*
ஏனைய பதிவுகள்
…….
1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html
3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html
4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html
,*
எழுத ஆரம்பித்த நாள்: 4.8.20
வலைக்கு வந்தே ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது. ஏழுமலை ... ஏழுகடல் தாண்டிய அனுபவம்தான் இதுவரை. என்னென்னவோ நடந்தது ..எப்படி எப்படியோ இருந்தது… எல்லாம் ஆங்காங்கே நினைவுகளாக ஒட்டிக் கொண்டு நிற்கின்றன. துடைத்துப் போடவும் முடியவில்லை; தொகுத்துத் தரவும் முடியவில்லை.
தொடர்ந்து எழுத முடியவில்லை. தொடரணும் …
5.8.20
பெற்று வளர்த்த இரண்டு பிள்ளைகளும், பெறாமல் வந்து சேர்ந்த மூன்று பிள்ளைகளும் கட்டி இழுத்து வந்து இதுவரை கொண்டு வந்து விட்டார்கள். அவர்கள் மட்டும்தானா? பெரிய படையே அல்லவா திரண்டு என் பின்னால் நின்றது. எத்தனை கரிசனம்; எத்தனை அன்பு; எங்கெங்கிருந்தோ உதவி.
உங்களையெல்லாம்
மீண்டும் என் மனதிற்குள் ஒரு தரிசனம் செய்ய ஆசை. அதுவே இந்த எழுத்துக்களின் நோக்கம்.
6.8.20
ஜூன் மாத கடைசி வாரம். வலது பக்கம் தோள்பட்டை வலி. அத்தனை அசதி. பாரசிட்டமால் வாங்கப் போனால் கடையில் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். விற்பனைக்கு இல்லையாம். ICMR ல் வேலை பார்க்கும் நண்பனுக்கு ( இக்கட்டுரையில் இனி ‘நண்பன்’ என்றால் அனேகமாக அவன் ஒரு மாணவ நண்பன் என்று கொள்ளவும்.). சில மாத்திரைகள் சொன்னான். இரண்டு நாள் சாப்பிட்டேன். பயனேதுமில்லை. அவனுக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுத்தேன். என்னப்பா பண்றது என்று கேட்டிருந்தேன். மூன்று நாளாகியும் பதில் இல்லை. ஆச்சரியம். இன்னொரு நண்பனுக்கு செய்தி சொன்னேன். சிறிது நேரத்தில் ICMR நண்பரிடமிருந்து போன் வந்தது. “அக்காவிடம் கொடுங்கள்” என்றான். மனைவியிடம் கொடுத்தேன். அவன் பேச ஆரம்பித்ததும் மனைவி என்னிடம் சைக்கினையில் அழுகிறான் என்றாள். வாங்கி நான் பேச ஆரம்பித்தேன். அவன் நான்கு நாட்களாகாக குவாரண்ட்டையினில் இருக்கிறான். அதனால் என் செய்தியை வாசிக்கவில்லை. அதற்கு அத்தனை கவலை அவனுக்கு. அவனுக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது.
9.8.20 (இன்று
எழுதி முடித்து விட வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கணினி முன் அமர்கிறேன் ….)
அடுத்த நாள் காலை. நண்பன் அனுப்பிய மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து கொரோனா டெஸ்ட்
எடுத்துப் போனார். எப்போ ரிசல்ட் தெரியும் என்றேன். தினமும் 1500 டெஸ்ட் செய்ய
முடியும்; ஆனால் 2000க்கும் அதிகமாக வருகின்றன; நாலைந்து நாட்களாகலாம் என்றார்.
நண்பனிருக்க நமக்கேன் கவலை என்பது போல் இரண்டாம் நாளே ரிப்போர்ட் வந்தது. கொரோனா நெகட்டிவ்.
மகிழ்ச்சி. ஆனால் குடும்ப மருத்துவர் உடனே ஒரு ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்றார்.
மாலை போனோம். மீண்டும் எப்படியோ, மக்களெல்லாம் காத்திருக்க நான் போனதும் பத்து
நிமிடங்களுக்குள் என்னை அழைத்தார்கள். ஸ்கேன் எடுத்ததும் ரிசல்ட் மாலை 8 மணிக்குக்
கிடைக்கும் என்றார்கள். ரிசல்டிற்காகக் காத்திருந்தேன்.
அதற்குள் நண்பர்கள் என்
பிள்ளைகளோடும், சென்னையில் பெரிய பதவியில் உள்ள இன்னொரு நண்பனிடமும் கலந்து பேசி
பல முடிவுகளை எடுத்துள்ளார்கள். (அந்த “இன்னொரு நண்பன்” படிக்கிற காலத்தில்,
அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும், அதுவும் என்
மனைவிக்குப் பிடித்த விளையாட்டுப் பிள்ளை..) தேவையானால் அரசாங்க மருத்துவ மனையில்
சேர்க்க வேண்டும் என்பது சென்னை நண்பனின் பெரிய மருத்துவ நண்பர் கொடுத்த அறிவுரை.
மருத்துவம் முடிந்ததும் சென்னைக்குப் பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென
முடிவெடுத்திருக்கிறார்கள்.
8 மணியாயிற்று. தகவல்
இல்லை. 8.30 மணிக்கு நண்பர்கள் வந்தார்கள். மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்று
தகவல் சொன்னார்கள். உங்கள் காரில் தானே என்றேன். இல்லை .. ஆம்புலென்ஸ்
வந்திருக்கிறது என்றார்கள். கொஞ்சம் பக் என்றிருந்தது. இல்லை .. அதுதான் வழக்கம்
என்றார்கள். அத்தனை குறுகிய காலத்தில் ஆம்புலென்ஸை உடனே வரவழைத்தது மட்டுமில்லாமல்
சென்னை நண்பன் மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளை அனுமதிப்பதை
மேற்பார்வையிடும் மருத்துவரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். சென்றேன்; உடனே
அனுமதிக்கப்பட்டேன். மற்றவர்கள் படும் சிரமத்தை நான் உள்ளே சென்ற பிறகுதான் புரிந்துகொண்டேன்.
மருத்துவமனைப் பொறுப்பை
மூன்றாவது மகன், அதாவது என் மருமகன் எடுத்துக் கொண்டார். சாப்பாடு எடுத்து வருவது,
மருத்துவர்களைப் பார்ப்பது … அதெல்லாம் சரி .. ஆனால் மூத்திர பாட்டிலைக் காலி
செய்து கொடுப்பதும், கழிவறைக்கு வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு உரிய நாற்காலையைத் தூக்கி
உடன் வருவதும், டையாப்பர் மாட்டி விடுவதும் … அம்மாடி! … அவனின் கன்னத்தை இரு
விரல்களால் கிள்ளி ஒரு முறை முத்தமிட்டேன். வேறென்ன செய்ய முடியும் என்னால்!
மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த
நாளே ஒரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்து தொலைபேசி வந்தது. யாரென்று தெரியாமல்
கேட்டேன். யார் என்பதைச் சொன்னார். தொடர்ந்து உங்களுக்கான மருத்துவத்தைக்
கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். மதுரையிலுள்ள மாணவி நான் அரசு மருத்துவமனையில்
சேர்ந்திருக்கிறேன் என்று தன் வகுப்புத் தோழன் - அவன் இப்போது ஒரு மாவட்ட ஆட்சியர்
- தகவல் தெரிவித்திருக்கிறாள். அவன் உடனே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளான். அதன்
பின் மனைவியிடம் பேசியிருக்கிறான். ஆனால் அதன் பின் பல நண்பர்கள் நாங்களும்
அவரிடம் பேசியுள்ளேன் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் பயம் தான். அவருக்கே அலுப்பு
வந்து விடக் கூடாதே என்று. சில முறை என்னிடம் பேசினார். பேசும் போதெல்லாம் “நீங்களே
எல்லாவற்றையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினேன்.
இன்னொரு பெரிய மருத்துவ
அதிகாரியிடமிருந்தும் என்னிடம் சில சமயமும், மருமகனிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு
பேசி என் உடல் நிலை முன்னேறி வருவது பற்றி அவ்வப்போது தெரிவித்துக்
கொண்டிருந்தார். இந்தக் கவனிப்பும் சென்னை நண்பன் மூலமாகவே வந்தது.
ஏறத்தாழ ஒரு வாரம்
மருத்துமனை வாசம். மறக்க முடியாத பல கொடூரமான நிகழ்வுகளும் நடந்தன. மறக்க நினைத்தும்
முடியாதவைகள். பிறகு தனியே தொகுத்து எழுத வேண்டும்.
20.7.20 மருத்துவ
மனையிலிருந்து அனுப்பப்பட்டேன். மருமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார்.
காரின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்ப வந்து
கொண்டிருந்தேன். முகத்தில் வேகமாக வீசிய காற்று சுகமாக இருந்தது. திரும்பி வந்து
கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் புறநகர்ப் பகுதியில்
வந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. வீட்டிற்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தோம்.
முக்கிய வீதியில் வந்து
கொண்டிருந்தோம். இதில் இரு வினாடிகள் … சாலை இடது பக்கம் திரும்பியதும் அடுத்த மூன்று
வினாடிகள். அவ்வளவே வீட்டிற்கான தொலைவு. அந்தக் கடைசி 5 வினாடிகள். They started
moving in slow motion. முதல் இரு வினாடிகளில் “என் வீட்டை”ப் பார்த்தேன். பச்சைப்
பசேலென்ற மரங்கள் சூழ்ந்த ஒரு சின்ன வீடு. அதுவும் பெரிய சாலையிலிருந்து
பார்க்கும் போது … தனியான ஓரழகுப் பச்சை வண்ணத்தில் கொன்றைப் பூவின் இலைகள் …
அவைகளின் ஊடே அத்தனைச் சிவப்பாக கொன்றைப் பூக்கள். இலையும் மரங்களும் அத்தனை
அழகூட்டின. கார் இடது பக்கம் திரும்புகிறது … அடுத்த மூன்று வினாடிகளில்
பிள்ளைகளும், நண்பர்களும் எனக்காக.. என் நாளைய பொழுதிற்காக எடுத்திருக்கும்
முடிவுகள் நினைவுக்கு வந்தன. இது தான் ”என்” வீடு… வாழ் நாளெல்லாம் இங்கு தான்
என்று நினைத்து வைத்திருந்த எண்ணங்களை நான் நினைத்ததை விட எளிதாக அப்படியே மறந்து…
புறந்தள்ளி விட்டு “அந்த” வீட்டிற்குள் நுழைந்தேன்.
வீட்டிற்கு வந்ததும்
இன்னும் ஒரு பிரச்சனை -- மூச்சு வாங்குவது. சின்ன வேலை செய்தாலும், நான்கடிகள்
நடந்தாலும் மூச்சு வாங்கும். நான்காவது நாள். நானும் பிள்ளைகளும், மனைவியும்
உட்கார்ந்து ஒரு flash back ஓட்டினோம். கொரோனா ஆரம்பித்த காலத்தில் எப்படி எந்தப்
பிரச்சனையும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்கார்களின் உதவி பற்றியெழுதியிருந்தேன்.
ஆனால் இந்தக் கடைசி சில நாட்களில் எனக்குக் கிடைத்த அன்பு என்னை நிச்சயமாக நிலை
குலைய வைத்து விட்டது. அதுவும் நண்பர்களின் உதவி… அம்மம்மா … நேரடி உதவி
செய்யாவிட்டாலும், தங்கள் குறுஞ் செய்திகள், தொலைபேசி அழைப்புகள்… அதில் இருந்த
உண்மையான அன்பு. ஓரளவு என் மாணவர்களின் அன்பு எனக்குப் பழகியது தான். ஆனால் இந்த
முறை.. ஆனால் இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல… மனைவியும். பிள்ளைகளையும் இந்த உணர்வு
உண்மையிலேயே உலுக்கி எடுத்து விட்டது. அப்பாவின் மீது இத்தனை பேருக்கு இத்தனை
அன்பா .. என்று பிள்ளைகளே வியந்து நின்றனர். ’என்னோடு பேசும் போது எத்தனைக் கலங்கி
பேசினார்கள்’ என்றார்கள்.
(என்ன பிரச்சனை என்றால்
இதைப் பற்றி கண்ணீர் மல்க பேசி கொண்டிருந்தோமா… - இப்போதெல்லாம் நான் மிக எளிதாக
உடைந்து விடுகிறேன் - எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. சில நிமிடங்களே
இருக்கும் இந்தப் பிரச்சனை அன்று முடிய ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.
மருத்துவர்கள் கொடுத்த கடுமையான அறிவுரை : TALK LESS.)
*