Tuesday, October 16, 2018

1007. 96*

தமிழில் நல்ல படங்கள் எதுவும் உருவாவதில்லை. எல்லாமே காதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட படங்கள் என்ற வேதனை எப்போதும் பலருக்கும் உண்டு. நான் அதைப் பற்றி பல வருடங்களாக எழுதியும் வந்துள்ளேன். ஆனால் இப்போது அந்த மனக்குறை நீங்கி விட்டது. பீட்சா படம் வந்தது. அடுத்தடுத்து வெவ்வேறு genresகளில் இன்று வரை நம்மைத் திக்கு முக்காட வைக்கும் நல்ல படங்கள் வர ஆரம்பித்து விட்டன. நல்ல சினிமாக்களை மட்டும் தியேட்டரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல். ஆனால் இந்த மாதம் மட்டும் பாருங்களேன் ... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், 96 ... வீட்டுல திட்டு வாங்கிட்டு தியேட்டருக்கு ஒடும் படியாக ஆச்சு. நல்லவைகள் தொடரட்டும். இன்னும் சிங்கம், புலி, சிறுத்தை, பிரம்மாண்ட டப்பா படங்கள் வருவது குறையட்டும்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கார்த்தி தன் தாயிடம் ‘அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை, அம்மா” என்று பேசும் ஒரு வசனம் வரும். ஓங்கி கழுத்தை நெறிக்கலாமா என்று ஒரு கோபம் வந்தது அந்தக் காதல் வசனைத்தைக் கேட்டு. அதன்பின் ஒரு யோசனை... யாரு கழுத்தை என்று யோசித்தேன் - கார்த்திக் குரல் வளையா, பாரதி ராஜா குரல் வளையா என்று.

ஆனால் 96ல் பத்து பதினோராம் வகுப்புப் பையனே  அப்படி ஒரு தெய்வீகக் காதலுக்குள் மாட்டிக் கொள்கிறான். ஆனால் ... யோசித்துப் பார்க்கிறேன், பதில் கிடைக்கவில்லை ... ஏன் ராம்-ஜானு பார்க்கும் போது அந்தக் கோபம் வரவில்லை? பாதிப் படத்திற்கு மேல் ராம்-ஜானு மட்டும் தான் திரையில் என்றாலும் நாமும் பின்னால் நிற்பது போல் ஒரு நினைப்பு வருகிறதே! அந்த அண்மையை உண்டாக்கியவர் இயக்குனர்.

பழைய படங்களாக இருந்தால் விஜய் சேதுபதிக்கு ஒட்ட ஷேவ் செய்து, யூனிபார்ம் மாட்டி, திரிஷாவிற்கு இன்னொரு யூனிபார்மும் இரட்டைச் சடையும் போட்டு நமக்கு முன்னே திரிய விட்டிருப்பார்கள். நல்ல வேளை ... பள்ளிப் பருவத்திற்கு சின்னப் பசங்களைப் போட்டு விட்டு காப்பாற்றினார்கள். சிறுபிள்ளைக் காதல். ஊமைப் பையன் வி.சே. ... கடைசி வரை ஊமைப்பையனாக இருக்கிறார். பாவம் தன் காதலியை கண்ணெடுத்தும் பார்க்கத் தயங்கும் நல்ல பையன். ஆனாலும் காதலி தன்னை மறுத்து தன்னைப் பார்க்க வரவில்லையென்று என்று நினைத்த பிறகும் பாவம் போல் அத்தனை வருஷமும் அவள் நினைப்பிலேயே அதுவும் ஒரு வர்ஜின் பாயாக இருக்கும் ராம் ... அடேய் ராம்... ஆனாலும் இத்தனை நல்ல பையனா இருக்கக்கூடாதுடான்னு சொல்லணும் போல் இருக்கு. ஆனால் இறுதியில் விமான நிலையத்தில் ஜானுவிற்கு வி.சே முகம் பார்க்க முடியவில்லை. அப்போது தான் வி.சே தைரியமாக அவர் முகத்தைப் பார்க்கிறார். முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளும் வி.சே.வின் முன் ஜானு இப்போது அப்படியாகிறார். ஒரு முத்தமாவது கொடுத்துத் தொலைடா என்று மனசுக்குள் ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப (நமக்கு?) எனக்கு வந்த போது, இயக்குனர் ஜானுவின் கையை அழுத்தி ராம் கியர் போடும்படி வைத்திருப்பது ... ஒரு நல்ல அழுத்தம் தான்!

ஆனால் தொன்னூற்றி ஆறு - 2 என்று இரண்டாம் பாகம் எடுப்பதற்கு வேண்டிய அனைத்தையும் இயக்குனர் செய்து விட்டார், யார் அந்தச் சின்னப் பெண்? போட்டோகிராபி படிக்க வி.சே.யின் மாணவியாக வரும் அந்தப் பெண்ணுக்கு இயக்குனர் வசனமே கொடுக்கவில்லை .. பார்வை மட்டும் தான் கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்குத்தான் வி.சே. மேல் அத்தனை காதல். அதையும் மிக மிக அழகாக தன் பார்வைகள் மூலமாக வெளிப்படுத்திய இயக்குனரையையும், அந்த நடிகையையும் பாராட்ட வேண்டும்  ஜானுவிற்கு தலையணையை எடுத்து வைப்பது போல் அந்தப் பெண் வி.சேவிற்கு க்ராஸ் பெல்ட் போட்டு விடுகிறாள். ஜானுவிடமும்,வி.சேயிடமும் ‘பை’ சொல்லும் அந்தப் பெண்ணின் நடிப்பு அள்ளிக்கொண்டு போனது. த்ரிஷா, வி.சே. நடிப்பும், சில வசனங்களும் (நீ விட்டுட்டுப் போன இடத்திலேதான் நிக்கிறேன்... நல்ல ஆம்பிளை நாட்டுக் கட்டைடா நீ ...) நம்மை அருகில் வைத்துக் கொள்கின்றன.


அடுத்த பாகத்தில் சிங்கப்பூரிலிருந்து ஜானு வி.சேக்கு திருமணம் செய்து வைத்து விடுவார் என்ற நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்........


”டேய் .. ராமு  ..ஆனாலும் இம்புட்டு நல்ல பிள்ளையா இருக்கக்கூடாதுப்பா ....”


 *

2 comments:

இராய செல்லப்பா said...

ஹும்...தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் அளவுக்கு luzurious life தங்களுக்கு அமைந்தது வரவேற்கத்தக்க செய்தியே.

-இராய செல்லப்பா சென்னை

தருமி said...

அது என்னங்க செல்லப்பா ... அம்புட்டு டைட்டாகவா இருக்கு வாழ்க்கை. enZoy
!!!

Post a Comment