Tuesday, June 17, 2014

757. இரண்டாம் நாள் - SPAIN vs HOLLAND





*




 Spain 1–5 Netherlands 






 *
சென்ற உலகக் கோப்பையில் இறுதி ஆட்டம் வந்த இரு நாடுகளேச்சே ... அதனால் இதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். எதற்கும் இருக்கட்டுமென்று போன தடவை அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு என்ன எழுதியிருப்போம் என்றும் பார்த்து வைத்தேன். இருவரும் அவ்வளவு சரியாக விளையாடாமலிருந்ததையும், நடுவர் ‘கண்டமேனிக்கு’ மஞ்சள் கார்டுகளை அள்ளி வீசியதையும் எழுதியிருந்தேன். 4 வருடத்திற்கு முன் ஸ்பெயின் ஒரு கோல் அடித்து கோப்பையை வென்றிருந்தது. ஆனால் இந்த வருஷம் .... ?

விளையாட்டு ஆரம்பித்தது. நெதர்லேந்தின் அணியின் வேகமே அதிகமாக இருந்தது. ஆனாலும் 27 வது நிமிடம் ஸ்பெயினுக்கு ஒரு பெனல்டி கிடைத்தது. போன தடவை இறுதி கோல் off-side கோல் மாதிரி தெரிந்தது என்று எழுதியிருந்தேன். இப்போது கிடைத்த பெனல்டியும் அது மாதிரியே இருந்தது. உண்மையில் பந்து கொண்டு வந்த ஸ்பெயின் வீரர் வழுக்கிக் கீழே விழுந்தது போல் தான் தெரிந்தது. ஆனால் நடுவர் பெளல் என்று விசில் கொடுத்து விட்டார். கோலும் நெதர்லாந்திற்கு விழுந்தது.

அதன்பின் நெதர்லாந்திற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. மின்னல்கள் பாய்ந்தன. நெதர்லாந்தின் கை ஓங்கியது. அதிலும் முதல் கோல் பெர்ஸ் மூலம் கிடைத்தது. எங்கிருந்தோ பறந்து வந்த பந்தை பெர்ஸியும் பறந்து போய் தலையால் மோதி கோலாக்கினார்.



அதே வேகத்தில் அடுத்தடுத்து கோல்கள் விழுந்தன. மொத்தம் 5 கோல்கள். நிச்சயமாக ஆட்டத்தின் இரண்டாம் பாகம் கட்டாயம் பார்க்க வேண்டிய விளையாட்டு. ஒவ்வொரு கோலும் ஒரு magic touch மாதிரி தான் இருந்தது. பெர்ஸி கணக்கில் இரண்டு கோல்; சென்ற கோப்பையில் நான் விரும்பிய ஆட்டக்காரர் ராபன் இரு கோல்.

பார்க்க வேண்டிய ஒரு ஆட்டம். பார்த்த திருப்தி எனக்கு ...

*

அதே நாளில் நடந்த வேறு ஆட்டங்களின் முடிவுகள்:

  Mexico 1–0 Cameroon

 -------------- 

 Chile 3–1 Australia 

------------- 

 Colombia 3–0 Greece

 ---------------- 



Friday, June 13, 2014

756. FIFA 14 - முதல் நாள்





*

எட்டு மணிக்கே ஆரம்பிக்கும்னு போட்டாங்களேன்னு அப்பவே பொட்டிக்கு முன்னால உக்காந்தாச்சு. ரெண்டு துரை மார்கள், அயல் நாட்டு உதைபந்து வீர்ர்கள் வந்தார்கள். ஜான் ஆப்ரஹாம் வந்து உக்காந்தார். நீள வாயோடு ஒரு பொண்ணு வந்து உக்காந்துச்சு. காட்சி நடத்துபவரும் உக்காந்து அஞ்சு பேரும் என்னமோ பேச ஆரம்பித்தார்கள். பிரேசிலில் உலகக் கோப்பையின் ஆரம்பக் காட்சி வருமேன்னு உக்காந்தேன். அது ஒண்ணையும் காணோம். துரைகளும், துரைச்சாணியும் இங்கிலிபீசில் பேசினார்களா ... ஒண்ணும் புரியலை.

நல்ல வேளை .. போன FIFA 10ன் கடைசி ஆட்டத்தைக் காண்பித்தார்கள். ஸ்பெயினும் நெதர்லேண்டும் ஆடுச்சி. நடு நடுவில வேறு சில காட்சிகள் அப்டின்னு ஒரு படம் மாதிரி ஓடுச்சி. நல்ல எடிட்டிங். கடைசியில் கோல் விழுந்தப்போ கோல் அடிச்ச இனியஸ்டா  கொஞ்சம் ஆப் சைட் மாதிரி நேத்து தோணுச்சு!



நடுவில பிரேசிலில் நடக்கும் உலகக் கோப்பைக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றியும் சில செய்திகள். போட்ட எஸ்டிமேட்டை விட மிகப் பல மடங்கு செலவாயிருச்சாம். நினச்சேன் ... நம்ம ஊரு கல்மாதி மாதிரியான ஆளுகள் அங்கேயும் நிறைய இருப்பாங்க போல... ஆமா.. கல்மாதி என்ன ஆனாரு? அவரு அடிச்ச காசு அவரே வச்சுக்கிட்டாரோ ... அதையெல்லாம் அவர்ட்ட இருந்து புடுங்கவே மாட்டாங்களா? சேன்னு ஆகிப் போயிருது. அத்தனை கோடி.. இத்தனை கோடி அப்டிங்கிறாங்க... ஆனா யார்ட்ட இருந்தும் பைசா வசூல் கிடையாது போலும்.

அப்புறம் ஒரு வழியா 11 மணிக்கு ஆரம்பக் காட்சிகள் அப்டின்னு ஆரம்பிச்சாங்க. ஒண்ணும் நல்லா இல்லை. என்னமோ சின்னப் பிள்ளைங்கள வச்சு ஏதோ சின்னச் சின்ன வித்தை காண்பிச்சது மாதிரி இருந்தது. நல்லாவே இல்லை. சீக்கிரமும் முடிஞ்சிது. ஒரு பாட்டு போட்டங்க... போன உலகக் கோப்பை பாட்டு மாதிரி இல்லை. அதோடு பாடுறவங்க பாடுறாங்க... பார்வையாளர்கள் சத்தம் எல்லாம் சேர்ந்து ஒரே ‘இரைச்சல்’ தான். என்னடா ... நம்ம ஊர் கலாட்டா மாதிரி இருக்கேன்னு தோணுச்சு... சரி, பிரேசிலும் BRIC-ல் உள்ள நம்மளோடு சேர்ந்த நாடு தானேன்னு நினச்சுக்கிட்டேன்.

குட்டித் தூக்கம் போட்டுட்டு மறுபடி 1.30க்கு எழுந்தேன்.

பிரேசில்  -  க்ரோஷியா

முதல்  பத்து நிமிஷம் பார்த்ததும் என்னடா நம்ம ஆளுக -பிரேசில் - சரியா ஆடலைன்னு நினச்சேன். ஆனா பிரேசில் ஆளுக பூரா க்ரோஷியா இடத்தில் கோலைச் சுத்தி நிக்கிறாங்க. ஆனால் பந்தை பாஸ் பண்றது சரியா இல்லைன்னு தோணுச்சு. மக்கள் கொஞ்சம் இன்னும் ‘சூடாகணுமோ’ அப்டின்னு நினச்சேன். இந்தப் பத்து நிமிஷத்தில இரண்டு மூணு தடவை பந்து பிரேசில் பக்கம் வந்தது. மூணு தடவையுமே க்ரோஷியாவின் லெப்ட் விங்கர் பந்து கிடச்சதும் அம்பு மாதிரித ங்கள் கோலில் இருந்து பாய்ந்து   பிரேசில் கோயிலுக்கு வந்தார். அதிலும் ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் அப்படி வந்து ஓங்கி அடிச்சார். பிரேசில் கோலின் வலது பக்கம் அரையடி விலகிச் சென்றது.

பிரேசில் மேல கொஞ்சம் கோபத்தில் இருந்தேனா... அதுனால .. ‘அடடா... இது ஒரு கோலாக இருந்திருந்தா இனிமேலாவது பிரேசில் ஒழுங்கா விளையாட ஆரம்பித்து விடாதான்னு நினச்சேன். என்ன நினப்போ ...! பதினோராவது நிமிடத்தில் அதே மாதிரி லெப்ட் விங்கர் பாலை அடிச்சி, பிரேசில் கோல் கிட்ட கொஞ்சம் களேபரம். அதில் பிரேசிலின்  மொசில்லா காலைத் தட்டித் தாண்டி கோலுக்குள் விழுந்தது. நினச்சது மாதிரி அதன் பின் பிரேசில்லுக்கு இன்னும் கொஞ்சம் சூடு பிடித்தது.

பிரேசில் மேல் அப்படி என்ன ஆர்வமோ. இருந்தாலும் உலகக் கோப்பையில் பல தடவை கோபம் தான் வரும். ரொனால்டே பற்றி நிறையச் சொன்னாங்க. மொத்தம் மூணு தடவை உலகக் கோப்பையில் விளையாடினார். ரொம்ப எதிர்பார்ப்போடு நான் இருந்தப்போ அவர் விளையாட்டு நல்லா இல்லை. அதன்பின் ரோடின்ஹோ பிடிச்சிது. அதன் பின் வந்த உலகக் கோப்பையில் அவர் சோபிக்கவில்லை. நெய்மர் கதையும் அப்படி ஆகிவிடுமோன்னு  நினச்சேன். ஆனால் நெய்மர்  நன்றாகவே விளையாடினார். ஆனாலும் கோச் ஸ்கோலார் நெய்மர் மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்துள்ளார் போலும். கார்னர் ஷாட், பெளல் ஷாட், பெனல்டி ஷாட் என்று எல்லாமே நெய்மர் தான் அடித்தார். நேற்று ஒரே ஒரு கார்னர் ஷாட் மட்டும் வேறு ஒருவர். மற்றதெல்லாம் நெய்மர் என்று நினைக்கிறேன்.

பிரேசில் மூன்று கோல் போட்டு வென்றது. நெய்மர்,  பெனல்ட்டியில் நெய்மரின் இரண்டாவது கோல், ஆஸ்கர்.

இரண்டாவது நாளின் இரண்டாம் போட்டி - போன ஆண்டு பைனலில் மோதிய ஸ்பெயினும், நெதர்லேண்டும். ஆக அதைக் கட்டாயம் பார்க்கணும் இன்று.


*
இன்னொரு பெரிய சந்தேகம். க்ரோஷியா எங்க இருக்குன்னே தெரியாது. 
இந்த வருஷம் விளையாடுற ஒவ்வொரு நாட்டுப் படத்தை மட்டுமாவது  
பார்க்கவாவது செய்யணும்னு நினச்சிருந்தேன். இந்த நாட்டைப் பார்த்தா ...

        நம்ம தமிழ் நாடு மாநிலம்………………….. ஆனால் க்ரோஷியா ...


கி.மு. 500க்கும் முன்பே தமிழர்கள்  ……… நாட்டின் ஆரம்பம் – 7ம் நூற்றாண்டு
நமது மொழியோ ஒரு செம்மொழி…           நாட்டின் விடுதலை - June 1991
மக்கட்தொகை 7 கோடி ………………………  மக்கட்தொகை நாலே கால் கோடி, 
 130,058 சதுர கி.மீ.   ……………………….   56,594 சதுர கி.மீ.
(50216 சதுர மைல்)


என்ன சொல்ல வர்ரேன் தெரியுதா? இதில் இன்னொன்று கேள்விப்பட்டேன். பல ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து விளையாடும் அளவிற்கு வெப்ப நிலை ஆண்டிற்கு சில மாதங்கள் மட்டுமே. மற்ற நாளில் எங்கும் பனி. அந்த நாடுகளும் விளையாட்டில் உயர் நிலைக்கு
வந்திருக்கின்றன. ஒரே விளையாட்டு என்றில்லாமல் பல விளையாட்டிலும்  ஆர்வமும், தரமும் இருக்கு.

ஆனா .... நாம் மட்டும் ஏன் இப்படி?








இவங்களுக்கும் உலகக் கோப்பைக்கும் என்ன தொடர்பு? இங்கே வாசித்துக் கொள்ளுங்கள்!

இங்க என்னடான்னா ... தூக்கம் முழிச்சி தொலைக்காட்சி பார்க்கிறதுக்கே தங்ஸிடம் ரொம்ப வாங்கிக் கட்ட வேண்டியதிருக்கு... !




Wednesday, June 11, 2014

755. FIFA - மீள் பதிவு





1986. அப்போ வீட்ல தொலைக்காட்சிப் பொட்டி ஒண்ணும் வாங்கவில்லை. அப்போவெல்லாம் இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே வரும். வாங்கணும்னு ஆசையெல்லாம் பட்டாச்சு. காசு ரெடி பண்ணணும் .. என்ன பொட்டி வாங்கலாம் .. கலரா, வெள்ளை-கருப்பா .. புதுசா, பழசா … 

இப்படியெல்லாம் போய்க்கொண்டிருந்த காலத்தில் கால்பந்து உலகக் கோப்பை பந்தயம் வந்தது. அது தொலைக்காட்சியில் காட்டப் போகிறார்கள் என்பதைப் பார்த்ததும், எங்கே போய் எப்படி பார்ப்பது என்று யோசிக்க ஆரம்பிச்சாச்சு. நம்ம வீட்ல இருந்து மூணாவது வீட்டு நண்பர் தொலைக்காட்சி வைத்திருந்தார்; ஆனால் அவருக்கு என்ன கவலைன்னா .. எப்படி தனியே உட்கார்ந்து விளையாட்டைப் பார்ப்பது என்று. பேச்சு வாக்கில் இருவரின் ‘சோகம்’ அடுத்தவருக்குத் தெரிய அவர் வீட்டில் சேர்ந்து உட்கார்ந்து பார்ப்பது என்று முடிவாச்சி.

அப்போவெல்லாம் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 8-லிருந்து 8.30 வரை ஒலியும் ஒளியும் அப்டின்னு ஒரு நிகழ்ச்சி. தொலைக்காட்சி இருக்கிற வீடுகளில் அனேகமாக அதைப் பார்க்க பெருங்கூட்டம் தயாரா இருக்கும். ஒரே தமிழ் நிகழ்ச்சி; மற்றதெல்லாம் இந்தி மட்டும்தான். யாருக்குப் புரியும் அதைப் பார்க்க. அப்படியிருந்த எங்களுக்கு விளையாட்டை தொலைக்காட்சியில் பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி. அதுவும் அப்போவெல்லாம் எனக்கு இந்த rewind செஞ்சி பார்க்கிறதெல்லாம் தெரியாது. போட்டிக்கு நடுவிலே ஒரு காட்சியை rewind போடும்போது ஆச்சரியமாக இருந்தது. ஒரு புள்ளிமாதிரி தெரியும் …. அதிலிருந்து .. சொய்ங்ங்………அப்டின்னு ஒரு காட்சி rewind ஆகித் தெரியும். ஆச்சரியம்னா … ஆச்சரியம். ஒரு கோல் விழுந்ததும் – நானே எண்ணிப் பார்த்தேன் – ஒன்பது காமிரா கோணங்களில் அதைக் காண்பித்தார்கள். ஆச்ச்ச்சசசச்ச்ச்சசசரியம்னா ஆச்சச்சரியம்தான் ! (ஆனால் இப்பவும் கேமிராவின் கண்கள் ரொம்பவே ஆச்சரியப்படுத்துது – உதாரணமா, எப்படி foul-களை இவ்வளவு க்ளோசப்பில் காண்பிக்கிறார்கள்? அந்தக் காமிரா, கால்களை மட்டும் படம் எடுத்துக் கொண்டிருக்குமா???)  இந்த மாதிரி அந்தக் காலத்து விஷயமெல்லாம் உங்களுக்கு எங்கே புரியப் போகுது!

அந்த வருடப் போட்டி இரவு 10.30க்கு ஆரம்பிக்கும். நான் வீட்ல இருந்து புறப்பட்டு ஃப்ளாஸ்க்கில் காபி, வெண்சுருட்டு, பழம் எல்லாம் வாங்கிட்டு பத்தேகால் மணிக்கு நண்பர் வீட்டுக்குப் போய்விடுவேன். பத்தேகால் மணி தாண்டினால் நண்பருக்கு வீட்டுக்குள் இருப்பு கொள்ளாது. வெளியே மெல்ல என்னைத் தேடி வர ஆரம்பித்துnவிடுவார். விளையாட்டு ஆரம்பிக்கும் முன் நாங்கள் அதைப் பற்றிய எங்கள் கருத்துக்களைத் தெளிவாக்கிக் கொள்வோம்.

அன்னையிலிருந்து இன்னைக்கி வரைக்கும் தூக்கம்னா எனக்கு சொர்க்கம்தான். படுத்த அடுத்த நிமிஷம் தூக்கம். காலையில் எழுந்திரிக்கிறது நம்ம இஷ்டம். ஆனாலும் இந்த விளையாட்டு சமயத்தில் எப்படித்தான் அப்படி இருந்தேனோ .. சில நாள் இரு விளையாட்டுகள் இருக்கும். ஒன்று பத்தரை மணிக்கு அப்டின்னா .. இன்னொண்ணு 2 மணிக்கு என்பது மாதிரி இருக்கும். நானும் நண்பர் வீட்டிலேயே தூங்கி இருவரும் அலாரம் வைத்து 1.45க்கு முழிக்கணும்னு ஏற்பாடு பண்ணிட்டு தூங்குவோம். என்ன ஆச்சரியம் .. என்னையறியாமலேயே 1.30க்கு நானே எழுந்திருத்து உட்கார்ந்திருப்பேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது.


கால்பந்துன்னா பீலே .. பீலேன்னா ப்ரேசில் .. அதனால், கால்பந்து என்றாலே ப்ரேசில் … இப்படியாக பல இந்தியர்கள் போலவே நாங்களும் ப்ரேசில் கட்சிக்காரர்கள்தான். ஆனாலும் ப்ரேசில் அந்த ஆண்டு காலிறுதிப் போட்டியிலேயே ப்ரான்ஸுடன் பெனல்ட்டியில் தோத்துப் போச்சு. இன்னும் தொலைக்காட்சியில் பார்த்த சில சீன்கள் நினைவுக்கு இருக்கின்றன. ப்ரேசில் அந்த காலிறுதியில் விளையாடும்போது ஒரு அழகான பெண் ப்ரேசில் வண்ண உடை போட்டுக் கொண்டு செம ஆட்டம் போட்டுக்கொண்டிருந்ததை அடிக்கடி காண்பித்தார்கள். விளையாட்டு முடிந்தது; காமிரா அந்தப் பெண்ணைக் காண்பித்தது. அவள் விழிநீரோடு பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள், அதை விடவும் வயதான ப்ரேசில்காரர் ஒருவர் தன் கைத்தடியில் தன் நாடியைத் தாங்குமாறு வைத்து மிகச் சோகமாக உட்கார்ந்திருந்தார். அவர் கண்ணிலும் தாரையாக கண்ணீர். எங்களுக்கும் கொஞ்சம் அப்படித்தான்.

அதன்பின் மரடோனா தூள் கிளப்பினார். அவர் தனியாக எடுத்துச் சென்று அடித்த கோல் இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனாலும் லினேக்கர் என்ற ப்ரான்ஸ், மன்னிக்கணும், இங்கிலாந்து வீரர் அடித்த கோல் மிகவும் நன்றாக இருந்தது. கோல் பக்கத்தில் அவர் நின்று கொண்டிருந்தார்; காற்றில் மிதந்து வந்த பந்தை இவரும் காற்றில் பறந்து போய் அடித்த அடி அப்படி ஒரு அழகு. ம்ம்… காலம் ரொம்ப ஆகிப் போச்சு …

இப்போ அந்த நிகழ்வுகளின் படம் ஏதாவது இருந்தால் எடுத்துப் போடலாம்னு நினச்சா வெறும் நிழற்படங்கள், அதுவும் அனேகமாக, கருப்பு-வெள்ளைப் படங்கள். Youtube-ன்னு ஒண்ணு இப்போ இருக்கே அதெல்லாம் அப்போ ஏது? ஒரு படத்தைக்கூட எடுத்துப் போட முடியவில்லை.

1990-ல் உலகக்கோப்பை தனியே உட்கார்ந்து பாத்தாச்சு. அடுத்தது 1994. அந்த வருடம் ஆரம்பத்தில் இரண்டாவது தடவையாக இதயத்தில் – மறுபடி ஒரு தகராறு. இரண்டாவது தடவையாக அட்டாக்.மருத்துவமனையிலிருந்து வெளியே வரும்போது டாக்டர் dos and donts பற்றி நிறைய சொன்னார். அப்போது நானும் தொலைக்காட்சி பார்க்கலாமா என்று கேட்டேன். எல்லாம் பாருங்க … ஆனால் உணர்ச்சி தரக்கூடிய பந்தய விளையாட்டுக்கள் பார்க்க வேண்டாமே என்றார். சரிங்கன்னு சொல்லிட்டு ஒழுங்கா உட்கார்ந்து 1994-ம் பார்த்தாச்சு.

2010 முடிஞ்சிரிச்சி … 2014 ப்ரேசிலில் தான் போட்டி நடக்கப் போகுது. ப்ரேசில் ப்ரேசிலில் ஜெயிக்கணும்.

FIFA'14ல் சொன்ன பி.கு.

ஆனால் ஏதாவது ஒரு ஆக்டோபஸ் FIFA '10ல் பலன் சொன்னது மாதிரி  இந்த வருஷம் எதுவும் சொல்லுமான்னு தெரியலை!
















754. WELCOME FIFA 14





Friday, June 06, 2014

753. கடவுளின் கட்டளைகள் பொய்த்துப் போனதோ?







*



 கடவுளின் வார்த்தைகள் கேள்விக்குரியதாகலாமா?

 குரானில் எந்த தவறான செய்திகளும் இல்லையென்பது நம்பிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. விவாதங்களில் குரானில் ஒரே ஒரு தவறு காண்பித்தாலும் இது கடவுளின் வார்த்தையல்ல என்பதை ஒப்புக் கொள்வோம் என்பார்கள் நம்பிக்கையாளர்கள். ஆனால், அல்லாவால் குரானில் கொடுக்கப்பட்ட ஒரு சத்தியம் முறியடிக்கப்பட்டதை கீழே வரும் ஒரு வரலாற்று உண்மை சொல்கிறது.

மக்கா ஒரு பாதுகாப்பான நகரம்; அல்லாவினால் காக்கப்படும் நகரம் என்பது அல்லாவினால் குரானில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி.

குரான் 2:125 ’வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்’

 குரான் 29:67 ’அன்றியும் சூழ உள்ள மனிதர்கள் இறைஞ்சிச் செல்லப்படும் நிலையில் நாம் பாதுகாப்பான புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?’’

 குரான் 3:97 ‘எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பும் பெருகிறார்.’ 


ஆனால் இந்த பாதுகாக்கப்பட்ட நகரத்தில் முகம்மது போர் நடத்தியிருக்கிறார். முகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

மேலும் … புஹாரி ஹதீஸ் எண் 112 ‘மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. ’

குரான்,ஹதீஸ் இரண்டுமே இப்படி கூறினாலும், 35 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா பள்ளி முற்றுகையிடப்பட்ட போது அல்லா எந்த பாதுகாப்புப் படையையும் அனுப்பவில்லை; சவுதி அரசே பிரான்ஸிலிருந்து ரகசிய தாக்குதல் படையையும் நரம்பை செயலிழக்கச்செய்யும் ரசாயனக் குண்டுகளையும் வரவழைத்தது என்பது தான் உண்மை.

1979 நவம்பர் 20 ஆம் தேதி, வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை சவுதி அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது.

 பிரான்சு படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேர் மக்கா வந்தனர். இஸ்லாமியர்கள் மட்டுமே அங்கு நுழைய முடியும் என்பதால் அவர்கள் ஒப்புக்காக, தற்காலிகமாக இஸ்லாமியர் ஆக்கப்பட்டனர். அவர்கள் நவீன ஆயுதங்கள், குண்டுகளுடன் தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத் துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச் செய்யும் குண்டுகளை வீசி … ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தது.

நான் தான் புதிதாக வந்திருக்கும் மஹ்தி – மெசைய்யா – என்று இப்போரை ஆரம்பித்த முகம்மது அப்துல்லா - - Mohammed Abdullah al-Qahtani போரில் இறந்து விட்டிருக்க, அவரது மைத்துனனுமான ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

 இப்போர் அமெரிக்காவின் தூண்டுதலால் நடந்தது என்று உலகத்தின் பல பாகங்களில் அமெரிக்க அலுவலகங்கள் முன்னால் போராட்டங்கள் வெடித்தன. (இந்தியாவில் அப்போது எதுவும் நடக்கவில்லை; அப்போதிருந்த இஸ்லாமியர்கள் இப்போதைய வஹாபிகள் போல் இருந்திருக்க மாட்டார்கள் போலும்!)
மெசையா என்று தன்னை அழைத்துக் கொண்ட Mohammed Abdullah al-Qahtani 

 போராட்டக்காரர்கள் 63 பேர் பொதுவிடத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டனர். சவுதி அரசர் காலட் - Khaled – இப்போராட்டத்தை சாதாரணமானது என்று அறிவித்தார். இப்போராட்டத்திற்கு தீர்ப்பாக இஸ்லாம் மேலும் தீவிரமாக்கப்பட வேண்டும் என்றார். தினசரிகளில், தொலைக்காட்சிகளில் பெண்கள் வருவதைத் தடை செய்தனர். இசை தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அதிகமான அளவு மதக் கல்வி சேர்க்கப்பட்டது. மேலை  நாகரிகம் தடை செய்யப்பட்டு பெண்களின் கல்வி முடக்கப்பட்டது. (அப்படியென்ன இந்த மதத்திற்கும், பெண்களுக்கும் ’ஏழாம் பொருத்தம்;!)

 காப்பாற்றப்பட்ட நகரம் என்று அல்லாவால் அழைக்கப்பட்ட இந்த நகரத்தில் எப்படி ஒரு போர் மூண்டது? குரான் முழுமையான வேத நூல் என்பவர்களின் நம்பிக்கைகளின் மீது எழும் ஒரு பெரும் கேள்வி இது.


 http://middleeast.about.com/od/terrorism/a/me081120b.htm http://en.wikipedia.org/wiki/Grand_Mosque_Seizure













*

நன்றி ... செங்கொடி


*