Monday, December 30, 2013

702. வித்தியாசமான ஒரு இரவு





*


பழைய மாணவர்களுக்கும் வயசாகிக் கொண்டே போகிறது. நட்பு மட்டும் இளமையோடு இன்னும் இருப்பது ஆச்சரியமும், மகிழ்ச்சியும் தருகிறது. சென்னைக்கு சமீபத்தில் ஒரு வாரம் போனேன். (மாணவ) நண்பன் வீட்டுக்கும் போனேன். பழைய கதைகள் – எத்தனை முறை பேசினாலும் அலுக்காத, முப்பது ஆண்டுகளுக்கு முன்பான கதைகள் – நிறைய பேசினோம். அவனது குடும்பம், நண்பர்கள் என்று பலரிடமும் கதைகள் அரங்கேறின. புதிய கதைகள் எல்லாம் சேர்ந்தன.

அடுத்த நாள் மாலை ஒரு நண்பர் வீட்டிற்குப் போகிறேன்; நீங்களும் வாருங்கள் என்றான். சரி என்று உடன் போனேன். அவனது நண்பர் வீட்டிற்குள் நுழையும் போது, அந்த வீடு ‘அழகு வீடுகள்’ என்ற போட்டியில் பரிசு பெற்றது என்றான். வெளியில் இருந்து பார்க்கும் போதே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பரிசுக்குக் காரணம் வீட்டுக்காரரா அல்லது கட்டிட அமைப்பாளரா என்று கேட்டேன். இரண்டு பேரும் இல்லை; வீட்டுக்காரம்மா தான் காரணம் என்றான்.

வீட்டுக்குள் நுழைந்தோம். வரவேற்பறையில் சில நிமிடங்கள் மட்டும் இருந்தோம். அங்கே மாட்டியிருந்த படங்கள்; ஜன்னல்களின் கண்ணாடிகள் என்று அங்கங்கு அழகு தெரிந்தது. முதலில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடத்திற்குப் போவோம் என்று வீட்டின் அடுத்த பக்கம் இருந்த ஒரு அறைக்குச் சென்றோம். பெரிய அறை. ஒரு பக்கம் சுவர் முழுவதும் வெள்ளித் திரை இடம் பிடித்திருந்தது. அதன் முன்னால் என்னென்னவோ சைஸ்களில் பல வித speakers வரிசை கட்டி நின்றன. இருக்கைகள் மூன்றடுக்கில் – gallery style – பனிரெண்டு, பதினைந்து பேர் அமர்வது போல் மிக வசதியான இருக்கைகள். முதல் வரிசையில் அமர்ந்தேன். வீட்டுக்காரர் இரண்டாவது, அல்லது மூன்றாவது வரிசைக்கு வாருங்கள் என்றார். இரண்டாவது வரிசையில் அமர்ந்தேன். ஆஹா ... சோபா என்னை விழுங்கி விட்டது. அதை ரசித்துக் கொண்டிருக்கும்போதே அழகாக மெல்லியதாக முன்னும் பின்னும் ஆடியது. ரசனை தான்!

ஒரு படம் போட்டார்கள். படம் பார்க்க நேரம் இல்லை; இரண்டு மூன்று பாட்டு மட்டும் கேட்போம் என்றான் நண்பன். எந்தப் பாட்டு என்றார்கள். 70-80 ராஜா என்றேன். இரண்டே பாட்டு வைத்துக் கேட்டோம். ‘நதியில் ஆடும் பூவனம் ...’ என்ற பாட்டும், ‘பூவில் வண்டு கூடும் கண்டு...’ (காதல் ஓவியம்) என்ற பாட்டுகள் ஒலித்தன. அது வேறு ஒரு உலகத்திற்கு நம்மைக் கடத்தின. கேட்கும் போதே மனதிற்குள் ஒரு விகசிப்பு வந்ததென்னவோ உண்மை; ம்ம்.. அது அந்தக் காலம்! மூன்று ராஜாக்களின் காலம்!

கதவைத் திறந்து உள்ளே போனதும் ஒரு பொதுவிடம். அதிலிருந்து மூன்று வெவ்வேறு பாதைகள். ஓரத்தில் ஒரு அழகான தூண். அந்த தூணிற்கும் சுவற்றிற்கும் நடுவில் ஒன்றரை அடி அகலம், ஒன்றரை அடி உயரத்திற்கு ஒரு smiling Budha. பள பளவென்று பச்சைக் கிறிஸ்டலில் நம்மைப் பார்த்துச் சிரித்தார். அங்கிருந்து ஒரு மாடிப்படி; இன்னொரு பக்கம் ஒரு சுவாமி அறை. அந்த அறையைப் பார்க்கவில்லை; ஆனால் அதன் கதவும், உயரமும் வித்தியாசமாக இருந்தன.

அடுத்து சாப்பாட்டறைக்குள் நுழைந்தோம். நிறைய வித்தியாசமான பெரிய அறை. நாம் உட்கார உயயயர ஸ்டூல். பளிங்கு மேடை. மேடையின் அந்தப் பக்கம் என்னென்னவோ சாப்பாடு காத்திருந்தது – நடப்பன, பறப்பன, நீந்துவன, முளைப்பன …. இன்னும் இரு நண்பர்கள் இணைந்தார்கள். ஒருவர் மருத்துவர். அழகியல் மருத்துவர். இன்னொருவர் திரைப்பட இயக்குனர் – பெயர்களெல்லாம் இங்கு எதற்கு? வீட்டுக்காரர் ஒரு படத் தயாரிப்பாளர் ஆகிக்கொண்டிருக்கிறார். தயாராக இருந்த படக் கதையை முந்திய நாளே நண்பனின் வீட்டிலேயே வாசித்திருந்தேன். அந்த இயக்குனரிடம் சிறிது பேசிக்கொண்டிருந்தோம். மருத்துவர் எடுத்த ஒரு செய்திப் படத்தையும் பார்த்தோம். அதை மறு பரிசீலனை செய்வது, நீளத்தைக் குறைப்பது பற்றி விவாதித்தார்கள். எனக்கு எல்லாம் புதியதாக இருந்தது – ’பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல்’ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குனரும், மருத்துவரும் விடை பெற்றுப் போனார்கள்.

 மணி பதினொன்றைத் தாண்டி விட்டது. வீட்டின் மேல் மாடிக்குச் சென்றோம். படியின் முடிவு இருட்டாக இருப்பது போலிருந்தது. பாதிப் படிகள் தாண்டியதும் மேலே இருந்த விளக்கு தானாகவே பளிச்சானது! – light sensitive lights! மெத்தை ஏறியதும் அடுத்து இரு விளக்குகள் இதைப் போல் பளிச்சிட்டன. இரு அறைகள்; ஒன்றோடு ஒன்று நெருங்கி, ஆனால் தனித் தனியாக இருந்தன. ஒரு அறைக்குள் நுழைந்தோம். பாடகர் குழுவிற்கான இடம். மைக், அது இது என்று பல இருந்தன.

அடுத்த அறைக்குப் போனோம். அது ஒரு tech-room. அறையின் சுவர்கள் முழுவதையும் அடைத்துக் கொண்டு பெரிய பெரிய speakers. அனேகமாக ஒவ்வொரு speaker-ம் நாலடி நீளம் இரண்டடி அகலம் இருக்குமென நினைக்கிறேன்.
amplifiers






வகை வகையாக amplifiers; அறையின் நடுவில் voice mixing machine என்று நினைக்கிறேன். அதுவும் பெரியதாக நின்றது ... இல்லை ..
 படுத்திருந்தது.





கதவுகளுக்குப் பின்னால் இருந்த “ஒலி முழுங்கிகள்” ..!




அஷ்வினின் அமெரிக்கப் பட்டச் சான்றிதழ்




அம்புட்டு பெருசு! கதவுகளின் பின்னாலும், எதிர்ப் புறத்திலும் சில ஒலி முழுங்கிகள் நின்றன. நல்ல acoustic system.  அதன் தலைக்கு மேலே, அடுத்த அறையில் நடப்பதைப் பார்ப்பது போல் ஒரு பெரிய டி.வி.ஸ்க்ரீன். இரண்டு அறையும் ஒலி, ஒளித்தொடர்போடு இருந்தன.

இவ்வளவு எல்லாம் எதற்கு! அங்கு இரு நாற்காலிகள் இருந்தன. இரண்டுமே hi-tech chairs போலும். பார்க்கவே வித்தியாசமாக இருந்தன. எவ்வளவு நேரம் இருந்தாலும் பிரச்சனை தராத நாற்காலிகளாம். நமக்கும் ஒண்ணு இருந்தால் பதிவுகள் நிறைய போடலாமோவென நினைத்தேன்...!

தயாரிப்பாளரின் மகன் அஷ்வின் அமெரிக்கா போய் இசைக் கல்லூரியில் பட்டம் பெற்ற பையன். சின்னப் பையன் தான். ஆனால் தொழிலில் கெட்டி என்றான் நண்பன். இந்த ரிக்கார்டிங் தியேட்டர் மாதிரி சென்னையில் மட்டுமல்ல; வேறு எங்கேயும் இருக்காது என்றார்கள். தயாரிப்பாளர் பையன் அமெரிக்காவில் படித்து முடித்ததும், அங்கேயே ஸ்டூடியோ அமையப் போகும் அறையின் அளவு என்று எல்லாம் சொல்லி அதற்காகவே அங்கிருந்து எல்லாக் கருவிகளையும் வாங்கி வந்தேன் என்று தயாரிப்பாளர் சொன்னார். அந்த இரு அறைகளிலும் மொத்தம் இரண்டு கோடிக்கு மேல் பணம் கொட்டிக் கிடப்பதாகச் சொன்னார்கள்.

 நண்பன் அந்தப் படத்திற்காக ஒரு பாட்டெழுதிக் கொடுத்திருந்தான். அதில் ஒரு பகுதிக்கு மட்டும் அஷ்வின் இசை அமைத்திருந்தார். அதைப் போட்டுக் காண்பித்தார்கள். அந்தப் பாடலின் நடுவில் ஒரு இசைக்கோர்ப்பை சேர்க்க அன்று முயற்சி எடுத்தார்கள். அடுத்த அறையில் ஒருவர் டிரம் ஒன்றை வாசித்தார் – தட்டையாக இருக்குமே ... அந்த டிரம். இஸ்லாமியப் பாடகர்கள் கையில் வைத்து வாசிப்பார்களே அந்த ட்ரம்.

(அதைப் பார்த்ததும் ப்ழைய ஞாபகம் ஒன்று வந்தது. இந்த நண்பன் மாணவனாக இருந்த போது அவனது வகுப்போடு உல்லாசப் பயணம் ஒன்றிற்குச் சென்றோம்.  ரயிலில் சென்று கொண்டிருந்தோம். இளம் இரவு. இரு பக்கத்திலிருந்த மக்களின் உத்தரவு பெற்று பாட்டு, ஆட்டம் என்று தொடங்கினோம். அப்போது இந்த நண்பன் நன்றாகப் பாடுவான். கையில் ஒரு டோலக் ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தான். நன்றாக இருந்தது. ‘நேயர் விருப்பத்தின்படி’ இரண்டாம் பாட்டு பாடிக் கொண்டு இருந்தான். அப்போது தள்ளியிருந்த இடத்தில் இருந்து ஒருவர் எழுந்து வேகமாக எங்களை நோக்கி வந்தார். தகராறு வருமோ என்று பயந்து கொண்டிருந்தேன். வந்தவர் இவன் கையிலிருந்த டோலக்கை வாங்கி வைத்துக் கொண்டு, ‘நீங்க பாடுங்க தம்பி, நான் தாளம் போடுகிறேன்’ என்றார். இவன் பாட ... அவர் தாளமிட ... அடேயப்பா ... இருவரும் சேர்ந்து பின்னி விட்டார்கள். நல்ல ஒரு கச்சேரி. அந்த நினைவு மீண்டும் இப்போது நினைவுக்கு வந்தது).

இப்போது விட்ட இடத்திலிருந்து தொடருவோம் ... நண்பனும், அஷ்வினும் அவருக்குத் தங்கள் தேவையைச் சொல்ல அவர் அதை இசைக்க ... எல்லாம் கணினியில் ஏற ... பின் அதனை ஓட விட்டு ... சிலச் சில மாற்றங்கள் செய்து ... இசைத் தொழில் தொடர்ந்து கொண்டிருந்தது. (நான் பக்க ... பக்க .. என்று பேய் விழியோடு முழித்துக் கொண்டிருந்தேன்!) ட்ரம்மில் அவர்கள் எதிர்பார்த்த இசை வரவில்லை. சரி வேறு கருவி வைத்து அதைப் பின்னால் சேர்க்கலாம் என்றதும், அடுத்த அறையில் இருந்த இசைக்காரருக்கு அது ஒரு சவால் மாதிரியானது. உடனே கைகளால் வாசித்துக் கொண்டிருந்த ட்ரம்மை அகற்றி விட்டு, வாயில் கை வைத்து அடித்து பல இசைத் தாளங்களைக் கொண்டு வந்தார். அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தனர்.

நண்பன் rhythm போட்டு முடிச்சாச்சு ... இனி tempo .. melody சேர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். நல்லது, நடக்கட்டும் என்று பார்த்திருந்தேன். நடப்பவை எல்லாம் பெரும் புதியவைகளாக எனக்குத் தெரிந்தன. அது சரி ... என்றைக்கு இது மாதிரியான நிஜ home theatre, musical composition எல்லாம் live-ஆக பார்க்க முடியும்?

அந்த இரவு வித்தியாசமான, பல அனுபவங்கள் தந்த இரவாக இருந்தது.

வீடு திரும்பும் போது இரவு முடிந்து, பகல் வெளிச்சம் மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.




*



 

Thursday, December 19, 2013

701. தருமி பக்கம் (11) - அந்தக் காலத்தில ....




 *



அந்தக் காலத்தில ....
* இரண்டரை வயதிலிருந்து ஐந்து வயதில் மதுரை வந்து பள்ளியில் சேரும் வரை வாழ்க்கை காசியாபுரத்தில் அப்பம்மா, அத்தைமார்கள், சித்தி இவர்கள் அணைப்பில் வாழ்க்கை ஓடியது. அதனால் தானோ என்னவோ போன பதிவில் சொன்னது போல் பாட்டையா வீட்டின் ஒவ்வொரு பகுதியும் வாழ்வோடு இணைந்த பகுதிகளாக மாறி விட்டன. நினைத்து பார்த்தால் காலையில் எழுந்ததும் என்னைப் பல் விளக்க ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சியிலிருந்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. அதென்னவோ அந்தக் காலத்திலிருந்து இன்று வரை காலையில் படுக்கையில் இருந்து எழுந்து வர மனசே வருவதில்லை. இப்பவே இப்டின்னா ... அப்போ எப்படி இருந்திருக்கும்.

பெருசுக கஷ்டப்பட்டு எழுப்பி பல் விளக்க பெரும் முயற்சி எடுக்கணும். நான் சொன்ன சமையலறை பக்கத்தில் இருக்கும் திண்ணை இருக்கிறதே .. அதில் இரண்டு கல் தூண்கள் இருக்கும். லேசான செவலைக் கலரில் சுரசுரப்புடன் இருக்கும் இரு தூண்கள். ஒன்று ஆட்டு உரல் பக்கம் ஒதுங்கி இருக்கும். இன்னொன்று எல்லோரும் புழங்கும் இடத்தில் இருக்கும். தூணின் அடிப்பகுதி ஒரு சதுரக் கல். அதன் மேல் இந்தத் தூண். அதனால் சதுரக்கல்லின் நாலு பக்கமும் கொஞ்சம் முக்கோண வடிவத்தில் free space இருக்கும். அது தான் எல்லோருக்கும் பல் விளக்க சாம்பல் வைக்கும் இடம்.

அதில் எனக்குப் பிடித்த வழக்கமான பக்கத்தில் போய் உட்கார்ந்து விடுவேன். இந்த இடத்தில் இருந்தால் தான் உட்கார்ந்து கொண்டே மெல்லப் பல் விளக்க முடியும். பல் விளக்க உட்காரும் அந்த வேளையில் சமையல் கட்டின் தென்கிழக்கு மூலையில் அப்பம்மா உட்கார்ந்து ஒரு பெரிய மண்பானையில் மோர் கடைவார்கள். மத்து நீளமாக இருக்கும். காலை நீட்டி வைத்து அதில் மத்தை எப்படியோ உருட்டி அப்பம்மா கடைவார்கள். கடையும் ஒலி சீராக வரும். (இன்னும் காதில் கேட்கிறது!)  நான் பல் விளக்குவதற்கு அந்த சத்தம் ஒரு BGM மாதிரி இருக்கும்.

அப்பம்மா மோர் கடைவது பற்றிச் சொன்னேனா ... முதலில் அந்த மோர்ப்பானை அம்புட்டு பெருசா இருக்கும். மதுரை வந்த பின் விடுமுறைக்கு ஊருக்கு வருவோமா அப்போது பார்த்த போது, அந்தப் பானையின் அளவு கொஞ்சம் கொஞ்சமா சிறிதாகிக் கொண்டே வந்தது. பானை சிறிதானது. சின்னப் பானை போய் கலயம் வந்தது. மோர் கடைவது நின்று போச்சு. நான் கல்லூரிக்குப் போன பிறகு நிலைமை மோசமாகப் போனது. கலயம் போய் செம்பில் பால் மட்டும் இருந்தது. கொஞ்ச நாளில் பால் வாங்க ஆரம்பித்தார்கள். எனக்கு தயிர், மோர், நெய் எல்லாம் பிடிக்குமா. பாவமாக இருக்கும். அப்பம்மா பக்கத்து வீட்டில் போய் மோர் வாங்கி வருவார்கள். நெய் இப்போது சாப்பிடுவதில்லை என்று அப்பம்மாவிடம் பொய் சொல்லி விட்டேன்.

அடடா ... தொழுவத்தைப் பற்றிச் சொல்லவேயில்லையே. வீட்டிலிருந்து சிறிது தள்ளி பள்ளிக்கும் போகும் வழியில் தொழுவம் இருக்கும். காளை மாட்டுக்கும், பசு மாடுகளுக்கும், எருமை மாடுகளுக்கும் என்று தனித் தனி இடங்கள். இன்னொரு மூலையில் குப்பை கூளமாக பெரிதாகக் கிடக்கும். இந்தத் தொழுவத்தோடு பார்த்தால், மதுரையில் இருந்த வீடு தொழுவத்தில் நாலில் ஒரு பங்காகத்தான் இருக்கும். நிறைய மாடுகள் இருந்தன. பானையும் பெரியதாக இருந்தது. மாடுகள் குறைய பானையும் சிறிதாகி, மாடுகளும் இல்லாமல் ஆகி, கடைசியில் பால் கடையில் வாங்கும் நிலைக்குப் போய் விட்டது. மெத்தையில் நெல் குதிர் சிறுத்து, இல்லாமல் போனதும், பால் பானை மறைந்ததும் எனக்குச் சோகமான விஷயங்களாக இருந்தன. காலம் அப்படி மாறிப் போனது.

பல் விளக்கி முடித்ததும் மோர் ஊற்றி சோறு தருவார்கள். நன்றாகப் பிசைந்து தயிரும் மோரும் கலந்து கும்பாவில் தருவார்கள். அந்தப் பித்தளைக் கும்பாவில் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். என்னமா .. விஞ்ஞான ரீதியாக அப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்! சாப்பிடுவது நீராகாரம். சிந்தாமல் சிதறாமல் அதைக் குடித்துக் கொண்டே சாப்பிட என்ன வசதி ..! வளர்ந்த பிறகு அங்கிருந்து கும்பா ஒன்றை மதுரைக்கு எடுத்து வர நினைத்தேன். கடைசி வரை செய்யவில்லை. கடைசியில் ஒரு தடவை கேட்ட போது, ‘அட போய்யா .. கும்பாவெல்லாம் எப்பவோ போயிரிச்சே..!’ அப்டின்னுட்டாங்க.

 பல் விளக்கி முடித்ததும் அடுத்தது பள்ளிக்கூடம் தான். என் காலைச் சாப்பாடு முடிகிறதோ இல்லையோ, அல்லது அதற்கு முன்பே அப்பம்மாவும், சித்தியும் காட்டு வேலைக்குப் போய் விடுவார்கள். இரண்டு அத்தைகள் .. அதன் பின் ஒரு அத்தை வீட்டில் இருந்தார்கள். பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார் – ஜோசப் ஆரம்பப் பள்ளி. அப்போவெல்லாம் பள்ளிக்கூடங்கள் நடத்துவது காசு பார்க்க அல்ல! உண்மையிலேயே அப்போது அது ஒரு சேவை தான்.

என்னோடு சின்ன அத்தைகள் இருவரும்
எங்கள் கிராமத்திற்கு வரும் வழியில் நல்லூர் என்ற ஊர். கொஞ்சம் பெரிய ஊர். அதோடு பல ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி, அதில் வேலை பார்க்கும் ஆசிரியர் குடும்பங்கள், பெரிய கோவில் ஒன்று – ஊர் கொஞ்சம் தட புடலாகத்தான் இருக்கும். படிச்சவங்க நிறைய பேர் அங்கே. ஆனால் எங்கள் ஊரில் அப்படியெல்லாம் இல்லை. அந்த ஊரில் இருந்த கிறித்துவர்கள் பிரிவினைக் கிறித்துவர்கள் – protestants. எங்கள் ஊரில் சின்ன எண்ணிக்கையில் இருந்த கிறித்துவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள். எங்கள் வீடு, பெரிய பாட்டையா வீடு. இந்த இருவர் வீடு மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் நிலையில் அன்று இருந்தவர்கள். மற்ற சில குடும்பங்கள் அப்படியில்லை. அதனால் கோவில் என்று ஒன்றும் கிடையாது. ஆகவே பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் -cum - கோவில் ஒன்று ஆரம்பித்தார். வீட்டில் படிக்கும் பெண்கள் வேலை பார்த்துக் கொள்ளலாமே என்ற ஏற்பாடு. பள்ளிக்கூடத்தையே தேவை இருக்கும்போது கோவிலாக மாற்றிக் கொள்ளலாமே என்று அதையே பள்ளியும் கோவிலாகவும் வைத்துக் கொண்டார்கள்.

மொத்தம் எனக்கு நான்கு அத்தைகள். அனைவரும் படித்து விட்டு, அப்பள்ளியில் தொடர்ந்து, ஆள் மாற்றி மாற்றி அங்கு வேலை பார்த்தார்கள். என்னைத் தனியாக வீட்டில் விட்டு விட்டா போக முடியும். அதனால் இரண்டரை,  மூன்று வயதிலேயே அத்தைமார்கள் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்.

”படிப்பாளி” !!!




 
ரொம்ப சின்ன வயதிலேயே பள்ளிகூடம் போக ஆரம்பித்ததால் தானோ என்னவோ, படிப்பு வராத படு மக்காகிப் போய் விட்டேன் போலும்!




*

Saturday, December 07, 2013

700. மொழியாக்கத்தில் அடுத்த நூல் -- அசோகர்





*

முதன் முதலாக ஒரு நவீனத்தை மொழி மாற்றம் செய்து பதிப்பித்தது ஒரு பெரும் புது அனுபவமாக இருந்தது. அந்த ‘ஒரே நூலுக்கு இரு பரிசுகள்’ பெற்றது என்னை வானத்துக்குத் தூக்கிச் சென்றது என்று சொன்னால் அது முழு உண்மை. கொஞ்சம் நாள் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன். ஏற்கெனவே நானாக ஒரு நூலை  எடுத்து பெரும்பாகத்தை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது அந்நவீனம் பதிப்பாக வெளி வந்து விட்டது. ஆர்வத்தோடு ஆரம்பித்த முதல் முயற்சி இப்படியானதே என்ற சோகத்தை அமினா தான் குணப்படுத்தியது. 

அமினா ‘வெற்றி’ பெற்றதும். ‘ஆஹா ... இனி மொழி பெயர்ப்பு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்’ என்று வானத்தைப் பார்த்து நின்றேன். வானம் பொய்த்து வரண்டு போய் இருந்தது. சோகத்தில் நின்றேன். அப்போது அடுத்த வாய்ப்பு வந்தது.

இம்முறை வந்தது ஒரு நவீனமல்ல. வரலாற்று நூல். படிக்கிற காலத்தில் வரலாறு கொஞ்சம் அல்ல; நிறையவே உதைத்தது. வரலாற்று நிகழ்வுகளை ஆண்டுகளோடு நினைவு வைத்திருப்பது எனக்கு எளிதாகவா இருக்கும்! முதல் முறையாக இந்த நூலை வாசிக்கும் போது Robert Ludlum என்ற ஆங்கில ஆசிரியர் நினைவுக்கு வந்தார். நம்மூர் ‘கஜினி’யின் மூலமான The Bourne Identity என்ற நூலின் ஆசிரியர். இவரது கதைகளை முன்பொரு காலத்தில் நிறைய வாசித்திருக்கிறேன். இவரது கதைகளின் முதல் எழுபது, எண்பது பக்கங்களுக்கு கதை ஒன்றுமே புரியாது. பல ’நூல்கள்’ அங்கங்கே ஆரம்பிக்கும். ஏறத்தாழ எண்பது பக்கங்களுக்கு மேல் ‘நூல்கள்’ எல்லாம் ஒன்று சேர்ந்து, திரிந்து ஒரு கதையாக உருவெடுக்கும். இதே கதை தான் இங்கே. 20 x 20 மேட்ச் நடக்கும் தில்லியின் கிரிக்கெட் கிரவுண்டில் நூல்  ஆரம்பித்து. முகமது கோரிக்குப் போய், அவரைத் தாண்டி அலெக்சாண்டருக்குப் போய் ... வரலாற்றை அழகாக rewind  போய், அதன் பின் வேகமாக் forward செய்து இன்றைய நிலைக்கு வருகிறார். புத்த மதமும், அதை வேரூன்றச் செய்த பெருமன்னன் அசோகரும் ஆச்சரியமாகக் கண்முன் விரிகிறார்கள். வாசிக்கவும், வாசித்த பின் மொழியாக்கம் செய்யவும் மிகவும் நன்றாக இருந்தது. ஆனாலும் ஒரு நவீனத்தை மொழி பெயர்ப்பது போல், இந்த நூல் எளிதாக இல்லை. சிரமம் அதிகம் தான். அதனால் மொழி பெயர்க்க எடுத்த நேரமும் அதிகம்.

ஒரு வழியாக மொழி பெயர்ப்பு முடியும் தருவாயில் அந்த நூலின் ஆசிரியரே இங்கிலாந்திலிருந்து, இந்தியாவிற்கு, அதுவும் மதுரைக்கு வருகிறார் என்ற தகவல் கிடைத்தது. சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது. என்னை விட நாலு வயது சீனியர்! உடல் நலக் குறைபாடுகள் என்றான பின்பும், மருத்துவத்திற்குப் பிறகு நாடு கடந்து நாடு வந்து, அடுத்த  நூலுக்கு தயாராகும் அவரைப் பார்க்கும்

CHARLES  ALLEN

போது எனக்குக்  கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரைப் பற்றி ஏற்கெனவே இணையத்தில் பார்த்து விட்டுச் சென்றிருந்தேன். ஆங்கிலோ-இந்தியர். ஆனாலும் இப்போது இங்கிலாந்து சென்று விட்டார். பல நூல்களின் ஆசிரியர். கடைசியாக - சென்ற ஆண்டு, 2012-ல் - எழுதிய நூலைத்தான் நான் மொழி பெயர்த்துள்ளேன். நூல்: ASHOKA; THE SEARCH FOR INDIA'S LOST EMPEROR.. நானூறு பக்கங்களைத் தாண்டிய நூல். மிக அதிகமான

ஆதாரங்களை வைத்து தன் நூலைப் படைத்துள்ளார். மிக மிக அழகான படங்கள். எப்படி அந்தக் காலத்தில் எடுத்த படங்கள் இவ்வளவு அழகு என்று தோன்றும் கலைப் பொக்கிஷங்கள்.

நூலின் போக்கில், நன்கு சிலரை இடித்துரைக்கிறார். கலைப் பொக்கிஷங்களையும், கோவில்களையும் இடித்து எரிக்கும் அந்நியப் படையெடுப்பாளர்கள்; பழைய அந்நிய கலைப்பொருட்களின் அருமை தெரியாமல் அவைகளை இடித்துப் போட்ட ஆங்கிலேய  அதிகாரிகள்; நம் கலைப்பொருட்களின் பெருமை புரியாத மக்கள்; ஆனாலும் எல்லோரையும் விட,  இவற்றின் அருமை தெரியாத நமது Archaeological Survey of India - ASI - என்று யாரையும் அவர் விடவில்லை. நூலை வாசிக்கும் போது வாசகனுக்கே வயித்தெரிச்சல் தரும் இவர்களைப் பற்றி ஆங்காங்கே சொல்லிச் சென்றுள்ளார்.

 உலகத்தையே ஆட்டிப் படைத்து, இன்றைய பல உலகப் பிரச்ச்னைகளுக்குக் காரணமாக உள்ளார்களே என்று எனக்கு எப்போதும் ஆங்கிலேயர்கள் மீது கோபம் உண்டு. என்னைப் போல் பலரை ஆசிரியர் சந்திருத்திருப்பார் போலும். அப்படி கோபம் உள்ளவர்களும் கூட கட்டாயம் பெருமைப் படுத்த வேண்டிய பல ஆங்கிலேய அதிகாரிகள், உயிரையும், உடல் நலத்தையும் பொருட்டாகக் கருதாது வரலாற்றுத் தடங்களைத் தேடிக் கண்டுபிடித்த பலரைப் பற்றிக் கூறும்போது அவர் கூறியது போல் அவர்களெல்லோரும் மிகவும் பெருமைக்குரியவர்கள் என்று நெஞ்சாரத் தோன்றியது. நாம் நன்றி செலுத்த வேண்டிய பெரும் மனிதர்கள் அவர்கள். நம் வரலாற்றை நாம் அறிய அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், தியாகமும் அளவில் அவ்வளவு பெரிது; உயர்ந்தது. ”உயிரை மதிக்காத பெரும் முயற்சிகள்” என்று வழக்கமாக எழுதுவோமே ... அப்படிப்பட்ட முயற்சிகளை உண்மையிலேயே மேற்கொண்ட பல நல்ல ஆங்கிலேயே வரலாற்று ஆய்வாளர்களை இந்த நூலின் நெடுகிலும் கண்டேன்.இந்தியாவிற்கும், இலங்கைக்கும் உள்ள தொடர்புகள் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எடுத்துத் தந்துள்ளார். இலங்கையில் படைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள் நம் நாட்டு வரலாறு பற்றிக் கூறுவதும் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன.

‘எதிர் வெளியீடு’ இந்நூலைத் தேர்ந்தெடுத்தமைக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் ஆசிரியர்  தன் நூலைப் பற்றிச் சொல்லும் போது, இங்கிலாந்தில் விற்றதை விட, இந்த நூல் வட இந்தியாவில் பல மடங்கு அதிக நூல்கள் விற்றதாகக் கூறினார். உண்மை தானே. நமது நாட்டு வரலாற்றை, இதுவரை தெரியாத, நாம் அறியாத வரலாற்றுப் பகுதியை, அதுவும் இஸ்லாமியர் படையெடுப்பிற்கு முன்புள்ள மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, சான்றுகளோடு இந்நூலில் தருகிறார்.

நூலை வாசித்து முடிக்கும் போது, நம்மையறியாமலேயே நமது நாட்டின் மீது, நம் நாட்டு பழங்காலத்து வரலாற்றின் மீது, நூலின் நாயகன் அசோகன் மீது நமக்கு பெருமையும் மகிழ்ச்சியும் பெருகுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன அசோகரின் வார்த்தைகளின் நிஜம் நம்மை இன்றும் சுடும்; திருத்தும். அவனது பரந்த சிந்தனைகள் எவருக்கும் நிச்சயம் ஆச்சரியமளிக்கும்.நூலின் ஆசிரியர் சொல்வது போல், வரலாற்றில் இது போன்ற ஒரு “பெரும் சிந்தனையும், மக்களை வழி நடத்துவதும்” எந்த மன்னனிடமிருந்தும் உலகத்தில் வந்ததேயில்லை என்பது நமது பெருமைக்குரிய விஷயம். நாட்டின் வழியெங்கும் கிணறுகள் வெட்டினான் என்று சிறு வயதில் ப்டித்திருப்போம். கிணற்றுக்குப் பக்கத்தில் மரங்களை நட்டு மக்கள் அவ்விடங்களைத் தங்குமிடங்களாக - motels !!  - மாற்று எண்ணம் அப்பெருமன்னனுக்கு வந்ததே என்பதே ஆச்சரியம்!

இதையும் விட மனிதர்களுக்கு நலமளிக்க மருந்துச் செடிகளை தன் சாம்ராஜ்யம் முழுமையும் பயிரிட்டிருக்கிறான். எனக்கு வியப்பளித்த மற்றொன்று - சில பிராணிகளைக் கொல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளான். - red list of threatened species !! மதங்களைப் பற்றி அவன் சொல்லும் கருத்துகள் மனித ஜன்மம் இந்த உலகில் இருக்கும் வரை நம்மோடு இருக்க வேண்டிய உயர் கருத்துகளாகும்.

அசோகர் பெரும் மன்னன் மட்டுமல்ல; அவன் பெரும் மனிதன்.

இந்நூலை மொழி பெயர்த்தமைக்காக எனக்குப் பெரும் மகிழ்ச்சி.வரலாற்றின் நாமறியாத ஒரு புதிய பகுதியை, நம் மொழியில், அதனை  உங்களோடு பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி இது.



*


Tuesday, November 26, 2013

699. தருமி பக்கம் (10 ) – அந்தக் காலத்தில …. 2






*
மூன்றிலிருந்து ஐந்து வயது வரை வாழ்ந்த என் பூர்வீக வீடு. அதை  இப்போது பார்க்கும் போது கூட அப்போது, அந்தக் காலத்தில் அந்த வீடு இருந்த நிலை தான் நினைவுக்கு வருகிறது. 65 வருஷம் ஆச்சே. ஆனால் அந்த வீட்டு நினைவு நின்று நிலைத்துப் போய் விட்டது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த வீட்டைப் பார்த்த போது பாவமாக இருந்தது. நினைவில் நின்ற இடங்கள் இப்போது சிதிலமடைந்து நொருங்கிப் போய்க் கிடந்தன. பழைய நினைவுகளோடு மட்டும் இருந்திருக்கலாமோ ... வீட்டை முழுவதும் பார்க்காமல் போயிருக்கலாமோவென்று தான் தோன்றியது.

சின்ன தெருக்கள் தான் எங்கள் கிராமத்தில். ஒரு ரெட்டை மாட்டு வண்டி போவதற்காகவே கட்டப்பட்ட தெருக்கள் தான். படத்தில் இடது பக்கம் ஒரு மாடி வீட்டுச் சுவரில் ஒரு சிகப்புக் கோடு உள்ளதே அதற்கு எதிர்த்தாற்போல் தான் எங்கள் வீடு. படத்தில் தெரியும் இந்த வீடும், அதற்கு எதிர்த்தாற்போல் இருந்த எங்கள் வீடும் தான் என் சின்ன வயதில் அந்தத் தெருவில் இருந்த காரை வீடுகள். இந்த இரு வீடும் ஒரே உயரத்தில் இருக்கும்.

 இன்னொரு பெரிய காரை வீடு கீழே இருப்பது. பெரிய பாட்டையா வீடு அது. வீட்டின் உச்சியில் ஒரு வாழைத் தார் ஒன்று தொங்குவது போல் கட்டியிருப்பார்கள்.  வருஷம் அதிகமானாலும் நான் சிறு வயதில் இருந்தே பார்த்த அந்த வாழைத்தார் பத்திரமாக இன்னும் தொங்குவது ஆச்சரியம் தான்.


இந்த மூன்று வீடுகள் தான் என் சின்ன வயதில் எங்கள் ஊரில் நான் பார்த்த காரை வீடுகள். இப்போது எங்கள் வீடு இதிலிருந்து விடுபட்டுப் போனது மாதிரிதான்.வெறும் கூடு மட்டும் தான் இப்போதிருக்கிறது.

எங்கள் வீடு தெருவிலிருந்து பார்த்தால் உயரமாக இருக்கும். அனேகமாக ஐந்தடிக்கு மேல் தெருவிலிருந்து வீடு உயரத்தில் இருந்தது. வீட்டைக் கட்டிய என் பாட்டையாவிற்கு படிகள் கட்டுவதில் மட்டும் என்ன  வெறுப்போ தெரியவில்லை. வீட்டிற்குள் செல்லும் படிக்கட்டுகளும் சரி, வீட்டின் உள்ளே இருக்கும் இரு படிக்கட்டுகளும் ஏதேதோ என்று கட்டியிருப்பது போல் இருக்கும். வீட்டின் தலைவாசல் படிக்கட்டுகள்  மேலே நல்ல கல்லில் போட்டிருப்பார். ஆனால் தரை மட்டத்தில் உள்ள கல் பல வகைக் கற்களாக இருக்கும். ஒரு கல் கருங்கல்லாக இருந்தால் இன்னொரு கல் கிணற்றங்கரையில் தண்ணீர் இரைக்க போட்டிருந்த திவலைக் கல்லாக இருக்கும்.

மேற்கு பார்த்த வாசலுக்கு வீட்டுச் சுவரை ஒட்டிய படிகள். ஏறி உள்ளே வந்தால் படிக்கட்டுக்கு ஒட்டி ஒரு சதுரக் கல் தரையில் பதிக்கப்பட்டிருக்கும். அதன் நடுவே ஒரு சின்ன ஓட்டை. கதவுக்குப் பின்னால் எப்போதும் ஒன்றரை அடி நீளத்தில் ஒரு சின்ன கடப்பாரை மாதிரி ஒன்று இருக்கும்.  வீட்டுச் சமையலுக்கு தேங்காய் உறிப்பதற்காகவே அந்தக் கம்பியும், சதுரக்கல்லின் ஓட்டையும். உள்ளே ஒரு செவ்வக அறை - அதாவது, இந்தக் காலத்து ஹால் அது தான். வலது பக்கச் சுவரில்   முழுவதும் புகைப்படங்கள் தொங்கும். எதிர் சுவரில் ஒரு சுவர்க் கடிகாரம். ‘ஹாலின்’ நடுவில் ஒரு கருப்புக் கலரில் ஒரு தூண். எனக்கு மிகவும் பிடித்த தூண். தூண் நன்கு வழு வழுவென்று இருக்கும். அதில் சிறு வயதில் ஏற முயற்சிப்பது நல்ல விளையாட்டு. அந்த ‘வீர விளையாட்டு’ விளையாடுவதற்கு வயது வராத சின்ன வயதில் அந்தத் தூணைப் பிடித்துக் கொண்டு வட்டம் சுற்றியது நினைவில் இருக்கிறது. ஆனால் கடைசியாகப் பார்த்த போது அந்த தூண் என் நினைவில் இருந்த மாதிரி இல்லாமல் ரொம்ப குட்டையாகத் தோன்றியது. கருப்பு கலரும் வழுவழுப்பும் மட்டும் அப்படியே இருந்தன.

ஹாலிலிருந்து வலது பக்கம் ஒரு அறை. அனேகமாக விவசாய சாமான்கள் இருக்கும் அறையாக அப்போது இருந்தது. இந்த அறையிலிருந்து தெற்கு தட்டடிக்குச் செல்லலாம். இந்த தட்டடியில் தான் முந்திய பதிவில் சொன்ன வாழைப் பழம் பழுக்க வைக்கும் சின்ன அறை இருக்கும். நடுவில் ஒரு கதவு. பழைய கிராமத்து வீட்டுகளில் உள்ள தடியான, குட்டையான கதவு. தட்டடியிலிருந்து வெளியே போக தெற்குப் பக்கம் இன்னொரு வாசல். அதிகமாக யாரும் இக்கதவைப் பயன்படுத்துவதில்லை.  இந்தக் கதவில் தான் இன்னொரு பெரும் ‘வரலாற்று நிகழ்வு’ நடந்தது. வேண்டுமென்றால் வாசித்துப் பாருங்கள்!

ஹாலிலிருந்து இடது பக்கம் ஒரு பெரிய அறை. வீட்டின் முக்கிய அறை. உயரமான அறை. இந்த அறை வாசலும் உயரமாக, வேலைப்பாடு சிறிதுள்ள நிலையோடு இருக்கும். உள்ளே நுழைந்ததும் கதவுக்குப் பின்னால் ஒரு பெரிய - இன்றைய டைனிங் மேசையில் பாதி சைஸில் - ஒரு மரப் பெட்டி இருக்கும். ’கல் பெட்டி’ என்பார்கள். ஏனென்று தெரியவில்லை. கல் மாதிரி உறுதி என்பதா ... இல்லை, கல் மாதிரி பெரிய இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாலா ... ? இதற்குள் தான் வீட்டின் ‘முக்கிய பொருட்கள்’ இடம் பிடிக்கும். நான் பார்த்த வரையில் உள்ளே என்னென்னவோ ஒரே பேப்பர் மயமாக இருக்கும். இந்த அறையிலிருந்து மெத்தைக்குச் செல்லும் படிக்கட்டு. நான் சொன்ன மாதிரி சிக்கலான படிக்கட்டுகள். ஆனாலும் நான் நன்கு பழகி விட்டேன் இந்தப் படிகளுக்கு.

மெத்தைக்குப் போனால் அங்கே ஒரு பெரிய அறையும், ஒரு சின்ன அறையும், இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு மொட்டையான பகுதியும் உண்டு. புளி, வத்தல், பனங்கிழங்கு போன்றவைகளைக் காயப்போடும் இடம் இது. இது தாண்டி, பெரிய அறையிலிருந்து இன்னொரு படிக்கட்டு மேல் மெத்தைக்கு. இந்தப் படியைப் பார்த்தாலே எனக்குப் பயமாக இருக்கும். சின்னச் சின்ன படிகள். செங்குத்தாகப் போகும். மொட்டை மெத்தை. பொதுவாக நெல் காயப்போடுவதற்குப் பயன்படுத்துவார்கள். இந்த மெத்தைப் படியில்  பெட்டிகளிலோ, மூடைகளிலோ நெல் வைத்து ஏறுவதற்கு ரொம்ப பழக்கம் வேண்டும். ஆனால் இதுவரை யாரும் அதில் விழுந்து வைத்த செய்தி ஏதும் கிடையாது. மேல் மெத்தையின் நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். ஓட்டையை ஒரு மண் உலை மூடி வைத்து மூடியிருப்பார்கள். நெல் காயப்போட்டிருக்கும் போது மழை வந்து விட்டால் இந்த ஓட்டை மூலம் கீழே உள்ள அறைக்கு நெல்லைத் தள்ளி விட்டு விடுவார்கள். ஓரிரு முறை இந்த adventure-ல் நானும் பங்கு பெற்றிருக்கிறேன். அந்தக் கீழ் அறையில் என் சின்ன வயதில் மூன்று நெல் குதிர்கள் இருக்கும். ஒவ்வொன்றும் ஐந்து ஆறடி உயரத்தில் இருந்ததாக நினைவு. சின்ன வயதில் இவை எப்போதும் நிரம்பியிருந்ததாக நினைவு. பின் மூன்று குதிர்கள் ஒன்றாக மாறியது. பின் மூடைகளாக மாறின. பின்னாளில் ... குதிர்களையும் காணோம் ... மூட்டைகளையும் காணோம் ...! 

கீழே ‘ஹாலிலிருந்து’ கிழக்குப் பக்கம் நேராக சென்றால் இடது பக்கம் ஒரு பெரிய திண்ணை, அதனை அடுத்து ஒரு இருண்ட சமையலறை, அதனை அடுத்து ஒரு பகுதியில் அங்கணம் என்றழைக்கப்பட்ட குளியலறை எல்லாம் இருந்தன. 

அந்த திண்ணை, ஹால் அளவை விட பெரியதாக இருக்கும். இரண்டடி உயரமாக இருக்கும். ஏன் அந்த உயரம் என்று தெரியவில்லை.  இந்தத் திண்ணையில்  எனக்குச் சின்ன வயதில் செய்த ஒரு சின்ன ஊஞ்சல் பல ஆண்டுகள் தொங்கிக் கொண்டிருந்தது. கருப்புக் கட்டையில் அழகாகச் செதுக்கப்பட்ட ஊஞ்சல். அது ஊஞ்சலா, இல்லை தொட்டிலா என்று சொல்ல முடியாது. ஏனெனில்  குழந்தை கீழே விழுந்து விடக் கூடாதே என்று சுற்றிலும் பாதுகாப்பிற்கு அரையடி உயரத்திற்குப் பலகைகள் இருக்கும். இந்த தொட்டிலுக்கு / ஊஞ்சலுக்கு கால்களும் உண்டு. வேண்டும்போது இறக்கி விட்டு குழந்தை விளையாட என்று இருந்தது. அதைத் தாண்டி சுவற்று ஓரத்தில் ஒரு ராட்சஷ சைசில் ஆட்டு உரல் ஒன்று இருக்கும். இரண்டு பேர் சேர்ந்து தான்அதில் மாவாட்ட முடியும். இதன் பக்கத்திலேயே இன்னும் ஒரு பெரிய அம்மிக்கல் இருக்கும். சமையலறை மகா இருட்டாக இருக்கும். பொய்க் கூரை போல் ஒரு தாழ்ந்த கூரை. அதற்கு மேல் ஓர் அறை உண்டு. விறகு போட்டு எரிப்பதால் அந்த அறையும், சமையலறையும் கருப்பு படர்ந்து இருக்கும். 

இந்த வீட்டை அண்ணன் தம்பிகள் என்று சகோதரர்கள் நடுவே சொத்துப் போராட்டம் … பிரிவு என்று என்னென்னவோ நடந்தது. வேதனையான விஷயங்கள். யாருக்கும் எதற்கும் விட்டுக் கொடுக்கும் மனமே இல்லாமல் போனது. இவர்களது சண்டையால் பாட்டையா காலத்து மகிமை எல்லாம் சுத்தமாக மங்கிப் போனது.  

பல ஆண்டுகள் கழித்து நான் அந்த வீட்டிற்குப் போன போது பல மாற்றங்கள்; பிரிவுகள். அந்த சமையலறை இடிந்து விழுந்து மூடிக் கிடந்தது.எப்படியெல்லாம் இருந்த வீடு இப்படி ஆகிப் போனது !


அந்த வீட்டின் அழிவின் ஆரம்பம் அது.






*
http://signatures.mylivesignature.com/54488/92/EC8E1548066E8691FE8C4E82AB8A105B.png

Saturday, November 23, 2013

698. நாங்களும் செஸ் விளையாடினோம் ...!






*




 கல்லூரிக்கு வேலைக்குப் போன பின் நண்பர்களோடு காசில்லாத நேரத்தில் விளையாடுவதற்காகவே செஸ் பழகினோம். இரண்டு வருஷம் அடிக்கடி விளையாடுவோம். இந்தியன் எகஸ்பிரஸில் வரும் white wins in two moves எல்லாம் போட்டுப் பழகினோம். அதன் பின் செஸ் பக்கம் போகவேயில்லை. பின்னாளில் மகள்கள் இருவருக்கும் சொல்லிக் கொடுத்தேன். ம்ம்..ம்.. ஒண்ணும் தேறலை. உட்டுட்டேன்.


 ஏறத்தாழ ஒரு இருபது, இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் என் நண்பன் ஒருவனோடு அவனது நண்பரைப் பார்க்கப் போயிருந்தோம். அவர்கள் இருவரும் அப்போது தான் I.P.S.ஆப்பீசர்களாக ஆகியிருந்தார்கள். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினோம். போரடித்தது. அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்த போது நண்பனின் நண்பர் செஸ் விளையாடுவோமா என்று கேட்டார். எனக்கு ரொம்ப தெரியாதுன்னேன். ’கொஞ்சம் தெரியுமல்ல .. அதை வைத்து விளையாடலாம்’ என்றார். நீங்கள் இரண்டு பேரும் விளையாடுங்கள். நான் வேடிக்கை பார்க்கிறேன் என்றேன். அட .. மூன்று பேரும் விளையாடலாம் என்றார் அந்த நண்பனின் நண்பர். அது எப்படியென்றேன். நான் இரண்டு பேரோடும் விளையாடுகிறேன் என்றார். அதிலும் நான் blind chess விளையாடுகிறேன் என்றார். அது என்னங்க என்றேன். நீங்கள் சாதாரணமாக விளையாடுங்கள்; நான் முதுகைக் காண்பித்துக் கொண்டு உட்காருகிறேன். போர்டை பார்க்காமலேயே விளையாடுகிறேன் என்றார். அது எப்படிங்க என்றேன். வாங்க விளையாடுவோம் என்று களத்தில் குதித்தார்.


 முதுகைக் காண்பித்து உட்கார்ந்தார். நாங்கள் இருவரும் ஆளுக்கொரு போர்டில் விளையாட உட்கார்ந்தோம். மனுஷன் திரும்பியே பார்க்காமல், மனசுக்குள்ளேயே நினைவு வைத்து எங்கள் இருவரோடும் அடுத்தடுத்து விளையாடினார். அசந்து விட்டேன். எபடிங்க மனசுல அம்புட்டையும் ஞாபகம் வச்சி விளையாடினாரோ ... கொஞ்ச நேரம் விளையாடினோம்.


நமது அடுத்த மூவ் என்று யோசிப்பதற்குப் பதில் அவர் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தேன். நம்ப முடியாத அளவிற்கு அவர் அடுத்தடுத்த மூவ்களை மிகச் சரியாகச் செய்தார். அம்புட்டு ஆச்சரியம். கொஞ்ச நேரம் பார்த்தேன். என்னடா மனுசனுக்கு இம்புட்டு ஞாபக சக்தியான்னு நினச்சிக்கிட்டே ... இப்படி பண்ணிப் பார்ப்போமா என்று நினைத்து, எனது பீஸ் ஒன்றை இடம் மாற்றி வைத்தேன். அடுத்து அவர் இரண்டு மூவ் சொன்னார். இரண்டாவது மூவில் நான் ’இல்லைங்க .. அந்த இடத்தில் என் பீஸ் இருக்குது’ என்றேன். அப்டியா என்றார், கொஞ்சம் யோசித்து விட்டு முதலில் சரியாக இருந்த இடங்களைப் புட்டு புட்டு வைத்தார். சொல்லிட்டு .. நீங்க ‘விளையாடிட்டீங்களா?” என்று கேட்டுச் சிரித்தார்.

உண்மையைச் சொன்னேன். ஆச்சரியம் தாங்காமல் எப்படிங்க இதெல்லாம் என்றேன். பழக்கம் தான் என்றார். செஸ்ஸில் எந்த அளவிற்குப் போனீர்கள் என்றேன். கோவை மாவட்ட அளவு வரை போய் போட்டிகளில் வென்றிருக்கிறேன் என்றார்.

இது எனக்கு அடுத்த அடி! வெறும் மாவட்ட அளவில் விளையாடும் ஆளே இப்படி ரெண்டு பேரை வைத்து blind chess விளையாட முடிந்தால், பெரும் நிலைகளுக்குச் சென்றவர்கள் எப்படி ஆடுவார்கள்.


 நினைக்கவே தலை சுற்றுகிறது!


 ஆமாம் ... உங்களில் யாரேனும் இந்த blind chess விளையாடுவீங்களா? அப்படி யாரும் இருந்தால் இந்த மாயா ஜாலம் எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.


 ஆனந்த் ஒரு ஆட்டம் கூட ஜெயிக்காமல் போய்ட்டாரே .... :(




 *


 

Monday, November 18, 2013

697. தருமி பக்கம் (9 ) - அந்தக் காலத்தில ...1







*



அறியாத வயது. மூன்று வயது கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் பெத்தவளை ‘தின்னுட்டேனாம்’! அப்படித்தான் சின்ன வயதில் பலர் சொல்லி அடிக்கடி கேட்ட அனுபவம். அந்த வயதில் நடந்தது வேறு எதுவும் நினைவில் இல்லை. வளர்த்தவர்கள் என்னென்னவோ சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கையில் நான் நடந்து வந்த படிகளில் முதல் படி இது. எதுவும் தெரியாது தாண்டி வந்த படி.

அனேகமாக அம்மா ஊரில் தான் பிறந்திருப்பேன். ஆனால் அதன் பின் அப்பா மதுரையில் வேலை பார்த்ததால் மதுரையில் ஆரம்பித்த வாழ்க்கை. மதுரை சந்தைப் பேட்டையில் ஒரு தெருவும், அதில் உயர்ந்த திண்ணை உள்ள வீடு ஒன்றை பின்னாளில் அப்பா காண்பித்திருக்கிறார்கள். அந்த வீட்டில் தான் நான் இரண்டரை வயது வரை வாழ்ந்திருக்கிறேன் என்றார்கள்.. இந்தத் தெருவைத் தாண்டி தான் தியாகராஜர் கல்லூரிக்குப் போக வேண்டும்.  கல்லூரி படிக்கும் நாட்களில் அந்தத் தெருவைத் தாண்டும் போது பல முறை அந்த சந்தைத் திரும்பிப் பார்த்து விட்டு செல்வேன். தெருவின் ஓரத்தில் வளர்ந்து பல ஆண்டுகள் இருந்த ஒரு பூவரசு மரம் தான் எனக்கு அடையாளம். ஓரிரு முறை அந்தச் சந்திற்குள் சென்று அந்த உயர்ந்த திண்ணையைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். வீட்டுக்கள் சென்று பார்க்க ஆசை. ஆனால் முயன்றதில்லை.

ஆனால் அதன் பின் - மூன்றாவது வயது தாண்டிய பின் - நடந்த பல விஷயங்கள் இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது. அப்பா ஊரில் வைத்துதான் அம்மா இறந்து விட்டார்கள்.கல்லறையும் அங்கு தான். அப்பாவிற்கு அடுத்த இரு ஆண்டுகள் மதுரையில் bachelor வாழ்க்கை. நான் ஊரிலேயே இருந்தேன். நெல்லையிலிருந்து தென்காசி, குற்றாலம் செல்லும் சாலையின் நடுவில் ஆலங்குளம் என்று ஒரு ஊர். அதற்கருகில் நூறாண்டுகளைத் தாண்டிய உயர்நிலைப்பள்ளி உள்ள நல்லூர். அதனை அடுத்த ஊர் எங்கள் ஊர் - காசியாபுரம்.

நல்லூரில் பிரிவினைக் கிறித்துவர்கள் அதிகம். அங்கு ஒரு பெரிய கிறித்துவக் கோவில் உண்டு. அக்கோவிலிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு சாலை. அந்த சாலை இட்டுச் செல்வது எங்கள் கிராமத்திற்கு. அங்கு வடக்கு தெற்காக இரண்டு தெருக்கள். இரண்டு தெருக்கள் என்று கூட சொல்ல முடியாது. ஒன்றரை தெரு என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். அது தான் எங்களூரின் அமைப்பு.  பாட்டையா, அப்பம்மா, நான்கு அத்தைகள், சித்தப்பா, சித்தி  இவர்களோடு ஐந்து வயது வரை இருந்தேன். பல நிகழ்வுகள் நெஞ்சில் நன்கு இடம் பிடித்து விட்டன. நினைவிலும் நின்று விட்டன. ஐந்து வயதிற்குப் பிறகு மதுரை வாழ்க்கை. ஆனாலும் வருடத்திற்கு இரு முறை சொந்த ஊர் பயணம் என்றிருந்தது.

பாட்டையா, சித்தப்பா இவர்களை வீட்டில் காண்பதே அரிது. இன்னும் நினைவில் இருக்கிறது. பாட்டையா இரவு சாப்பிட்டு முடித்ததும் வெளியே சென்று அடுத்த நாள் வேலை யார் யாருக்கு என்று வழக்கமாக வேலைக்கு வருபவர்களிடம் சொல்லி விட்டு வந்திருவார்கள். காலையில் மாடுகளின் கழுத்தில் கட்டிய மணியோசை மட்டும் கேட்டிருக்கிறேன். ஏனெனில் காலங்கார்த்தாலேயே பாட்டையா வயலுக்கு ஆட்களுடன் புறப்பட்டு விடுவார்கள்.  

பாட்டையாவிற்கு வயலில் வேலை.அப்பம்மாவிற்கும், சித்திக்கும் காட்டில் வேலை. இருவரும் காலையில், பாட்டையா போனபிறகு காட்டுக்குப் போவார்கள். நானும் பல நாள் அவர்களோடு சென்றுள்ளேன். இப்போது நினைத்தாலே பாவமாயிருக்கும். அவ்வளவு கடினமான வேலை. அப்பம்மா காட்டில், விடிலியிலும் பக்கத்திலுள்ள பகுதிகளிலிருந்தும் பதினியை விடிலிக்குக் கொண்டு வருவார்கள்.  சித்தி எட்டத்திலுள்ள இடங்களிலிருந்து பதினி கொண்டு வருவார்கள்; மண்பானை தான். மிகப் பெரியதாக இருக்கும். தலையில் சும்மாடு வைத்து பானையைக் கொண்டு வருவார்கள்.விடிலிக்கு வரும் போது வெறும் பதினியோடு வர மாட்டார்கள். பதினிக்காகக் காத்திருக்கும் போது பக்கத்திலுள்ள காட்டுப் பருத்தியில் காய்த்திருக்கும் பருத்திகளைப் பறித்து ஒரு சின்ன மூட்டையாக முன்னால் சேலையில் முடிந்து கொண்டு வருவார்கள். காட்டில் என்ன ...மூன்று, நான்கு மர வகைகள் மட்டுமே இருக்கும். புளி, பனை, காட்டுப் பருத்தி, அங்கங்கே சில வேப்ப மரம் - அவ்வளவே. இப்படிப்பட்ட காட்டு வெளிகளைப் பார்த்துப் பழகி விட்டு, பின்னாளில் முதன் முறையாக தஞ்சைக்கு வேலைக்குப் போனபோது இரு இடங்களின் வழமையில் தான் என்ன வித்தியாசம்! நேரம் எதுவும் பார்க்காமல் கிணற்றுத் தண்ணீரை மாடு வைத்து. கமலை கட்டி அடித்து விவசாயம் இங்கே. மண்வெட்டி கூட இல்லாமல் ஓடுகிற நீரைக் காலை வைத்தே தண்ணீர் பாய்க்கும் இடம் அங்கே என்று நினைத்துக் கொள்வேன்.

அதன் பின் அப்பம்மா, சித்தி இருவருக்கும் விடிலியில் வேலை. பெரிய அண்டாவில் பதினியை ஊற்றி, கொதிக்க வைத்ததும் வரும் கூப்பனியைச்  சிரட்டையில் ஊற்றி கருப்பட்டிகளை எடுக்க வேண்டும். மாலை வரை வேலை ஆளை நிமிர்த்து விடும். பனை மரங்களைப் பாட்டத்துக்கு விட்டிருப்பார்கள். அதாவது பதினி இறக்குபவருக்கு ஒரு நாள். நமக்கு ஒரு நாள். அப்பம்மா, சித்தி அடுத்தடுத்த நாள் காட்டில், விடிலியில் வேலை. அம்மாடி ... எப்படிப்பட்ட உழைப்பாளிகள்!

பின்னாளில் என் மாணவன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சு வந்தது. அப்போது இரண்டாம் முறை கல்கியில் அக்கதை வந்ததைப் பற்றியும், மணியனின் சித்திரங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவன் முதன் முறையாக கல்கியில் வந்த போது உள்ள பொ.செ.பைண்டு செய்து வீட்டில் இருக்கிறது. அதைப் படித்தால் நடு நடுவே பெட்டிச் செய்திகளில் மிகப் பழைய செய்திகள்  இருக்கும். அந்த edition. அந்தச் செய்திகளோடு  படிக்க நன்றாக இருக்கும் என்றான். அப்பதிவை அவனது பாட்டி தன் இளவயதில் படித்துச் சேர்த்தது என்றான். நமது பாட்டி காட்டில் வேலை செய்த, படிக்கத் தெரியாத பாட்டியாசே... ஆனால் அவனது பாட்டி படித்து, பத்திரிகைகள் வாங்கி கதை வாசித்த பாட்டியாக இருக்கிறதே .. என்று சிறிது சோகமாகி விட்டேன். இரு பாட்டிகளுக்கும் நடுவில் ஒருபரம்பரை இடைவெளி இருந்தாலும் மேல்சாதிப் பாட்டிக்கும், அப்படி இல்லாத என் பாட்டிக்கும் இப்படி ஒரு இடை வெளியா என்ற சோகம் அது. ’புத்தம் வீடு’ கதை வாசிக்கும் போது தான் சரியான, எனக்குப் பிடித்த பதில் கிடைத்தது. அவன் பாட்டி படித்து, வீட்டில் கதை வாசித்த பாட்டி; ஆனால் என் பாட்டி தொடர்ந்து உழைத்த  பாட்டி. ஒரு பாட்டி சொகுசுக்கார, non-productive பாட்டி. ஆனால் என் பாட்டி ஒரு productive பாட்டி! வீட்டின் பொருளாதாரத்தில் இருந்த பங்கு அந்தப் பாட்டிக்குக் கிடையாதே!  I can feel more proud of my பாட்டி!

பாட்டையாவுக்கு நிலம், உழைப்பு மட்டுமே முன்னால் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஊருக்கு வெளியே, நாலைந்து மைல் தாண்டி நஞ்சை இருந்தது. பல நாள் உழைப்பு அங்கு தான். பஸ், பேருந்து என்றால் என்ன என்று கேட்கும் காலம் அது. சைக்கிள் என்பதே அங்கு யாரும் அப்போது அதிகமாகப் பார்த்திருக்க மாட்டார்கள். நடைப்பயணம் தான். ஊருக்குப் பக்கத்தில் இருந்தது எல்லாமே புஞ்சை. அங்கு உழைத்தாலும் என்ன வருமோ? ஆனால் பாட்டையா வியாழக்கிழமை தோறும் ஊரில், வீட்டில் தான் இருப்பார்கள். அன்று எங்களூரில் சந்தை. வாரச் சந்தை. நல்லூருக்கும் எங்கள் ஊருக்கும் பக்கத்தில் உள்ள இன்னொரு ஊர் - ஆலடிப்பட்டி - என்ற மூன்று ஊர்களின் நடுவில் உள்ள திடல் ஒன்றில் தான் சந்தை நடக்கும்.


காலையிலேயே எங்கள் வீட்டு முன்னால் நிறைய ஆட்கள் வருவார்கள். அன்று அனேகமாக அவர்கள் எல்லோரும் வீட்டு முன்னால் உயரப் படிகள் இருக்கும். அதில் உட்கார்ந்திருப்பார்கள். அப்பம்மா போடும் கருப்புக் காப்பி எல்லோருக்கும் உண்டு. மற்ற நாட்களில் வீட்டுக்கு வருபவர்களுக்கு அப்பம்மா கொடுப்பது மோர். இன்று மட்டும் காப்பி. தண்ணியாக இருக்கும். சூடு என்பதெல்லாம் யாரும் பார்த்ததாக நினைவில்லை. சொல்வதே ‘காப்பித் தண்ணி’ என்று தானே; அதான் தண்ணியாக இருக்கும்! பாட்டையா வீட்டில் புகை பிடிக்கத் தடை.

எனக்கு வாழை சீசனில் மட்டும் சந்தையும், அன்று நடக்கும் நடவடிக்கைகளும், வரும்  ஆட்களும் ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்குள்ளேயே ஒரு ஓரத்தில் ஒரு சின்ன அறை மாதிரி குட்டையாக ஒன்று இருக்கும். கட்டைகளைச் செருகி கதவாக்கியிருப்பார்கள். வாழை சீசனில் சந்தைக்கு முன்பே வாழைக்குலைகளை இந்த அறையில் மொத்தமாக அடுக்கி வைக்கப்படும். எப்படியும் 30 - 50 குலைகள் இருக்கும். அதன் பின் காய்ந்த வாழையிலைகள் எல்லாம் போட்டு நெருப்பு வைத்து, கதவை மூடி, சாணியால் மொழுகி விடுவார்கள். சந்தை அன்றைக்கு அதைத் திறந்ததும் ஒரு மணம் வரும். பழுத்தும், பழுக்காதமுமான வாழைத் தார்கள்; உள்ளே போட்ட புகை இப்போது புது வாழைப்பழ மணத்தோடு வரும். அது ஒரு தனி மணம். எனக்குப் பிடிக்கும். அந்தச் சின்ன அறையில். வாழைக்குலைகள் அடுக்குவதிலிருந்து, வெளியே அவை ‘பிரசவம்’ ஆவது, அதன் பின் விற்பனைக்குச் சந்தைக்குப் போகும் வரை ஒவ்வொன்றும் எனக்குப் பிடிக்கும்.

சந்தை நாள் இன்னொரு வகையிலும் பிடிக்கும். சந்தைக்கும் எங்கள் வீட்டுக்கும் நடுவில் இன்னும் ஓரிரு வீடுகள் தான். எங்கள் வீட்டு மெத்தைக்குப் போனால் அரை குறையாகச் சந்தை தெரியும். அங்கே போனதும் சந்தையின் இரைச்சல் எங்கள் வீட்டு மெத்தைக்கு நன்கு கேட்கும். அதுவும் எனக்குப் பிடித்த ஒரு ஒலி. இரைச்சல்... தொடர்ந்த இரைச்சல். ஏனோ அப்போது அதுவும் ரொம்ப பிடித்துப் போனது. கடலைப் பார்த்த பிற்கு அந்த அலைகளின் ஒலி எனக்கு அடிக்கடி அந்தச் சந்தை ஒலி போல் கேட்கும். சந்தை நாளன்னைக்கு இன்னொரு ஸ்பெஷல்  இருக்கும். மாலை அப்பம்மா சந்தைக்குப் போய் விட்டு வருவார்கள். நிச்சயமாக ஏதாவது ஒரு ‘பண்டம்’ வாங்கி வருவார்கள். பெரிதாக ஏதும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் காலத்தில் அதிகமாகப் போனால் அது முறுக்கு, அவித்த பயறு ...

சந்தை அன்று ஊரே சுறுசுறுப்பாக இருக்கும். பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வருவார்கள். அத்தைமார்களோடு மாலை சந்தைக்குப் போவதுண்டு. ஏனெனில் மாலையோடு முக்கியச் சந்தைப் பொருட்களின் வியாபாரம் முடிந்து விடும். ஆனால் மாலை .. வெளிச்சம் குறைந்த நேரங்களில் காடா விளக்கு வைத்து luxury items எல்லாம் வியாபாரத்திற்கு வரும். அதென்ன luxury items என்கிறீர்களா ... அதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு வேண்டிய (ஊதாக் கலரு ) ரிப்பன், வளையல் ... இதெல்லாம். அது சரி காடா விளக்கு அப்டின்னா என்னன்னு தெரியுமா? பொது இடங்களில் எல்லாம் அப்போ அந்த விளக்கு தான். அப்போது ஏது மின்சார விளக்கு?


பி.கு.
என்ன இப்படி கூகுள் ஆண்டவர் ஏமாத்திட்டார்! ஒரு காடா விளக்குப் படம் எடுத்துப் போட்டு, உங்களுக்கெல்லாம் ஒரு விளக்கம் தரலாமாவென நினைத்தேன்.. அப்படி ஒண்ணும் கிடைக்கலையே!

கூகுள் ஆண்டவா ...  இப்படி ஏமாத்திட்டியே ...!

:(










*



Sunday, November 17, 2013

696. THREE CHEERS TO INDIA !!!

Pretty accurate and good representation
 of the ground realities !!!!
 
 
 
            
 

Tuesday, November 12, 2013

695. DOWN ... DOWN ... பெண்களூரு; வாழ்க எம் மதுரை ...







*



ஆயிரம் சொல்லுங்க ... அது எந்த பெரிய ஊராகவும் இருந்துட்டுப் போகட்டும். அது பெரிய ஆப்பிளோ .. இல்ல பெரிய மெட்ரோவோ .. இல்ல உலகத்துக்கே தெரிஞ்ச எலெக்ட்ரானிக் நகரமோ .. எதுவாயிருந்தாலும் எங்க ஊரு மதுர மாதிரி வருமா? என்னா சுகம் ... எப்பிடி இப்படி ஒரு அருமையான ஊரா இருக்கு எங்க ஊரு ...

என்ன திடீர்னு மதுரக்காரனுக்கு இப்படி ஒரு குதூகலம் அப்டின்னு நினைக்கிறீங்களா. வேற பெரிய ஊருகளுக்குப் போய்ட்டு வந்து, நம்ம ஊருக்குள்ள நுழஞ்சதும் வர்ர சந்தோஷம்... அப்படி வர்ர சந்தோஷத்தோடு வீட்டுக்குள்ள நுழஞ்சி .. நம்ம கட்டில்ல ‘அக்கடா’ன்னு சாயும் போது வர்ர சந்தோஷம் இருக்கே ... அத அனுபவிக்கணும் .. ஆராயப்படாது! சும்மாவா ஒரு எழுத்தாளர் ‘வீடு என்பது விடுதலை உணர்வு’ அப்டின்னு எழுதினார். அந்த எழுத்தாளர் யாரு ...? பாலகுமாரனா ..?

நேத்து - 11.11.13 - பெண்களுரிலிருந்து மதுரைக்கு ரயில் பயணம். மைசூர்-தூத்துக்குடி ரயிலில் பயணம். இரவு 9.20க்கு பெண்களூர் சிட்டி ரயில் நிலயத்தில் புறப்படுகிறது. நாங்கள் இருந்தது எலெக்ட்ரானிக் சிட்டி. எப்போ புறப்படலாம்னு உறவினர்களின் நடுவே ஒரு பட்டி மன்றம்  நடந்தது. சரி .. மாலை 7 மணிக்குப் புறப்படலாம் என்று முடிவானது. ஆனாலும் பட்டிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரு அனுபவமான குரல் - தம்பியின் குரல் - ஒலித்தது. ஒரு காலத்தில் ராணுவத்தில் எல்லாம் இருந்த ஆளில்லையா ... அதனால் அவர் சொன்னது போல் 7 மணி என்பதை ஒத்தி வைத்து, 6.45க்குப் புறப்படுவதாக முடிவெடுத்து, பின் அதையும் மீறி 6.40க்கு வீட்டை விட்டுப் புறப்பட்டோம்.

மென்பொருள் கம்பெனிகள் நிறைய இருக்கா அந்த இடத்தில. ஆபிஸ் முடியிற நேரம் வேற. கூட்டமாக இருந்தது. ஆனாலும் தான் இருக்கவே இருக்கு நம்ம elevated express way அப்டின்னு அந்த பாலத்தில் போனோம். 70-80 வேகத்தில் போனோம். நல்லாவே இருந்தது. உயரமான பாலத்தில் போய்க்கொண்டு சுற்றியிருந்த பெரிய கட்டிடங்களையும், ஒளிக்கோலங்களையும் பார்த்துக் கொண்டு 10 கிலோ மீட்டர் போனோம். அந்தப் பாலம் 12 கிலோ மீட்டர் நீளமாம். பத்து கிலோ மீட்டர் போனதும் வேகம் குறைந்தது. சில நிமிடங்களில் போக்கு வரத்து அனேகமாக நின்றே போனது. மடிவாலாவில் ஒரு சிக்னல் இருக்குமே அங்கே ரொம்ப கூட்டமாக இருக்கும்; அதனால் என்றார்கள்.

ஊர்வலம் ஆரம்பமானது அங்கே. மிக மிக மெல்ல போகவேண்டியதிருந்தது.  அந்தப் பாலம் முடிந்து சிறிது தொலைவு .. பின் மறுபடி இன்னொரு சின்ன பாலம். இந்தச் சின்னப்பாலம் வரை elevated express way-யை கொண்டு வந்திருந்தால் நன்கிருந்திருக்குமோன்னு ஒரு சிந்தனை. சின்னப் பிள்ளைகளை ஏமாற்றுவது போல் ’இதோ .. இப்போது ஒரு சிக்னல் வரும்; அதைத் தாண்டி விட்டால் வேகமாகப் போய்விடலாம்’ என்றார் தம்பி. இதிலும் நேராக சிட்டி போகலாமா .. அதிக நேரம் ஆவதாயிருந்தால் நேரடியாக கன்டோன்மெண்ட். போகலாமா என்று முடிவுக்கு வர முடியவில்லை. It was a race between time and distance. இரண்டிற்கும் ஒரே வழிதான். கடைசிப் பகுதியில் மட்டும் எந்தப் பக்கம் போவது என்று முடிவெடுத்துத் தாண்டிக் கொள்ளலாமென முடிவு செய்தார்.

எப்படியும் ஒரு 20 சிக்னல்களைத் தாண்டியிருப்போம். ஒரே ஒரு சிக்னலில் மட்டும் பச்சை விளக்கு. மற்ற எல்லாவற்றிலும் ஒரே சிகப்பு தான். ஒரே சிக்னலில் சிகப்பில் நின்று, அடுத்த பச்சையில் முன்னேறி, மறுபடியும் அதை சிகப்பாக ...இன்னும் காத்திருந்து அடுத்த பச்சையில் முன்னேறினோம். இது பத்தாது என்பது போல் காரிலிருந்த கடிகாரம் 25 நிமிடம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தங்ஸிற்கு அது தெரியாது. திடீரென ’அட ... முக்கால் மணி நேரம் தான் இருக்கு. போக முடியுமா?’ என்று ஒரு அபயக்குரல் எழுப்ப, கடிகாரம் விரைந்து செல்கிறது என்று சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாயிருந்தது.

நேரம் ஒழுங்காக ஒடுது. ஆனால் தூரம் மட்டும் நெருங்க முடியாமல் இருந்தது. மணி எட்டரை தொட்டு விட்டது. தூரம் பற்றி எனக்கும், தங்ஸிற்கும் தெரியாது. ஆனால் அங்கங்கே சிகப்பு நெஞ்சில் துடிப்புகளை அதிகமாக்கியது. இப்படியே நாலு தடவை அந்த ஊரில் பயணம் செய்தால் கட்டாயம் ரத்த அழுத்தம் வந்திரும் போலும்.

சிட்டியா, கன்டோன்மெண்டா என்ற முடிவெடுக்கும் நேரம் வந்தாச்சு. ஒரு குருட்டு தைரியத்தில் சிட்டி என்று முடிவு செய்து சாலையைத் தேர்ந்தெடுத்தோம். அந்தப் புள்ளியில் ஒரு ஐந்து நிமிடம் வண்டி வேகமாகப் போனது. வந்தது அடுத்த சிகப்பு. தத்தித் தத்தி ஒரு வழியாக சிட்டி நிலையம் வந்தாச்சு. இங்கு அடுத்த ஒரு பிரச்சனை. நிலையத்தின் பின் பக்கம் போனால் படியேற வேண்டியதில்லை என்பதால் அந்தப் பக்கம் போக திரும்பியாச்சி. ஆனால் இங்கே எங்களைப் போன்ற ஒரு பெரும் படை.. எல்லோருக்கும் மனசுக்குள் வேகம். ஆனால் ஒரே கூட்டம். முக்கி முனங்கி , பின் பக்கத்திற்கு ஊர்ந்தோம். ஒரு வழியாக எங்களை அங்கே இறக்கி விட்டு விட்டு தம்பி காரை நிறுத்த சென்றார். நானும் தங்ஸும் 5-ம் மேடைக்குப் போக வேண்டும். யாரோ ஒருவரிடம் கேட்டேன். பாவி மனுசன் 8ம் நடை மேடையை காட்ட அங்கே தங்ஸை ‘இழுத்துக் கொண்டு’ (அப்படி போனால தான் காரியம் நடக்கும்!)  அங்கே போனோம். அதன் பின் 5ம் மேடை எதிர்ப்பக்கம் என்று தெரிந்து அந்தப் பக்கம்  போனால் மைசூரிலிருந்து வந்த அந்த ரயில் ஒரு மாதிரி உருமிக்கொண்டு இதே புறப்படப் போகிறேன் என்பது போல் நின்றது. ஏற வேண்டிய எங்கள் பெட்டி நெடுந்தொலைவில் தள்ளி நின்றது. நாலு எட்டு வைக்கவே கஷ்டப்படும் தங்ஸை இழுத்துக் கொண்டே பாதி தூரம் போனோம். கடிகாரத்தைப் பார்த்து அதன் பின் சிறிதே மெல்ல இழுத்துக் கொண்டு சென்று ஒரு வழியாக சரியான பெட்டியை அடைந்து, உள்ளே ஏறி எங்கள் இடத்திற்குப் போய் உட்கார்ந்தோம். புறப்பட வேண்டிய நேரம் 9.20. மணி அப்போது 9.14. ஆறு நிமிடத்தில் வெற்றி. அப்பாடா ...! தங்ஸிற்கு திடீரென்று ஒரு ‘பிரசவ வைராக்கியம்’! இனி பெண்களூரு போகவே வேண்டாம் என்றார் - ஆனால் தங்கையிடம் அடுத்த மாதம் வருவதாக ஏற்கெனவே ஒரு சபதம் செய்திருந்தார். அடுத்த மாதம் நிலைமை எப்படியோ ...?!

அதோடு எனக்கும் தங்ஸிற்கும் ஒரு விவாதம். பெட்டியில் ஏறி உட்கார்ந்ததும், ’எப்படியும் ரயிலைப் பிடித்து விடுவோம்னு தெரியும். ஏன்னா, நான் சாமிட்ட வேண்டிக்கொண்டேன்’ என்றார்கள். நம்ம மனசுக்குள்ள இருந்த நாட்டாமை, ‘அதெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. அப்படி நம்பிக்கையிருந்தால் காரில் வைத்து ஏன் அவ்வளவு டென்ஷன். நிச்சயமா சாமி வண்டியில் ஏத்தி உட்ரும்னு ஜாலியா இருந்திருக்கலாமே! அதனால் இப்போ சாமி நம்மளை ஏத்தி உட்டுச்சு சொல்றது செல்லாது. இது ஆட்டைக்கு சேராது’ அப்டின்னு ஒரு தீர்ப்பை நாட்டாமை எடுத்து உட்டார்!

ரயிலில் படுத்துத் தூங்கி காலையில் அரை மணி தாமதமாக மதுரை வந்து சேர்ந்தோம். தெரிந்த ஆட்டோக்காரர் காத்திருந்து பெட்டியை அவரே வாங்கி வண்டிக்கு இட்டுச் சென்றார். 7.55க்கு ஆட்டோவில் ஏறினோம். ஊரை விட்டு வெளியே வளர்ந்து வரும் எங்கள் குடியிருப்பிற்குப் போய் வீட்டு முன்னால் இறங்கினோம். மணி 8.11.  பதினாறே நிமிடம் வீட்டுக்குப் போய் விட்டோம். இதல்லாவா எங்கள் ஊர்! காலை வேளை என்றில்லை; மாலையாக இருந்திருந்தால் இன்னொரு பத்து நிமிடம் அதிகாம ஆகியிருக்கலாம். அவ்வளவே.

நம்ம ஊரு நம்ம ஊருதான். என்ன சுகம் ..! பெண்களூரை நீங்களே வச்சிக்கங்க’ப்பா!!!








 *

Thursday, November 07, 2013

694. வான தூதர் இறங்கி வந்தார் ...





*




கம்ப்யூட்டர் கைநாட்டுக்கு ஒரு உதவி என்று ஒரு பதிவிட்டேன். N.H.M. பயன்படுத்துவதில் ஒரு இடர்பாடு. முட்டி மோதிப் பார்த்தும் காரியம் ஒன்றும் நடக்கவில்லை. அதனாலேயே அந்தப் பதிவிட்டேன். பதிவும் தமிழ்மணத்தில் வர முடியாது போயிற்று. பலர் கண்களில் படாமலேயே எப்படியோ இந்த நிமிடம் வரை 102 பேர் அந்தப் பதிவு பக்கம் வந்ததாகத் தகவல் வந்தது. ஆறு பேர் ‘துக்கம்’ விசாரிக்க வந்தார்கள். அப்படியும் எனக்கு விடிவு கிடைக்கவில்லை.

பதிவிடுவதற்கு முன் தமிழ்வாசியிடம் இதைப் பற்றித் தொலைபேசியில் சொன்னேன்.   அவர் என்னை ‘அழகி’யிடம் போகச் சொன்னார். கம்ப்யூட்டரில் நாலும் தெரிந்த  அவர் சொன்னால் கேட்போம் என்று அவர் சொன்னபடி அழகியிடம் சென்றேன். அதைப் பயன்படுத்தியதும், அவள் அவசரத்திற்குப் பாவமில்லை என்று மட்டும் தோன்றியது. ஏனெனில் N.H.M. போல் இது முழுமையாகத் தெரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு N.H.M. போல் இதை தட்டச்ச முடியாது என்றிருந்தது.

என்னடா இது ... என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த போது எனக்குத் தெரிந்த ஒரு வான தூதர் எனக்குத் தெரியாத  ஒரு வான தூதரிடம் என் பிரச்சனை பற்றிச் சொல்லியிருக்கிறார். திரு திரு என்று முழித்துக் கொண்டிருந்த என் கண்கள் முன்னால் இந்த இரண்டாவது வான தூதரின் மெயில் ஒன்று வந்து நின்றது. உங்களுக்கு N.H.M.-ல் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள் என்றது. கை அலைபேசி எண் கொடுத்து ... அவர் எண் வாங்கி .. தகவல் சொன்னேன்.

சூ ... மந்திரக்காளி அப்டின்னு மந்திரம் போட்ட மாதிரி சில வேலை செய்யச் சொன்னார். முதலில் alt + 2 -ல் பிரச்சனை என்றதும் வலது பக்கம் task bar தெரியுமே அதில் வலது க்ளிக் என்றார். செய்தேன். அதில் வந்த ‘சாளரத்தில்’ (window!) alt + 2  என்பதற்குப் பதில் F4-யை போடச் சொன்னார். போட்டதும் பாதி பிரச்சனை முடிந்தது ‘மாதிரி’ இருந்தது. சில சமயங்களில் இந்தக் குறையால் N.H.M.அடிப்பதில் பிரச்சனை இருக்கலாம் என்றார்.

நன்றி சொல்லி விட்டு மறுபடி வேலையை ஆரம்பித்தால் N.H.M.தன் வேலையை மறுபடியும் காண்பிக்க ஆரம்பித்தது. ஆமாம் ... மறுபடியும் பிரச்சனை வந்தது. வான தூதருக்குத் தொலை பேசியில் அழைப்பைக் கொடுத்தேன். Team viewer போனோம். சில முயற்சிகள் எடுத்தார். விரைவில் அடுத்த ஒரு மாற்றம் சொன்னார். தட்டச்சும்போது font - latha வந்தது. அதை மறுபடி unicode font-க்கு மாற்றி அடிக்கச் சொன்னார். செய்தேன்.

பிரச்சனை தீர்ந்தது.

முதலில் வந்த, எனக்கு ஏற்கெனவே  தெரிந்த வான தூதர் - இலவசக் கொத்தனார். நான் உதவி கேட்டதைப் பார்த்து, சரியான வான தூதருக்குச் செய்தி சொல்லி, அந்த இரண்டாம் வான தூதரை எனக்கு மெயில் அனுப்ப வைத்த இ.கொத்தனாருக்குப் பெரும் நன்றி.

இரண்டாம் தூதர் ரொம்ப முக்கியமான ஆளாக இருக்கிறார். இவர் தான் N.H.M.-மென் பொருளைக் கட்டமைத்தவராம். இவர் பங்களூரில் உள்ள திரு. நாகராஜன் K.S. மும்முறை அழைத்து பிரச்சனைகளைச் சொன்னதும் சிரமம் பாராது உடனே உதவிய வான தூதர் நாகராஜனுக்கு மிக்க மிக்க நன்றி.

திரு. வவ்வாலுக்கும் நன்றி சொல்லணும் ஏனெனில் அவரும் ஒரு வழி சொன்னார்; தலைகீழாக நின்று அதைச் செய்ய எனக்கு சோம்பேறித் தனம். ஆகவே எளிதான வேலையாக இரண்டாம் வான தூதரிடம் சென்று விட்டேன்.  வவ்வாலுக்கும் நன்றி.

ப.கு. நம்மை யாரென்று தெரியாமலே, நமக்கு என்ன தேவை என்றுணர்ந்து உதவியாற்றிய இவர்களை வான தூதர்கள் என்றழைத்தால் தான் என்ன!



*

Tuesday, November 05, 2013

693. கம்ப். கைநாட்டுக்கு ஒரு உதவி ..............





*



நம்மளோ ஒரு கம்ப்யூட்டர் கைநாட்டு. ஏதோ கட்டை விரல் பதிப்பது மாதிரி கொஞ்சம் கொஞ்சம் தமிழில் தட்டச்சி ... காலம் கொஞ்சம் ஓடி விட்டது.

முதலில் ... ஆஹா! கம்ப்யூட்டரில் தமிழா என்ற வியப்பு.

பின் ஈ-கலப்பை என்றார்கள். பிள்ளையார் சுழி அதில் தான். அட .. பரவாயில்லையே.. அப்டின்னு ஆங்கில எழுத்துகள் மூலம் தமிழில் தட்டச்சியாச்சி. ஆமா, ஜெயமோகன் சொன்ன மாதிரி ”தமிங்கிலீஸை” தட்டச்சி எளிதாக தமிழில் எழுதியாயிற்று.

பின் ஈ-கலப்பை என்பதை விட N.H.M. writer பற்றிச் சொன்னார்கள். அதுவும் கை வந்தது. இதில் ஒரு லாபம் N.H.M. converter. மற்ற எழுத்துருவிலிருந்து மாற்ற வசதி .. அப்படி .. இப்படி என்றார்கள். அதையும் ஒரு கை பார்த்தாச்சு.

 வண்டி ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு ப்ரேக் விழுந்திருச்சு! ரெண்டு நாளா ஒரே போராட்டம். இப்போதும் N.H.M.-ல் தான் தட்டச்சுகிறேன். ஆனால் இந்த N.H.M. திடீரென்று ஒரு ’சாதி’ போராட்டத்திற்குள்’ என்னைத் தள்ளி விட்டது.

சில ’சாதி’க்கு சரியாக வருது. இப்போ பாருங்க ..ப்ளாக், ஈ மெயில், notepad இதுகளில் N.H.M. சரியாக வேலை பார்க்கிறது. ஆனால் word document-ல் எழுத மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. எத்தனை தடவை என் கணினியில் Alt + 2 அடிச்சிப் பார்த்தாச்சு. சில தடவைகள் கணினியில் இருந்த மென்பொருளை கழித்துப் பின் புதியதாக N.H.M. தரவிறக்கிப் பார்த்தேன். அப்படியும் தமிழில் எழுதுவேனான்னு அடம் பிடிக்குது. ஆனால் ப்ளாக் போன்ற மற்றவைகளைத் தன் ‘சாதியாக’ நினைத்து ஒழுங்காகத் தட்டச்ச உதவுகிறது. ஏன் word document-ல் எழுத முடியவில்லை

அநாதை ரட்சகனாக தமிழ்வாசியிடம் கேட்டேன். அவர் புதிய மந்திரம் ஒன்று கொடுத்தார். அது கூகுள் ஆண்டவர் போட்ட பிரசாதம். ஆனால் இதில் சில சொற்கள் ஆங்கிலத்தில் வர, அதில் தேவையானதை நாம் டிக் போட வேண்டியதிருக்கிறது. இதை விட N.H.M. எளிதாயிருந்தது. N.H.M. ரொம்ப பிடிச்சிது. அதை வச்சே ரொம்ப காலம் ஓட்டியாகி விட்டது.  

இப்போது N.H.M. writer, word document-ல் எழுத மாட்டேன் என்பதை எப்படி வழிக்குக் கொண்டு வருவது?

அதோடு converter இருப்பதும் பெரிய உதவியாக இருந்தது. N.H.M. writer மாதிரியே கூகுள் பிரசாதமும் unicode தானா. ஒரே கட்டுரையை பாதியை N.H.M. writer-லும், மீதியை கூகுள் பிரசாதத்தின் மூலமும் எழுதினால் இறுதியில் எல்லாம் ஒன்றாக இருக்குமா? இல்லை .. அந்த இரண்டும் இரு வேறு வேறு ஒட்டாத சாதிகளா?

மக்களே ..... உதவுங்கள்.



*
இப்போ இன்னொரு பிரச்சனை. இப்பதிவு பதிவர்களிடையே வேகமாகப் போகணும்னு நினச்சேன். ம்ம்.. நின்ச்சது எங்க நடக்குது. தமிழ் மணத்தில் இணைத்தால் கீழே வர்ரது மாதிரி வருது. தமிழ் மணப் பக்கத்தில் வரமாட்டேங்குது.

ஏண்டாப்பா ... இப்படி ஒரு ரெட்டைத் தாழ்ப்பாள்!!!!



thamizmanam


Your Blog is Aggregated under FREE Aggregation Category


Monday, November 04, 2013

692. சின்னச் சின்ன கேள்விகள்






*




இந்தப் படம் இப்பதிவில் எதற்கு?   - முதல் கேள்வி !!!

**************************** 

இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள  வேண்டுமா?

 சில சமயங்களில் அடிப்படையே ஒரு கேள்விக்குறியாக நின்று விடுகிறது. இலங்கை நம் அருகில் இருக்கும் நாடு. அதனை நம் ‘பெட்டைக்குள்’ வைத்துக் காக்க வேண்டும். அது தான் நல்லது. இதற்குக் காரணம் கேட்டால், ஒரு காலத்தில் அமெரிக்கப் படைகளின் தளமாக ஆகிவிடும் என்று ஒரு பயம் என்றார்கள். இப்போது கேட்டால் சீனாவின் கைப்பொமையாக ஆகி விடுமோ என்ற பயம் என்கிறார்கள். நமக்குத் தான் எம்புட்டு பயம்?! 

இப்படியெல்லாம் தடைக் கற்கள் போட்டாலும் நடப்பது எல்லாமே நமக்கு எதிராகத்தான். நாம் ‘ஆசைப்பட்டு’ இலங்கைக்கு இலவசமாக பல உதவிகள் செய்து வருகிறோம். சீனா கடன் கொடுத்து வசதிகளைச் செய்து தருகிறது. ஆனாலும் இலங்கை அரசின் நட்பு நம்மோடு இல்லை; சீனாவோடு தான்!

நம் நாட்டு மீனவர்கள் அவர்கள் நாட்டு எல்லையில் மீன்களை அள்ளிக் குவித்துக் கொண்டு வருகிறார்கள் என்று அரசின் கடற்படையே நம்மை அள்ளிச் செல்கிறது. அதைத் தடுக்க நம் தீவை அந்த நாட்டிற்குத் தாரை வார்த்தாகி விட்டது. கையை விட்டு காசும், தீவும் போகுது; அங்கிருந்து ஏதும் வருவது கிடையாது. இது நம் நிலை.

இந்திய அரசு ஆசை காட்டி, நாம் கொடுக்கிற ‘மிட்டையை’ வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, மாமான்னு சீனாக்காரனை அழைத்து அவனோடு ஆசையாக இருப்பது இலங்கை. நம் நாட்டு அயல்நாட்டுக் கொள்கை இப்படி அல்லோலப்படக் கூடாது.

இப்போது இலங்கையில் காமன்வெல்த் மாநாடாம். அதென்ன காமன் வெல்த் என்றால் எனக்குக் கிடைக்கும் பதில் = பழைய அடிமைகள் + பழைய வெள்ளைக்கார எசமான் துரைகள்! - அப்டின்னு பதில் வருது. இங்கிலாந்தின் அரசின் தலைமையில் அவர்களிடம் அடிமையாக இருந்த பழைய காலனி நாடுகளின் - அடிமைகளின் - கூட்டு. ஆண்டவன் தன்னைப் ‘பீற்றிக் கொள்ள’ அடிமை நாடுகள் கொடுக்கும் புதிய தண்டம் இது. வரி, வட்டி, கிஸ்தி என்று பொருளாகக் கொடுக்காமல் மரியாதையைத் தண்டமாகக் கொடுக்கும் புதிய காலனி ஆதிக்கம் இது.

இப்படி ஒரு அமைப்பே ஒரு கேலிக் கூத்தாகத் தெரிகிறது.  இதில் ஏன் இத்தனை நாடுகள் இணைந்து ஒட்டுமொத்தக் காணிக்கையை பழைய எஜமான்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே புரியவில்லை. 

ஆனால் இப்போது நம் நாட்டோடு தொடர்பு கொண்ட ஒரு இனம் அழித்தொழிக்கப்பட்ட நாட்டில், இப்படிப்பட்ட  ஒரு அடிமைத்தனமான மாநாட்டில், நம் அரசு கலந்து கொள்வது எந்த அளவு முறையோ? ஒரு மாநிலமே மொத்தமாக நமது அரசு கலந்து கொள்ளக் கூடாது என்னும் போது ‘வெளிநாட்டு உறவு’ மத்திய அரசின் முடிவுகளில் மட்டுமே உள்ளது என்று மார்தட்டும் காங்கிரசிற்கு தேர்தலில் மட்டும் தான் தமிழகம் பதிலளிக்க வேண்டுமோ?

இன்னொரு கேள்வி: 

இதில் ஏன் அமெரிக்க நாடு ஒரு உறுப்பினராக இல்லை?  ஒரு வேளை போரிட்டு வெற்றி பெற்றதாலோ    ...?

***********************************

கேள்வின்னு வந்தால் நிறைய கேள்விகள் வருதே.

எனக்கு போராடுபவர்கள் மேல் எப்போதும் மரியாதை உண்டு. அது கல்லூரி ஆசிரியர்களின் போராட்டமாக இருக்கட்டும்.. இல்லை ... கல்லூரிக்குள்ளேயே நடக்கும் போராட்டமாக இருக்கட்டும். இல்லை  கூடங்குளத்திற்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும். போராடுபவர்கள் எப்போதுமே தங்கள் சுய நலன்களைத் தாண்டி பொது நலனுக்காக யோசிக்கிறார்கள். போராட்டங்களில் ஈடுபடும் மனமே பெரிது. அதிலும் இதனால் இழப்புகள் உண்டு என்று தெரிந்து போராட்டங்களில் ஈடுபடுவோர், தொடர்ந்து இழப்புகளைத் தாங்கி போராடுவோர் மரியாதைக்குரியவர்களே.

இந்த வகையில் நக்சலைட்டுகள் நம் கனிம வளங்கள், தாழ்த்தப்பட்ட ஆதிவாசிகள் இவர்களின் நலனுக்காகப் போராடுவது பாராட்டுகுரியதே. அதிலும் தாங்களே காட்டுவாசிகளாக மாறி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல இழப்புகளுக்கு உள்ளாகும் இந்தப் போராளிகள்  மக்கள் தொடர்பான பல போராட்டங்களை நடத்துபவர்கள் என் மரியாதைக்குரியவர்களே.

ஆனால் இந்தப் போராட்டங்களை நடத்துவோர் பல முறை ‘குறி தவறி’ தேவையில்லாத ஆட்களைக் கொல்வது ஏனென்று தெரியவில்லை. பாவப்பட்ட கீழ்நிலை காவலர்களைக் கொல்வது, சாதாரண மக்களில் சிலரை அழிப்பது ஏனென்று தெரியவில்லை. குறி வைத்தால் ‘சரியான’ குறியாக வைக்க வேண்டாமா?  அவர்களின் தியாகங்களும், குறிக்கோளும் சரியான குறிவைத்துப் போக வேண்டாமா?

*****************************************