Thursday, March 28, 2019

1036. எங்க காலத்திலெல்லாம் ... 3 -- சைக்கிள் ஓட்டுவோமா?






*

நம் எல்லோர் வாழ்க்கையிலும் நிச்சயமாக நடந்திருக்கும், நடக்கும் ஒரு விஷயம் சைக்கிள் ஓட்டப் பழகுவது. ஆனால் அது எப்படி நடந்தது .. எத்தனை நாள் நடந்தது ... எத்தனை தடவை விழுந்து எழுந்தோம் என்பதெல்லாம் வேறு வேறு தான். ஆனால் தட்டுத் தடுமாறி பழக ஆரம்பித்து எப்படியெல்லாமோ செய்து கடைசியில் சைக்கிள் ஓட்ட பழகி விட்டோம்.

எனக்குத் தெரிந்து சைக்கிள் ஓட்டத் தெரியாத ஆண் ஒரே ஒருவரை மட்டும் என் வாழ் நாளில் எனக்குத் தெரியும். எத்தனை தூரமானாலும் நடந்தே தான் போவார். இப்போதாவது சைக்கிளைப் பழகலாமே என்று கேட்டேன். இதுவரை நடந்தே பழகி விட்டது. இப்படியே இருக்கட்டும் என்றார். இவர் எங்கள் கல்லூரியில் ஒரு பேராசிரியர். இன்னொருவரும் கல்லூரியில் இருந்தார். அவரிடம் சைக்கிள் பழகச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தியதில் அவரும் சரி என்றார். அப்போது அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல். அவர் ஒரு ஆய்வக உதவியாளர். கல்லூரி வளாகத்தில் கோடை விடுமுறையில் இளைஞர்கள் சிலர் அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். கொஞ்சம் பாவமான ஆள் அவர். பழக ரொம்ப கஷ்டப்பட்டார்.

 ஒரு நாள் மதிய நேரம். அந்தப் பேராசிரியர் நடந்து வந்து கொண்டிருந்தார். எங்கள் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள நாற்சந்தியில் அப்போது போக்குவரத்து போலீஸ் வாகனத்தை ஒழுங்கு படுத்த நிற்பார்கள், அன்று மதியம் வயதான ஒருவர் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டிக் கொண்டு காவல்துறைக்காரரைத் தாண்டி போயிருந்திருக்கிறார். பார்த்த போலீஸ்காரருக்கு வந்ததே கோபம். விசில் ஊதி அவரை நிற்க வைத்து யார், என்ன ஏது என்று கேட்டிருக்கிறார். அந்த மனுஷனும் அவருக்கு ஏன் கோபம் வந்தது என்று புரியாமல் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் கல்லூரியில் தான் வேலை பார்க்கிறேன் என்றும் சொல்லியுள்ளார். போலீஸ்காரருக்கு நம்பிக்கையில்லை. தற்செயலாக சைக்கிள் ஓட்டத் தெரியாத பேராசிரியர் அந்த இடத்தைத் தாண்டும் போது போலீசிடம் மாட்டியவர் பரிதாபமாகக் கூப்பிட்டிருக்கிறார். அவர் போய் மீட்டு வந்திருக்கிறார். அப்போது போலீஸ்காரரும் பேராசிரியரும் ஏன் அப்படி சைக்கிளைச் சின்னப் பசங்க மாதிரி பின்னாலிலிருந்து ஓட்டி வந்தீர்கள் என்று கேட்க, அவர் பரிதாபமாக, இப்போது தான் சைக்கிள் ஓட்ட பழகிக்கொண்டிருக்கிறேன்; இன்னும் முழுதாகப் பழகவில்லை; ஏற இறங்க தெரியாது; அதனால் இப்படி ஓட்டி வந்தேன் என்றாராம். காவல் துறை ஆளும் சிரித்துக் கொண்டே விட்டு விட்டாராம்.

சரி.. இந்தக் கதை இப்போது இங்கே எதற்கு? அதாவது ஒவ்வொருவரும் சைக்கிள் பழகும் விதம், அதற்கெடுக்கும் நேரம் என்றெல்லாம் வித்தியாச வித்தியாசமாக இருக்கும்னு சொல்லணும்னு சொல்ல நினச்சி ... அப்போ இந்தக் கதை நினைவுக்கு வர அதைச் சொல்லிட்டேன். சரி... இனி என் கதைக்கு வருவோம்.
அந்தக் காலத்தில இப்போவெல்லாம் இருக்கிற மாதிரி சைக்கிளெல்லாம் வீட்டுக்கு ஒண்ணு என்றெல்லாம் இருக்காது. எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; இருக்க முடியாது. ஏன்னா அதெல்லாம் அப்போ அது ஒரு rare commodity! அதே மாதிரி இப்போ குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் முன்பே சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறோமே ... அதெல்லாம் அப்போ கிடையாது. சின்னப் பசங்க - பசங்க மட்டும் தான்; பெண்களுக்கெல்லாம் சைக்கிள்  வாசனை கூட கிடைக்காது - சைக்கிள் பழகணும்னா வாடகை வண்டி தான். பலரும் அப்போவே சின்ன சைக்கிளில் ஓட்ட பழகிடுவாங்க. ஆனா நான் ஒரு வாத்தியார் மகன் தானே. வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்கல்ல .. அதை நான் அப்போவே prove பண்ண ஆரம்பிச்சிட்டேன். அட.. அதான் சின்ன வயசில அப்படி என்றாலும் வளர்ந்த பிறகும் என் வயதுக்காரர்கள் சைக்கிள் ஓட்டப் பழகியும் என்னால் முடியவில்லை.

அப்போதெல்லாம் பெரிய சைக்கிள்கள் என்றால் அவை 3 வகைப்படும்: 24 இஞ்ச், 22 இஞ்ச், 18 இஞ்ச் என்ற ரேஞ்சில் இருக்கும். எல்லாம் அந்த முக்கோண பார் இருக்கே .. அதில் முன்னால் உள்ள இரு பார்களும் சேரும் உயரம் இப்படி மூணு வகையாக இருக்கும். 24 இஞ்ச் வண்டி பார்க்கவே ரொம்ப உயரமா இருக்கும். அடுத்ததுதான் சாதா சைக்கிள். அடுத்து சின்ன சைக்கிள்கள். பையன்களுக்கானது. ஆனால் 24ம், 18ம் எப்போதாவது தான் கண்ணில் படும். அதுவும் 18 இஞ்ச் சைக்கிள் வச்சிருந்தா கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் அந்தப் பையன் பணக்கார வீட்டுப் பையன் என்று.

யார் யாரோவெல்லாம் சைக்கிள் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். “மிடியலை” என்றாகிப் போனது. ஒரு வழியாக குரங்கு பெடல் போடப் பழகினேன். அப்டின்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? முக்கோண பார் வழியே வலது காலை போட்டுக் கொண்டு, இடது காலை பெடலில் வைத்து ஓட்டணும். பொதுவாக பழகும் போது அரைப் பெடல் தான் போட முடியும். சடக்கு ... சடக்குன்னு பெடல் போட்டு ஓட்டுவோம். பொதுவா பொது ஜனங்களுக்கு இப்படி வர்ர பசங்களைக் கண்டாலே பிடிக்காது. நாங்க பேசாம ஓட்டிக் கொண்டு போனாலும் திட்டுவார்கள். ஆனால் அரைப் பெடல்  என்றாலே கேசு இப்போது தான் பழகுதுன்னு தெரியுமே ... அதனால் திட்டுவார்கள். ஆனால் எங்கள் காதில் பொதுஜனத் திட்டுகள் விழவே விழாது.

அப்பாவிடம் - நல்ல வாத்தியார்; ஆங்கிலம், கணக்கும் சொல்லித் தருவதில் வித்தகர்’ பெரிய உழைப்பாளி; டியூஷன் படிக்க வரிசை கட்டி மக்கள் (பரம்பரையாகக் கூட) வருவார்கள் - ஒரு மாணவன் வருவார். 18 இஞ்ச் சைக்கிளில் வருவார். திண்டுக்கல் ரோட்டில் பரம்பரையாக பிரபலமாக இருந்த பேக்கரி கடைக்காரரின் மகன். என்னைவிட ஒரிரு வயது அதிகமாக இருக்கலாம். அவர் ஒரு நாள் சைக்கிளை எங்கள் வீட்டின் முன் நிறுத்திக் கொண்டிருந்தார். நான் அவரையும் சைக்கிளையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். என் மூஞ்சில சோக ரேகை ஓடியிருக்கும் போலும்! என்னைப் பார்த்து சைக்கிள் வேணுமா என்று கேட்டார். வேணும்னு கேட்டு அது நயினாவுக்குத் தெரிஞ்சா .. அம்புட்டு தான். அதனால் யோசிச்சி நின்றேன். அப்பாட்ட சொல்லலை என்றார் அந்த அன்பு அண்ணன். ஒரே சிரிப்பு. சைக்கிளைக் கொடுத்து விட்டு மாடியேறிப் போய் விட்டார்,

சைக்கிளை எடுத்தேன். இதுவரை அரை பெடல் மட்டும், அதுவும் 22 இஞ்ச் சைக்கிளில் ஓட்டியிருக்கிறேன். ஆனால் இது 18 இஞ்ச். அரை பெடல் போட்டா கால் தட்டும்,.  ஆனால் நமக்குத் தெரிஞ்சது அது மட்டும் தானே. அதுவும் முதல் முறையா 18 இஞ்ச் சைக்கிள். அதுவே ஒரு பெரிய கிக்! சைக்கிளில் இதுவரை ஒழுங்காக சீட்டில் உட்கார்ந்து ஓட்டியதே இல்லை. சரி... என்று சந்தோஷத்தில் சைக்கிளில் பெடலைக் கொஞ்ச தூரம் உதைத்துக் கொண்டு ஓடணும். (ப்ளேன் டேக் ஆப் ஆவதற்கு முன் தரையில் ஓடி பிறகு மேலெழும்புமே .. அது மாதிரி) அப்படியே அரைப்பெடலா மாறணும். நானும் ஓடி அரைப்பெடல் போட்டுட்டேன். வண்டி எளிதாக ஓடியது. நமது ஆய்வக உதவியாளர் மாதிரி ஓட்டினேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தடுமாற்றம் ஏதுமில்லை. ஒரே மகிழ்ச்சி! அப்படியே அந்த மகிழ்ச்சியில் வலது காலை எடுத்து பார் மேல் சந்தோஷமா வச்சேன். அடப் பாவமே ... என்ன ஆச்சு தெரியுமா? பார்ல இருந்து கால் வழுக்கி பாருக்கு மேல கால் போயிருச்சி. அதாவது சாதாரணமா சைக்கிள் ஓட்டுவோமே... அதே மாதிரி கால் போயிருச்சி. என்ன பண்றதுன்னு தெரியலை. ஆனால் சீட் குட்டையா பக்கத்திலே இருந்ததா ...அதில் ஏறி உட்கார்ந்து விட்டேன். என்ன ஆச்சரியம். அப்படியே சைக்கிள் ஓட்டி விட்டேன்.

ஆக ... நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்பாடா ...!

அதென்னவோ .. அத்தனை பேர் சொல்லிக் கொடுத்து வராததை நானே கண்டு பிடித்ததாக எனக்கொரு நினைப்பு.

இதிலென்ன ஆச்சரியம் என்றால் நான் நீச்சல் படித்ததும் இதே மாதிரி தான். வயித்தைச் சுத்தி கயிறு கட்டி, குளத்தில இடுப்பைப் பிடிச்சி காலை அடிக்க வைத்து, .. இன்னும் என்னென்னமோ நடந்தது. ஆனால் நீச்சல் வரவேயில்லை. ஆனால் ஒரு விடுமுறையில் அப்பாதுரை - அந்த வயதில் என்னைப் போல் பொன்னியின் செல்வனின் விசிறியாக இருந்தவன். ஆனால் நான் அதிலிருந்து வெளி வந்த பின்னும், அப்பாதுரை தன் மூத்த மகளுக்கு பூங்குழலி என்று பெயர் வைத்தான் - என்னை சும்மா பேச்சுத் துணைக்கு அவன் குளிக்கப் போகும் கிணற்றுக்குக் கூட்டிப் போனான். ஒண்ணு சொல்லணுமே ... இப்போவெல்லாம் அது மாதிரி எங்கே தண்ணி கிணத்தில இருக்கும்! தரை மட்டத்திற்கு தண்ணீர் தளும்பி நின்னுது. கொஞ்சம் சின்ன கிணறு. மூலைப்படி இருந்தன. அப்பாதுரை ஒரு மூலைப்படியில் இறங்கி குளி என்றான். பயந்து போய் ஆனாலும் துணிந்து இறங்கிக் குளித்தேன். அங்கிருந்து எதிர்த்த மூலைப்படிக்கு கொஞ்ச தூரம் தான் இருந்தது. அப்பாதுரை ’சும்மா ஒரு உந்து உந்தி வாடா’ என்று தைரியம் கொடுத்தான். என்னமோ நல்ல நேரம் .. தைரியம் வந்து ஒரு உந்து தான். எதிர்ப் பக்கம் போய் விட்டேன். அப்பாதுரை கை கொடுத்து தூக்கி விட்டான். அடுத்து எதிர்ப் பக்கம் போ என்றான். முதலிலாவது அவன் மூலைப் படியில் நின்றான். இப்போது ஆளில்லை மூலைப் படி. உந்தினேன். கல்லைப் பிடித்துக் கரையேறினேன்.

ஆஹா .... நீச்சலும் சைக்கிள் மாதிரியே பழகி விட்டேன்.

ஒரே சுயம்பு தான்.


*     *     *

எனக்கு ஒரு சந்தேகம். இப்போவெல்லாம் சின்னப் பசங்க நமக்கு முன்னால் கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டும் போது, ‘என்னடா இது... சின்னப்பிள்ளைத் தனமா இருக்கு; இதெல்லாம் தப்பில்லையா?’ அப்டின்னு நம்ம பழைய காலத்தை மறந்திட்டு திட்டுவோம்ல. ஆனாலும் நாமளும் ஒரு காலத்தில் அப்படி ஓட்டின பசங்க தானே!

சந்தேகம் என்னன்னா ...

கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டாத ஆளுக யாருமே இருக்க முடியாது என்பது என் தியரி.

இது சரியா?

இதுவரை யாராவது சின்ன வயசில கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டாமல் இருந்திருந்தால் அவர்கள் பின்னூட்டத்தில் “ஆமென்” என்று போடவும்.






 *




4 comments:

Jayakumar Chandrasekaran said...

Amen

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆனாலும் நாமளும் ஒரு காலத்தில் அப்படி ஓட்டின பசங்க தானே!....முற்றிலும் உண்மைதான்.

G.M Balasubramaniam said...

சைக்கிளில் பின் சிட்டும் முன் பாரும் இல்லாமல் தன் தோழனுடன் வந்திறங்கிய பெண்ணை ஆச்சரியமாய்ப் பார்த்தனராம் அவளது தோழிகள்

வெங்கட் நாகராஜ் said...

நானாகவே தான் நானும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்! கைகளை விட்டு சைக்கிள் ஓட்டாத ஆட்கள் குறைவு தான்! ஒரு சைக்கிளை ஓட்டிக்கொண்டு இன்னுமொரு சைக்கிளை டோ செய்தது கூட உண்டு!

இனிய நினைவுகள்.

Post a Comment