Friday, August 17, 2012

585. யாருக்கும் ‘அடிபணியாதவன்’ என்ன ஆனான்? – காணாமல் போன நண்பர்கள் ..2

*  ”அதீதம்” இணைய இதழில் 15.8.12 அன்று வெளியான கட்டுரை.*


1953-ல் ..........

முதல் வகுப்பிலிருந்து முதலாண்டு முதுகலை வரை மதுரை தெற்குவாசல் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம். பெரிய குடும்பம்; சின்ன வீடு. இன்னும் இரு குடும்பங்களோடு ஒட்டுக் குடித்தனம். இப்போதைய நிலைக்கு அந்த வீட்டை நினைக்கும் போது அதை ஒரு ’எலிவளை’ என்றுதான் சொல்ல முடியும். எப்படி அங்கே அத்தனை வருஷம் வாழ்ந்தோம் என்று நினைத்தால் இன்றும் ஆச்சரியம். ஆனாலும் இன்றும் பலரும் அதே போன்ற ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இன்னொரு வேதனையான விஷயம். சரி… வீட்டு விஷயம் இன்னொரு தடவை பார்ப்போம்.

ங்கள் வீடு மாதிரியே அண்ணன் தம்பி வீடுகளாய் மூன்று வீடுகள் அடுத்தடுத்து இருக்கும். எங்கள் வீடு கடைசித் தம்பியின் வீடு. எங்கள் வீட்டுக்கு ஒரு புறம் இன்னொரு அண்ணனின் வீடு. அந்த வீட்டிலேயும் எங்கள் வீடு போலவே பல குடிகள். எங்கள் வீட்டு உரிமையாளர்கள் தெலுங்கு பேசுவார்கள். (மீக்கு ஒய்ட்டி ஒய்ட்டி தெலுகு தெலுசு …!) எங்கள் மூன்று வீடுகளை விட்டு விட்டால் மற்ற வீடுகள் ஏறத்தாழ இஸ்லாமியர்களின் வீடுகள்.

நாங்கள் தான் இப்படி அத்தனை காலமாக ஒரே வீட்டில் இருந்தோம். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வீட்டில் இன்னொரு குடித்தனக்காரர்கள் வந்து சேர்ந்தார்கள். என் வயதில் ஒரு பையன். சிகப்பா, ஒல்லியா இருப்பான். பெயர் ஆஸாத். அவனின் அத்தா ரெயில்வேயில் வேலை பார்த்தார். அப்பா, மகன் இருவருமே ரொம்ப சாந்தமானவர்கள். ஆஸாத்தின் அப்பா என்னிடம் அடிக்கடி பேசுவார். ரொம்ப மெல்லிய குரல். சாந்தமாகப் பேசுவார். என் மூலம் என் அப்பாவும் அவரும் நண்பர்களானார்கள்.

ஸாத் ரொம்ப சாஃப்டான பயதான். ஆனால் ’ஆஸாத் ’ என்ற பெயருக்கு அர்த்தம் ‘அடிபணியாதவன்’ அப்டிம்பான். இந்த மாதிரி பெயரையும் அதன் அர்த்தத்தையும் சொல்லும் போது மட்டும் பய கொஞ்சம் முறப்பா காமிச்சுக்குவான். அம்புட்டுதான்! அவன் அப்பாவும் அவனைத் திட்டும் போதெல்லாம் ‘பேரு வச்சதுக்கு ஏத்த மாதிரி ஊருக்கும், வீட்டுக்கும் அடங்காதவனா போய்ட்டான்’ அப்டிம்பார். ஆனால் பய அப்படியெல்லாம் இல்லை. நல்ல பயல். சீக்கிரமே என்னோட நல்ல நண்பனாய்ட்டான்.

ஸாத்துக்கு, எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில், தெற்குவாசலில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்த்தாற்போல் இருந்த அந்தத் தெருவில்  ஒரு நண்பர் இருந்தார். அவர் வயதில் எங்களுக்கெல்லாம் மூத்தவர். அப்போதே பள்ளிப்படிப்பை முடித்து விட்டிருந்தார். ஆஸாத் என்னைச் சிலமுறை அவரைப் பார்க்க்க் கூட்டிப்போனான். எங்களைப் போல் பசங்களை ஒன்று சேர்த்து ஏதோ ஒரு கழகம் ஆரம்பிக்க வேண்டுமென்றார். ஒரு கையெழுத்துப் பிரதி ஆரம்பிக்கலாம் என்றார். நாலைந்து பேர் சேர்ந்து ஏதோ ஒரு பெயரை வைத்தோம். அடுத்த நாளே நான் வீட்டில் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கலர் பென்சில்கள் வைத்து அந்தப் பெயரை ‘அழகாக’ எழுதி, கலரடித்து வைத்திருந்தேன். ஆஸாத் அது ரொம்ப நல்லா இருக்கு. ’வா, பாய்ட்ட காமிப்போம்’ என்றான். நானும் அவனும் அவரைப் பார்க்கப் போனோம். ’நன்றாக இருக்கு .. ஆனா இப்போ கழகம் எல்லாம் வேண்டாம்’னுட்டார். ஒரே சோகமா போச்சு. வரைஞ்சதை உடனே கிழிச்சிப் போட்டுட்டேன்.

ந்த வருஷ கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. இப்போ கடை பூரா அழகழகா செய்த ஸ்டார்கள் எல்லாம் இருக்குமே .. அது மாதிரியெல்லாம் அப்போ கிடையாது. எல்லாம் மூங்கில் குச்சிகள் வைத்து செய்வது தான். அந்த வருஷம் எனக்கு ஸ்டார் செய்யணும்னு ஆசை. ஆஸாத்திடம் சொன்னேன். அவனுக்கு அந்த ‘வித்தை’ தெரியும்னான். இன்னொரு நண்பன் வெங்கட் என்னும் வெங்கடேசன். அவனும் எங்களோடு சேர்ந்துக்கிட்டான்.

கிறிஸ்துமஸுக்கு பத்து நாளைக்கு முன்பே ஒரு நீள மூங்கில் பட்டை ஒன்று விலைக்கு வாங்கினோம். அதை தண்ணீரில் போட்டு பதமாக்கணும் என்றார்கள். எங்கள் வீட்டில் குளிக்கிற இடத்தில் ஒரு ஓரத்தில் போட்டு வைத்தோம். எப்படி போட்டாலும் முழுப்பட்டையும் நனையற வழியைக் காணோம். நாலைந்து நாள் தண்ணீரில் கிடந்தது. பிறகு அதை சீவி, சின்ன துண்டுகளாக ஆக்கினோம். ஆறு குச்சிகளை ஒரே மாதிரி சீவி எடுத்து … அதை ஸ்டார் மாதிரி தரையில் படம வரைந்து … அதன் மேல் இந்தக் குச்சிகளை வைத்து .. ஓரங்களைக் கட்டி … இப்போ ஒரு சைட் ஸ்டார் ரெடி. அதே மாதிரி இன்னொரு ஸ்டார் கட்டி … இரண்டு ஸ்டாரையும் ஒன்றாகக் கட்டி …. அம்மாடி.. உலகமே வெறுத்துப் போச்சு. அதிலேயும் கடைசியாக அந்த இரண்டு ஸ்டாரையும் ஒட்டி ஒட்டிப் பார்த்தோம். என்ன டெக்னிகல் பிரச்சனையோ .. எங்களால் முடியலை. அதைக் கட்டி அதற்கு மேல் கலர் கண்ணாடி பேப்பர் ஒட்டணும். நமக்காகிற வேலையில்லைன்னு பாதியிலேயே உட்டுட்டோம். அதற்குள் நாள் கணக்கா நாங்க மல்லாடுறதைப் பாத்து பெருசுக சண்டைக்கு வந்திருச்சிங்க … வழக்கமா இருக்கிற பல்லவிதான் ..’படிக்கிற வழியக் காணோம் .. அதுக்குள்ள என்ன ஸ்டாரு’ அப்டின்னு கோவிச்சிக்கிட்டாங்க. கிறிஸ்துமஸுக்கு முன்னால வேற ’அரைப் பரிட்சை’ வந்திரும். அதைப் படிக்கப் போங்கன்னு விரட்டி விட்டுட்டாங்க. ஆனா எங்க மூணு பேருக்கும் ஒரு ட்ரெய்னிங் கிடச்சிப் போச்சு. அதனால் எப்படியும் அடுத்த வருஷம் கட்டாயம் நல்ல ஒரு ஸ்டார் செஞ்சிரலாம்னு ஒரு நம்பிக்கையோடு எங்க ‘ஸ்டார் ப்ரோஜெக்ட்’டை சோகமாக நிறுத்திட்டோம். அதிலும் ஒரு சின்ன சோகம் அடுத்த வருஷம் வந்தது.

ஸாத் வேறு பள்ளியில் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். என் அப்பா தூய மரியன்னை பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்காள். (அப்போ மதுரையில் அது தான் பெரிய்ய்ய பள்ளி. அதனோடு அப்போது S.S.L.C. தேர்வுகளில் போட்டியிடுவது இன்னும் ஒரே ஒரு பள்ளிக்கூடம் தான். செளராஷ்ட்ரா பள்ளி.) நான் ஆஸாத்திடம் சொல்லி, ஆஸாத் அவங்க அத்தாட்ட சொல்லி, அவர் எங்க அப்பாட்ட சொல்லி … ஆஸாத் ஆறாம் வகுப்பிற்கு எங்கள் பள்ளிக்கே, எனது செக்‌ஷனுக்கே வந்திர்ரது என முடிவு செஞ்சிருந்தோம்.

னா அடுத்த வருஷம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே அவங்க அத்தாவுக்கு செங்கோட்டைக்கு ட்ரான்ஸ்பர் வந்திருச்சி. திடீர்னு அப்படியே உட்டுட்டுப் போய்ட்டான்.

நான் சொந்த ஊருக்குச் செல்லும் போது ரயிலில் போகும்போது தென்காசி வழியாகப் போவோம். அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை என்னும் சொல்லும் போதெல்லாம் எனக்கு ஆஸாத் ஞாபகம் வரும். ஆனால் அவன் மதுரையை விட்டுப் போன பின் நான் அவனைப் பார்க்கவேயில்லை. அந்த கிறிஸ்துமஸுக்குப் பிறகு நானும் வெஙகட்டும் நாலைந்து தடவை ஸ்டார் சேர்ந்து செஞ்சோம். அப்போவெல்லாம் கட்டாயமா ஆஸாத்தை ஞாபகம் வச்சிக்கிட்டதுண்டு. இப்பவும் கூட கிறிஸ்துமஸ் ஸ்டார் வீட்ல கட்டும்போது முதலில் நாங்க செஞ்ச, செய்ய முனைந்த  ஸ்டார் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் பல முறை ஆஸாத்தை நினைத்திருக்கிறேன்.


 *
 

14 comments:

ப.கந்தசாமி said...

உருக்கமான பால்ய நினைவுகள். ஞாபகம் வரும்போதெல்லாம் மனது வலிக்கும்.

kaialavuman said...

நம் வாழ்க்கையில் அவ்வப்பொழுது இது போல சிலர் மற்க்க முடியாதபடி வந்து திடீரென காணாமல் போய் விடுகிறார்கள். அதிலும் பதின்ம வயதில் இது அதிகமாக இருக்கும். தொடர்ந்த தொடர்ப்பு என்பது ஒரு சில நண்பர்களிடம் தான் தொடர்கிறது.

மறந்து போன அல்லது காணாமல் போன சில நண்பர்களை நினைக்க வைக்கிறது தங்கள் பதிவு.

நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...

நண்பனின் ஞாபகம் வந்தது...

ராமலக்ஷ்மி said...

ஸ்டார் ப்ராஜெக்ட் மாதிரி சிறுவயதில் சின்சியராக முயன்ற விஷயங்கள்தாம் எத்தனை? அருமையான நினைவலைகள். தொடருங்கள்.

கோமதி அரசு said...

நீங்கள் கிறிஸ்துமஸுக்கு செய்கிற மாதிரி என் அண்ணன் சிறு வயதில் ஜனவரி முத்ல் தேதி புது வருடத்திற்கு ஸ்டார் செய்வார் மூங்கில் குச்சி வார்னிஸ் பேப்பர் வைத்து ஜிகினாகம்பிகள் வைத்து குஞ்சம் எல்லாம் தொங்கவிடுவார். அதை பொங்கலுக்கு மாற்றங்கள் செய்து தொங்க விடுவார்.

என் சிறு வயது மலரும் நினைவுகள் வந்து விட்டது உங்கள் பதிவை படித்தவுடன்.
உங்கள் பதிவு சிறு வயது தோழிகள் இப்போது எங்கே எப்படி இருக்கிறார்கள் என என்னை நினைக்க வைத்து விட்டது.
அருமையான பதிவு.
அதீதம் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

தருமி said...

கோமதி அரசு,

//உங்கள் பதிவு சிறு வயது தோழிகள் இப்போது எங்கே எப்படி இருக்கிறார்கள் என என்னை நினைக்க வைத்து விட்டது.//

எனக்குத் தோழிகள் இல்லை; உங்களுக்குத் தோழர்கள் இல்லை! இது நியாயமான்னு தெரியலை!!!

தருமி said...

பழனி.கந்தசாமி
வெங்கட ஸ்ரீநிவாசன்
திண்டுக்கல் தனபாலன்
ராமலக்ஷ்மி

.................நன்றி

Avargal Unmaigal said...

உங்களின் மலரும் நினைவுகள் நன்றாக இருக்கிறது

வேறு வேறு மதத்தவர்களாக நாம் இருந்தாலும் மிகவும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வந்தோம் மற்ற மதத்தவர்கள் வீட்டில் உண்டு உறங்கி விளையாடி வந்தோம் ஆனால் இப்போது வளர்ந்துவிட்ட நாம் என் மதம் பெரியது உன் மதம் பெரியது என்று இணையதளத்தில் அடிதடி நடத்தி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம் அதை பார்க்க வெட்கமாக இருக்கிறது.

தருமி said...

Avargal Unmaigal

கொஞ்சம் வெட்கம்; நிறைய வேதனை!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Old memories always give happiness.நம் வாழ்க்கையில் அவ்வப்பொழுது இது போல சிலர் மற்க்க முடியாதபடி வந்து திடீரென காணாமல் போய் விடுகிறார்கள்.True.But they leave a deep vacuum in one's life.
karthik+amma

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Old memories always give happiness.நம் வாழ்க்கையில் அவ்வப்பொழுது இது போல சிலர் மற்க்க முடியாதபடி வந்து திடீரென காணாமல் போய் விடுகிறார்கள்.True.But they leave a deep vacuum in one's life.
karthik+amma

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

// வேறு வேறு மதத்தவர்களாக நாம் இருந்தாலும் மிகவும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வந்தோம் மற்ற மதத்தவர்கள் வீட்டில் உண்டு உறங்கி விளையாடி வந்தோம் ஆனால் இப்போது வளர்ந்துவிட்ட நாம் என் மதம் பெரியது உன் மதம் பெரியது என்று அடிதடி நடத்தி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம் //
Exactly.A very sad thing.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

/ வேறு வேறு மதத்தவர்களாக நாம் இருந்தாலும் மிகவும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வந்தோம் மற்ற மதத்தவர்கள் வீட்டில் உண்டு உறங்கி விளையாடி வந்தோம் ஆனால் இப்போது வளர்ந்துவிட்ட நாம் என் மதம் பெரியது உன் மதம் பெரியது என்று அடிதடி நடத்தி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம் //
Exactly.A very sad thing.

தருமி said...

கார்த்திக்+அம்மா,

........நன்றி

Post a Comment