Friday, October 05, 2018

977. டூரிங் தியேட்டரில் சினிமா*

சினிமா பற்றி எழுத ஆரம்பிச்சா ஆரம்பத்திலிருந்து எழுதணுமில்லையாஏன்னா, வரலாறு ரொம்ப முக்கியமாச்சே!
எங்க காலத்தில சினிமா பார்க்கிறதுன்னாலே எல்லோருக்கும் பெருத்த சந்தோஷம் தான். அதுவும் கிராமத்து மக்களுக்கு அது ஒரு பெரிய வரம் ..அதிசயம்எல்லாமே சேர்ந்த ஒண்ணு. ஊருக்கு ஒரு தியேட்டர் கூட அப்போது கிடையாது. எங்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்லும் போது சில சமயம் அங்கே படம் பார்க்கும் சந்தோஷம் கிடைக்கும். ரொம்ப சின்ன வயதில் சனிக்கிழமையன்று தான் போக வேண்டியதிருக்கும். அன்றைக்குத் தான் கிராமத்திலிருந்து பலரும் தியேட்டருக்குப் படம் பார்க்க போவார்கள். ஏனெனில் அன்று தான் பீடி சுற்றுவோருக்குகூலிகிடைக்கும். மக்களும் சந்தோஷத்தில் இருப்பார்கள். பெருங்கூட்டமாக சினிமாவிற்குக் கிளம்புவார்கள்.

நான் முதலில் அப்படிஒரு சினிமாவிற்குச் சென்றது எங்கள் ஊரிலிருந்து இரண்டு மூன்று மைல் தூரத்தில் உள்ள தியேட்டருக்கு. எங்கள் ஊர் காசியாபுரத்திலிருந்து கிளம்பி, நல்லூர் வழியே சென்று ஆலங்குளத்திற்குப் போவோம். அங்கேயும் ஊர் தாண்டி தான் தியேட்டர். நிச்சயமாக மூன்று மைல் இருக்கும். ஆனாலும் நடையில்போகும் போதும் சரி .. வரும் போதும் சரிஎந்த களைப்பும் வரவே வராது. போகும் போது எதிர்பார்ப்பில் வரும் போது பார்த்த களிப்பில்

அது ஏன் அந்தக் காலத்து கிராமத்து தியேட்டர்களை டூரிங் தியேட்டர்னு சொன்னாங்கன்னு ஒரு நினப்பு வந்தது. ஆராய்ச்சி பண்ணினேன். டூரிங் என்ற பெயர் எப்படி வந்திருக்கும்னு யோசிச்சேன். ஒரு etymology study தான். மொதல்ல ஒரு டப்பா செஞ்சி அதுக்குள்ள சின்ன சினிமா ரீல்களை வைத்து ஒரு ஆள் பார்க்கிறது மாதிரி ஒரு ஆள் அத ஊருக்கு ஊர் தூக்கிக்கிட்டு போவார்னு கேள்விப்பட்டிருக்கேன். அது நிஜமான டூரிங் தியேட்டர் தான். ஆனால் அதன் பின் கிராமங்களில் வந்த தியேட்டர்களில் ஒரே ஒரு ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்ட ஆரம்பித்திருக்க வேண்டும். அதற்கு அந்தப் பழைய பெயர் அப்படியே வந்திருக்க வேண்டும். மற்றபடி அந்த டூரிங் தியேட்டர்கள் இடத்துக்கு இடம் ஒன்றும் மாறுவதில்லை. ம்ம்ம்அப்படியும் சொல்ல முடியாது. நானே எங்க ஊருக்கும் தியேட்டர் வந்த பிறகு அது அங்குமிங்கும் மாறியதைப் பார்த்திருக்கிறேன். அதாவது தியேட்டர் சொந்தக்காரர்கள் இடத்தை மட்டும் வாடகைக்கு எடுத்து பக்கத்து பக்கத்து இடங்களில் மாற்றி மாற்றிப் போடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் டூரிங் என்பது etymology படி அப்படித்தான் வந்திருக்க வேண்டும்.
அதெப்படியோ .. அந்தக் காலத்து கிராமத்து டூரிங் தியேட்டர்கள் எல்லாம் ஒரே டெம்ப்ளேட்டில் தான் இருக்கும். தென்னந்தட்டி அல்லது  எங்கள் ஊர்ப்பக்கம் பனை ஓலைகள் வைத்துக் கூரை போட்டிருப்பார்கள். சைடில் ஏறத்தாழ தரையிலிருந்து மூன்றடி மட்டும் விட்டு கீழே வரை கூரை போட்டிருப்பார்கள். சில சமயங்களில் மாட்னி ஷோ போட்டாலும் சாக்கைக் கட்டி படம் ஓட்டி விடலாம் அல்லவா. அதற்காக இப்படி கீழே வரை வரும்படி கொட்டகை போட்டிருப்பார்கள். நுழையும் போதே பணிவோடு நுழைய வேண்டும்அதாவது நன்கு குனிந்து நுழைய வேண்டும். தரையில் மண் விரித்திருக்கும். இரண்டு பிரிவாக ஒரு குட்டிச் சுவர் வைத்துப் பிரித்திருப்பார்கள். ஆண்கள்-பெண்கள் பகுதி என்று இரு பகுதி. மண் தரையில் எல்லாம் இருக்கும். பீடித்துண்டுகள் எங்கும் கிடக்கும். அதோடு சில இடங்களில் எச்சிலும் துப்பி வைத்திருப்பார்கள்.
(அதென்னவோ அந்தக் காலத்தில் இருந்து இன்னைக்கி வரைக்கும் சீர்கெட்ட நம்ம மனுசப் பயலுகளை நினைச்சாவயிறு எரியுது. இப்பவும் படிச்சவன் படிக்காதவன், இளைஞன் கிழவன் என்று எல்லா நாய்ப் பிறவிகளும் வண்டியில் போகும் போதே பளிச்சின்னு எச்சில் துப்புறானுவஅப்படியா இந்த ……(ஏதாவது ஒரு மோசமான கெட்ட வார்த்தை போட்டுக் கொள்ளவும்.) பயல்களுக்கு அறிவு இல்லாமல் போகும். அதோடு இப்போ இன்னொரு வியாதிபோன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டுறது. திமிர் எடுத்த நாய்கள். ஈனப் பிறவிகள். சரி..இனி நம்ம கதைக்கு வருவோம்)

இந்தத் தொல்லைகளிலிருந்து மீள படம் ஆரம்பித்த பிறகு போனால் போதும் என்று நினைத்தால் அதிலும் ஒரு கஷ்டம் உண்டு. ஆளாளுகள் உள்ளே போனதும் பக்கத்தில் உள்ள மண்ணையெல்லாம் சேர்த்து குவித்து அதற்கு மேல் உட்கார்ந்து கொள்வார்கள். தாமதமாகப் போனால் பள்ளத்தில் தான் உட்காரணும். குவித்த மண்ணை நோண்டி எடுக்க முடியாது. அது ஒரு பெரிய வயக்காட்டு பிரிவினைத் தகராறு மாதிரி பெரிதாகப் போய் விடும்.வெளியே உயரமாக ஒரு கம்பு நட்டு உச்சியில் குறைந்த பட்சம் இரு குழாய் ஒலி பெருக்கிகள். அதென்ன மாயமோ தெரியவில்லை. மைல் கணக்கில் அதன் சத்தம் கேட்கும். முதலில் இரண்டு முருகன் பாட்டுகள். அதன் பின் அனேகமாக எம்.ஜி.ஆர். பாட்டுகள். ஊரெங்கும் அதிர அதிரக் கேட்கும்.பொதுவாக ஏதோ ஒரு ஆர்டரில் இந்தப் பாட்டுகள் போடுவார்கள். அந்த வரிசைக்கிரமத்தை வைத்தே இன்னும் படம்போட எவ்வளவு நேரம் என்பதை மக்கள் கணக்குப் போட்டு விடுவார்கள். அதற்கேற்றது போல் நடையின் வேகம் கூடும் .. குறையும்.

படம் ஆரம்பிக்கும் போதே தியேட்டருக்குள் போய் உட்கார்ந்து விடணும் என்பது எல்லோரின் ஆசை. அப்போதெல்லாம் டைட்டில் போடும் போது சில டிசைன்கள் போடுவார்கள். கலிடாஸ்கோப்பில் வருமே அந்த மாதிரி டிசைன் வரும். அரிதாக சில படங்களில் கார்ட்டூன் போட்டு டைட்டில் போடுவார்கள். இதை முழுவதுமாகப் பார்த்தால் தான் முழுப்படம் பார்த்த திருப்தி வரும். இந்தக் காலத்தில் பயங்கர  C.G. work பார்த்துப் பழகிய உங்கள் கண்களுக்கு அந்த நாளைய கார்ட்டூன்களும் டிசைன்களும் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அன்று அது எங்களுக்கு ஒரு பெரும் கவர்ச்சியைக் கொடுத்தது.  அதனால் இன்று கூட தொலைக்காட்சி பொட்டியை நோண்டிக்கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு பழைய படம் திரையிடப்பட்டால் படம் பார்ப்பதை விட அந்த டைட்டிலைப் பார்க்கும் ஆவல் எனக்கு இப்போதும் உண்டு. டைட்டிலில் ஆரம்பித்து கடைசியில் ‘சுபம்’ போடுவது வரை பார்த்தால் தான் முழுப்படம் பார்த்த திருப்தி அன்று கிடைக்கும். டைட்டிலில் அன்று வரும் எழுத்து, அதன் ஸ்டைல், அதனோடு வரும் இசை, வரும் பெயர்களின் தனித்தன்மைகள் – அதாவது அனேகமாக, ஆண் நடிகர்களின் பெயரோடு ஜாதிப் பெயர்களும் வரும் – இப்படி பல அம்சங்களை வித விதமாகப் பார்க்கலாம். இவைகளின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தாலே திரைப்படங்களின் வளர்ச்சியையும் பார்த்து விடலாம்.

டூரிங் தியேட்டர்களில் ஒரே ஒரு ப்ரொஜெக்டர் மட்டுமே இருக்கும். ஆகவே சில பல இடைவேளைகள் வரும். ஆனால் விரைவில் ரீல் மாட்டி உடனே அடுத்த செஷன் ஆரம்பித்து விடும். வெளியே செல்ல வழக்கமான நடுவில் வரும் இடைவேளை மட்டும் இருக்கும். இன்றைக்கு பாப்கார்ன், நெஸ்கபே என்பது போ ல் அப்போது அங்கே சில ‘பண்டங்கள்’ மட்டும் கிடைக்கும். அவித்த சுண்டலும், மொச்சையும், முருக்கும் தான் வழக்கமான snacks. இத்துடன் பீடி சிகரெட்டும், காப்பித் தண்ணியும், கலர் சோடாவும் இருக்கும். கலர் சோடா தியேட்டருக்கு வந்து சாய்மான நாற்காலி என்ற first class customersகளுக்கு மட்டும் தான். சுகாதாரமான பானம் அது என்பதால் first class customers அதை மட்டும் அரை குறையாகக் குடிப்பார்கள். நாலைந்து நாற்காலிகள் கடைசி வரிசையில் இருக்கும். அது தான் first class. அனேகமாக கையில்லாத இரும்பு நாற்காலிகள் தான் அவைகள். சில சமயம் பெரிய V.I.P.s வந்தால் சாய்வு நாற்காலி கேபினிலிஉர்ந்து வந்து சேரும். நானும் சில தடவை அந்த சிறப்பு கவனிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். இரண்டாவது classல் வெறும் பெஞ்சுகள் இருக்கும். சாய்மானம் இல்லாத பெஞ்சுகள் தான். இதில் இருந்து பார்ப்பதைவிட தரை டிக்கெட் சுகமாக இருக்கும். நீங்கள் தியேட்டரின் எங்கிருந்தாலும் உங்களைச் சுற்றி பீடியின் நருமணம் எப்போது சூழ்ந்திருக்கும்.

அதெல்லாம் ஒரு தனி அனுபவம். எவ்வளவு ஆசைப்பட்டாலும் அந்தக் காலத்தின் அனுபவத்திற்குச் செல்ல எந்த time machineம் கிடையாது. கழிந்தது  கழிந்ததே…..

…..

*

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நினைவுகள் இனிமையானவை

G.M Balasubramaniam said...

அரக் கோணத்தில் டூரிங்கொட்டாயில் படம்பார்த்த நினைவுகள் வந்துமோதுகிறது

தருமி said...

sweet yester years....!

Post a Comment