Tuesday, March 19, 2013

646. நியாயமாரே.... மன்னிச்சிக்குங்க
*


எனக்கும் பரதேசி படத்திற்கு ஒரு “திறனாய்வு” எழுதிடணும்னுதான் ஆசை. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் படங்களின் இறுதியில் ‘பொளேர்’னு மூஞ்சில அறைந்து பாலா ஆட்களைத் தியேட்டரை விட்டு வெளியே அனுப்பினார். இப்படத்தில் அந்த ‘அறை’ இல்லை என்று நினைக்கிறேன்.

விக்ரமும், சூர்யாவும் பாலாவினால் புதிய அவதாரமெடுத்தார்கள்.  பாலா தன் படத்திற்குத் தேர்ந்தெடுத்ததால் ஆர்யா, விஷாலுக்கு பட உலகில் மரியாதை உயர்ந்தது. அனேகமாக அதர்வா இதில் இரண்டாவது லிஸ்ட்டில் வருவார் என நினைக்கிறேன்.. அதர்வா மக்குப் பையன் என்று படத்தின் முந்திய பாதியில் இருந்து, சோகராசா ஆகிறார் இரண்டாம் பாகத்தில்.நன்றாகவே செய்துள்ளார்.

படம் பார்த்த போது ......

ஒருசின்ன வருத்தம்.  முதல் நாள் தியேட்டரில், எனக்கு முன்னால் இருந்தவர்களின் பின் தலைகளைப் பார்த்தேன். வழுக்கைத் தலைகளே மிகவும் கொஞ்சம். வெள்ளைத் தலை ஏதுமில்லை. I was the only old odd  man out !

 கதாநாயகன்  ராசாவுக்கு  costume இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ரோம சாம்ராஜ்ய அடிமைக் கதாநாயகன் போடுற சட்டை மாதிரி இல்லாமல் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

பஞ்சகச்சம் மாதிரி வேட்டி இல்லாமல் ஒரு மூணு முழம் வேட்டியைக் கட்டி உட்ருக்கலாமேன்னு நினச்சேன்.

வேதிகாவிற்கு முரட்டுத்தனமா போட்டிருந்த கண்மை நல்லாயிருந்தது.

முதல் பாதியில் எல்லோரும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார்கள் - வறுமையில் செம்மை.

கதாநாயகன் நாள் முழுவதும் விறகு வெட்டி கூலி இல்லாமல் அழுகும் ஒரு சீனைத் தவிர அவனது கிராம மக்களுக்கு வேறு ஏதும் பெரிய சோகம் இல்லை. அவர்கள் வறுமையால் அவதியுறுவதாகக் காட்டியிருந்தால் தங்கள் வேர்களைப் பிடுங்கிக் கொண்டு ஊரோடு கங்காணி பின்னே போவதற்கான பொருள் முழுமையாகத் தெரிந்திருக்குமோ? பின் பாதியின் சோகமும் இன்னும் வலுவாக இருந்திருக்குமோ?

இரு முறை ராசா தன் சாதியால் தாழ்த்தப்பட்டவன் என்பது படத்தில் குறியீடுகளாகக் காண்பிக்கப்படுகின்றன.  (சொல்ல வருவதை வார்த்தைகளால் இல்லாமல் காட்சி மயமாக்குவதில் பாலா சமர்த்தர் என்பது என் எண்ணம். நந்தாவில் ராஜ்கிரண் சொல்லும் வசனமில்லாத ஒரு காட்சி மிக பயங்கரமாக இருக்கும்.) சாதிய வன்முறைகள் முதல் பாதியில் இன்னும் அதிகமாக இருந்திருந்தால் அவர்களின் வலி இன்னும் நமக்குப் புரிந்திருக்குமோ?

இறுதிக் காட்சியில் படத்தை ஒரு பாடலோடு முடிக்காது, ராசாவின் அவலக்குரலும் அழுகையும் பின்னணியாக ஒலிக்க, நாற்புறமும் உள்ள மலைகளை காமிரா காண்பித்ததும் இந்த நான்கு மலைகளுக்கு நடுவே தான் இந்த நால்வரின் வாழ்க்கையும், விதியும் என்று காட்சிகளாக  முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?

பாடல்கள் நன்றாக இருந்தன. ஆனால் பின்னிசைக் கோர்வை - RR - படத்திலிருந்து என்னைப் பிரிக்கவே செய்தன. தன் மாமா பம்பாய் படத்தின் கலவரத்தில் நம்மை ஒன்ற விடாமல் இசைக் கோர்வை அமைத்தது போல்வே இந்தப் படத்தில் மருமகன் செய்ததாகத் தோன்றியது.

ராசா தேயிலைக்காட்டை விட்டு ஓடும் அந்த இரவு வேளையில் கொடுத்த இசை இம்சைசெய்தது. படத்தின்  இறுதியிலும் அதுவே நிகழ்ந்தது. பல இடங்களில் இசை இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

சென்ற சனிக்கிழமை மாலை விஜய் டிவியில் இப்படத்திற்காக விளம்பர ஒளிப்பதிவு ஒன்று நடந்தது. கதாநாயகன், நாயகிகள் இருவர் தங்கள் இயக்குனருக்குச் சில கேள்விகள் தொடுத்தார்கள். வழக்கமாக இது போன்ற நிகழ்வில் இயக்குனரும் அங்கே அவர்களோடு இருப்பார். ஆனால் இங்கே பாலா தன் அலுவலகத்தில் இருந்திருப்பார் போலும். கேட்ட கேள்விகளுக்கு அவர் அங்கிருந்து பதில் சொல்வதாக இருந்தது. இதில் ஒரு கேள்வி - தன்ஷிகா கேட்ட ஒரு கேள்வி - பாலாவைச் சுற்றியிருக்கும் ஒரு halo - ஒளிவட்டம் - பாலா தன்னைச் சுற்றிப் போட்டிருக்கும் வேலி பற்றிய கேள்வி அது.   பாலா அரங்கில் இல்லாமல இருந்த ஒன்றே இக்கேள்விக்கான அவரது பதிலாக இருந்தது. அதோடு அவரது பதில்களிலும் ஒரு தெளிவான நேர்மை இருந்தது.

தன்ஷிகாவை இந்த நிகழ்ச்சியில் பார்த்தேன். அந்த நிகழ்ச்சியில் she looks just good.  ஆனால் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டு படத்தில் அவ்ரைப் பார்த்த போது அப்படி ஒரு அழகு. எப்படி ?

இது போன்ற ஒரு கருக்களத்தை எடுக்க தனி தைரியமும் தன்னம்பிக்கையும் மிக அதிகமாகத் தேவை. அவை இரண்டும் பாலாவிடம் கொட்டிக் கிடப்பதில் மகிழ்ச்சி.

---- இப்படியெல்லாம எனக்குப் பல கேள்விகள் .. கருத்துகள். இவைகளை எல்லாம் வைத்து ஒரு திறனாய்வு எழுதிவிடலாமாவென நினைத்தேன். ஆனால் புயலென, மாபெரும் வெள்ளமென வந்திருந்த திறனாய்வுகளைப் பார்த்ததும் வேறு ஒரு முக்கியமான கோரிக்கைகளை நமது பதிவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலே அதிகமாகப் போய்விட்டது. மக்கள் என் கோரிக்கையை வாசித்து என் மீது பெரும் கோபம் கொள்ளலாம். கோவம் கொண்டு விட்டு போகட்டும் என்ற எண்ணமே மீதியாக நின்றது. அவர்களது கோபம் எத்தகையது என்பது எனக்குத் தெரியாதா என்ன? இந்தப் பதிவிலேயே எல்லோரின் கோவமும், பயமும் நன்கு புரிந்து விட்டதே!

வாசித்த திறனாய்வுகளில் மிகச் சிறந்த திறனாய்வு என்று ஏதாவது ஒன்றை நான் கருதியிருந்தால் இங்கே அதனை மேற்கோள் காட்டியிருப்பேன். அதற்காகவே கண்ணில் பட்டவை அனைத்தையும் வாசித்தேன். அப்படி ஏதும் என் கண்ணில் படவேயில்லை. ஒரே ஒரு பதிவில் //சாமிக்கு முன் கங்காணி இருப்பார் சாமியை அதர்வா நிமிர்ந்து நின்றுவணங்குவார் கங்காணியை காலில்தொட்டு முதுகைவளைத்து கூனி வணங்குவார். இப்படி ஒரு சில சீன் இருக்கின்றது.// என்று வெங்காயம் என்று ஒரு பதிவில் பார்த்தேன். 
அதன் ஆசிரியர் யாரென்று தெரியாது.  இன்னொரு திறனாய்வு. இப்பதிவை இட்ட பின் இன்று - 24.3.13 - வாசித்த ஒரு திறனாய்வு பிடித்தது. தேவா எழுதியது. தன் வாழ்வியலோடு இப்படத்தின் கருக்களத்தை ஒத்து எழுதியுள்ளார். அப்பதிவை இங்கே காண்க


இப்படிப் பட்ட நல்ல திறனாய்வுகள் ஏதுமின்றி,  மிக மட்டமான திறனாய்வுகளே நிறைந்து கிடந்தன. ஒரு படத்திற்குத் திறனாய்வு - அதுவும் கொஞ்சம் ஆழமான, சீரியசான படத்திற்கு திறனாய்வு எழுதத் தெரிந்து எழுதினால் தான் அது அந்தப் படத்திற்கும் மதிப்பு; எழுதுவோருக்கும் மரியாதை. ஆனால் யாருக்கும் திறனாய்வு எழுதத் தெரியவில்லை என்பதே நான் வாசித்த அனேக திறனாய்வுகளின் தகுதி. (எனக்கும் எழுதத் தெரியாது என்பதால் தான் நான் அதிகமாக திரைப்படத் திறனாய்வுகள் எழுதுவதில்லை!)

தயவு செய்து  பல தமிழ், ஆங்கில தினசரிகளிலும், நூல்களிலும் வரும் ஏதாவது சில நல்ல  திறனாய்வுகளை வாசித்துப் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் புரியும். தமிழில் பொது ஊடகங்களில் எழுதுவோரும் நம் பதிவர்கள் மாதிரிதான்.

இந்த விஷயத்தில் பதிவர்களிடம் இருக்கும் மிக மட்டமான இயல்பு அவர்களது கதைச் சுருக்கம் தான். முக்காலே மூணு வீசம் எழுதிவிட்டு மீதியை வெண்திரையில் காண்க என்று எழுதும் பதிவர் பெருமக்களே அதிகம். This is nothing but atrocious stupidity.  அதாவது தமிழில் - இது மகா மட்டமான முட்டாள்தனம். வார்த்தைகள் முரட்டுத் தனமாக உள்ளது. தெரிந்து தான் பயன்படுத்தியுள்ளேன். பலருக்கும் கோபம் வரலாம். வரட்டுமே ....!  அதிகமான திறனாய்வுகள் இந்த வகையின் உள்ளே தான் வருகின்றன இப்படி எழுதி வாசிப்பாளர்களுக்குக் கதை தெரிந்து விடுகிறது. பிறகு படம் பார்க்கும் ஆர்வம் குறையாதா? அதைக் கூட புரிந்து கொள்ள முடியாதா உங்களால்! .அதிலும் வரும் படத்துற்கெல்லாம் யாருங்க கேட்டா திறனாய்வுகள்? எல்லாக் குப்பைகளுக்கும் திறனாய்வுகள்! இப்படி எழுதி பவர் ஸ்டார்களைத் தான் உற்பத்தி செய்கிறீர்கள்.

இன்னொரு வகை திறனாய்வாளர்கள் - கதையில் வரும் அத்தனை பாத்திரங்களின் கதைப் பெயர்கள், டெக்னிஷியன்களின் பெயர் என்று  அத்தனையையும் அவர்கள் திறனாய்வில் கொட்டித் தீர்த்து விடுவார்கள். அப்போது தான் அவர்கள் படத்தை அப்படி  உன்னிப்பாகப் பார்த்திருக்கிறார்கள் என்று வாசகர்கள் நினைப்பார்களாம். ஆட்களின் பட்டியல் எதற்கு?

இதில் இன்னொரு மட்டமான ரகம் - Cinema is just for recreation என்று ஒரு கூட்டம். இவர்கள் பேசாமல் எம்.ஜி.ஆர். படங்களும், பவர் ஸ்டார் படங்களும் மட்டும் பார்த்திருந்தால் போதுமே. எதற்கு பாலா மாதிரிஆட்கள் எடுக்கும் படங்களைப் பார்த்துத் தொலைக்க வேண்டுமென்று தெரியவில்லை. இவர்களும் திறனாய்வு என்று கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போடுவார்கள்.

நல்ல படங்களுக்கு எழுதுங்கள். கதையெல்லாம் வேண்டுமென்றால் நாங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுகிறோம். நல்லவைகளைப் போற்றுங்கள்; தவறுகளைச் சொல்லுங்கள்.சாமி சத்தியமா கதைகளை நீட்டி முழக்கி வசனமெல்லாம் எழுதி தரமிறங்காதீர்கள்.

திறனாய்வு பெண்கள் போடும் bikini மாதிரி இருக்கணுமுங்க.  It should be brief but still it never exposes the vital parts! -இப்படித்தான் சொல்வாங்க. உங்கள் திறனாய்வுகளைப் படித்து, அதன் பின் படம் பார்த்து உங்கள் பார்வையோடு நாங்கள் இணையவோ, மாறுபடவோ வேண்டும். படம் பார்க்கும் போது தான் உங்கள் திறனாய்வின் தரம் எங்களுக்குப் புரிய வேண்டும். இப்படி எழுதப் பழக ஆரம்பியுங்கள். வராவிட்டால் எழுத வேண்டாம். யார் குடியும் முழுகி விடாது!

எட்டு வருஷத்துக்கு முன் நான் எழுதிய இடுகை இன்றும் என்றும் நாம் மாறவே போவதில்லை என்பதற்கான ஒரு சின்ன சான்று.


*

பின்னூட்டங்களில் இதுபோன்ற வழமையான சில பின்னூட்ட்ங்களைத் தவிர்த்து விடலாமே!

1.  நான் என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று எவனும் எனக்குச் சொல்ல வேண்டியதில்லை.

2.  உனக்கு எழுத வரவில்லையென்றால் ........ .... கிட்டு போ. ஆனால் நான் எழுத வேண்டாம் என்று சொல்ல நீ யார்?

3.  கருத்துக்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. அதை இங்கே மறுக்க நீ யார்?

4.  எனக்குத் தோணுவதை நான் எழுதுவேன். உனக்கு வேண்டாமா ..? படிக்காமல் போ.

5.  இங்கே என்ன இலக்கியமா படைக்கிறோம். உட்டுட்டு போ.

*


*

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பின்னூட்டம் உட்பட எல்லாவற்றையும் நீங்களே சொல்லி விட்டீர்கள் ஐயா...

பலரின் அலசல்களின் அலசல்களை அறிந்தேன், ரசித்தேன் அவ்வளவே...

நன்றி...

அ. வேல்முருகன் said...

எல்லாம் சொல்லிட்டீங்க அப்புறம் எதுக்கு மன்னிச்சிக்குங்க

நேர்மையாக சொல்லி விட்டோம்
மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்

ஜீவன் சுப்பு said...

//திறனாய்வு பெண்கள் போடும் bikini மாதிரி இருக்கணுமுங்க. It should be brief but still it never exposes the vital parts! -இப்படித்தான் சொல்வாங்க. உங்கள் திறனாய்வுகளைப் படித்து, அதன் பின் படம் பார்த்து உங்கள் பார்வையோடு நாங்கள் இணையவோ, மாறுபடவோ வேண்டும். படம் பார்க்கும் போது தான் உங்கள் திறனாய்வின் தரம் எங்களுக்குப் புரிய வேண்டும். இப்படி எழுதப் பழக ஆரம்பியுங்கள். வராவிட்டால் எழுத வேண்டாம். யார் குடியும் முழுகி விடாது!//
நறுக்குன்னு நாளே வரி . ஒரு குறிப்பிட்ட வாசிப்பிற்கு பின் சினிமா விமர்சனங்கள் சலிப்பு தட்டுவதாகவே இருக்கிறது . கதையை சொல்லாமல் ,ஏதேனும் ஒரு காட்சியையோ , வசனத்தையோ எடுத்துக்கொண்டு அதன் அழகியலை, முரண்பாடுகளை , அதன் தொடர்ச்சியான அனுபவங்களை லயித்து ,ரசித்து எழுதுவார்களேயானால் நன்றாக இருக்குமென்று நினைக்கின்றேன்.
worldcinemafan எனும் தளத்தில் காட்சிகளை பாலா எடுத்திருந்த விதத்தை சிலாகித்து ஒருவர் எழுதியிருந்தது எனக்கு புதிதாக இருந்தது, பிடித்திருந்தது .

துளசி கோபால் said...

நான் என்னன்னு பின்னூட்டம் போட?

அஞ்சுதானே கொடுத்துருக்கீங்க!

சாய்ஸ்லே வுடவேணும்போல:-)

ஜீவன் சுப்பு said...

//திறனாய்வு பெண்கள் போடும் bikini மாதிரி இருக்கணுமுங்க. It should be brief but still it never exposes the vital parts! -இப்படித்தான் சொல்வாங்க. உங்கள் திறனாய்வுகளைப் படித்து, அதன் பின் படம் பார்த்து உங்கள் பார்வையோடு நாங்கள் இணையவோ, மாறுபடவோ வேண்டும். படம் பார்க்கும் போது தான் உங்கள் திறனாய்வின் தரம் எங்களுக்குப் புரிய வேண்டும். இப்படி எழுதப் பழக ஆரம்பியுங்கள். வராவிட்டால் எழுத வேண்டாம். யார் குடியும் முழுகி விடாது!//
நச்சுன்னு நாலு வரி .ஸ்டீரியோ டைப்பில் வரும் விமர்சனங்கள் சலிப்பு தட்டுவதேன்னவோ உண்மைதான் .கதையை சொல்லாமல் ஒரு காட்சியையோ , வசனத்தையோ , ஒரு குறிப்பிட்ட இசைகுறிப்பையோ அதன் அழகியலையும் , முரண்பாடுகளையும் , அது தந்த அனுபவங்களையும் ரசித்து லயித்து எழுதுவார்களேயானால் மிக சிறப்பாக இருக்கும்.

குட்டிபிசாசு said...

//கதாநாயகன் ராசாவுக்கு costume இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ரோம சாம்ராஜ்ய அடிமைக் கதாநாயகன் போடுற சட்டை மாதிரி இல்லாமல் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.//

கதை 70 வருடத்திற்கு முன் தானே நடக்கிறது. எனக்கும் இந்த உடையமைப்பு உறுத்தியது. ஆனால் உடையமைப்புக்கு தேசிய விருது கொடுத்திருக்கிறார்கள்.

…//பஞ்சகச்சம் மாதிரி வேட்டி இல்லாமல் ஒரு மூணு முழம் வேட்டியைக் கட்டி உட்ருக்கலாமேன்னு நினச்சேன்.//

நாலு முழம் வேட்டி தானே!

…எனக்குத் தெரிந்து தமிழர்கள் பெரும்பாலும் பஞ்சகச்சம் போல வேட்டி கட்டுவதில்லை.

வவ்வால் said...

தருமிய்யா.

//இரு முறை ராசா தன் சாதியால் தாழ்த்தப்பட்டவன் என்பது படத்தில் குறியீடுகளாகக் காண்பிக்கப்படுகின்றன. (சொல்ல வருவதை வார்த்தைகளால் இல்லாமல் காட்சி மயமாக்குவதில் பாலா சமர்த்தர் என்பது என் எண்ணம். //

நீங்க தான் மெச்சிக்கணும் :-))

கஷ்டப்பட்ட,சுரண்டப்பட்ட ஒரு இனம்மக்களின் அவலத்தை திரித்து ,பொதுமைப்படுத்திக்காட்டிவிட்டார்.

இந்தியாவில் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் என்றாலே தாழ்த்தப்பட்ட,மலைவாழ் ,ப்ழங்குடியின மக்களே, இலங்கையிலும் அதே கதை தான்.

இது பற்றி ஏகப்பட்ட ஆய்வு நூல்களும் வந்துள்ளது. ஆனால் பாலா ஏதோ பொதுவாக கிராம மக்கள் என்பது போல இயன்ற வரையில் சித்தரித்துள்ளார்.

கங்காணியின் காலைத்தொட்டு வணங்குவது குறியீடு என்றாலும் ,ஏன் வெளிப்படையாக ஆதிக்க சாதியினர் தான் எல்லா சுரண்டலுக்கும் காரணம் என அழுத்தமாக சொல்லவில்லை?

வெள்ளைக்காரன் சுரண்டினான் என்பதை மட்டுமே பொத்தாம் பொதுவாக வரலாற்றில் பதிய வைத்துள்ளோம், வெள்ளைக்காரன் பெயரால் இந்திய ஆதிக்க சாதியினர்,உயர்குடியினர் இந்தியாவையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் சுரண்டினர் என்பதே உண்மை.

பால பொதுமைப்படுத்தி காட்டுவதில் வென்றுவிட்டார் எனலாம், ஏன் எனில் ஒரு பதிவர் எழுதுகிறார், அதர்வாவுக்கு ஊரில் வேலை எதுவும் இல்லை என்பதால் பறை அடிக்கும் வேலை செய்து பிழைக்கிறார்னு ?

என்ன மாதிரி புரிதலை கொண்டிருக்கிறார்கள்,இவர்களுக்கு சமூகவரலாறு என்றால் என்னவென்று எக்காலத்தில் புரியப்போகிறதோ?

பாலா நல்ல ஒரு(டெம்ப்ளேட்டான )படைப்பாளி ஆனால் நேர்மையற்றவர்!!!

சீனு said...

// சேதுவில் ராஜ்கிரண் சொல்லும் வசனமில்லாத ஒரு காட்சி மிக பயங்கரமாக இருக்கும்//

நந்தா?

Thekkikattan|தெகா said...

hahaha... Dharumi, செம கடுப்பாகிட்டீங்க போல ..:)

தருமி said...

சீனு,
தவறைத் திருத்தி விட்டேன்.
நன்றி

தருமி said...

குட்டிபிசாசு

நாலு முழத்தைக் கிழிச்சி மூணு முழமாக்கி முழங்காலுக்கு கீழே முடியுமே அப்படி பாவப்பட்டதுக வேட்டி கட்டி பார்த்திருக்கிறேன்.

Anonymous said...

இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

காரிகன் said...

முகத்தில் கருப்பு சாயம் பூசி இன்ன பிற அவலட்சன வேஷம் பூண்டு தன்னுடைய கதாபாத்திரங்களை உலவ விடும் பாலா என்னும் வேடதாரி இன்னும் எத்தனை படங்கள்தான் இது போல படைக்க காத்திருக்கிறாரோ? வவ்வால் கூறிய கருத்துக்கள் மிக சரியானவை. வியாபார யுக்திக்காக பாலா செய்யும் விஷமத்தனம் இங்கே காவியமாக்கப்படுகிறது. உண்மையான மலைவாழ் மக்களின் வாழ்கையை சொல்வதற்கு பதிலாக தனக்கு தெரிந்த அல்லது தனக்கு சுலபமாக வரக்கூடிய அவன் இவன் பட கிராமத்து மாந்தர்களை கொண்டு தேநீர் விருந்து கொடுத்திருக்கிறார் பாலா இந்த பரதேசி படத்தில். பாலாவினால் இந்த சூனிய வட்டத்தை விட்டு வெளியே வரவே முடியாது.

TBR. JOSPEH said...

மணிரத்தினம் ஒருவித வக்கிரமக்காரர் என்றால் பாலாவும் அப்படித்தான். தன்னுடைய படங்களில் எந்த அளவுக்கு மென்மை உள்ளதோ அதே அளவுக்கு வயலன்சும் இருக்க வேண்டும் என்பவர் மணி. எந்த கதையானாலும் தன்னுடைய கருப்புப் பார்வையில் (Dark view) பார்ப்பது என முடிவெடுத்தவர் பாலா. இவர்களுடைய படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை படத்தை பார்க்காமலே முடிவெடுத்துவிடலாம்.

காரிகன் said...

பாலா ஒரு சைக்கோ தனம் கொண்ட ஒரு தீவிர ஆணாதிக்க மனிதர். இவரின் படங்களை ஹாரர் என்ற ரீதியில் சேர்க்கலாமே தவிர மற்ற படங்களோடு ஒப்பிடுவது நியாயமில்லாதது. மேலும் இவர் படத்தில் வரும் ஆபாச வசனங்கள் இவரின் "உயர்ந்த" சிந்தனையை அப்பட்டமாக நமக்கு தெளிவு படுத்துகிறது. இவரை ஆராதிக்கும் கூட்டம் ஒரு பண்பாடற்ற கீழ் நிலை கூட்டம் என்பதில் சந்தேகேமே இல்லை.

தருமி said...

காரிகன்,

உங்கள் ஒவ்வொரு சொல்லையும் எழுத்தையும் எதிர்க்கிறேன்.

இன்றைய இயக்குனர்களில் நான் மிகவும் மதிப்பது பாலாவை. நிச்சயமாக நான் ஒரு ’பண்பாடற்ற கீழ் நிலை கூட்ட’த்தில் உள்ளவன் எனபதை தீவிரமாக மறுக்கிறேன்.

காரிகன் said...

உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒத்துப்போகவில்லை என்பதால் நாம் புன்னகையோடு விலகி செல்வது நன்று. பாலா என்ன இதோடு நின்று விடவா போகிறார்? அவர் இனிமேல் எடுக்கப்போகும் படங்களை பார்த்து ஒரு வேளை நீங்கள் என் கருத்தோடு இணக்கமாக போகக்கூடிய வாய்ப்பிருக்கிறது. பாலாவை ரசிப்பதில் தவறில்லை ஆனால் அவரை தமிழ் சினிமாவின் அவதார புருஷனாக பார்ப்பதில்தான் எல்லா சிக்கல்களும். இதைதான் நான் சொல்ல விரும்பினேன்.

தருமி said...

//நாம் புன்னகையோடு விலகி செல்வது நன்று. //

நன்றி.

இதற்குப் பின் நீங்கள் சொன்னதை விட்டு விடுவோமே!!

Post a Comment