Saturday, January 28, 2017

923. I AM SO…. FORTUNATE








*




  73 years. 

Have seen two great events in my life. 

 1965 Hindi agitation – politics of TN changed so totally with the impact persisting even today. 

2017 Jallikattu agitation – will it be a harbinger for the days to come? 

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றிய என் பழைய பதிவுகள்; 

ஜல்லிக்கட்டுப் போராட்டக் காலத்தில் ஓர் இரவு. பத்து மணியிலிருந்து புதிய தலைமுறையின் ‘நேர்படப் பேசு’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டே இரண்டு அரசியல் வியாதிகள் மட்டும் இருந்தார்கள். இருவரையும் மீனை தரையில் வைத்து உரசுவார்களே அதே மாதிரி உரச வேண்டும் என்று தோன்றியது. விடுங்கள் அவர்களை. இவர்கள் போக கூட்டத்தில் ஒருவர்… பெயர் தெரியவில்லை. கருப்பாக இருந்தார் – ஆனாலும் உண்மையைப் பேசினார்! மிகவும் தெளிவாகப் பேசினார். ஒவ்வொரு பேச்சிலும் உண்மையும் ஆளுமையும் இருந்தது.


 அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் நான் எவ்வளவு lucky என்பது எனக்குள் நிழலாடியது. இன்னும் பத்து வருஷம் நான் முந்திப் பிறந்திருந்தால் ஒருவேளை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வு எதுவும்கூட நினைவில் வந்திருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. முக்கியமான இரு வரலாற்று நிகழ்வுகளை ஆயுட் காலத்தில் பார்த்தாயிற்று.


 மகிழ்ச்சி …

1965 - இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் நல்ல விளைவுகளை இன்னும் அறுவடை செய்து கொண்டு வருகிறோம். தமிழ்நாடு தனித்து நிற்கும் பெருமைக்கு அது தான் அடிகோலியது. ஆட்சி மாறியது. மாணவரின் பலம் என்ன என்று இன்றும் நாட்டுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் நிகழ்வு அது. இந்தியை எதிர்த்ததற்கு இன்றும் நமது மக்கள் பலர் பிரலாபித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நேரத்தில் போட்ட ஒரு தடையால் இன்றும் அந்த மொழி நம்மை ஆட்சி செய்வதிலிருந்து தப்பித்தோம்.


 அன்று அந்தப் போராட்டம் எங்கிருந்தோ காற்றிலிருந்து வரவில்லை; மேகத்திலிருந்து விழவில்லை. தி.மு.க. அடியெடுத்துக் கொடுத்தது. திராவிட அரசுகள் மேல் குறையாத “அன்பு” கொண்டோர் நம்மிடம் அதிகம் உண்டு. அவர்கள் என் வாழ்வையே இந்தி எதிர்ப்பு கோணலாக்கி விட்டது என்று கதறுபவர்களும் இன்னும் உண்டு. இவர்கள் இந்தி படிக்காததால் அம்மொழி பரிதவித்துப் போனது என்றும், இந்தி படித்திருந்தால் தங்கள் வாழ்க்கை இமயத்தின் உச்சியில் கொடி நாட்டியிருக்கும் என்றெல்லாம் பேசும் அறிஞர்கள் பலரும் உண்டு. எப்படியோ… அன்று மாணவர்கள் எழுச்சி இந்த மொழிவாரி நாட்டில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.


மாணவர் எழுச்சியே அதற்கான பெரும் காரணம். அக்காரணம் எப்படி படிப்படியாக தமிழ்நாட்டில் வளர்ந்தது என்பதையும், தி.மு.க. மட்டுமே அதற்கான முழுக்காரணமுமில்லை என்பதைப் பற்றி மாலன் என் பழைய பதிவில்  ஒரு பின்னூட்டம் மூலமாக எழுதியுள்ளதை இங்கு மேற்கோளிடுகிறேன்:

 இந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் 1965க்கும் முன்னரே இருந்து வந்ததுண்டு. மறைமலை அடிகள், திரு.வி.க ( இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தொண்டாற்றியவர்) போன்றோர் அதில் முனைப்புக் காட்டினார்கள். இவர்கள் அன்றைய சமூகத்தில் மரியாதையைப் பெற்றவர்கள். ஆனாலும் அப்போது இந்தி எதிர்ப்பு 1965ல் இருந்ததைப் போன்ற மக்கள் இயக்கமாக இருக்கவில்லை.ஏன்? ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டதுதான் 1965 கிளர்ச்சிக்கு ஒரு வேகம் கொடுத்தது.

எந்த மனிதனையும் அரசியல் அதிகாரத்தின் மூலம் அடிமையாக்கிவிட முடியாது என்ற ஆதார உண்மைதான் 1965 கிளர்ச்சியின் அடிப்படை.


இன்றும் அதே அரசியல் தத்துவம் உண்மையாகி விட்டது. முரட்டு அதிகாரமும், கண்மூடித்தனமான கோட்பாடுகளும் இளைஞர் மனதில் போராட்ட உணர்வை ஊட்டி விடும் என்பது மீண்டும் நம் முன் புலனாகி விட்டது. எப்படி ஒரு எழுச்சி!  ஒரு வேளை இந்தி எதிர்ப்பின் நீட்சியாகக் கூட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பார்க்கலாம். ஒருவேளை அதனால் தான் அரசியல்வாதிகளை இம்முறை ஒதுக்கி வைத்து விட்டார்கள் போலும். அவர்களின் சதுரங்க ஆட்டத்தில் வெற்றுக் காய்களாக இருக்க மறுத்து விட்டார்கள்.


எப்படி கூடினார்கள் .. எப்படி ஒன்றிணைந்தார்கள் என்று எல்லாமே அதிசயம். சாதியில்லை … மதமில்லை … பாலின பேதம் இல்லை… அட.. வயசு வித்தியாசமுமில்லை. அப்பாவும், அம்மாவும் பிள்ளையும் என்று எல்லோருமாக ஒன்று கூடி விட்டார்கள். ஒரே குடும்பம், கூடிய கூட்டத்தினுள் எப்படி இத்தனை ஒழுங்கும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், சுத்தமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டன. காவலுக்கு நின்ற காக்கிச் சட்டைகளையே நண்பர்களாக்கிக் கொண்டார்களே!


 இந்த நிகழ்ச்சிகளைக் கண்முன்னே கண்டதே ஒரு பெரும் பேறு. முதல் இந்தித் திணிப்பு போராட்டத்திலும் அதிக ஆச்சரியத்தோடு போராட்டத்தின் முன்னணியிலிருந்தோரை ‘ஆவென’ வாய் பிளந்து ரசித்தேன். இன்றும் அதே நிலைதான். சிட்டுக் குருவிக் கூட்டம் போல் அழகாக ஊருக்கு ஊர் அமைந்த இந்தக் கூட்டம் மெய்சிலிர்க்க வைத்தது. அன்றாவது கூட்டத்தில் ஒருவனாக கோஷம் போட்டுச் சென்றேன். இன்று எட்டத்தில் நின்று படம் மட்டும் எடுத்து வந்தேன்.


 இப்போராட்டத்தில் எல்லாம் செவ்வனே சென்று கொண்டிருந்தது. ஆனால் முடிவு தான் முற்றிலும் தவறாகப் போய் விட்டது. இப்போது எல்லாம் முடிந்த பிறகு இவர்கள் அவர்களையும், அவர்கள் இவர்களையும் பழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


என்னைப் பொறுத்தவரை வந்த ஒரு பெரும் சந்தேகம். இன்னும் எதிர்காலத்தில் பல சமூக, அரசியல் பிரச்சனைகள் தலையெடுக்கும் போது இப்போது போல் இளைஞர்கள் மீண்டும் தலையெடுப்பார்களா? ஒன்று கூடி தேரிழுப்பார்களா? அல்லது, இந்த முயற்சியின் இறுதியில் நடந்த முட்டாள் தனமான, வெறித் தனமான விஷயங்கள் அவர்களது எதிர்கால முயற்சிகளை முற்றுமாகத் தடை செய்து விடுமா?

 நடந்த போராட்டத்தின் முடிவினால் தங்களுக்கு இருந்த சில மரியாதைகளையும் காவல் துறையினர் இழந்தார்கள். ஏனிந்த வெறி என்றே புரியவில்லை. எத்தனை எத்தனை வெறியாட்டங்கள்.

 பாவம் … ஒரு பாவப்பட்ட பெண்மணி தன் வீட்டின் முன்னால் நிற்கிறாள். ஓடி வந்த காவலன் ஒருவன் அவளை அடித்து , அவள் கையிலிருந்த ப்ளாஸ்டிக் குடத்தைத் தெருவில் அடித்து உடைத்துப் போகிறான். வெறி ……

யாரைத்தேடி வந்தார்களோ… நாலைந்து காவலர்கள். ஆண்கள் யாரும் அங்கில்லை. இருந்த பெண்களை – அதிலும் வயதில் மிக மூத்த பெண்களை அடித்துத் தள்ளி அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்துப் போகிறார்கள். ஏதோ ஒரு வெறி … ஒரு மன வியாதி.

அதை விட வீட்டுக்கு விளக்கேற்றி வைப்பாள் பெண் என்பார்கள். ஒரு பெண் காவலாளி வேலை மெனக்கெட்டு தூரத்திலிருந்து நெருப்பெடுத்து வந்து ஒரு ஓட்டை வீட்டை ‘விளக்கேற்றி’ எரித்தாள் அந்த நவயுகக் கண்ணகி. 

சாலையில் நின்று கொண்டிருந்த வண்டிகளை அடித்து நொறுக்குவதில் பெயர் வாங்கி விட்டார்கள் நம் தமிழ் போலீஸ்காரர்கள். என்னே அவர்களது திறமை.

ஒதுங்கி நின்ற ஆட்டோவைத் தீ வைத்து எரித்த அவர்களது சாணக்கியத் தனத்தை எப்படி, எத்தனை காலத்துக்கு நாம் போற்றிப் பாடிக்கொண்டிருக்க வேண்டுமோ தெரியவில்லை.

 காவல் துறையின் கேவலமான ஆட்ட பாட்டங்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். எளிதில் மறக்கவும் கூடாது.

போராட்டத்தின் முடிவால் இன்னொருவருக்கும் பெரும் இழப்பு என்றே நினைக்கின்றேன். ஆயாவின் காலில் விழுந்து தன் தன்மானத்தை முழுவதுமாக இழந்து நின்ற தமிழ்நாட்டின் சீப் மினிஸ்டர் ஓ.பி.எஸ். இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் விரைவாக தில்லி சென்று ஏதேதோ செய்து அவசரச் சட்டம்… சட்டத் திருத்தம் என்றெல்லாம் கொண்டு வந்தபோது போராட்டக்காரர்களை நேருக்கு நேரோ, மறைமுகமாகவோ சந்தித்து போராட்டத்தை நல்ல முறையில் முடித்து வைப்பார் என்று நினைத்திருந்தேன். அதற்குரிய வழிகள் திறந்தேயிருந்தன. ரம்மி ஆட்டத்தில் எல்லாம் சேர்ந்த பின் ‘டிக்’ அடிக்க வேண்டுமே … அந்த நிலையில் அவர் இருந்ததாக நினைத்தேன். கையில் அத்தனை நல்ல ஜோக்கர்கள் இருந்தார்கள்! அழகாக ‘டிக்’ அடித்திருக்கலாம். உட்டுட்டார் ... பாவம்!!


அப்படி ஏதும் உண்மையில் நடந்திருந்தால் அரசியலில் அவரது நிலை நன்கு காலுன்றி நின்றிருக்கும். அதற்கு மேல் மன்னார்குடி மாபியா அவரைத் தொட அஞ்சியிருக்கும்; மக்கள் மனதிலும் அவர் உயர்ந்திருப்பார். முதலமைச்சர் பதவி நன்கு கைவசமாக வந்திருக்கும்.

ஆனால் …

யாரோ ஒரு பத்திரிகைக்காரர் கேட்டதற்கு அவசரமாக அலங்காநல்லூரில் வாடிவாசலைத் திறந்து வைப்பேன் என்று சொல்லியதே அவரை ஒரு அவசரக்குடுக்கை என்று நினைக்க வைத்தது.


அடுத்து நாள் அலங்காநல்லூர் என்று எடுத்த அவசர முடிவை போராட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல … எல்லோருக்குமே பொருந்தாத ஒரு முடிவு. அமைச்சரின் முடிவு நிராகரிக்கப்பட்டது.


அதனால் அவருக்கெழுந்த கோபத்தினால் தான் காவல் துறையை மக்கள் மீது ஏவி விட்டு விட்டார் என்றும் ஒரு கருத்து பரவலாக உண்டு.


 உண்மை எதுவோ… வெற்றியின் வாசலைத் தொட்ட முதலமைச்சர் கொடுத்த ஆணையோ… அல்லது வேறு எந்த காரணமோ … காவல் துறையின் வெறியாட்டத்தால் அமைச்சரின் மீது கனிந்த நல்ல கருத்துகள் நாசமாகி விட்டன. மக்கள் மனதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நல்ல இடம் பறி போனது.


 ரம்மியில் ’டிக்’ அடிப்பதற்குப் பதில் wrong tick அடித்து விட்டார் … பாவம்! 

*
a "heroic" action of police


https://youtu.be/mSnUBMVz2Dw

 *

Friday, January 27, 2017

922. ”பார்வைக்காக ......” - ரெங்கா கருவாயன்






*





இக்கண்கள் எடுத்த படங்கள் கீழே.....

கருவாயன் அப்டின்னு புனைப்பெயர். சரியா நனஞ்ச பனம் மரம் மாதிரி ஒருத்தரு இருப்பாருன்னு போய் பார்த்தா ரெங்கா நல்ல மாநிறத்தில மூஞ்சி பூரா நிறஞ்ச சிரிப்போடு  நிக்கிறாரு.

கண்கள் ....ஆனால் ஒளியில்லை


தனியொருவன் ... தன் தனித்த உலகில். 

 அந்தப் பள்ளி என் வீட்டுக்கருகில் தான். சில தடவை அங்கு சென்றும் வந்துள்ளேன். ஆனாலும் ரெங்கா தினம் தாண்டிப் போகும் அந்த பள்ளி அவருக்கு ஒரு முனைப்பைக் கொடுத்திருக்கிறது. அடிக்கடி அந்தப் பள்ளிக்குச் சென்று பிள்ளைகளோடு பழகி, பழக்கத்தால் வந்த பிணைப்போடு படங்கள் எடுத்திருக்கிறார். அந்தப் பண்புக்கு முதல் சல்யூட்!









எனக்கு மிகவும் பிடித்த படம் -- ஒளியை நோக்கி ...

அவர்கள் வாழ்க்கையே இருட்டு வாழ்க்கை. அதனால் தான் தன் படங்களையும் கருப்பு மிகுந்திருக்கும் கருப்பு-வெள்ளைப் படங்களாக எடுத்திருக்கிறார்.



 நம்மையும் தொற்றிக் கொள்ளும் சிரிப்பு ...........


நம்மை மிரட்டும் கருப்பு. பல படங்களில் அந்தப் பிள்ளைகள் தனிமைப் பட்டு நிற்கும் பரிதாபத்திற்குரிய நிலை தெரிகிறது.




பொட்டிக்காரர்











வித்தை காட்டுகிறார்கள்


 கண்காட்சிக்கு வெளியே ...
பாடம் படிக்கிறார்கள்.

வந்தோர்களின் கருத்துகள்

பள்ளி மாணவர்களின் வருகை.
அவர்களுக்கும் “அடுத்த பக்கம்” பற்றி ஒரு புரிதல்.

சுவற்றோடு முகம் புதைத்துக் கிடக்கும் சிறுவன், விளையாட்டு நேரத்திலும் தனியாகப் படுத்து தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் சிறுவன் … பல பாவங்கள். சில சிரித்த முகங்களும் நம்மை உறுத்துகின்றன.


 நல்ல படைப்புகள். அந்தப் படைப்புகளுக்குப் பின்னே இருக்கும் நேசம் .. கனிவு… படைப்பாளிக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.





 *

Thursday, January 26, 2017

921. காவல் துறை ... அன்றும் இன்றும் அதே நிலைதானா...ஒரு மறு பதிவு






*


MONDAY, AUGUST 01, 2005




 39. இந்தி எதிர்ப்பு - 2 அல்லது 38-ம் பதிவுக்கு  
பின் குறிப்பு...1 





இதற்கு முந்திய பதிவைத் தொடர்ந்து 3 விஷயங்களைப் பற்றி எழுதத் தோன்றியது. காவல்துறை அன்றும்-இன்றும், மாணவர்கள் அன்றும்-இன்றும், இந்தியும் நாமும் என்று எழுத ஆசை. நிச்சயமாக நான் சொன்ன மூன்றில் கடைசி இரண்டும் கொஞ்சம் விமர்சிக்கப்படலாமென நினைக்கின்றேன்; ஆகவே முதலில் நம் காவல்துறையைப் பற்றிப் பேசுவோமா?

நம் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகவே வன்முறையைக் கையாளுகிறார்கள் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது என்றே எண்ணுகிறேன். சென்ற வாரத்தில் ஹரியானாவில் ஹோண்டா நிர்வாகத்தை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ஈவு இரக்கமின்றி காவல்துறையினர் நடத்திய ஊழித்தாண்டவமும், சென்ற மாதத்தில் கேரளாவில் காவல்துறையினரிடமிருந்து மாணவர்களுக்குக் கிடைத்த தடியடிகளும் சமீபத்திய நிகழ்வுகள். அதைவிட எனக்கு ஆச்சரியமளித்தது அரசாங்க ஊழியர்கள் நம் தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிறுத்தம் செய்தபோது நம் போலீஸ் நடந்துகொண்ட முறை - ஆண், பெண் என்றோ, வயது வித்தியாசமோ பார்க்காமல் நடந்த விதமும், போலீஸ் வேனில் ஏறப்போகும் நிலையிலும் அரசு ஊழியர்களை அடித்துத் தள்ளியதும் எல்லா மீடியாக்கள் மூலமாகவும் நம்மை வந்தடைந்தன. ஆச்சரியம் என்னவெனில், அவர்களும் அரசாங்க ஊழியர்களே; போராடுவதும் அரசாங்க ஊழியர்களே. நல்லது நடந்தால் கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்குமே. நமக்கும் சேர்த்துதானே அரசாங்க ஊழியர்கள் போராடுகிறார்கள் என்ற சுயநல எண்ணம்கூட வராத அளவுக்கு எங்கிருந்து அவர்களுக்குக் கடமை உணர்வு சிலிர்த்தெழுந்தது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அரசின் உத்தரவை அமல் படுத்தவேண்டிய நிலையில் உள்ளவர்கள்; அதனால் அவர்கள் தங்கள் சுய விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு கடமை ஆற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ஒருவேளை யாரும் சொன்னால், அவர்களுக்கு ஒரு வார்த்தை. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும் - கொஞ்சம் மனிதத்தன்மையோடு. வயசான வாத்தியாரையும், கலெக்டர் ஆபிஸ் பெண் குமாஸ்தாவையும் சுவரேறிக் குதித்துத் தப்பியோடவைக்க வேண்டிய அளவிற்கு விரட்டிப் போகவேண்டிய அவசியம் என்ன? அட, அவ்வளவு ஏன்? ஒருவேளை அடுத்து இவரே வந்துவிட்டால் என்ன செய்வது என்றுகூட நினைக்காமல் நள்ளிரவில் காக்காய் கொத்துவதுபோல கலைஞரைக் கொத்திக்கொண்டு போனார்களே அந்த கடமையுணர்வை என்னென்று விளிப்பது?! அந்த மனிதரின் வயதுக்காவது முரட்டுத்தனத்தைக் குறைத்திருக்கலாமே! கொஞ்சநேரம் பொறுத்திருந்தால் குண்டுக்கட்டாய் தூக்கிப்போவதற்குப் பதில் நடத்திக்கூட்டிக் கொண்டுபோகுமளவிற்கு நிலைமையைக் கொண்டுவந்திருக்கலாமே! நான் ஒன்றும் நம் தமிழ்நாட்டுக் காவலர்களைமட்டும் குறை கூறவில்லை. இது ஒரு பொது வியாதியாக நம் நாட்டுக் காவலர்களிடம் வளர்ந்துவிட்ட நிலை. மனிதத்தன்மையை அவர்கள் 'கடமை உணர்வு' இந்த அளவு மழுங்கடித்துவிடுமா, என்ன?

65-ல் நடந்த அன்றைய ஊர்வலத்தில் காவலுக்கு வந்த காவலர்களின் மனப்பாங்கும், ஊர்வலத்தின் இறுதிக்கட்டத்தில் அந்த ஜீப் எரிந்துகொண்டிருந்தபோது அவர்களின் பதைபதைப்பும் என் நினைவுக்கு வந்ததாலேயே இதை எழுதும் ஆசை வந்தது. ஊர்வலத்தின் எங்கள் பகுதி அந்த சம்பவ இடத்தை அடைந்ததும், நாங்கள் கல்லூரி மாணவர்கள் அதுவும் முதுகலை மாணவர்கள் என்று விசாரித்தறிந்ததும் 'நீங்கள் சொன்னால் பள்ளி மாணவர்கள் கேட்பார்கள்' என்று சொல்லி எங்கள் மூலமாக நிலைமையை மாற்ற முயன்று, அதில் நாங்கள் வெற்றியடைய முடியாத நிலையில்தான் அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டு என்ற முடிவை எடுத்தார்கள். அதைவிட சட்ட எரிப்பு என்ற அந்த நிகழ்ச்சியை எங்கள் கல்லூரி வாசலிலேயே தங்கள் லத்தியாலும், துப்பாக்கியாலும் நடக்கவேவிடாதபடி செய்திருக்கலாம். இன்றைய போலீஸ் அதைத்தான் செய்திருக்கும்.

அன்றிருந்த காவலர்களுக்கும் இன்றைய காவலர்களுக்கும் உள்ள இந்த வெவ்வேறு மனப்பான்மைக்குக் காரணம் என்ன? 

எனக்குத் தெரிந்த ஒரே காரணம்: IMMUNITY. வேலியே பயிரை மேயும் நிகழ்ச்சிகள் சாதாரணம். காவல்நிலையங்களில் நடக்கும் பல்வேறு சேதிகளைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். சமீபத்திய எங்கள் ஊர் போலீஸ்காரர்கள் சென்னையில் அடித்த கொள்ளை; இன்னும் (சொல்லவேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன்) ஜெயலட்சுமி விவகாரம், இதில் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது: பெரிய (மீசை) போலீஸ்காரருக்கு, [முகம்மது அலிதானே அவர் பெயர்?] ஸ்டாம்ப் பேப்பர் பலகோடி ஊழலில் உள்ள தொடர்பு.

குற்றவாளிகளென்றால் அவர்களெல்லோரும் முகத்தை மூடிக்கொண்டு வருவதைத்தானே பார்ப்போம்; அது என்ன, இந்த போலீஸ்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டும் சிரித்துக்கொண்டும், டாட்டா காட்டிக்கொண்டும் வருகிறார்கள்? (இரண்டு வகையினருக்கும் எப்போதும் தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லயே, அதுதான்!) அது மட்டுமின்றி, இந்த அலி கோர்ட்டுக்கு வரும்போது ராஜநடைதான், போங்க. அதோடு, அங்கே சீருடையில் இருக்கும் அவரது துறையினர் - பழக்க தோஷமோ என்னவோ - பயங்கரமா சல்யூட் அடிப்பது கண்கொள்ளாக் காட்சி. அவர் தலையை அசைத்து அந்த சல்யூட்டுகளை receive செய்து ஒரு ஸ்டைல் நடைபோடும் அழகே அழகு. அந்த immunityதான் காவல்துறையினரின் பலம். ஒரு குற்றத்தில் ஒரு போலீஸ் - கீழ் மட்டமோ, உயர்மட்டமோ - மாட்டிக்கொண்டாரெனின் அடுத்தநாளே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவோ, இல்லை பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவோ செய்தி வரும் - வேலை நீக்கம் எத்தனை நாட்களுக்கோ, அல்லது சில மணிக்கணக்கில்தானோ; பதவி மாற்றம் என்பது பல சமயங்களில் "நல்ல" இடங்களுக்கான மாற்றலாகக்கூட இருக்கலாம். காவலர்களின் தவறுகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் கண்டுகொள்ளக்கூடப் படுவதில்லை. அவர்களின் அராஜகப்போக்கைக் கண்டித்தால் காவல்துறையின் morale போய்விடும் என்ற கருத்தில் மேலதிகாரிகள் தங்களின் கீழ் வேலை செய்யும் காவல்துறையினருக்குத் தண்டனை ஏதும் தருவதில்லை. அதோடு தவறு செய்யும் போலீஸ்காரர்களைப் பிடிக்கவேண்டியதே போலீஸ்தானே. 'இன்னைக்கு எனக்குன்னா நாளைக்கு உனக்கு' என்ற தத்துவம் நிறைய குற்றவாளிபோலீஸ்களைக் காப்பாற்றுகிறது.

திறமையான காவல்துறை என்ற பெயர் நமது தமிழ்நாட்டுக் காவல் துறைக்கு உண்டு. அங்கே மனித்தத்தன்மைக்கும் இடமுண்டு என்றிருந்தால்...?

தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் தவறுகள் செய்வது மனித இயல்பே. Power corrupts என்பார்கள்.

தண்டிக்கப்படமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் கையில் அதிகாரமும் இருந்துவிட்டால் - that's a deadly combo.




*

http://dharumi.blogspot.in/2005/08/39-2-38-1.html



*

Thursday, January 19, 2017

920. பொங்கி எழுவதா ... நம்ம ஊர் மாணவர்களா ....?!






*


 2003ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். கடைசி நாள் … கடைசி வகுப்பு … B2 அறை … மூன்றாமாண்டு விலங்கியல் ஆண்டு மாணவர்கள் … இறுதியாக ஏதாவது நான் பேச வேண்டும் என்று நானும் ஆசைப்பட்டேன். மாணவர்களும் அதை விரும்பி எதிர்பார்த்திருந்தார்கள்.

 பழைய கதைகளும் எனக்கு நினைவுக்கு வந்தன. நான் மாணவனாக இருந்த அறுபதுகளிலும், அதன்பின் எழுபதுகளிலும் மாணவர்கள் மிக அதிகமாகவே உணர்ச்சி பூர்வமானவர்களாக இருந்தோம். எதற்கும் உடனே சாலையில்  இறங்குவது ஒரு வழக்கமாக இருந்தது. கொஞ்சம் அதிகமாகவே சாலையில் இறங்கினோம்.

ஆனால் காலம் மாற .. மாற உணர்ச்சிகள் வலுவிழந்தன. நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன.. என் மேல் விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்று பொது நிகழ்வுகளில் இருந்து மிகவும் மாணவர்கள் ஒதுங்கிப்போனார்கள். எந்தப் பொதுக் காரியங்களிலும் தலையிடுவது என்பதே இல்லாமல் அப்பழக்கம் ஒழிந்தே போனது. மாணவர்கள் அறிவு பூர்வமானவர்களாக மாறி விட்டார்கள்.

அன்று என் மாணவர்களிடம் இதைப் பற்றிப் பேசினேன். உங்கள் ரத்தம் ‘சிகப்பை’ இழந்து விட்டது முழுமையாக என்றேன். இதை ஒட்டி அப்போது சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வையும் மேற்கோளிட்டேன்.

அந்த ஆண்டு, நம் மாநில ’சீப் மினிஸ்டர்’ ஜெயலலிதா ராணி மேரி கல்லூரி வளாகத்தை எடுத்து விட முடிவு செய்தார். அதற்கான வேலைகள் ஆரம்பித்ததும் அக்கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் … பரிதாபம். சென்னைக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் மிக அமைதியாக தங்கள் கடமையிலேயே கண்ணாயிருந்தார்கள். படிப்பதைத் தவிர வேறென்ன தெரியும் அவர்களுக்கு என்றானது.

 இதே நிகழ்வு அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ நடந்திருந்தால் தமிழக மாணவர்கள் அனைவரும் எழுந்திருப்பார்கள். போராட்டம் நிச்சயமாக நடந்திருக்கும் என்றேன். ஆனால் ஏன் உங்களுக்கு அதில் எந்த ஆர்வமும் வரவில்லை. அதனால் தான் உங்கள் ரத்தத்தின் கலரைப் பற்றிப் பேசினேன். எப்படி எத்தனை அநியாயங்களும் உங்களைச் சுற்றி நடக்கும் போது ஏன் உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை …. என்ற வருத்தத்தோடு ஓய்வு பெற்றுச் செல்கிறேன். உங்கள் உணர்ச்சியற்ற நிலையைப் பார்க்கும் போது எதிர்காலத்தைப் பற்றிய எனது அச்சம் அதிகமாகிறது என்றும் சொன்னேன். 


அந்த சோகம் இன்னும் தீரவில்லை… தீரும் வழியும் இதுவரை தெரியவில்லை. என் ஓய்வுக்குப் பின் எங்கள் கல்லூரியில் ஒரு பிரச்சனை எழுந்தது. அன்று ஒரே ஒரு நாள் மட்டும் மாணவர்கள் நியாயத்தின் பக்கத்தில் நின்றிருந்தால் இன்றைய மோசமான நிலைக்கு எங்கள் கல்லூரி சென்றிருக்காது. கல்லூரியைச் சொந்தம் கொண்டாடி வந்தவர்கள் அந்த ஒரு நாளிலேயே ஓடி    ஒளிந்திருப்பார்கள்.   ஆசிரியர்கள் (வழக்கம் போலவே) ஒன்று சேரவில்லை. மாணவர்கள் போராடும் ஆசிரியர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு சென்றார்கள். கல்லூரியைப் பறி கொடுத்த நிலையில் உள்ளது.

 அதற்குப் பின்னும் எத்தனை எத்தனையோ சமூகப்பிரச்சனைகள்; கல்லூரிப் பிரச்சனைகள் பல; கல்விப் பிரச்சனைகள் பலப் பல.

அவைகளெல்லாவற்றையும் தாண்டி இளைஞர்களுக்கு மிக நெருக்கமான  காதலும், காதல் கல்யாணங்களும் சாதிப் பெயர்களை வைத்து மிகக் கேவலமான முறையில் சாதிக் கட்சிகள் நடந்து கொண்ட கேவலங்களையும் மாணவர்கள் ‘வேடிக்கை’ மட்டும் பார்த்தது வேதனையாக இருந்தது.

 இத்தனை சோகங்களும் இப்போது மெல்ல மெல்ல விலகியுள்ளது. தூரத்தில் வெளிச்சம் கண்ணில் படுகிறது. மகிழ்ச்சி.

 எதிர் பார்க்கவில்லை. ஏன் இன்னும் பல கடும் சமூக சோகங்களுக்கும் விழிக்காத நம் இளைஞர்களின் உலகம் இன்று எப்படி எழுந்தது. யாருக்குமே பதில் தெரிந்திருக்காது என்றே நினைக்கின்றேன். எதிர்பார்க்காத ஒன்று நடந்து விட்டது. ஆச்சரியத்தோடு இந்த விழிப்புணர்வைப் பார்க்கிறேன். இதில் ஒரு நம்பிக்கை துளிர் விடுகிறது. இப்போராட்டம் வெற்றி பெற்று விட்டால், (வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்) மாணவர்களின் பலத்தின் மீது அவர்களுக்கே ஒரு பெரும் நம்பிக்கையும், அந்த நம்பிக்கை தரும் தைரியமும் கூடும். அவை மாணவர்கள் சமூகப்பிரச்சனைகளிலும் தலையிடவோ, தடுக்கவோ ஒட்டு மொத்தமாக எழுந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை மெல்ல எழுகிறது.

 நாட்டை நம் இளைஞர்கள் மீட்டெடுத்து விடுவார்களோ … என்ற நம்பிக்கை மெல்ல துளிர்க்கிறது. நல்ல காலம் தலை காட்டுகிறதோ….?


 **********

 பி.கு.

 பொங்கி எழுவதா ... நம்ம ஊர் மக்களா...? நல்ல வேடிக்கை. மாணவர்கள் எப்போதோ “புத்திசாலி” ஆகி விட்டார்கள். அவர்கள் ரத்தத்தில் இருந்த ‘சிகப்பை’ யாரோ திருடி விட்டதாக எங்கள் கல்லூரிப் பிரச்சனையில் புரிந்து கொண்டேன் - http://americancoll.blogspot.in/search/label/MUST%20READ இப்படி ஆச்சரியமாக என் பதிவில் - http://dharumi.blogspot.in/2015/01/817.html - பின்னூட்டத்தில் சென்ற ஆண்டு எழுதியிருந்தேன். அன்று அது உண்மை!







 *

Sunday, January 08, 2017

919. பேத்தியின் இரு படங்கள்





*







பெரிய பேத்திக்கு வர வர படம் வரைவதில் ஆர்வம் குறைந்து, வாசித்தலும் கேட்டலும் அதிகமாகியுள்ளன.  சின்ன பேத்தி இப்போதைக்கு வரைவதில் ஆர்வமாக இருப்பது போல் தெரிகிறது.


TREE.. BIRDS .. SUN .. WATER & SAND

ஆனால் ... என்ன ... வரைந்ததும் சித்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் மேலேயோ, கீழேயோ,மறுபுறமோ இன்னொரு படம் வந்து விடும். கடைசியாகக் காப்பாற்றிய இரு படங்கள் இங்கே.






TREE .. BIRDS .. SUN & SKY .. WATER




             






















                               







அவளுக்கென்று இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டுமா என்பதைக் “காலம்” தான் தீர்மானிக்க வேண்டும்.








*