Thursday, August 30, 2018

998. BURNING FOREST & AMBEDKAR'S WORLD - இப்போது மொழிபெயர்க்கும் நூல்கள்

*


 I AM LUCKY.

 எனக்கு மேலே கூறிய தலைப்புகளில் உள்ள இரு நூல்களை மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் நூலை நந்தினி சுந்தர் என்ற சமூகவியல் பேராசிரியராக டில்லி பல்கலையில் பணி செய்து கொண்டு, சத்தீஸ்கரில் நேரடி ஆய்வுகளைச் செய்து கொண்டதோடு நில்லாமல் அற வழியில் பல வழக்குகளையும், அதனை ஒட்டிய தண்டனைகளையும் அனுபவித்து, அச்சூழலின் தீவிரத்தை “பற்றியெரியும் காடு” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இன்றைய தினசரியில் கூட (30.8.18) இவர் ஒரு கொலை வழக்கில் காவல் துறையினரால் ‘முதல் தகவல் அறிக்கை’ மூலம் குற்றம் சாட்டப்பட்ட செய்தி வந்துள்ளது. (இதை எழுதி முடித்து கிழக்கு பதிப்பகத்திற்குக் கொடுத்துள்ளேன்.) இரு நாட்களாக தலைப்புச் செய்திகளாக வந்து கொண்டிருப்பவைகளின் பின்புலச் செய்திகள் இந்த நூலில் நிறைந்து கிடக்கின்றன.

 அடுத்து இப்போது மொழியாக்கம் செய்து வரும் நூல்: ’அம்பேத்கரின் உலகம்’. இந்நூலில் சொல்வது போல், சுதந்திரத்திற்கு முன் அம்பேத்கரின் சாதியினரான மஹர் இனத்தவர் ஆங்கிலேயப் படைகளில் பணி புரியும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த ஒரு போரில் அவர்கள் எதிர்த் தரப்பு பேஷ்வாக்களை வென்றதின் அடையாளமாக நடத்தப்படும் ‘கோரிகான் படையெடுப்பு’ என்ற நிகழ்வின் 200வது ஆண்டுவிழா பற்றிய செய்தி கடந்த இரு நாள் செய்திகளில் வந்துள்ளன. இவ்விழாவினையும் அதனோடு நடந்த ‘எல்கர் பரிஷத்’ விழாவினையும் பல சமூகவியலாளர்களைக் கைது செய்வதற்கான காரணிகளாக அரசு காண்பிக்கின்றது.

 இந்த இருநூல்களின் செய்திகளுக்கும் இன்று நடக்கும் அரசியல் அட்டூழியத்திற்கும் நிறைய தொடர்புகளிருப்பதைப் பார்க்கிறேன். அந்த இரு நூல்களையும் மொழியாக்கம் செய்யக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.


பற்றியெரியும் காடு என்ற நூலில் ஆசிரியர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ஏழ்மையையும் அதனை ஒட்டி இருக்கும் அரசின் பொருந்தாத ‘பேராண்மை’யையும், அதனை ஒட்டி எழுந்துள்ள ‘மக்கள் காவல் படை’களும் ஏழை ஆதிவாசிகளுக்கு தரும் கொடுமைகளும் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளன. இதில் சிறப்பாக மாவோயிஸ்டுகளின் நடைமுறைகளையும் எழுதியுள்ளார்.

பலமுறை ஆதிவாசிகள் அரசின் கடுமை, காவல்துறையின் கொடூரம், மாவோயிஸ்டுகள், ஜூதும் படையினர். மக்கள் பாதுகாப்புக் குழு, புரோக்கர்கள் என்று பல்வேறு முனைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியதுள்ளது. இந்த ஒரு கடும் சூழலில் Dr. பினாயக் சென், விக்னேஷ் சாமி போன்ற சில சமூகவியலாளர்களும், சோனி சோரி போன்ற ஒரு சில ஆதிவாசித் தலைவர்களும் முனைந்து நேரடியாகப் போராடி வருகிறார்கள். இன்னும் சக மனித உரிமைக்களுக்காகப் போராடும் பல மனிதர்கள் சமூகத்திற்காகக் குரல் கொடுக்கிறார்கள்.

இந்தக் குரல் அரசிற்கு வேப்பங்காயாக கசந்து வழிகிறது. அத்தகையோர் தொடுத்த பல வழக்குகள் இன்னும் இழுத்துக் கொண்டு முடியாமல் போகின்றன. அவைகளையும் மீறி சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்கள் சேவையைத் தொடர்கிறார்கள். அவர்களில் சங்கர் குஹா நியோகி போன்றோர் பெரும் வியாபாரிகளின் கூலிப்படையால் கொல்லப்படுகிறார்கள்.

அரசு மட்டும் இளைத்ததா என்ன...? கைது செய்து சிறையில் அடைத்தால் பிரச்சனையை மூடி வைத்து விடலாமென அரசு எண்ணுகிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த கைதுகள். பலரைக் கண்காணித்து, சிலரை சோதித்து, ஐவரைக் கைது செய்துள்ளனர். இதை எதிர்த்து நீதியரசர்கள் கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்கச் சொல்லி, செயல் பாட்டாளர்களைச் சிறிதே காப்பாற்றியுள்ளது.

பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கும் அதன் முழுப்பொருளை விளக்கித் தந்துள்ளது நமது மத்திய அரசு. காங்கிரஸ் காலத்தில் அரசை எதிர்த்து எழும் குரல்களுக்குத் தனியாகப் பெயர் ஏதும் கொடுக்கவில்லை. ஒருவேளை இடதுசாரிக் குரல் என்றோ, மாநிலக் குரல்கள் என்றோ சொல்வதுண்டு. இன்று அப்படியில்லை. மோடியை எதிர்த்து ஏதும் சொல்லக்கூடாது என்றால் கூட பரவாயில்லை. பெட்ரோல் விலை இப்படி ஏறுகிறதே என்றாலும், ஐந்நூறு, ஆயிரம் நோட்டு பிரச்சனையிலிருந்து எதைத் தொட்டாலும் அந்தக் குரல் ‘ஆண்டி-நேஷனல் குரல்’ என்றாகி விடுகிறது.


மோடியைத் திட்டினால் அபச்சாரமாகி விடுகிறது. மீடியாக்கள் முடக்கப்பட்டு விட்டன என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. போனால் போகட்டும். மீடியாக்களை நடத்துபவர்கள் வியாபாரிகள். விளம்பரங்களை வைத்தே அவர்களை முடக்கி விடலாம், நம் அரசிற்கு அது அத்தனை எளிது. செவ்வன செய்து முடித்து விட்டார்கள்.

இப்போது அறிவுஜீவிகளின் குரல் வளைகள் அரசின் அடுத்த குறி போலும்.

மோடி நம்மை எங்கு அழைத்துச் செல்கிறார்?
கேள்விகள், அவை தமிழ்நாட்டு விவாசாயிகள் கேட்டாலும் பிடிக்காது ... சமுக செயல்பாட்டாளர்கள் கேட்டாலும் பிடிக்காது. அதைவிட அவைகளுக்குப் பதில் சொல்வது தனக்கு இழுக்கு என்ற நினைப்பு அவருக்கு.
ஒரே மூச்சில்  ....  G.S.T.
ஒரே மூச்சில்  ...    NEET
ஒரே மூச்சில் ...     SAGAR MALA
ஒரே மூச்சில் ...     அம்பானியின் கையில் போர்விமானத் தயாரிப்பு


இன்னும் 2019ல் மீண்டும் வந்து விட்டால் எங்கே கொண்டு போய் சேர்ப்பார்?*

இன்றையத் தகவல்:


டாலர்  =  65  சில்லறை (!)

பெட்ரோல் = 81 சில்லறை (!)


 *

2 comments:

வால்பையன் said...

டாலர் 70.80 இன்றைய நிலை. 65ன்னு சொல்லியிருக்கிங்க, வேற எதுவுமா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிறப்பான மொழிபெயர்ப்புப்பணியை அமைதியாகச் செய்துவருகின்றீர்கள் ஐயா. பாராட்டுகள்.

Post a Comment