Wednesday, March 04, 2015

824. தருமி பக்கம் ( அதீதம் 25) - உறைந்த நினைவுகள்*

அதீதம் இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிவு

*


இதுவரை வெளியில் சொல்லாத ஒரு ரகசியம். அன்று நடந்த போது இறுக்கமான மனச்சூழலைத் தந்தது. மனதிற்குள் வைத்தே புழுங்கிக் கொண்டேன்.  அது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றியது. அதனால் தானோ என்னவோ 60 ஆண்டுகள் ஆகியும் அந்த நிகழ்வு நடந்த ஒவ்வொரு வினாடியும் மனதில் நிலைத்து நின்று விட்டது. இத்தனை நாள் கழித்து, இன்று என்னவோ அதை வெளியில் சொல்லிவிட மனது ஆசைப்படுகிறது.

அதைப் புரிந்து கொள்ள நீங்கள் கட்டாயம் முந்திய பதிவு ஒன்றைப் படித்தாக வேண்டும்.

அம்மா இறந்து, அப்பாவிற்கு கல்யாணம் முடிந்ததும் என் கிராம வாழ்க்கை முடிந்தது. மதுரைவாசியானேன். அப்பா, அம்மா, நான் மூவரும் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் வசிக்க ஆரம்பித்தோம். இப்போது நினைத்தாலும் எப்படி அந்த வீட்டில் இருபத்தி இரண்டு ஆண்டுகள் குடித்தனம் நடத்தினோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆண்டுகளில் குடும்ப எண்ணிக்கையும் பெருத்துப் போனது. ஒரு வீட்டின் பின் பகுதியில் குடித்தனம். அறை என்று பார்த்தால் ஒரே ஒரு அறை தான். அதோடு  ஓடு மேய்ந்த ஒரு தாழ்வாரம்; தட்டியால் மறைக்கப்பட்ட ஒரு அடுப்படி; இரண்டு மூன்று குடும்பங்களுக்குப் பொதுவான ஒரு “கக்கூஸ்’; ஒரு மொட்டை மாடி.  அதில்அப்பா டியூஷன் எடுப்பதற்காக தென்னங்கீத்தில் ஒரு ஷெட். தனியாகப் படுக்க தைரியம் வந்த பிறகு, அதாவது ஏழெட்டு எட்டாம் வகுப்பு வரும் வரை,  நம் இரவுப் படிப்பு, தூக்கம் எல்லாம் அந்த ஷெட்டில் தான்.

நான்காம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அப்பாவும் அம்மாவும் காலங்கார்த்தாலேயே கோவிலுக்குப் போவார்கள். போகும் போது என்னை எழுப்பி விட்டு விடுவார்கள். அவர்கள் வந்த பின் நான் கோவிலுக்குப் போய், அப்படியே கோவில் காம்பவுண்டிற்குள் இருந்த சாமியார்களின் பால் பண்ணையில் பால் வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவேன்.

இளம் காலையில் தனியாக ஒரு பால் பாத்திரத்தோடு நடந்து கோவிலுக்குச் செல்ல வேண்டும். வீட்டிலிருந்து இருநூறு மீட்டர் நடந்தால் தெரு - தெற்கு மாரட்டு வீதி - இடது புறம் திரும்பும். அங்கிருந்து பார்த்தால் இருநூறு மீட்டர் தொலைவில் புனித மரியன்னை கோவிலின் உயர்ந்த இரு கோபுரமும் தெரியும். அதென்னவோ அப்போதெல்லாம் அந்த முதல் இருநூறு மீட்டர் தூரம் நடக்கும் போது பல முறை மனதில் நெகட்டிவான நினைவுகள் இருக்கும். அம்மா நினைப்பும் வருவது அதிகம். ஆனால்கோபுரம் கண்ணுக்குத் தெரிந்ததும் ஏதோ வெளிச்சத்தைப் பார்த்தது போலிருக்கும். ஆனால் அது வரை பல நாட்களில் அம்மாவின் நினைவும் அதை ஒட்டிய வருத்தமும் நினைவுகளின் மேல் மட்டத்தில் அலையும்.

அப்போது என் மனதில் ஓடிய எண்ணங்களை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ”இப்போது நடப்பது எல்லாமே கனவு தான்; இதில் இருந்து சீக்கிரம் விழித்து விடுவேன்; அப்படி விழிக்கும் போது அம்மா உயிரோடு என்னிடம் வருவார்கள்”.  இது என் மனதில் அவ்வப்போது வந்து சென்ற எண்ணங்கள். பின்னாளில் Lao Tzu என்ற சீன ஜென் அறிஞரின் , அனுபவம், அதை ஒட்டி அவர் எழுப்பிய கேள்விகள் எனக்குள் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

 Lao Tzu ஒரு கனவு காண்கிறார். அதில் அவர் ஒரு வண்ணத்துப் பூச்சியாக பறந்து திரிகிறார். இந்த நிகழ்வை அவர் ‘நான் கனவில் வண்ணத்துப் பூச்சியாக மாறினேனா ... இல்லை .. வண்ணத்துப் பூச்சியான நான் மனிதனாக என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேனா ...?’ என்பது அவரது கேள்வி. எது கனவு? எது நிஜம்?

I dreamed I was a butterfly, flitting around in the sky; then I awoke. Now I wonder: Am I a man who dreamt of being a butterfly, or am I a butterfly dreaming that I am a man?எனக்கும் இதே எண்ணம் அந்தச் சிறு வயதில் வந்திருக்கிறது. எது நிஜம்? எது கனவு? என்ற கேள்விகளோடு சிறு வயது அனுபவங்கள் இருந்திருக்கின்றன.

(பெத்த) அம்மாவின் உருவம் எனக்கு நினைவில்லை. அவரின் நினைவுகளைச் சொல்ல இரண்டே இரு புகைப்படங்களை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஒரு படம் பிறந்த கோலத்தில் இருந்த  என் கையைப் பிடித்துக் கொண்டு  நின்று கொண்டிருக்கும்  படம்.
1945
இன்னொன்று அம்மா நாற்காலியில் அமர்ந்திருக்க அப்பா அதன் கைப்பிடியில் உட்கார்ந்திருப்பார். அது ஒரு அந்தக் காலத்து ஸ்டைலில் உள்ள புகைப்படம். அம்மா இறந்த பிறகு இந்த இரண்டாவது படத்திலுள்ள அம்மாவின் முகத்தை மட்டும் வைத்து இரங்கல் அட்டைகள் அச்சடித்திருப்பார்கள் போலும். ஒரு படத்தைச் சட்டமிட்டு வீட்டில் கொஞ்ச நாள் மாட்டியிருந்தார்கள். இவைகளில் மட்டுமே அம்மாவின் உருவத்தை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் காலை. அனேகமாக பத்துப் பதினோரு வயதிருந்திருக்கும். கோவிலுக்குப் போகச் சொல்லி என்னை எழுப்பி விட்டு விட்டு அப்பா அம்மா கோவிலுக்குப் போய் விட்டார்கள். அப்பா கோவிலிலிருந்து அப்படியே ’வீட்டு ட்யூஷனுக்குப்’ போய் விட்டார்கள். அம்மா வரும் போது நான் வழக்கம் போல் தூங்கி விட்டேன். மறுபடி என்னை எழுப்பி விட்டு விட்டு கோவிலுக்குப் புறப்படச் சொன்னார்கள். அரையிருட்டில்  மெத்தைப் படியில் அமர்ந்து பல் விளக்கிக் கொண்டிருந்தேன். காலடியில் கசங்கிய பேப்பர் போல் ஏதோ ஒன்று கிடந்தது. மங்கிய வெளிச்சத்தில் அதனைப் பிரித்துப் பார்த்தேன். நான் இதுவரை பார்த்திராத அம்மாவின் புகைப்படம். கார்டு சைஸில் பாதியிருக்குமே 2B சைஸ் என்று சொல்வார்களே அந்த சைஸ். அரையிருட்டு; புதியதாய் பார்க்கும் படம்; கசங்கியிருந்ததால் முழுமையாகக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்குள் அம்மா பல் விளக்கிட்டியா என்று கேட்டார்கள். ஏனோ தெரியவில்லை; அவர்களுக்குத் தெரியாமல் அந்தப் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அவர்கள் பக்கத்தில் இருந்ததால் அந்தக் கசங்கிய போட்டோவை தலைக்கு மேலிருந்த ஓட்டுச் சரப்பின் மீது எறிந்து வைத்தேன். மீண்டும் எடுக்க வசதியில்லை. கோவிலுக்குப் போய் விட்டு வேகமாக வந்து நான் எறிந்த அந்த ஓட்டுப் பரப்பில் தேடிப் பார்த்தேன். அங்கே ஏதும் இல்லை.

கிடைத்த ஒரு அரிய படம். சரியாகக் கூட பார்க்காத அம்மாவின் படம். கையில் கிடைத்ததைக் காக்க முடியாமல் போயிற்றே என்ற கவலை. அப்பா படுக்கும் கட்டிலில் இருந்து சிறிது தூரத்தில் அது ஏன் அங்கு கசங்கிக் கிடந்தது? எப்படி காணாமல் போயிற்று?

பதில் தெரியாத கேள்விகள்......


7 comments:

Thekkikattan|தெகா said...

அப்பா படுக்கும் கட்டிலில் இருந்து சிறிது தூரத்தில் அது ஏன் அங்கு கசங்கிக் கிடந்தது? எப்படி காணாமல் போயிற்று?

பதில் தெரியாத கேள்விகள்......
//

இத்தனை ஆண்டுகள் கடந்து மனதிற்குள்ளயே வைத்து குமைந்து கொண்டிருந்த கேள்வியை இப்பொழுதான் இங்கே வைக்கணும்னு தோன்றியதா? இருக்கட்டும்.

அந்த கேள்விக்கான பதிலும் தெரியும்தானே??

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களது மனச்சுமையை எங்களுடன் பகிர்ந்துகொண்ட நிலையில் உங்களது சுமை சிறிது குறைய வாய்ப்புண்டு என நம்புகிறேன். பலருடைய வாழ்வில் இவ்வாறான பாதிப்புகளைக் காணமுடிகிறது. மிகவும் சோகமான நிகழ்வுகளைத் தாங்கள் சொற்களாக்கிப் பகிர்ந்த விதம் தங்களின் தாயார் மீதான அன்பையும், ஏக்கத்தையும் உணர்த்துகிறது. பதில் கூற முடியாத, எளிதில் பகிர்ந்துகொள்ளவியலாத நினைவுகளை பலர் வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டும் இருப்பதை நான் அறிந்துள்ளேன். அவ்வாறான நிகழ்வைப் பற்றி பேச யோசிப்பர். அவ்வாறாக மனதிற்குள் வைத்து நிம்மதியையும், சுகத்தையும்கூட அவர்கள் பெறுகிறார்கள் என்பதே என் எண்ணம். ஆனால் தாங்களோ அவற்றைப் பகிர்ந்துள்ளீர்கள். காலம் அனைத்திற்கும் நல்ல மறுமொழி தரும் என்று நம்புவோம்.

தருமி said...

//அந்த கேள்விக்கான பதிலும் தெரியும்தானே?? //
//காலம் அனைத்திற்கும் நல்ல மறுமொழி தரும்//

இருவரும் ஒருவருக்கொருவர் பதில் சொல்லி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

பதில் வந்து என்ன ஆகப்போகிறது? வெகு காலம் கடந்து போயாச்சு .... கல்லும், மண்ணும், காடும் மேடும் தாண்டிப் போய் விட்டேன் ..........

தருமி said...

தெக்ஸ்
நாலைந்து நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு மயில் அனுப்பணும்னு நினச்சேன். நினச்சா வந்து நிக்கிறீங்க ...!

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களது நீண்ட நாள் மனச் சுமையை இறக்கி
வலையில் வைத்துள்ளீர்கள் ஐயா

சார்லஸ் said...

சார்

என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க !? என் அம்மாவின் நினைப்பு எனக்கும் வர வைத்துவிட்டீர்களே! சில நேரங்களில் சில கேள்விகள் . பதில் தெரியும் ஆனால் தெரியாது என்று நாகரீகமாக முடிக்கிறீர்கள் . உங்கள் இரண்டாம் தாயையும் 'அம்மா ' இடத்தில்தான் வைத்திருக்கிறீர்கள் என்பது அழகாக தெரிகிறது. நல்ல பதிவு. சில சுமைகள் சுகமானவை.

அ. வேல்முருகன் said...

அன்பு, தவிப்பு
ஆம் நினைவுகளில் சில நேரங்களில் கனவுகளில்

Post a Comment