Wednesday, January 03, 2024

1269. வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ...

வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ... 

 

கடந்த சில மாதங்களாகவே இந்த மூட் நன்றாக வந்து என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விட்டது. பற்றாததற்கு ஏற்றாற்போல் பேரா. முரளியின் காணொளி ஒன்றையும்  பார்த்தாகி விட்டது.


 அந்தக் காலத்தில் ஆங்கில தினசரிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.இப்போதெல்லாம் தமிழ் நாளிதழுக்குக் கொடுக்கும் நேரத்தில் கால்வாசி கூட ஆங்கில நாளிதழ்களுக்குக் கொடுப்பதில்லை. ஆங்கில நாளிதழை நிறுத்தி விடலாமாவெனவும் தோன்றுகிறது.

செய்திகளைப் படிப்பதில் எந்த வித அக்கறையும் எடுக்க முடிவதில்லை. உக்ரைன்.. பாலஸ்தீன் ... எல்லாம் சுடச்சுட படித்து சோர்ந்து போயாச்சு. அயல்நாட்டு விவகாரம்தான் இப்படி இருக்கிறதென்றால் உள்நாட்டு விவகாரமும் அலுத்துப் போச்சு. அடுத்தது மோடிதான் என்ற பின் எந்த மனுசனுக்குத் தான் அலுப்பு வராமல் போகும்?

மாநிலத்திற்குள், அடுத்து மகனை அரியணையில் அமர வைப்பதற்காகவே இந்த முறை அதிக ஊழல் இல்லாத அரசு அமையும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதுவும் போச்சு. வேற கட்சி ஏதுமிருக்கான்னு தேடின்ன போது பல காமெடியன்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அட எடப்பாடி முதலமைச்சராக ஆகணும்னு ஆசைப்படுறாரா ...சரி .. அவரு பக்கமும் ஆளுக நிக்கிறாங்களேன்னு நினச்சி உட்டுவிடலாம். அது போதாதுன்னு சசிகலா சித்தி, டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். என்றொரு வரிசைன்னா ... புதுவரிசை இன்னொண்ணு ஆரம்பிச்சிருக்கு. அதிலேயும் எனக்கு சரத்குமார் சாரை ரொம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு. ஏன்னா அவருக்கு அந்தப் பதவி மேல ஒண்ணும் ஆசையில்லையாம். ஆனா அவரு wife  ரொம்ப ஆசைப்படுறாங்களாம். அதோடில்லாமல் அவங்க மாமியாரும், ‘மாப்பிள்ள .. நீங்க இன்னும் முதலமைச்சராக ஆகலையான்னு கேட்டு அல்லாடிக்கிட்டு இருக்காங்களாம். இது பத்தாதுன்னு புதுசா இன்னொரு ஹீரோயின் வந்திருக்காங்க. புருசன் செத்த நாளை இந்த நல்ல நாளில் ...அப்டின்னு பேசுறாங்க. எல்லோரும் வாங்க ... நம்ம வீடு புழங்கிரும் ...

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல் ஏதும் இல்லாவிட்டாலும் வயது ஒரு அச்சத்தைக் கொடுக்குது. என்ன ... வயசானவங்க எல்லோரும் சிக்கல் இல்லாம போய்ச் சேரணுமேன்னு ஒரு கவலையோடு இருப்பாங்க. அத லிஸ்ட்லயும் சேர்ந்தாச்சு.

வாழ்க்கையைப் பிரிச்சிப் பார்த்தா அர்த்தமே இல்லையோன்னு தோணுது. வெங்காயம் .. பிரிச்சிப் பார்த்தா ஒண்ணுமேயில்லை. (இதோ ..  இன்று .. டிசம்பர் 31. இரவு 12 மணி. மக்கள் வேட்டெல்லாம் போடுறாங்க. சத்தம் காதில் விழுது. கமல்ஹாசன் பாட்டு ஒண்ணும் காதில் இதுவ்ரை விழவில்லை.) யோசிச்சி பாருங்க. நேத்து டிசம்பர் 31. இன்று ஜனவரி 1. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ன மாற்றம்? ஒரு மண்ணுமில்லை. ஆனா ஏன் ஆடுறோம்... பாடுறோம். எதுக்கு? (போன வருஷம் வேட்டுப் போட்டு, பாட்டு பாடினோம்ல ... அதைத் திருப்பிச் செய்யணும்ல!)

மேலே போட்ட காணொளியைப் பாருங்க. பெரிய தத்துவஞானியாம். இதைத்தான் சொல்லியிருக்கிறார். ஆனா அத கேக்குறதுக்கு முந்தியே இதையே அடிக்கடி நினச்சிருக்கேன். ஏதோ எப்படியோ (??) வந்து பிள்ளையா பிறந்தோம் ... வளர்ந்தோம் .. யாரும் வளர்க்காமலேயே – அப்பா, அம்மா சோறு போட்டு வளர்க்கிறதைச் சொல்லலை – நமக்குன்னு ஒரு பண்பியல் – character - நம்மோடு வளர்ந்தது. நாம் நல்லவானா கெட்டவனா வளர்ந்ததற்கு வேறு யாரும் பொறுப்பில்லை... நாம மட்டும் தான் பொறுப்பு. நல்லவனாகவே இருந்து நல்லாவே செத்துப் போனாலும் ... போனபிறகு .. என்னதான் நமக்கு நடக்குது? அட கொஞ்சம் பேரு புகழ் அப்டின்னு ஏதோ ஒண்ணை சேர்த்தாலும்... செத்த பிறகெல்லாம் அதனால் யாருக்குத் தான் லாபம்? ஒண்ணும் புரியலைங்க ... அர்த்தங்கெட்ட வாழ்க்கைன்னு சொல்லுவாங்களே ... அதுவா இது?

உரிக்க உரிக்க வெங்காயம் ... ஒண்ணுமேயில்லாம தான போகும்! இல்ல ...? பற்றின்றி போகணுமோ? அப்படி சிலர் சொல்றாங்க.கட்டுப்பட்ட ஒரு சமூகத்தில் அப்படியும் இருக்க முடியாது.

WHAT DO I MISS? OR, DO WE ALL MISS SOMETHING?


No comments:

Post a Comment