Tuesday, April 03, 2018

979. கடவுள் என்னும் மாயை ... நூல் விமர்சனம்


பேரா. விஜயகுமார் எனது  கடவுள் என்னும் மாயை என்ற நூலுக்கான ஒரு முழு விமர்சனம் எழுதியுள்ளார். இம்மாத  செம்மலர் இதழில் வெளி வந்துள்ளது. 
பேராசிரியருக்கும், செம்மலருக்கும் நன்றி *******

நூல் விமர்சனம்:
கடவுள் என்னும் மாயை

ஆசிரியர் : தருமி


வெளியீடு : எதிர் வெளியீடு, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி—642002.

விலை : ரூ.350/-
 


          கடவுள் மறுப்பு நூல்கள் தமிழில் அதிகம் வெளிவருவதில்லை. தந்தை பெரியார் தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கடவுள் மறுப்புக் கருத்துக்களை பிரச்சாரம் செய்திருந்தாலும், தமிழர்கள் அப்படியொன்றும் மதத்தின் பிடியிலிருந்து வெளிவந்திடவில்லை என்பதே காரணம். கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல்மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது”. பல நூறாண்டு காலங்களாக நீடித்திருக்கும் மதத்தின் பிடி அவ்வளவு எளிதில் விலகிடுமா, என்ன? இருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் மதத்தின் பிடி தளர்ந்திருப்பதைக் காண்கிறோம்.  உலகெங்கிலும் உள்ள மக்கள் பகுத்தறிவு தரும் வெளிச்சத்தில் இறை நம்பிக்கையிலிருந்து விடுபட்டு அறிவொளி நோக்கி பயணிப்பார்கள் என்ற நம்பிக்கையை வளர்க்கிறதுகடவுள் என்னும் மாயைஎனும் இந்நூல்.


          தருமி எனும் புனைப் பெயரில் தன்னுடைய நூல்களை எழுதிவரும் பேரா.சாம் ஜார்ஜ் மதுரை தி அமெரிக்கன் கல்லூரியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக விலங்கியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ’மதங்களும் சில விவாதங்களும்எனும் இவரின் முந்தைய நூலின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது. கடவுள் மறுப்பு பற்றிய பன்னிரெண்டு அரிய புத்தகங்களின் விரிவான விளக்கங்களை இந்நூலில் ஆசிரியர் தருமி வழங்கியுள்ளார். புத்தகத்தைப் படித்து முடித்ததும் பன்னிரெண்டு புத்தகங்களை வாசித்த பலன்களைப் பெறுகிறோம்


கடவுள் மறுப்பு குறித்து ஆழ்ந்த விவாதங்களை முன்வைக்கும் பத்து நூல்களுடன் இரண்டு நாவல்களும் சேர்ந்திருப்பது சுவாரசியமானது. கிறித்துவ சமுதாயத்தினிடையே மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய டான் பிரவுனின்டாவின்சி கோட் நாவல் மற்றும் அதே அளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்திய பிலிப் புல்மேன் எழுதியஜீசஸ் என்ற நல்லவரும், கிறிஸ்து என்ற போக்கிரியும்நாவல் ஆகியன பற்றிய விமர்சனங்களும் படிக்கக் கிடைக்கின்றன. பெட்ரண்ட் ரஸ்ஸலின்நான் ஏன் ஒரு கிறித்துவனல்ல”, இப்னு வராக் எழுதியுள்ளநான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல”, காஞ்சா அய்லய்யா எழுதியநான் ஏன் இந்து அல்ல ஆகிய நூல்கள் பற்றிய விளக்கக் கட்டுரைகள் மூன்று மதத்தினரையும் நாத்திகம் நோக்கி நகர்ந்திட உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


 கோவில்கள் மூலமாக இயங்கும் கிறித்துவ மதம் இப்போதும், எப்போதும் உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளது என்று நான் துணிந்து சொல்வேன் என்கிறார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். கிறித்துவின் நல்லொழுக்கக் கோட்பாடுகளில் ஒன்று நரகத்தைப் பற்றிய பயமுறுத்தலாகும். மனிதத்தன்மையுள்ள எவரும் அப்படியொரு காலவரையற்ற தண்டனையை நம்பமுடியாது. இத்தகைய கொடூரமான நீண்ட தண்டனை என்பது கிறித்துவின் உயர் பண்புகளுக்கு எதிரானதாக இல்லையா என்று கேட்கிறார்


நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்லஎனும் நூலில் இப்னு வராக்உலகின் அனைத்து அரசுகளும் ஷாரியா சட்டத்தையும், பத்வா முறைகளையும், மத குருக்களின் ஆக்கிரமைப்பையும், மதம் தொடர்பான அரசு முறைகளையும் முற்றிலுமாக புறந்தள்ளவேண்டும், ஏனேனில் அவை எல்லாமே உலக மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானவைஎன்கிறார். இன்று மேற்காசியாவில் இஸ்லாமிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போரினை சுதந்திரத்தை விரும்புவோருக்கும் அதனை எதிர்ப்போருக்கும் இடையிலான போர் என்று இப்னு வராக் கூறுவதை ஏற்கமுடியாது. இராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்களுக்கெல்லாம் காரணம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிடவா? நிச்சயம் இல்லை என்பது உலகறிந்த உண்மை. இவைகளுக்குப் பின்னால் நிறைய புவியியல் அரசியல்களும், மேற்காசியாவின் எண்ணெய் வளமும் இருக்கின்றன என்பதையும் அனைவரும் அறிவர்


நான் ஏன் இந்துவல்லஎனும் கட்டுரையில் காஞ்சா அய்லய்யா, “மதங்களின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான நிறுவனமாக இந்து மதம் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தலித் பகுஜன்களின் வேதனை மிக்க வாழ்வே இந்தக் கொடூரத் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.” என்கிறார். எல்லா இந்துக் கடவுள்களும் தலித் பகுஜன்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கடவுள்களாக இருக்கிறார்கள் என்கிறார் அய்லய்யா. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் எதுவும் இந்துக் கடவுள்களை விமர்சனம் செய்ததே இல்லை என்று அய்லய்யா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுக் கலாச்சாரம் குறித்து கம்யூனிஸ்டுகள் பேசியபோதும் கூட அந்த மாற்றுக் கலாச்சாரம் இந்து வாழ்க்கை முறையிலிருந்து விலகியதில்லை என்று கம்யூனிஸ்டுகள் மீது அவர் சுமர்த்தும் குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது.


          ”இந்து மதம் எங்கே போகிறது?’ கட்டுரையை காஞ்சி சங்கராச்சாரியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் என்ற வைணவப் பெரியார் எழுதியுள்ளார். தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் நாலாயிரம் இறைப்பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம்என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுவது ஏன் என்று கேட்கிறார். நாலாயிர அருளிச் செயல் என்று தெள்ளு தமிழில் அழைக்கலாமே என்கிறார். அதே போல் நாள்தோறும் நாம் கேட்கும் சமஸ்கிருத சுப்ரபாரத வடிவத்தை அது இயற்றப்பட்டதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அற்புதமாக எழுதியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். “திருப்பள்ளியெழுச்சிஎன்று பெயரில்  பத்து முத்தான பாடல்கள் நாலாயிர அருளிச் செயல் புத்தகத்தில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் சமஸ்கிருத திணிப்பு நடக்கும் இன்றைய சூழலில் தாத்தாச்சாரியாரின் இந்த நிலைபாடு மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் மறுப்பாளர் அல்லாத தாத்தாச்சாரியார் கட்டுரையை இத்தொகுப்பில் இணைத்தது ஏனோ?  


          ரிச்சர்டு டாக்கின்ஸ் 2006இல் எழுதியகடவுள் என்னும் மாயைநூல் பற்றிய கட்டுரை காத்திரமானதாகும். பரிணாமக் கொள்கையில் அவருக்கிருந்த ஈடுபாடு அவரை ஒரு முழு இறை மறுப்பாளாராக மாற்றியது. அறிவியலில் ஆழ்ந்த அறிவுடையவர்கள் எங்ஙனம் கடவுள் நம்பிக்கையோடு இருக்க முடியும் என்கிறார். அறிவியலில் வரும் பல அனுமானங்கள் போலவே, கடவுள் இருக்கிறார் என்பதையும் ஒரு அனுமானமாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்பது அவர் கருத்து. தகப்பன் இல்லாமல் கன்னி மேரிக்கு ஒரு குழந்தை பிறந்தது; (இந்து மதக் கடவுள்கள் ஐயப்பன், பிள்ளையார், முருகன், கர்ணன் பிறந்த கதைகள் மாதிரி) செத்துப் போன லாசரை உயிர்ப்பிப்பது; செத்து மூன்று நாட்கள் கழித்து உயிரோடு வந்தது போன்ற கிறித்தவர்களின் நம்பிக்கை எவ்வளவு மூடத்தனமானது என்கிறார் டாக்கின்ஸ். அரசியல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது. ஆனால் மதங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளது என்கிறார். மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.


விவிலியத்தில் ஜான், மார்க், லூக், மாத்யூ ஆகியோர் எழுதிய நான்கு நற்செய்திகள் உள்ளன. 1970இல் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டயூதாசின் நற்செய்திநூல் கிறித்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எகிப்திய காப்டிக் மொழியில் எழுதப்பட்டுள்ள யூதாசின் நற்செய்தி பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது. யூதாஸ் விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது போல் வில்லன் அல்ல. ஏசுவிற்கு மிகவும் பிடித்தமான சீடன் என்பதைக் காட்டுகிறது. ஏசுவின் வேண்டுகோளுக்கு இணங்கியே அவரைக் காட்டிக் கொடுத்தார் என்று குறிப்பிடுகிறது. டான் பிரவுனின் டாவின்சி கோடு நாவல் ஏசுவுக்கும், மேரி மகதலினுக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பியது போல் யூதாவின் நற்செய்தியும் ஏசுவின் வாழ்வு குறித்து இதுவரை நாம் அறிந்திராத செய்திகளைத் தருகிறது.


 “அன்னை தெரஸா, ஒளியே என்னிடம் வருவாய்- கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள்” என்ற நூலில் ப்ரையான் கோலோடைசுக் அதிர்ச்சியளிக்கும் செய்திகளை வெளியிடுகிறார். ஏசு சிலுவையில் அறையப்பட்டு வேதனைப்படும் போது பிதாவினால் தான் கைவிடப்பட்டதாக நினைத்து வேதனையோடும், தவிப்போடும், “என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கத்தும்போது இருந்த அதே உணர்வை அன்னை தெரஸாவும் தன் வாழ்நாளில் உணர்ந்திருக்கிறார் என்கிறார். அன்னை தெரஸா தன்னுடைய ஆன்மீக வழிகாட்டிகளுக்கு எழுதியுள்ள கடிதங்களில் கிறிஸ்துவிலும், மதத்திலும்,  தனக்கு ஏற்பட்ட ஐயங்களை பகிர்ந்துள்ளார். இக்கடிதங்கள் மூலம் அன்னை தெரஸாவின் ஆன்மீக வாழ்வில் அவர் மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டத்தைப் பற்றி அறிகிறோம். ஆனால் தன் மனதுக்குள் இருந்த தனிமையும், ஆன்மாவை அழுத்திய கருமையும் அவரது இதயத்தில் இருந்த சமூக ஆர்வத்தைத் தொடாமால் பார்த்துக் கொண்டிருக்கிறார். வெளியே கொளுந்துவிட்டு எரிந்த ஏழைகளின் மீதான அன்பு; உள்ளே தனக்குள்  நடத்திக் கொண்ட ஆன்மீக தவிப்பு; -— இந்த இரண்டுக்கும் நடுவில் நடந்த வாழ்க்கை அவரை அபூர்வ ஆன்மீகவாதியாகக் காண்பிக்கிறது.


அன்னை தெரஸா மேல் பலரும் வைத்திருக்கும் அன்பிற்கான காரணம் அவர் ஒரு பெரிய கிறித்துவர் என்பதால் அல்ல. ஆதரவற்றவர்களின் அமைதியான இறுதிக் காலத்திற்கு வழி கோலியவர் என்பதே காரணம். எனவே ப்ரையன் கோலோடைசுக்கின் இப்பதிவு அன்னை தெரஸாவின் மீது நாம் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இந்தக் காரணத்திற்காகவே கிறித்துவ திருச்சபையும் அன்னை தெரஸாவின் கடிதங்களை அவர் கேட்டுக்கொண்டது போல் எரித்து விடாமல் அவைகளை அச்சிட்டு வெளியிட்டிருக்க வேண்டும்.


தமிழக வாசகர்களுக்கென எழுதப்பட்டுள்ள நூலில் பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் தந்தை பெரியாரின் இறை மறுப்புக் கட்டுரை ஒன்றையும் இணைத்திருக்கலாம். காஞ்சா அய்லய்யா இந்து மதத்தை வெறுக்கும் அளவிற்கு இந்திய கம்யூனிஸ்டுகளையும் வெறுப்பது விந்தையே! தேர்ந்தெடுத்த பனிரெண்டு கட்டுரைகளை விளக்கிச் செல்வதைத் தாண்டி ஆசிரியர் தருமி தன்னுடைய கருத்துக்களை அதிகம் வெளியிடவில்லை என்பது ஒரு குறையே.                     
                           ------பேரா.பெ.விஜயகுமார்.
                   ---------------------------------------------------------                .     
9 comments:

G.M Balasubramaniam said...

பெரியார்கடவுள் மறுப்பு உடையவர் என்பதுதெரிந்த விஷயம் யாரோ ஒருவர் அவரிடம் கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்னசொல்வீர்கள் என்று கேட்ட போது கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப்போவேன் என்றாராம் ---ஒரு பதிவில் தருமி அவர்கள் மழையால் சுவற்றில் இருந்தை ஈரம் யேசுவின் உரு போல் இருக்கவே அதுபற்றி ஆராய்ச்சி செய்துபிறகு எழுதுவேன் என்று சொன்ன நினைவு

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
நன்றி

தருமி said...

பாலு சார், ஏற்கெனவே அந்த ஈரம் பற்றியெழுதி விட்டேனே. இதோ தொடுப்பு :

http://dharumi.blogspot.in/2017/08/blog-post_19.html

G.M Balasubramaniam said...

/பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விளக்கம் கிடைத்தால் தருகிறேன்./என்று முடித்திருக்கிறீர்கள் விளக்கம்கிடைத்ததா

தருமி said...

அது மழையின் ஈரம் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதுவே உண்மையாக இருக்க வேண்டும்.

தருமி said...

அந்த ஈரம் அடுத்த நாளே காய்ந்து விட்டது. வெளிப்பக்கம் தெரிந்த மாதா உருவமும் அதோடு மறைந்தது. இப்போது விளம்பரத்திற்கு அது பயன் படலாம்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான மதிப்புரை. நூலைப் படிக்கும் ஆர்வம் அதிகமாகியுள்ளது. சமயம் தொடர்பான நூல்களை எழுதும்போது சற்றே கவனமாக இருக்கவேண்டியுள்ளது போலுள்ளது.

தருமி said...

//...சற்றே கவனமாக இருக்கவேண்டியுள்ளது போலுள்ளது. //

ஓ! அப்படியெல்லாம் சற்றே என்றெல்லாம் இல்லை. மிக மிக கவனமாக இருக்கவேண்டியதுள்ளது!

வேகநரி said...

சுவாரஸ்யமான ஒரு ஆய்வு.
தற்போது மதம் என்ற மயக்கம் கொடுக்கும் போதை பொருள் கடுமையாக வேலை செய்வது ஆசிய,ஆபிரிக்க நாட்டு மக்களிடம் தான்.
//இராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்களுக்கெல்லாம் காரணம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிடவா? நிச்சயம் இல்லை என்பது உலகறிந்த உண்மை.//
சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் மதவெறி அமைப்புக்களுக்கு அமெரிக்கா மற்றும் நாடுகள் ஆயுதங்கள் வழங்கி ஊக்குவிப்பதில் இருந்தே அறிந்து கொள்ளலாம், அந்த போர் சுதந்திரத்திற்கானதுவோ,ஜனநாயகத்தைகாப்பாற்றுவதற்கான போர் அல்ல என்பதை. சவூதி அரேபியா அமெரிக்காவின் விருப்பத்துக்குரிய நட்பு நாடு என்பதை கவனத்தில் கொள்ளலாம்.அது மாதிரியான நட்பாக தங்களுக்கு இருக்க கூடிய புதிய மதவாத நாட்டையே உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
//இந்திய கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் எதுவும் இந்துக் கடவுள்களை விமர்சனம் செய்ததே இல்லை என்று அய்லய்யா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.//
இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சனம் செய்வதே இல்லை என்பது காஞ்சா அய்லய்யாவுக்கு தெரியாதோ?

Post a Comment