Sunday, August 30, 2026

1395. என் கதை - நூல் வெளியீட்டு நிகழ்வு



 






 

விசாகன் – எனது நூலின் வெளியீட்டாளர்எனது நூலிற்கு ஒரு வெளியீட்டு விழா எடுக்கலாமா என்று கேட்டிருந்தார். மதுரையில் வைக்கலாமா என்று கேட்டார். என் இயலாமையைச் சொன்னேன். ஓரிரு நாளில் சென்னையிலேயே வைத்து விடலாம் என்றார். வேறு சில நூல்களுக்கான வெளியீடு இருப்பதாகவும், அதோடு என் நூலையும் சேர்த்து விடலாம் என்றார். சரியென்று கூறினேன். ஆகஸ்ட்  16ம் தேதி. அறிவாலயத்திற்கு எதிர் வரிசையில் உள்ள ஒரு மாடியறையில் உள்ள ஒரு சின்ன ஹாலில் வைத்து விடலாமென சொன்னார், இரண்டாம் மாடி என்று சொன்னபோதே துணைவியாரால் இது போன்று ஏழு கடல், ஏழு மலையெல்லாம் தாண்ட முடியாதே என்று நினைத்தேன்,

குறித்த நாளன்று காலையில் இடத்தை அடைந்தோம். அங்கே எங்கே அந்த ஹால் என்று தேடினோம். திடீரென்று வானத்தில் இருந்து ஓர் அசரிரி மாதிரி ஒரு சத்தம் கேட்டது. விசாகன் உயர்ந்த மனிதர் – அவர் உயரமான மூன்றாவது தளத்திலிருந்து கூவியழைத்தார். மூன்றாவது தளமா என்று நினைத்து என் நாடி நரம்பெல்லாம் கொஞ்சம் விறைத்துக் கொண்டது. மனையாளுக்குக் கீழ்த் தளத்தில் – அது ஒரு சின்ன சந்துபோலிருந்தது – அதில் ஒரு நாற்காலியைக் கண்டு அதில் அமரவைத்து நான் மலையேறும் முயற்சியை ஆரம்பித்தேன். இளைய மகளும் பேத்திகளும் துணைக்கு வர மெல்லப் படியேறி மூன்றாம் தளம் ஏறி அங்கே இருந்த ஒரு நாற்காலியில் தஞ்சமடைந்தேன். மகள் மெல்ல ஹாலைப் போய்ப் பார்த்து வந்து, நீங்கள்  இப்போதே உள்ளே போய்விடுங்கள்; இல்லாவிட்டால் உட்கார இடம் கிடைக்காது என்றாள். எட்டிப் பார்த்தேன். மிகச் சிறிய அறைதான். எமாற்றம் தான். நாங்கள் வேறு பெரிய குடும்பமாகப் போயிருந்தோம்.

ஐந்து நூல்கள். அனைத்தும் பேராசிரியர்களால் எழுதப்பட்ட நூல்கள். ஆசிரியர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள். அவர்களில் ஒருவரின் கவிதை நூலை நான் அறிமுகம் செய்தேன். எனக்கு என்பதை விட எங்கள் அனைவருக்கும் நூல்களின் ஆசிரியர்கள்  பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தனர். ஒரு பொருளாதார நூல் – பேரா, முனைவர் சுகுமாரி எழுதிய நூல் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. நூலின் உள்ளடக்கம் அத்தனை சிறப்பாக இருந்தது. அயர்ச்சியோடு ஆரம்பித்த கூட்டம் நேரம் செல்லச்செல்ல சுவை கூடியது. விர்வையில் குளித்தது போல் மூன்று பேரப்பிள்ளைகளும் பின் வரிசையில் நின்று கொண்டேயிருந்தனர். என்னைப் பற்றிப் பேசிய செந்திலும், சந்துருவும் விசாகன் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுருக்கமாக, ஆனால் மிக அழகாகப் பேசினார்கள். நேறம் செல்லச் செல்ல கூட்டத்தின் இனிமை கூடியது. இறுதியாகப் பேசிய டில்லிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய தனது நூலான Re-visiting Gandhi என்ற நூலைப் பற்றியும் வேறு பல விஷயங்கள் பற்றியும் மிக மிக நகைச்சுவையுடன் பேசி நன்றியுரையும் கொடுத்தார்,


பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சிரமத்தோடு இருந்த கூட்டமாச்சே .. எப்படி இருந்தார்கள்  என்ற நினைப்பு மண்டைக்குள் ஓடியது. ஆனால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். சமீர், சந்தோஷ் என்ற இரு மாணவர்களும் கலந்து கொண்டதை மனதை நெகிச்சிப் படுத்தியது. கூட்டம் முடிந்த போது அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியை மட்டுமே பார்த்தேன். பெருமையாக இருந்ததாகக் கூறினார்கள். ஒரு மகள் வீடு சென்றதும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்:

Appanuuu..

.so so proud of you...such a lovely function...had a lovely time .

.so happy to hear people talking about you and your young and energetic positive thoughts that's so true..hope to carry the same traits from you....started to ponder what will I do after my retirement 😃🤪.

...nice time..nice food....missed to take family pic

இன்னொரு மகள் வீடு சென்றதும் தொலைபேசியில் தான் மிகுந்த பெருமைப் பட்டதாகச் சொன்னாள். குரலிலும் அத்தனை மகிழ்ச்சியும், பெருமிதமும் இருந்ததை உணர்ந்தேன்.

நான் சொன்னதுபோல் இந்த நூல் வெளிவந்ததும் மகிழ்ச்சி என் மனதை முழுமையாக நிறைத்தது. ஏதோ ஒரு பெரிய செயலை செய்து முடித்த இந்த திருப்தி இதுவரை எழுதிய நூல்களில் வராத அந்த திருப்தி இப்போது  மனம் முழுவதும் வழிந்தோடியது.

.....  


ப்ளாகர் காலத்தில் ஒவ்வொரு பதிவிற்குப் பின்னும் பல மிக நல்ல  பின்னூட்டங்கள் வருவதுவே வழக்கம். அந்த வழக்கம் இப்போது இல்லாமல் வெறும் ஸ்மைலிகளில் காலம் கரைகின்றது.

பழைய நினைப்புடா பேராண்டி என்ற நினைப்பில் உங்கள் கருத்துகளை இங்கே கீழே comments எழுத அழைக்கின்றேன். வாருங்கள் ...

 

 


No comments:

Post a Comment