Monday, August 22, 2022

1181. பொட்டி தொட்ட கதை




*
                                                

1970களின் கடைசியில் S.L.R. பொட்டி ஒண்ணு வாங்கியாச்சு. அதிலயே பாதி ஜென்மம் சாபல்யம் அடைஞ்ச மாதிரி ஆகிப் போச்சு. ஏதோ அப்பப்ப்போ ஒரு லென்ஸ் வாங்கிறது மாதிரி நினப்பு வேற. மதுரையில் அப்போது 120 TLR காமிராவிற்குத் தான் மதிப்பு. 35 mm அப்போது தான் தலைகாட்ட ஆரம்பித்து, S.L.R. பொட்டியின் மதிப்பு உயர்ந்து கொண்டிருந்த நேரம்.

S.L.R. பொட்டியை அமெரிக்கா சென்று வந்திருந்த பேராசிரியரிடமிருந்து வாங்கினேன். அவர் ஒரு நைக்கான் பொட்டியும் சில எக்ஸ்ட்ரா லென்சுகளும் வைத்திருந்தார். ஒரு நாள் அவருடைய zoom lensயை வாங்கி வைத்திருந்தேன். உலக்கை மாதிரி பெருசா இருக்கும். 200 mm ஆக இருக்கலாம், படம் எடுக்கும் வெறி. இரண்டு மூணு நாளில் அவரிடம் லென்சைக் கொடுக்கணுமே... வேக வேகமாக என்னென்னவோ படம் எடுத்தேன். முக்கியமாக பூக்களைப் படமெடுத்தேன். அதற்காகவே ஒரு பூங்காவிற்குப் போயிருந்தேன்.

அப்போதே portrait என்பார்களே அவைகளை எடுக்க ஆசை. அன்னைக்கிப் பார்த்து நாலைந்து நாள் தாடியோடும், வெற்றிலைக் கரையோடும் ஒருவர் அங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவர் மேல் லவ் வந்தது. அவ்ரிடம் போய் மரியாதையாக உங்களைப் படம் எடுக்கலாமான்னு கேட்டேன். நம்ம மக்களுக்கு அப்போதெல்லாம் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும்னு ஒரு பெரும் தத்துவம் பரவலாக இருந்தது. நல்ல வேளை அவர் சரியென்றார். இரண்டே இரண்டு படம் அவரை எடுத்தேன். (அப்போதெல்லாம் படங்களை எண்ணியெண்ணி தான் எடுப்போம்.)

அப்போது எங்கள் கல்லூரியில் இரண்டே இரண்டு டார்க் ரூம் physics dept.ல் இருந்தது. அதில் இளங்கலைத் துறைத் தலைவர் என்னோடு நட்போடு இருந்தவர். அவர் ஒரு டார்க் ரூமைப் பயன்படுத்த அனுமதி அளித்தார். D.& P. அதாவது developing and printing செய்து பழகியிருந்தேன். ஒரு நாள் படங்களைப் பிரின்ட் செய்து விட்டு அவரிடம் அறைச் சாவியைக் கொடுக்கச் சென்றேன். எங்கே பிரின்ட் போட்ட படங்களைக் கொடு என்றார். கொடுத்தேன். அதில் நாம் ஒரு மாடல் வச்சி எடுத்த படம் இருந்துச்சா ...  அதை எனக்குக் கொடு என்றார். சரின்னு கொடுத்துட்டு வந்துட்டேன்.

அடுத்த நாள் மாலையில் physics மாணவர்கள் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். ஆகா ... அற்புதம் .. என்றார்கள். என்னப்பா என்று கேட்டேன். நான் எடுத்த படத்தை ஒரு தாளில் ஒட்டி, சுற்றி பார்டர் லைன் எல்லாம் போட்டு, என்னைப் பற்றியும் நான் எடுத்துள்ள படத்தின் சிறப்பையும் சொல்லி அதை மாணவர்களுக்கான நோட்டீஸ் போர்டில் போட்டிருந்திருக்கிறார் அவர்களின் துறைத் தலைவர், பேரா. சீனிவாசன்.

அது தான் ஆரம்பம். சில ஆண்டுகளாக ... இல்லை .. பல ஆண்டுகளாக என்றும் சொல்லலாம். கல்லூரியில் ஆசிரியர் என்பதை விட படம் எடுக்குற ஆளுன்னு பெயராகிப் போச்சு. நானும் எனது ஜோல்னா பையில் எப்போதுமே pregnantஆக இருக்கிற பொட்டியுடன் இருப்பேன். ஆட்களை விட மற்றவைகளை எடுக்கவும் அத்தனை ஆசை. எங்கள் மெயின் ஹால் படிகள் நீளமாக இருக்கும். டாப் சன் லைட்டில்  லைட் & ஷேட் வர்ர மாதிரி ஒரு படமும் கல்லூரிக்கே பரிச்சயமாச்சு. சிகப்பு எறும்புகளை ஒரு க்ளோஸ் அப் ஷாட். தமிழ்த் துறைப் பையன் தேடி வந்து, எறும்பு கண் தெரியுறது மாதிரி ஒரு படம் எடுத்திருக்கீங்களாமே.. அதைப் பார்க்கணும் என்றான். மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்குக் கோபுரம் எடுத்து blow up பண்ணிய படம் கல்லூரி முதல்வரின் அறைச் சுவரை அலங்கரித்தது சில காலம் .அப்டி இப்டின்னு ... காலம் போச்சு. எப்போதும் பொட்டி தூக்குற மாணவர்களோடு சகவாசம்.  நம்மைவிட அவர்களின் கலாரசனை என்னையும் உயர்த்திக் கொடுத்தது. விலங்கியல், தாவரவியல் என்று கல்லூரியில் ஒரு சமயம் ஐந்து dark rooms வந்தன என்றால் அதில் என் பங்கும் உண்டு. தொடர்பில் இருந்து, பின்  film institute போன மாணவ நண்பர்களும் உண்டு.

ஆனால் எல்லாவற்றிற்கும் அந்த மாடலின் படம் தான் ஒரு பெரிய பிள்ளையார் சுழியாக இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்து நல்ல படம் என்று சொல்லி, அதைப் பிரபலப் படுத்தி, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள் என்று ஒரு dark room சாவியை என்னிடமே கொடுத்து, தட்டிக் கொடுத்த பேராசிரியர் சீனிவாசனுக்கு அன்றிலிருந்து இன்று வரை மிகவும் நன்றியோடும் அதைவிட நட்போடும் இருந்து வருகிறேன்.


                                                        


விளக்கின் திரியைத் தீண்டி விட்டவருக்கு என்றும் நன்றி.

 


 








*


1 comment:

Nanjil Siva said...

உங்களின் திறமையை கண்டறிந்து தட்டிக்கொடுத்த அந்த பேராசிரியருக்கு நானும் தலைவணங்குகிறேன்...

Post a Comment