Wednesday, May 20, 2015

839. தமிழ் ஐயாவும் ஆங்கில சாரும் .... (தருமி பக்கம் 28)

*கணக்கில் ஆரம்பிச்ச sliding மற்ற பாடத்தையும் தொத்திக் கொண்டதோ? ஏறக்குறைய அப்படித்தான். ஆனாலும் கணக்கு போன இடத்தில் கொஞ்சம் ஆங்கிலமும், நிறைய தமிழும் இடம் பிடித்தன என்று நினைக்கிறேன். அதனால் தான் அதைக் கற்பித்த ஆசிரியர்கள் இன்னும் மனதில் இடம் போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஏனெனில், மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று ஆரம்பித்தால் தமிழ் ஐயா கந்தசாமிப் புலவர் அவர்களும், ஆங்கிலத்தில் நடித்துக் கொண்டே பாடம் நடத்தும் ராஜூ சாரும் மனதிற்குள் வந்து விடுவார்கள்.

அதிலும் கந்தசாமிப் புலவர் பாடம் நடத்துவது இப்போதும் அப்படியே நினைவில் இருக்கிறது. நான் முதல் பெஞ்சில் நடுவில் உட்கார்ந்திருப்பேன். ஐயா வந்தவுடன் மேடையிலிருக்கும் நாற்காலி எங்கள் பெஞ்சுக்கு முன்னால் வந்து விடும். ஐயா அந்தக் காலத்து ஸ்டைலான வேட்டி, கோட்டில் வருவார். தோளில் ஒரு துண்டு. சிறிது கனத்த உருவம். வட்டமான முகம். எப்போதும் கண்களும் வாயும் சிரித்துக் கொண்டேயிருக்கும். நாற்காலியில் உட்கார்ந்ததும் வலது காலை இடது முழங்காலில் மேல் போட்டுக் கொள்வார். பக்கத்தில் இருந்ததாலோ என்னவோ நன்றாக நினைவில் இருக்கிறது --- வலது காலின் கீழ்ப்புறத்தில் நமக்கு இருக்குமே அது போல் பாதம் வளைந்திருக்காது. ஏறத்தாழ பாதத்தின் நடுப்பாகம் வளையாமல் almost நேராக இருக்கும். இடது கையில் புத்தகம் இருக்கும். இடது முழங்கை நாற்காலியின் கைப்பிடியில் ஊன்றியிருக்கும். பாடம் நடத்தும் போது வலது கை விரல்கள் வலது பாதத்தின் அந்த மேடான இடைப் பகுதியை வருடிக் கொண்டிருக்கும். ஏதோ வீணை வாசிப்பது போல் அந்த விரல்கள் அந்த இடத்தை வருடி விட்டுக் கொண்டிருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு ஆடி வீதியில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தின் தலைவராக இருந்தார் என்று நினைவு. பள்ளி முடித்த பல ஆண்டுகள் வரை கோவிலுக்குள் நுழைந்தால், வடக்கு வீதியும், திருவள்ளுவர் மன்றமும், ஐயாவும் கட்டாயம் நினைவுக்கு வருவார்கள்.

அவர் பாடம் நடத்துவதே ஒரு அழகு. அதுவும் செய்யுள்களை நடத்துவது மிக அழகாக இருக்கும். ஒரு பாடலை எடுத்துக் கொண்டால் முதலில் சாதாரணமாக வாசிப்பார். ஏதும் புரியாது. இரண்டாம் முறை சீரோடு வாசிப்பார். தடுமாறுவோம். மூன்றாவதாக சீர் தளை பிரித்து சொற்களைப் பிரித்து, அழகாக மெல்ல .. மெல்ல வாசிப்பார். கடினமான சொற்களைத் தவிர்த்து, செய்யுள் புரிந்து விடும். பின் கடினச் சொற்களுக்குவருவார். அதையும் சொல்லிவிட்டு மீண்டும் மெல்ல மெல்ல பிரித்து வாசிப்பார். தமிழ் வகுப்பின் மீது ஆசைப்பட வைத்த ஆசிரியர்.

ஐயா யாரையும் திட்டியதாக நினைவில்லை. அவர் வகுப்பில் யாரையும் அதட்டுவதுமில்லை; குரலை உயர்த்துவதுமில்லை. ஆனால் வகுப்பு சீராக நடக்கும். வழக்கமாக தமிழ் வகுப்பு என்றால் மாணவர்கள் ஆடுவது வழக்கம் தான். ஐயா வகுப்பில் அப்படியேதும் நடக்காது. ஆச்சரியம் தான். கல்லூரிக்குப் போன் பின்பும் வாய்ப்பு கிடைக்கும் போது அவரைப் போய் பார்ப்பது ஒரு வழக்கம்.

 ராஜு சார். ஆங்கில ஆசிரியர். அதனால் தானோ என்னவோ மிக அழகாக உடை உடுத்துவார். அதுவும் அந்தக் காலத்தில் வெள்ளை சட்டை; வெள்ளை பேண்ட்; கருப்பு ஷூ. ட்ரிம்மாக வருவார். இவரும் பொதுவாக உட்கார்ந்து தான் வகுப்பு நடத்துவார்.(நான் ஆசிரியனாக ஆன பிறகு நாற்காலியில் உட்கார்ந்து பாடம் எடுப்பதை வெறுத்தவன். நகரணும்; நடக்கணும்; மேடையிலிருந்து இறங்கி வகுப்புக்குள் நுழைந்து வரணும்; உட்கார்ந்தால் மேசை மேல் உட்காரணும் என்ற விதி எனக்கு நானே எழுதிக் கொண்டது.) ஆனாலும் ராஜூ சார் உட்கார்ந்தது அப்போது வித்தியாசமாகத் தெரியவில்லை. பாடம் நடத்தும் போது அவரும் ஒரு நடிகராகி விடுவார்.

Merchant of Venice கதை சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. எந்த சீன் என்று நினைவில்லை. ஒரு வேளை குமாரசாமி ...ஓ.. மன்னிக்கவும் ... நீதியரசர் அந்தக் கதையில் தீர்ப்பு சொல்வாரே ... அப்போது சார் தன் ஷூ காலை மேடையில் தேய்த்துக் கொண்டே ஒரு வசனம் சொன்னார். வகுப்பே நிமிர்ந்தது. ஸ்டைல் வாத்தியார். ஆள் பாதி; ஆடை பாதி என்பது போல் சார் தன் உடை, நடை, நடிப்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கலவையாகப் பாடம் சொல்லித் தந்தார்.

இவர்களின் பாதிப்பு என்னிடம் நிச்சயம் இருந்தது.

 அடடா ... கணக்குப் பாடத்தில் புலியாக இருந்த நான் எப்படி புளியாகிப் போனேன் என்றல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன். மறந்தே போச்சே... digression ...என் ஆசிரியர் பணியிலும் இந்த digression எனக்கு நிறைய இருந்தது.

சரி...மீண்டும் கணக்கிற்கு வருவோமா ....?
*

படங்கள்;இணையம்

4 comments:

G.M Balasubramaniam said...

பள்ளிக் கால நினைவுகள் என்றும் சுவைதான் நானும் என் பள்ளி நாட்களுக்குப் போய்விட்டேன்

சார்லஸ் said...

சார்

தமிழ் பாடத்தையும் அதை நடாத்தும் தமிழாசிரியர்களையும் எளிதில் மறந்து விட முடியுமா ? போரடிக்காத ஒரே பாடம் அதுதானே! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கந்தசாமி புலவர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . இன்றும் அவர் பெயர் அங்கு உச்சரிக்கப்படுகிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களுடைய இரு ஆசிரியர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு தாங்கள் சூட்டியுள்ள புகழாரம் அருமையாக இருந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் பிணைப்பு, படிப்பில் ஈடுபாடு, ஆர்வம், அன்னியோன்னியம் இருந்தது அக்காலம். தற்காலத்தின் நிலை வேறு.

Unknown said...

அருமையாக சொன்னீர்கள் . எதோ தங்கள் பள்ளிகூடத்தில் தமக்கு அருகில் இருந்து இந்த ரெண்டு வாத்தியார்களையும் பார்த்தது போல் ஓர் உணர்வு..

Post a Comment