Tuesday, August 27, 2013

678. BUTTERFLIES IN ALAGARKOVIL -- A VIDEO

* *

Monday, August 19, 2013

677. என் முதல் காதலி




*

இணைய இதழ் அதீதம் தருமி பக்கத்தில் எழுதிய கட்டுரையின் மறுபதிப்பு



*

தருமி  பக்கம்  -  என்  முதல்  காதலி (4)


இரண்டாம் முறையாக பொன்னியின் செல்வன் வாசித்துக் 
கொண்டிருந்தேன். 


வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறார். அவரைச் சந்திக்க குந்தவி தேவி உயர்த்தி போடப்பட்ட கொண்டையுடன், ஒல்லியாக .. ஆனால் உயரமாக ராஜ கம்பீரத்துடன் வருகிறார். இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஒளிந்திருந்த காதல் வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகத்தின் நடுப்பகுதியில் இது நடக்கிறது என்று நினைக்கிறேன். அப்போது எப்படியோ முயன்று பார்த்து விட்டேன். முடியவில்லை. நானும் குந்தவியைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் – கொஞ்சம் பயத்தோடு! முதல் காதல் என்பதால் வந்த பயம் பாதி; அதோடு வந்தியத்தேவனும் காதலிக்க ஆரம்பித்து விட்டாரே என்று நினைத்தேன். ஆயினும் அப்போது நானே வந்தியத்தேவன் ஆகி விட்டேனே! பிறகென்ன … காதல் வயப்பட்டால் கற்பனை வரும். கற்பனை கனவுகளாக விரிய,  அப்படியே மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகைக்கு கீழ் படுத்துத் தூங்கி விட்டேன்.


மதியம் இரண்டு மூன்று மணி இருக்கும். தூங்கிக் கொண்டிருந்த என்னை எங்கள் தெரு பசங்கள் தட்டி எழுப்பினார்கள். அன்று எங்களது S.S.L.C. தேர்வு முடிவுகள் வெளி வந்திருந்தன. செய்திகளை முந்தித் தரும் தினசரியுடன் பசங்கள் ரொம்ப சோகமாக என்னை எழுப்பினார்கள். என் எண்ணைத் தேடி அது இல்லாத அதிர்ச்சி அவர்களுக்கு. அங்கு வந்தவர்களில் சில சந்தேகக் கேசுகளும் இருந்தார்கள். ஆனால அவர்களே பாஸாகி விட என் எண் இல்லாததால் அதிர்ச்சியோடு என்னை எழுப்பினார்கள். செய்தி சொன்னார்கள். பேப்பரை வாங்கிப் பார்த்தேன். என் எண் இல்லை. கொஞ்சம் யோசித்து மறுபடி பார்த்தேன். என் எண்ணோடு மொத்தம் நூறு எண்களை மொத்தமாக ஸ்வாகா பண்ணியிருந்தார்கள். அட .. இப்படியா என்று தெளிந்து, இருந்தும் அடுத்த தினசரி வாங்க நண்பர்களோடு புறப்பட்டேன்.


பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு மூன்றையும் முன்பே வாசித்து விட்டேன். பொ.செ. மட்டும் இது இரண்டாவது தடவை வாசித்தேன். மூன்றாம் முறை 60-களின் கடைசியில் கல்கியில் மீண்டும் வந்த போது வாசித்தேன். இரண்டாம் தடவை வாசிக்கும் காலத்தில்  தமிழ்நாட்டு ராஜ பரம்பரைகளோடு ஊறிப் போய் விட்டேன். எவ்வளவு தூரம் என்றால் சிவகாமியின் சபதத்தில் மாமல்லர் குதிரையில் போய்க்கொண்டிருக்கும் போது அவரது ஒற்றர் தலைவன் பெண் வேடத்தில் எதிரில் வருவான். பெண்ணைப் பார்த்ததால் மறுபடியும் அவளைப் பார்க்காமல் மன்னன் குதிரையில் போய் விடுவார். ஆஹா .. மன்னன் என்றால் இவனல்லவோ மன்னன் .. அப்டின்னு பெருமூச்சு விட்டுக் கொண்டதோடு நானும் அந்தக் காலத்து ராஜா மாதிரி இனி ‘சைட்’ அடிக்கக் கூடாது என்ற மனோதிடத்தில் சில காலம் இருந்தேன். நண்பர்களுக்கும் அதை உபதேசித்து … அடி வாங்கினேன்.


பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் இரண்டு ஆள் உயரத்திற்கு ரோட்டில் பள்ளம் தோண்டி மண்ணை வெளியே அள்ளிப் போட்டிருந்தார்கள். அடி மண் மேலாகக் கிடந்தது. இந்த மண்ணில் தானே அந்தக் காலத்து மக்கள் நடந்திருப்பார்கள் என்று நினைத்து, ஒருவரும் பார்க்காத நேரத்தில் சிறிது மண்ணை வாய்க்குள் போடுமளவிற்கு ‘ஞானம்’ வளர்ந்திருந்தது. வ. தேவன் மாதிரி குதிரையில் போக முடியாது போயிற்றே என்று எவ்வளவு வருத்தம் எனக்கு! அப்போதெல்லாம் எப்போதும் குதிரையில் தான் சவாரி. குதிரையில் போவது போல் சைக்கிளில் பெடல் சுத்தாமல் போயிருக்கிறேன். குதிரையிலிருந்து சைக்கிளும், பைக்கும் வர ரொம்ப நாளாச்சு….


இப்போ அந்த நூலைப்பற்றி எழுத ஆசை. ஆனால் அதற்காக மறுபடியும் புத்தகத்தை வாசித்துப் பார்த்து எழுதப் போவதில்லை. நினைவில் உள்ளதை மட்டும் வைத்து எழுத வேண்டும். பிழைகள் இருந்தால் ஒதுக்கி வையுங்கள்; வையாதீர்கள்.


மீண்டும் மலிவுப் பதிப்பு வரும்போது ஒன்று வாங்கலாமோவென நினைத்தேன். ஆனால் ஆர்வமில்லை. முதலில் வாசித்த போது I was a green horn! அப்போது வாசித்த போது கல்கி என்னிடம் பேசினார்; நான் பேசாமல் கேட்டுக் கொண்டேன். இப்போ வாசித்தால் நிச்சயமாக அப்படி இருக்காது. அப்போது எல்லாமே ஒரே rosy picture என்பதாகத் தெரிந்தது. இப்போது நிச்சயமாக அப்படி இருக்காது. வாசித்த காலம் – அறியாப் பருவம். சாதி சமய வேறுபாடுகள் எதுவும் புரியாத, தெரியாத காலம். ’அந்தக் rosy காலம்’ மட்டுமே தெரிந்தது. ஆனால் இப்போது வாசித்தால் முதல் கேள்வியே பொ.செ.யில் இரண்டே சாதியினர் மட்டும் வருகிறார்களோ? – அய்யரும், தேவரும்? என்ற கேள்விதான் எழும்.


இப்போது கதை வாசித்தால் அநிருத்த பிரம்மராயரும், ஆழ்வார்க்கடியானும் கதாபாத்திரங்களாக மட்டும் தெரிய மாட்டார்கள். அன்று வாசித்த போது தமிழ்வாணனின் ‘கத்திரிக்காய்’ மாதிரி இவரையும் பிடித்துப் போயிற்று. ஆனால் இன்றும் கல்கியில் வரும் இரு சாதிக்காரர்களைப் பற்றியும், இன்னும் சில வரலாறுகளும் தெரிந்த பிறகு எப்படி அவர்களைப் பிடிக்கப் போகிறது. ராஜராஜ சோழனைப் பார்த்து போதுமளவிற்கு பிரமிப்பு கொண்டாயிற்று. ஆனால் அவர் ஆட்சியில் அவர் அரியணையில் இருந்து ஆட்சி செய்ததை விட பிராமண சாதியினரின் ஆட்சியாக அது இருந்ததாகத் தெரிவதை எப்படிப் புகழ்வது. குடவோலையின் பெருமைகளைச் சின்ன வயதில் நிறைய படித்தாகி விட்டது. ஆனால் election commission மாதிரி சில சட்டங்கள் .. அந்தச் சட்டங்களைப் பார்த்தால் அது ஒரு சாதியினர் மட்டுமே வர வேண்டியதற்காக வைத்த சட்டங்கள் போல் தெரிகிறது. படிப்பறிவு வேண்டும். – மற்ற சாதியினரின் கல்வியறிவு எப்படி, எவ்வளவு இருந்திருக்கும் என்பது ஒரு கேள்வி. நிலம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். – அதாவது இப்போது மன்மோகன் ரிலையன்ஸிற்காக ‘உழைக்கிறாரே’ அது போல் அன்று பணக்காரர்கள் பக்கம் அரசு என்ற நிலை. இதில் பிராமணருக்கு ‘மங்கலங்கள்’ என்ற பெயரில் அவர்களை நிலவுடைமையாளர்களாக ஏற்கெனவே மன்னன் மாற்றியிருக்கிறான். அவர்களே குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன் – மங்கலம் கொடுத்த ‘பெருமை’  இப்போது நம்முன் கேள்விகளாக அல்லவா நிற்கும். கல்லூரிகளில் ‘கப்’ இல்லாதவன் மட்டும் தேர்தலில் நிற்கலாம் என்பார்கள். முன் பெஞ்சுக்காரன் அடங்கிப் போவான் என்பதுதானே காரணம். அது மாதிரி இந்த சாதிக்காரன் சட்டாம்பிள்ளையாக வேண்டும் என்பது அரசனின் கொள்கை. திறமையாகக் குடஓலை மூலம் அதை நிறைவேற்றி விட்டார்கள் போலும். A GOOD TRICK !!  கதையிலும், நிஜ வரலாற்றிலும் ஊடோடி நிற்கும் இந்தச் சாதிய சிந்தனைகளை எப்படிப் புறந்தள்ளுவது? அன்றிலிருந்த அந்தச் சாதிய மேலாளுமை இன்னும் அப்படியேதான் இங்கே இருக்கிறது. இன்றும் Pantene shampoo தான் பயன்படுத்தணும்னு ’அவா அவாளோட பாஷைய்ல சொல்றதைத் தான் நாமளும் அசடாட்டம் கேட்டுண்டு இருக்கோம்’ … இல்லீங்களா?


பழுவேட்டரையரை அன்று பார்த்தால் அவரது மீசையில் அவரின் வீரம் தெரிந்தது. பார்க்கவே பயமாகவும் இருந்தது. வீரப் பிரதாபங்கள் பிடித்தன. ஆனால் இன்று அவர் மீசையைப் பார்த்தால் அதே மாதிரி கடா மீசை வைத்துக் கொண்டு ‘நீயா நானா?’ நிகழ்ச்சியில், வேறு சாதிப் பையனை என் பெண் திருமணம் செய்தால் அவளை வெட்டிப் போடுவேன்’ என்று ஒருவன் ‘கர்ஜித்தது’ தான் நினைவுக்கு வருகிறது. எங்கிருந்து பெருமை வரப் போகிறது? அட .. ந்ம்ம வந்தியத்தேவனை அன்று அவ்வளவு பிடித்தது. ஆனால் இப்போது அவரைப் பார்த்தால் ஒரு வேளை எங்கள் ஊர் மதுரையில்  இருசக்கர வண்டிகளின் பின்னால் தங்கள் சாதியைக் காண்பிக்க ’ஒரு கேடயம், இரு வாட்கள்’ இருக்கும் ‘லோகோ’வை அடுத்தவர்களைப் பயமுறுத்துவதற்காகவே வைத்திருக்கும் இளைஞர்கள் அல்லவா நினைவுக்கு வருவார்கள்.


காலம் மாறி விட்டது. பால் போல் அனைத்தையும் குடித்த காலம் போயே போயிற்று. இப்போது கள்ளமும், கபடும் தெரிந்தும் போயிற்று; மனதுக்குள் வந்துமாயிற்று.


ஆனால் என்ன சொல்லுங்கள் .. என் முதல் காதல் செத்துப் போகவில்லை. இன்னும் அது என்னவோ .. என்ன வரலாறு படித்தாலும், எதையெல்லாம் யோசித்தாலும் அந்த முதல் காதல் இன்னும் மறையவில்லை. 

என் முதல் காதலி .. இன்றும் எப்போதும் குந்தவி தேவிதான்

Wednesday, August 14, 2013

676. மதம், நாத்திகம், சமயச் சார்பின்மை






*  



Religion, Atheism and Secularism 


ராம் புனியானி என்ற  சமூக ஆர்வலர் நடத்தும் ஆங்கில வலைப்பூவில் உள்ள ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள் மட்டும் தமிழில் .... 



***   கடந்த முப்பதாண்டுகளில் சமூக, அரசியல் தளங்களில் தள்ள முடியாத பெரும் இடத்தை மதங்கள் பற்றிக் கொண்டு விட்டன.

***  இச்சூழலில் புதிய புத்தகம் ஒன்று வெளி வந்துள்ளது. நிகல் பார்பர் என்ற உளவியலாளர் ’ஏன் நாத்தீகம் சமயங்களைப் புறந்தள்ளும்? : வானத்திலிருந்து விழும் மன்னாவை விட உலகின் மகிழ்ச்சிகளே வெற்றி பெறும்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

*** 2040-ல் சமயங்கள் சிறுபான்மையருக்கானதாகி, சமயச் சார்பின்மை உயர்ந்தோங்கி நிற்கும்.

***  137 நாட்டு மக்களிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் நாத்திகம் அதிகமாகக் காணப்படுகிறது. வாழ்க்கை வசதிகள் பரவலாக்கப்பட்ட நாடுகளில் சமய நம்பிக்கை மிகக் குறைவாகக் காணப்படுகிறது.

***  உலகத்தின் தேவைகள் கிடைக்கும்போது சமயத் தொடர்பான மூட நம்பிக்கைகள் இடமிழந்து போகும். இப்போது அமெரிக்காவில் 20 விழுக்காடு நாத்திகர்கள்.

***  இந்து, புத்தமதம், ஜைன மதம் போன்றவைகளில் நாத்திகத்திற்கு இடமுண்டு.

***  ஒரே கடவுளைப் போதிக்கும் மதங்களில் கடவுள் என்ற கருத்து பல வடிவங்கள் எடுக்கின்றன: உருவம் உள்ள கடவுள், உருவமற்ற கடவுள். ...

***  முன்பு கடவுளின் இருப்பு பற்றிய நூல்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தன. இப்போது எப்படி சமயங்கள் அரசியல் களத்தில் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பது போன்ற விவாதங்களே அதிகம்.

***  அரசியலும், பெட்ரோலும் மேற்கத்திய நாடுகளின் அதிகாரமும் கலந்து, அதனால் விளைந்தது ஈரானின் அடிப்படை இஸ்லாம். குடியரசிற்காக எழும் போராட்டங்களை அடக்க, அடிப்படை இஸ்லாம் சில நாடுகளுக்குக் கை கொடுக்கிறது. செளதியில் உள்ள சலாபி இஸ்லாம் இப்படிப்பட்ட ஒன்றே. இதன் மூலம் மக்களின் உணர்வுகளை முடக்கி, அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா - இங்கிலாந்தின் பெட்ரோல் பீப்பாய்களை எளிதாக நிறைக்கின்றன.

***  பாகிஸ்தானில் முல்லாக்கள் சமூகத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். இலங்கையில் தமிழர்களும், இஸ்லாமியர்களும் பெரும் பிரச்சனைகளை மதங்களின் பெயரால் பெறுகின்றனர். மயன்மாரில் புத்தமதம் ரோகிங்கா இஸ்லாமியர்களைத் தாக்குகிறது.

***  தெற்காசியாவில் பெரும் நம்பிக்கையாளர்களான காந்தியும், அப்துல் கலாம் ஆசாத் போன்றவர்கள் சமயமற்ற நாட்டிற்காக நின்றனர். ஆனால் சமய நம்பிக்கையில்லாத ஜின்னா, சவர்க்கார் போன்றவர்கள் மதத்திற்கு முக்கிய இடம் கொடுத்துள்ளனர்.

***  சமூகக் குறைகள் ஆழமான சமய நம்பிக்கைகளுக்குள் மக்களை இழுத்துச் செல்கிறது.

 *** இந்தியாவில் சமூக முன்னேற்றம் பற்றிய கருத்தாக்கத்தோடு முன்னேறுவோர் ஒரு பகுதி. இன்னொரு குழு சமய அடிப்படைகளில் மனிதர்களைப் பிரித்து வைக்க முயல்கிறது. இவைகளை வைத்துப் பார்க்கும் போது தெற்காசியாவில் கடவுள் நம்பிக்கைகளைத் தள்ளி வைத்து விட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படுமா என்பதே ஒரு பெரிய கேள்வி.

*


II August 2013
www.pluralindia.com 




*





 

Thursday, August 08, 2013

675. முதல் பதிவும் நானும் ... நீங்களும்








*


முதல் பதிவு போட்டதை பற்றியும் எழுதணுமாமே ... அதாங்க கம்ப்யூட்டரும் நானும் பதிவில் சொன்னது மாதிரி எப்படியோ கம்ப்யூட்டர் வாங்கியாச்சி... சாலிடெர் அதன் பின் ஃப்ரீ செல் விளையாடப் பழகியாச்சி. (இதில் இரண்டாவது விளையாட்டு தான் இப்போ கம்ப்யூட்டரை ஆன் செய்ததும் ஒரு warming up-ற்காக ஒரு விளையாட்டும், கம்ப்யூட்டர் ஆப் செய்யும் போது ஒரு dry run மாதிரி ஒரு விளையாட்டும் விளையாடுறதுன்னு ஆகிப்போச்சு!!) கம்ப்யூட்டர் வாங்கி விளையாட்டு (Claw அப்டின்னு ஒரு விளையாட்டு ரொம்ப பிடிச்சிப் போச்சு; அதில் வர்ர சவுண்டுகள் தங்க்ஸிற்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு.), தட்டச்சு வேலை இது மட்டும் பார்க்க ஆரம்பித்து, அடுத்த கட்டமாக மயில்கள் ‘வாங்க, விற்க’ ஆரம்பிச்சாச்சு...

இந்த மயில் வேலையை முதலிலே ஆரம்பித்தது நல்ல பழக்கமாயிற்று. ஏனெனில் ஒரு நூறே நூறு நாட்களுக்கு அமெரிக்கா போனது 2002-ம் ஆண்டு. அதுவும் ஒரு பை பாஸ் அறுவை செய்து சரியாக ஒன்பதாவது வாரம் புறப்பட்டுப் போய்ட்டேன். அதுனால் வீட்டோடு கட்டாயம் ஏதாவது தொடர்பில் இருக்க வேண்டுமே. அதனால் மகள்களுக்கு தினமும் ஒரு மயில் என்பதாக அனுப்பிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வசதி ... ப்ளாக் அல்லது முகநூல் ஸ்டேட்டஸ் போடுறது மாதிரி என் தினசரி அனுபவங்களை மகள்களுக்கு அப்போது எழுதி அனுப்பி வந்தேன். அதாவது அப்போவே .. அந்தக் காலத்திலேயே .. பிஞ்சிலேயே முத்திட்டோம்ல் ..

காலச்சக்கரம் இப்படியாக சுழன்று கொண்டிருந்த போது ....

தேசிகன் அப்டின்னு ஒருவர். அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. அவரிடமிருந்து சில மயில்கள் தொடர்ந்து எனக்கு வந்து கொண்டிருந்தன. அவைகள் எல்லாமே தமிழில் வந்தன. அதுவும் சுஜாதா கதைகள் தொடர்புள்ளவைகளாக வந்தன. அவைகள் எல்லாமே வலைப்பூவில் - ப்ளாக்கில் - அவர் எழுதிய பதிவுகள் என்பது எனக்குத் தெரியாது. தமிழில் கம்ப்யூட்டரில் எழுத முடியும் என்பது அவரது பதிவுகளைப் படிக்கும் போது தெரிந்தது.

இப்போது தான் முந்திய பதிவில் சொன்னது போல் மெரீனா கடற்கரைக்குச் சென்று முதல் பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கே போனதும் ஒரு பயமும் வேகமும் இணைந்தே வந்தன. பயம் - அவர்கள் பேசியது புரியாததால் வந்தது. வேகம் - அந்த நாள்வரை 460 பேர் தமிழில் வலைப்பூ வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் சொல்லப்பட்டது. ஆஹா ...இப்போ ஆரம்பிச்சா முதல் 500 தமிழ் வலைப்பதிவர்களில் நாமும் ஒரு ஆளாக ஆகி விடலாமேன்னு ஒரு நப்பாசை வந்தது. ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதை விட ஐந்நூற்றில் ஒரு ஆளாக ஆகி விடணும்னு ஒரு ஆசை வந்து மீதூர ....

ஆனால் எப்படி ப்ளாக் ஆரம்பிக்கத் தெரிந்தது என்பது நினைவில் இல்லை. ஆனால் தமிழில் எப்படி எழுதுவது என்பதை மெரீனா கூட்டத்திற்கு அடுத்த நாள் பத்ரிக்கு தொலைபேசியில் கேட்டு, அவர் சொன்னதை வைத்து எழுதப் பழகினேன். பத்ரி கார் ஓட்டிக்கொண்டே அன்று எனக்கு டியூஷன் எடுத்தார்.

நம்ம மனசுல எப்போதுமே கேள்விகள் நிறைய இருக்குமா .. அதனால் கேள்வி கேட்கிறதில வித்தகராக சினிமாவில் வந்து போன தருமி பெயரை வச்சுக்குவோம்னு நினச்சிக்கிட்டேன். அதோடு முதலில் சொந்தப் பெயர், வயது இவைகளைச் சொல்லாமல் ஆரம்பிக்க நினைத்தேன். முதல் பதிவு - நாலைந்து வரிகள் .. சில கேள்விகள் .. போட்டு 24.04.2005 அன்று ஒரு பதிவைப் போட்டேன். இங்க பாருங்கை’யா .. அடுத்த நாளே பெனாத்தல் சுரேஷிடமிருந்து ஒரு பின்னூட்டம் வந்திருச்சி. ஒரே ஒரு பின்னூட்டம் தானேன்னு நான் கவலைப்படுவேன்னு நினைச்சாரோ .. இல்ல .. அவரும் அப்போ கத்துக்குட்டியாக இருந்ததாலோ என்னவோ .. ஒரே பின்னூட்டத்தை இரண்டு தடவை அனுப்பிட்டாரு. நானும் நல்லதாச்சுன்னு ரெண்டு பின்னூட்டத்தையும் போட்டுக்கிட்டேன். ஆக முதல் பதிவு போட்ட அடுத்த நாளே இரு பின்னூட்டங்கள் அப்டின்னு மார்தட்டி சொல்லிக் கொள்ளலாமே ... வரலாறு ரொம்ப முக்கியம், அமைச்சரே!

ஆனால் அதுக்குப் பிறகு ரோஸ்விக் என்ன நினச்சிப் பாவப்பட்டாரோ தெரியலை... ஆறு வருஷம் கழித்து அவர் ஒரு பின்னூட்டம் போட்டு உட்டுட்டாரு.  

பெனாத்தல் சுரேஷ் ... வாழி .. வாழி (இரண்டு பின்னூட்டத்திற்கு இரு வாழி!!)


ரோஸ்விக ..... வாழி (ஒரு பின்னூட்டத்திற்கு ஒரு வாழி !)





*



 

Wednesday, August 07, 2013

674. தருமி பக்கம் – நம்ம ஊர் அரசியல் ... (3)





*

அதீதம் இணைய இதழில் வந்த கட்டுரையின் மறுபதிப்பு ....

*


அடுத்த ஆண்டு வரப்போகும் தேர்தலுக்கு இப்போதே இந்து நாளிதழ் வரிந்து கட்டிக் கொண்டு ’ஜோஸ்யம்’ சொல்லி, ’செய்திகளை முந்தி தரும் பத்திரிகை’யாகி விட்டது. இதில் எனக்குப் புரியாத ஒன்று உண்டு. பல கட்சிகள் பெயர் இருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர்கள் எங்கே என்று தேட வேண்டியதுள்ளது. அட .. நம்ம காப்டன் கட்சி பெயர் வந்தாலும் வருது; ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெயர் அதிகமாகக் காணோம். இந்தக் கட்சிகளும் ’அந்தக் காலத்தில்’ இருந்து வந்துள்ள அரசியல் கட்சிகள் தான். ஆனாலும் இரண்டு மாநிலங்கள் தவிர - கேரளா, வங்காளம் - மற்ற இடங்களின் ஏன் அவர்களுக்கு எந்த முகவரியும் இல்லாது போயிற்று?

நமது மன்மோகன் சிங் போன்ற ஒரு மோசமான பிரதமரை இது வரை நான் பார்க்கவில்லை. Mr. Spout  என்று பெயர் வாங்கிய நரசிம்ம ராவ், அல்லது தூங்கிப் புகழ் பெற்ற தேவ கெளடா, தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுப்பதால் தண்ணீரின் ‘சத்து’ குறைவதால் விளைச்சல் குறைவு என்று ஒரு துணை பிரதமர் கூறினாரே அவர் - இவர்களையெல்லாம் விட மன்மோகன் மோசம். எப்பவும் பதில் தெரியாமல் poor student கடைசி பெஞ்சில எழுந்திரிச்சி நிக்கிறது மாதிரியே எப்பவும் நிக்கிறார். என்ன கேட்டாலும் ‘அப்பூடியா?’ என்கிறார். அதைவிட மோசம் .. இவர் வாத்தியார் .. ஆனால் வகுப்புல மானிட்டர் சொன்னா தலைய ஆட்டுற வாத்தியார் மாதிரி இவர். என்ன நடந்தாலும் ‘மம்மிட்ட கேட்டுக்கங்க’ அப்டின்னு சொல்லி விடுவார். நல்ல மார்க் எடுத்து மக்காட்டம் முதல் பெஞ்சு மாணவன் மாதிரி இருக்கிறார். இலங்கை விஷயத்தில் நல்லாவே இன்னும் ‘போட்டுப் பாத்துக்கிட்டு’ இருக்கிறாங்க என்பது என் நினைப்பு.

இந்த காங்கிரஸ் கட்சி கடந்த ரெண்டு மூணு வருஷத்தில எடுத்த பெயர் மாதிரி எந்த அரசும் எடுத்ததில்லை.பல ‘gates’ திறந்தாச்சு. ஆனா அது எல்லாம் கொஞ்சம் கூட அவங்களை மாற்றவேயில்லை. எனக்கென்னன்னு போய்க்கிட்டு இருக்காங்க. அன்னா ஹசாரே ஏதாவது மாற்ற்ம் கொண்டு வருவாரோன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்பு வந்துட்டு உடனே பறந்தும் போய் விட்டது. அதுவும் ஊழல் அப்டின்னாலும் என்னா ஊழல். அவங்க சொல்ற எண்ணிக்கைகளையெல்லாம் பார்த்தால், கேட்டால் பயமா இருக்கு. இம்புட்டு காசை ஆட்டை போட்டுட்டு எப்படி நிம்மதியா இருக்காங்களோன்னு தோணுது. எம காதகப் பசங்க .... எல்லாம் கூட்டு களவாணிகள் மாதிரி இருக்காங்க. கல்மாடின்னு ஒரு சுளை விழுங்கி. எல்லாத்தையும் விழுங்கி விட்டு இன்னும் பதவின்னு அலையிறாரு... இப்படி எத்தனை எத்தனையோ .. பட்டியல் அதிக நீளம் ! 

அடுத்த கட்சி B.J.P. - தமிழ்ப் பெயர் மறந்து போச்சு! தேர்தல் வந்தா அயோத்தியா கொட்டு கொட்ட ஆரம்பிச்சிருவாங்க. பதவிக்கு வந்தா - நல்ல வேளை கொடுத்த வாக்குறுதிகளை - அதையெல்லாம் மறந்திருவாங்க. ஆனால் இந்த தடவை புது ஹீரோ களத்தில இறங்கியிருக்கிறார். கோட்டைக்குள் குத்து வெட்டு வேறு நடக்குது. இவங்களும் ஊழலில் லேசுப்பட்ட ஆளுங்க இல்லைன்னும் நிரூபிச்சாச்சு. வித்தியாசமான அரசியல் கட்சின்னு சொல்லி ஆரம்பிச்சாங்க. இப்போ எல்லா ‘கழுதையும் ஒண்ணு தான்’ அப்டின்னு காமிச்சிட்டாங்க.

நம்ம ஊர்ல காங்கிரசிற்கும், B.J.P.க்கும் எந்த மவுசும் இல்லைன்னு இருக்கிறது ரொம்ப சந்தோஷம். பா.ம.க., தே.தி.மு.க. - ரெண்டு கட்சிக்கும் பால் ஊத்தியாச்சின்னு நான் நினைக்கிறேன். பாவம் வைகோ. ‘பேரு பெத்த பேரு; தாவ நீலு லேது’ அப்டின்னு இருக்கார்.

மீதி இருக்கிறது ரெண்டு ’செட்’ கட்சிகள் - இரண்டு திராவிடக் கட்சிகள்; இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்.

வேற வழியே இல்லைன்னு தி. கட்சிகள் பக்கம் போய் தான் ஆகணுங்களான்னு கேக்குற அளவுக்கு இரண்டு கட்சித் திருவிளையாடல்கள் இருக்கு. பேரன் பேத்திக்குன்னு சொத்து சேர்க்கிறது ஒரு கட்சிக்கின்னு சொன்னா, அடுத்த கட்சிக்கும் அதில ஒன்ணும் குறைச்சல் இல்லை. ஒருத்தர் பேரன் பேத்திக்கு சேர்க்கிறார்; அடுத்தவர் யாருக்கு சேர்க்கிறாரோ .. உடன் பிறவாததற்கோ? அதோடு சின்ன பிள்ளை விளையாட்டு மாதிரி ’நீ-கட்டுன-மண்-வீட்ட-நான்-இடிப்பேன்னு’ ஒரு விளையாட்டைப் புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. அது கொஞ்சம் கூட நல்லா இல்லாத ஒரு விளையாட்டா இருக்கு. அதையும் நம்ம மக்கள் கண்டு கொள்வதேயில்லை.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். பெயரைத்தவிர இரு கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்னு எனக்கு அந்த நாளிலிருந்து புரியவில்லை. யார் யார் எந்தக் கட்சி அப்டின்றது கூட சரிவர தெரியாது. தேவையில்லாம தனித் தனி வீட்டுக் குடித்தனம்.

ஆனால், இருக்கிற கட்சிகளில் நல்லது நாலு சொல்றது மாதிரி உள்ள கட்சி இந்த இரண்டும் தான். ஊழல் தகராறு வெள்ளமாகப் புரண்டு ஓடவில்லை என்பது சந்தோஷம். வெட்டித்தன ஆடம்பரம் இல்லாத கட்சி ஆட்கள். டிவியில் பார்த்த ஒரு காட்சி: ஒரு தடவை தமிழ்நாட்டில் இருந்து எல்லா கட்சி ஆட்களும் எதற்கோ டில்லி சென்றார்கள். விமான நிலையத்தில் மற்றக் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் குவிந்து வழக்கமான ஆடம்பரம் காண்பித்துக் கொண்டிருக்க, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏறத்தாழ கையில் மஞ்சள் பையோடு போவது மாதிரி மிக எளிமையாகச் சென்றார்கள். படை பட்டாளங்கள் ஏதுமில்லை. இப்படி எல்லா ‘தலை’களும் இருக்கக்கூடாதான்னு அன்று எனக்குத் தோன்றியது.

தலித் பிரச்சனைகளுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது தலையிடுவது, சமீபத்தில் நடந்த சாதிப் போராட்டங்களில் தங்கள்  இருப்பைக் காண்பித்தது, அரசியலில் கொஞ்சம் நாணயத்தோடு இருப்பது என்று பல நல்ல விஷயங்கள் இவர்களிடம் இருக்கின்றன. ஆனாலும் அவ்வப்போது ’அங்கங்கே’ என்று கூடாரம் போடுவது எரிச்சலைத் தருகிறது. திராவிடக் கட்சிகளோடு சேர்ந்து பத்து இடத்தில் வெற்றி பெறுவதை விட, தங்கள் தன்மானத்தைக் காத்துக் கொண்டு தனியாக நின்று நாலைந்து இடங்களில் வென்றாலும் போதும் என்று நினைத்தால் நல்லது.

எனக்கு ஒரு கேள்வி.

இருப்பதில் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டிய கட்சியாக இருக்கும் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏன் இந்தியாவில் அதிக மரியாதை நாம் கொடுப்பதில்லை?

நம் மாநிலத்தில் தி. கட்சிகளின் பின்னால் தான் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? அதிலும் தி. கட்சிகளின் பின்னால் ஓடுவது மட்டுமில்லாமல் அதன் மேல் நம் எல்லோருக்கும் இருக்கும் ‘பக்தி’யைப் பற்றி நினைத்தால் அது பெரிய வெட்கக்கேடு என்று தான் தோன்றுகிறது. எனக்கு ‘மஞ்சள்’ பிடிக்காது; அதனால் ‘பச்சை’ பிடிக்கும். அல்லது vice versa !!

இது தான் தமிழ்நாட்டு அரசியல் தியரி!!

ம்..ம்.. ஒண்ணும் தேறப்போறதில்லை ...




*

Friday, August 02, 2013

673. எங்கே கொண்டு செல்லும் இந்தத் தீவிரவாதம்?









*



ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. ஆங்கிலத்தில் SOCIAL HARMONY என்ற தலைப்பும், தமிழில் சமய நல்லிணக்கம் என்றும் தலைப்பிட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தோம். நடத்தியவர் ஒரு கிறித்துவப் பேராசிரியர். சில கிறித்துவ பாதிரிமார்களும், சகோதரிகளும் அழைக்கப்பட்டு வந்திருந்தனர். ஏறத்தாழ நாற்பது விழுக்காடு கிறித்துவர்கள். இந்துக்கள் ஐம்பது விழுக்காட்டுக்கு மேல். நாலைந்து இஸ்லாமியப் பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.

பல நிகழ்வுகளில் ஒன்றில் நாங்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். ஒவ்வொரு குழுவிலும் ஆசிரியர்கள், மாணவர்கள், எல்லா மதத்தவர் என்று பிரிக்கப்பட்டு எங்களுக்குள் ஏதாவது ஒரு தலைப்பில் விவாதம் நடந்தது. விவாதங்களை ஒவ்வொரு குழுவிலும் ஒரு மாணவர் குறிப்பெடுத்து, பின்பு அதை விவரமாக எழுதி எல்லோர் முன்பும் வாசிக்க வேண்டும். நானில்லாத ஒரு குழுவில் உள்ள மாணவச் செயலர் தன் குழுவின் கருத்துக்களை வாசித்தார். அப்போது இந்து மதத்தைப் பற்றிய ஒரு கருத்து அவர் வாசிக்கும் போது விவாததிற்குள்ளானது. இந்து மதத்தினர் அக்கருத்தை பொதுக்கருத்தாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று விவாதித்தனர். சில நிமிட விவாதத்திற்குப் பின் பொறுப்பாளராக இருந்த பேராசிரியர் ஒரு ruling கொண்டு வந்தார். குழுவினர் பேசியது படி செயலர் எழுதியுள்ளார். அது அப்படியே இருக்கட்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று கூறி அவ்விவாதத்தை முடித்தார்.

அடுத்து இன்னொரு குழுவின் செயல் மாணவர் தன் குழுக்கருத்துகளை வாசிக்க ஆரம்பித்தார். அதில் வழக்கமாக சொல்லப்படும் ஒரு கருத்து - இஸ்லாமியர்கள் பாகிஸ்தானும் இந்தியாவும் கிரிக்கெட் ஆடினால் பாகிஸ்தான் வெல்ல ஆசைப்படுவார்கள் - வாசிக்கப்பட்டது. இஸ்லாமியர் அனைவரும் ஒட்டு மொத்தமாக இதை எதிர்த்தனர். எந்தக் குழு இதைப் பேசியதோ அக்குழு இதை யாரும் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்கள். ஆனால் இஸ்லாமிய நண்பர்கள் இதை report-லிருந்து எடுத்து விட வேண்டும் என்று மிக உறுதியாக நின்றார்கள். பொறுப்பாளர் இப்போது தான் முன்பு சொன்ன ruling-யை விட்டு விட்டார். அக்கருத்தை நீக்கி விடுவோம் என்று அவர் சொல்லுமளவிற்கு விவாதம் முற்றியது.

அன்று எனக்குத் தோன்றியதை ஒரு கட்டுரையாக எழுதி வைத்தேன். அன்று எனக்கு ஒன்று புரிந்தது. மத நல்லிணக்கம் என்பது ஒரு மாயை; கானல் நீர். நல்லிணக்கத்திற்காக ஒரு கூட்டம் கூட்டினால், அதன் முடிவில் நிச்சயம் வந்தவர்கள் முன்பிருந்ததை விட கொஞ்சம் கூடிய முனைப்போடு திரும்பிச் செல்வார்கள் என்று தோன்றியது. பலர் கூறியதை விட அந்த நாலைந்து இஸ்லாமியர் அவ்வளவு தீவிரமாக விவாதித்து, தங்கள் கொடியைப் பறக்க விட்டனர். அன்று அது எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. இன்று அப்ப்டியில்லை. பழகிப் போய் விட்டது!!

சல்மான் ருஷ்டி ஒரு புத்தகம் எழுதினார். ஒரு பத்வா பிறபிக்கப்பட்டது. மனிதன் பல ஆண்டுகள் உயிர்ப் பயத்தோடு வாழ்ந்தார். பின் எப்படியோ பத்வா திரும்பிப் பெறப்பட்டது. ஆனாலும் பின் தொடரும் எதிர்ப்புகள் ஏதும் குறைந்த பாடில்லை. அதுவும் நமது இந்தியத் தாய் மண்ணின் இஸ்லாமியர்கள்  இந்தியாவிற்குள் அவரை நுழைய விடக்கூடாதென்று ஒரு பத்வா போட்டு விட்டார்கள். அரசும் துணை போனது - எப்போதும் போல்! சென்ற ஆண்டு ஒரு இலக்கிய விழாவிற்கு அவர் முறைப்படி அழைக்கப்பட்டு, அவர் இந்தியாவிற்கு வரும் நேரத்தில் இந்திய பத்வா எதிர்த்து நின்று வெற்றி வாகை சூடியது. முதல் பத்வா போட்டு விலக்கியாயிற்று. ஓரளவு சுதந்திர மனிதனாக இருந்தார்.இருப்பினும் இந்தியாவிற்குள் வரக்கூடாது என்ற் பத்வாதான் வென்றது.

அடுத்து தஸ்லிமா. அவர்கள் புத்தகத்தில் என்ன எழுதினார்கள் என்பதை விட அவர்கள் புத்தகம் எழுதியதே தவறு என்பது போல் சிந்தித்து அவரையும் இந்தியாவிற்குள் வர இஸ்லாமியர்கள் எதிர்த்தார்கள். இன்று ஸ்னோடன், ஜுலியன் அசாங்கே அங்கங்கே தங்கியிருக்க அனுமதி வேண்டுவது போல் அந்த எழுத்தாளரையும் அங்கங்கே ஓட வைத்தார்கள். அவர்கள் இந்தியாவில், அதுவும் வங்காளத்தில் தங்க ஆசைப்பட்ட போதும் நமது அரசு நமது இஸ்லாமியர்களுக்காக அவரை ஓரங்கட்டும்ப்படி ஆயிற்று.

துரத்தப்பட்ட இருவரும் இஸ்லாமியர்கள். ஆயினும் அவர்கள் மதத்தைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டதாக இஸ்லாமியர்கள் சொல்லி விட்டால் .. முடிந்தது கதை.

இதை விட நம்மூரில் நடந்த இரு நடப்புகள் நமக்கு என்ன சொல்கின்றது என்று தெரியவில்லை.

நீயா நானா நிகழ்வில் பர்க்கா போடலாம்; போடத் தேவையில்லை என்று இரு கருத்துகள். இதை விவாதிக்க வேற்று மதத்தினர் யாரும் வரவில்லை. இஸ்லாமியர்களே விவாதித்தார்கள். விவாதித்ததும் பர்க்கா போடும் பெண் மக்களே. கலந்துரையாடல் படமாக்கப்பட்டு, சில trailer போடப்பட்டன.

தமிழ்  இஸ்லாமியரின் பத்வா இதற்கும் பாய்ந்தது. நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. உங்கள் மக்கள், அதுவும் பர்க்கா அணியும் மக்கள் கூட இதைப் பற்றி விவாதிக்கக்கூட அனுமதிக்க முடியாது என்பது எந்த வகை அடிப்படை வாதம்?

ஒரு சில வாரங்களுக்கு முன்பு ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ‘தலாக்’ பற்றி ஒரு விவாதம் என்று விளம்பரங்கள் வந்தன. குரான் வாசகத்தை வைத்து அந்த கருத்தரங்கத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று நமது பதிவர் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாகத் தன் பதிவில் அதை வரவேற்றும் எழுதியிருந்தார். ஆனால் வழக்கம் போல் பத்வா. நிகழ்ச்சி சொன்ன அன்று நடக்கவில்லை. என்ன ஆனது? ஏன்? எதுவும் தெரியவில்லை. மகிழ்ச்சி தெரிவித்த பதிவரிடம் ஏன் இதை நிறுத்தி விட்டீர்களா என்று கேட்டேன். அவர் மற்றொரு நாளில் நடந்தது என்றார், என்றைக்கு என்று சில முறைகள் கேட்டேன். அதற்கு அவரது பதில் தரவில்லை. //என் கேள்விகளுக்கும் பதில் ஏதும் என் கண்ணில் படும்படி தரவில்லை. கேட்டால் ’போய் உன் கண்ணைச் செக் பண்ணிக்கோ’ என்று கேலி மட்டும் செய்கிறீர்கள்! நல்லது; நன்றி.// -- என்று சொல்லி ஒதுங்கிப் போக வேண்டியதாயிற்று. கடைசி வரை நடந்ததாக அவர் சொன்ன புதிய தலைமுறை நிகழ்ச்சி பற்றி அவரேதும் கூறவில்லை. நான் தேடியும் அதுபோன்ற நிகழ்ச்சி நடந்ததாகத் தெரியவில்லை.
நல்ல வேளை .. இந்த அம்மாவுக்கு யாரும் பத்வா கொடுக்கவில்லை ...

கடந்த இரு நாட்களில் இன்னொரு நிகழ்வு. அமினா வாடுட் என்றொரு பெண்மணி. இவர் ஒரு அமெரிக்க-ஆப்ரிக்க பெண்மணி. இவர் மதம் மாறி இஸ்லாமிற்கு வந்த பெண்மணி. இப்போது இவர் கேரளாவில் வசித்து வருகிறார்.  பேச்சின் தலைப்பு: Islam, Gender and Reform. இவர் சென்னைப் பல்கலையில் பேசுவதற்கு எதிர்ப்பு.  
//Ostensibly "Muslim groups" had threatened to protest ....// போலீஸ் ‘வழக்கம் போல்’ பயந்து விட்டது. போலீசே பயந்த பிறகு துணை வேந்தருக்கு எங்கிருந்து தைரியம் வரும்?! முயன்று பார்த்தும் துணை வேந்தர் மறுத்து விட்டார். பத்வான்னா பத்வா தான் போலும்!

// ..it is tragic that fringe groups that purport to represent Muslim opinion in Tamil Nadu seek to overlook their existence. Worse, they seem to not want such views to be broadcast or heard.// I dont know why they call the protestors as FRINGE GROUPS, though every one fears such "FRINGE" groups!!! 

 எனக்குச் சில கேள்விகள்:

1.  மற்ற மதங்களிலிருந்து இஸ்லாமிய மதத்திற்குள் யாரும் வந்து விட்டால் (மைக்கிள் ஜாக்சன்; ஆர்ம்ஸ்ட்ராங்; இப்போது பதவி விலகிய போப் ... லிஸ்ட் ரொம்ப நீநீநீநீளளளளம்ம்ம் ... அடடே.. நம்ம பெரியார் தாசனை விட்டு விட்டேனே ..!) ரொம்ப சந்தோஷப்பட்டு பதிவுகள் எல்லாம் நம் பதிவர்கள் போடுகிறார்கள். நல்லது தான். புதிதாக வருபவர்களை வரவேற்பது நியாயம் தான். ஆக மற்ற மதத்திலிருந்து உங்கள் மதத்திற்கு வந்தால் லாலி பாடுவீர்கள்; ஆனால் உங்கள் மதத்திலிருந்து - நான் கிறித்துவ மதத்திலிருந்து வெளி வந்தது போல் - யாரேனும் வெளியே வர முடியுமா? அப்படி யாரும் மனம் மாறி வெளி வந்தால் ஏன் உங்கள் மதமும், நீங்களும் தடை செய்கிறீர்கள்?

2.  உங்கள் மதத்து ஆட்களே எந்த ஒரு கேள்வியையும் மதத்தில் எழுப்பக் கூடாதா? இது மதமா இல்லை இரும்புக் கோட்டையா? ஏனிந்த இறுக்கம்? அல்லது ஏனிந்த பயம்? அல்லாவைக் காப்பாற்றவா? இஸ்லாமைக் காப்பாற்றவா?

நம் பதிவர்களே தங்களை அடிப்படைவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அது நியாயம் என்பது அவர்கள் தரப்பு. ’அடிப்படை வாதி என்பதற்கு எப்போதும் negative meaning தான் எல்லோரும் கொடுப்பதுண்டு. ஆனாலும் நீங்கள் அதைப் பற்றெனப் பிடித்துகொண்டு விட்டீர்கள். சரி.  ஆனால்

உங்கள் தீவிரவாதம் ஏன் உங்கள் மதத்தினர் மீதும் இப்படிப் பாய்கிறது?

அச்சமூட்டும் தீவிரவாதம் நம்மை, நம் சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்று நினைக்கிறீர்கள்?

அதிலும் பக்கத்திலுள்ள கேரள இஸ்லாமியர்கள் உங்களைப் போல் புனிதர்கள் இல்லையோ? அவர்கள் முழுச்சமயச் சார்புள்ள ஓணம் கொண்டாடுவார்கள். ஆனால்  நீங்கள் பொங்கல் கொண்டாட மாட்டீர்கள். அது தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்பீர்கள். ’வணக்கம்’ என்றால் காத தூரம் ஓடுவீர்கள்!!!

*