Friday, April 29, 2005

9 நேற்று பார்த்த படம்...

நேற்று தீபா மேத்தாவின் EARTH- படம் பார்த்தேன். பாவம்,மணிரத்தினம். இரண்டேகால் மணி நேரம் ஓட்ட வேண்டிய கட்டாயத்தால் 'உயிரே..உயிரே'-யில் ஆரம்பித்து, 'குட்டி குட்டி ராக்கம்மா'-க்குப் போய் பிறகு 'பம்பாய்' என்ற படத்திற்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. build up கொடுப்பதற்குள் எடுப்பவர் - பார்ப்பவர் 'தாவு' தீர்ந்துவிடுகிறது. ஏனோ EARTH படம் பார்த்ததும் நம் பம்பாய் படம் நினைவுக்கு வந்தது. தரமும் தெரிந்தது.

EARTH: படம் முழுவதும் பச்சை நிறமும் (பாகிஸ்தான்?) காவி நிறமும்(இந்தியா?) மேலோங்கித் தெரிகின்றன. சூரிய ஒளியின் விளையாட்டு படம் முழுவதும் ஆக்கிரமிக்கிறது. இது படப்பிடிப்பைப் பற்றிய சிறப்பு.

மணிரத்தினம் படத்தில் வசனங்கள் மிகக் குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த படத்தைப்பார்த்தால் என்ன சொல்வார்களோ. அதோடு கதை மாந்தர்கள் வசனம் எங்கே பேசுகிறார்கள், இயல்பாய் வாழ்ந்து இருக்கிறார்கள். அவ்வளவே. மிகையான பேச்சோ, நடிப்போ கிஞ்சித்தும் இல்லை-அந்தக் குழந்தையையும் சேர்த்துதான். அந்தக் குழந்தை- நம் தமிழ்ப் படத்தில் வரும் குழந்தைகள் மாதிரி - எந்த தத்துவமும் பேசுவதில்லை தெரியுமா?

முக்கியமாக பம்பாய் நினைவுக்கு வரக் காரணமாயிருந்தது இந்த படத்தில் வரும் இந்து-முஸ்லீம் வன்முறைக்காட்சிகள். பம்பாயில் மிக விஸ்தாரமாகக் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இதில் மிகக் குறைவாகவே காட்டப்பட்டன. ஆனால், அதைப்பார்த்த அந்தக் குழந்தையின் பாதிப்பு மிகக் கவித்துவமாகக் காட்டப் படுவது மட்டுமல்லாமல், அந்தக் கோரக்காட்சிகளின் தாக்கம் நம் மீதும் விழுந்து அழுத்துகிறது. இயக்குனருக்கு hats off சொல்ல வேண்டிய காட்சி. வன்முறைக்காட்சிகள் குறைவு; பேச்சு, வசனம் ஏதும் இல்லை. ஆனால் தாக்கமோ மிக அதிகம்.
நம் படத்தில் அந்த நுணுக்கம் (subtlety),கவித்துவம் இல்லை; ஒரு முரட்டுத்தனம்தான் இருந்தது.

படம் பார்க்க ஆரம்பிக்கும்போது இசை யாரென்று பார்க்கத் தவறிவிட்டேன். படம் முழுவதுமாக நிறைந்த அதிராத அந்த இசை, வன்முறைச் சம்பவங்களுக்கு வந்த ரீ-ரிக்கார்டிங் படம் முடிந்தபிறகு ரீவைண்ட் போட்டு, இசை யாரென்று பார்க்கத் தூண்டியது. அது யாரென்று நினைத்தீர்கள்? சாட்சாத், நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்தான். பம்பாயில் வன்முறைச்சம்பவங்களுக்குக் கொடுத்த ரீ-ரிக்கார்டிங் மிக வன்முறையாக இருந்தது நினைவுக்கு வந்தது.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையால் அன்றும் நமக்கு தொல்லை; அது இன்றும் தொடர்கிறதே என்ற நிஜமான கவலை மனசு முழுவதும் நிறைகிறது.

இறுதியாக, படம் முடியும்போது வரும் கடைசி நான்கு வசனங்களைக் கேட்டதும் என்னிடமிருந்து என்னையும் அறியாமல் வந்த கெட்ட வார்த்தை (மன்னிக்கணும் எல்லோரும்) '
bloody bastards '!

யாரை அப்படி சொன்னேன் என்று அறிய ஆசையா? என் அடுத்த வலைப்பதிவுக்குக் காத்திருங்கள், சரியா.

3 comments:

நாடோடி said...

தருமி:

உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. ஆனால் அவர்கள் தான் பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாக்கினார்கள். அதை யாரும் மறுக்க முடியாது.

Auwwai said...

Anbulla Naadodi! we Indians did not unite BECAUSE of the Whites; we united INSPITE of them.
Auwwai

தருமி said...

நாடோடிக்கு
ரயில் விட்டது, போஸ்ட் ஆரம்பிச்சது..இப்படி இன்னும் நிறைய சொல்லலாமே...விட்டு விட்டீர்களே!

Post a Comment