Friday, January 08, 2016

884. மதங்களும் சில விவாதங்களும் - ஒரு திறனாய்வு








*
 ரகுநாதன் 
திருநகர், மதுரை


*


அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சகோதரர் தருமி அவர்களுக்கு,

நீண்ட நாள் .. மிக மிக நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டு தங்களது அருமையான நூலை சமீபத்தில் படித்து முடித்தேன். தங்களின் புரட்சிகரமான நூல் சொல்லும் உண்மைகளுக்கும், தாங்கள் எழுதிய விதத்திற்கும் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆச்சரியமாக இருந்தது ! எப்படி இப்படி எழுத முடிந்தது உங்களால் ? சரளமாக … ! தெளிந்த நீரோடையாக …! 

பல முறை, பல பக்கங்களை திரும்ப திரும்ப படித்துப் பார்த்தேன். பல பக்கங்களில் கோடிட்டுக் கொண்டேன்.

37 ஆண்டுகள் உழைத்து முடித்து விட்டு, இப்போது தமிழ் குதிரையில் அமர்ந்து அருமையாக, திறமையாகப் பயணம் செய்திருக்கிறீர்கள்… செய்து கொண்டிருக்கிறீர்கள், லாவகமாக ! சிறப்பான பயணம் தான்.

தொப்பியைக் கழற்றிப் போடும் வானரத்தையும் சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். நல்ல உவமானம், உவமேயம் தான். இவ்வளவு சிறப்பாக எழுத வைத்த எதிர்கருத்துக்காரர்களுக்கும் நன்றி! பிரமாதம். 

சுயத்தை இழந்து, நொறுக்கப்பட்ட மனநிலையில் இருப்பவர்களின் புகலிடமாக இறை நம்பிக்கை இருக்கிறது என்று தாங்கள் சொல்லியிருப்பது உண்மையான கூற்று; மறுக்க முடியாது. இந்தக் கூற்றை இப்பொழுதுள்ள கல்வியினாலும், globalization என்ற வாழ்க்கை முறையினாலும் இளைஞர்கள் உணர்ந்து வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

குறிப்பாக I.Tகம்பெனிகளின் மூலம் பழைய புரட்டுச் சிந்தனைகள், சமய கோட்பாடுகள் நொறுங்கி வருவதாகத்தான் எண்ணுகிறேன். தங்களது நூல் சிறப்பாக வழிகாட்டுகிறது. இதற்கு அந்தக் காலத்திலிருந்தே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தால் சமய drama நன்றாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. என் எண்ணமும் அதேதான்.

 “அது எப்படி? ஒரு கிறித்துவப் பெண் (மிஸ்ஸியம்மா) ஒரு இந்துவைத் திருமணம் செய்து கொள்ளலாம்? என்று ஆத்திரத்துடன் தன் தந்தையைப் பார்த்து கேள்வி கேட்ட பாலகனா இந்த நூலை எழுதியது!

வியந்து வியந்து எண்ணிப் பார்த்தேன். சுய சிந்தனையும், கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும் சரியாகத் தங்களை மாற்றி விட்டிருக்கிறது.

“ஏன், எதற்கு, எப்படி என்று உன்னையே கேட்டுத் தெரிந்து கொள்; அப்படிக் கேட்டதால் தான் இந்த சிலை வடிக்கும் சிற்பி சிந்தனைச் சிற்பியானான். அவர் சொன்னார் .. இவர் சொன்னார் என்று எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் சிந்தித்துப் பார்” என்று கலைஞர் அன்று எழுதிய சாக்ரடீஸ் வசனம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. 

எழுத்துப் பணியை விட்டு விடாதீர்கள். சாகித்ய அகடமி பரிசும் நீங்கள் வாங்கக் கூடும்.

யூத மதம், கிறிஸ்த்துவ மதம், இஸ்லாமிய மதம் இவைகள் தங்கள் மதத்தினரை இறுக்கமான பிடிக்குள் வைத்திருக்கக் காரணமே தங்களை விட்டு மாறிவிடுவார்களோ, விலகி மற்ற மதத்தினரிடம் சேர்ந்து விடுவார்களோ, மற்ற மதம் வளர்ந்து விடுமோ என்ற மரண பயத்தால் தான் கடுமையாக நடந்திருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் மிகவும் மெச்சத்தக்க point-யைச் சொல்லியிருக்கிறீர்கள் – 


 “என் அம்மா நல்லவர்” என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால் என் அம்மா மட்டுமே நல்லவர் என்று சொல்வது தான் தவறு”. 

அருமையாக ஒரு தட்டு தட்டியிருக்கிறீர்கள். அபாரம். 

ஏசு நாதரின் ஜெபமே கேட்கப்படவில்லையே! பின் மற்றவர்களின் ஜெபம் என்னாவது? பைபிளில் சொல்லப்பட்ட ஊதாரிப் பிள்ளையின் நியாயம் எந்த விதத்தில் சேரும்?

 ‘Temporal lobe epilepsy” என்ற excellent அத்தியாயத்தைப் படிக்கும் பொழுது … ஓ! இப்படியும் உண்டா என்ற ஆச்சரியமே எனக்குள் எழுந்தது. ஓம் ஓம் என்று மூச்சிழுத்து, பிரணாயாமம் செய்து தியானத்தில் ஆழ்ந்திருந்த, ஆழ்ந்திருக்கும் யோகிகளும், மகரிஷிகளும் Temporal lobe epilepsyயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்திருப்பார்களோ என்ற ஐயம் எனக்குள் ஏற்படத்தான் செய்கிறது. அருமையான chapter.

இருந்தாலும் நீங்கள் ஒரு நூலைப் படிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 “ஒரு யோகியின் சுய சரிதம்” 
 பரம ஹம்ச யோகானந்தா U.S.A. 

அப்புத்தகத்தை ஆர்வத்துடன் பலமுறை படித்துப் படித்து வியப்புற்றுள்ளேன். அதில் chapters 19,28,32 படித்துப் பிரமித்துள்ளேன். தாங்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

இன்னும் நிறைய எழுதலாம் … எவ்வளவோ எழுதலாம் .. ஆனால் பக்கங்கள் நீண்டு கொண்டே போவதால் நான் எழுதுவதைச் சுருக்கிக் கொள்கிறேன். 

“நம்பிக்கையாளர்களை 
நம்பிக்கைகளை வைத்தே 
ஏமாற்றுவது எவ்வளவு எளிது” 

என்பதை தங்களின் சிறப்பான நூலால் மனதில் பதிய வைத்துள்ளேன். விலைமதிப்பற்ற கடின உழைப்பு,

பொதுவாக, இஸ்லாத்தையும் விட்டு வைக்கவில்லை; கர்த்தரையும் விட்டு வைக்கவில்லை; இந்து மதத்தையும் விட்டு வைக்கவில்லை. மஹா தைரியசாலி! மூன்று மதத்திற்குள்ளும் சென்று “ with opened eyes” காரண காரியங்களைத் தேடித் தேடி கடலில் நீந்தியிருக்கிறீர்கள். மன்னிக்கவும் … சமயம் என்ற ஆபத்தான சமுத்திரத்தில் மூழ்கி நீந்தியிருக்கிறீர்கள்.

மதம், சமயம் மூலமாக பாதித்த, கலங்கிய உள்ளங்களெல்லாம் தெளிவுபடும். நோய் குணமாகும் – இந்த நூலால்.



 ரகுநாதன் 
திருநகர், மதுரை




 *

23 comments:

சிந்திக்கமாட்டார்களா said...

அருமை

சிந்திக்கமாட்டார்களா said...

அருமை

mlsjohn said...

புத்தகத்தை போலவே திறனாய்வும் அருமை!ஒரு யோகியின் சுயசரிதம் வெளியிட்ட பதிப்பகம் பெயர் வேண்டும்.

தருமி said...

சாதிக் சமத்
நன்றி

தருமி said...

john Thomas
ஜெய்கோ பப்ளிகேஷன்ஸ்
மணிவாசகர் பதிப்பகம்

யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியா - எல்லா மையங்களிலும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒரு நூலைப் படிப்பதற்கு ஆசை அதனைப் பற்றிய விமர்சனத்தில் வெளிப்படும் என்பதை நிரூபித்துவிட்டார் மதுரை ரகுநாதன். உங்களுக்கு பாராட்டுகள், அவருக்கு நன்றி.

வேகநரி said...

உங்க நூல் எவ்வளவு அருமையா இருக்கும் என்பது தெரிந்ததே. இந்த நல்ல கருத்து கொண்ட கடிதம் மூலம் கலைஞரின் ஒரு நல்ல வசனத்தையும் அறிந்து கொண்டேன்.
//நம்பிக்கையாளர்களை
நம்பிக்கைகளை வைத்தே
ஏமாற்றுவது எவ்வளவு எளிது//
அது தான் ஆசிய மக்களிடம் தாரளமா நடந்து கொண்டிருக்கிறதே!
நோய் வந்தால் கடவுளினால், அல்லது யேசுவிடம் வருவதன் மூலம் இவற்றை தடுக்க முடியும். நோய் மாறினால் கடவுளின் அருளால்.

தருமி said...

வேகநரி,
// கலைஞரின் ஒரு நல்ல வசனத்தையும் அறிந்து கொண்டேன்.//

என்னது ... கலைஞரின் வசனமா...? என் வசனமுங்க அது!!

வேகநரி said...

என்னது ... கலைஞரின் வசனமா...? என் வசனமுங்க அது!!

நான் எழுதியவிதத்தால் தான் அப்படி குழப்பம் ஏற்பட்டது.மன்னிக்கவும்.
கடிதம் மூலம் கலைஞரின் ஒரு நல்ல வசனத்தையும் அறிந்து கொண்டேன் என்று நான் சொன்னது,
//இவர் சொன்னார் என்று எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் சிந்தித்துப் பார்” என்று கலைஞர் அன்று எழுதிய சாக்ரடீஸ் வசனம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.//என்பதை.

தருமி said...

வேகநரி,
அப்படி வாங்க வழிக்கு!!!

சந்திரசேகர்.ஜே.கே said...

அறிவு ஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டு தாங்கள் சொல்ல வருகின்ற கருத்துகள் சமானியர்களுக்கு புரியாத வகையில் சிலர் புத்தகங்களை எழுதுவர்.

அதை ஒரு சிலர் ஆஹா...ஓஹோ...என்றும், இன்னும் சிலர் அந்த அளவிற்கு இல்லை என்று தங்கள் மேதாவிதனத்தையும் காட்டிக் கொள்வர்.

புத்தகம் எழுதுவதே தங்களின் ஆத்ம திருப்திக் கென்று கூறுவோர் உண்டு.அப்படியாயின் அதை அவரின் நாட்குறிப்பிலேயே எழுதலாமே.

இன்னும் சிலர் அவர்கள் படித்ததை அப்படியே புத்தகமாக வாந்தி எடுத்திருப்பார்கள்.அவருக்கும் நமக்கும் புரியவே புரியாது.

ஒரு கருத்து யாருக்கு சென்று சேர வேண்டுமோ,அதை அவர்களுக்கு புரியும் வகையில் அவர்கள் மொழியில் எழுதுவதுதான் நோக்கமாய் இருக்க வேண்டும்.அப்படித்தான் வாசகனின் தரத்தை கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்த முடியம்.

பெருவாரியான சாதரணமான மக்களுக்கு, கருத்துக்கள் எளிமையாக சென்று சேரவேண்டும்.

அத்தகு கலையை நான் தருமி அவர்களிடம் கண்டேன். அதற்காக அவர் உழைத்த உழைப்பும் ஆர்வமும் புத்தகத்தின் வரிகளாய் படிந்துள்ளது.

அவர் பேராசியராய் பணியாற்றிய அனுபவம் கருத்துக்களை எளிமையாகவும் வலிமையாகவும் முன் வைக்கின்றன.

இன்றைய உலக அரசியல் சூழலில் மதவாதம் எப்படி அதிகாரத்தை பிடிக்க துடிக்கிறது என்பதை அறியாமல்,மதவெறி துண்டுதலுக்கு இரையாகும் இளைஞசர்களை எச்சரிக்கும் ஒரு எளிய நூலாக விளங்குகிறது.

இத்தகு புத்தகங்கள் தமிழில் வெகு அரிதாகவே காணமுடிகிறது.

சந்திரசேகர்.ஜே.கே said...

'மதங்களும் சில விவாதங்களும்'
என்பது நூலின் தலைப்பு.
ஆனால் உள்ளே பல விவாதங்கள் சுவாரசியமாக எழுகின்றன.

தருமி அவர்கள் கிறுஸ்துவ மதத்தில் பிறந்தவர்.
முதலில் அவர் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிப்பதே கிறுஸ்துவ மதத்தைதான்.
அதில் நமக்கு அவரின் நேர்மை பிடித்திருக்கிறது.

தன்னுள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடுவதில் விளைந்துதான் இந்த புத்தகம்.

மனிதன் பிறந்த உடனே அவனுக்கு மதம் எனும் கண்ணாடி பொருத்தப்பட்டு விடுகிறது.
அவனும் வாழ்க்கை முழுதும் அந்த பார்வையிலேயே கேள்வி கேட்காமல் பயணப் படுகிறான் என்ற உண்மையுடன் துவங்குகிறது.

யூதர்களின் செமிடிக்,கிறுஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் ஒரே இனக்குழுவில் தோன்றியும்,ஜெருசலேமை பொது புண்ணிய பூமியாக ஏற்றுக் கொண்டும், இவர்களுக்குள் 'கடவுளுக்கே' அடுக்காத எத்தனை போர்கள் எத்தனை அராகஜகங்கள்.

கருணையே வடிவான கடவுள் 'சொந்த சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்காமல்' வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஏதோ ஆரம்ப கால நாகரீகத்தில் அப்படி நடந்தது என்று மறக்க முடியாது, இன்றும் கூட
மாற்று மதத்தவனின் தலையை 'இறைவனின் புகழை' கூவிக் கொண்டு தலையை கொய்து தொலைக் காட்சிகளில் ஒளிபரப்புவது என்ன மதக்கலாச்சாரம்?

முகமது நபி அவர்கள் எந்த விதத்தில் ஒரு சாராசரி மனிதனை விட மேம்பட்டவராகிறார் என்ற கேள்வி எழும் போது, ஏனோ எனக்கு தேவர்களின் தலைவனாயிருந்து பின் காலாவதியான (All Gods have expiry date -Kamalhasan) கேவலமான இந்திரனின் நினைவு வந்தது.

அனைத்து மதங்களும் தங்கள் மதம்தான் சிறந்தது என்று சொல்லி மற்ற, மதங்களை எள்ளி நகையாடுவது ஏன்?

என் அம்மா நல்லவள் என்று சொல்வதில் எந்த தவறுமில்லை.ஆனால் என் அம்மா மட்டுந்தான் நல்லவள் என்று சொல்வதுஎப்படி சரியாய் இருக்கும் என வினவுகிறார் தருமி.உண்மைதானே.

எல்லாம் வல்ல ஈசனுக்கு 'டொய்ங்' என்று உலகத்தை ஒரு நொடியில் படைக்காமல் ஆறு நாட்களாய் படைத்து விட்டு ஒருநாள் ஓய்வெடுத்தக் கொள்கிறாராம்.அது எந்த நாள் என்பதிலும் குழப்பம்.

எந்த சமயமும் ஏன் உலகம் தழுவிய சமயமாக இல்லை என கேள்வி எழுப்புகிறார். மதங்களில் காணப்படும் புவி அறிவே இதெல்லாம் லோகல் பிரச்சனைகள் என தெளிவுறுத்துவதாக சொல்கிறார்.

ஒரு இந்து மதத்துகாரனின் கனவில் ஏன் அல்லா வருவதில்லை.ஒரு முகமதியன் கனவில் ஏன் சிவன் வருவதிலை என கேட்பதில் உள்ள உண்மை நமக்கு புரிகிறது.

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்றது பழைய ஏற்பாடு(செமிடிக்).ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றது புதிய ஏற்பாடு(கிறுஸ்துவம்).மீண்டும் பழிக்கு பழி என்று செய்துக் கொண்டிருப்பது இஸ்லாம். வெச்சா குடுமி இல்லன்னா மொட்டைதான்.ஆனால் அராஜகத்தில் எவரும் சளைத்தவராக தோன்றவில்லை.

கடவளின் தேவை என்ன? மதத்தின் சேவை என்ன? மனிதன் ஏன் அதில் வயப்பட்டுளான்.

நிலையில்லா மனிதவாழ்வில் நிறைந்த அச்சம், உத்தரவாதமற்ற வாழ்க்கை,அதனால் எழும் சோகங்கள், இவற்றிற்கான ஆறுதலாகவும்,துன்பத்தை போக்கவல்ல நமபிக்கையாகவும்,தன்னுள் எழுந்த உணர்வை கடவளாக கற்பித்துக் கொண்டான்.

பிரான்சு நாட்டில் CERN ஆராய்ச்சி நடக்கும் போது,இந்தியாவில் சில பக்த கோடிகள் 'லோகம் அழிய போறது' என்று கோவில்களில் தஞ்சம் அடைந்தார்களாம்.
அப்போது நவீன அழிக்கும் கடவுளான அப்துல்கலாம் 'அழியாது' என்றதும் பெருமூச்சு விட்டனராம்.

உலகம் அழியும் நாளன்று கடவுள் நிச்சயம் வருவரேன்று அனைத்து மதங்களும் கோரஸாக சொல்கின்றன.சில தேதிகளை குறிப்பிட்டு மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன.

எதையும் காதில் வாங்காமல் புவி அதன் பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கிறது.

சந்திரசேகர்.ஜே.கே said...



வளி மண்டலத்தில் இருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி அடைந்தாலும்,மனித நரம்பு மண்டலத்திலிருந்து வடுவிக்க போராடி வருகின்றனர்.

மனித மூளையில் உள்ள 'டெம்பரல் லோப்' பகுதிக்கும் நினைவுகளை ஆளுகின்ற மூளை பகுதிக்கும் உள்ள இணைப்பை பலமாக்கினால் 'மத உணர்வுகள் பொங்குகின்றன' என்று சோதனை மூலம் விடை கண்ட கலிபோர்னியா பல்கலைகழகத்தை சார்ந்த நரம்பியல் விஞ்ஞானி,விலயனூர் ராமச்சந்திரன்(நம்மவர்தான்).

இது குறித்து இறை நரம்பியல் (Neuro theology)என்ற தனித்துறையே உருவாகியுள்ளார்களாம்.
அந்த சோதனைகளையும் முடிவுகளையும் சுவாரசியமாக
பதித்துள்ளார்.



பெண்களின் உடை குறித்த விவாதம் தற்போது நடக்கின்றது.பெண்களின் உடை விருபத்திற்கெதிராய் மட்டும் இந்து முஸ்லீம் ஒத்த குரலில் முழங்குகின்றன.

'ஹிஜாப்' முஸ்லீம் பெண்ணின் முகம் மற்றும் கைகளை மறைக்கும் தளர்வான ஆடை வந்ததற்கான காரணம் வெளியில் சொல்ல முடியாதவை.

தமிழ்நாட்டில் புர்கா போடும் பெண் திருமண சந்தையில் விலை போகாமல்,எங்கே அவமான பட்டு விடுமோ... என்று அச்சப்படும் பெற்றோர்களின் கவலையை, தருமி உணர்வது அவரின் சமூக பொறுப்பை காட்டுகிறது.
பெண்கள் உடை குறித்து கிறுத்துவ மதம் அவ்வளவாக கவலை கொள்ளலாது நல்ல விஷயமே.

ஏமன் நாட்டில் சானா என்ற மசூதியில் கணடெடுக்கப் பட்ட புராதாண 'குரான் ' குறித்து தகவல் ஏன் வெளிப்படையாக விவாதிக்க படவில்லை என நியாயமான கேள்வி கேட்கிறார் தருமி.

அப்படி வெளிவந்தால் 'டாவின் சி கோட்' போல் இன்னொரு கதை உருவாகலாம்.

இயேசுவே தன்னை யூத ஆடுகளை மேய்க்க வந்த மேய்ப்பாளரா கூறிக் கொள்கிறார்.பின் எப்படி உலக ஆடுகளின் மேய்ப்பாளரா மாறினார்.

Ron wyatt என்பவர் யேசுவின் புண்ணிய தலங்களில் ஆராய்சி செய்து யேசுவின் ரத்தத்தை கண்டு பிடித்து சோதனை செய்தாராம்.
என்ன ஆச்சரியம் அதில் ஆண்களுக்குரிய 'Y' குரோமோசம் மட்டுமே இருந்ததாம்.
அடேங்கப்பா...என்ன ஒரு கண்டுபிடிப்பு.

நம்ம ஊர்லே ராமர் பிறந்த இடமும்,அவர் கட்டிய பாலமும் கண்டுபிடிச்சாச்சு.அவருடைய வில்லும் அம்பும் BJP கையிலே இருக்கு.

அன்னை தெரிசா பாவமன்னிப்பு கோரும் கடிதத்தில் நாத்தீக சிந்தனையும் மனிதநேயமும் வெளிப்படுவதை விவரிக்கிறார்.

புது மதங்களும் மதக்கிளைகளும் தோன்றும் காரணத்தை விவரித்திருக்கிறார்.

அடடே...அவ்வளவுதானா நாளைக்கே நாம் ஒரு புது மதத்தை உருவாக்கலாம்.சில்லறை தட்டுபாடின்றி சுகமாக வாழலாம்.

இந்து மதத்தை இரு கூறுகளாகப் பார்க்கும் அவரின் பார்வை யாதார்த்தத்தை காட்டுகிறது.

ஒரு கூறு சிறுபான்மை பிராமணர்களை கொண்டதாகவும் அடுத்த கூறு பெருன்பான்மை கொண்டதாக இருப்பினும் அதன் தலை மீது ஏறி மதம் என்னும் போர்வையில் சிறுபான்மை ஆளுவதை சுட்டிக்காட்டுகிறார்.

இந்து என்ற பெயர் எப்படி வந்தது.அரசு குறிப்பில் எப்போது பதியப் பெற்றது.சிறு மதங்களாய் நிரவி இருந்த மதங்களை இந்து மதம் என்று ஒரே மூட்டையாக கட்டியது யார்? போன்ற சுவாரசிமான செய்திகளை அள்ளி தருகிறார்.

பல கடவுள்களை தொலைத்தும் சில கடவுள்களை சுவீகரித்தும் திட்ட மிட்டு வளர்ந்தது இந்து மதம்.
புத்தரையே தசவதாரத்திற்குள் கொண்டு வந்தவர்களாயிற்றே.

சாமி சிலை திருட்டை கேள்வி பட்ட நமக்கு சாமி திருடர்களை பற்றி கேள்வி படாதது நம் அறியாமையே.

சமூக தளத்திலும் அன்றாட நடைமுறையிலும் காணத பாலியல் கதைகள் வேதத்திலும் புராண கதைகளிலும் விரவி இருக்கினறன.

இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்த சத்ரியர் செயலற்று போனதும்,சூத்திர சாதியினர் புதிய சத்ரியர்களாய் உருவாகி வருகிறார்கள்.

பதிய சத்ரியர்களின் நோக்கம் மனித உறவுகளை தலித் மயமாக்குவதோ,ஜனநாயகமாக்குவதோ அல்ல.
மாறாக பார்பனீய மயமாக்கவே முயல்கிறாரகள் என்பதை துகிலுரித்து காட்டுகிறார்.

இந்த உண்மை மக்களுக்கு உறைக்க வேண்டுமே, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மனம் பதறுகிறது.

இந்து மதத்தில் சாதி கொடுமைகளால் எழும் எதிர்ப்புகள் மதப்புரட்சி என்ற பெயரில் சாந்தப்படுத்த அவ்வபோது சிலர் தோன்றியுள்ளனர்.

சாதிக் கட்டுபாடுகள் மட்டுமே இந்து மதத்தை அழிவில் இருந்துகாப்பாற்றி உள்ளது என்று காந்தியடிகள் கூறியதை வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

இந்து மதத்தில் ஒழுக்க குறைபாடுள்ள மனிதர்களை கூட கடவுளுக்கு இணையாக போற்றுவதை அதிசயமாக பார்க்கிறார்.

எல்லா மதங்களும் வெவ்வேறு கடவுள்களையும் வெவ்வேறு தத்துவங்களையும் சொன்னாலும் சில முக்கிய பிரச்சனைகளில் மாறுபாடில்லாமல் ஒற்றுமையை ஒரே கருத்தை கொண்டிருப்பது உற்று நோக்கத் தக்கதாகும்

சந்திரசேகர்.ஜே.கே said...

ஒன்று பெண் சுதந்திரம்.

எல்லா மதங்களும் பெண்ணை ஜீவனற்ற பொருளாக பார்க்கிறது.அவர்களுக்கென்று தனி உணர்வும் அறிவும் இருப்பதை மறுக்கிறது.
இந்து மத வேத்திலேயே 'பெண் பிள்ளை பிறக்க விடாமல் எங்களை காத்தருள்வாய்' என வேத ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.

பால்ய விவாகம், உடன்கட்டை,விதவை மறுமணம்(இவை தற்போது குறைந்துள்ளது என்றாலும் BJB ஆட்சி ஆயுளை பொறுத்தே உள்ளது)வழக்கத்தில் இருந்தன.

வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமாய் இருப்பதில்லை என்று ஒழுக்கங்கெட்ட காமுகன் சங்கராச்சார்யா சொன்னது சமீபத்தில்தான்.

முஸ்லீம் மதத்தில் பெண் பிள்ளையை பெறுபவர்களை குரான் போற்றுகிறது.
ஆனால் ஒருவன் நான்கு மனைவியரை கொள்ளலாம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

திருமணத்திற்கு முன் பெண் சம்மதம் தெரிவிக்க வேண்டுமாம்.மௌனமாக இருந்தாலே சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளப் படுமாம்.
வாரே...வா...என்ன ஒரு சுதந்திரம்.

நபிகள் ஒன்பது வயது நிரம்பிய பெண்ணை மணம் புரிகிறார்.
நபியின் வழியில் தோழர்களும்.
ஒரு வறுமைக்கிழவன் தன் இளம்மகளை ஒரு பணக்கார கிழவனுக்கு மணமுடித்து வைக்கிறான்.அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இவன் ஒரு இளம் பெண்ணை மணக்கிறான்(ஆப்கானிஸ்தான்)
கிறுஸ்துவ மதத்தில் பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும் ஆங்காங்கே கொடுமைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டு ஏழ்மை

எல்லா மதங்களும் ஏழை மீது அதித கருணை மட்டுமே கொண்டிருக்கின்றன.ஏழையின் மேம்பட எந்த வழியும் மதங்களில் காணப்படவில்லை.

அந்நிலைமை மாறிடாதிருக்க,சொர்க்கம்,தலைவிதி,ஆண்டவன் அறிந்தே ஒருவரின் நிலையை படைக்கிறான் அதை மாற்ற இயலாது என்கிறது.

ஏழைக்கு பிச்சையிடாதவன் நரகம் காண்பான் என்று சொன்னதை நம்பி இன்னும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பாமர்கள்.

இந்த இரண்டு காரணங்களுகாகவே மதங்களை கலைத்து விடலாம்.முடியமா....
மதம் தோன்றியதில் இருந்தே அரசியலை தன்னுடன் இருத்திக் கொண்டுள்ளது.சரியாக சொன்னால் அரசின் ஸ்திர தன்மை காக்கவே மதம் பிறந்தது.

முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவ ஆலயங்களில் அரசியல் போதிக்கப் படுகிறது.

இந்து மதத்தில் அப்படி ஒரு ஏற்பாட்டை கொண்டுவர இந்துத்துவா துடிக்கிறது.

முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள் அந்த துடிப்பை வேகமாக்குவதில் சளைக்காமல் இயங்குகிறது.

சோசலீச சரிவுக்கு பின் மதங்கள் அரசை கைப்பற்றும் நோக்கம் வேகமடைந்துள்ளது.

இவை ஏகாதியபத்தின் வேலை என்று சொன்னால்,
நம்பாமல் உள்ளூர் பிரச்சனையாக பார்க்க வைக்கும் ஊடகங்கள்.

டார்வினின் பரிணாம கொள்கையும் கொபர்நிக்கஸின் சூரிய மைய வாதமும் பைபிளை கேள்விக்குள்ளாக்கியது.இந்த நெருக்கடியை களைய கடவுளின் ஆட்சி அல்லது யேசுவின் வருகை என்கிற அடிப்படையுடன் முதன்முதலாக அடிப்படைவாதம் என்னும் கருத்து உதயமாகிறது என்கிறார்.

அது இஸ்ஸலாமிலும் நிலைத்து தற்போது இந்து மதத்தில் நீடித்து வளர்கிறது.

சோவியத் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உலகலளாவிய எதிரியாக இஸ்லாம் அடிப்படை வாதத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.

இந்தியாவின் ஆதரவும் அதற்கு இருந்தது வெட்ககேடு.

அமெரிக்காவின் பொருளாதார வளர்சிக்கு இரையாகும்
முஸ்லீம் தீவிரவாதம்.

பெரும்பான்மை கிறுஸ்தவ அடிப்படைவாதிளின் ஆதவுடன் தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க அதிபர்,யாருடைய நலன் காப்பார்?


மதமெனும் அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால்,ஒரு சமூக புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையில் இருந்து'கடவுளை' அகற்ற முடியும் என்கிறார் மாமேதை காரல் மார்க்ஸ்.

நிறைவான புத்தகத்தை படித்து நிறையவே தெரிந்து கொண்ட பெருமித்தால் 'தருமி'அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தருமி said...

மிக்க நன்றி சந்திரசேகர்.

Mahesh said...

காவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா? நாங்களும் இருக்கிறோம்.. - சிவகாசிக்காரன்

தருமி said...

சந்திர சேகர்
ஒரே வார்த்தையில் நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டுச் செல்வது நாகரீகமல்ல. மன்னிக்கணும். நீண்ட நன்றியே சொல்ல வேண்டும் - essence-யை அப்படி இறக்கியதற்கு. புத்தகத்தின் முக்கிய பகுதிகளை மிக அழகாகச் சுருக்கித் தந்துள்ளீர்கள். //முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவ ஆலயங்களில் அரசியல் போதிக்கப் படுகிறது.

இந்து மதத்தில் அப்படி ஒரு ஏற்பாட்டை கொண்டுவர இந்துத்துவா துடிக்கிறது.//... பல அழகான வரிகளில் இதுவும் ஒன்று.
நீங்கள் எழுதியதை ஒரே கட்டுரையாக்கி வெளியிட ஆசைப் பட்டேன். நீங்கள் பிரித்து பின்னூட்டமாக அனுப்பியதால் அப்படியே 'இறக்கி' விட்டேன்.
மீண்டும் மனதாழத்திலிருந்து நன்றி

சார்லஸ் said...

தருமி சார்

திரு. சந்திரசேகர் அவர்களின் பின்னூட்டத்தை தனிப் பதிவாக போட்டிருக்கலாம் . அழகாக அலசி ஆராய்ந்து தன்னுடைய செறிவான கருத்தையும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார். வாசிக்க எளிய கருத்துச் செறிவான பின்னூட்டம் .

தருமி said...

சார்லஸ்

//நீங்கள் எழுதியதை ஒரே கட்டுரையாக்கி வெளியிட ஆசைப் பட்டேன். நீங்கள் பிரித்து பின்னூட்டமாக அனுப்பியதால் அப்படியே 'இறக்கி' விட்டேன். //

இருந்தும் நானே அப்படி போட்டிருந்தக்கலாம் தான்.

வேகநரி said...

//பெண்களின் உடை குறித்த விவாதம் தற்போது நடக்கின்றது.பெண்களின் உடை விருபத்திற்கெதிராய் மட்டும் இந்து முஸ்லீம் ஒத்த குரலில் முழங்குகின்றன.//

முற்றிலும் உண்மை. பிற்போக்குவாதிகள் எப்போதுமே ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள் போலும். பெண்கள் இப்படி தான் ஆடை அணிய வேண்டும் என்று பெண்களை அடக்கி ஒடுக்குவதில் மதவாத இஸ்லாமியர்களும், மதவாத ஹிந்துக்களும் கைகோர்த்து குஷியாக செயல்படுவார்கள். சில பெரியரிஸ்டுகளும் அதே மாதிரியானவர்கள் தான். ஒரு கிறிஸ்தவ அம்மணி ஒருவர் இஸ்லாமிய ஒடுக்குமுறை பர்தாவுக்கு தமிழில் செம்பு தூக்கி கொண்டு திரிவார்.

தருமி said...

// ஒரு கிறிஸ்தவ அம்மணி ஒருவர் இஸ்லாமிய ஒடுக்குமுறை பர்தாவுக்கு தமிழில் செம்பு தூக்கி கொண்டு திரிவார்.//

யார்னு தெரியலையே....?

வேகநரி said...

நீங்க மறந்து விட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். இப்போ மூமின்களின் பிரசார பதிவுகள் முன்னையது போல் வருவது இல்லை தான். மீண்டும் அவர் தோன்றினால் :)அடையாளம் காட்டுகிறேன்.

M.Ragunathan said...

Respected Brother, I read all excellent comments of others, particularly Mr.Chandrasekar and Mr. vedanagri. Those are the valuable points which I wanted to express in my First message to you but unfortunately I dropped it. Anyhow I wish to appreciate your MENTAL STRENGTH AND CAPABILITY which was shown by you in middle of your close relatives, described by you in the last 10th chapter.IT means that you were SAILING THE BOAT AGAINST STRONG WIND[like] STORM. SPLENDID,AWESOME. Thank you very mucg for publishing the VALUABLE BOOK "MADHANGALUM and SILA VIVADHANGALUM".. Ragunathan

Post a Comment