிதாக தான் ஆரம்பித்ததாகக் கூறினார். எழுதிய நாவல் பற்றியும் கூறி, தனது நாவலுக்கும் கவிதைகளுக்கும் எதிர்த்து எழுந்த ஆண்களின் குரல்கள் பொறாமையால் எழுந்தவை என்றார். ஆனால் இந்த ஆணாதிக்கப்பாதிப்பு உலகம் முழுமைக்கும் பொது என்றார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு கருத்தரங்கில் இவரது மொழிபெயர்க்கப்பட்ட நாவலைப் பற்றிய கருத்தரங்கு பற்றிச் சொல்லும்போது, இதே போன்றுதான் மற்றைய நாடுகளிலும் ஆணாதிக்க எதிர்ப்பு இருப்பதாகக் கூறி, பெண்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து அதைப் பற்றிய ஒப்பாரி வைத்தோம் என்றார்!
கேள்வி பதில் நேரத்தில் இஸ்லாமியச் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். கல்வியறிவைப் பெருவதில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது. கல்வி ஒரு அடிப்படை உரிமை. அதை எல்லோருக்கும் கிடைக்க மறுக்கக்கூடாது என்றார். இளம் வயது வேகத்தில் கடவுளைப் பற்றிய எதிர்மறை உணர்வுகள் பதின்ம வயதினில் இருந்தன. ஆனால் இப்போது கடவுள் மறுப்பு என்று ஏதும் கிடையாது. ஆனாலும் இதுதான் கடவுள் என்ற குறிப்பிட்ட நம்பிக்கையுமில்லை; கூட்டத்தில் கடவுளைப் பற்றித் தெரிந்தவர்கள் கூறுங்கள் என்றார்.
ஒரு பெண்; அதுவும் ஒரு இஸ்லாமியப் பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவளுக்கு மறுக்கப்படும் கல்வி, கொடுக்கப்படும் கட்டுக் கோப்பு என்பதைத் தாண்டி தன்னை மேலே வரச் செய்தது தனது எழுத்தே. என் எழுத்துச் சுதந்திரத்திற்காக எதையும் தியாகம் செய்வேன். எழுத பேனா எடுத்த எந்த படைப்பாளியும் இத்தகையக் கட்டுப்பாடுகளால் துவண்டு விட மாட்டார்கள் என்றார். (சல்மான் ருஷ்டிக்கும் இந்த வாக்கியம் மிகப் பொருத்தம் என்றே நினைத்துக் கொண்டேன்.)
* * *
ராஜஸ்தானில் நடக்கும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிற்கு உலகெங்கிலிருந்தும் பெரும் எழுத்தாளர்கள் வந்திருந்து அந்த விழா இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. இவ்விழாவிற்கு சல்மான் ருஷ்டியும் வருவதாக இருந்தது. ஆனால் நமது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வழக்கம் போல் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர். அவருக்கு விசா கொடுக்கக்கூடாது என்று சொல்ல, அவருக்கு விசாவே தேவையில்லை என்றதும், அவர் வர அரசு தடை விதிக்க வேண்டுமென்றனர். நடக்கப் போகும் தேர்தலில் இஸ்லாமிய ஓட்டுகள் வேண்டுமென்று விரும்பும் மைய அரசு எம்முடிவையும் எடுக்கத் தயங்கியது. ராஜஸ்தான் அரசோ கலகம் விழையும் என்று ஒரு பூதத்தைக் கிளப்பி விட்டு விட்டு, அதோடு நிற்காது ஒரு குழு சல்மான் ருஷ்டியைக் கொல்ல ராஜஸ்தானுக்குள் வந்து விட்டது என்று ஒரு 'சினிமா' ஓட்டியுள்ளார்கள்.
விழாவை நடத்துபவர்களுக்கும் அடியில் நெருப்பு மூட்டியது போலானது. எழுத்தாளர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். அதோடு இரண்டு மூன்று எழுத்தாளப் பெருமக்கள் சல்மானின் Satanic Verses-லிருந்து சில பகுதிகளை மேடையில் வாசித்துள்ளார்கள். உடனே இங்கே 'சட்டப்படி' அது தவறு என்று வாசித்த மக்களை, உங்கள் மேல் வழக்கு போட்டு விடுவார்கள் என்று சொல்லி அவர்களை விழா நடத்துவோரே விழாவிலிருந்து காலியாக்கி விட்டார்கள்.
இந்த 'திருவிழாக் கூத்தில்' இரு கடிதங்கள் இந்துவில் வந்துள்ளன. வழக்கமாக இந்துவில் வரும் கடிதங்கள் sensible ஆக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனால் இம்முறை இரு கடிதங்கள் எனக்கு வேடிக்கையாக, குறுகிய நோக்கோடு இருந்தன. அதில் ஒருவர் சல்மான் ருஷ்டி is guilty of violating the moral and legal principles' என்று எழுதியுள்ளார். உங்கள் moral எல்லோருக்கும் moral தானா? அடுத்து இதில் violating the legal principles என்பது எங்கே, எப்படி நடந்திருக்கிறதென்று தெரியவில்லை.
இன்னொருவர் சல்மான் ருஷ்டி hurting the sentiments of Muslims the world over என்கிறார். அதற்குத்தான் பத்வா போட்டார்கள். அந்தக் கதை முடிந்து விட்டது. ஆனால் அதோடு நிற்காது, அவரை அங்கே போக விடாதே .. இங்கே உட்கார விடாதே என்கிறார்கள். எல்லோருக்கும் அவரவர் மதம் புனிதமானது. இதிலேதும் ஐயமில்லை. ஆனால் மற்ற மதத்தினர் யாரும் தங்கள் கடவுளையோ வேறு யாரையுமோ இப்படித் தாங்கிப் பிடிக்கவில்லை. இப்படி அளவுக்கு மீறி கொலைத்தண்டனை .. அது இது ...என்று சொல்வது நிச்சயமாக மதத் தீவிர வாதம். இது அந்த மதத்தினருக்கு மட்டுமே சரியாகத் தோன்றும். அடுத்தவர்களுக்கு இது ஒரு கேலிக்குறிய, கேள்விக்குறிய விஷயமே. இந்த மதத் தீவிரவாதம் மேலும் பிளவுகளையும் கசப்பையும் ஏற்படுத்துமேயொழிய அம்மதத்தின் மேல் யாருக்கும் எந்த மரியாதையையும் தராது. குண்டு வைப்பது மட்டும் தீவிரவாதமல்ல. இது அதைவிட மிக மோசமான விளைவுகளைத்தான் தரும்.
சலமானின் Midnight Children பல ஆண்டுகளுக்கு முன் வாசிக்க ஆரம்பித்து 150 பக்கங்கள் மட்டும் வாசிக்கவே மிகச் சிரமப்பட்டேன். இப்போது Satanic Verses-ன் திறனாய்வு வாசிக்கும்போதே தலை சுற்றத் தொடங்கியது. என்னமோ magical realism என்கிறார்கள். நமக்குத் தாங்காது. புத்தகத்தை வாசிக்க முயற்சித்தும் முடியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகக் கத்தாமல், புத்தகத்தை வாசித்த அடிப்படைவாதிகள் யாரேனும் இருந்தால் எதிர்ப்புக்குள்ளான பகுதி எது என்று சொன்னால் நானும் அதை மட்டுமாவது வாசித்துப் புரிந்து கொள்ள முடியும். ஆகவே வாசித்த புண்ணியவான்கள் யாராவது அப்பகுதி எது .. பக்கங்கள் எவை .. என்று சொன்னால் நானும் வாசித்துக் கொள்வேன். எப்படி வாசிப்பேன் என்று கேட்பீர்களோ .. நம் நாட்டில் வாசித்தாலே தப்பாமே. எங்கேயாவது நாடு கடந்து போய் வாசித்துக் கொள்கிறேன்!
அது என்னவோ .. தமிழ்மணமாயிருந்தாலும், உலக இலக்கிய விழாவாக இருந்தாலும் இஸ்லாமியரின் அரட்டல் என்பது சகஜமாகி விட்டது. நல்லவேளை நம் தமிழ்மணம், இந்த விழா நடத்துபவர்கள், மைய, மாநில அரசுகள் போலல்லாமல், தங்களைத் தாழ்த்திக் கொள்ளவில்லை; எல்லோரும் விலகுவோம் என்றதும், சரி .. அதற்காக கவலையேதுமில்லை என்று தமிழ்மணம் சொன்ன பதிலில் தரம், தைரியம், நியாயம், தீர்க்கம் இருந்தது.
*