Monday, August 13, 2018

996. அடிவயிற்றில் புளி கரைக்கும் மோடி

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி மோடியிடம் எழுப்பிய நல்ல சில கேள்விகளையும் அதனோடு இணைந்த சில கருத்துக்களை தமிழ் இந்து திசையில் சஞ்சீவிகுமார் எழுதிய இந்தக் கட்டுரை  ஜூலை 29, 2018 வெளி வந்ததுமே அதைப் பற்றி எழுத நினைத்தேன். சோம்பேறித்தனத்தால் நின்று போனது. ஆனாலும் தொட்டதை விட்டு விடக்கூடாது என்று நினத்து, இப்போதாவது எழுதி விடுவோமென நினைத்து எழுதுகிறேன்.

இக்கட்டுரை வாசித்ததும் 2019ல் வரும் தேர்தல் மட்டும் தான் பூதாகரமாக நினைவுக்கு வந்தது. அந்த தேர்தலிலும் மோடி வந்து விடக் கூடாதே என்ற பயம் அடி வயிற்றைப் பிசைந்தது. நமக்குத் தோன்றுவதை இன்னும் நாலு பேருக்குக் கட்டாயம் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்து எழுதுகிறேன்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ராணுவ ஒப்பந்தம் ஒன்று தனியார் நிறுவனமான ரிலையன்ஸுக்குத் தரப்பட்டிருக்கிறது.  ஆனால் இன்று வந்த செய்தி ஒன்று பிரான்ஸிற்கு மோடி செல்லும் நேரத்தில் அம்பானி தற்செயலாக பிரான்ஸில் இருந்தார் என்று சொல்கிறது. நல்லதொரு தற்செயல்!

 இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களின் அஸ்தமனக் காலம் இது. தாராளமயமாக்கல் தொடங்கியபோதே அதற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டாலும் இப்போது அது அழிவின் உச்சகட்டத்தில் இருக்கிறது. அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில், பெரும்பணக்காரர்களுக்கு வங்கிப் பணத்தை வாரி இறைப்பதும் அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதற்குத் துணை நிற்பதும் நம் மோடி அரசிற்கு வாடிக்கை தானே!.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2007-ல் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ‘தொழில்நுட்ப பரிமாற்ற’ ஒப்பந்தத்தின்படி ரஃபேல் போர் விமானத்தின் மொத்த தொழில்நுட்பமும் இந்தியாவின் வசப்படும். அதன் பிறகு இந்தியா நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் பிரான்ஸ் நிறுவனத்தின் தயவு இல்லாமல் ரஃபேல் போர் விமானங்களை இஷ்டம்போல தயாரித்துக்கொள்ளலாம். (ஆனால் 52,000 கோடிக்குப் பேசப்பட்ட ஒப்பந்தம் மாறி அது 90,000 கோடி வரை உயர்ந்துள்ளது, அதற்குக் காரணத்தை காங்கிரஸ் கட்சியிடம் தான் கேட்க வேண்டும்.)

 ஹெச்.ஏ.எல்-க்கு இழைக்கப்பட்ட துரோகம்! 

இப்போது முற்றிலும் புதிய ஒப்பந்தம். முதல் வேலையாக ஒப்பந்தத்திலிருந்து எந்தக் காரணமும் சொல்லாமல் ஹெச்.ஏ.எல். கழட்டிவிடப்பட்டிருந்தது. 126 விமானங்கள் ரூ.90,000 கோடிக்கு பதிலாக 36 விமானங்கள் ரூ.60,000 கோடிக்கு வாங்குவதாக மாற்றப்பட்டிருந்தது. ஒரு விமானத்துக்கான விலை ரூ.714 கோடியிலிருந்து ரூ.1,611 கோடியாக உயர்ந்திருந்தது. மிகப் பெரிய அதிர்ச்சியாக ‘தொழில்நுட்ப பரிமாற்றம்’ ரத்துசெய்யப்பட்டிருந்தது. இதனால், நம் வசமாகவிருந்த மிகப் பெரிய விமான தொழில் நுட்பத்தை நாடு இழந்தது. இதை எல்லாவற்றையும்தான் நாடாளுமன்றத்தில் கேட்டார் ராகுல். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரே பதிலாக மோடி, “நான் ஏழைத் தாயின் மகன்” என்கிறார். பதில் இது அல்லவே மோடி!

சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா நாடு? 

நடக்கும் மொத்த விஷயங்களையும் முடிச்சிட்டுப் பார்த்தால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது பாதையிலிருந்து படிப்படியாக விலகி, அறிவிக்கப்படாத சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதோ எனச் சந்தேகங்கள் எழுகின்றன. 

மோடியின் போக்கு நிச்சயம் மிகப்பெரும் பயமுறுத்தலாகவே உள்ளது. சாகர் மாலா என்று வேதாந்தாவிற்கு ஒரு திட்டம். பாதுகாப்பு முழுவதும் அம்பானி பொறுப்பு என்பது போல் அடுத்த திட்டம். நடப்பது மோடி ஆட்சியா, நாலைந்து பணக்காரர்களின் ஆட்சியா என்று பயமுறுத்துகிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் சமயத்திலும் இப்படி ஒரு அடிதடி ஆட்சியை, சர்வாதிகரத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் மோடியை நினைத்தால் பயமாக இருக்கிறது.

இன்னும் ஒரு ஐந்தாண்டு அவரை நாமும் நாடும் தாங்குவோமா என்ற அச்சத்தின் விளைவே இந்தக் கட்டுரை. 

 * 

1 comment:

அ. வேல்முருகன் said...

சர்வாதிகாரமே சந்தேகமென்ன?

Post a Comment