Friday, December 19, 2014

809. மெட்ராஸ் ... த்ரிஷ்யம் ...

*மெட்ராஸ் .... 

படம் பிடித்தது. வழக்கம் போல் காதல் நடுப்புள்ளியாக இல்லாததே படம் பிடிப்பதற்கான முதல் காரணம். இயல்பு வாழ்க்கை, நிஜத்தை ஒட்டிய மனிதர்கள், அவர்களது அச்சு அசலான பின்புலம், நம்மூர் அரசியல், அரசியலின் நுண்ணரசியல் .... எல்லாம் இயற்கையாக நன்றாக இருந்தன.

கதாநாயகன், கதாநாயகி நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களை விடவும் இரண்டாம் கதாநாயகனும், கதாநாயகியும் மேலும் அழகாகத் தெரிந்தார்கள்; மிக நன்றாக நடித்திருந்தார்கள். படம் மிகவும் பிடித்திருந்தது ....

ஆனால் அந்தக் கடைசி சீனில் இருந்த எழுத்துப் பிழை படத்தின் சுவையை அப்படியே நம் மனதிலிருந்து பறித்து எறிந்தது போலிருந்தது. கதாநாயகன் உண்மையில் அந்தச் சுவர் தான். இறுதியில் அதிலிருந்த அரசியல்வாதியின் படம் அழிக்கப்பட்டு, கல்வி பற்றிய அறிவிப்பு ஒன்றோடு படம் முடிகிறது. நல்ல இனிப்பான ஒன்றைச் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் கசப்பான,உறைப்பான ஒன்றைக் கடித்து வைத்தது போல் இருந்தது. ரசித்த அனைத்தும் அந்த கசப்போடு / உறைப்போடு முடிந்தது போலாயிற்று. அதுவும் கல்வி பற்றி எழுதும் போது கூட இப்படி ஒரு பிழையோடு எழுதலாமா என்று சீத்தலைச் சாத்தனாரின் கோபம் தான் வந்தது!

கல்வி கற்பது
உலகை அறிவதற்க்காக அல்ல ;
உலகை மாற்றுவதற்க்கு.

படத்தோடு தொடர்புடையவர்கள் யார் கண்களிலும் இந்த எழுத்துப் பிழை கண்ணிலேயே படவில்லையா....? அட போங்கப்பா...!


 ************* *


த்ரிஷ்யம் ....

இந்திய சினிமாவின் ஒரு பெரிய வியாதி படம் கட்டாயம் இரண்டு,  இரண்டரை
மணியளவு ஓடியே ஆக வேண்டும் என்பதே. த்ரிஷ்யம் இடைவேளைக்குப் பிறகுதான் படம் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் நடப்பவைகளை மிகச் சில காட்சிகளில் காட்டியிருந்திருக்க முடியும். ஆனால் படம் ஒன்றரை மணி நேரம் மட்டும் ஓடும்.  ஆனால் படம் ஒரு முழுமையான, இறுக்கமான படமாக இருந்திருக்கும். நாம் செஞ்ச பாவம் ... இரண்டு மணி நேரம் படம் நாம் பார்த்தாக வேண்டுமே....! மலையாளக்காரங்களாவது ஒன்றரை மணி நேர படம் எடுக்க ஆரம்பிக்க மாட்டீங்களா?

செய்த தவறை மறைக்க கதாநாயகன் எடுக்கும் முதல் சில முயற்சிகளில் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் செய்திருக்கலாமென்று தோன்றியது. காரை மறைக்க ஏதோ தெரியாத ஒரு பள்ளத்தில், பட்டப் பகலில் முயற்சி செய்ய வேண்டுமா? தண்ணீரின் ஆழம் போதுமா என்றெல்லாம் தெரியாமல் பலரும் நடமாடும் இடத்தில் காரை மூழ்கடிக்கிறார்.

ஆனால் அதன் பின் சில நிகழ்வுகள். அதை மற்றவர் மனதில் நிறுத்த கதாநாயகனின் தந்திரங்கள், ... காவல் துறையின் முயற்சிகள் ... விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

படப்பிடிப்பு நன்றாக இருந்தது. இரவில் தன் வீட்டுத் திண்ணையிலிருந்து மோகன்லால் அமர்ந்திருக்கும் காட்சியில் காட்டிய இரவு நேர இரவுக் காட்சி அவ்வளவு அழகு. இன்னும் அந்தக் காட்சி மனதில் உறைந்து நின்று விட்டது.எப்போதுமே கேரளத்தின் மீது எனக்கு ஒரு ‘கண்’ உண்டு. மோகன்லாலின் வீட்டைக் காண்பிப்பார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்களே .. அதே போல் ‘அந்த ஒரு வீடு கிடைக்க என் வலது கையையும் தர மறுக்க மாட்டேன்’!  கனவு வீடு.


இறுதிக் காட்சி ஒரு கவிதையை வாசித்தது போல் எனக்கிருந்தது.  மகனை இழந்த பெற்றோர் ... அந்த மகனைக் கொன்றவர் ...  மூவரின் சங்கமம். உண்மை மூவருக்கும் தெரியும். ஆனால் வெளிப்படையாகப் பேசாமல் அவர்களிடையே நடக்கும் உரையாடல்கள் ... வசனம் மிக நன்றாக எழுதப்பட்டிருந்தது. (கணினியில் பார்க்கும் போது ஒரு வசதி. நமக்குப் பிடித்த இடத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வசதியாக இருக்கிறது!) அந்தக் கடைசி சீனை மூன்று தடவை வசனத்திற்காகத் திருப்பித் திருப்பிப் பார்த்தேன்.

மோகன்லால் அளவு தமிழில் நமது கமல் நடிக்க மாட்டார் என்று நண்பர் சொன்னார். தெரியவில்லை; பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.**********************


4 comments:

விசு said...
This comment has been removed by a blog administrator.
கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா

சார்லஸ் said...

சார்

இந்த இரண்டு படத்தையும் நானும் பார்த்தேன் . கணினி மூலமாகத்தான் பார்த்தேன். இரண்டுமே வித்தியாசமான அழகியல் அம்சம் உள்ள படங்களே! நானும் ரசித்தேன் . நீங்கள் சொன்ன இரண்டரை மணி நேர கதாகாலட்சேபம் இன்னும் அவசியம் என சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள் . வணிக வெற்றிக்காக செய்யும் வியாபார யுக்தி என்கிறார்கள் . மக்கள் அதை விரும்புகிறார்களா இல்லையா என்று தெரிந்து வைத்திருகிறார்களா என்பதும் தெரியவில்லை.

மெட்ராஸ் ஒரு ஜானர் என்றால் த்ரிஷ்யம் இன்னொரு ஜானர் . கமலஹாசன் நிச்சயம் மோகன்லாலை விட சிறப்பாக நடிப்பவர் . பாபநாசம் பார்ப்போம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விமர்சனங்களை ரசித்தேன். மெட்ராஸ் பதிவைக் கண்டதும் நான், பாலசந்தர் படம் பார்க்கும் நினைவு வந்தது. கடைசி காட்சி, கடைசி பிரேம் வரை பொறுமையாக இருந்து ரசிப்பேன். அந்த அளவு தாங்கள் பொறுமையாகக் கவனித்ததை விமர்சனம் உணர்த்தியது. நன்றி

Post a Comment