Friday, May 09, 2014

750. இதை வாசிக்காதீர்கள் ... நிறைய திட்டுவீர்கள் !








*


இப்பதிவு முழுவதுமாக என் எண்ணங்கள் .. என் கணிப்பு .. என் ரசனை .. இதைப் பொதுவில் வைக்கக் கூடாதென்று பல்லைக் கடித்து என்னை நானே தடுத்துக் கொண்டேயிருந்தேன், முடியவில்லை. அதுவும் நம்ம சூப்பர் இஸ்டார் தொலைக்காட்சித் திரையில் தோன்றி ரத, கஜ, துரக, பதாதிகள் ... ..என்று சொல்லும் போது அவரது வசனம் அடிவயிற்றில் கத்தியைச் சொருகுவது போலிருந்தது. தாங்க முடியவில்லை.

சாம்ராட் அசோகன் நாடகம். சிவாஜி கணேசனின் உச்சரிப்பில் கலைஞரின் வசனம். அதில் சிம்மக்குரலில் வரும் ரத, கஜ, துரக, பதாதிகள் ... என்ற அழுத்தமான, அழகான வசனத்தை அந்தக் காலத்தில் அப்படி ரசித்திருக்கிறோம். இன்று அந்த அமிழ்தை தனது ‘நடிப்பின் தீரத்தினால்’ சூ.இ. கொச்சைப் படுத்துவது போல் படுகிறது.

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்லை. அது என்ன ... charisma என்றொரு சொல் உண்டே... அது மாதிரி சிலர் மீது மக்களுக்குக் கண்மூடித் தனமான அன்பு .. அது .. இதுன்னு நிறைய இருக்கு. அதுவும் நம் தமிழ்ப்பட உலகில் இதற்கென்றே தனியிடமே உண்டு. இது ஏனென்று புரிபடவேயில்லை. முதலில் புரட்சி நடிகர் (நடிக்கத் தெரியாமலே நடிகராக இருந்ததால் இந்தப் பெயரோ?) பிறகு சூப்பர் இஸ்டார் (காசு அள்ளிக் கட்டுவதால் இந்தப் பெயரோ?) அடுத்து நம்ம இளைய தளபதி - இந்த வரிசையில் இந்த charisma தொடர்ந்து வருகிறது.

இவர்கள் வந்தால் வரட்டும் என்றும் இருக்க முடியவில்லை. நல்ல படங்கள் வருவதை இந்தப் பிரம்மாக்கள் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர். ஒரே பார்முலா ... அதே கெக்கே பிக்கே நடிப்பு ... வேறு நல்ல படங்கள் வந்தாலும் இவர்களது பெரும் படங்களுக்கு முன்னால் நிச்சயம் தோல்வி தான். தமிழ்ப்பட உலகம் இவர்களால் பல மைல் தொலைவு பின் தங்கி விட்டது என்பது என் எண்ணம். இந்த மூன்று நடிகர்களின் படங்கள் போல் மற்றவர்கள் நடித்திருந்தால் அவைகளெல்லாம் நிச்ச்யமாக ஓரிரு நாளில் மண் கவ்வும். ஆனால் இந்த charismatic actors நடித்தால் கூரையைப் பொத்துக்கிட்டு கூட்டம் வரும்.

இந்த மூன்று பேரில் முதல் ஆள் .. முடிந்து போன விவகாரம். மூன்றாவது ஆளின் படங்கள் இரண்டாவது ஆளின் படங்கள் போல் அத்தனை மோசமில்லை. இரண்டாவது ஆள் இருக்காரே ... அவர் ஒரு நல்ல நடிகர்; ஆனால் விசிறிகளால் இப்படி நடிக்கிறார் என்றெல்லாம் ஒரு கதை சொல்வதுண்டு. (என்னைப் பொருத்தவரை முதல் ஆளுக்கு - பெற்றால் தான் பிள்ளையா; அடுத்த ஆளுக்கு - புவனா ஒரு கேள்விக்குறி; மூன்றாவது ஆளுக்கு - துள்ளாத மனமும் துள்ளும்) ஆனால் அந்த வசனங்களை நான் ஒத்துக் கொள்வதில்லை; ஒரு வேளை வில்லன் நடிகராக மட்டும் இருந்திருந்தால் கொஞ்சமாவது பரவாயில்லாமல் இருந்திருக்கும். அவரது கால கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு நடந்த நஷ்டங்கள் குறைவாக இருந்திருக்கும்.

சிவாஜின்னு ஒரு படம். வேண்டுமென்றே ‘சிவாஜி’யின் பெயரைக் கெடுக்கவே அப்பெயர் வைத்தார்கள் என்று அந்த சமயத்தில் ஒரு பதிவர் எழுதியிருந்தார். கூகுள் ஆண்டவரிடம் சிவாஜின்னு போட்டா இந்த சிவாஜி பெயர் வர வைப்பதற்காக என்றும் எழுதியிருந்தார்; உண்மையாக இருக்கலாம். அந்தப் படத்துக் க்தையை வேறு எந்த நடிகரை வைத்து எடுத்திருந்தாலும் நாலே நாள் டப்பாவுக்குள் போயிருக்கும். இந்த ஆளுடைய charisma படத்தை ஓட வைத்தது. ஆனால் அமெரிக்காவிற்குப் பொழைக்கப்போன ஆளு இப்படி கோடி கோடியா டாலர் சம்பாதிச்சிட்டு ’கல்யாண வயசிலேயே’ இங்கே வந்து என்னென்னமோ பண்றாராம். அட போங்கப்பா ...

அதே மாதிரி பொண்ணுகளை டேமேஜ் பண்றதுக்கும் குறைச்சலில்லை; ஒரு படம். இவர் சாதாரண் வேலைக்காரர். அவரது முதலாளி விஜய சாந்தி. இந்தியாவிலேயே டாப் பிஸினஸ் உமன். ஆனால் கடைசிக் காட்சியில் தலைவருக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துட்டு அவங்க வீட்ல இருப்பாங்க; தலைவர் இன்னும் அதே மாதிரி வேலைக்காரனாக வேலைக்குப் போவார். இப்படி பல கழிசடைக் கதைகள். ஆனாலும் படம் ஓடும். கேட்டால் charisma என்பீர்கள். எங்கிருந்து தான் இதெல்லாம் வருமோ!

வடிவேலு பாவம் .. இதுவரை சந்திரமுகி போன்ற மொக்கை படம் அவருக்கு வாய்க்கவில்லை. சூ.இ. இந்தப் படத்தில் அடித்த ஜோக்குகளும் மூன்றாம் தரம். சில நல்ல படங்கள் என்று விசிறிகள் சில படங்களைச் சொல்லலாம். நூறு படம் நடிச்சா நான் கூட  நாலஞ்சு படம் நல்லா பண்ணிடுவேன்!

இந்த மூவரில் சூ.இ. படங்களில் தான் லாஜிக் எல்லாம் தூர எறியப்படும். அட ... ஒரு கூட்டமே அடிக்க வந்து நிற்கும். தலைவர் தன் வேல் கம்பை எடுத்து முன்னால் நடுவார். அந்தக் குச்சி அப்படியே எல்லாத்தையும் ஒரு சுத்து வந்து திரும்பி தலைவர் முன்னால் வந்து நிற்கும். இது கவுண்ட மணி, வடிவேலு செய்தால் நல்ல காமெடியாக இருக்கும், ஆனால் கதாநாயகனுக்கே இப்படி,. இப்படி ஒரு அர்த்தம் கெட்ட சீனை டைரடக்கர் வைப்பார்; நம்ம ஆளுகளும் நல்லா விசிலடிப்பாங்க. படமும் வெற்றிப் படமாகும். கெட்ட காலம். என்னமோ சீறி வரும் துப்பாக்கிக் குண்டை பல்லால் கடித்து நிற்க வைப்பார் என்று எதிர்பார்த்தோம்; அது மட்டும் இன்னும் நடக்கவில்லை.


மூஞ்சு கொஞ்சம்  பார்க்கிறது மாதிரி இருக்கணும். அதுவும் இல்லை.
அல்லது பார்க்க முன்ன பின்ன இருந்தாலும் மருமகன் தனுஷ் மாதிரி நல்லா நடிக்கணும். அதுவும் இல்லை.
என்னமோ இஸ்டைல் பண்றார் அப்டிம்பாங்க; கடவுளேன்னு தலையில் அடிச்சிக்கணும் - அவரு சிவாஜி படத்தில மொட்டைத் தலையில அடிச்சிக்கிறது மாதிரி.
இல்ல ... அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்துக் களைத்தவர் என்பார்கள். உண்மையோ பொய்யோ...? ஆனால் இவர் அப்படி சமூகத்திற்கு ஏதேனும் பண்ணிட்டாரா என்றால் அப்படி ஏதும் இல்லை. (மனோரமா பேசிய பேச்சுக்கு மறைந்தவர் என்றால் போட்டுப் பார்த்திருப்பார். இவர் அணைத்துக் கொண்டது ஒரு நல்ல விஷயம். பாபா படத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்ததாகச் சொல்வார்கள். .. இப்படி அங்கென்றும் .. இங்கொன்றும் ...)
அட .. இவ்வளவு எதுக்கு? மக கல்யாணத்திற்கு விசிறிகளுக்கு பிரியாணி போடுறேன்னு சொல்லி அல்வா கொடுத்துட்டாருல்லா ...

அரசியலுக்கு வந்திருவேன் என்று ரொம்ப நாள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்; நல்ல வேளை .. அது நடக்கவேயில்லை.

ஏன் இப்படி இரண்டாந்தர ஆட்களை மக்கள் தலையில் வைத்துத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள் என்பதே புரியவில்லை. இதில் ஒரு சின்ன சந்தோஷம். இப்போதெல்லாம் தமிழ் சினிமா ... நடிப்பு .. என்றெல்லாம் வரும்போது யாரும் எம்.ஜி.ஆரை quote செய்வதில்லை. கால வெள்ளத்தில் மறக்கடிக்கப் பட்டு, காணாமல் போய் விடுகிறார்கள் போலும்.

இருந்தாலும் பாவம் தான் அந்த முதல் தர மக்கள்!




*





*

17 comments:

வவ்வால் said...

தருமிய்யா,

உங்க மனசுல பட்டத சொல்லி இருக்கீங்க ,நன்று!

இப்பின்னூட்டத்தையும் படிக்காதிங்க ,படிச்சா திட்டுவீங்க அவ்வ்!

# நல்லப்படம் ,நல்ல நடிப்பு என்றால் என்னவென புரிதலில் பிழை இருக்கு என நினைக்கிறேன்!

எம்சிஆர் நடிச்ச வரையில் நல்லப்படம் வர விடாம தடுத்தா வச்சார்?

எம்சிஆர் காலத்துலவே அதிகம் அறியப்படாத கல்யாண்குமார், முத்துராமன் ,தேவிகா வச்சு நெஞ்சில் ஓர் ஆலயம் எடுத்து ஹிட் ஆக்கலையா ஶ்ரீதர்?

அதே போல ஒன்னு ரெண்டு இல்லை பலப்படங்கள் அதேகாலக்கட்டத்தில் வந்து ஓடி இருக்கு.

அதே போல ரசினிக்காலத்திலும் பலப்படங்கள் ஓடி இருக்கு ,நல்லப்படம்னு பேரும் வாங்கியிருக்கு.

நீங்க என்ன சொல்லுறிங்கனா ,இவங்க படம்லாம் ஏன் ஓடுதுனு கேட்குறிங்க?

உங்க வரையறைக்கு நல்லப்படமென தெரிவது மட்டும் தான் ஓடனுமா? ஏன் மத்தப்படம் ஓடக்கூடாதா?

சைனீஸ் படங்களில் ஜெட்லி படமெல்லாம் பார்ப்பதுண்டா, கழுத்துல ஈட்டி செருகினாலும் அப்படியே தடுத்து நிறுத்துவார் , ஈட்டி முனை தான் வளையும் அவ்வ்.

துப்பாக்கியால் சுட்டால் புல்லட்டை ரெண்டு விரல் இடுக்கில் பிடிச்சுடுவார் அவ்வ்!

அதோட விட்டாரானா இல்லை அந்த புல்லட்டை விரலால் சுண்டி விட்டதும் சுட்டவன் நெத்தில ஓட்டை போடும் :-))

பத்து மாடிக்கட்டிடமா இருந்தாலும் செவத்துல இங்க ஒரு காலு அங்க ஒருகாலுனு வச்சு " நியூட்டனின் விதிகளை" புறக்கணிச்சு பறந்து போய்டுவார் அவ்வ்!

ஏரில படகுல போவாங்க இவருக்கு படகே வேண்டாம் , தண்ணில நடப்பார் இல்ல பறப்பார் :-))

நாங்கூட தண்ணில நடப்பேன் ஆனா ஹி...ஹி அது வேற தண்ணி!!!

அந்த படம் சீனாவில செம ஹிட் ஆகி அங்கே இருந்து இந்தியாவுக்கு வந்து தமிழில் 'மாஸ்டர் வாங் நம்ம நோக்கி எதிரிகள் வராங்க , வரட்டும் என சொல்லிட்டு மாஸ்டர் வாங் நிதானமா பீங்கான் குப்பில சாய் குடிச்சி ,தமிழில் பேசி ஓடுது அவ்வ்!

இப்பொ இதனால் நம்ம ஊருல நல்ல படங்கள் வர தடையாகிடுதா? வருங்காலத்தில் இப்படியும் சொன்னாலும் சொல்வாங்க அவ்வ்!

அதே சீனாவில் சர்ரோகேட் வுமன் என அவார்டுக்கும் படம் அனுப்புறாங்க, இன்னும் பல அவார்டு படமும் எடுக்கிறாங்க.

# நம்ம ஊருல திருடி படமெடுத்துட்டு , அது வெளியில் தெரியாம இருக்க ,கன்னாப்பின்னானு கதையை கொத்துக்கறியாக்கினா எங்கே ஓடும்?

#உண்மையான நல்லப்படம் எனில் பாக்ஸ் ஆபிசில் கலெக்‌ஷன் காட்டும்னு ஏன் எதிர்ப்பார்க்கணும் , நல்லப்படம்னு பேருக்காக எடுக்கிறது?

தியேட்டரில் ஓடனும் என்றால் , மக்கள் ரசிக்கும் பகுதிகளும் அவசியம்.

ஷஷாங்'ஸ் ரிடெம்ஷன் பாக்ஸ் ஆப்சில் ஊத்தின படமே, ஆனால் நல்லப்படம் என பேர் வாங்கி இன்றும் பேசப்படலையா, அதனால் அதன் டிவிடி சேல்ஸ் அதிகம் ஆகி அதன் மூலம் நல்ல வருவாய் கிடைச்சிருக்காம்.

நம்ம ஊருல எல்லாமே ஓசி டிவிடி தானே :-))


# படம் ஓடுவதும் ஓடாததும் மக்களுக்கு பிடிச்சிருந்தா மட்டுமே அதை விட்டு இந்த படத்துல 11.1 ஆரோ 3 டி சவுண்டு இருக்கு அதுக்கே பார்க்க வரணும்னு சொன்னா எல்லாம் ஓடாது :-))

குட்டிபிசாசு said...

தருமி சார்,

நீங்க முதல்ல நல்ல படமெது, மோசமான படமெது என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்துவிட்டு இதைத் துவக்கி இருக்கலாம்.

இந்தியாவில் ஒரு படம் சூப்பர்டூபர் ஹிட் ஆக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்திருக்க வேண்டும். அந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரை விட ரஜினி லக்கி.

எம்.ஜி.ஆர் காலத்தை மற்ற இருவரோடு ஒப்பிட முடியாது. அவர் காலத்தில் எவ்வளவு தமிழர்கள் படிப்பறிவோடு இருந்தார்கள். அவ்ர்களுடைய பொழுதுபோக்கு என்ன? எவ்வளவு பேர் வெளிநாடுகளில் வாழ்ந்தார்கள். எம்.ஜி.ஆர்க்கு என்ன வருமானம் கிடைத்திருக்கும். இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன. அவ்ருடைய காலத்தில் சினிமா பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்பட்டது. மற்ற படங்கள் ஓட அது தடையாகவும் இல்லை.

மற்ற இருவரில் ரஜினி தானாக வில்லனாக நடித்து, கதாநாயகனாக் நடித்து, பிறகு தான் சூப்பர் ஸ்டார் ஆனார்தற்கு அவ்ருடைய கமர்சியல் படங்கள் தான் கை கொடுத்தன.

விஜய் அவ்ரோட தந்தை எஸ்.ஏ.சி படங்களில் ஓவர் நைட்டில் ஹீரோ ஆகிவிட்டார்.

தருமி said...

//நீங்க முதல்ல நல்ல படமெது, மோசமான படமெது என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்துவிட்டு இதைத் துவக்கி இருக்கலாம். //

அட .. போங்க .. அதெல்லாம் எப்பவோ கொடுத்தாச்சு ...
நமக்கு வர்ர படங்கள் எல்லாம் ரெண்டு வகை தான். முட்டாள்களால், முட்டாள்களுக்காக, முட்டாள் தனமாக எடுக்கப்படும் படங்கள்.
இன்னொன்று, கொஞ்சம் முனைப்போடு - sincere ஆக - மூளையோடு எடுக்கப்படும் படங்கள்.

இதில் இந்த 3 பேரும் எந்தக் கட்சி?
அது சரி.. நீங்க (கு.பி. & வவ்ஸ்) எந்த கட்சி?

தருமி said...

வவ்ஸ்
Matrix அப்டின்னு ஒரு படம் வந்தது. சண்டைக் காட்சிகளில் எல்லோரும் கயிறு கட்டி நாற்பது அடி த்ள்ளிப் போய் விழுவார்கள். அதைப் பார்த்த நம் தமிழ் டைரடக்கர்கள் அதேபோல் ஒரே குத்தில் நாற்பது அடி தள்ளி விழும் காட்சி வைத்தார்கள். அதில் நம்ம சூ.இ. சந்திரமுகி முதல் காட்சியிலேயே அப்படி பூந்து விளையாடியிருப்பார். இ,த, சிவகாசி படமா (தமன்னா கதாநாயகி) அதே மாதிரி துணி மாதிரி ஆளுகளை அடித்து வெளுத்திருப்பார்.
அடுத்து ஒரு படம். Crouching tigers ... அப்டின்னு ஒரு சைனா படம். நீங்க சொன்ன சீனெல்லாம் வரும். இதற்கு ஒரு ஆஸ்கர் பரிசு கொடுத்து ஆஸ்கரையே கேவலப்படுத்தினாங்க!
காவல்காரன் பட வெற்றி விழா என்று நினைக்கிறேன். அண்ணாதுரை தலைமையில் விழா. அதில் அவர் இப்படி வழக்கமான் கதைகளை விட்டு கொஞ்சம் வித்தியாச்மாகப் படம் எடுக்கக் கூடாதா என்று வருந்திப் பேசினார். ....

வவ்வால் said...

தருமிய்யா,

முனைப்போடு ,மூளையோடு எடுக்கப்படும் படங்கள் யாருக்காக எடுக்கப்படுகிறது? எடுக்கப்பட்டது யாருக்கோ அவங்களே பார்த்துக்கட்டுமே அவ்வ்!

நான் சொல்ல வருவது என்னவென்றால் "வணிக பொழுதுப்போக்கு படமாக இருந்தாலும் சுயமாக ,நேர்த்தியாக எடுங்கள் என்பதே!

# உலகம் முழுவதுமே சூப்பர் இசுடார் வகை படங்கள் மிக அதிகமாக தயாரிக்கப்படுகின்றன , அமெரிக்காவிலும் அப்படியே ஆனால் அதே சமயம் நீங்க ஆசைப்படும் மூளை,முனைப்போடும் படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஜேம்ஸ் பான்ட் வகையறா படம் ஓடுதுனு எல்லாரும் அப்படியே கிளு கிளு ஆக்‌ஷன் படங்களாக எடுத்து தள்ளவில்லை.

நம்ம ஊரில என்ன பண்றாங்க , ஒரு படம் போலவே எல்லாம் எடுக்கிறாங்க அதான் பிரச்சினை.

மேலும் "நல்லப்படங்கள்" எடுப்பவர்கள் ஏன் அதனை சூப்பர் இசுடார் பட வசூலோடு ஒப்பிட்டு அதே போல சம்பாதிக்கணும் என ஆசைப்படுறாங்க, நல்ல படத்தின் மார்க்கெட் வேல்யூக்கு படம் எடுத்து ,அதுக்கு ஏத்த வருமானம் பார்க்கலாமே?

# நீங்க சரியா உலக சினிமா செயல்ப்பாட்டினை அவதானிக்கலைனு நினைக்கிறேன் , மேஜர் ஸ்டுடியோ ,மைனர்ஸ்டுடியோ அப்புறம் இன்டி மூவி மேக்கர்ஸ் என இருக்காங்க.

மேஜர் ஸ்டுடியோக்கள் எல்லாம் "பெரும் வணிக, மூளையில்லா பொழுதுப்போக்குபடங்களில் தான் முதலீடுசெய்யும்.

மைனர் ஸ்டுடியோக்கள் கொஞ்சம் வணிகம் ,கொஞ்சம் கலைப்படைப்பு என முதலீடுசெய்யும்.

இன்டி மூவி மேக்கர்ஸ் தான் கலைப்படைப்பில் கவனம் செலுத்துவதே, அவ்வகைப்படங்கள் நம்ம ஊருக்கே வருவதில்லை. அமெரிக்கா போன்ற நாட்டில் ஒரு மாகாணத்தோடு முடங்கிவிடும்.

ஒரு வேளை அப்படங்கள் நல்லா ஓடினால் பெரிய ஸ்டுடியோக்கள் வாங்கி தேசிய ,உலக அளவில் வெளியிடவும் செய்வார்கள்.

பேரனாய்ட் என்ற படம் வெறும் 35 ஆயிரம் டாலரில் இன்டி மூவியாக தயாரிக்கப்பட்டது, அதனை ஸ்பீல் பெர்க் பார்த்துவிட்டு , பெரிய ஸ்டுடியோவுக்கு பரிந்துரைசெய்து , உலக அளவில் வெளியிட ஏற்பாடு செய்தார்.

நம்ம ஊரில் அப்படி செய்ய என்ன தடை இருக்கு?

அதை விட்டுப்புட்டு ரசினி படம் எப்படி ஓடலாம்னு கேள்வி கேட்டா எப்பூடி?

அது போன்ற படங்களே திரையுலகின் வணிகத்தினை தக்க வைக்கின்றன. நடுவில் நல்ல படங்களை எடுக்காதேனு யாரும் தடுக்கலை ,ஆனால் படம் எடுக்கனும் என மஞ்சப்பையுடன் வருபவர்கள் முதல் கார்ப்பொரேட் வரையில் எல்லாருமே ரசினி படம் போல எடுக்க மட்டுமே ஆசைப்படுகிறார்கள் ,காரணம் காசைப்போட்டு அதை விட பெருசா காசு எடுக்கனும் என்ற ஆசையே!

நீங்க ஆசைப்படுவது போல மூளையோடு உள்ளபடங்கள் வராமல் போக காரணம் ரசிகர்கள் என்பதை விட "சினிமா வணிகத்தில்" உள்ள வியாபாரிகளே காரணம் ஆகும்.

ஏரியா வாரியா விக்கிற காசு மட்டுமே இன்றைய வருவாய் என நம்ம ஊரில் இருக்கு, சேட்டிலைட்ரைட்ஸ் எல்லாம் பெரிய நடிகர்படங்களுக்கு மட்டுமே நல்ல கிடைக்கும், மற்ற வருவாயை எல்லாம் "சினிமா யாவாரிகளே' சுருட்டி விடுவதால் தயாரிப்பாளர் எப்படியாவது தியேட்டரில் கும்பல் சேர்க்கும் பட வகைகளை தயாரிக்க ஆசைப்படுறார் அவ்ளோ தான்.

வெளிநாட்டில் சின்னப்படமோ பெரிய படமோ அதனதன் மதிப்புக்கு ஏற்ப சேட்டிலைட்ஸ், இணையம், டிவிடி , திரையரங்க வசூல் என ஒரு தொகை கிடைப்பது உறுதி. ஒரு லோ பட்ஜெட் படத்தின் மொத்த முதலீட்டையுமே டிவிடி ரெண்டல் , பே பெர் வியூ மூலம் அமெரிக்காவில் திரும்ப எடுத்து விட முடியுமாம்.

அர்னால்ட் கூட ஆரம்பக்காலத்தில் இதுபோல இன்டி மூவிக்களில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார் , நாலே காட்சியில் வந்து செத்துடுவார் :-))

எனவே அமெரிக்கா போன்ற நாட்டில் எல்லா வகைப்படங்களுக்கும் வாய்ப்புள்ளது, நம்ம ஊரில் வாய்ப்பை நசுக்கிட்டு படம் வரலைனு தியேட்டர் வாசலில் நின்னு ஒப்பாரி வச்சா எப்படி?

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

# //அது சரி.. நீங்க (கு.பி. & வவ்ஸ்) எந்த கட்சி?//

நாம ஆம்னிவோரஸ் போல அனைத்தும் பார்ப்போம்ல , மெக்சிகன் படம், டேனிஷ் ஃபில்ம், ஜெர்மன் ஜப்பான், கொரியா ,சைனீஸ் என கிடைப்பதெல்லாம் பார்ப்பது, இணையம் வந்த பின் எல்லாம் சுலுவாகிடுச்சு, நம்மாளுங்க "டமுக்கு டப்பான்" படங்களை மட்டுமே இணையத்தில் தேடுறாங்கனு நினைக்கிறேன் :-))

# //Matrix அப்டின்னு ஒரு படம் வந்தது. சண்டைக் காட்சிகளில் எல்லோரும் கயிறு கட்டி நாற்பது அடி த்ள்ளிப் போய் விழுவார்கள்//

மேட்ரிக்ஸ் படம் பார்ட் 2 என நினைக்கிறேன் அப்போ படம் பார்த்துட்டு வச்சோஸ்கி பிரதர்ஸுக்கே மெயில் போட்டு பதில் கூட வாங்கினேன் :-))

இது போல ஸ்பீல்பெர்க் (எங்கிட்டே நல்ல கதை இருக்குனு வேற சொல்லியிருப்பேன்) ஜியார்ஜ் லுகாஸ் என பலருக்கு மெயில் அனுப்பியுள்ளேன் ,ஆச்சர்யமான விடயம் என்னவெனில் பதில் வரும், அது யாரேனும் உதவியாளர்களாகத்தான் இருக்கும் ஆனால் ரொம்ப மரியாதையா நன்றி தெரிவிச்சு , நமக்கு வாழ்த்தும் சொல்வார்கள் :-))

இன்னும் சொல்லப்போனால் சிலர் எனக்கு மேக்கிங் சிடி கூட இலவசமாக அனுப்பியுள்ளார்கள்!

அப்போ தான் இணையம் ,மின்னஞ்சல் எல்லாம் வந்த நேரமா , மெயில் ஐடி உருவாக்கியாச்சு சும்மா இருக்கலாமானு சர்வதேச பிரபலங்களுக்கு எல்லாம் மெயில் அனுப்பி வைப்பேன் , பில்கேட்ஸ் கூட என்னிடம் இருந்து தப்பலையே அவ்வ்!

# //அதைப் பார்த்த நம் தமிழ் டைரடக்கர்கள் அதேபோல் ஒரே குத்தில் நாற்பது அடி தள்ளி விழும் காட்சி வைத்தார்கள். அதில் நம்ம சூ.இ. சந்திரமுகி முதல் காட்சியிலேயே அப்படி பூந்து விளையாடியிருப்பார். இ,த, சிவகாசி படமா (தமன்னா கதாநாயகி) அதே மாதிரி துணி மாதிரி ஆளுகளை அடித்து வெளுத்திருப்பார்.
அடுத்து ஒரு படம்.//

இதான் நம்மாளுங்க செய்யுற தப்பு ,சரி ஒருத்தன் செய்றான் நாம மாத்தி செய்வோம்னு நினைப்பதேயில்லை , வரிசைக்கட்டி எல்லாம் செய்ராங்க அவ்வ்!

நம்மாட்களுக்கு மெயிலோ லெட்டரோ போட்டால் கண்டுக்க கூட மாட்டாங்க , அக்காலத்தில் ஒரு சிலர் மட்டும் பதிலும் போட்டிருக்காங்க, எடிட்டர் பி.லெனின் அப்படி செய்திருக்கார்.

தருமி said...

//நான் சொல்ல வருவது என்னவென்றால் "வணிக பொழுதுப்போக்கு படமாக இருந்தாலும் சுயமாக ,நேர்த்தியாக எடுங்கள் என்பதே!//

அஃதே ... அஃதே ...!

குட்டிபிசாசு said...

நான் எல்லா படங்களும் பார்ப்பேன். பி கிரேட் மசாலா படங்களும் பார்ப்பேன், நீங்கள் சொன்ன முனைப்பான படங்களும் பார்ப்பேன். நம்ம ஊரில் முனைப்பான படங்கள் வருவது மிகவும் அரிது. அப்படி எடுத்தாலும் அதை எவனும் ஒழுங்காக எடுப்பதில்லை. கமர்சியல் படங்களையே ஒழுங்காக எடுக்காதவ்ர்கள், முனைப்பான படங்கள் எப்படி எடுப்பார்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

ஆனால் அமெரிக்காவிற்குப் பொழைக்கப்போன ஆளு இப்படி கோடி கோடியா டாலர் சம்பாதிச்சிட்டு ’கல்யாண வயசிலேயே’ இங்கே வந்து என்னென்னமோ பண்றாராம். அட போங்கப்பா ...//

இத விட கொடுமை நான் அங்கே சிஸ்டம் அனலிஸ்டாக இருந்தேன் என்று சொல்வதுதான்! சிஸ்டம் அனலிஸ்ட் என்றால் என்ன என்றே சங்கருக்கு தெரியாத அளவுக்கு அவர் ஞானசூன்யம்.

V said...

@ஜோசப் சார், அந்த படத்தில் அவர் சிஸ்டம் அனலிஸ்ட் என்று சொல்ல மாட்டார். சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் என்றே சொல்லுவார். தமிழகத்தில் பலர் கணிப்பொறியை பார்க்கும் முன்னரே அதை கதை எழுத பயன்படுத்திய சுஜாதா அவர்கள் ரஜினியின் வேலையை அமெரிக்காவில் என்ன வேலை செய்தார் என்று குறிப்பிடுவதில் தெளிவாகவே இருந்தார் என்றே நினைக்கிறேன்.
மேலும் ஒரு தகவல். ‘சிவாஜி’ படத்தில் ரஜினி சொல்லும் ஒரு வசனம் ‘இது என்னுடைய 2௦ வருட உழைப்பு. இந்த வசனத்தை குறிப்பிட்டு சுஜாதாவிடம் படத்தில் ரஜினியின் வயதை பற்றி ஒரு பேட்டியில் கேட்டபோது அவர் ரஜினியின் வயது நாற்பதுக்கு மேல் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Gujaal said...

//சுஜாதாவிடம் படத்தில் ரஜினியின் வயதை பற்றி ஒரு பேட்டியில் கேட்டபோது அவர் ரஜினியின் வயது நாற்பதுக்கு மேல் என்று குறிப்பிட்டு இருந்தார்.//

ஆனா அவர் தலையில முன் வழுக்கையோ, சைட்ல இளநரையோ ஒன்னையும் காணோமே? :)

kevin said...

மூன்றுபேருடைய படங்களும் ஒரே டெம்ப்லேட் தான்,மூன்று பேரும் தங்கள் வயதை எப்போதும் குறைத்து காட்டியதில்லை தான்.ஆனால் எம்.ஜி.ஆர் ஒரு வகையில் மற்ற இருவரிலிருந்து வேறுபட்டவர்.அவர் ஒரு நடிகர் மட்டுமே, ஆனால் மற்ற இருவரும் கேடுகெட்ட‌ வியாபாரிகள்,சுயநலவாதிகள்,இடத்துக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றுபவர்கள்.

ஸ்ரீராம். said...

ரஜினியின் படங்களில் பார்க்கிறா மாதிரி இருக்கும் படத்துக்கு புவனா ஒரு கேள்விக்குறி மட்டும் சொல்லியிருக்கிறீர்கள். முள்ளும் மலரும் கூடச் சொல்லலாம்.

மற்றபடி நீங்கள் சொல்லியிருக்கும் அந்த charisma கர்மத்தை நானும் ஆமோதிக்கிறேன்!

தருமி said...

ஸ்ரீராம்,

//. முள்ளும் மலரும் கூடச் சொல்லலாம்.//
அதுக்குத் தான் இப்படிச் சொன்னேன்: //நூறு படம் நடிச்சா நான் கூட நாலஞ்சு படம் நல்லா பண்ணிடுவேன்!//

அ. வேல்முருகன் said...

எதுக்கு இவ்வளவு மெனக்கெட்டீங்க தெரியலை இந்த ஆளுங்கள ஓதுக்கி தள்ளாமா?

நீங்களே இவ்வளவு மெனக்கெட்ட பிறகு நம்ம பங்குக்கு

திரையுலகம் இந்த ஒரு ஆளுக்காக எப்படியெல்லாம் வளையுது தெரியுமா?

ஒரு படம் 3000 (print) பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் ஒரே காரணத்திற்காக

ஒரு படத்திற்கு ரூ.300 கோடிக்கு மேல் வருமானம் வரலாம்

கணக்கு 3000 பிரிண்ட்
டிக்கெட் விலைரூ.300
ஒருநாளைக்கு ஒரு பிரிண்டை பார்க்கும் மக்கள் 3000 (தோராயம்)
முதல் பத்து நாட்களின் வசூல். ரூ,2700 கோடி

முதலீடு = மூஞ்சி மட்டுமே
(படம் எடுக்கிறேன் சொன்னா ஒரு பொட்டிக்கு இவ்வளவு என முன்பணம் கொடுக்க மக்கள் இருக்காங்க இல்ல)
அதுசரி முத நாள் முதல் காட்சி ரூ.300 க்கா விக்கிறாங்கா

இவர் ஊதியம் 10% என்றால்

மற்ற வருமானங்கள்


தியேட்டரில் ஆடியோ கேசட் வித்த முதல் ஆள் இவருதான்
தன் ரசிகனை சுரண்டிய முதல் ஆள் ( தியேட்டரில் ஒவ்வொரு காட்சியையும் ஏலம் விட்டது)
ரசிகனுக்கு முதல் காட்சி உரிமை பரிக்கப்பட்டது.
பனியன், தொப்பி, ஸ்டிக்கர், இப்படி எல்லாவற்றிலும் மூஞ்சியை அச்சடித்து பணம் பார்த்த முதல் ஆள்.

கர்நாடகத்தில் முதல்நாளே வெளியாகும் தமிழ்படம் இவருடையது மட்டுமே (அதாவது மற்ற தமிழ்படங்கள் தமிழ்நாட்டில் பத்து நாட்கள் ஓடிய பிறகுதான் அங்கு வெளியிடப்படும்) அதிலேயும் விலக்கு பெற்ற ஆள்.

அரசியல்

வருவேன் என்று சொல்லியே வராமல் வருமானம் பார்த்த முதல் ஆள்.

மோடி வந்ததும் அந்த கதைதான்.

ஆனால் அரசியலில் இது செல்லா காசு என்பதால் மோடிக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக் கொண்டு வாக்களியுங்கள் என்று சொல்ல வில்லை

புராணம் போதுமென்று நினைக்கிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தற்போது வரும் பல படங்கள் முன்னவரின் பல படங்களைப் பார்க்கலாமெனும் நிலைக்குத் தள்ளி விட்டது.
மற்றவர்கள் கூட்டத்தைத் தேடி விட்டார்கள். கல்லாக் கட்டுகிறார்கள்.
இமயமலையிலும், சுவிசிலும் இவர்கள் ஓய்வெடுக்க ,உயிரைக் கொடுக்க ஆள் சேர்த்து விட்டார்கள்.பிறகென்ன...
ஆனாலும் தமிழக வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் என் மனமார்ந்த நன்றி!
இவர்கள் இருவரும் மோடியுடன் தேநீரருந்தியதையும், கைகுலுக்கியதையும் கணக்கிலெடுக்கவில்லை.
இது மோடிக்கும் நல்ல படிப்பினை . இந்த இரண்டும் மீசையில் மண்படவில்லையென, அடுத்த தேர்தலுக்கு வரிந்து கட்டும்...

Jack said...

தருமி அவர்களுக்கு,

உங்களைப்போல் பெரும்பாலோனோர் ரஜினிகாந்தை என்னவோ இந்த தமிழக மக்கள் பிச்சைகாரர் போல் சுற்றிக்கொண்டிருந்தவரை இரக்கப்பட்டு பெரிய "சூப்பர் இஸ்டார்" ஆக்கி கோடி கோடியாக சம்பளம் கொடுத்து அழகு பார்த்துகொண்டிருப்பதை போல நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு நியாமாக எனக்கு படவில்லை. தமிழ் நாட்டில் நடிகனாக ஆக வேண்டும் என்றால் என்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ அவை எதுவுமே இல்லாமல் தன்னுடைய தனித்தன்மையைமட்டுமே நம்பி இன்று இவ்வளவு உயர்ந்திருக்கும் ஒரு மனிதரை ஒருதலை பட்சமாக குறை கூறுவது சரியல்ல. ஒரு பிரபல நடிகர் ஆகி விட்டாலே அவர் தங்களை ஆள தகுதியானவர் என்று நினக்கும் மக்களின் முட்டாள்தனத்துக்கு அவரை ஏன் காரணமாக்குகிறீர்கள்? அவருடைய படங்கள் ஒன்றும் கலைப்படைப்புகளல்ல, வியாபாரப் படங்களே. அவருடய ஒரு படம் எவ்வளவு பேரின் வீட்டில் அடுப்பு எறிய வைக்கிறது என்று தெரியுமா? மஞ்சள் நோடீஸ் விடும் அளவுக்கு வந்துவிட்ட சிவாஜி குடும்பத்துக்கு அவர் நடித்துக்கொடுத்த "சந்திரமுகி" படத்தினால்தான் கடனில் இருந்து மீள முடிந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

Post a Comment