Wednesday, June 11, 2014

755. FIFA - மீள் பதிவு

1986. அப்போ வீட்ல தொலைக்காட்சிப் பொட்டி ஒண்ணும் வாங்கவில்லை. அப்போவெல்லாம் இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே வரும். வாங்கணும்னு ஆசையெல்லாம் பட்டாச்சு. காசு ரெடி பண்ணணும் .. என்ன பொட்டி வாங்கலாம் .. கலரா, வெள்ளை-கருப்பா .. புதுசா, பழசா … 

இப்படியெல்லாம் போய்க்கொண்டிருந்த காலத்தில் கால்பந்து உலகக் கோப்பை பந்தயம் வந்தது. அது தொலைக்காட்சியில் காட்டப் போகிறார்கள் என்பதைப் பார்த்ததும், எங்கே போய் எப்படி பார்ப்பது என்று யோசிக்க ஆரம்பிச்சாச்சு. நம்ம வீட்ல இருந்து மூணாவது வீட்டு நண்பர் தொலைக்காட்சி வைத்திருந்தார்; ஆனால் அவருக்கு என்ன கவலைன்னா .. எப்படி தனியே உட்கார்ந்து விளையாட்டைப் பார்ப்பது என்று. பேச்சு வாக்கில் இருவரின் ‘சோகம்’ அடுத்தவருக்குத் தெரிய அவர் வீட்டில் சேர்ந்து உட்கார்ந்து பார்ப்பது என்று முடிவாச்சி.

அப்போவெல்லாம் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 8-லிருந்து 8.30 வரை ஒலியும் ஒளியும் அப்டின்னு ஒரு நிகழ்ச்சி. தொலைக்காட்சி இருக்கிற வீடுகளில் அனேகமாக அதைப் பார்க்க பெருங்கூட்டம் தயாரா இருக்கும். ஒரே தமிழ் நிகழ்ச்சி; மற்றதெல்லாம் இந்தி மட்டும்தான். யாருக்குப் புரியும் அதைப் பார்க்க. அப்படியிருந்த எங்களுக்கு விளையாட்டை தொலைக்காட்சியில் பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி. அதுவும் அப்போவெல்லாம் எனக்கு இந்த rewind செஞ்சி பார்க்கிறதெல்லாம் தெரியாது. போட்டிக்கு நடுவிலே ஒரு காட்சியை rewind போடும்போது ஆச்சரியமாக இருந்தது. ஒரு புள்ளிமாதிரி தெரியும் …. அதிலிருந்து .. சொய்ங்ங்………அப்டின்னு ஒரு காட்சி rewind ஆகித் தெரியும். ஆச்சரியம்னா … ஆச்சரியம். ஒரு கோல் விழுந்ததும் – நானே எண்ணிப் பார்த்தேன் – ஒன்பது காமிரா கோணங்களில் அதைக் காண்பித்தார்கள். ஆச்ச்ச்சசசச்ச்ச்சசசரியம்னா ஆச்சச்சரியம்தான் ! (ஆனால் இப்பவும் கேமிராவின் கண்கள் ரொம்பவே ஆச்சரியப்படுத்துது – உதாரணமா, எப்படி foul-களை இவ்வளவு க்ளோசப்பில் காண்பிக்கிறார்கள்? அந்தக் காமிரா, கால்களை மட்டும் படம் எடுத்துக் கொண்டிருக்குமா???)  இந்த மாதிரி அந்தக் காலத்து விஷயமெல்லாம் உங்களுக்கு எங்கே புரியப் போகுது!

அந்த வருடப் போட்டி இரவு 10.30க்கு ஆரம்பிக்கும். நான் வீட்ல இருந்து புறப்பட்டு ஃப்ளாஸ்க்கில் காபி, வெண்சுருட்டு, பழம் எல்லாம் வாங்கிட்டு பத்தேகால் மணிக்கு நண்பர் வீட்டுக்குப் போய்விடுவேன். பத்தேகால் மணி தாண்டினால் நண்பருக்கு வீட்டுக்குள் இருப்பு கொள்ளாது. வெளியே மெல்ல என்னைத் தேடி வர ஆரம்பித்துnவிடுவார். விளையாட்டு ஆரம்பிக்கும் முன் நாங்கள் அதைப் பற்றிய எங்கள் கருத்துக்களைத் தெளிவாக்கிக் கொள்வோம்.

அன்னையிலிருந்து இன்னைக்கி வரைக்கும் தூக்கம்னா எனக்கு சொர்க்கம்தான். படுத்த அடுத்த நிமிஷம் தூக்கம். காலையில் எழுந்திரிக்கிறது நம்ம இஷ்டம். ஆனாலும் இந்த விளையாட்டு சமயத்தில் எப்படித்தான் அப்படி இருந்தேனோ .. சில நாள் இரு விளையாட்டுகள் இருக்கும். ஒன்று பத்தரை மணிக்கு அப்டின்னா .. இன்னொண்ணு 2 மணிக்கு என்பது மாதிரி இருக்கும். நானும் நண்பர் வீட்டிலேயே தூங்கி இருவரும் அலாரம் வைத்து 1.45க்கு முழிக்கணும்னு ஏற்பாடு பண்ணிட்டு தூங்குவோம். என்ன ஆச்சரியம் .. என்னையறியாமலேயே 1.30க்கு நானே எழுந்திருத்து உட்கார்ந்திருப்பேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது.


கால்பந்துன்னா பீலே .. பீலேன்னா ப்ரேசில் .. அதனால், கால்பந்து என்றாலே ப்ரேசில் … இப்படியாக பல இந்தியர்கள் போலவே நாங்களும் ப்ரேசில் கட்சிக்காரர்கள்தான். ஆனாலும் ப்ரேசில் அந்த ஆண்டு காலிறுதிப் போட்டியிலேயே ப்ரான்ஸுடன் பெனல்ட்டியில் தோத்துப் போச்சு. இன்னும் தொலைக்காட்சியில் பார்த்த சில சீன்கள் நினைவுக்கு இருக்கின்றன. ப்ரேசில் அந்த காலிறுதியில் விளையாடும்போது ஒரு அழகான பெண் ப்ரேசில் வண்ண உடை போட்டுக் கொண்டு செம ஆட்டம் போட்டுக்கொண்டிருந்ததை அடிக்கடி காண்பித்தார்கள். விளையாட்டு முடிந்தது; காமிரா அந்தப் பெண்ணைக் காண்பித்தது. அவள் விழிநீரோடு பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள், அதை விடவும் வயதான ப்ரேசில்காரர் ஒருவர் தன் கைத்தடியில் தன் நாடியைத் தாங்குமாறு வைத்து மிகச் சோகமாக உட்கார்ந்திருந்தார். அவர் கண்ணிலும் தாரையாக கண்ணீர். எங்களுக்கும் கொஞ்சம் அப்படித்தான்.

அதன்பின் மரடோனா தூள் கிளப்பினார். அவர் தனியாக எடுத்துச் சென்று அடித்த கோல் இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனாலும் லினேக்கர் என்ற ப்ரான்ஸ், மன்னிக்கணும், இங்கிலாந்து வீரர் அடித்த கோல் மிகவும் நன்றாக இருந்தது. கோல் பக்கத்தில் அவர் நின்று கொண்டிருந்தார்; காற்றில் மிதந்து வந்த பந்தை இவரும் காற்றில் பறந்து போய் அடித்த அடி அப்படி ஒரு அழகு. ம்ம்… காலம் ரொம்ப ஆகிப் போச்சு …

இப்போ அந்த நிகழ்வுகளின் படம் ஏதாவது இருந்தால் எடுத்துப் போடலாம்னு நினச்சா வெறும் நிழற்படங்கள், அதுவும் அனேகமாக, கருப்பு-வெள்ளைப் படங்கள். Youtube-ன்னு ஒண்ணு இப்போ இருக்கே அதெல்லாம் அப்போ ஏது? ஒரு படத்தைக்கூட எடுத்துப் போட முடியவில்லை.

1990-ல் உலகக்கோப்பை தனியே உட்கார்ந்து பாத்தாச்சு. அடுத்தது 1994. அந்த வருடம் ஆரம்பத்தில் இரண்டாவது தடவையாக இதயத்தில் – மறுபடி ஒரு தகராறு. இரண்டாவது தடவையாக அட்டாக்.மருத்துவமனையிலிருந்து வெளியே வரும்போது டாக்டர் dos and donts பற்றி நிறைய சொன்னார். அப்போது நானும் தொலைக்காட்சி பார்க்கலாமா என்று கேட்டேன். எல்லாம் பாருங்க … ஆனால் உணர்ச்சி தரக்கூடிய பந்தய விளையாட்டுக்கள் பார்க்க வேண்டாமே என்றார். சரிங்கன்னு சொல்லிட்டு ஒழுங்கா உட்கார்ந்து 1994-ம் பார்த்தாச்சு.

2010 முடிஞ்சிரிச்சி … 2014 ப்ரேசிலில் தான் போட்டி நடக்கப் போகுது. ப்ரேசில் ப்ரேசிலில் ஜெயிக்கணும்.

FIFA'14ல் சொன்ன பி.கு.

ஆனால் ஏதாவது ஒரு ஆக்டோபஸ் FIFA '10ல் பலன் சொன்னது மாதிரி  இந்த வருஷம் எதுவும் சொல்லுமான்னு தெரியலை!
No comments:

Post a Comment