Tuesday, April 14, 2026

1372. ஜெமினியில் நான்



GEMINI AI  - இதனைப் பயன்படுத்தி ஓரிரு தடவை கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன். இப்போது மறுபடி இன்னொரு விளையாட்டு.
 
.
                                                           நானே நான்

ஒரு படம் எடுத்து அதை எனக்குப் பிடித்த  ஓவியரான ஆதிமூலம் வரைந்த பாரதியார், மன்னர் ஒருவர் படமும் நினைவுக்கு வந்தன. ஜெமினியிடம் அதுபோல் ஒரு படம்  கேட்டேன்.

அப்படியொரு படம் வந்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் ஓவியரின் பென்சில் கீற்றல்கள் போல் வரவில்லை.

                                                            ஆதிமூலம்

சரி,, இன்னொரு இந்திய ஓவியரான ஹூசைன் நினைவுக்கு வந்தார். ஆனால் அவர் படத்தை வரையச் சொன்னால் நிச்சயமாக அவர் ஒரு குதிரையின் மேல் ஏற்றி வைத்து வரைந்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் ஜெமினி குதிரையை எனக்குப் பின்னால் ஒரு சின்ன சிலையாக வைத்து வரைந்து விட்டது.


                                                          F. M. ஹூசைன்
அடுத்து ராஜாவிடம் போய் விடலாமென நினைத்து ஜெமினியிடம் ராஜா ரவிவர்மாவின் பெயரைச் சொன்னேன். எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துப் போனது. சட்டையை டார்க்காக வரைந்து, முகமும் தெளிவோடு வந்தது.

அதோடு நிறுத்தியிருக்கலாம் ...



                                                                                                  ராஜா ரவிவர்மா   

அப்படியே ஐரோப்பிய ஓவியரிடம் சென்று பார்ப்போமே என்று நினைத்து ஜெமினியிடம் ரெம்ப்ராண்ட் ஓவியரின் பெயரைச் சொன்னேன். ஒரு படம் வந்தது. நமக்கு ஓவியத்தைப் பற்றி என்ன தெரியும்? ஏன் இவர் பெயரில் வந்த படம் ராஜா ரவிவர்மாவின் படத்திற்கு ஒரு நெருக்கமான படமாக வந்தது. பின்னால் அந்த குத்து விளக்குகள் ரவிவர்மா படத்திற்கு மட்டும் பொருத்தமாக் அமைந்தன.  ஆனால் ஏன் ஜெமினி அனைத்து ஓவியத்திலும் அதே பின்னணி வைத்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நானும் உடனே அதை எடுத்து விடு என்று சொல்லியிருந்திருக்கலாம், செய்யாமல் விட்டு விட்டேன். ஆதிமுலம் வரைந்த படத்தைத் தவிர அதே பின்னணியை வைத்து ஜெமினி தன் வேலையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டது போலும்!


                                REMBRANDT
            
                                                                                PICCASO     
அடுத்து பிக்காசோ நினைவுக்கு வந்தார். அவரது கடிகாரப் படம் போல் வரைந்து விடுமோ என்றொரு நினைப்பு வந்தது. சரி என்ன கெட்டுப் போச்சு என்று நினைத்து அவர் பெயரை ஜெமினியிடம் சொன்னேன். ஓரு இரட்டை முகப் படம் வந்தது. பிழைத்துக் கொண்டேன்.

அடுத்தாக நினைவுக்கு வந்தார் வான்கோவ். நிச்சயமாக சூரியகாந்தி பூ வந்துவிடும் என்று நினைத்து அவர் பெயரைச் சொன்னேன், சில வினாடிகளில் அவர் படமும் அந்த மலரின் சாயலோடு வந்தது. பின்புலம் மாறியிருந்தது. சட்டத்திற்குள் ஒரு படமும் வந்தது, அதன் பொருள் எனக்குப் புரியவில்லை.

                                                                

                                                               
                                                                VAN GOGH

இதோடு முடித்துக் கொண்டேன். அதன்பின் அடடா... டாவின்சியை மறந்து விட்டோமே என்று நினைத்து வருந்தினேன். மறுபடி முயற்சித்துப் பார்க்க வேண்டும்,

இன்னொருவர் நினைவுக்கு வந்தார் - மைக்கிள் ஆஞ்சலோ. அவரிடம் ஒரு சிலை செய்யச் சொல்லுவோமா என்று நினைத்தேன். சடாரென்று மனதில் ஒரு பயம், அவரது டேவிட் சிலை போல் என்னைச் செதுக்கி விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, அஞ்சி அதை முயற்சிக்கவில்லை.