Thursday, July 10, 2014

774. FIFA 14 அரையிறுதி - 2*

புதன் மாலை 6.15

 நேற்று மாதிரி இன்னைக்கும் முழிச்சி உட்கார்ந்து ஆட்டம் பார்க்கணுமான்னு மனசாட்சி உள்ளேயிருந்து தட்டிக் கேட்குது. இன்னைக்கி அர்ஜென்டினா ப்ரேசில் மாதிரி ஆடிடக் கூடாதேன்னு பயம் தான். சரி... நாலு வருஷத்துக்கு ஒரு தடவை. மூணு நாள் முழிச்சிதான் பார்ப்போமேன்னு மனச தேத்திக்கிறேன்.

*
புதன் இரவு

சீக்கிரம் படுத்து இரவு 1.20கு எழுந்திருக்க ஏற்பாடெல்லாம் செய்து விட்டு படுக்கப் போனால் ப்ரேசில் வாங்கிய 7 கவல்கள் மட்டும் நினைவுக்கு வர... தூக்கம் கண்களுக்குள் வரத் தயங்க ... ஒரு வழியாகத் தூங்கி, முதல் மணிச் சத்தத்திலேயே எழுந்து வேகமாகக் கைப்பேசியை அடக்கினேன். இது வேறு ... தங்க்ஸும் எழுந்திருச்சி, ‘கிழட்டு வயசில் ராத்திரி பகலா ஆட்டம் பார்க்கணுமா ?  ... பேசாம படு’ய்யா’ என்றால் என்ன செய்வது என்ற பயம்.

*
வியாழன் காலை 11.30

நெதர்லாந்து  ஸ்பெயினோடு விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. பெர்ஸி பறந்து போய் முதல் கோல் போட்டதும் நினைவில் உள்ளது. இருந்தாலும் என்னவோ ... அர்ஜென்டினா வெல்ல வேண்டும் என்று ஒரு ஆசை மனதுக்குள் ஓடுகிறது. ஆனாலும் அதற்கு அதிகம் வழியில்லை ... நெதர்லாந்து வென்று விடும் என்றே தோன்றியது.  எதனால் அர்ஜென்டினா மீதான இந்தக் காதல்..? மரடோனாவினாலா ....? மெஸ்ஸியாலா...? அர்ஜென்டினா ப்ரேசிலுக்கு அடுத்தபடி எனது இரண்டாவது தேர்வாக இருந்ததாலா..?  தெரியவில்லை! *

வியாழன் மாலை 

ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஜெர்மன் வீரர்கள் சத்தமாகத் தங்கள் நாட்டின் தேசியப் பாடலைப் பாடினார்கள்.  ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் யாரும் தங்கள் தேசியப் பாடலை பாடவேயில்லை. ஏன்?

அர்ஜென்டினா நம்ம ஊர் மக்கள் மாதிரி போலும். முந்திய ஒரு போட்டியில் பார்வையாளர்கள் நடுவே ஒரு சின்ன ( நம்ம ஊர் மாதிரி ஒரு flex board) அட்டை வைத்திருந்தார்கள். மரடோனாவும், மெஸ்ஸியும் கிறித்துவர்களின் பிதா, சுதன் என்ற வேடங்களில் வடிக்கப்பட்டிருந்தார்கள்! மனிதர்களை நாம் மட்டும் தான் கடவுள் வேஷங்களில் பார்க்க முடியுமா ... என்ன? இவர்களும்   இந்த விஷயத்தில் நம்மோடு சேர்ந்த முட்டாள்கள் போலும்! நல்ல வேளை ... இந்தப் படத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள். நம்ம ஆட்கள் போல் இன்னும் ’அம்மா’, ‘அன்னை’  மாதிரி ஏதும் கொண்டு வரவில்லை!!

முந்திய அரையிறுதி ஆட்டம் போலில்லாமல் இந்த அணிகளின் ஆட்டமிருந்தது. passing shots சரியாகப் போய்ச் சேர்ந்தன. பந்தை வைத்திருப்பதிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருந்தது. அர்ஜென்டினாவின் right winger லாவெஸ்சி (22) முழு ஈடுபாட்டோடு விளையாடினார்.  இதற்குள் இரு முறை அர்ஜென்டினாவின் கவல் பகுதியில் பந்து சென்று இரு முறையும் தடுக்கப்பட்டன. இதுவரை இருந்த கணக்குப்படி அர்ஜென்டினாவிடம் பந்து 51 விழுக்காடு அளவு இருந்துள்ளன.  அர்ஜென்டினா அணியின் விளையாட்டும் தீவிரமாக இருந்தது.

இரண்டாம் பகுதி ஆட்டம் ஆரம்பித்ததும் இரு அணியிடம் முன்பிருந்து வேகம் மிகவும் குறைவாக ஆனது போலிருந்தது. 55வது நிமிடத்தில் லாவெஸ்சி அடித்த பந்தை பெர்ஸி தடுத்தார். நல்ல ஒரு சந்தர்ப்பம் அர்ஜென்டினாவிற்கு. ஒரு மணி ஆனபோது மழை தூறலாக விழ ஆரம்பித்தது; முழு நேரம் வரை இது நீடித்தது. 90வது நிமிடத்தில் பந்து ராபனிடம் இருந்தது. அர்ஜென்டினாவிற்கு ஆபத்தான் நேரம் அது. ஆனாலும் அர்ஜென்டினா தப்பிப் பிழைத்தது. முழு நேரம் முடிவதற்கு முந்திய ஐந்து நிமிடமும் அர்ஜென்டினாவின் கவல் பகுதி நெதர்லாண்ட் அணியினரால் நன்கு முற்றுகையிடப்பட்டிருந்தது. கவல் ஏதும் விழவில்லை. ஆட்ட நேரம் இரு அணிக்கும் கவல் ஏதுமில்லாமல் ஆட்டம் முடிந்தது.

extra time  இதில் ஆரம்பத்திலேயே பெர்ஸி side benchக்கு அனுப்பப்பட்டு விட்டார், 98வது நிமிடத்தில் ராபன் கவலை நோக்கி அடித்த பந்து நல்ல வேளையாகத் தடுக்கப்பட்டது.

98ல் பெர்ஸி வெளியேறினாரா ... அது போல் அடுத்த நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லாவெஸ்சியும் வெளியே எடுக்கப்பட்டார். என்ன திட்டமோ தெரியவில்லை.

முதல் 15 நிமிடத்தில் அதிசயத்தக்க, ஆபத்தான நேரங்கள் ஏதும் வரவில்லை; ஆனால் அடுத்த காலப்பகுதியில் இரு அணிகளுக்கும் ஆளுக்கொரு வாய்ப்பு வந்தது. மெஸ்ஸி அடித்த பந்தும் தடுக்கப்பட்டது. கடைசி 30 வினாடிகளில்அர்ஜென்டினாவின் கவல் ஆபத்தான நிலையில் இருந்தது. ஒரு தப்பாட்டம். நடுவர் அதைக் கண்டு கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது.

அப்புறம் என்ன ... tie breaker தான். அர்ஜென்டினா அடித்த நான்கும் கவல் ஆகின. ஆனால் நெதர்லாண்டின் முதல் அடியும், மூன்றாம் அடியும் தடுக்கப்பட்டன.
4 - 2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

அந்தக் காலத்தில் டென்னிஸில் match points  வரும்போது என் மகள்கள் கண்ணை மூடிக்கொள்வார்கள். கால் பந்துப் போட்டியில் tie breaker அந்த இடத்தை விட்டே நகர்ந்து விடுவார்கள். லாவெஸ்சி வெளியே அமர்ந்திருந்த ஆள் அதே மாதிரி தலையைக் கவிழ்ந்து வைத்து உட்கார்ந்திருந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார்.

நிறைய பேர் ஒரே கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தது போல் தெரிந்தது. ஆனாலும் கடவுள் ஒரு அணிக்கு மட்டும் வெற்றி கொடுத்து விட்டார்!

அர்ஜென்டினா களத்தில் வெற்றியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ராபன் களத்திலிருந்து பார்வையாளர்கள் பக்கம் சென்றார். அவரது மனைவியும் மகனும் என்று நினைக்கிறேன். பயல் ரொம்ப சின்ன பயல் தான். ஆனால் அவனுக்கு தன் தந்தையின் அணி தோற்று விட்டது என்பது தெரிந்திருக்கிறது. அவனை ராபன் கூப்பிட்ட போதும் அவன் அமமாவின் தோளில் படுத்துக் கொண்டு அழுதான். தந்தையைப் பார்க்கவேயில்லை.

ராபனும் அங்கிருந்து அகன்றார்.


*

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா
தம 1

குறும்பன் said...

எனக்கு நெதர்லாந்து தான் பிடிக்கும். ஆனால் அர்செண்டினா வெற்றி பெற்றதே சரி என்று எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் இவ்வாட்டத்தில் ஒப்பீட்டளவில் நெதர்லாந்து ஆட்டம் சரியில்லை.

Vimala said...

Hello Sir,

This reply is not for your current post but for your whole blog from 2005. Accidently I was about to read your article at Atheetham.. got interest and find your blog and almost gone through your all posts. Amazing sir.

Vimala

தருமி said...

thanks, vimala.
appreciate your amazing patience to go thru from ;post 1

Post a Comment