Friday, June 13, 2014

756. FIFA 14 - முதல் நாள்

*

எட்டு மணிக்கே ஆரம்பிக்கும்னு போட்டாங்களேன்னு அப்பவே பொட்டிக்கு முன்னால உக்காந்தாச்சு. ரெண்டு துரை மார்கள், அயல் நாட்டு உதைபந்து வீர்ர்கள் வந்தார்கள். ஜான் ஆப்ரஹாம் வந்து உக்காந்தார். நீள வாயோடு ஒரு பொண்ணு வந்து உக்காந்துச்சு. காட்சி நடத்துபவரும் உக்காந்து அஞ்சு பேரும் என்னமோ பேச ஆரம்பித்தார்கள். பிரேசிலில் உலகக் கோப்பையின் ஆரம்பக் காட்சி வருமேன்னு உக்காந்தேன். அது ஒண்ணையும் காணோம். துரைகளும், துரைச்சாணியும் இங்கிலிபீசில் பேசினார்களா ... ஒண்ணும் புரியலை.

நல்ல வேளை .. போன FIFA 10ன் கடைசி ஆட்டத்தைக் காண்பித்தார்கள். ஸ்பெயினும் நெதர்லேண்டும் ஆடுச்சி. நடு நடுவில வேறு சில காட்சிகள் அப்டின்னு ஒரு படம் மாதிரி ஓடுச்சி. நல்ல எடிட்டிங். கடைசியில் கோல் விழுந்தப்போ கோல் அடிச்ச இனியஸ்டா  கொஞ்சம் ஆப் சைட் மாதிரி நேத்து தோணுச்சு!நடுவில பிரேசிலில் நடக்கும் உலகக் கோப்பைக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றியும் சில செய்திகள். போட்ட எஸ்டிமேட்டை விட மிகப் பல மடங்கு செலவாயிருச்சாம். நினச்சேன் ... நம்ம ஊரு கல்மாதி மாதிரியான ஆளுகள் அங்கேயும் நிறைய இருப்பாங்க போல... ஆமா.. கல்மாதி என்ன ஆனாரு? அவரு அடிச்ச காசு அவரே வச்சுக்கிட்டாரோ ... அதையெல்லாம் அவர்ட்ட இருந்து புடுங்கவே மாட்டாங்களா? சேன்னு ஆகிப் போயிருது. அத்தனை கோடி.. இத்தனை கோடி அப்டிங்கிறாங்க... ஆனா யார்ட்ட இருந்தும் பைசா வசூல் கிடையாது போலும்.

அப்புறம் ஒரு வழியா 11 மணிக்கு ஆரம்பக் காட்சிகள் அப்டின்னு ஆரம்பிச்சாங்க. ஒண்ணும் நல்லா இல்லை. என்னமோ சின்னப் பிள்ளைங்கள வச்சு ஏதோ சின்னச் சின்ன வித்தை காண்பிச்சது மாதிரி இருந்தது. நல்லாவே இல்லை. சீக்கிரமும் முடிஞ்சிது. ஒரு பாட்டு போட்டங்க... போன உலகக் கோப்பை பாட்டு மாதிரி இல்லை. அதோடு பாடுறவங்க பாடுறாங்க... பார்வையாளர்கள் சத்தம் எல்லாம் சேர்ந்து ஒரே ‘இரைச்சல்’ தான். என்னடா ... நம்ம ஊர் கலாட்டா மாதிரி இருக்கேன்னு தோணுச்சு... சரி, பிரேசிலும் BRIC-ல் உள்ள நம்மளோடு சேர்ந்த நாடு தானேன்னு நினச்சுக்கிட்டேன்.

குட்டித் தூக்கம் போட்டுட்டு மறுபடி 1.30க்கு எழுந்தேன்.

பிரேசில்  -  க்ரோஷியா

முதல்  பத்து நிமிஷம் பார்த்ததும் என்னடா நம்ம ஆளுக -பிரேசில் - சரியா ஆடலைன்னு நினச்சேன். ஆனா பிரேசில் ஆளுக பூரா க்ரோஷியா இடத்தில் கோலைச் சுத்தி நிக்கிறாங்க. ஆனால் பந்தை பாஸ் பண்றது சரியா இல்லைன்னு தோணுச்சு. மக்கள் கொஞ்சம் இன்னும் ‘சூடாகணுமோ’ அப்டின்னு நினச்சேன். இந்தப் பத்து நிமிஷத்தில இரண்டு மூணு தடவை பந்து பிரேசில் பக்கம் வந்தது. மூணு தடவையுமே க்ரோஷியாவின் லெப்ட் விங்கர் பந்து கிடச்சதும் அம்பு மாதிரித ங்கள் கோலில் இருந்து பாய்ந்து   பிரேசில் கோயிலுக்கு வந்தார். அதிலும் ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் அப்படி வந்து ஓங்கி அடிச்சார். பிரேசில் கோலின் வலது பக்கம் அரையடி விலகிச் சென்றது.

பிரேசில் மேல கொஞ்சம் கோபத்தில் இருந்தேனா... அதுனால .. ‘அடடா... இது ஒரு கோலாக இருந்திருந்தா இனிமேலாவது பிரேசில் ஒழுங்கா விளையாட ஆரம்பித்து விடாதான்னு நினச்சேன். என்ன நினப்போ ...! பதினோராவது நிமிடத்தில் அதே மாதிரி லெப்ட் விங்கர் பாலை அடிச்சி, பிரேசில் கோல் கிட்ட கொஞ்சம் களேபரம். அதில் பிரேசிலின்  மொசில்லா காலைத் தட்டித் தாண்டி கோலுக்குள் விழுந்தது. நினச்சது மாதிரி அதன் பின் பிரேசில்லுக்கு இன்னும் கொஞ்சம் சூடு பிடித்தது.

பிரேசில் மேல் அப்படி என்ன ஆர்வமோ. இருந்தாலும் உலகக் கோப்பையில் பல தடவை கோபம் தான் வரும். ரொனால்டே பற்றி நிறையச் சொன்னாங்க. மொத்தம் மூணு தடவை உலகக் கோப்பையில் விளையாடினார். ரொம்ப எதிர்பார்ப்போடு நான் இருந்தப்போ அவர் விளையாட்டு நல்லா இல்லை. அதன்பின் ரோடின்ஹோ பிடிச்சிது. அதன் பின் வந்த உலகக் கோப்பையில் அவர் சோபிக்கவில்லை. நெய்மர் கதையும் அப்படி ஆகிவிடுமோன்னு  நினச்சேன். ஆனால் நெய்மர்  நன்றாகவே விளையாடினார். ஆனாலும் கோச் ஸ்கோலார் நெய்மர் மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்துள்ளார் போலும். கார்னர் ஷாட், பெளல் ஷாட், பெனல்டி ஷாட் என்று எல்லாமே நெய்மர் தான் அடித்தார். நேற்று ஒரே ஒரு கார்னர் ஷாட் மட்டும் வேறு ஒருவர். மற்றதெல்லாம் நெய்மர் என்று நினைக்கிறேன்.

பிரேசில் மூன்று கோல் போட்டு வென்றது. நெய்மர்,  பெனல்ட்டியில் நெய்மரின் இரண்டாவது கோல், ஆஸ்கர்.

இரண்டாவது நாளின் இரண்டாம் போட்டி - போன ஆண்டு பைனலில் மோதிய ஸ்பெயினும், நெதர்லேண்டும். ஆக அதைக் கட்டாயம் பார்க்கணும் இன்று.


*
இன்னொரு பெரிய சந்தேகம். க்ரோஷியா எங்க இருக்குன்னே தெரியாது. 
இந்த வருஷம் விளையாடுற ஒவ்வொரு நாட்டுப் படத்தை மட்டுமாவது  
பார்க்கவாவது செய்யணும்னு நினச்சிருந்தேன். இந்த நாட்டைப் பார்த்தா ...

        நம்ம தமிழ் நாடு மாநிலம்………………….. ஆனால் க்ரோஷியா ...


கி.மு. 500க்கும் முன்பே தமிழர்கள்  ……… நாட்டின் ஆரம்பம் – 7ம் நூற்றாண்டு
நமது மொழியோ ஒரு செம்மொழி…           நாட்டின் விடுதலை - June 1991
மக்கட்தொகை 7 கோடி ………………………  மக்கட்தொகை நாலே கால் கோடி, 
 130,058 சதுர கி.மீ.   ……………………….   56,594 சதுர கி.மீ.
(50216 சதுர மைல்)


என்ன சொல்ல வர்ரேன் தெரியுதா? இதில் இன்னொன்று கேள்விப்பட்டேன். பல ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து விளையாடும் அளவிற்கு வெப்ப நிலை ஆண்டிற்கு சில மாதங்கள் மட்டுமே. மற்ற நாளில் எங்கும் பனி. அந்த நாடுகளும் விளையாட்டில் உயர் நிலைக்கு
வந்திருக்கின்றன. ஒரே விளையாட்டு என்றில்லாமல் பல விளையாட்டிலும்  ஆர்வமும், தரமும் இருக்கு.

ஆனா .... நாம் மட்டும் ஏன் இப்படி?
இவங்களுக்கும் உலகக் கோப்பைக்கும் என்ன தொடர்பு? இங்கே வாசித்துக் கொள்ளுங்கள்!

இங்க என்னடான்னா ... தூக்கம் முழிச்சி தொலைக்காட்சி பார்க்கிறதுக்கே தங்ஸிடம் ரொம்ப வாங்கிக் கட்ட வேண்டியதிருக்கு... !
No comments:

Post a Comment