பிற தொடர்புடைய பதிவுகள்
5.
https://dharumi.blogspot.com/2019/06/1056-5-dubbing-days.html
8.
https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html
*
சென்னையிலிருந்து
சனி, ஞாயிறு இரு நாட்களுக்கு (25,26-5-19) டப்பிங் பேச அழைப்பு வந்தது. சம்மதம் சொன்னதும்
பயணச் சீட்டுகள் வந்து விட்டன. வெள்ளி மாலையே புறப்பட வேண்டிய கட்டாயம். அன்று மாலை
நடந்த ஒரு முக்கிய சோக நிகழ்வுக்கு - நான் இருந்திருக்க வேண்டிய - நிகழ்வைத் தவிர்க்க
வேண்டியதாகி விட்டது.
* * *
ஏற்கெனவே ஒரு முறை
டப்பிங் பேசியது பற்றி எழுதியிருந்தேன். அதில் ஒன்றரை மேஜை போட்டிருந்த சிறு அறையில்
டப்பிங் செய்த அனுபவத்தை எழுதியிருந்தேன். அந்த நினைவில் இப்போது வரச் சொன்ன இடம் தேடி 25ம் தேதி காலை.
சென்றேன்.
தடபுடலான கட்டிடம். சொந்தக்காரர் புகழ்பெற்ற இயக்குனரான பிரியதர்ஷன்.
இப்போது எல்லாமே பயங்கர richness உடன் இருந்தது. அந்த தியேட்டர் இருந்த கட்டிடமே மிகு நவீனமாக இருந்தது. உள்ளே நுழைந்தால் கருப்பு வண்ணங்களில் ஆடியோ கார் ஒன்றும், பென்ஸ் கார் ஒன்றும் முறைத்துப் பார்த்தன. நுழைவாசலில் நுழையும் இடத்திற்கு எதிரே ஒரு பெர்ர்ர்ரிய கண்ணாடி எதிரொ
லிளித்தது. FOUR FRAMES SOUND COMPANY. முகப்பு தான் அழகு என்றால் உள்ளும் அப்படியே. Everywhere richness reflected.
இரண்டு பெரிய குளிரூட்டப்பட்ட அறைகள். முழுவதும் acoustic-க்காக தரை, கூரை, சுவர்கள் எல்லாமே ”போர்த்தப்பட்டு” இருந்தன. இரு அறைகளில் ஓர் அறை டப்பிங் செய்வதற்கான அனைத்து கருவிகளுடன் இருந்தது. கருவிகளுக்கு எதிரே ஒரு பெரிய டிவி திரை. அதில் ஒலி சேர்க்க படம் ஓடும். உதட்டசைப்பு .. அது இதுவென்று பார்த்துக் கொள்ள வசதி.
|
PARI, Asst. to Dubbing Master adjusting mikes |
அடுத்ததும் அதே போல் ஒரு பெரிய அறை. இரண்டும் இரு கண்ணாடித் தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தன.இங்கும் ஒரு பெரிய திரை. LCD projector வைத்துப் படம் பெரிதாகத் திரையில் விழுகிறது. திரைக்கு எதிர்த்தாற் போல் வலது ஓரத்தில் பேசுபவர்களுக்கான இடம். போன தடவையே உட்கார்ந்து டப்பிங் செய்வதை விட நின்று செய்வது எளிது என்று எழுதியிருந்தேன். இங்கே அப்ப்டித்தான் .. நின்று கொண்டே பேச வேண்டும். ஒரு சின்ன உயர மேசை.. அதற்கு எதிர்ப் பக்கம் பேச்சுக் கருவி வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தெரிவது போல் ஒரு பெரிய filter. pop filter - என்பது அதன் பெயராம், ஒலியை சிறிது muffle செய்யும் போலும். தலைக்கு மேல் ஏசி. பேசும்போது நிறுத்தி விட வேண்டும். பக்கத்திலேயே குடி நீர். நானும் பல தடவை மிடறு மிடறாகக் குடித்து தொண்டையைச் சரி செய்து கொண்டேனாக்கும்! வசதியாய் உட்கார நல்ல சோபா ஒன்று.பொதுவாக பேசும் போது திரையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அறை இருட்டாக்கப்படுகிறது. மேசை விளக்கின் ஒளி மட்டும். அப்போது உதவுகிறது.
|
Prof. JEYASUDHA, SOUND ENGINEER |
Dubbing head ஒரு பேராசிரியர். திருமதி ஜெயசுதா. கல்லூரியில் விஸ்காம் பேராசிரியர். sound engineering படிப்பை திரைப்படக் கல்லூரியில்.படித்து தங்கப் பதக்கம் பெற்றவர். அதை விட பெரும் படங்களில் அளித்த பங்களிப்பு அதிகம். மகாநதி, குருதிப் புனல் என்று ஒருபெரும் நீண்ட பட்டியல். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் முடித்து நீண்ட அனுபவம் வாய்ந்தவராக இருந்தார். அதுவும் நாங்கள் இருவரும் ஒரே ஆசிரிய சாதியினர் என்பதால் எங்களுக்குள் affinity நன்றாகவே இருந்தது. நடு நடுவே பல கதைகள். அப்படி பேசும் போது புதிய தகவல் ஒன்று சொன்னார்கள். அடுத்து வரப் போகும் இளையராஜாவின் பிறந்த நாள் விழாவில் எஸ்.பி.பி. பாடுவதற்காக ஒத்திகைக்காக வந்திருக்கிறார் என்றார்கள். அப்போது தான் தெரிந்தது அவரது கணவரும் ஒரு sound engineer. அதுவும் ராஜாவின் sound engineer!
(இதைத் தெரிந்ததும் நான், “அப்போ .. மேடம் ஒரு பெரிய சவுண்டு பார்ட்டி” என்றேன்!)
அங்கு தான் எஸ்.பி.பி.யை அன்று காலை பார்த்ததாகக் கூறினார்கள். அவர்கள் சொன்ன செய்தி புதிதாக மட்டுமல்ல மிக இனிமையானதாகவும் இருந்தது. அவர்கள் இந்தச் செய்தியைக் கூறிய பிறகு இரு நாட்கள் கழித்து தான் அச்செய்தி ஊடகங்களில் வந்தது.
|
இயக்குநர் - சாந்த குமார்
படம்: துணை இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி |
முதலில் நான் படத்தில் பேச வேண்டிய காட்சிகளுக்கான டப்பிங் நடந்தது. நான் நிறைய பயந்து “மேடையேறினேன்”. ஆனால் அவ்வளவு சிரமுமில்லை. அதுவும் நல்ல நட்புணர்வு இருந்ததால். அதிக சிரமுமின்றி நடந்து முடிந்தன. மீதி இருந்தது ஒரு voice over -அதாவது சீனில் முகம் காண்பிக்காமல் என் குரல் மட்டும் ஒலிக்கும் காட்சிகள். படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலின் ஊடே குரல் மட்டும் கேட்கும் காட்சிகள். ஆனால் அன்று மாலையாகி விட்டதால் முதல் பகுதி மட்டும் முடித்து விட்டு, மீதிப் பகுதியை அடுத்த திங்கட்கிழமை வைத்துக் கொள்ள முடிவானது.
அடுத்த இரண்டாம் நாள் - ஞாயிற்றுக் கிழமை - படக்குழு தங்கியிருந்த அலுவலக அறைக்கு வரும்படி மாணவ நண்பன் பாபி ஜார்ஜ் சொல்லியிருந்தார். அங்கே காலை சென்றதும் சிறிது நேரம் படத்தொகுப்பறையில் இருந்தேன். துணை எடிட்டரான முருகனின் வேலையைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய பிரமிப்பாக இருந்தது. ஏனெனில் தொடர்ந்து பல காட்சிகள் ... பின் அதில் ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றித் தொகுக்க வேண்டும். தேவை அத்தனை நினைவாற்றல். எப்படியப்பா என்று முருகனிடம் ஆச்சரியப்பட்டுக் கேட்டேன். இதெல்லாம் நம்மளால் ஆகாது என்று நினைத்துக் கொண்டேன். எடிட்டர் சாபு ஜோசப் வந்தார். என்னை அறிமுகம் செய்ததும், அவர் என்னை “ஓ! அந்த டாக்டர் ...” என்றார். எனக்கோ உச்சி குளிர்ந்தது!
மதிய உணவிற்கு முன் ஜார்ஜ் Making of the movie என்று தான் எடுத்திருந்த காட்சிகளைத் தொகுத்திருப்பதைக் காட்டினான். இயக்குநர், எடிட்டர், போட்டோகிராபர் என்று படத்தில் வேலை பார்த்த technicians பேசுகிறார்கள். அதோடு நடித்த நடிகர்கள் சிலரும் பேசினார்கள். நடு நடுவே படத்தின் சில காட்சிகள். இத்தொகுப்பு எடிட் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மதிய உணவிற்குப் பின் ஜார்ஜ் bytes எடுக்க வேண்டும் என்றார். அப்படியென்றால் என்ன என்று கேட்டேன். படத்தில் என் அனுபவம், படத்தைப் பற்றிய என் கருத்து நான் சொல்ல அது படமாக்கப்படும் என்றார். அந்த அலுவலகம் ஒரு பெரிய ரிச்சான இடத்தில் பல 18 மாடிக்கட்டிடங்கள் இருந்த பகுதி. அதில் ஒரு சன்னலின் முன்னால் உட்கார வைத்து நான் நினைத்ததைச் சொல்லச் சொன்னார். சென்னேன். படமாக்கப்பட்டது. படமாக்கிய பின் என்னை நான் அதில் பார்த்துக் கொண்டேன். எனக்கு முழு திருப்தி. ஏனெனில் படத்தில் என் மேக்-அப் என்னை வேற்று ஆளாகக் காண்பித்தது. எனக்கே என்னைப் பிடிக்காதது போல் தோன்றியது. இது என்னை மட்டும் காட்டியது. ஜார்ஜிடம் இதெல்லாம் வருமா .. அல்லது நீளம் காரணமாக வராமலும் போய்விடுமா என்று கேட்டேன். கட்டாயம் வந்து விடுமெனச் சொன்னார், இருந்தும் கைவசம் இருக்கட்டும் என்று என் bytes பகுதியை பென்ட்ரைவில் வாங்கி வந்து விட்டேன். ஆனால் அதன் ரிலீஸ் படம் வெளிவந்த பின்பு தான்.
திங்கட்கிழமை. என் டப்பிங் நடப்பதற்கு முன்னால் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார்கள். அந்த அறையில் உட்கார்ந்து scrabble விளையாடிக் கொண்டிருந்தேன். நான்கு பேர் அறைக்குள் வந்தமர்ந்தனர். துணை இயக்குனர் ஷிவா என்னிடம் அவர்களுக்கெல்லாம் சின்னச் சின்ன வசனங்கள்; அதை முடித்து நீங்கள் என்றார். காத்திருந்த நேரத்தில் வந்திருந்தோரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒருவர் மதுரை; எங்க ஏரியா. இன்னும் இருவர் தேனிக்காரர்கள். அவர்கள் என்னைப் போன்ற “புது முகங்கள்” இல்லை. அவர்கள் வேலை முடிந்ததும் நான் அழைக்கப்பட்டேன்.
இன்று இயக்குநரும் உடன் இருந்தார். துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்னை வழிநடத்தினார், அலுப்பின்றி வேலை நடத்துகிறார்கள் .. perfectionக்கு அத்துணை முயற்சி.என் குரலை நானும் சில தடவைகள் கேட்க முடிந்தது. மோசமில்லை என்று நினைத்துக் கொண்டேன். கிருஷ்ணகுமார் மாலையில் தான் செல்லும் வழியில் என்னை என் வீட்டருகே இறக்கி விட்டுச் சென்றார்.
|
கிருஷ்ணகுமாரின் வழி நடத்தல் |
|
பாடம் படிக்கின்றேன் ... |
|
கிருஷ்ணகுமார்-நான் - ஷிவா - பேரா.ஜெயசுதா |
இவர்களோடு பயணப்பட்ட நாட்கள் இனிதே இருந்தன. வாலிபக் கூட்டம். அது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நல்ல நட்புறவுகள். என் மகுடத்தில் இன்னொரு சிறகிற்கும் இடம் கிடைத்தது ... என் ‘மதங்கள் சில விவாதங்கள் - நூலைப் பற்றி மூவர் என்னிடம் பேசினார்கள். அதிலும் இப்படத்தில் இரு நூலகக் காட்சிகள் வருகின்றன. அதில் ஒன்றில் நான் வருகிறேன். ஆனால் இன்னொரு சீனில் உள்ள நூலகத்தில் வைத்திருந்த நூல்களில் என் நூலும் இருந்ததாம். கொஞ்சம் பெருமிதப்பட்டுக் கொண்டேன்.