Friday, December 05, 2025

1363. சிறைவாசம் - ஒரு திறனாய்வு

’சிறை வாசம்’ 

 பீமா கோரேகான் வழக்கும், 
 இந்திய மக்களாட்சியைத் தேடும் படலமும்’



 அல்பா ஷா எழுதிய ஆய்வு நூல்- ஓர் அறிமுகம்

--பெ.விஜயகுமார் ’The Incarcerations - Bhima Koregaon – Search for Democracy in India’ எனும் தலைப்பில் அல்பா ஷா ஆங்கிலத்தில் எழுதிய நூலினை தருமி என்ற பேரா.சாம் ஜார்ஜ் தமிழாக்கம் செய்து வழங்கியுள்ளார். 



 இங்கிலாந்தைச் சேர்ந்த அல்பா ஷா சிறந்த எழுத்தாளரும், ஆய்வாளருமாவார். தெற்காசியா குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் எழுதிய ‘Nightmarch: Among India’s Revolutionary Guerrillas) என்ற நூல் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அத்துடன் சிறந்த அரசியல் படைப்புகளுக்கு வழங்கப்படும் ‘ஆர்வெல் பரிசு’க்கும்- (2019) பரிந்துரைக்கப்பட்டது. பி.பி.சி. வானொலிக்காக ‘Crossing Continents’ எனும் ஆவணப்படம் ஒன்றையும் அல்பா ஷா இயக்கியுள்ளார். London School of Economics’இல் ஆய்வுப் படிப்பை மேற்கொண்ட அல்பா ஷா அங்கே பேராசிரியராகப் பணி ஆற்றும் வாய்ப்பையும் பெற்றார். அங்கு ‘International Institute of Inequalities’ எனும் அமைப்பையும் நிறுவினார். அல்பா ஷா தற்போது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சமூக மானுடவியல் துறையின் தலைவராகச் செயல்படுகிறார். 

 அல்பா ஷா இந்தியாவின் பூர்வகுடி மக்களின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ள நான்காண்டுகளுக்கும் மேலாக அவர்களுடனேயே வாழ்ந்தார். இந்தியாவின் கிழக்கிலிருக்கும் மலைப் பகுதிகளில் வாழும் பூர்வகுடி மக்களின் வாழ்வாதரத்திற்காகப் போராடும் மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிய ஆய்வினையும் மேற்கொண்டார். உலகின் சிறந்த பத்திரிகைகளில் இவரின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன. சூழலியல், வறுமை, சமூகநீதி, வளர்ச்சி, புரட்சி, அசமத்துவம், புலம்பெயர் துயரம் என்று பல துறைகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஐரோப்பிய பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இவரின் ஆய்வுகளுக்கு நிதி நல்கை வழங்கியுள்ளன. 

 அல்பா ஷாவின் இந்நூலினைப் படிப்பதற்கு முன்னர் மகராஷ்டிரா மாநிலம் பீமா நதிக்கரையில் இருக்கும் கோரேகான் எனுமிடத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைத் தெரிந்துகொள்வது அவசியம். 1818ஆம் ஆண்டு புனே நகருக்கு அருகில் இருக்கும் இவ்விடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் படைக்கும், அப்பகுதியை ஆட்சி செய்துவந்த பேஷ்வாக்களுக்கும் இடையில் ஓர் உக்கிரமான போர் நடந்தது. இந்திய சாதியக் கட்டுமானத்தின் உச்சியில் இருக்கும் பிராமனர்களான பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் தலித்துகள் (மஹர்கள்) கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளாகி சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர். பேஷ்வாக்களுக்கு எதிரான இப்போரில் ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் மக்கள் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தனர். இதனைத் தங்களின் அடிமை வாழ்வு முடிவுக்குவந்த வெற்றியாகக் கருதினர். 


 இப்போருடன் மராத்தா சாம்ராஜ்யத்தை வீழ்த்திய வெற்றியின் அடையாளமாக ஆங்கிலேய அரசு ஒரு நினைவுத் தூணை நிறுவியது. இத்தூணில் பேஷ்வாக்களுக்கு எதிரான போரில் உயிரிழந்த தியாகிகள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இருபத்திரண்டு மஹர்கள் பெயரும் உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மஹர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த ஜனவரி முதல் நாள் கூடுகின்றனர். 

1927இல் அண்ணல் அம்பேத்கரும் இத்தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்த வெற்றியின் இரு நூறாவது ஆண்டு நிறைவு விழாவை 2018 ஜனவரி முதல் நாள் கோலாகலமாகக் கொண்டாடத் தலித் மக்கள் கோரேகானில் கூடுவதற்குத் திட்டமிட்டனர். அதே நேரத்தில் இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை நிறுவிடத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வேறொரு திட்டத்தைத் தீட்டியது. அக்டோபஸ் கரங்கள் போன்று அகன்று விரித்து வளர்ந்துள்ள தன் பரிவாரங்களைப் பயன்படுத்தி பீமா கோரேகான் கொண்டாட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட சதி செய்தது. மிலிந்த் எத்போதே மற்றும், சம்பாஜி பிதே என்ற இரண்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்களை இதற்கான பணியில் நியமித்தது. 

.
 இவ்விருவரும் கோரேகானைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்த தலித் அல்லாத மக்களைத் திரட்டி பெரும் கலகம் வெடிக்கும் சூழலை உருவாக்கினர். 2018 ஜனவரி முதல் நாள் திரளும் தலித்துகளுக்கு எந்தவொரு உதவியும் செய்யக்கூடாது என்றனர். உணவகங்களையும் மற்ற கடைகளையும் மூடிவிடச் சொன்னார்கள். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் இருப்பதையும் உறுதிப்படுத்தினர். விழாவில் பங்கேற்க வரும் மஹர்களை அடித்து நொறுக்கவும் அடியாட்களைத் தயராக வைத்திருந்தனர். ஆர்எஸ்எஸ் இந்தச் சதியைச் சற்றும் அறிந்திராத தலித் மக்கள், பீமா கோரேகானில் பெருமளவில் திரண்டு விழாவினைச் சிறப்பாக நடத்திடும் கனவில் இருந்தனர். மகராஷ்டிரா, சத்தீஷ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து தலித் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தனர். ’எல்கர் பரிஷத்’ என்றழைக்கப்பட்ட இவ்விழா அமைதியாக நடந்திருக்க வேண்டியது. ஆனால் விழாவின்போது சங்பரிவாரங்கள் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்தில் ராகுல் பத்தேங்கே என்ற 28 வயது இளைஞர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடன் சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் சிலரை பூனே நகரக் காவல்துறை கைது செய்தது. பின்னர் இவர்களை எல்லாம் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்காத, தொடர்பே இல்லாத பதினாறு பேரை ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு முகமை (NIA) கொடூரமான UAPA (Unlawful Activities Prevention Act) எனும் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்களை எல்லாம் ’அர்பன் நக்சல்கள்’ என்ற பெயரிட்டு பிணையில் வெளிவர முடியாதபடி செய்தது. 

 பீமா கோரேகான் வழக்கில் கைதான இந்த பதினாறு பேரும் உண்மையில் மனித உரிமைக் காவலர்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், என்று பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர்கள். ஏழை எளிய மக்களின் வாழ்வில் அக்கறை கொண்டவர்கள். தலித் மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் பணி செய்தவர்கள். சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஃபாதர் ஸ்டான் சாமி, ஆனந்த் டெல்தும்ப்டே, அருண் பெரைரா, ரோனா வில்சன், சுரேந்திரா காட்லிங், வெர்னன் கொன்சால்வஸ், ஹனி பாபு, ரமேஷ் கெய்சோர், சாகர் கோர்கே, மகேஷ் ராத், சுதிர் தாவ்லே, ஜோதி ஜக்தப், கௌதம் நவ்லக்கா, ஷோமா சென், ஆகிய பதினாறு பேர் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாட்களில் கைது செய்யப்பட்டனர். பிணையில் வெளிவர முடியாத UAPA என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் கைது செய்தது புனே காவல்துறை. கைதானவர்கள் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், பல மதங்களைச் சார்ந்தவர்கள் என்று இந்தியாவின் பன்முகத்தை வெளிப்படுத்தும் வண்ணம் வானவில்போல் இருந்தனர். இதில் ஃபாதர் ஸ்டான் சாமியும், வரவர ராவ்வும் எண்பது வயதைத் தாண்டியவர்கள். சுதா பரத்வாஜ், ஷோமா சென், ஜோதி ஜகதப் ஆகிய மூவரும் பெண்கள். ரமேஷ் கைசோர், ஜோதி ஜகதப், சாகர் கோர்கே, ஆகியோர் கபீர் கலா மன்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள். இந்துக்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். ஆனால் அனைவரும் ‘அர்பன் நக்சல்கள்’ என்ற முத்திரை குத்தப்பட்டார்கள். 

 இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் எனும் மலைப் பகுதியிலும், பிற பகுதிகளிலும் வாழ்ந்துவரும் பூர்வகுடி மக்களைத் துரத்திவிட்டு அங்கிருக்கும் இயற்கை வளங்களை எல்லாம் கார்ப்பரெட்டுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கத் திட்டமிடுகின்றனர். இக்காடுகளின் காவலர்களாக காலங்காலமாக வாழ்ந்துவரும் இந்த அப்பாவி மக்களை விரட்டிவிட்டு அவர்கள் வாழ்ந்துவரும் மண்ணின் அடியில் கிடக்கும் கனிம வளங்களைத் தோண்டி எடுத்துக் கொள்ளை லாபம் அடிக்க வேதாந்தா, டாட்டா, எஸ்ஸார், அதானி போன்ற நிறுவனங்கள் துடிக்கின்றன. காடுகளிலிருந்து வெளியேற மறுக்கும் பழங்குடி மக்களைக் காவல்துறையினர் கட்டாயமாக வெளியேற்றிட நரவேட்டை நடத்துகின்றனர். இதற்கு ‘ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட்’ என்ற பெயரையும் சூட்டுகின்றனர். குரலற்ற இம்மக்களின் குரலாக இருந்து அவர்களின் துயர்துடைக்கும் பணியில் இருப்பவர்களை மாவோயிஸ்டுகள் என்றழைத்து கொடூரச் சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க காத்திருந்தது இந்திய அரசு, 2018இல் பீமா கோரேகானில் சங்பரிவாரம் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது மோடி அரசு. பீமா கோரேகான் வழக்கில் (பீ. கோ.-16) எந்தவொரு தொடர்பும் இல்லாத இவர்கள் மீது பொய்க் குற்றம் சுமர்த்திக் கைது செய்தது காவல்துறை. இந்த மனித உரிமைக் காவலர்கள் எல்லாம் இந்தியப் பிரதமர் மோடியைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று சொல்லிச் சிறையிலடைத்தது! சிறையில் இவர்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு அல்பா ஷா ஆங்கிலத்தில் ‘Incarceration’ என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.




 ”கூட்டிலிருந்து விரட்டப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட இரண்டு பறவைகள்,” எனும் தலைப்புடன் நூலின் முன்னுரை தொடங்குகிறது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் எனும் வீரப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றுடன் இந்நூல் தொடங்குவது பொருத்தமாக அமைந்துள்ளது. சுதா பரத்வாஜ் மிகவும் வசதியான குடும்பத்தில், அமெரிக்காவில் இருக்கும் கேம்பிரிட்ஜ் நகரில் பிறந்தவர். இவரின் பெற்றோர் அமெரிக்காவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணியாற்றினர். சுதாவின் தாய் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிட டில்லியில் குடியேறினார். சுதா இந்தியாவின் ஐ.ஐ.டி. கான்பூரில் படித்துப் பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். வசதியான குடும்பப் பின்னணி, அமெரிக்கக் குடியுரிமை, உயர்ந்த படிப்பு, வருமானம் ஈட்டிட வழக்கறிஞர் தொழில் என்று அனைத்து வசதிகளையும் கொண்டிருந்த சுதா சுகமான, அமைதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால் சுதா தேர்ந்தெடுத்தது இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் காடுகளில் வாழும் பூர்வகுடி மக்களுக்குச் சேவை செய்யும் வாழ்க்கையை. ஆதிவாசிகளின் சொல்லொண்ணா துயரத்தைக் கண்டு மனம் பதறினார். அவர்களின் துயர் துடைப்பதே தனது வாழ்வின் கடமை என்று உறுதி எடுத்துக்கொண்டார். படிப்பறியா அந்த ஏழை மக்களுடன் உண்டு உறங்கி தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்தார். சுரங்கங்களில் வேலை செய்த பூர்வகுடியினரின் உழைப்பை கார்ப்பரெட் நிறுவனங்கள் மிகவும் கடுமையாகச் சுரண்டின. இவர்களுக்காக நீதிமன்றங்களில் சுதா வாதாடி உரிமைகளைப் பெற்றுத்தந்தார். 

டில்லி நகரில் அனைத்து வசதிகளுடன் வாழவேண்டியவர் அனைத்து சுகங்களையும் நாடாமல் அடிப்படை வசதிகள்கூட இல்லாத காடுகளில் வாழ்ந்து திரிந்த சுதா, ஒரு கட்டத்தில் மகள் மாய்ஷாவின் உயர்படிப்புக்காக டில்லியில் குடியேற முடிவெடுத்தார். டில்லியில் அம்மாவும், மகளும் எளிமையான ஆனால் நிம்மதியான வாழ்வு வாழ்ந்தனர். சுதா பரத்வாஜ் டில்லியின் புறநகர் பகுதியில் இருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் தன் அன்பு மகள் மாய்ஷாவுடன் தங்கியிருந்தார். டில்லியில் இருந்த தேசிய சட்டக் கல்லூரியில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சத்தீஷ்கர் மாநிலத்தில் வாழ்ந்த ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையுடன் தொழிற்சங்கங்களை வழிநடத்தியவராகவும், அவர்களுக்கான உரிமைகளை வாதாடிப் பெறுவதற்காக வழக்கறிஞராகவும் கழித்தவர் சுதா.

 தன்னைத்தானே வறுத்திக்கொண்டு வாழ்ந்த தன் தாய் இப்போதாவது சிறிதேனும் வசதியுடன் வாழ வேண்டும் என்று விரும்பிய மாய்ஷா அக்கறையுடன் தன் தாயைக் கவனித்துக் கொண்டார். அன்பும், அமைதியும் தவழ்ந்திட்ட அந்தக் கூட்டில் எளிமையாக வாழ்ந்து வந்தனர். 2018, ஆகஸ்ட், 28 அன்று அதிகாலையில் இடியென இறங்கியது துயரம். மாய்ஷா நன்கு தூங்கிக் கொண்டிருந்த வேளையில் பத்துக் காவல்துறையினர் திடீரென வீட்டுக்குள் புகுந்து சோதனைபோடத் துவங்கினர். மும்பையில் இருந்துவந்த காவலர்கள் மராத்தியில் பேசிக்கொண்டனர். இருவருக்கும் அவர்கள் பேசுவது ஒன்றும் புரியவில்லை. அவர்களில் ஒரு பெண் காவலரும் இருந்தார். காவலர்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. அவர்களின் போன், கணினி, அனைத்தின் கடவுச்சொற்களையும் கேட்டறிந்து சோதனை செய்தனர். சோதனைக்குப் பின்னர் சுதாவை விசாரணைக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள். காவல்துறை தன் அம்மாவைக் கைது செய்துள்ளது என்பதை மாய்ஷா புரிந்துகொண்டார்.  சுதா சிறையிலிருந்து பிணையில் வெளிவந்ததும் அவருடைய தோழியும் இந்த நூலின் ஆசிரியருமான அல்பா ஷா அவரை லண்டன் மாநகரில் ஒரு கருத்தரங்கில் பேச அழைக்கிறார். சுதாவின் பாஸ்போர்ட் உட்பட அனைத்து ஆவணங்களையும் காவல்துறை வசம் உள்ளதால் அவரால் இங்கிலாந்து செல்ல முடியவில்லை. ”நான் உன்னுடைய அழைப்பை ஏற்று இங்கிலாந்து வர விரும்புகிறேன். ஆனால் என்னால் இயலாது. சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ளேன். என்னால் இந்தியாவை விட்டு வெளிவர முடியாது.” என்று சுதா ஆதங்கத்துடன் எழுதுவது படிப்பவர் மனதை நெகிழச் செய்கிறது. 

 சுதா கைதான அன்றே வெவ்வேறு இடங்களில் பத்து மனித உரிமைப் போராளிகளை மகராஷ்டிரா காவல்துறை கைது செய்தது. மறுநாள் வலதுசாரி தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கோஸ்வாமி மேல்நாட்டு பாணியில் உடை அணிந்துகொண்டு கிண்டல் மொழியில் விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தோள்களில் துப்பாக்கியுடன் அலைகின்றனர். இந்த நகர்ப்புற நக்சல்கள் தங்கள் தோள்களில் சோல்னா பைகளை மாட்டிக் கொண்டு அலைகின்றனர் என்றார். அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியை வெளியிட்டன. ஒரு சில பத்திரிகைகளே சமூகச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்ததைக் கண்டித்து தலையங்கம் எழுதின. 2014இல் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடனேயே ஊடகங்ளை மிரட்டி அடக்கத் தொடங்கியது. பத்திரிகை சுதந்திரம் காணாமல் போனது. ’இந்துத்துவா’ ஆதரவுச் செய்திகளை வெளியிடுவதற்குப் பணம் பெறும் பத்திரிகையாளர்கள் (Paid Journalists) உருவாகியுள்ள உண்மையை ‘Cobra Post’ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஊடகச் சுதந்திரம் உலகக் குறியீட்டில் 80லிருந்து 150ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது (150/180) என்று ’Reporters without Borders’ அமைப்பு கண்டறிந்துள்ளது. புனே நகர் காவல்துறை கைதான மனித உரிமைப் போராளிகள் அனைவரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்றதுடன், இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுத்து குடியரசைத் தகர்க்க முனைகிறார்கள் என்றும், மோடியைக் கொல்ல சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியது. மும்பை காவல்துறை அதிகாரிகளான பரம்பீர்சிங், சிவாஜி பவார், மற்றும் சிவாஜி போத்கே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கு தங்களிடம் தக்க ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இவர்கள் சொன்ன ஆதாரம் பொய்யானது என்று விரைவில் தெரியவந்தது. கணினிகளில் தவறான உத்திகளைப் (malware) பயன்படுத்தி, பொய்யான தகவல்களைப் புகுத்தியிருந்ததை அமெரிக்காவின் கணினி ஆய்வு நிறுவனம் ’ஆர்செனல்’ தெரிவித்தது. ஆர்செனல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தது காவல்துறை. அடுத்த சில நாட்களில் மனித உரிமைக் காவலர்கள் பதினாறு பேர் கைதாகி வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஒன்றிய அரசு இவர்களைக் குறிவைத்துத் தாக்குவதற்குக் காரணம் என்ன? 




 உலகின் மிகப் பெரிய குடியரசு என்று நாம் எல்லாம் பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்த பதினாறு மனித உரிமைக் காவலர்கள் ஒரே நாளில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் அர்பன் நக்சல்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டு பிணையில் வரமுடியாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். 2018-2020 ஆண்டுகளில் கிட்டதட்ட மூன்றாண்டுகள் சிறையில் இருந்தனர். இவர்கள் உண்மையிலேயே இந்தியக் குடியரசின் பாதுகாவலர்கள். இந்திய சமூகத்தின் அடித்தள மக்களின் துயர்துடைக்க உழைத்தவர்கள். இந்தியாவின் பூர்வகுடிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள். குரலற்றவர்களின் குரலாக இருந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டும், தனித்தனியாகவும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மனித உரிமைக் காவலர்களாகச் செயல்பட்டனர். இவர்களின் பணியை முடக்க நினைத்தது 

பாஜக அரசு. இந்தியாவை ஓர் ’இந்து தேசமாக’ நிர்மானிக்க நினைக்கும் ஆர்எஸ்எஸ்-இன் கனவுகளை நனவாக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் பிரிவான பாஜக. தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றத் துடிக்கும் பாஜக அரசு உண்மையான தேச பக்தர்களைக் கண்டு அஞ்சுகிறது. சமத்துவம், சமூகநீதி, ஜனநாயகம். மதச்சார்பின்மை, பன்மைத்துவம் போன்றவற்றில் இவர்களுக்கு சிறிதும் நம்பிக்கையில்லை. தங்களின் திட்டங்களை நிறைவேற்றத் தடையாக இருப்பவர்களை எல்லாம் கொலை செய்து முற்றிலும் துடைத்து எடுப்பது அல்லது சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவது என்ற ஒற்றை முடிவுடன் செயல்படுகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. கோவா மாநிலத்திலிருந்து செயல்படும் ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்துமத வெறி அமைப்பு இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்கள் நான்குபேரை தொடர் கொலைகளாகச் செய்து முடித்தது. பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர், மகராஷ்டிரா மன்னர் சிவாஜியின் உண்மை வரலாற்றை எழுதிய கோவிந்த் பன்சாரே, முற்போக்குச் சிந்தனையாளரும் துணைவேந்தருமான கல்புர்கி ஆகிய நால்வரையும் கொன்ற குற்றவாளிகளை இதுவரைக் கைது செய்யாமல் பாதுகாக்கிறது பாஜக அரசு. ”இந்தியாவின் வலதுசாரி தேசியத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. அதுவே நமது மரணத்துக்கான அனுமதிச் சீட்டாக மாறிவிடும்’.” என்று கௌரி லங்கேஷ் கூறியது இன்று உறுதியாகியுள்ளது. குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்துபோது இஸ்லாமியர்கள் ஏறக்குறைய மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இது குறித்த உண்மைகளை ‘Gujarat Files: Anatomy of a Cover Up’ என்ற நூலில் எழுதிய ரனா அயூப் என்ற பெண்மணி தொடர்ந்து மிரட்டப்படுகிறார். உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்திற்கு நேர்ந்த துயரத்தை நேரில்கண்டு அறிக்கை அளிக்கச் சென்ற சித்திக் கப்பன் என்ற பத்திரிகையாளர் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். The Wire, Caravan, Alt News, News Click, News Laundry, The Quint போன்ற ஊடகங்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றன. இந்திய அரசியல் சமூக நிலவரங்களை நேர்மையுடனும், துணிச்சலுடனும் வெளிக்கொணர்ந்த NDTVஐ அதானி நிறுவனம் மொத்தமாக விலைக்கு வாங்கியுள்ளது. இன்று அது பாஜக அரசின் ஊதுகுழலாக மாறியுள்ளது. பாஜக அரசு பி.பி.சி. நிறுவனத்தைக்கூட விட்டுவைக்கவில்லை. மோடி அரசின் அலங்கோல ஆட்சி பற்றி பி.பி.சி ஆவணப்படம் வெளியிட்டது. இப்படத்தைத் தடை செய்ததோடு அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்தது. 

 நீதிமன்றங்களையும் நேர்மையுடன் செயல்படாமல் இருப்பதற்கான அத்துணை நடவடிக்கையிலும் பாஜக அரசு எடுத்தது. அமித் ஷாவுக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியென தீர்ப்பளித்த லோயா என்ற நீதிபதியின் மரணம் குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. ஆனால் பாஜக அரசு அவரின் மரணத்துக்குக் காரணம் மாரடைப்பு என்று சொல்லி முடித்துவைத்துள்ளது. இதேபோல் அமித் ஷா குற்றவாளி என்று தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதி கோபால் சுப்பிரமணியம் என்பவரின் உச்சநீதி மன்ற வாய்ப்பைப் பறித்துப் பழிவாங்கியது பாஜக அரசு. உச்சநீதி மன்ற நீதிபதிகள் நியமனம் குறித்த நடைமுறைகளை மாற்றி பாஜக அரசுக்கு இணக்கமானவர்களையே நீதிபதிகளாக நியமனம் செய்யும் வண்ணம் அமைத்துக்கொண்டுள்ளது. பீமா கோரேகான் வழக்கு குறித்த விசாரணையிலிருந்து மொத்தம் பத்து நீதிபதிகள் வழக்கை விசாரிக்க மறுத்து விலகிக்கொண்டுள்ளனர். அரசின் குறைகளை வெளிக்கொணரும் தன்னார்வக் குழுக்கள் (Voluntary Organizations) மீதும் கடும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இவற்றின் செயல்பாடுகளுக்கு எதிராக ’Foreign Contribution (Regulation) Act,’ மற்றும் ’FCR Amendment Act’ என்று புதுப்புது சட்டங்களை அமல்படுத்தி தன் ஆட்சிக்கு எதிராக எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டுள்ளது. ’அமென்ஸ்டி இண்டர்நேஷனல்’ அமைப்பின் இந்திய அலுவலகத்தையே மூடவைத்துவிட்டது. ‘Green Peace’ எனும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பையும், Oxfam எனும் சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பையும் மௌனிக்க வைத்துவிட்டது. மனித உரிமைகள் பாதுகாப்புக் குறித்துச் செயல்படும் People’s Union for Civil Liberties, People’s Union for Democratic Rights, Indian Association of People’s Lawyers போன்ற அமைப்புகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. 

கான்கிரீட் காட்டின் நடுவே ஒரு கற்பனையான பாலைவனச் சோலை என்ற தலைப்புடன் ஃபாதர் ஸ்டான் சாமி கைதான நிகழ்வைத் தொடங்குகிறார் நூலாசிரியர் அல்பா ஷா. ஆம்; ராஞ்சி நகரம் பிஹாரிலிருந்து பிரிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரமாகிறது. அந்த சிறிய ஊரிலிருந்த குடிசைகளை எல்லாம் இடித்துவிட்டு கான்கிரீட் கட்டடங்களால் நிறைந்த தலைநகரம் உருவாக்கப்படுகிறது. வளர்ச்சியின் அடையாளம் ஏழை எளியவர்கள் வாழ்வு சீரழிவதுதானே! ’ஜார்க்கண்ட்’ என்ற சொல்லுக்கு ’காட்டு நிலம்’ என்று பொருள். ராஞ்சி நகரத்திலிருந்து சற்றுத்தள்ளியிருந்த ’பகைச்சா’ என்ற இடத்தில் ஸ்டான் சாமி தன்னுடைய பள்ளிக்கூடத்தை அமைத்திருந்தார். ஆதிவாசி மக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கும் பகுதியாக அதை மாற்றியிருந்தார். ஆதிவாசி கிராமங்களின் ஆன்மா இப்பகுதியில் தவழ்ந்திட வேண்டும் என்று விரும்பினார். அங்குள்ள கட்டடங்களைக் கட்டுவதற்குக்கூட ஓர் ஆதிவாசி கட்டடக் கலைஞரை அமர்த்தினார். ஆதிவாசிகளின் எளிய குடில் குளிர் காலத்தில் வெம்மையாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். ஆதிவாசிகளின் வழக்கம்போல் சால் மரங்கள் சோலையாக வளர்க்கப்பட்டு, அந்த இடத்தைப் புனிதமான இடமாக அமைத்திருந்தார் ஸ்டான் சாமி. ஸ்டான் சாமி காலையில் எழுந்ததும் பகைச்சாவில் உள்ள ஆதிவாசி தியாகிகளின் பெயர்கள் பொறித்த நடுகல்லிற்கு மலரஞ்சலி செலுத்துவது வழக்கம். அவர் கைதானதற்கு முந்தின நாள்கூட மலரஞ்சலி செலுத்தியிருந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் அந்த நடுகல்லில் ஸ்டான் சாமியின் பெயர் 54ஆவது பெயராகப் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்டான் சாமியின் மரணத்தை அரச பயங்கரவாதம் செய்த கொலை என்று சொல்வதே பொருத்தமாகும். பகைச்சாவில் இருக்கும்போது ஸ்டான் சாமி அரசின் புதிய ‘திட்டங்கள்’ என்னென்ன என்பதைத் தீவிரமாகக் கவனித்துக் கொண்டிருப்பார். அந்தத் திட்டங்கள் ஆதிவாசிகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த கட்டுரைகளை Counter Currents, Sabrang India, Sanhati போன்ற பத்திரிகைகளில் எழுதுவார். இந்நூலாசிரியர் அல்பா ஷா அச்சமயம் அவரின் ’நைட்மார்ச்’ எனும் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார். ஸ்டான் சாமியிடமிருந்து வரும் தரவுகளுக்காகக் காத்திருந்தபோது அவரின் மரணம் குறித்த அதிர்ச்சியான செய்தி வந்தது. ஸ்டான் சாமி விசாரணைக் கைதிகளுக்காக நடத்திய போராட்டங்கள் மிக முக்கியமானவை. அவர்களுக்காக எவ்வளவு கருணையோடு போராடி இருக்கிறார்! ஆதிவாசிகள் மீது வன்முறையாக நடத்தப்படும் இடம் மாற்றங்கள்; ஆதிவாசிகளின் பள்ளிகளை இராணுவம் தங்கள் முகாமாக மாற்றிக்கொள்ளும் வன்முறை; ஆதிவாசிகளைக் கொண்டே ஆதிவாசிகளைக் கொல்லும் தந்திரம்; ஆதிவாசிகள் மீது தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திணிப்பது; பள்ளிப் பாடத்திட்டங்கள்கள் மூலம் அவர்களை இந்துத்துவாவிற்குள் கொண்டுவருவது போன்ற கொடூரங்களை எல்லாம் அவருடைய கட்டுரைகள் சுமந்து வந்தன. ஸ்டான் சாமி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் கொட்டா எனும் பகுதியில் அதானி குழுமம் திட்டமிட்டிருந்த நிலக்கரியில் இயங்கும் அனல் ஆலையைத் தடுத்து நிறுத்தினார். இத்திட்டத்தை அமல்படுத்த ஆதிவாசிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. ஸ்டேன் தன்னுடைய குழுவினரைத் திரட்டிப் போராடி இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தினார். நாட்டில் இதுபோன்ற போராட்டங்கள் அதிகம் தேவைப்பட்டதால் ‘மக்கள் வெளியேற்றப்படுவதை எதிர்க்கும் அமைப்பு’ ஒன்றை உருவாக்கினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வழி ஓரளவுக்கு மட்டுமே ஆதிவாசிகளைக் காப்பாற்ற முடியும் என்பதை ஸ்டான் சாமி புரிந்துகொண்டார். ‘’ஏட்டில் எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்துமே சிலந்திப் பூச்சிகளின் வலை மாதிரி இருக்கும். அவற்றில் ஏழை எளிய மக்கள் எளிதாக மாட்டிக்கொள்வார்கள். அவர்கள் தப்பித்து வெளிவர முடியாது. ஆனால் பணமும், செல்வாக்கும் உள்ள மக்கள் மிக எளிதாக இந்த வலைகளை உடைத்து வெளியே வர முடியும். ஆதிவாசிகளைப் பாதுகாக்கப் போடப்பட்ட சட்டங்களில் எல்லாம் ஓட்டைகள் இருந்தன. இதனால் சட்டங்கள் மீறப்பட்டு ஆதிவாசிகள் சிரமப்பட்டனர். 2018 ஜூலை மாதம் ஸ்டேன் சாமி மீது தேசத் துரோக வழக்கு ஜார்கண்டு அரசினால் பதியப்பட்டது. 2018 ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரால் பகைச்சா முற்றுகையிடப்பட்டது. போலீஸ் உள்ளே நுழைந்து ஸ்டேனின் கணினி. செல் போன், சில மென் தகடுகள் போன்றவற்றைக் கைப்பற்றிச் சென்றனர். ஸ்டேன் தனக்குத் தெரிந்த மும்பை வழக்கறிஞர் மிகிர் தேசாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ’’மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல் படை எனக்காக இங்கு வந்துள்ளார்கள். அவர்கள் பீமா கோரேகான் என்ற வழக்கைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டார்கள். பீமா கோரேகான் என்ன என்றே எனக்குத் தெரியாது. கொஞ்சம் விளக்கம் தர முடியுமா”? என்று கேட்டுள்ளார். ஸ்டேன் சாமிக்கு பீமா கோரேகான் நிகழ்வு குறித்து எதுவும் தெரியாது என்பதை வழக்கறிஞர் மிகிர் தேசாய் தெரிந்து கொண்டார். 

 2020ஆம் ஆண்டு மகராஷ்டிரா காவல்துறை மீண்டும் வந்து அவரை மும்பை நகருக்கு அழைத்துச் சென்றனர். தேசிய புலன் விசாரணை அமைப்பினால் அவர் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். சுதா பரத்வாஜ், ஸ்டேன் சாமி என்ற இருவரையும் மடக்கினால் மனித உரிமைப் போராட்டங்கள் எதுவும் நடக்காது. காட்டின் மீது உள்ள உரிமையை கார்ப்பரெட்டுகளுக்கு மடைமாற்றிவிடலாம் என்பது அரசின் எண்ணம். வணிக வளர்ச்சிக்கு எதிராகக் கிளைத்து எழும் இரண்டு முட்களான சுதாவையும், ஸ்டான் சாமியையும் சிறையில் அடைத்தாகிவிட்டது. அடுத்ததாக பாஜக அரசின் பார்வை மற்றொரு முள்ளுக்கு எதிராகத் திரும்பியது. அந்த முள் தலித்துகள். 

 கைர்லாஞ்சிக் கொலைகளும் மறைக்கப்பட்ட சாதி வெறியும் என்ற தலைப்பிலான பகுதியில் ஆனந்த் டெல்தும்ப்டே அரச பயங்கரவாதத்துக்கு உள்ளான நிகழ்வுகளை அல்பா ஷா விவரிக்கிறார். ஆனந்த் எழுதிய ‘நீடித்து நிலைத்து நிற்கும் சாதியம்’ (Persistence of Caste) மற்றும் ’இந்தியாவின் மறைக்கப்பட்ட சாதிவெறி’ (India’s Hidden Apartheid) ஆகிய இரண்டு நூல்களையும் அல்பா ஷா படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மகராஷ்டிரா மாநிலத்தில் கைர்லாஞ்சி கிராமத்தில் 40 வயதான ஒரு தலித் பெண் சுரேகா மற்றும் அவரின் மகள் பிரியங்கா அவரின் மகன்கள் சுதிர் மற்றும் ரோஷன் ஆகிய நால்வரும் அந்தக் கிராமத்தில் இருந்த உயர்சாதி மக்களால் வன்மத்துடன் கொல்லப்பட்டனர். எப்படியோ குடும்பத்தின் தலைவர் தப்பித்துவிட்டார். இரண்டு பெண்களையும் ஊரில் இருந்த உயர்சாதி ஆண்கள் பலரும் பாலியல் வன்முறை செய்தனர். அதனைத் தடுக்க முயன்ற இரு சகோதரர்களையும் கொடூராமகக் கொன்றனர். ஆனந்தின் ஆய்வுகளால் வெளிவந்த விஷயங்கள் நாம் சற்றும் எதிர்பாராதவைகளாக இருந்தன. இக்கொடூரம் நடந்த அந்தக் கிராமம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்த கவனிப்பாரற்ற கிராமம் அல்ல. வளர்ச்சி அடைந்த கிராமம்தான் அது. இந்தக் கிராமம் நாக்பூருக்கு அருகில் இருந்தமையால் இக்கிராமத்திலும் நகரத்தன்மை இருந்தது. கிராமத்தில் கல்வி கற்றோர் அதிகம் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் அம்பேகாரியக்கம் வளர்ந்து பரவிய கிராமம்தான். கொலை செய்யப்பட்ட ’போட்மாஞ்சே’ எனும் குடும்பத்தினர் ஒன்றுமில்லாத ஏழை எளிய குடும்பத்தினர் அல்ல. பொருளாதாரத்தில் ஓரளவு நல்ல நிலையில்தான் இருந்தார்கள். ஆனால் அதுவே ஒரு காரணமாக இருந்திருக்கிறது. ஆனந்த் இந்த நிகழ்வைப் பற்றிய தன் கருத்தை ஒரே ஒரு வரியில் கூறிவிடுகிறார். ‘’அந்த தலித்துகள் தங்களின் மாண்பை நிலைநிறுத்த முயன்றிருக்கிறார்கள். இதனால் மேல்சாதி மக்களின் பெருமையில் ஒரு பள்ளம் விழுந்துவிட்டது”. அவர்களின் உயர்ந்த நிலை கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. வழக்கமாக இருக்கும் சாதியப் படிநிலை தடுமாறியதை உயர்சாதியினரால் பொறுக்க முடியவில்லை. இடப்பங்கீட்டால் அரசுப் பணி பெற்ற தலித்துகளும்கூட இந்தக் கொடூர நிகழ்வினை மறைப்பதற்கும், ஒழிப்பதற்கும் உதவியாக இருந்தார்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியை ஆனந்த் ஆதங்கத்துடன் சொல்கிறார். ”இடப்பங்கீடு கொடுக்கப்பட்டது உண்மையிலேயே தலித்துகளை உயர்த்துவதற்குத்தானா? கைர்லாஞ்சியில் நடந்த அநியாயங்களுக்கு எதிராக மாநில அரசு தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதுடன் மற்றுமொரு கசப்பான உண்மை இந்த நிகழ்வோடு தொடர்புடைய அதிகாரிகள் பலரும் தலித்துகள்தான். இது ஏதோ மேல்சாதி இந்துக்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரம் என்று சொல்லி நாம் நகர்ந்துவிட முடியாது. அனைத்து தலித்து அதிகாரிகளும் இந்த வழக்கை ஏதோ ஒரு விதத்தில் முடக்கிப்போடவே நினைத்தனர்.” என்று ஆனந்த் தலித்துகளின் இன்றைய பரிதாபகரமான நிலைமை கனத்த மனதுடன் விளக்குகிறார். 

 டெல்தும்ப்டே தன்னுடைய மனைவியும், அம்பேகரின் பேத்தியுமான ரமாவுடன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் இருந்த அம்பேகரின் நினைவுச் சின்னங்களைப் பார்க்கச் சென்றிருந்தார். இந்நூலாசிரியர் அல்பா ஷா அவர்களுடன் அந்த வளாகத்தைச் சுற்றிவந்ததுடன் அவர்களைப் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்ததையும் பெருமையாகக் கருதுகிறார். ஆனந்த்-ரமா தம்பதிகள் தங்களின் 37ஆவது திருமண விழாவைக் கொண்டாடிய ஒரு சில நாட்களில் ஆனந்த் கைது செய்யப்பட்டார். ஆனந்த் கைதானது ஏப்ரல் 14ஆம் நாள்; அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள்! ஆனந்த் கைதாகும்போது ஜனநாயக உரிமைகள் காக்கும் குழுவிற்குத் (Council for Protection of Democratic Rights) தலைவராக இருந்தார். இந்தியாவில் சமமின்மைக்கு எதிரான இடதுசாரி மார்க்சிய கட்சிகளின் போராட்டங்களும், தலித்திய போராட்டங்களும் தனித்தனியாகப் போராடும் அவலநிலை குறித்து மனம் வருந்தினார். இவ்விரு பிரிவினரும் ஒன்றாக இணைந்து போராடாமல் இருப்பது ஒரு வரலாற்றுப் பிழை என்று கருதினார். இது குறித்து ‘தேவையற்ற இரு பிளவுகளைப் பிணைத்தல்’ (Bridging the Unholy Rift) என்ற நுலை எழுதினார். ஆனந்த் சிறையில் இருந்தபடியே நான்கு புத்தகங்களையும் எழுதினார்.

 பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்களுக்கு யாரெல்லாம் ஆதரவாக இருந்தனரோ அவர்கள் எல்லாம் அடுத்த சுற்றில் கைது செய்யப்பட்டனர். சுரேந்திர காட்லிங், பேரா.ஷோமா சென், சுதிர் தவாலே, ரோனா வில்சன், மகேஷ் ராத் ஆகிய அனைவரும் மாவோயிஸ்டுகள் என்ற சொல்லிக் கைது செய்யப்பட்டனர். அருண் பெரைராவும், வெர்னன் கொன்சால்வஸ் இருவரும் அரசியல் விமர்சகர்கள். ‘காணாத கதைகள்’ என்ற தலைப்பில் நாட்டில் நடக்கும் அரசியல், சமூக நிகழ்வுகளை ‘டெய்லி ஓ’ என்ற இணைய இதழில் எழுதினார்கள். பீமா கோரேகான் வழக்கு எவ்வாறு பொய்யானது; திட்டமிட்டே மனிதஉரிமைப் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டினர். சாகர் கார்கே மற்றும் ரமேஷ் கைசோர் இருவரும் கபீர் கலா மஞ்ச் என்ற அமைப்பின் உறுப்பினர்கள். இவ்விருவரையும் கைது செய்த என்.ஐ.ஏ. கேள்விக் கனைகளால் துளைத்து எடுத்தது. இருவரும் மிகவும் களைப்படைந்தாலும் தெளிவாகப் பதிலளித்தனர். என்.ஐ.ஏ. விரும்பிய தகவல்களைச் சொன்னால்,”எங்களை விடுதலை செய்துவிடுவோம்,” என்றார்கள். ‘’என்.ஐ.ஏ. நினைத்ததுபோல் நிச்சயமாக நாங்கள் நடக்க மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ’எல்கர் பரிஷத்’ மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு. அதை எதிர்த்து எங்களால் எப்படிப் பொய் சொல்ல முடியும்? அநேகமாக நாங்கள் இருவரும் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்படுவோம் என்பதறிந்தோம்’”. என்று ரமேஷ் சொன்னபடியே நடந்தது. இவர்களுடன் சேர்த்து கபீர் கலா மன்ச்சின் மற்றுமொரு உறுப்பினரான ஜோதி ஜக்தப்பும் கைதானார். பீ.கோ. வழக்கில் கைதான ஹனிபாபு டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்தார். பல்கலைக்கழகத்தில் படித்த ஏழை தலித் மாணவர்களுக்குப் பெரும் ஆதரவாக இருந்தார். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கத்தை தொடங்கினார். சமூகநீதிக்கான போராட்டங்களை முன்னின்று நடத்தினார். ஹனிபாபு மாணவர்களால் மிகவும் விரும்பப்பட்டவராக இருந்தார். அவர் சிறைக்குள் சென்ற பிறகு அவருடைய பிறந்தநாளில் 250 மாணவர்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பினார்கள். 

 சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம் நவ்லக்கா இந்நூலின் ஆசிரியர் அல்பா ஷாவிற்கு ஒரு கடிதம் எழுதினார். எப்படியோ கிடைத்த நீல மை நிரப்பிய ஒரு பேனாவில் பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் நோட்டு ஒன்றில் கிழிக்கப்பட்ட தாளில் கடிதத்தை எழுதியிருந்தார். ”சிறையில் எப்படியோ முப்பது மாதங்கள் ஓடிவிட்டன. எப்படியோ புத்தி பேதலிக்காமல் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்”. என்று எழுபது வயது நிரம்பிய கௌதம் எழுதியிருந்தார். இதனைப் படிப்பவர்கள் நெஞ்சம் பதறிடும். கௌதம் எப்போதும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுபவராகவே இருந்துள்ளார். ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். ‘எகானாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி’ இதழில் தொடர்ந்து கட்டுரைகளில் எழுதினார். இந்திய அரசு அதன் நிதிநிலை ஆண்டறிக்கையில் பாதுகாப்பிற்காக எவ்வளவு பணம் செலவு செய்கிறது என்பதை வெளிக்கொணர்ந்தார். மக்களுடைய பொதுநலன், கல்வி, வேலை வாய்ப்புகள் போன்றவற்றுக்கு அதிகம் செலவழிக்காமல் பாதுகாப்பிற்கே அதிகம் செலவழிப்பது அநியாயம் அல்லவா என்று எழுதினார். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது கண்டும் வருந்தினார். உலகிலிலேயே மிகவும் அதிகமான ராணுவப் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இருப்பதையும் தன்னுடைய கட்டுரைகளில் பதிவு செய்தார். ’எண்பதைத் தாண்டிய ஒரு கவிஞரும் ஒரு சந்நியாசியும் மரணத்தின் பிடியில்’ எனும் பகுதியில் கவிஞர் வரவர ராவ் சிறையில் அனுபவித்த கொடுமைகளை அல்பா ஷா சித்தரிக்கிறார். ‘’ஒரு பேச்சுக்குக்கூட அங்கு சுத்தம் இல்லை. பல்வேறு மக்கள் சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தனர். கொரோனா காலத்துச் சமூக விலகல் என்பதெல்லாம் அங்கில்லை. என் தந்தை இருந்த அறையில் 30 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தலைக்கு ஒரு வாளி தண்ணீர் ஒரு நாளைக்குக் கொடுக்கப்படும். அதைவைத்தே குடிக்க, குளிக்க, கழிப்பறைக்குச் செல்ல பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று வரவர ராவ்வின் மகள் பாவனா கூறுகிறார். பாவனா ஹைதராபாத் கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பெரும் கவிஞரும், புரட்சிகரமான பாடல்கள் எழுதியவருமான வரவர ராவ் சிறையில் எந்தவித கவனிப்பும் இல்லாமல் தன் நினைவாற்றலை இழந்து தனித்து விடப்பட்டுக் கிடந்தார். ஆனால் இந்தியக் குடிமக்கள் பலரின் மனச்சாட்சிகளை இந்தக் கொடூரம் தட்டி எழுப்பவில்லை என்பது என்னவொரு அவலம்.! ஸ்டேன் சாமிக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டது. மருத்துவப் பிணை, நன்னடத்தைப் பிணை எல்லாவற்றையும் என்.ஐ.ஏ. மறுத்தது. அவருடன் சிறையிலிருந்த அருண் எழுதிய கடிதம் இதோ!, ‘’பிணை மறுக்கப்பட்ட பின்னர் மாலை நேரங்களை ஸ்டேன் மௌனத்தில் கழித்தார். அவருடைய உடல்நலம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது. அவரது வழக்கமான வேடிக்கைப் பேச்சுகள் மறைந்து போய்விட்டன. ஏப்ரல் 26 அன்று ஏராளமான பிறந்தநாள் வாழ்த்துகள் வந்தன. அவை அவரின் வேதனையைக் குறைக்கவில்லை. நரம்புத் தளர்ச்சியால் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. கண் பார்வை மிகவும் மோசமானது. இறுதியில் ஸ்டேன் சாமி முன்வைத்த வேண்டுகோள் நெஞ்சை நெகிழச் செய்வதாகும். ”நான் ஒன்றை மட்டுமே நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்க்கிறேன். ஓர் இடைக்காலப் பிணை கிடைத்தால் போதும். என்னுடைய மரணம் பகைச்சாவில் நடந்தால் நல்லது,” என்றார். ஸ்டேனுக்கு தான் உருவாக்கிய பகைச்சாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருந்தது. ஸ்டேனின் ஆசைகள் ஏதும் நிறைவேறவில்லை. மிகவும் சிரமப்பட்டு வழக்கறிஞர் மிகிர் தேசாய் ’ஹோலி ஃபேமிலி மருத்துவமனை’க்கு ஸ்டேன் சாமியை எடுத்துச் செல்ல அனுமதி பெற்றார். இந்தக் காலந்தாழ்ந்த ஏற்பாட்டினால் எந்தப் பயனும் இல்லாமல் போனது. அவசர மருத்துவ பகுதிக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2021 ஜூலை ஐந்தாம் நாள் காலை அவர் மரணத்தைத் தழுவினார். ‘’இந்த மரணம் நீதித்துறை, சிறைத்துறை, என்.ஐ.ஏ. ஆகிய மூன்றின் தவறினாலும், புறக்கணிப்பினாலும் நடந்த மரணம். இது சாதாரண மரணம் அல்ல; காவல் மரணம்’’ என்றார் வழக்கறிஞர் மிகிர் தேசாய். 

 பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட பதினாறு பேருக்கும் நடந்த கொடுமைகளை அல்பா ஷா விரிவாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் எழுதியுள்ளார். இந்நூலை எழுதிட இந்தியாவுக்குப் பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். பீ.கோ. வழக்கில் கைதான பலருடனும் அல்பா ஷாவுக்கு ஏற்கனவே தொடர்பு இருந்தது. மிகுந்த பொறுப்புடன் நிகழ்வுகளை நேர்மையுடன் எழுதியுள்ளார். அதிகாரப் பூர்வ தரவுகளை மட்டும் பயன்படுத்தி நூலினை எழுதியுள்ளார். பாதிக்கப்பட்ட சிலரை நேரிடையாகச் சந்தித்தும் இருக்கிறார். அவர்களின் வழக்கறிஞர்கள் மிகிர் தேசாய், யுக் மோஹித் சௌத்ரி, நிகல்சிங் ரதோட் ஆகியோருடன் வழக்கு குறித்த தகவல்களைத் திரட்டிக் கொண்டுள்ளார். வழக்கைத் தொடுத்த பூனே காவல்துறை அதிகாரிகள் மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தின் காவல்துறை அதிகாரிகளான சிவாஜி போத்கே, சிவாஜி பவார், பரம்பீர் சிங் போன்றோருடனும் விவாதித்துள்ளார். இந்த அதிகாரிகள் பொய்யான குற்றங்களைச் சுமர்த்தி இந்தியாவின் மிகப் பெரிய சமூக ஆர்வலர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் எந்தவித குற்றவுணர்வும் இல்லாதிருந்தது குறித்த தன்னுடைய வியப்பினையும் பதிவு செய்துள்ளார். இந்த வரலாற்று ஆவணம் மோடி தலைமையிலான பாஜக அரசு தன்னுடைய ஆர்எஸ்எஸ் எஜமானர்கள் இடும் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி வருவதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை அமைத்திட அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றின் முதல் இருபத்தைந்தாண்டுகளின் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாக ‘சிறைவாசம்’ நூல் இருந்திடும் என்பதில் ஐயமில்லை. 

இந்தியாவின் எதிர்காலம் குறித்த அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும். அனைத்து நுலகங்களிலும் இருந்திட வேண்டிய பொக்கிஷமாகும். எண்ணூறு பக்கங்கங்களுக்கு மேல் விரிந்து செல்லும் இந்நூலினை அழகு தமிழில் ’சிறைவாசம்’ எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளார் தருமி என்றழைக்கப்படும் பேரா.சாம் ஜார்ஜ். பேரா.சாம் ஜார்ஜ், மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் துறையில் பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பின்னர் எழுத்துப் பணிக்குத் தன்னை ஒப்படைத்துள்ளார். ‘கடவுள் என்னும் மாயை,’ ’மதங்களும் சில விவாதங்களும் ஆகிய நூல்களை எழுதியுள்ள தருமி சிறந்த மொழிபெயர்ப்புக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். ’பேரரசன் அசோகன்’, ’திரு & திருமதி ஜின்னா,’ ’போர்க் களத்தில் முகிழ்த்த கனவுகள்,’ ‘பாலஸ்தீனம்- இஸ்ரேல் போராட்டம்- ஓர் அறிமுகம்’ ஆகிய இவரின் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளதுபோல் இந்நூலையும் ’எதிர் வெளியீடு’ பிழைகள் ஏதுமின்றி அழகுடன் கொண்டுவந்துள்ளது. பேரா.சாம் ஜார்ஜ் இதுபோன்ற பயனுள்ள ஆங்கில நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்து தமிழ்கூறும் நல்லுகிற்கு உதவிடுவார் என்று நம்புவோம். 


 ----------------------------- 


 கட்டுரையாளர் பற்றிய அறிமுகம்: பெ.விஜயகுமார். மதுரை- 18. செல்: 95007 40687 இமெயில்: vijayakumarmuta@gmail.com

Wednesday, November 26, 2025

1362. பறந்து போ.

Wednesday, November 19, 2025

1361. சக்தி(த்) திருமகன்

சக்தி(த்) திருமகன்






அருவி படம் எடுத்த இயக்குநர் அருண்பிரபு உருவாக்கிய படம். குழப்பமான திரை விமர்சனங்கள் பார்த்தேன். நல்லதும் கெட்டதும் கலந்த விமர்சனக் கலவைகள். சரி .. பார்த்து விடலாமேவென உட்கார்ந்தேன். ஒரு அரசியல் புரோக்கர்தான் கதாநாயகன். எனக்கு ஒரே குழப்பம். தொலைபேசிகள் வழியே கொலை நடக்கிறது; நிலங்கள் கைமாறுகின்றன; பெரும் பணம் வருகின்றன; போகின்றன. காவல்துறை தலைகாட்டுகிறது, அரசியல் அதிகாரங்கள் தூள் பறக்கின்றன. என்ன, ஏன், எப்படி என்று எதுவும் புரிபடவில்லை. வரும் நடிகர்கள் பலரும் பல அரசியல்வாதிகளை தோற்றம், உடை, பாவனை மூலம் அடையாளம் காட்டுகிறார்கள். நிதியமைச்சர் வருகிறார். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் குரு; ஒருவர் இருக்கிறார். ஒரு உச்சநீதி மன்ற நீதியரசர் வருகிறார். அவர் பெயர் இந்திர சூட் (Does it ring a bell?!). முக்கியமான குருவின் பெயர் அபியங்கர் சாமி / அபியங்கர் சீனிவாசன். காதல் ஓவியம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த கண்ணன் இந்தப் படத்தில் மிக நன்றாக – தெறிக்கும் அழகு ஆங்கிலம் பேசி – நன்கு நடித்துள்ளார். படத்தில் ஒரு காதலும் கல்யாணமும் வருகிறது. (இது தேவேயேயில்லாத ஆறாவது விரல்.) கதாநாயகன் என்றால் காதலித்து, கல்யாணம் கட்ட வேண்டியது நமது தமிழ் சினிமா இலக்கணத்தில் வலிந்து கூறப்பட்ட சட்டமல்லவா?

படம் போதுமென எழுந்திருக்கலாமாவென நினைக்கும் போது கதாநாயகனின் இளம்பருவத்துக் காட்சிகள். அனாதைப் பையனை ஒரு பெரியார்  தாத்தா எடுத்து வளர்க்கிறார் – வாகை சந்திரசேகரன் அந்தத் தாத்தாவாக வருகிறார். புதிய காற்று வீச ஆரம்பிக்கிறது. எங்கும் எதிலும் பெரியாரின் வாசம்; அவர் வீசிய வார்த்தைகள். அவரது வீரியம் .. ஒவ்வொன்றாக விரிகின்றன. எனக்குத் தெரிந்து பெரியாரை இந்த அளவிற்கு உயர்த்தி எடுத்த ஒரு தமிழ்ப்படம் இது தான்.

என்னைப் பொறுத்தவரை பெரியாரென்றாலே இறைமறுப்பாளர் என்ற தோற்றம் வருவதே தவறு என்பேன். 3% சாதியினர் 97% சாதியினரை முழுமையாக ஆண்டு கொண்டிருந்ததைப் பார்த்த பெரியாருக்கு அந்த பாவப்பட்டமக்கள் இந்த உண்மையக்கூட தெரிந்து கொள்ளாமல் சூத்திரர்என்ற பெயரில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களே என்று கோபம் கொண்டான் அந்தக் கிழவன். ஏனிந்த நிலை? 3% அதைத்தான் இந்தப்பிரிவினையைச் சொல்கிறார்கள்; அதற்கு வேதத்தைத் துணைக்கழைக்கிறார்கள். வேதம் மக்களை நான்கு வர்ணமாகப் பிரித்துள்ளது. அனைத்து சாதியினரும் படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன்ர் என்று வேத நூல்களைச் சாட்சிக்கு அழைத்தார்கள். அறிவுள்ளவனுக்கு இது தெரியும் அத்தனையும் தவறென்று. ஆனால் மக்கள் இறையச்சத்தில் கட்டுண்டு கிடந்தார்கள். கிழவன் சாதி பொய்யென்றான்; அதைக் கற்பிக்கும் வேதம் பொய்யென்றான்; அதனைக் கற்பித்த கடவுள் பொய்யென்றான். இறையொன்று இல்லை; எல்லாமே மனிதக் கற்பிதம் என்றான். தூக்கிப் பிடிக்கும் பிராமணர்கள் உயர்சாதி என்பதை முற்றாக மறுத்தான்.

இந்த 3% vs 97% சமூக நிலைகளைப் பார்த்து சினங்கொண்டானே அதனை அப்படியே இந்தப் படத்தில் வெளிப்படையாகச் சித்தரித்திருக்கிறார்கள். நல்ல தைரியம். இதுவரை யாருக்கும் அதிகம் வெளிக்காட்டத இந்தக் கோபத்தை இப்படத்தில் முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

பெரியார் தாத்தா பல்வேறு முத்துகளை வளரும் பையனிடம் உதிர்க்கிறார்:

சிந்திக்கிறவன் மனுசன்;சிந்திக்கப் பயப்படுபவன் கோழை.

கஷ்டப்பட்டு உழைச்சா அது கர்மம்’; உட்காந்து சாப்பிட்டா தர்மம்’.

நாட்டைக் காப்பாத்த அழிக்க வேண்டியது சிங்கத்தையல்ல; நரியை.

மனுசங்க எல்லாம் ஒண்ணுதான்; கீழ மேலன்னு ஒண்ணும் கிடையாது;

வசதிக்கேற்ப நான் மேல, நீ கீழன்னுகிடையாது. ஆனா பாழாப்போன ஜனங்களும் அதை நம்புது.

ஆயிரம் பேர் பசியோடிருந்தால் பனக்காரன் வயிறு பெருத்துப் போகும்.

இப்படி பல வெடிக்கும் வசனங்கள். அவை நிறைவைத் தருகின்றன.

படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்காதீர்கள். எந்தத் தமிழ்ப் படத்தில் லாஜிக் ஒழுங்காக இருந்துள்ளது? இங்கேயும் அது போல்தான். ஆறாயிரம் கோடிக்கு மேல் ஹீரோ கொள்ளையடிக்கிறார், கேஸ் எல்லாம் போட்டாயிற்று. ஆனால் ஜாமீனில் அழகாக அடுத்தடுத்து வெளியேயிருந்து என்னென்னவோ செய்கிறார்.)செந்தில் பாலாஜி பார்த்தால் ரொம்பவே தன் நிலை பார்த்து கொந்தளித்து விடுவார்!) ஹீரோவைப் பிடிக்கவே பிடிக்க முடியாது.

3% மீது அத்தனைக் காட்டமாக இருக்கும் இயக்குநர் கதாநாயகியாக ஒரு திராவிடப் பெண்ணைப் போட்டிருக்கலாம். அங்கேயும் 3% தான் dominate பண்ணுது! அட போங்கய்யா ...!

ஹீரொ விஜய் அண்டோனி அவர்களே இதன் தயாரிப்பாளர். அவருக்கு நன்றியும் பாராட்டும்.

 

 

 

Monday, October 13, 2025

1360. என் கதை – 4 A TOUCH OF PHILOSOPHY




*



இரண்டு வயதில் அம்மாவை இழந்து, ஐந்து வயது வரை கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து, அந்த வயதில் அப்பா மறுமணம் செய்ததும் நாங்கள் மூவருமாக அப்பா வேலை செய்து கொண்டிருந்த மதுரைக்கு வந்து புது வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஐந்தாம் வகுப்பு சென்றதிலிருந்து ஒரு புதிய பொறுப்பு வீட்டில் எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்பாவும், அம்மாவும் காலையில் 5 மணிக்கெல்லாம் அருகில் இருக்கும் புனித மரியன்னை கோவிலுக்கு பூசை பார்க்கப் போவார்கள். அப்போதே என்னையும் எழுப்பி விட்டாலும் நான் தூக்கத்திலே தான் இருப்பேன். அப்பா கோவிலிலிருந்து home tuition போய் விடுவார்கள். அம்மா வந்து மீண்டும் எழுப்ப, நான் ஆறுமணி பூசைக்குப் புறப்பட்டுப் போவேன். ஐந்தாம் வகுப்பு வந்த பின் கொடுக்கப்பட்ட புதிய பொறுப்பின்படி நான் கோவிலுக்கு ஒரு தூக்குப் பாத்திரத்துடன் போவேன், பூசை முடிந்ததும் அங்குள்ள குருமார்கள் விடுதியில் உள்ள மாட்டுப் பண்ணையிலிருந்து வீட்டுக்குப் பால் வாங்கிக் கொண்டு போகவேண்டும்.

வீட்டிலிருந்து கோவிலுக்குப் போகும் தூரம் ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்கள் இருந்தது தெற்கு மாரட்டு வீதி. இந்த வீதிக்கு இணையாக வெளிப்பக்கம் அல்லது தெற்குப் பக்கம் தெற்கு வெளிவீதி இருக்கும். அது பெரிய வீதி. பஸ் போக்குவரத்து எல்லாமே அந்த வீதியில் தான். வீட்டிலிருந்து அரை கி, மீட்டர் தூரத்திலிருந்த தவுட்டுச் சந்தையைத் தாண்டியதும் இந்த இரண்டு வீதிகளும் இணைந்து ஒன்றாகி விடும். முதல் அரை கி,மீ. தூரத்தில் நான் காலையில் போகும்போது அநேகமாக ஆட்களே இருக்க மாட்டார்கள். விரைவாகப் போவதற்காக ஒரு புது டெக்னிக் கண்டுபிடித்து வைத்திருந்தேன். ஏதாவது ஒரு சிறு கல்லை காலால் எத்திக் கொண்டே போனால் போகும் தூரமே தெரியாது. இந்த வீதி வெளி வீதியோடு ஒன்றானதும் ஒழுங்காக பிளாட்பாரத்தில் ஏறிப் போகணும். இந்தப் பழக்கம் வெகு நாள் நீடித்தது.

இளங்காலையில் தனியாக நடந்து போகும்போது மனசுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடும். அதில் முக்கியமான எண்ணம் என் அம்மாவைச் சுற்றி வரும். இறப்பு என்பது பற்றி எல்லாம் தெரிந்திருந்தது. அப்படியானால் இனிமேல் அம்மாவைப் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கம் அந்த வயதில் மிக அதிகமாக இருந்தது. அம்மா உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை நான்  அம்மாவைப் பற்றி அதிகமாக நினைத்திருக்க மாட்டேன். அந்த ஏக்கம் ஏதும் இருந்திருக்காது. ஆனால் இழந்ததால் எனக்கு அம்மா நினைப்பு மிகப் பல வருடங்கள் மனதில் அடிக்கடி தோன்றும்.

காலையில் தனியாக நடக்கும் அந்த வயதில் அம்மாவைப் பற்றிய நினைவும் ஏக்கமும் மிக அதிகமாக இருந்தன. வீட்டில் எல்லோருடன் இருக்கும்போது இல்லாத நினைவுகள் இந்தத் தனிமையில் நிறையவே வந்து என்னைச் சூழ்ந்து கொள்ளும். அந்த வயதில் -பத்திலிருந்து அநேகமாக பதினைந்து வயது வரை அப்போதெல்லாம் மனதில் ஒன்று வழக்கமாகத் தோன்றும். நான் செல்லும் வழியில் சரியாகப் பாதி வழியில் ஒரு தெரு முக்கில் பத்திரகாளியம்மன் கோவில் ஒன்று உண்டு.  அந்தக் கோவில் வாசலுக்கு முன்னால் இரண்டு தூண்களில் டோம் லைட் என்று சொல்வோமே அது போன்ற இரு வெள்ளை மின்சார விளக்குகள் இருக்கும். அந்த்த் தூண்களில் உட்கார்ந்து கொள்ள இடமிருக்கும். நடந்து போகும்போது சில சமயங்களில் அந்தத் திண்டின் மீது உட்கார்வேன். என்னவோ ஒரு ஞாபகம். அந்த விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்த போது முதல்  தடவையாக ஒரு புதிய எண்ணம் வந்தது போல் நினைக்கின்றேன்..

இப்போது நான் உயிரோடு இருக்கிறேன்; அம்மா என்னை விட்டுவிட்டு இறந்து விட்டார்கள். ஆனால் இதெல்லாம் உண்மையல்ல. நான் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள்  நான் விழித்தெழுவேன். அப்போது அம்மா அங்கே இருப்பார்கள். என்னை அணைத்துக் கொள்வார்கள். இப்படி ஓர் எண்ணம் ஓடும். ஏனோ இதில் எனக்கொரு தனி சுகம். மீண்டும் .. விழித்தெழுந்ததும் .. அம்மாவைப் பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கை மனதிலிருக்கும்..

இந்த நினைவு எத்தனை ஆண்டுகள் என்னைச் சமாதானப்படுத்தியது என்பது நினைவில்லை. வயதாக வயதாக இந்த நினைவுகள் மங்க ஆரம்பித்தன. பத்துப் பன்னிரெண்டு வயதில் தோன்றிய இந்த நினைவுகளை நான் அடியோடு மறந்து விடவில்லை. ஆனால் நாற்பது வயதில் இன்னொன்று நடந்தது. இப்போது தாவோயிஸம் (Daoism) என்ற சைனா கலாச்சாரத்தில் உள்ள சுவாங் த்சு (Chuang Tzu) என்பவரும், லாவோ த்சு (Laou Tzu) என்பவரும்  இணைந்து எழுதிய “சுவாங்சீ” என்ற நூலில் சொல்லப்பட்ட ஒரு கருத்தோடு எனக்குச் சிறு வயதில் வரும் நினைவும் ஒன்றாக  இருப்பதாக எனக்குத் தோன்றியது. இந்த இருவரில் சுவாங் த்சு என்பவர் ஒரு நாள் தூக்கத்தில் ஒரு கனவைக் காண்கிறார். கனவில் ஒரு வண்ணத்துப் பூச்சி அங்குமிங்கும் பறந்து திரிகிறது. தடையேதுமில்லாமல் பறக்கிறது. சுவாங் த்சு விழிக்கின்றார். இப்போது சுவாங்சீ அங்கே இருக்கிறார். வண்ணத்துப் பூச்சி அங்கே இப்போதில்லை.

சுவாங் த்சு மனதில் ஒரு ஐயம் எழுகிறது. அவர் தூங்கும் போது வண்ணத்துப் பூச்சி பறந்து திரிந்தது. விழித்ததும் அங்கே மனிதனாக சுவாங் த்சு மட்டும் இருக்கிறார். அவருக்கு வந்த  ஐயம் - மனிதனாக இருந்து ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கனவில் கண்டேனா?; அல்லது ஒரு வண்ணத்துப் பூச்சியின் கனவில் நான் ஒரு மனிதனாக இருக்கின்றேனா? இந்த எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் பல்வேறு கருத்துகளுக்கு தத்துவ விளக்கங்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதன் முதல் இதை நான் வாசித்த போது, எனக்குச் சிறு வயதில் தோன்றிய நினைவுகள் மீண்டும் வந்தன. ஒரு ஆச்சரியம். பெரும் தத்துவ அறிஞர்கள் சொன்ன ஒரு விஷயத்தின் ஒரு பகுதியை நான் என்னையறியாமலேயே மிகச் சிறு வயதிலேயே ஏறத்தாழ அதே போல் நினைத்திருக்கின்றேனே என்று ஆச்சரியப்பட்டேன். இந்த ஆச்சரியம் வயது முதிர்ந்த பிறகும் மேலும் அதிகமாகத் தொடர்ந்தது என்பது இன்னொரு ஆச்சரியம்.

பத்து வயதில் தெரிந்ததும்,  நாற்பது வயதில் தெரிந்ததும் ஒன்றாக இருந்தது எப்படி?  இது போன்ற ஒரு தத்துவத் தொடர்பு கிடைத்தது என்று நாற்பதுகளில் ஆச்சரியப் பட்டேன். ஆனால் எழுபதுகளில் கேள்விப்பட்ட இன்னொரு தத்துவமும் இதனோடு தொடார்பு கொண்டிருப்பதைப் பார்த்து மேலும் எனக்கொரு பெரும் ஆச்சரியம்.

நெடுநாட்களுக்கு மாலையில் நடக்கும் போதெல்லாம் ராஜாவே என் கூட வந்து கொண்டிருந்தார். பின் சில ஆண்டுகள் கழித்து பவா செல்லதுரை நெருங்கி கூடவே வந்தார். அது சில மாதங்கள். அடுத்து மதுரைக் கல்லூரி முதல்வர் பேரா. முரளி உடன் வர ஆரம்பித்தார். ஒரு மணி நேரத்திற்குத் தொடர்ந்து பேச எத்தனை மணி நேரம் தயாரிப்பில் இருப்பாரென்று நினைத்துப் பிரமித்திருக்கிறேன். அவரது  “பேச்சொளி” (புதியதொரு சொல்லை உருவாக்கியுள்ளேன். ) ஒன்றில்  ஆல்பெர் காம்யூ (Albert Camus) என்பவரைப் பற்றியும் அவரது தத்துவமான  அபத்தம்’ (absurdity) பற்றியும் பேசினார்> இதுவரை  அதை மூன்று முறையாவது கேட்டிருப்பேன்.

நம்ம பெரியார் சொன்னதை வேறு தத்துவ மொழியில் நீட்டி முழக்கிச் சொன்னது போலிருந்தது.  ஒரே வார்த்தையில் பெரியார் சொன்னார்: “வெங்காயம்”. அதை உறித்துப் பார்த்தால் என்ன மிச்சமாகும்? ஏதுமில்லை! நம் வாழ்வும் அப்படித்தான். உறித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. ஏன் ஓடுகிறோம்?; ஏன் உழைக்கிறோம்?; ஒரு வழியில் சிந்தித்தால் இல்லாத ஒன்றைத் தேடி ஓடுகிறோமோ? வாழும் வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? என்னதான் கிடைக்கிறது இறுதியில். முரளி காம்யூ எழுதிய ‘Stranger’ என்ற மிகவும் அதிகாமக மொழிபெயர்க்கப்பட்ட  நூலைப் பற்றி சொல்லியிருந்தார். அந்நியன்என்று தமிழில்  வந்திருக்கும் நூலையும் வாசித்து விட்டேன். விசித்திரமான நடை. எனக்கென்னவோ தஸ்தயேவ்ஸ்கி எழுதிய – நானும் மொழிபெயர்த்துள்ள – ‘Notes from Underground’ (“நிலவறையில் இருந்த சில குறிப்புகள்”) நடை போலவே இதிலும் இருந்தது. இரண்டுமே நினைவோட்டத்தைப் பதிவு செய்யும் நடையில் உள்ளன. ஒரு வெறுமை அந்த நடையில் இருந்தன. மனம் தளர்ந்த நிலை. பொருளில்லா வாழ்க்கை அங்கே இடம் பிடித்தது. தஸ்தயேவ்ஸ்கி நூலின் பின்புலத்தில் இருளும், கடும் பனியும் இருந்தன; காம்யூவின் நூலில் கூச வைக்கும் சூரிய ஒளியும், வெம்மையான வெயிலும் இருந்தன.

என் சிந்தனை ஓட்டத்தை மீண்டும் ரீவைண்ட் செய்தேன். பத்து வயதில் இப்போது வாழும் வாழ்க்கை ஒரு தூக்கமென்று நினைத்தேன்; விழித்தால் அம்மா வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கைக் கோடு தெரிந்தது போலிருந்தது. இது அன்றைய அறியாத வயதில் வந்த நினைப்பும், நம்பிக்கையும். 40 வயதில் அதே போல் இரு வேறு நினைவுகள் அந்த தத்துவ அறிஞருக்கு. அதில் எது உண்மை; எது கற்பனை என்ற கேள்வியைத் தனக்குத் தானே எழுப்புகிறார். 70 வயதில் காம்யூ வருகிறார். அவர் வாழ்க்கையே ஓர் அபத்தம் என்கிறார். ஏதோ ஒரு பூஜ்யத்திற்கு உள்ளே உள்ள ஒரு ராஜ்யத்திற்குள் சுற்றி வருவது போல் தெரிகிறதே.

எது உண்மை; எது பொய்மை?

உண்மையில் வாழ்க்கை என்பதுதான் என்ன?

விளக்கங்கள் குழப்புகின்றன.

வயதாகி விட்டதால் வரும் குழப்பங்கள் என்று தூக்கியெறிய முடியாது. காம்யூவும், தாவோயிச தத்துவ அறிஞரும் வயதான காலத்தில் இவ்வாறு சிந்திக்கவில்லையே!

 










Saturday, October 11, 2025

1359. ஆச்சரியமூட்டிய ஓர் இளைஞர்








 

Youtube - இதனைத் தோண்டினால் தேனூறும் என்பது தெரிந்ததே. ஆனால் இன்று எனக்கொரு ஆச்சரியம். இங்கே மூன்று நான்கு பேரைப் பற்றிப் பேச வேண்டுமென்ற ஆவல்.

முதல் ஆள்; மதுரைக்கார இளைஞர் மதன் கெளரி. இவரின் மீதான ஆச்சரியத்திற்குக் காரணம் அவரது 80 லட்சத்திற்கும் அதிகமான subscribers. Great achievement. நல்ல உழைப்பு.

அடுத்தது பேராசிரியர் முரளி. தத்துவப் பேராசிரியர். அறிவியல் பாடம் நடத்தும் என் போன்ற ஆசாமிகளுக்கு வகுப்பில் point by point ஆகப் பேசும் பழக்கம் இருக்கும். ஆனால் humanities ஆசிரியர்கள் அது போன்றில்லாமல் ஒட்டு மொத்தமாக ஒரு கருத்தைப் பற்றித் தொடர்ந்து பேசுவது கொஞ்சம் ஆச்சரியமான ஒன்று தான். அழகாக இதைச் செய்கிறார். அனுபவம் பேசுகிறது.

மூன்றாவதும் ஓர் இளைஞர் தான். Mr. GK என்ற பெயரில் எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார். Quantum physics பற்றியெல்லாம் எளிதாகப் பேசிச் செல்கிறார். இது போன்ற பல அறிவியல் கருத்துகளை எளிதாகப் பேசிச் செல்கிறார். அதோடு உருட்டுகள் பலவிதம்என்ற தலைப்பில் பல மூட நம்பிக்கைகளைச் சாடுகிறார். Bundle of information. இத்தனையையும் எப்படி காலமெடுத்துத் தயாரிக்கிறார் என்பது அடுத்த ஆச்சரியம். பாராட்டப் பட வேண்டிய இளைஞர்.

இன்று புதிதாக ஒருவரைப் பார்த்தேன். (கற்க கசடற) karka kasadara என்ற தலைப்பில் அவரைத் தேடியடையலாம். எல்லோரிலும் வயது குறைந்த இளைஞர். Sapiens புத்தகத்தின் சுருக்கம் என்று பேசினார். 57 நிமிடம் 40 வினாடிகள்  ஏறத்தாழ ஒரு மணி நேரம். மூச்சு விடாமல் பேசினார். கையில் எந்தக் குறிப்பும் கிடையாது. (அப்படிப் பழக்கப்பட்ட எனக்கு பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. எப்படிதான் முடியும்?) எந்தத் தடங்கலோ எதுவும் இல்லாமல் தொடர்ந்து அந்நூலின் உள்ளடக்கத்தைத் தந்தார். நானும் இந்த நூலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாசித்திருக்கிறேன். உடனே அந்த நூலைப் பற்றி அன்று என்னிடம் கேட்டிருந்தால் பத்துப் பதினைந்து நிமிடத்தில் நினைவில் இருப்பதைச் சொல்லியிருப்பேன். ஆனால் இவரோ பிரவாகமெடுத்த வெள்ளமாகக் கொட்டித் தீர்த்தார். சொல்லும் முறையும் அத்தனை இனிமை. நடுவில் நிறுத்த வேண்டியதிருந்தும் என்னால் நிறுத்த முடியவில்லை. அந்தக் காணொளியும் விட்டு விட்டு துண்டு துண்டாக எடுத்தது போல் தெரியவில்லை – just one sequence. இத்தனைக் கருத்துகளைக் கோவையாகப் பேச வேண்டுமென்றால் ... அம்மாடி, என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. (37 ஆண்டுகள் பேராசிரியர் பணி என்று சொல்லிக் கொள்ளலாம்! அதிலும் வேகமாகப் பேசி விடுகிறேன் என்று முதுகலை வகுப்புகளில் குறை சொல்லப்பட்டதுமுண்டு.)

சேரன் செங்குட்டுவன் நாடக வசனத்தை சிவாஜி கணேசன் மேக்கப் போடும் போது, ஒரே ஒரு முறை செவியால் கேட்டு, அப்படியே ஒரே டேக்கில் பேசினார் என்று சொல்வார்கள். நானும் அந்த நாடகத்தைப் பார்த்திருக்கிறேன். நடுவில் cut ஏதும் இருக்காது. இந்த இளைஞரும் அவ்வாறு அற்புதமாகப் பேசினார். Teleprompter ஏதும் இருந்திருக்காது!

பல தலைப்புகளில் நிறைய பேசியிருப்பார் போலும். நான் வாசித்திருக்கும் The psychology of money’ பற்றியும் பேசியிருக்கிறார். கேட்கணும். இன்று மாலை walk time-ல் அவரது தாவோயிசம் கேட்கப் போகிறேன்.



1358. ஏனிந்த நூலை வாசிக்க வேண்டும்?

 

நீங்கள் கட்டாயம் இந்த நூலை வாசிக்க வேண்டுமென்பதற்கு நான் தரும் சில காரணங்கள்:






-    ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கை வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டன
ர். அவர்களனைவரும் அதுவரை ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும், சிறைவாசிகளின் நலனுக்காகவும், பல்கலைக் கழகங்களில் முறையான இடப்பங்கீடு வேண்டுமென்பதற்காகவும், மனித உரிமைகளுக்காவும் விடாது, தொடர்ந்து தங்கள் சொந்த நலனையும் துறந்து போராட்ட வீரர்களாக இருந்தவர்கள். இவ்வாறு மக்கள் நலனுக்காகப் போராடும் பெரு மக்களை அரசு ஏன் காரணமின்றி கைது செய்து நீண்ட நாள் சிறையிலடைத்துள்ளது என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக நம்முன் நிற்கிறது-

-    கைது செய்யப்பட்டவர்களையும், அது போன்ற வேறு சில போராட்டக்காரர்களையும் நம்மை ஆளும் அரசு “urban Naxalitesஎன்று பட்டம் சூட்டி, அதில் சிலரைக் கொலையும் செய்து, பலரைச் சிறையிலடைத்து பெரும் தண்டனை வழங்கியுள்ளது நம் அரசு. Lankesh (2017),  Narendra Dabholkar (2013), Govind Pansare (2015), Malleshappa Kalburgi (2015) போன்றவர்கள் இடதுசாரிகளாக இருந்ததால்,  அல்லது வலதுசாரிகளையும், இந்துத்துவாவினரையும் அவர்கள் எதிர்த்தமைக்காகவே கொல்லப்பட்ட தியாகிகள் அவர்கள். கைது செய்யப்பட்ட 16 பேரும் இதே காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டனர்.

-    நக்சலைட்டுகளில் பலரும் ஆதிவாசிமக்களின் உரிமைகளுக்காகப் போராடுப்வர்களாகவே உள்ளனர். இந்திய  நாட்டுச் சட்டத்தின்படி ஆதிவாசி மக்கள் அவர்கள் வாழும் இடத்தின் மீது முழு உரிமை கொண்டவர்கள். ஆனால் அரசு தனியார் வசம் இந்த நிலங்களைக் கொடுத்து, அனைத்து இயற்கை கனிம வளங்களைக் கொள்ளையடிக்க உறுதுணையாக உள்ளது. இதை எதிர்த்து ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் காவல் படையின் துப்பாக்கிகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

-    ஸ்டேன் சாமி என்ற கிறித்துவப் பாதிரியார் தனது 83வது வயதில் 2020 ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் முன்பே தனது குரு மடத்திலிருந்து விலகி, ஆதிவாசி மக்களின் குடிலில் தங்கி அந்த மக்களுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இவரே ஆதிவாசி மக்களுக்குத்தான் அவர்கள் வாழும் பகுதியின் உரிமை உள்ளது என்ற சட்டத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து, அந்த மக்களுக்கு ஒரு புதிய பாதையைக் காண்பித்தார். இவர் நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு, கை நடுக்கம் கண்டதால் straw tumbler ஒரு கட்டாயத் தேவையாக இருந்தும், அப்படி ஒரு தம்ளரைக் கொடுக்க காவல் துறைக்கு மனமில்லாமல் போனது. 50 நாட்கள் தொடர்ந்து போராடி ஒரு தம்ளரை அவருக்குப் போராட்டக்காரர்கள் பெற்றுக் கொடுத்தார்கள். காவல்துறையினரும், மற்றவர்களும் இந்த அளவு கடினமான மனதோடு எப்படியிருக்க முடியும் என்பது எனக்கு இன்னமும் பெரும் ஆச்சரியமாக உள்ளது.

-    6,7ம் இயல்களில் எவ்வாறு கைது செய்யப்பட்ட பலரின் கணினிகள் காவல்துறையின் கைப்பிடிக்குள் ரகசியாகக் கொண்டு வரப்பட்டு, பல்வேறு போலிக் கடிதங்களை அதற்குள் கள்ளத்தனமாக உள்ளேற்றி, அவைகளைச் சான்றுகளாக வைத்து அதை வைத்து அவர்களைக் கைது செய்தார்கள் என்ற செய்தி நாம் ஒரு குடியரசு நாட்டில் தான் வாழ்கிறோமா இல்லையா என்ற கேள்வியை வாசிப்பவர்களின் மனதில் எழுப்புகிறது. இதழியலாளர்கள் பலர் இந்த மர்மத்தை எப்படிப் போட்டுடைத்தார்கள் என்பதை இந்த இரு இயல்களிலும் வாசிக்கும்போது மனம் பதை பதைக்கின்றது.

-    கைது செய்யப்பட்ட 16 பேரில் நால்வர் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்; மற்றப் போராளிகளில் கவிஞர், கலைஞர்கள், வனவளப் பாதுகாவலர்கள், சிறைவாசிகளின் நலன் பேணும் ஆர்வலர்கள், இதழியலாளர்கள், வழக்கறிஞர்கள் என்றிருந்தனர். (அவர்களும் பேராசிரியர்கள் .. நானும் ஒரு பேராசிரியன் என்று சொல்லவே தயக்கமாக உள்ளது. அத்தனை உயரத்தில் அவர்களுக்கு என் மனதில் இடம் கொடுத்தேன்.)

-    ஒரு பெண்மணி. இங்கிலாந்தில் தன் இளைய வாழ்வை ஆரம்பித்த இவர், இந்தியா வந்த பின் தன் அமெரிக்கக் கடவுச் சீட்டை வேண்டாமென்று திரும்பக் கொடுத்து விட்டு, இங்கு தொழிலாளர் நலனுக்காக அவர்களோடேயே ஒற்றை அறை உள்ள வீட்டில் உடன் தங்கியிருந்து வாழ்ந்தார் என்பதைப் படிக்கும் போது நாம் நமது கண்ணீரோடு போராட வேண்டியதிருக்கும்.

-    இதைவிட சற்றே குறைந்த பக்கங்கள் கொண்ட வேறொரு நூலை மொழிபெயர்க்க ஒரு முழு ஆண்டை எடுத்தேன். ஆனால் இந்த நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்த பின், யாரோ ஒருவர் பின்னாலிருந்து ஓரழுத்தம் கொடுத்தது போலுணர்ந்து, விரைந்து முடித்தேன். நான்கு மாதங்ளில் முடித்த போது நானே வியந்து நின்றேன். உள்ளூற ஒரு வெறி வந்து என்னை உந்தித் தள்ளியது.

-    நீங்களும் வாசித்து விடுங்கள் ....


 

-

 


Thursday, October 09, 2025

1357. மொழிபெயர்ப்பு விருது விழா


அருட்செல்வர் நா. மகாலிங்கம் காந்தியின் மீதுள்ள தனது பக்தியையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வண்ணம், காந்தி பிறந்த நாளைப் பல்லாண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். காந்தியோடு அண்ணல் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளையும் இணைத்துப் பெரு விழாவாக ஆண்டாண்டு தோறும் கொண்டாடினார்.

 

      அருட்செல்வர் நா. மகாலிஙம்

               

                                               முனைவர்  ம. மாணிக்கம்

தந்தையார் மறைந்த பின் அந்தப் பணியை அதே போல் சிறப்பாக அவரது மகனார் முனைவர் மாணிக்கம் அவர்கள்  தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த ஆண்டு நடந்த விழா தொடந்து 58 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு பெரும் விழா.

புதிதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிமன்றம் அருசெல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் மூலமாகப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படுமின்றன. அதனோடு இணைந்து ஆண்டு தோறும் பல சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது கொடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விழா ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. காந்தி பிறந்த நாளான இரண்டாம் தேதி அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா பெரிதும் விமரிசையாக நடந்தது.

இவ்விழாவில் இருவருக்கு முதல் விருதும்(தலைக்கு 1,00,000), இருவருக்கு இரண்டாம் பரிசுகள் இருவருக்கும்(50,000), நால்வருக்கு மூன்றாம் பரிசுகளும்(25,000) கொடுத்தார்கள்.

இவ்விழாவில் எனக்கு மூன்றாம் பரிசு(தான்!) கிடைத்தது. பேரரசன் அசோகர்  என்ற நான் மொழிபெயர்த்த நூலுக்குக் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. எதிர் வெளியீடாக இந்த நூல் வெளிவந்தது. வெளியீட்டாளர் அனுஷ் அவர்களுக்கும், விருதளித்த மொழிபெயர்ப்பு மையத்திற்கும், அதனை நடாத்தி வரும் முனைவர் மாணிக்கம் அவர்களுக்கும்,  அதில் சிறப்பான பங்களித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

விழாவின் வரவேற்பாளர் முனைவர் ஒளவை ந. அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்ச்சித் துறை) அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. (அவரின் தந்தை முனைவர் ஒளவை நடராசன் அவர்களும், அவரது தாத்தா ஒளவை சு. துரைசாமி அவர்களும் என் கல்லூரிக் காலத்தில் (61-64) ஆண்டுகளில் என் தமிழ் ஆசிரியர்களாக மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தார்கள் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அருள் அவர்களிடமும் தெரிவித்தேன். எனக்கும் மகிழ்ச்சி. செய்தி கேட்ட அவருக்கும் பேருவகை.) வாழ்க நீ எம்மான் என்ற தலைப்பில் பேசிய திருமதி பாரதி பாஸ்கர், தான் மிகப் பெரும் மேடைப் பேச்சாளர் என்பதை ஒவ்வொரு சொல்லிலும் உறுதியாக்கினார்.

குடும்பத்தினர் அனைவரும் - முக்கியமாக, என் பேரக் குழந்தைகள் நால்வரும் - வந்திருந்தது எனக்குப் பேரின்பமாக இருந்தது.

விழாவிற்குப் போனோம்; விருது வாங்கினோம்; மகிழ்ச்சியைக் கொண்டாட பெயரன்கள் விருந்துண்ண அழைத்துச் சென்றனர்.