Saturday, August 27, 2022

1182. என் வாசிப்பு ....

*


என் வாசிப்பு

 
Forensic Science என்றொரு விருப்பப்பாடம் - elective subject. பல ஆண்டுகள் தொடர்ந்து விருப்பத்துடன் எடுத்த பாடம். விருப்பப் பாடம் என்றால் அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பல்வேறு துறை மாணவர்கள் வருவார்கள். வகுப்பு நன்றாக இல்லாமலிருந்தால் ஆசிரியர் கல்லூரி முழுவதும் மாணவர்கள் மதிப்பில் மிகக் குறைந்த “மதிப்பெண்களே” பெற முடியும். பல்வேறு துறை மாணவர்கள் என்பதால் ஆசிர்யர்கள் பெயர் எடுப்பதும், கெடுப்பதும் எளிது. ஆகவே மாணவர்களை வகுப்பில் “கட்டிப் போட்டாக” வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு உண்டு.

இந்த வகுப்புகளை எம்.ஜி.ஆர். – எம். ஆர்.ராதா வழக்கோடு ஆரம்பிப்பதுண்டு. அந்த வழக்கு நடந்த காலத்தில் தினசரிகளில் வரி விடாமல் வாசித்து வந்திருக்கிறேன். அது நல்ல வசதியாகப் போய் விட்டது. பாடத்தில் முதன் முதலில்  இந்த வழக்கு பற்றிய விவரங்கள் அதிகமாக உதவின. ராதாவின் வழக்கறிஞர் –வானமாமலை அவ்ர் பெயர் – வாதங்களை வாசித்து ரசித்தது (ஆரம்பத்திலேயே முதல் விவாதத்திலேயே matinee idol என்றொரு சொல்லைப் பயன்படுத்தினார்.) கடைசி விவாதத்தில் குண்டுகள் எந்தத் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரியவில்லை என்று எதிர்த்தரப்பு கொடுத்த விவாதத்தையும் அடித்து நொறுக்கினார் ... நிச்சயமாக மாணவர்களின் விருப்பத்தை நம் பக்கம் எளிதில் திருப்பி விடலாம்.

அடுத்த வழக்கு ஷோபா (பாலுமகேந்திரா) தற்கொலை வழக்கு. என்னைப் பொறுத்த வரை அது தற்கொலையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அடுத்து அதைப் பற்றிய விவாதங்கள் தொடரும். அடுத்து ஷெர்லாக் ஹோம்ஸ் கதையைப் பின்பற்றி தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால்  கதைகள் வரும். அதிலிருந்து Anyone leaves evidences என்ற தாரக மந்திரமே இந்தத் துறையின் அடிப்படை என்று சொல்லி... பாடங்கள் தொடரும்.

இதில் பல ஆண்டுகள் ஒரு ஆங்கில நாவலைப் பற்றிய கதைகளும் வகுப்பினுள் தலை காட்டும். Frederick Forsyth  எழுதிய THE DAY OF JACKAL கதை வந்து விடும். சில ஆண்டுகளில் வகுப்பில் இந்தக் கதை சொன்னதோடு, அந்தப் படத்தையும் போட்டுக் காண்பித்தேன். என்னைப் பொறுத்தவரையில் திரில்லர் ..திரில்லர் என்றெல்லாம் சொல்கிறோமே ... இந்தக் கதை வாசிக்கும் போது – படம் பார்ப்பதை விட கதை வாசிப்பது... அடேயப்பா .. அது ஓர் அனுபவம். டி கால் என்ற பிரஞ்சு அதிபரைக் கொல்ல ஒரு கூலிப்படை ஆளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவன் ஒவ்வொரு செயலும் கணக்கிட்டுச் செய்கிறான். அவனைத் தேடி வருபவரும் just one step மட்டும் பின்னால் இருப்பார். ஏறத்தாழ டி காலை நோக்கி சுட்டு விடுவார். மகாபாரத்தத்தில் வந்தது போல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்’.  இந்தக் கதையைச் சொல்லி பலரை கதை வாசிக்க வைத்ததும் அல்லது அந்தப் படத்தைப் பார்க்க வைத்ததுமுண்டு.

கடைசியில் ஒரு assignment. தடயங்கள் இல்லாமல் என்னை மாணவர்கள் கொல்வதற்கு ஒரு திட்டம் தீட்டி வகுப்பில் வந்து சொல்ல வேண்டும். மற்ற மாணவர்கள் வழக்கறிஞர்களாகவோ, காவல் துறையினராகவோ இருந்து கேள்வி கேட்டு அந்தத் திட்டத்தைத் தகர்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்தக் கதை வாசித்து பிரம்மித்த பிறகு அவரின் மற்ற நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் ஒன்று NEGOTIATOR. இந்தக் கதையில் ஒருவனைக் கைது செய்து பின் கட்டாயத்தின் பேரில் விடுதலை செய்ய வேண்டும்.  அவனை விடுவிப்பதற்கு முன்பு அவனது இடைவாரில் ஒரு குண்டு ஒளித்து வைக்கப்பட்டு, அவன் தன் ஆட்களோடு சேரும்போது அதை வெடித்து அவனைக் கொன்று விடுவார்கள். அதாவது ராஜிவ் காந்தியைக் கொலை செய்வது போல் நடக்கும். அப்போது ஒன்று வாசித்த ஞாபகம். இந்த human bomb என்பது இந்த ஆசிரியரால்தான் முதன் முதலில் கற்பனையாக எழுதப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. அதன்பின் இது வெவ்வேறாக வளர்ந்த கதையைத் தான் இப்போது தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமே.


                                         

புதினத்தின் ஆசிரியர் 84 வயதில் இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


*


No comments:

Post a Comment