*
தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் இப்போது பாவம் போல் ஒரு “சாமான்யரை” உட்கார வைத்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தொலைக்காட்சிக்கு நண்பர்களோ? சாமான்யராகக் கூட பேச மாட்டேன் என்கிறார்களே!
மூன்று இலை பற்றி ஒரு விவாதம். ஆளுக்கொன்று, நேரத்திற்கொன்று என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். புகழேந்தி, சம்பத் வந்தால் அந்தப் பக்கம் போவதில் அர்த்தமேயில்லை. இன்னொருவர் நல்ல குண்டு; தியாகத் தாய் பக்கம் நின்று வாதிடுவார். வாந்தி வரும். இது போல் தான் எல்லோரும்.
நமக்கென்ன … என்ன நடக்கிறதென்று தெரியாதா? இன்னும் 4 வருஷத்துக்கு ஓட்டு வாங்கிய உரிமை இருக்கிறது. செத்துப் போன பெண் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பதை வழமையாக்கி தன் காலடி ஆட்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு போய் விட்டார். ராசியான பெண்….. சரியான நேரத்தில் செத்து, ஜெயிலைத் தவிர்த்த லாவண்யம் அழகு.
இதனால் அந்தக் கட்சி ஆட்களில் இரண்டு வகை: ஏற்கெனவே சம்பாதித்த ஆட்கள்; இனியாவது சம்பாதிக்கலாமே என்று கல்லா கட்டி உட்கார்ந்திருக்கும் இன்னொரு செட் ஆட்கள். முதல் வகையறா கையில் இருப்பதைக் காக்க வேண்டுமே என்ற கவலை. இரண்டாவது வகையறா இன்னொரு சான்ஸ் எப்படியாவது வந்து விடாதா என்று கன்னத்தில் கைவத்து உட்கார்ந்திருக்கிறது.
இந்த தொலைக்காட்சி நடத்துனர்கள் ஏதாவது பேசி ஒரு ப்ரேக் செய்தி போட்டு டி ஆர் பி ஏத்துவதை மட்டுமே பிரதானமாக வைத்து ஜவ்வு மிட்டாய் வியாபாரம் செய்கிறார்கள். பிசினசும் நல்லாவே போகுது.
அட …. வர்ர சாமான்யர்களாவது, இங்கு நடப்பது அரசியல் அல்ல; வியாபாரம். யார் மீதி நாளுக்கு கல்லாப்பெட்டியில் உட்கார தான் இந்தப் போட்டி. யாராவது மக்கள் சேவைன்னு தயவு செய்து சொல்லாதீங்க. எல்லா மக்களுக்கும் தெரியும் நீங்கள் காசு பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று. பிறகு எதற்கு வெட்டிப் பேச்சு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தொலைக்காட்சியில் அர்த்தமில்லாத ‘அரட்டைகள்’ மட்டும் நடக்கிறது.
இதெல்லாம் எதற்கு? என்று யாராவது ஒரு சாமான்யர் கேட்டால் நன்றாக இருக்குமோ?
*