Monday, April 21, 2014

746. அஹமதியா மதம் பிறந்த கதை*


பஞ்சாபில் உள்ள காதியன் என்ற கிராமத்தில் 13 பிப்ரவரி 1835-ல்பிறந்த மிர்ஸா குலாம் அகமது கிறித்துவத்தையும், இந்து மதத்தையும் எதிர்த்து நிறைய எழுதினார். 1880ல் Barahin-i-Ahmadiyah என்ற நூலின் நான்கு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தை ஆதரித்தும், கிறித்துவ மிஷனரிகளை எதிர்த்தும், ஆர்ய சமாஜை எதிர்த்தும் எழுதினார். 1886இல் ஹோசியார்பூர் என்ற ஊருக்கு சென்ற போது தன்னிடம் இறைவசனங்கள் இறங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். அந்த நேரத்தில் சூபி ஞானிகள் செய்யும் சில்லா நாசினித்தில் (பெரும்பாலும் இந்திய ஈரானிய சூபிகளிடம் இருக்கும் பழக்கம்) ஈடுபட்டிருந்தார். இது தனிமையில் ஒரு வட்டத்துக்குள் இருந்து 40 நாட்கள் தூக்கமும் உணவும் இல்லாமல் இருப்பதாகும். இது இயேசு நாற்பது நாட்கள் வனத்தில் இருந்ததையும், மோஸஸ் சினாய் மலையில் நாற்பது நாட்கள் இருந்ததற்கும், எலிஜா என்ற தீர்க்கதரிசி நாற்பது நாட்கள் பட்டினியாக இருந்ததோடும் ஒப்பிடப்படுகிறது. ஆனால், குலாம் மிர்ஸா பட்டினியுடன் இருக்கவில்லை. அவ்வப்போது உணவு உண்டதாகக் கூறுகிறார். இந்த காலத்தில்தான் அவருக்கு ஒரு மிகச்சிறப்பான மகன் பிறக்கப்போவதாக இறைவன் கூறியதாகக் கூறினார்.

பின் தன்னையே ‘வாக்களிக்கப்பட்ட இரட்சிப்பாளர்’ என்று அழைத்துக்கொண்டார். தானே ஏசுவின் ஆன்மா, அல்லாவின் தூதுவர், கிருஷ்ண பரமாத்வாவின் மறு அவதாரம் என்றெல்லாம் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ள ஆரம்பித்தார்.

இதற்குப் பின்னர் தன்னை ஒரு முஜாதித் (சீர்திருத்தவாதி) என்று கூறிக்கொண்டு தன்னை இஸ்லாமிய நபியாக முன்னிருத்திக்கொண்டார். இறுதித்தீர்ப்பு நாளன்று இயேசு வருவார் என்ற இஸ்லாமிய நம்பிக்கையை முன்னிருத்தி தன்னையே அப்படிப்பட்ட இயேசு என்று கூறிக்கொண்டார். இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பது போல மிலிட்டரி தலைவராக இயேசு வரமாட்டார் என்றும் ஆன்மீகத் தலைவராகவே வருவார் என்றும், இனி ஜிஹாத் என்னும் இஸ்லாமிய போர் இந்த காலத்தில் தேவை இல்லை என்றும் அறிவித்தார். இது அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது; அரசின் ஆதரவும் இவருக்குக் கிடைத்தது.

ஆயினும் இவர் சொன்ன பல தீர்க்க தரிசனங்கள் தவறாகவே இருந்தன. தான் நான்கு பகுதிகளில் எழுதிய நூலை 50 தொகுதி கொண்டதாக எழுதப்போவதாகச் சொன்னார். ஆனால் வெறும் 5 பகுதிகள் மட்டுமே எழுதினார். அதுவும் அந்த ஐந்தாவது புத்தகம் எந்தச் சிறப்புமற்ற நூலாக இருந்தது. உருது, அராபிய மொழியில் ஐந்துக்கும் ஐம்பதுக்கும் ஒரே ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசமாக இருந்தது. இதை வைத்து சமாளிக்க முயற்சித்தார்!

கிறித்துவர்களையும், இந்துக்களையும் போட்டிக்கழைத்த அகமது பின்னாளில் இஸ்லாமியரையும் போட்டிக்கழைத்தார். இதனால் இஸ்லாமியர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். கடவுள் தனக்கு எல்லா தூதுவர்களைப் பற்றியும் தன்னிடம் பேசியுள்ளதாகக் கூறினார். ’ஆதாம், நோவா, இப்ராஹீம், ஐசக், யாக்கோபு, இஸ்மாயில், மோசஸ், தாவூது, ஏசு, முகமது – என்ற எல்லா தூதுவர்களாக வந்ததே தானே என்று கூறிக்கொண்டார்.

இது பல இஸ்லாமிய தலைவர்களை இவருக்கு எதிராக திருப்பியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவியாக முஸ்லீம்களின் ஜிஹாத் உணர்வை மழுங்கடிக்க இவர் பயன்படுத்தப்பட்டார் என்று இதர முஸ்லீம் தலைவர்கள் இவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். இஸ்லாமியர்கள் இவரை முழுமையாக எதிர்த்ததால் இவரும் இவரை நம்பியோரும் புதிய குழு ஒன்றை அமைத்துக் கொண்டனர். இவர்கள் அஹமதியா என்று தங்களை அழைத்துக் கொண்டனர். ’அஹமதியா’ என்பது முகமதுவின் இன்னொரு பெயர்; அஹமதுவின் பெயருக்காக இப்பெயரை வைக்கவில்லை என்பது அவர்களது விளக்கம். இஸ்லாமியர்கள் இவர்களை ‘காதியர்கள்’ என்று அஹமது பிறந்த ஊரின் பெயரை வைத்து அழைத்தனர்.

தன்னை இறுதி மெஹ்தியாகவும், வாக்களிக்கப்பட்ட மெசியாவாகவும் அறிவித்துக் கொண்ட பின்னால், பல முஸ்லீம் தலைவர்கள் இவரை காபிர் என்றும், இவரையும் இவரது சீடர்களையும் கொல்லத் தகுந்தவர்களாக அறிவித்து பத்வா விதித்தனர். அந்த பத்வா இந்தியாவெங்கும் எடுத்து செல்லப்பட்டு, 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

ஈத்-உல்-அதா திருவிழாவன்று 1900இல் இவர் அரபிய மொழியில் ஒரு மணிநேரம் தியாகத்தைப் பற்றி உரையாற்றினார். இந்த உரை இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்டது என்று அவரை பின்பற்றுபவர்கள் கொண்டாடுகின்றார்கள். இந்த உரையின் போது அவர் குரல் மாறியதாகவும், அவர் ஒரு மோன நிலையிலிருந்து இந்த உரையை ஆற்றியதாகவும் கூறுகிறார்கள். இந்த உரையை பற்றி பின்னால் மிர்சா குலாம் எழுதும்போது ‘ஒரு தேவதூதன் என் நாவின் மூலமாகப் பேசியது போலிருந்தது’ என்கிறார்.

அல்லாஹ் சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால், முதல் மனிதரான ஆதாமை உருவாக்கியதாகவும் அதன் பின்னால் முகம்மது நபி 4508 ஆண்டுகளுக்கு பின்னால் தோன்றியதாகவும் கூறியிருக்கிறார். (Lecture Sialkot – Page 11, Lecture Sialkot – Page 15) இருந்தாலும் இன்றைய அஹ்மதியா பிரிவினர் பரிணாமவியலை ஒப்புகொள்வதாக கூறுகின்றனர்.

இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி இயேசு இரண்டாம் முறை வரும்போது டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கே வெள்ளை மினாரட்டுக்கு அருகே உதிப்பார் என்று இருப்பதாகக் கூறிய இவர், தன்னையே இயேசு என்று கூறிகொள்வதால், தனது ஊரான குவாதியான் நகரிலேயே 1903இல் வெள்ளை மினாரட் கட்ட அஸ்திவாரம் போட்டார். இந்த மினாரட் 1916 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது அஹ்மதியா இஸ்லாமின் சின்னமாக கருதப்படுகிறது.

இவரது காலத்திலேயே ஏராளமான முஸ்லீம்கள் இவரைப் பின்பற்றினர். இவரது காலத்துக்கு பின்னர் அந்த இயக்கம் இரண்டாக உடைந்தது. ஒன்று லாகூர் அஹ்மதியா இயக்கம்; அடுத்தது அஹ்மதியா முஸ்லீம் இயக்கம். அஹ்மதியா முஸ்லீம் இயக்கம் இன்று 200 நாடுகளில் உள்ளது. இந்த இயக்கத்தில் சுமார் இரண்டு கோடிக்கு மேல் பக்தர்கள் உள்ளனர். லாகூர் அஹ்மதியா இயக்கம் 17 நாடுகளில் உள்ளது. 1974ம் ஆண்டு இக்குழுவினர் காபிர் என்று பாகிஸ்தான் அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இவர்கள் மெக்காவிற்குச் செல்லவும் தடை செய்யப்பட்டார்கள். என்றாலும் அவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே உள்ளது. பாகிஸ்தானின் ஒரே நோபல் பரிசு விஞ்ஞானி அப்துஸ் சலாம் அஹ்மதியா பிரிவை சேர்ந்தவர்.

மிர்ஸா குலாம் அஹ்மதுவுக்கு டெம்போரல் வலிப்பு நோய் இருந்திருக்கலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. முதலாவது அவர் தன்னை கடவுளோடு உரையாடுபவராகக் கூறிக் கொள்கிறார். ’நீ என்னுடைய ஒருமையைப் போல இருக்கிறாய். என்னுடைய தனித்துவத்தை போல இருக்கிறாய். என்னுடைய ஆசனம் போல இருக்கிறாய். என்னுடைய மகனைப் போல இருக்கிறாய்’ என்று கடவுள் இவரிடம் சொன்னதாக எழுதியுள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்திருப்பதை இவரது மருத்துவரும் மற்றவர்களும் குறித்து வைத்துள்ளனர். அஹமதுவே தனக்கு இருந்த வலிப்பு நோய் போல இயேசுவுக்கும் இருந்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். (Jesus had actually become insane due to epilepsy. - (Roohani Khazain, Satt Bachan – Volume 10 – Page 295)

இவர் எதிர்காலத்தில் நடக்கப்போவதாக நிறைய சொல்லியிருக்கிறார். அந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் அல்லாவே தன்னிடம் கூறியதாகச் சொன்னார். இது போன்ற ஏராளமான வாசகங்களை அவர் எழுதிய நூற்றுக்கும் மேலான புத்தகங்களில் காணலாம். இவர் கூறிய பல தீர்க்க தரிசனங்கள் அவரது வாழ்க்கைக் காலத்திலேயே தவறாகிப் போய் விட்டன. தான் ’காதலித்த’ முகமதி பேகம் என்ற பெண்ணை மணக்க அவர் எடுத்துக் கொண்ட நம்பிக்கைகளும், முயற்சிகளும் மிகவும் வேடிக்கையானவை. முகமது நபி ஜேனப் என்ற பெண்ணை மணக்க அல்லா உதவியது போல் தனக்கும் உதவுவார் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை முயற்சிகள் எடுத்திருக்கிறார்! தன் வாழ்க்கைக் காலத்திலேயே கிறித்துவ மதம் அழிந்து விடும் என்றார்; அதுவும் நடக்கவில்லை; இது போன்ற அவரது தீர்க்க தரிசனப் பட்டியல் மிக நீளம் ....
http://www.answering-islam.org/Gilchrist/Vol1/9c.html

http://news.bbc.co.uk/2/hi/8711026.stm

*

2 comments:

Unknown said...

தகவலுக்கு நன்றி ஐயா

இராய செல்லப்பா said...

இதுவரை தெரியாத தகவல். நன்றி நண்பரே!

Post a Comment