Tuesday, April 22, 2014

747. என் சொந்தக் கதை


* ரொம்ப வருஷத்துக்கு முன்னால ... நான் அப்போது தான் கிறித்துவத்தை விட்டு லேசாக விலக ஆரம்பித்திருந்தேன். அதுவரை கோயிலுக்குப் போறது .. அது இதுன்னு... ரொம்ப பக்தி. என்னிடம் பக்தி குறைஞ்சது எங்க அப்பாவுக்கு முதலில் தெரிஞ்சிது. ‘என்னடா?’ன்னார். ‘ஒண்ணும் இல்லையே’ன்னு சொன்னேன். ஒரு சாமியார் கிட்ட கொஞ்சம் மதங்கள் பற்றிக் கேள்வி கேட்டிருந்தேன். அவர் அப்பாவிடம் ‘ஓதி’ உட்டுட்டார் போல! ’இல்ல ... பாதர் கிட்ட ஏதேதோ கேட்டியாம்; சொன்னார்’ என்றார். ’அதெல்லாம் ஒண்ணுமில்லை’ன்னு ஓடிட்டேன். இருந்தாலும் முதல்ல அப்பாவுக்கு சந்தேகம் உள்ளேயே இருந்திருக்கு.


 அந்த சமயத்தில் வீட்டில ஏதோ ஒரு விசேஷம். அப்பாவின் தங்கச்சிமார்கள் இரண்டு பேர் சிஸ்டரா போய்ட்டாங்க. ரெண்டு அத்தைமார்கள்; ஒரு சித்தப்பா, ஒரு அண்ணன், ஒரு தங்கை, சில மதினிகள் ... ஒருபெரிய பட்டாளமே  நம்ம குடும்பத்தில இருந்து  ‘அந்தப் பக்கம்’ போயிருக்காங்க ... ரொம்ப பக்தியான கீனா குடும்பம்னு வச்சுக்கங்களேன்!! எனக்கு அத்தைங்க. சின்ன வயதில் என்னை வளர்த்ததில் அவர்களுக்கெல்லாம் பங்குண்டு. எங்கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாங்க. நான் இல்லாதப்போ அப்பா அத்தைகளிடம் என்னமோ சொல்லியிருப்பார் போலும்.


நான் வந்ததும் அத்தைகள் ரெண்டு பேரும் என்னை நடுவில் உக்கார வச்சி மொதல்ல ஏதேதோ கதைகள் பேசினாங்க. அப்டியே மெல்ல சாமி விவகாரத்திற்கு வந்தாங்க. அதாவது சுத்தி நின்னு ‘மந்திரிச்சாங்க’ ... இதுல என்ன ப்யூட்டின்னா.... இந்த சிஸ்டரா போறவங்களுக்கு குருட்டு பக்தி இருக்கும். ரொம்ப ஸ்ட்ராங்கான விசுவாசத்தோடு இருப்பாங்க. ஆனால் பைபிளில் ஒரு கேள்வி கேட்டா ஒண்ணுமே தெரியாது. வாய் வழியா கேட்டு கேட்டு ஒரு நம்பிக்கையோடு வாழ்க்கையை ஓட்றவங்க.


பொதுவாகவே கத்தோலிக்க கீனாக்கள் எல்லோருமே இப்படிப்பட்ட டைப்புகள் தான். பைபிள் வாசிச்சிருக்க மாட்டாங்க... ஆனா பக்தி மட்டும் பெருவெள்ளமா பாயும். பயங்கர விசுவாசிகள்! நம்ம அத்தைகளும் அது மாதிரி தான். ஏதேதோ ஒண்ணு ரெண்டு கேட்டேன். அவர்களிடம் அதுக்கெல்லாம் பதில் இருக்காதுன்னு தெரியும். அது மாதிரி தான் இருந்திச்சு.


’அதெல்லாம் உடு ... என்னைத்தையோ பேசிக்கிட்டு ... ஏசு நமக்காக எப்படியெல்லாம் பாடு பட்டார் ...’ அப்டின்னு தங்கள் வழக்கமான இழுவையை இழுத்தாங்க. நானும் கொஞ்ச நேரம் எடக்கு மடக்கா ஏதேதோ கேட்டேன். இன்னொரு அத்தை; அத்தை வீட்டுக்கார மாமா ... இந்த ரெண்டு பேருமே பயங்கர பக்திமான்கள் தான். அவங்களும் இதில் சேர்ந்துக் கிட்டாங்க.


நான்கு புறத் தாக்குதல்னு வச்சிக்கோங்களேன். மாமா மட்டும் கொஞ்சூண்டு பைபிளில் இருந்து ஏதாவது ஒண்ணு ரெண்டு பேசுவார். நான் அவர்களிடம், “ஏசு .. பாவம் .. அவர் தான் நான் இஸ்ரவேலர் சாதிகளுக்காக வந்தேன்னு சொல்லிக்கிட்டே இருக்காரேன்னு” சொன்னேன் ... அவரே அப்படித்தான் தன்னைப் பத்தி சொல்லிக்கிறார். ஆனா நீங்களோ வேற ‘சாதிக்காரவிய..’ உங்களுக்கும் அவருக்கும் என்ன ஆச்சு .. இப்படியே கொஞ்ச நேரம் போச்சுது. 


நடுவில தங்க்ஸ் வந்து, ‘இப்பல்லாம் இதெல்லாம தேவையா?’ன்னு ஒரு ஸ்பீட் ப்ரேக் போட்டுப் பார்த்தாங்க. நம்ம அப்டில்லாம் உடனே உட்ருவோமா? இன்னும் கொஞ்சம் இழுத்தேன். மாமா ‘இவனை பிசாசு மோசமா பிடிச்சிருக்குன்னு ...’ சொல்லிட்டு எழுந்திருச்சி போய்ட்டார்.


 எனக்கும் கொஞ்சம் போரடிச்சிது. அப்படியே எழுந்து மூணு அத்தைமார்களிடம், ‘இப்படியெல்லாம் இருந்திச்சி ... ஆனா .. என்னைக்கி நான் அந்த ‘ஒளி’யைப் பார்த்தேனோ ... அப்பவே எல்லாமே மாறிடிச்சி’ அப்டின்னு சீரியஸா மூஞ்சை வச்சி சொல்லிட்டு... வர்ரேன் அப்டின்னு சொல்லி என் ரூமுக்குப் போய்ட்டேன். சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான் அந்த புருடா விட்டேன். சும்மா ஒரு leaving note மாதிரி.


 கொஞ்ச நேரம் கழிச்சதும் அத்தை மூணு பேரு .. இன்னொரு சித்தி எல்லோரும் என்னைப் பார்க்க வந்துட்டாங்க. என்னடான்னு பார்த்தேன். அவங்க எல்லோரும் ரொம்ப சீரியஸா ‘என்னப்பா ... ஒரு ஒளி பார்த்தேன் சொன்னியே ... என்னய்யா அதுன்னு?’ ரொம்ப சீரியஸா கேட்டாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. ஆனாலும் அதை அப்படியே டொம்முன்னு போட்டு உடைக்கவும் மனசில்ல.


’அதெல்லாம் விடுங்க ... ‘ அப்டின்னு சொல்லிப் பார்த்தேன். என்னை அப்படியே விட அவங்களுக்கு மனசில்லை. எப்படியோ என்னத்தையோ டெம்போ விடாமால் ஏதேதோ சொல்லி விடுபட்டேன்.


 அப்போ நான் ஏதாவது ஒரு ’கதை’ எடுத்து விட்டிருந்தாலும் அப்படியே நம்பிட்டு எனக்கும் ஒரு க்ளின் சர்டிபிகேட் கொடுத்துட்டு, என் தலையைச் சுத்தி ஒரு halo போட்டுட்டு போயிருப்பாங்க ...


 நம்பிக் கையாளர்களை
 நம்பிக்கைகளை வைத்தே
 ஏமாற்றுவது எவ்வளவு எளிது
 என்பது மட்டும் அன்று புரிந்தது. .... ஆமென்!
 *

8 comments:

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

வால்பையன் said...

நான் கூட அப்பப்ப கைரேகை ஜோசியம் சொல்வதுண்டு, வாயை தொறந்துகிட்டு பார்ப்பாங்க :)

வால்பையன் said...

ஃபாலோ அப்புக்கு

இராய செல்லப்பா said...

நீங்கள் சொன்னது எந்த மதத்துக்குமே பொருந்தும். மத நூல்கள் சொல்லும் உயரிய கோட்பாடுகளை மேலோட்டமாகவேனும் படிக்காமல், அதைப் புரிந்துகொள்ளாமல், வழிவழிவந்த நடவடிக்கைகளின் வாயிலாகத் தமக்குள்ளே நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு வாழ்பவர்கள்தாம் அதிகம். எனவே கீனாக்களை மட்டும் குறைசொல்வது நியாயமாகாது என்றே தோன்றுகிறது.

தஜ்ஜால் said...

மதநம்பிக்கைகளிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் இதைப் போன்ற அனுபங்களைச் சந்திக்கின்றனர். இன்றும்கூட இதுபோன்ற அறிவுரை(!) மந்திரிப்புகளும் நரக அச்சுருத்தல்களும் என்னைத் தொடர்கிறது. நமது அனுபவங்கள் ஒன்றுபோலவே இருக்கிறது!

அ. வேல்முருகன் said...

எனக்கு கிடைத்த பட்டம் பிஞ்சில் பழுத்த பழம்

delphine said...

O! this is too much!!

குட்டிபிசாசு said...

//நம்பிக் கையாளர்களை
நம்பிக்கைகளை வைத்தே
ஏமாற்றுவது எவ்வளவு எளிது
என்பது மட்டும் அன்று புரிந்தது. //

கெட்டிக்காரர் சார் நீங்கள்.

Post a Comment