Tuesday, April 02, 2019

1037. SUPER DELUXE ... புரியலை.
*


ஆரண்ய காண்டம் பார்த்து அசந்து நின்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனா வருஷம் ஏழெட்டு ஓடிப் போச்சு. விஜய் சேதுபதி இல்லாவிட்டாலும் தியாகராஜன் குமாரராஜா படத்தைப் பார்க்க ஆவலோடுதான் இருந்தேன். வி.சே. சேர்ந்ததால் எதிர்பார்ப்பு இன்னும் கூடிப்போச்சு.

படம் பற்றி என்ன சொல்ல என்றுதான் இப்போது புரியவில்லை.

மொத்தம் நான்கு கதைகள். தொடர்பில்லாத கதைகள். ஏனிங்கே பின்னிப் பிணைந்திருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன். புரியவில்லை.

முதல் படத்தில் நிறைய தமிழ்க் கெட்ட வார்த்தைகள் இருந்தன. இந்தப் படத்தில் அது ஒரே ஒரு வார்த்தை தான். அதையும் தமிழில் தலைகீழாகப் போட்டு ஒரு புரட்சி. புரியவில்லை.

நல்ல வேளை .. சமந்தாவைப் பொறுமையாகத்தான் பார்ப்பேன். இந்தப் படத்தில் அப்படியில்லை.அழகில்லாமல் தெரியும் அவரது உதடுகளுக்கு மேக்கப் மேன் ஏதோ மாற்றம் செய்து அவரை அழகாகக் காண்பித்திருக்கிறார். அவர் அழும் போதும், குரலை அடக்கிப் பேசும் போதும் அவர் பேசியது எனக்கு மட்டும் கேட்கவில்லையா? புரியவில்லையா? எல்லோருக்கும் அது தானா? புரியவில்லை.

அதென்ன அப்படி தலை போற ஒரு விஷயத்தை - ஒரு கொலையை(?) / மரணத்தை - அவரும் அவரது கணவரும் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்? அந்தக் காரணத்தைக் கணவன் ஏற்றுக் கொள்வதும் புரியவில்லை.

பிரேதம் இருந்த வண்டியை  ரயில் பாதையில் நிறுத்தி விட்டு, அடுத்த ரயில் எப்போது வரும் என்று பக்கத்தில் கேட்கிறார் பாசில். அட... கூகுள் சாமிட்டயாவது கேட்டிருக்கலாம். அதை விட்டு யாரிடமோ கேட்டு இன்னொரு சாட்சியைத் தயார் செய்கிறார். எதற்காக இப்படி ஒரு மடத்தனம்? புரியவில்லை.

வில்லத்தனமான போலீஸ்காரருக்கு அந்தக் கொலை எப்படி தெரிந்தது என்று எனக்குத் தெரியவில்லை.அந்த விஷயம் எனக்குப் புரியவில்லை.

போலீசுக்காரர் தலையில் டிவி விழுந்து எப்படி அவர் சாகிறார்? பசங்க வீட்டுக் கூரையில் போட்டது (ஏன் டிவி அந்தப் பசங்க மாத்தினாங்க? அதில் ஏதேதோ வசனம் எல்லாம் வந்தது. என்னவென்றுதான் தெரியவில்லை. ) எப்படி இங்கே வந்து விழுந்தது. புரியவில்லை.
கடைசியில் செத்த ஆளையும் போலீஸ்காரரையும் ஒரு வண்டியில் வைத்து நாயகன், நாயகி ஊடலோடு ஊடலாடிக்கொண்டு சாதாரணமாகப் போகிறார்களே. எப்படி? புரியவில்லை.

*

வி.சே வரும் சீன்களில் லாஜிக் ரொம்ப உதைக்குது. எனக்கொரு சந்தேகம். transgenders குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? (கூகிள் சாமிட்ட கேட்டேன். Quoraவில் பதில் வந்தது. முடியுமாம்!) வி.சே. யின் பையனுக்கு இம்புட்டு புத்தியா?   இந்த ரோலுக்கு வி.சே. தேவையில்லை என்று நினைக்கின்றேன். இது புலிக்குப் புல் போட்ட மாதிரி இருக்கு நட்பிற்காகவும், வெறும் விளம்பரத்திற்காகவும் நடித்திருப்பாரோ? புரியவில்லை.

ஒரு புத்திசாலிப் பிள்ளையைக் காணவில்லை என்றால் உடனே வீட்டிற்கு வந்துவிட்டானா என்றுதானே தேட வேண்டும்.  அதைவிட்டு விட்டு பம்பாய்க்கு டிக்கெட் எதற்கு? புரியவில்லை.

*

ரம்யா கிருஷ்ணன் தரும் விளக்கங்கள் வினையா .. விளையாட்டா? காதில் பூ சுற்றுகிறாரா? மகன் தற்கொலைக்கு வேறு - கற்பு சம்பந்தப்பட்ட - சிறு விஷயம் ஒன்றைக் கூட வைத்திருக்கலாமே. ரம்யாவிற்கு ஏனிந்த கதை. புரியவில்லை.

மிஷ்கின் - அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்குமென்பதில் ஆச்சரியமேது. மிஷ்கின்னும் சரி.. அதற்கு அவ்வளவு அற்புதமாக கிறித்துவ பாதிரிகளும், பிரசங்கிகளும் பயன்படுத்தும் வார்த்தைகள். சாட்சி சொல்ல சில ஆட்கள். மிஷ்கின்னும் உதவியாளரும் பின்னிட்டார்கள்  போங்க! மிஷ்கின் உதவி கேட்கிறார் அவர் கடவுளிடம். ஒன்றும் வரவில்லை. சிலையை  உடைக்கிறார். வைரம் கொட்டுகிறது. அதன் பின் அவர் கேட்கும் கேள்வி... அழகு! சுனாமியில் சாமி சிலை இல்லாமல் வேறுஏதாவதைப் பிடித்துப் பிழைத்திருந்தால் என்ன செய்திருப்பாய்? என்ற கேள்வியும் நல்ல கேள்வி!  எல்லாம் புரிந்தது.
*
அந்த 3 பசங்க ...காமெடியா? சீரியசா? Science fiction கதையா? சொல்ற கடைசித் தத்துவம் என்ன? எல்லாவற்றிற்கும் பாலியல் தான் பதிலா?

*
ரம்யா கிருஷ்ணன் பையனின் நண்பனும், வி.சே.யின் மகனும் கடைசி சீனில் குச்சி ஐஸ் சாப்பிடுகிறார்களே ... அதில் ஏதாவது ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறதா? புரியவில்லை.

*    *    *    *
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

பல விஷயங்கள் இதில் மிகவும் புதிதாகவும் நன்றாகவும் இருந்தன. ஒரு வேளை film makersக்கு அவை பாடமாகக் கூட இருக்கலாம்.

Colour ambience இதற்கான டெக்னிகல் சொல் என்னவென்று எனக்குத் தெரியாது. அது மிகவும் நன்கிருந்தது. எல்லாம் மெல்லிய சிகப்பு. அதற்கு அடுத்தது காமிரா கோணங்கள். பசங்க ஓடும் போது சந்தின் ஒரு முனையில் அவர்கள்; அடுத்த முனையில் காமிரா. வி.சே. தன் மகனைத் தேடும் போது குறுகிய பாதைகள்; சந்து பொந்துகள்.  போலீஸ் ஸ்டேஷனின்  வண்ணமும், அதன் உட் தோற்றமும் சிறப்பு. படத்தில் இரு இடங்களில் காமிரா மேலே நோக்கும் போது விமானங்கள் குறுக்கே பறக்கின்றன. காண்பிக்கப்படும் இடங்கள் எல்லாமே நன்றாக இருந்தன என்பதை விட இயற்கையாக இருந்தன. Lovely locales!

முன்பு ஒரே ஒரு படத்தில் (இந்தி) ஒரு நல்ல விஷயம் பார்த்தேன். இந்தப் படம் முழுவதும் அதைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார்கள். காட்சி நடக்கும் போது சூழலில் உள்ள ஒலிகள் எல்லாமே சேர்ந்தே ஒலிக்கும். அது ராஜாவின் பாடலாக இருக்கலாம், இல்லையெனில் ஏதோ ஒரு பட்டறையில் அடிக்கும் சுத்தியல் ஒலியாக இருக்கலாம், அந்தந்த அறையில் இருக்கும் டிவியின் சத்தமாக இருக்கலாம். தெருவென்றால் பல கலவையான ஒலியாக இருக்கும். (இதற்கு பாராட்டு sound effects என்று போடுவார்களே அவருக்கானதா?) இந்த ஒலிக்கலவை நன்றாக இருந்தன. ஆனால் வசனத்தை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

பாஸில், சமந்தா, வி.சே.யின் மனைவி, வி.சே., குட்டிப் பையன் ... எல்லோரும் நன்கு நடித்திருக்கிறார்கள். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை. கூட்டத்தில் கோவிந்தா என்றாகி விட்டன. ஏனெனில் நான்கு கதைகள் (ஆனால் திரைக்கதையில் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருந்தன.) அந்தக் குழப்பத்தில் இவர்களின் நடிப்பு கரையேறவில்லை. பக்ஸ் நடிப்பையும் இவர்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்படியோ? படம் பார்த்ததும் கொஞ்சம் தலை சுத்தியது. ஏன் இப்படி நான்கு கதைகளை வைத்து ஒரு படம் என்ற கேள்வி முன் நின்றது, ஒரு வேளை ஒரு வித்தியாசமான படம் எடுக்கும் முயற்சியா? சமந்தா பாகம் மட்டும் எடுத்திருந்தால் ஆரண்ய காண்டம் மாதிரி ஒரு படம் இயக்குனர் கொடுத்திருக்கலாமென்று தான் தோன்றியது.

அடுத்து, முன்பு ஒரு படத்தில் வி.சே. பற்றி ஒரு வரி எழுதியிருந்தேன். சினிமாவில் உடம்பைப் பற்றிக் கவலை படாத இரண்டே இரு நடிகர்கள் - சிவாஜி, வி.சே.  என்று எழுதியிருந்தேன். ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இருந்து வி.சே.யை எடுத்து விடலாம். மகிழ்ச்சி.

அதே போல், இப்போது இன்னொரு வார்த்தை வி.சே. அவர்களுக்கு. நட்பை மிகுதியாகப் பாராட்டுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்,. ஆனால் அதற்காக உங்கள் படங்களில் வெறுமனே விளம்பரத்திற்காக நடிக்க வேண்டாமே..

இந்தப் படமும், சீதக்காதி படமும் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற வைத்து விடுகின்றன, ஆனால் அவை substance இல்லாமல் போய் விடுகின்றன. பார்வையாளர்களுக்கு ஏமாற்றம். சீதக்காதியில் வி.சே. இறந்த பின் வரும் காட்சிகள் என்னைப் பொறுத்தவரை வெறும் காமெடி தான். இப்படத்தில் அவருக்கு கொடுத்த வேடம், நான் சொன்னது போல், புலிக்குப் போட்ட புல்.


வி.சே. தன் நடிப்பை வெளிக்கொணரும் படங்களுக்குச் சிறப்பிடம் கொடுத்தால் என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 
*

No comments:

Post a Comment