Monday, March 26, 2012

560. சத் சபை அழைத்தது
*
சென்ற வாரம் யாரோ ஒரு பதிவர் தனது சத் சங்கம் பற்றியும் என்னை அதற்கு வரவேற்றும் ஒரு மயில் அனுப்பியிருந்தார். அவர் கொடுத்த அழைப்பு பழைய நிகழ்வு ஒனறை என் நினைவுக்குக் கொண்டு வந்தது.

*

அந்த நிகழ்வு நடந்து கால்நூற்றாண்டுக்கு மேல் அதிகமாகவே இருக்கும். ம்ம் .. ம் .. சரியாக பார்த்து சொல்லி விடுகிறேனே ... 1979-80-ம் ஆண்டு. அடுத்தடுத்த இரு ஆண்டுகளின் கோடைகால விடுமுறைகளில் 'கற்பித்தலில் ஒரு டிப்ளமா' - Dip. in Higher Education -  வாங்க, பல்கலைக் கழகம் நடத்தும்  கோர்ஸ்  ஒனறில் சேர்ந்தேன். முதல் நாளே முன்பின் பார்த்திராத, பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த மகாலிங்கம் என்ற ஆங்கிலப் பேராசிரியரும் நானும் வகுப்பில் நடந்த 'கலாட்டாகளில்' நாங்கள் அடித்த ஜோக்குகளால் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு நண்பர்களானோம். எனக்கும் அவருக்கும் எல்லா வித vibes ஒத்து வர ஒன்றாகவே இருப்போம். பலருக்கு எங்களிருவரிடமும் கொஞ்சம் பயம் தான்! ஒரு மாதிரி 'வாலுகள்' அப்டின்னு பட்டம் வாங்கினோம்.
1980 - மகாலிங்கத்துடன் ...

மாணவர்கள் எல்லோருமே கல்லூரிப் பேராசிரியர்கள்தான். எல்லாரும் குறைந்தது 15-20 ஆண்டுகள் வேலை பார்த்து முதிர்ந்தவர்கள் தான். ஆனால் மிகவும் 'மோசமான மாணவர்கள்' போல் நடந்து கொண்டார்கள். ஆசிரியர்களுக்கு 'ஐஸ்' வைப்பது முதல், அங்கே நடந்த உள்தேர்வுகளில் 'பிட்' கொண்டு வந்து காப்பி அடிப்பது வரை எல்லாமே நடந்தன. இறுதித் தேர்விலும் காப்பி அடித்த ஒரு ஆசிரியர் supervision-க்காக வந்திருந்த இளம் ஆராய்ச்சியாளரிடம் அகப்பட்ட கதை கூட உண்டு.

பல வகையிலும் எனக்கு ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் கொடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும். எங்களுக்கு வகுப்பெடுக்க ஆசிரியர் நீண்ட் ஒரு ஹாலுக்குள் நுழைந்ததும் இங்கே தடபுடலாக ஒரு ஆசிரியர் கூட்டம் தடாலென எழுந்து நிற்கும். கையைப் பிடித்து இழுத்து 'உட்காருங்க'ப்பா ... அல்லது பக்கத்தில் வந்த பிறகாவது எழுந்து நில்லுங்க..' என்பேன். எங்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியைக்கு மக்கள் அப்படி தடபுடலாக எழுந்து நிற்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வெளியே அப்படிக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அதற்காகவே ஆசிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு எழுந்து நிற்பார்கள். (தலைமைப் பேராசிரியை நீங்கள் உங்கள் மாணவர்களை எழுந்து நிற்கச் சொல்ல மாட்டீர்களா? என்று என்னிடம் கேட்டார். என் முதல் கட்டளையே அதுவாகத்தானிருக்கும். எழுந்து நிற்க வேண்டாம் என்பேன் என்றேன். அவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்.) வகுப்பின் இடையே வரும் நேரத்தில் ஓடிப் போய் ஆசிரியருக்குத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து இது போல் பல குற்றேவல் செய்வார்கள்.

சுய உணர்வின்றி எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பதுவே அனேக ஆசிரியர்களின் 'பண்பாடாக' இருந்தது. Lady Doak College-ல் வேலை பார்த்த ஒரு சீனியர் பேராசிரியை வகுப்பில் notes எடுப்பதற்கு தனித் தனித் தாட்களில் எழுதி அதை வகைப்படுத்தி அடுக்கிக் கொள்வது வழக்கம். அவர் முதலிரு வரிசையில் அமருவார். வகுப்பெடுத்த எங்கள் பேராசிரியைக்கு அது பிடிக்கவில்லை. நேரே அந்தப் பேராசிரியரிடம் போய் அவர் file-யை வாங்கி எல்லோருக்கும் அதைக் காண்பித்து, 'இப்படியெல்லாமா வகுப்பில் நோட்ஸ் எடுப்பது? ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி நோட் ஒன்று போட்டு எழுத முடியாதா?' என்று கேட்டார். நிறைய ஆசிரியர்களும் இதே போல்தான் எழுதி வந்தோம். ஆனால் பேராசிரியை கேட்டதும் எல்லோரும் நாவடைத்துப் போய் அமர்ந்திருந்தார்கள். பின்னால் இருந்த நான் என் file-யை உயர்த்திக் காண்பித்தேன். 'இதுவே வசதியாக இருக்கிறது, ma'am. இதெல்லாம் அவரவரின் தனிப்பட்ட வசதி; பழக்கம்' எனறேன். I think this is more a matured system.'' என்றேன். முதல் வாரத்தில் நடந்த இந்த நிகழ்வால் பேராசிரியர் என் மீது ஒரு கருப்புப் புள்ளி வைத்து விட்டார்களோ என்னவோ!

தாழ்மையாகக் கூட தங்கள் சொந்தக் கருத்தை வெளியிட மாட்டார்கள். 'அம்மா', 'அய்யா' - அதாவது எங்களுக்கு வகுப்பெடுக்கும் நான்கு ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் 'yes, Sir / Yes, Ma'am' தான்! மாற்றுக் கருத்துக்கள் ஏதுமிருக்காது.  மதுரையில் உள்ள ஒரு கல்லூரி முதல்வரும் எங்களோடு மாணவராயிருந்தார். எல்லோரும் ஒரே மாதிரிதான். இந்தக் கூட்டத்தில் நானும் மகாலிங்கமும் தனித்தே நின்றோம். தலைமைப் பேராசிரியருக்கு அடுத்த ஆசிரியருக்கும், வயதில் குறைந்த இன்னொரு ஆசிரியருக்கும் எங்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும். ஒருவேளை அவர்கள் இருவருக்கும் அந்தப் பேராசிரியையோடு அவ்வளவாக ஒத்துப் போகாததாலும் இருக்கலாம்!

மதிய உணவு வேளைகளில் நிறைய பேர் சாப்பாடு கொண்டு வந்து மொத்தமாக ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதுண்டு. அப்போதெல்லாம் நிறைய விவாதங்கள் நடக்கும். அரசியல், கலாச்சாரம், சினிமா, தத்துவங்கள் -  தத்துவங்கள் வந்தால் மதங்களும் அதில் சேர்ந்து விடுமே! - என்று எல்லாமும் இருக்கும். அப்போதெல்லாம் நான் முழுமையான கடவுள், மத மறுப்பாளன் கிடையாது. ஆனால் 'கண் திறந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன்'. எல்லோரும் 'கிழித்த கோட்டைத் தாண்டாத மக்களல்லவா"? ஆகவே என் கருத்துக்களுக்கு மிகுந்த எதிர்ப்பு வரும். அதுபோன்ற ஒரு நேரத்தில் நாகமலைக் கல்லூரி கணிதப் பேராசிரியர் - பெயர் எதற்கு? அவர் பெயரை J என்றே வைத்துக் கொள்வோம் - அவர் எங்கள் வழிபாட்டு முறைக்கு வாருங்கள்; எங்கள் சபையில் இது தான் கடவுள்; இப்படித்தான் வணங்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு ஏதுமில்லை. ஆகவே ரொம்ப வித்தியாசமாக இருக்கும்; உங்களுக்கும் பிடிக்கும். வாருங்கள் என்றார். என்ன அமைப்பு என்றேன். சத் சபை என்றார், அவர்கள் கூடுமிடமும் என் வீட்டிற்குப் பக்கத்தில் (S.S.Colony) என்றார். கட்டாயம் வருகிறேன் என்றிருந்தேன்.

இந்த சமயத்தில் அப்போதைய வழக்கம் போல் வீட்டிற்கே பல்கலைக் கழகத் தேர்வுத்தாள்கள் வந்து விடும். திருத்தி அனுப்ப வேண்டும். அதற்குரிய தாக்கீது வந்தது. அதில் நீங்கள் இந்தப் பல்கலை நடத்தும் வேறு ஏதாவது கோர்ஸில் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் திருத்த முடியாது. அதைத் தெரிவியுங்கள் என்றிருந்தது. நான் ஏதும் யோசிக்கவில்லை. உடனேயே நான் சேர்ந்திருக்கும் கோர்ஸ் பற்றிய தகவல்களைச் சொல்லிவிட்டு, திருத்தும் வேலை வேண்டாமென்று எழுதியனுப்பி விட்டேன். ஓரிரு நாள் கழித்து எனக்கு ஓராண்டு கல்லூரியில் ஜூனியராக இருந்த நண்பர் வக்ஃப் போர்டு கல்லூரி ஆசிரியர் ஷேக் என்னிடம் இது போல் தகவல் வந்திருக்கிறதே என்று கேட்டார்.  நான் வேண்டாமென்று எழுதி விட்டேன் என்றேன். ஆமாம் .. பின்னால் அவர்களுக்குத் தெரிந்தால் பிரச்சனைதானே என்றார்; அதற்காக இல்லை; கோர்ஸ் படித்தால திருத்தக் கூடாது என்றால் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே - rules are rules - என்றேன். அவரும் அதே போல் விடைத்தாள் வேண்டாமென்று எழுதி அனுப்பி விட்டார்.

சில நாள் கழித்து உணவு இடை வேளையில் நம் பேராசிரியர் J சீரியஸாக உட்கார்ந்து விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தார்.

'எப்டிங்க திருத்துறீங்க .. வேண்டாம்னு சொல்லலையா?' என்றேன்.

 'அட .. ! நாம படிக்கிறதெல்லாம் எதுக்கு அவங்க கிட்ட சொல்லணும்? நான் ஒண்ணும் சொல்லலை; பேப்பர் அனுப்பிட்டாங்க ... திருத்துகிறேன்' என்றேன்.

என்னைவிட என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட நண்பர் ஷேக்குக்கு மிக்க கோபம்.

'ஏங்க .. ரூல்ஸ் அப்டின்னா அதை follow  பண்ண வேண்டாமா?' எனறார்..

'அதெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராதுங்க .. நாம் என்ன இதுன்னால வேற மாதிரியா திருத்தப் போறோம்'.

'ஆனா .. ரூல்ஸ் ..?' என்றேன்.

'அதெல்லாம் பார்க்கக் கூடாதுங்க. எனக்கு காசும் வேணும்ல .. உங்களுக்குத் தேவையில்லாம இருக்கலாம்' என்றார். இது எனக்கு நல்ல கோபத்தைக் கொடுத்தது. ஏனெனில் அவர் வசதியான மனிதர் என்று அங்கு எல்லோருக்கும் தெரியும்.

'நான் கலர் கலரா சட்டை போடலாம். ஆனா .. அன்னாடங்காச்சி'ங்க, நான் உங்களை மாதிரி costlyயான ஆள் கிடையாது' என்றேன்.

'சரி .. சத் சபையில் இருப்பதாகச் சொல்கிறீர்களே .. இப்படிப் பொய் சொல்லி காசு சம்பாதிப்பது தப்பில்லையா?' என்றேன்.

J ரொம்ப கூலாக ஒன்று சொன்னார்: 'அதுக்கும் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு?; அது வேறு .. இது வேறு ..' என்றார்.

அடப்பாவமே!  ஆக, இப்படி ஒரு மனப்பான்மை ! 'சத்' எனறால் சத்யம், எனறு தானே பொருள்!


***

மதங்கள் தான் எங்கள் வாழ்வின் ஒவ்வொன்றிற்கும் போதனை தருகின்றன; அதுவே எங்கள் வேத வாக்கு என்பீர்கள்.  இப்படி சொல்பவர்களுக்கு சொந்த சிந்தனையோ, நல்ல மனதோ, மனசாட்சியோ இருக்காதா? எது சரி எது தவறு என்று நம் மனதிற்குப் புரியாதா? அதன் வழி நம்மால் நடக்க முடியாதா?

இந்த அடிப்படைப் பண்புகளுக்கும் வேத புத்தகங்களைச் சார்ந்திருக்க வேண்டுமென்றால், நீங்கள் நம்பும் உங்கள் கடவுள் கொடுத்த புத்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? யோசிக்க மாட்டீர்களா?

குழந்தை நடக்கும் போது பக்கத்திலிருந்து கைப் பிடித்து பழக்க வேண்டியதுதான். அதற்கும் வாழ்நாளெல்லாம் கைப்பிடித்தா உங்கள் பிள்ளைகளை வளர்க்கிறீர்கள்?

ஒண்ணும் புரியலைங்க ...!

நம்பிக்கையுள்ளவர்கள் தங்கள் வேத நூல்படி நடப்பதால் அவர்கள் மன நிம்மதியோடு இருக்கிறோம்; உங்களால் அப்படியிருக்க முடியுமான்னு ஒரு பதிவர் கேள்வி ஒன்றை காற்றிலே தூக்கியெறிந்தார். அவர் முடிந்தால் (முடியாது என்று தான் நினைக்கிறேன்.) தன் வேதநூல்களைத் தள்ளி வைத்து விட்டு, சாதாரண மனிதனாக, மனித நேயத்தோடும், மனித நியாயங்களோடும் வாழ்க்கையை நடத்திக் காண்பித்தால் அது தரும் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை அவரால் உணர முடியும். முழு மகிழ்ச்சி - நான் மனிதனாகவே இருக்கிறேன் என்ற நினைப்பில் நிச்சயமாகக் கிடைக்கும்; பெருமையாகவும் இருக்கும்.


உங்களின் நியாயமான மனசாட்சி உங்களுக்குக் கற்றுத் தருவதை விடவா மதங்கள் உங்களுக்குப் புதிதாக, மேலாகக் கற்றுத் தரும் என நினைக்கிறீர்கள்!!?? 

அடப் பாவிகளா!! வளரவே போவதில்லையா?

...........................


ஏற்கெனவே எழுதிய பதிவுகளிலிருந்து சில மேற்கோள்கள்:*
மதக் கொள்கைகள் இல்லாத ஒரு சமூகத்தில் நேர்மை மலருமா என்றொரு கேள்வியுண்டு. மத நம்பிக்கையாளர்கள் நம்புவது போல் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. மத நம்பிக்கையாளர்களை விடவும் நம்பிக்கையற்றவர்கள் பல விதங்களில் நேர்மையோடு இருப்பார்கள் என்பது என் எண்ணம். -- பெர்ட்ரன்ட் ரஸ்ஸல்


*
கடவுள் மறுப்பு யாரையும் கெடுதல் செய்ய தூண்டுகிறது என்பதற்கு எவ்வித சிறு ஆதாரம்கூட கிடையாது.

கடவுள் பெயரைச் சொல்லி யுத்தங்கள் நடந்துள்ளன. ஆனால் கடவுள் மறுப்பை வைத்து எந்த யுத்தமும் வந்ததில்லை.-- RICHARD HAWKINS
*
பல நம்பிக்கையாளர்களுக்கு மதங்கள் இல்லாமல் எப்படி ஒருவன் நல்லவனாக இருக்கவோ, அல்லது இருக்கவேண்டுமென்ற நினைவோடு இருக்க முடியுமென நம்புவது மிகவும் கஷ்டம்.


கடவுள் மறுப்பு மட்டுமே அவர்களை நல்லவர்களாக்குகிறது என்பதற்குப் பதிலாக நான் கூறுவது: மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது.  

 Gregory S. Paul என்பவர் Journal of Religion and Society (2005)-ல் 17 வளர்ந்த நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிகமான மத நம்பிக்கையும் கடவுளை முழுவதுமாக நம்பும் நாடுகளில் அதிக அளவிலான மனிதக் கொலைகள், இளமையில் இறப்பு, பாலின வியாதிகள், இளம்வயதில் கர்ப்பமாகுதல், கருக்கலைத்தல் (homicide, juvenile and early mortality, STD infection rates, teen pregnancy, and abortion in the prosperous democracies) மிக அதிகமாக உள்ளன.   --RICHARD DAWKINS

*
14 comments:

ஒசை said...

கடவுள் மறுப்பாளர்களால் எந்த வன்முறையோ, யுத்தமோ நிகழவில்லை தான். ஆனால் கடவுள் மறுப்பு என்பதே வெறியாகும் போது - அது நிகழ்ந்துவிடக்கூடிய ஆபத்தும், வாய்ப்பும் உள்ளது.

தருமி said...

ஓசை,ஆமாம் .. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாதான் என்பது மாதிரியான லாஜிக்!

Vetirmagal said...

சார், பதிவை படித்த பின், தெளிவாக, உண்மையாக எழுதிய , உங்களுக்கு வணக்கம் சொல்ல விழைகிறேன்.

வால்பையன் said...

மலரும் நினைவுகளா? நல்லாத்தான் இருக்குது!

naren said...

ஆசிரியர்கள், மாணவர்கள் இப்படித்தான் நடக்கவேண்டும் என நினைத்ததை, மாணவர்களானவுடன் நடத்தி காண்பித்துவிட்டார்கள். அல்லது மாணவர்கள் அப்படி நடப்பதை பார்த்து, மாணவரென்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நடந்துகொண்டார்களோ.

அந்த காலத்திலும் இந்த மாதிரி கொடுமையா???


////தன் வேதநூல்களைத் தள்ளி வைத்து விட்டு, சாதாரண மனிதனாக, மனித நேயத்தோடும், மனித நியாயங்களோடும் வாழ்க்கையை நடத்திக் காண்பித்தால் அது தரும் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை அவரால் உணர முடியும். முழு மகிழ்ச்சி - நான் மனிதனாகவே இருக்கிறேன் என்ற நினைப்பில் நிச்சயமாகக் கிடைக்கும்; பெருமையாகவும் இருக்கும்./////

இப்போது நடக்கும் பீரங்கி பிரச்சாரங்கள் இதைதானே வேறு வழியில் காண்பிக்க நினைக்கிறார்கள். எங்கள் மதம் மனிதநேயமிக்கது என்று காண்பிக்க அரும்பாடு படுகிறார்கள் புது புது அர்த்தங்களை கற்பிக்கப் படுகின்றன.

hariharan said...

நாத்திகர்களால் இந்த உலகில் எந்த வன்முறை நிகழவேயில்லை. என்பது பெருமைக்குரிய விடயம்.

சித்திரவீதிக்காரன் said...

தங்களுடைய கொள்கைகளுக்கும், வாழ்க்கைக்கும் இடையே அதிக இடைவெளியோடு நிறைய பேர் இப்படி வாழத்தான் செய்கிறார்கள்.

எனக்கு கடவுள்நம்பிக்கை குறித்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், என்னை அதிகக் கோபத்துக்கு உள்ளாக்கும் போது வானத்தைப் பார்த்து திட்டுவது வழக்கம். 'இப்படியே இதெல்லாம் எத்தனைநாள் நடக்கும்?' அப்படி இப்படின்னு மனசார திட்டுன பிறகுதான் நிம்மதியா இருக்கும்.

மனித உரிமைகள் கழகத்துல உள்ள ஒருத்தர் எனக்கு தெரிய அதிகமா மனித உரிமைகளை மீறி செயல்படுவார்.


நாத்திகர்களால் இந்த உலகில் யுத்தம் எதுவும் ஏற்படாது, ஆத்திகர்கள்தான் அடித்துக்கொள்வார்கள் என கமல்ஹாசனும் ஒரு நேர்காணலில் சொன்னார்.

பகிர்விற்கு நன்றி.

தருமி said...

//அதிகக் கோபத்துக்கு உள்ளாக்கும் போது வானத்தைப் பார்த்து திட்டுவது வழக்கம். //

சிம்பு தேவன் படம் பார்த்தீங்களா??!! சாமி வந்திரப் போவுது !!

சார்வாகன் said...

வண்க்கம் அய்யா

ஏன் நாத்திகர்களால் வன்முறை நிகழவில்லை எனில் காரணம் மிக எளிது.

பெரும்பாலான நாத்திகர்கள் பிறர் சொல்வதை ஆய்வு செய்து உண்மையாக் இருக்குமா என்று சரி பார்ப்பதால் இரு நாத்திகர்களுக்கிடையே கருத்து வேறுபாடுதான் அதிகரிக்குமே தவிர கண்மூடித்தனமான் ஒற்றுமை வராது.

ஒவ்வோரு நாத்திகனும் தலைவனே தவிர தொண்டனாக் இருக்க விரும்புவது இல்லை.

பிறகு எப்படி ஒற்றுமையாக் இருந்து இன்னொரு குழுவை அழகிய முறையில் வழி காட்டுவது?

எனினும் ஹிட்லர்,கம்யுனிஸ்டுகளின் செயல்களுக்கு காரணம் நாத்திகம் என்பார் விமர்சகர்கள்.

நாத்திகர் அனைவரும் பரிணாம் ஆதர்வாளர்கள் இல்லை எனினும்.பரிணம் கொள்கை சரியாக இயறகை,சமூக நிகழ்வுகளுக்கு விள்க்கம் அளிப்பதால் அதனை பல் நாத்திகர்கள் ஏற்கின்றனர்.அதன் மூலம் பல் விடயங்கள் எளிதில் சரி தவறு என தீர்க்கப்படுகின்றன்.

ஹிட்லரின் ஆர்ய இன மேட்டிமை என்பது பரிணாம்த்தின் படி த்வறு.

பொது உடமைத் தத்துவமும் பரிணாம்த்தின் படி சரியாக‌ செயல்பட முடியாது!!!

மனிதர்கள் பல்வேறு வகையான் சிந்தனை,தெவைகள் உடையவர்கள்.இவையும் சூழல் பொறுத்து மாறும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார அமைப்பின் கீழ் சர்வ ரோஹ நிவாரணி தீர்வு தர இயலாது.

(கம்யுனிசம் உடபட)மாற்றம் என்பதே மாற்றம் இல்லாதது.

நன்றி

துளசி கோபால் said...

'எப்பொருள் யார்யார்வாய் கேட்கினும்...... ' தாடி சொன்னதை மறக்கலாமா? மெப்பொருளைக் கண்டு அதன்படி நடக்கணும் இல்லையா?

மூணுநாளா தினமும் சத்சங்கம் போய் வரேன். ஸ்ரீ ராம நவமி உத்ஸவம். பெரிய சோஷல் கேதரிங் ஃபிஜி இந்தியர்களுடன்.

நிலநடுக்கம் காரணம் பலர் ஊரைவிட்டுப்போயாச்சு. மற்ற க்ளப், சொஸைட்டிகளும் இதுவரை ஒன்னும் நடத்திக்கலை. அப்ப இதையும் கோட்டைவிட்டால்.... தனியாகப் புலம்ப நேரிடும்:-))))

துளசி கோபால் said...

வெறும் முப்பதே வருசத்தில் இப்படி மாறிட்டீங்களே!!!!!!

நான் அந்த ஃபோட்டோவைச் சொல்றேன்:-))))

தருமி said...

test

ramachandranusha(உஷா) said...

தருமி சார், ஓசை அவர்களின் முதல் கமெண்டை வழி மொழிகிறேன். கடவுள் மறுப்பு என்ற
பெயரில் ( ஐம்பது அறுபதுகளில்?) அராஜகங்கள் பெரியாரின் அடிபொடிகளில் நடந்தது இல்லையா?

//தன் வேதநூல்களைத் தள்ளி வைத்து விட்டு, சாதாரண மனிதனாக, மனித நேயத்தோடும், மனித நியாயங்களோடும் வாழ்க்கையை நடத்திக் காண்பித்தால் அது தரும் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை அவரால் உணர முடியும். முழு மகிழ்ச்சி - நான் மனிதனாகவே இருக்கிறேன் என்ற நினைப்பில் நிச்சயமாகக் கிடைக்கும்; பெருமையாகவும் இருக்கும்// சூப்பர். காப்பிரைட் வெச்சிருக்கீங்களா :-)

J.P Josephine Baba said...

மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது.//// இதில் உடன்பாடில்லை. இவர்களிலும் சில பொல்லாதவர்கள் உண்டு. கடவுளை மறுத்தாலும் சொந்த மனசாட்சிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் மனிதன்

Post a Comment