Friday, August 04, 2006

168. சாதிகள் இருக்குதடி பாப்பா - முழுக்கட்டுரை


"It is certainly true that reservation for Other Backlward Classes will cause a lot of heart burning to others. But should the mere fact of this heart burning be allowed to operate as a moral veto against social reform? ...It burns the heart of all whites when the blacks protest against apartheid in South Africa. When the higher castes constituting less than 20% of the country's population subjected the rest to all manner of social injustice, it must have casued a lot of heart burning to the lower castes. ...... Of all the spacious arguments advanced against reservation for backward classes, there is none which beats this one about "heart burning" in sheer sophistry.

In fact the Hindu society has always operated a very rigorous scheme of reservation, which was internalised through caste system. Ekalaiva (Mahabharata) lost his thumb and Shambhuk (Ramayana) his neck for their breach of caste rules of reservation. The present furor against reservations for Other Backward Classes is not aimed at the principle itself, but against the new class of beneficiaries as they are now clamouring for a share of the opportunities which were all along monopolised by the higher castes." (Mandal Commission Report - chapter XIII)



"OBCs constitute 12.55% of the total number of Central Government employees whereas their aggregate propulation is 52%. Their representation in Class I jobs is 4.69%, less than 1/10th of their population to the country's total population. (Mandal Commission Report - Chapter XIV)





I. முதல் பகுதி


இட ஒதுக்கீடு பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு:

1857-ல் ஆரம்பித்த ஒரு புரட்சியும், 1909,1919 -களில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தவேண்டுமாயின் இந்நாட்டு மக்களையும் அரசுப்பணியில் அமர்த்தினால்தான் முடியும் என்ற கருத்தில் புதிய சட்ட திட்டங்கள் கொண்டுவந்து ( J.S. Mill ) நமக்கு ஆங்கிலேயரின் அரசுப் பணியில் சேரும் வழி பிறந்தது.

1928 - COMMUNAL G.O. - மேற்கண்ட திட்டத்தின் தொடர்பாகவே...தமிழ்நாட்டில் மட்டும் - அனைத்து தமிழ்மக்களும் 5 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு அனைத்து அரசுப்பணிகளும் அவர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன. இத்திட்டம் சமூக நீதிக்காகத் தோன்றிய நீதிக்கட்சியின் முத்தையா முதலியாரால் மதராஸ் ராஜதானியில் கொண்டு வரப்பட்டது.

1940 - முதல் தமிழ்நாட்டில் மட்டும் - உயர் கல்விக்கும், தொழிற்கல்விக்கும் மேற்கண்ட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டன.

1947 - முதல் தமிழ்நாட்டில் மட்டும் 5 வகுப்பினர் என்பது 6ஆக பிரிக்கபட்டு மேற்கண்ட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டன.

26.01.19550 - நாடு குடியரசானபோது இந்திய அரசியலமைப்பு விதி 16 (4) B.C., S.C., S.T. ஆகிய மூன்று பிரிவினருக்கு அரசுப்பணிகளில் மட்டும் இட ஒதுக்கீடு அளிக்க வழி`செய்தது.

இந்த விதியைச் சார்ந்து, சென்னை மாகாணத்தில் அளிக்கப்பட்டு வந்த வகுப்புவாரி அடிப்படை செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தன.

1950 - ' 51 - இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாட்டில் பெரியாரின் போராட்டமும் அம்பேத்காரின் முயற்சியாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் புது விதி ஒன்று - 15 (4) சேர்க்கப்பட்டது.

மீண்டும் சென்னை மாகாணத்தில் மொத்த அரசுப் பணிகள் முன்பு போலவே 6 வகுப்பாருக்குப் பிரித்தளிக்கப்பட்டன.

1954 முதல் 1971 வரை - தமிழ்நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு25 % இடங்களும், பட்டியல் குலத்தாருக்கு 16% இடங்களும், ஆக 41% இடங்கள் மட்டுமே பிரித்தளிக்கப்பட்டன.

1972 முதல் 31.1.1980 முடிய - பிற்படுத்தப்பட்டோருக்கு: 31%; பட்டியல் குலத்தாருக்கு: 18%
1.1.1979-ல் பிரதமர் மொரார்ஜியால் மண்டல் குழு அமைக்கப் பட்டது.
1.2.1980 முதல் - தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 50%; பட்டியல் குலத்தாருக்கு 18%;

1989 முதல் -தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 50%; பட்டியல் குலத்தாருக்கு 18%; முதல் முறையாக பழங்குடியினருக்கு 1% -- ஆக 69% இடங்கள் பிரித்தளிக்கப்பட்டன. இதில் பிற்படுத்தப் பட்டோருக்கான 50% ல் 20% மிக பிற்படுத்தப்பட்டோருக்குப் பிரித்து அளிக்கப்பட்டன.

1977 முதல் 'பொதுக்கல்வி' பொது அதிகாரப்பட்டியலுக்கு (concurrent list) மாற்றப் பட்டதால் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும், மேலாண்மை உரிமையும் இல்லாது போயிற்று.

1980களின் ஆரம்பத்திலிருந்தே கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைந்தமையால் தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைய தோன்ற ஆரம்பித்துவிட்டன. இக்கல்வி நிலையங்கள் அந்தந்த மாநிலத்தில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக நடப்பில் இருந்தது. மாணவர் சேர்க்கை, படிப்பு இவைகளுக்கான கட்டணம் எவ்வளவு என்பதையும் மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் இருந்தது.

12.10.2005ல் உச்ச நீதி மன்றம் மேற்பட்ட நடப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பின் விளைவுகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உயர் கல்வி பெறும் வாய்ப்பை அடியோடு தடுப்பவை ஆகும். மாணவர் சேர்ப்புக்காக இக்கல்வி நிறுவனங்கள் பெறும் பெருந்தொகை (capitation fee) ஒடுக்கப்பட்டவர்களின் கல்வியாசைகளை நிராசையாக்கின. பணம் இருந்தால் போதும். so called 'merit' என்பதற்கு எந்த மரியாதையும் கிடையாது என்ற நிலை வேரூன்றியது. ஆகவே இதை எதிர்த்து சட்டத்திருத்தம் ஒன்று கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கையோடு பரவலான அரசியல், சமூக அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதே சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், திரு இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ஆய்வுக் குழுவும் சட்ட திருத்தம் தேவையென்று பரிந்துரை செய்தது.

20.12.2005 அன்று புதிய 104வது சட்ட திருத்தமாக புதிய உள்விதி ஒன்றை - 15 (5) - பாராளுமன்றம் நிறைவேற்றியது.

விதி 15 (5) : - ".......... சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கிய எந்த வகுப்புக் குடிமக்களுக்கும் அல்லது பட்டியல் குலத்தினருக்கும் மற்றும் பழங்குடியினருக்கும் இவ்வகுப்பினரின் முன்னேற்றங் கருதி, இவர்களுக்கென்று கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக உள்ள ஏற்பாடு எதையும் சட்ட ஏற்பின் மூலம் (by law) - அரசிடம் நிதி உதவி பெறுகிற அல்லது நிதி உதவிபெறாத நிறுவனங்களில் அரசு செய்வதைத் தடுக்காது. அரசமைப்பு விதி 30(1) இன்படி மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விதி பொருந்தாது."

1955-லேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மைய அரசு கல்வியிலும், அரசு வேலைகளிலும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய இட ஒதுக்கீட்டிற்கு, 1994 வரை மண்டலின் பரிந்துரைக்காகக் காத்திருந்து மைய அரசின் வேலையில் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடிந்தது. கல்விக்கான முழுமையான் இட ஒதுக்கீட்டை மறுப்பது 60 விழுக்காடாக உள்ள 60 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உயர்கல்வி பெறும் உரிமையை மறுப்பதாகும்.
அதிலும் சிறப்பாக, முழுக்க முழுக்க மத்திய அரசின் உதவித் தொகையால் நடந்து வரும்
14 Central Govt. Universities
7 IITs
6 IIMs
6 IIScs
54 தொழில்-வணிகப் பயிற்சி நிறுவங்கள் (உள்நோக்கத்துடன்) மைய அரசின் பிடியில் இருந்து வந்துள்ள இந்த உயர் கல்வி நிறுவங்களில் 50 ஆண்டு காலமாக ஒரே ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடுகூட பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப் படவில்லை. இந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முழுக்க முழுக்க மக்களின் வரிப் பணம் - அதிலும் 60 கோடிக்கும் மேலான OBC, BC, SC, & ST செலுத்தும் வரிப்பணமே.
மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ள பதிவு எண்கள் 62, 63. 64-ல் கண்ட மேற்சொன்ன எல்லா மத்திய அரசுக் கல்வி நிறுவங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு செய்து நியாயம் வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது - இதற்கு வரும் நியாயமற்ற எதிர்ப்புகள் எவ்வளவாயினும்.





II. இரண்டாம் பகுதி.


ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?:

சாதிகளை இன்றே தூக்கியெறியுங்கள்; இட ஒதுக்கீடும் ஒரு மண்ணும் யாருக்கும் தேவையில்லை.

ஆனல் முதலில் சொன்னது நடக்குமா? நடப்பதற்குறிய எந்த அறிகுறியும் இல்லை. சனாதன தர்மமும் நிலைக்க வேண்டும்; சமூக நீதியும் கிடையாது என்பது என்னவிதமான மனப்பாங்கு?

ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் என்ற நம்பிக்கைக் கீற்றைக் கூடக் காண முடியாத இன்றைய சூழ்நிலையின் நிதர்சனங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். சாதிகள் இல்லை என்றோ, 'நம்மைப் போன்றவர்களுங்கூட' சாதிப் பிரிவினைகளைப் பற்றிப் பேசுவது தவறு என்றோ நினைத்தால் நாம் கண்களை மூடிக்கொண்ட பூனைகளாகத்தான் இருப்போம். நம்மிடையே சாதிகளும், சாதீய உணர்வுகளும் ஆழமாகவே பதிந்துள்ளன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன. கீழ்நிலை படுத்தப்பட்டவரைப் பார்த்து, அவருக்குச் சாதீயத் தரவரிசையில் சற்றே மேலேயுள்ளவர்கள் 'அவன்' மேலே வந்துவிடக்கூடாதே என்ற நச்சு நினைவோடு 'கீழ்சாதிக்காரன்' எப்போதுமே தன் அடிமையாகவும் தான் எப்போதுமே 'ஆண்டானாகவும்' இருக்கவேண்டும் என்ற மன வெறியை எல்லா சாதி நிலைகளிலும் பார்க்க முடிகிறது. இந்தக் காழ்ப்பு உணர்வு வெறியாக மாறி நித்தம் நித்தம் நம் முன் நடந்தேறும் கொடூர நடப்புகள்தான் எத்தனை எத்தனை. வெண்மணியும், திண்ணியமும், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி நடப்புகளும் ஒரு புறம் என்றால், கையில் செருப்புகளோடும், விளக்குமாறுகளோடு நடத்தப்படும் 'புனிதப் போராட்டங்கள்' மறுபுறம். அதிலும் இந்த இரண்டாம் வகை புனிதப் போராட்டங்கள் இருவகையில் மிகத் தரம் குறைந்தவைகள்:
ஒன்று: இந்த விளக்குமாறுப் போராட்டங்கள் வெற்றி பெருமாயின், காலங்காலமாய் இருந்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பல காலத்துக்கும் தொடரும்.
இரண்டாவது: தங்களையே முற்படுத்திக்கொண்டோர் தன் சக மனிதனை கேவலமாகவும், அவன் என்றும் எப்போதும் தனக்கு இணையில்லை என்ற அகம்பாவ நினைப்பையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் கீழ்த்தரம்தான் இப்போராட்டங்கள் என்று நமக்கு விளக்குகின்றன. தங்களையே, தங்கள் உள்ளக் கிடக்கையையே அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதற்கு மேலும் அந்தப் போராட்டங்களில் உள்ளடங்கியிருக்கும் 'தத்துவங்களைப்' பற்றி - பலரும் விமர்சித்ததற்குப் பின் - பேசாமல் விடுவதே நல்லது.

நம் சமூக உயர்வில் பங்களிக்காதவர் யார்? ஏதோ ஒரு வழியில் அரசுக்கு வரும் வருமானத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்கவில்லையா? அப்படியானால் அரசு தரும் service-களில் எல்லோருக்கும் பங்குபெற உரிமை உண்டா இல்லையா? அந்த உரிமை மத நம்பிக்கைகளால் சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினருக்கு - 75% விழுக்காட்டுக்கு மேல் - மறுக்கப்பட்டு வந்துள்ளது உண்மையில்லையா? மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்களுக்குச் 'சலுகைகள்' என்ற பெயரிலாவது இனியாவது புதிய கதவுகளைத் திறப்பது அரசின் முதல் கடமை இல்லையா?

இடஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்கு ஒரே வரியிலும் பதில் தரமுடியும்: To provide level playing field என்பதே அது. மண்டல் தன் அறிக்கையில் கூறுவது: " சமமானவர்களிடம்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமாக இல்லாதவர்களை சம்மானவர்களாகக் கருதுவதே சமத்துவமின்மை ஆகும்." ஒரே அமைப்பில் ஒரு பகுதியினர் கல்வியோடு தொடர்பு கொண்டவர்களாகவும், மற்றொரு பகுதியினர் பொது சமூகநலனுக்காக 'உழைக்கும் வர்க்கமாகவும்' பிரிக்கப்பட்டு வெகுகாலமாய் பிரித்து வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே தங்களை 'அறிவாளிகளாகப்' புனைந்து கொண்டு கல்வி தங்களுக்கே உரிய ஒரு விஷயமாகக் கற்பித்துக்கொண்டு இருப்பதுவும், மற்றவருக்குத் 'தகுதி' இல்லையென்ற கூற்றை கோயபல்ஸ் தனமாக திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்? (தகுதி, திறமை பற்றியப் பிரச்சனைகளைத் தனியாக, அடுத்ததாகப் பேசுவோம்).

நாம் எப்போதுமே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க நாட்டில் 1964-லேயே Proactive Employment Law என்ற சம வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தொகை, race - இவைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசு வேலைகளுக்கு மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்ற சட்டம் இயற்றப் பட்டுள்ளதே. சரியான இன்னுமொரு சான்று வேண்டுமெனின், டெட்ராய்ட் மாநிலத்தில் பாதிக்கு மேல் ஆஃப்ரோ-அமெரிக்கர்கள் இருந்தும் பல அரசு வேலைகளில் அதுவும் காவல் துறையில் மேல்பதவியிலிருப்பவர்கள் பலரும் வெள்ளையர்கள் என்பதை எதிர்ப்பு செய்தமையால், 50:50 என்ற அளவில் இரு சாராருக்கும் பதவிகள் கொடுக்கப் பட அதை எதிர்த்து வெள்ளையர் நீதி மன்றம் சென்ற போது நீதி மன்றம் விகிதாசார அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதே சரியென்று தீர்ப்பும் அளித்தது.

ஆனால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பை இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கே ஒரு பக்க நியாயம் - அதுவும் முற்படுத்திக்கொண்டோரின் நியாயம் - மட்டுமே படியேறும். ஏனெனில் இதுவரை உச்ச நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் நான்கு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர். இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகள் நம் நீதியரசர்கள் முன் தோல்வியடைவதே வாடிக்கை. அதிலும் நம் நீதியரசர்கள் எப்போதும் இந்த விஷயத்தில் மிகவும் proactive -ஆக இருப்பது கண்கூடு. 1950- ஆம் ஆண்டில் சண்பகம் துரைராஜ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராமணப் பெண் சென்னை உயர் நீதி மன்றத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்படுகிறது. பொதுவாக, கல்லூரியில் - பெயரளவிலாவது - பயிலப் போகும் மாணவர்களின் பெயரில் இம்மாதிரி வழக்குகள் தொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரோ ஒருவர் - மருத்துவப் படிப்போடு தொடர்பேதுமில்லாதவர் - வழக்கு ஒன்று போடுகிறார். ஸ்ரீனிவாசன் என்ற பொறியிய்யல் மாணவரும் இது போன்ற ஒரு வழக்கைத் தொடுக்கிறார், நீதியரசர் S.R.Das - அவர் சாதி என்ன என்பதை இங்கே குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியுமா, என்ன..? - உடனே அந்த வழக்கை எடுத்து, எடுத்த வேகத்தில் இட ஒதுக்கீட்டிர்கு எதிர்ப்பான தீர்ப்பை அ(ழி)ளிக்கிறார். வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு செல்கிறது. அங்கே உள்ள 'பென்ச்'சில் ஒரு நீதியரசர் மட்டும் இஸ்லாமியர்; மற்றவர் வழக்கம்போல். ஆகவே அங்கும் அதே தீர்ப்பு. இதிலும் ஒரு நல்லது நடந்தது. இத்தீர்ப்புகளுக்கு எதிராக பெரியாரால் தமிழ்நாட்டில் எழுந்த போராட்டமும், தில்லியில் அம்பேத்காரின் முயற்சியாலும் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டமாக மாறிற்று. நன்றி அந்தப் பெண்மணிக்கு; வழக்கில் தொடர்புள்ள அத்தனை நீதிபதிகளுக்கும்தான்!

அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது. 2005-ல் நடந்த இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்றும் நம் நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். சொந்தக் காசில் கல்லூரி நடத்துகிறார்கள் என்ற கோஷம் அவ்வப்போது வரும். ஆனால் வசதியாக, கல்விக்கூடங்களை நடத்துவதால் - அதுவும் இப்போதெல்லாம் அதுவும் ஒரு வியாபாரம்தான் என்பது யாருக்குத்தான் தெரியாது - கல்லூரி நிர்வாகிககளுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் பல உதவிகள், சலுகைகள் ( tax exemption on land, buildings, vehicles; exemption from land ceiling etc..etc..) மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்துதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள் நம் நீதியரசர்களும், ஏனைய தனியார் கல்லூரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும்.

இட ஒதுக்கீட்டை அனுமதித்தால் சமத்துவம் (equality) இல்லாமல் போய்விடும் என்று முற்படுத்திக்கொண்டோர் சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களது 'விளக்குமாறு போராட்டத்தில்' இந்த 'வசனம்' அடிக்கடி பலர் வாயிலிருந்தும் வந்தது. சமூகத்தில் சமத்துவம் உள்ளதா? இல்லாமலிருப்பின் அதற்குரிய காரணிகள் என்ன? யார்? சமூகத்தில் சமத்துவத்தை மறுப்பவர்கள், சமத்துவம் பிறப்பினாலாயே இல்லை என்பவர்கள் கல்வி வாய்ப்பில் சமத்துவம் பேசுகிறார்கள். சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காகத்தானே கல்வியில் முடக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதுள்ளது. இந்திய சமூகத்தில் 5% மட்டுமே ப்ராமணர்கள்; ஏனைய முன்னேறிய பிரிவினர்களையும் சேர்த்தால் இவர்கள் மொத்தம் 15% மட்டுமே. சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு அவரவர் மக்கள் தொகைப்படி 'விகிதாச்சார இட ஒதுக்கீடு' (proportional reservation) செய்திருந்தால் இன்று இவர்கள் 75முதல் 85% விழுக்காடு வரை ஆக்கிரமித்து இருக்க முடியுமா? ( எங்களிடம் 'திறமை' இருந்ததால் மேலே வந்தோம் என்று யாரும் இந்த இடத்தில் சொல்ல நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள்.)

வேறொன்றுமில்லை. ஓரளவேனும் இருக்கும் இப்போதைய இட ஒதுக்கீட்டினால் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால்,இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயலுகிறார்கள். முற்படுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது முன்னேற்றம் என்ற "நல்லெண்ணமே" இதற்கெல்லாம் காரணம். ஓட்டப் பந்தயத்தில் தனக்கு முந்திய இடத்தில் இருப்பவனை முந்துவதே ஒவ்வொரு ஓட்டப் பந்தயக்காரனின் முனைப்பாக இருக்கும். ஆகவேதான் சாதித் தரவரிசைகளில் கடைசிப் படிக்கட்டில் வைக்கப்பட்ட தலித்துகளின் முன்னேற்றம் அவர்களுக்கு சற்றே மேற்பட்ட படியில் வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. இவர்கள் எல்லோரும் ஓரளவாவது முன்னேறுவது இதுவரை முதலிடத்தில் இருப்பவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது.





III. மூன்றாம் பகுதி


திறமையும், இட ஒதுக்கீடும்:

இட ஒதுக்கீட்டின் மூலம் வரும் மாணவர்கள் திறமை இல்லாதவர்களாக இருப்பார்கள்; ஆகவே இட ஒதுக்கீடு கூடவே கூடாது.

தரத்திற்கு முதலிடம் கொடுத்தால்தான் நாடு உண்மையான முன்னேற்றம் காண முடியும். ஆகவே இட ஒதுக்கீடு கூடாது. அதுவும் உயர் கல்வியில் கூடவே கூடாது.

ஏகலைவனும், சம்புகனும்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். ராமாயணமும், மகாபாரதமும் இன்னும் முடியவேயில்லை.

**தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் வெறும் பாஸ் மார்க் வாங்கினாலே போதும்; அவர்களை எங்கள் கோட்டாவில் சேர்த்துக்கொள்ள உரிமை தர வேண்டும் என்று கல்லூரிகள் கேட்ட போது - இப்போது தரம் பற்றிப் பேசுவர்கள் எங்கே போனார்கள்?

**NRI மாணவர்களுக்கும் இதே போல் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி மருத்துவக் கல்லூரி இடங்கள் 'ஏலம்' விடப்படும்போது - இப்போது தரம் பற்றிப் பேசுவர்கள் எங்கே போனார்கள்?
தமிழ்நாட்டைப் பொருத்த மட்டிலுமாவது எல்லோருக்குமே தெரியுமே - உயர் கல்விக்குரிய நுழைவுத்தேர்வுகளில் cut-off மதிப்பெண்கள் எப்படி உள்ளன என்று. இதற்குப் பிறகும் இன்னும் அதே பல்லவியை எத்தனை நாட்களுக்கு 'ப்ரஸ்தாபித்து'க் கொண்டே இருப்பது?

cut-off மதிப்பெண்களில்தான் அதிக ஏற்றத்தாழ்வு இல்லையே; பின் எதற்காக இன்னும் இட ஒதுக்கீடு என்றொரு கேள்வி பலரிடமிருந்து. - இட ஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்குரிய பதில் அவர்களுக்குப் புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதே பொருள்.

1950கள் வரை முற்படுத்திக்கொண்ட சாதியினர் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், நன்றாகப் படிப்பவர்கள் என்றொரு 'மாயை' இருந்து வந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த மாயை, 60-களிலேயே சரியத் தொடங்கி, இன்றைக்கு அது முற்றிலுமாகத் துடைக்கப்பட்டு விட்டது. ஆராய்ச்சி, மருத்துவம், நீதித்துறை, ஆடிட்டிங், எழுத்து, ஊடகங்கள், படைப்பாளர்கள் - என்று அவர்கள் மட்டுமே கோலோச்சிய நிலையா இன்று? எல்லோரும், எங்கும் எதிலும் என நீக்கமற நிறைந்திருப்பது மட்டுமின்றி, இன்றைய டாப் - 2 என கருதப்படும் கம்ப்யூட்டர், biotechnology என்ற இரு துறைகளிலுமே முற்படுத்திக்கொண்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் அனைவருமே சமமான அளவு தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருக்கிறார்களே.

'அவனுக்குத்தன் படிப்பு வரும்; இவனுக்கெல்லாம் படிப்பா?' என்ற மமதையான நேற்றைய பேச்சு இன்று செல்லுபடியாகுமா? திறமைகள் எல்லோரிடமும் உண்டு; எல்லோரிடமும் அதற்குரிய ஜீன்கள் உண்டு. அவைகளைக் வெளிக்கொணரத் தேவையானது சாதி அடையாளம் - caste label - இல்லை; வாய்ப்புகள் மட்டுமே. இருட்டுக்குள்ளேயே வைத்திருந்த செடியை வெயிலுக்குக் கொண்டு வந்ததும் வீறுகொண்டு வளருமே, அது போல தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் புதிய வாய்ப்புகள் தரும் உத்வேகங்கள் அவர்களை வேகமாகவே முன்னெடுத்துச் செல்ல வைக்கும். இதுவரை மறுக்கப்பட்ட வாய்ப்புகளைத் தங்கள் உரிமைகளாக அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் 'விளக்குமாறு போராட்டக்காரர்களோ' அவர்களையெல்லாம் இப்போது இருக்கும் இடத்திலேயே வைக்கவேண்டும் என்ற தங்கள் மன நிலையை, மன வக்கிரத்தைத் தான் காண்பிக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? "....இன்னும்கூட அனைத்திந்திய அளவில் வழங்கப்படும் படைப்பாக்கத்திற்கான பரிசு - Innovation Awards - பெறுவோரில் 60-70% பேர் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியவர்கள்" என்கிறார் IIM -A முனைவர் அனில் குப்தா. அப்படியென்றால் IIM-ல் படித்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், நம் வரிப்பணத்தில் பெரிய படிப்பு படித்துவிட்டு பெரிய சம்பளத்திற்காக அயல் நாடுகளுக்குப் பயணம் போய்விடுகிறார்கள்.

வரலாற்றிலிருந்து இன்னொரு பக்கம்:

இட ஒதுக்கீட்டை மறுக்கும் முற்படுத்திக் கொண்டோரின் தகுதி, திறமை குறித்து சந்திரபான் பிரசாத் என்பவர் Pioneer நாளிதழில் சில வரலாற்று உண்மைகளைப் பற்றிச் சொல்கிறார்:

" 1858-ம் ஆண்டில் சென்னையில் பட்டப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து பேராசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால் கல்லூரியைத் தொடந்து நடத்த முடியவில்லை. ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் 'இண்டர்மீடியட்' வகுப்பில் முதலாம், இரண்டாம் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதைத் தகுதியாக நிர்ணயித்திருந்தது. மேலும் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அன்று மேல்சாதி மாணவர்களால் முதலாம், இரண்டாம் தரங்களில் தேர்ச்சி அடைய முடியவில்லை. தேர்ச்சிக்கான 40 மதிப்பெண்ணையும் பெற முடியவில்லை. மேல்சாதியினரின் வற்புறுத்துதலின் காரணமாக ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேருவதற்கான தகுதியைக் குறைத்தது. மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களும் பட்டப் படிப்பில் சேரத் தகுதி வாய்ந்தவர்கள் என அரசு அறிவித்தது. தேர்ச்சிக்கான மதிப்பெண் 40%-லிருந்து 33% ஆகக் குறைக்கப் பட்டது."
1901-ம் ஆண்டு கல்கத்தாவில் மெட்ரிகுலேசன் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 40%-லிருந்து 33% ஆகக் குறைத்திருக்காவிட்டால் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்க முடியாது.

1922-1927-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கல்வி அறிக்கையின்படி மேல்சாதி மாணவர்களில் 45% மருத்துவப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை; 35% மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்ச்சி அடையவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த தங்களது 'தகுதியற்ற நிலையை' மறந்து உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்ப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து இன்று 'விளக்குமாறு போராட்டம்' நடத்தப்படுகிறது!

all said and done, மேல்குடி மக்களோடு ஒப்பிடும்போது கீழ்மட்டத்தாருக்குத் 'தகுதி'களில் சில குறைபாடுகள் உண்டுதான். இந்த வேறுபாடு நம் ஜீன்களில் இல்லை; நம் வாழ்வியல் முறைகளால் இருக்கிறது. இந்த வேறுபாடு பிறப்பினால் இல்லை; வளர்ப்பினால் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பாலுமும், தாழ்த்தப்பட்டோர் கிட்டத்தட்ட முற்றிலுமே வறுமைச் சூழலிலிருந்தே வருகிறார்கள். மேற்படுத்திக்கொண்ட சாதியினரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வீட்டுச் சூழல், ஆயிரக்கணக்கில் பணம் கொட்டிக் கொடுத்து நுழைவுத் தேர்வுகளுக்காய் அவர்களைத் தயார் படுத்தும் பண வசதி - இவைகள் ஏதும் அவர்களிடம் இல்லை. அந்த வசதிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் - உனக்கு இதுதான் தொழில் என்று பிறப்பிலேயே தண்ணீர் தெளித்துவிட்டு விட்ட சாதீயக் கட்டுப்பாடுகள் தானே காரணம்? இந்தச் சாதீயக் கட்டுப்பாடுகள் எங்கிருந்து வந்தன? வேதங்களிலிருந்துதானே? வேதங்களை அன்றும் இன்றும் கட்டிக் காத்துக் காபந்து செய்து கொண்டிருப்பவர்கள் யார்? பஞ்சாபில் (மற்ற மாநிலங்கள் பற்றித் தெரியாது) 1947 வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உடமை தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. இப்படி விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் நில உடைமையைத் தடை செய்து விட்டு, இன்று நீ ஏழை, படிப்பறிவில்லாதவன், என்று கூறி அதோடு உனக்கு அறிவு இல்லை, திறமையும் இல்லை என்று பறையடிப்பதால்தானே பெரும்பான்மையான மக்களின் சமூகக் கோபம் முற்படுத்திக் கொண்டோரின் மீது உள்ளது. Level playing field கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்து விட்டு அதன் பின் எழுப்புவோம் திறமை பற்றிய கேள்விகளை.

கடைசியாக, cut-off மார்க்கை சிறிதே குறைத்து இட ஒதுக்கீட்டின் மூலம் இதுவரை பெரும்பான்மையோருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளவைகளில் பங்கு (அவர்களின் எண்ணைக்கையின் படி "சிறிய பங்கு"தான்) கேட்கும்போது 'திறமை' பற்றிய அரற்றல் வந்து விடுகிறது. கல்வித்தரம் அதள பாதாளத்தில் வீழ்ந்துவிடும் என்ற ஓலம் கேட்கிறது. 95 மார்க் வாங்குபவனுக்கும், 85 மார்க் வாங்குபவனுக்கும் (அவர்களது வாழ்க்கைச் சூழல், பொருளாதார வேற்றுமை என்பவை பற்றி இப்போது பேச வேண்டாமே) 'திறமை'யில் என்ன பெரிய வித்தியாசம்? சரி, 85 மார்க் வாங்கியவனுக்கு இடம் கொடுத்தாகி விட்டாச்சு; அதன் பின் படிப்பில், தேர்வில் அவன் 95 மார்க் வாங்கியவனுடந்தானே போட்டியிட வேண்டும். அவனுக்கென்று தேர்வுகளில் ஏதும் சலுகை உண்டா என்ன? அவனும் எல்லோரையும் போலவே முறையான தேர்வுகள் எழுதி தேறி வரவேண்டும். பின் end product-ல் தரம் எப்படி குறையும்? பொறியியலில் இட ஒதுக்கீட்டீல் இடம் பெரும் மாணவன் கட்டும் வீடுகளும், கட்டிடமும் ஆடிக்கொண்டே இருக்கும் என்றும், வைத்தியனானால் அவன் பார்க்கும் நோயாளி மட்டும் 'பொசுக்'குன்னு போய்டுவான் என்றும் அறிவற்ற முறையில் பேசுவதை இந்த 'விளக்குமாறு போராட்டக்காரர்கள்' நிறுத்தினால் நல்லது.



IV நான்காம் பகுதி

திரட்டுப் படலம் /Creamy layer:

இதற்கான சுருக்கமான ஓர் ஒற்றைவரிப் பதில்: இது இட ஒதுக்கீடு பெறுபவர்களின் கவலை; இதில் மேற்படுத்திக் கொண்டோருக்கு என்ன வேலை? ஆடு நனைகிறதே என்று இவர்களுக்கு ஏன் கவலை?
மண்டல் கமிஷன் தீர்ப்பில் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் கூறியது போல்..." "The milk is yet to boil; where is the cream now?"
பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மொத்த விழுக்காட்டில் பணக்கார-பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமெல்லாம் போகிறதே என்று மற்ற ஏழை-பிற்படுத்தப்பட்டவர்கள் கவலைப்படும் நிலை வரும்போது அவர்களே அந்தப் பிரசனையைத் தீர்த்துக் கொள்ளட்டுமே...இதில் 'விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு' என்ன வேலை?



V. ஐந்தாம் பகுதி

பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு:

இட ஒதுக்கீடே சமுதாயத்தில் பொருளாதார சமத்துவம் பற்றியதல்ல. சாதீயக் கட்டுகளிலிருந்து விடுதலையும், சமூக நீதி பெறுதலுமே அதன் கோட்பாடு. மேலே சொன்னது போலவே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால் இப்போதைக்கு நடைமுறைப்படுத்த பிரச்சனைகளும் உண்டு. தாழ்த்தப்பட்ட ஒருவர் பன்றி மேய்த்து மாதம் 10,000 ரூபாயும் சம்பாதிக்க முடியும். அதனாலேயே அவர் பிள்ளை இட ஒதுக்கீட்டில் இடம் பெற முடியாதென்றால் அப்படி ஒரு இட ஒதுக்கீடு எதற்கு? மாதச் சம்பளம் பெறும் பலரும் இதில் பலன் பெற முடியாதபடி போய், அதற்குப் பதிலாக, கள்ளக் கணக்கெழுதி பெரும் பணம் சம்பாதிக்கும் மற்றொருவர் இட ஒதுக்கீடு பெற முடியும். ஒவ்வொரு மனிதனின் பொருளாதர நிலையை முற்றாக அரசு அறிந்துகொள்ள - அமெரிக்காவில் உள்ளது போல social security number - ஏதுவாக அரசு திட்டம் கொணர்ந்து அதன் பின் பொருளாதாரத் தகுதி பார்த்து இட ஒதுக்கிடு தரட்டும். அதுவரை இப்போது உள்ள அளவுகோல்களை வைத்தே இட ஒதுக்கீடு தரவேண்டும்.


VI. ஆறாம் பகுதி

தற்போதைய நிலை:

நம் அரசுகள் பார்க்காத போராட்டங்களா? நினைத்திருந்தால் இந்த 'விளக்குமாறு போராட்டங்களை' எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். மனமிருந்தால் வழியிருந்திருக்கும். அதை விட்டு விட்டு, கண்காணிப்புக் குழு, அறிஞர் குழு என்றெல்லாம் அமைப்பது நமது நாட்டு அரசியல்வாதிகள் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு விஷயத்தை இழுத்தடித்து, பிரச்சனையையே மக்களை மறக்க வைக்கும் ஒரு டெக்னிக்தானே!
இப்போதே பல உயர் கல்வி நிலையங்களில் நுழைவுத் தேர்வு முடிந்து விட்டது என்ற காரணம் சொல்லி 2006-2007-ல் இட ஒதுக்கீடு இல்லையென்றாகி விட்டது.அடுத்த ஆண்டுக்கு இன்னும் எத்தனை எத்தனை நொண்டிச் சாக்குகளோ?
அதோடு முற்படுத்திக் கொண்டோரிடமிருந்து பிறந்து அரசால் தத்து எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள இன்னொரு 'பரிந்துரைப்பு' - உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது. சும்மா சொல்லக் கூடாது - இது ஒரு நல்ல ராஜதந்திரம். கீழ்க்கண்ட கணக்கு அதைத் தெளிவுபடுத்தும்.

தற்போது I.I.T.களில் உள்ள மொத்த இடங்கள் : 4000
54% இட அதிகரிப்பில் கூடும் இடங்கள் : 2160
ஆக மொத்த இடங்கள் : 6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (4000ல் 27%) : 1080
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - SC (4000ல் 15%) : 600
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - ST (4000ல் 7.5%) : 300
B.C. + S.C. + S.T. 27%+15%+7.5%) : 1980 - இது மொத்த 6160 இடங்களில் வெறும் 32%. அதாவது ஏற்கெனவே உள்ள 49.5% யை வெறும் 32% ஆக மாற்றும் நல்ல ராஜதந்திரம். மீதியுள்ள 68%(51%க்குப் பதிலாக) விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு!
இந்தத் திறமைகளுக்குப் பஞ்சமேயில்லை நம் விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இதை விடவும் சட்டத்தை எப்படி தைரியமாக, தந்திரமாக, வெளியே தெரியாதபடி (கமுக்கமாக) தங்களுக்குச் சாதகமாக முறியடிக்கும் trickery-யை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கிறீர்களா? இதோ அந்தச் சாதனை........
I.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் - இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும் மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C. என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.

கதைபோல் தெரிகிறதா? எனக்கும் அப்படியே தோன்றியது. எப்படி இப்படிப்பட்ட உயர் அமைப்புகளில் விதிகளை இந்த அளவு மீறி (trickery and violation of law) தைரியமாக மிக மிக அநியாயமான ஒரு செயலைச் செய்திருக்க முடியும் எனபது ஆச்சரியமாகவும் கவலைக்குறிய ஒன்றாகவும் இருக்கிறது. எத்தனை பேரின் கூட்டில் இந்தச் சதி நடந்திருக்க முடியும்? இதை எப்போது நம்ப முடிந்தது என்றால்...

க்ளீட்டஸ் என்பவர் UPSC தேர்வுகள் எழுதி GRADE I Officer ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நடந்தவைகளை வைத்து CAT -Central Administration Tribunal -க்கு ஒரு Original Application ( O.A. - this is equivalent to writ petition ) கொடுத்தார். அஜ்மல்கான் என்ற வழக்கறிஞர் இதை க்ளீட்டஸுக்காக வாதாடினார். நீதிபதி திருமதி பத்மினி ஜேசுதுரை இவ்வழக்கில் UPSCக்கு எதிரான தீர்ப்பளித்தார். இதன் பிறகு விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என நம்பப் படுகிறது. எப்படிப்பட்ட வடிகட்டிய அநியாயம் என்பதை இந்த வழக்கைப் பற்றி அறிந்த போது உணர்ந்தேன். ஆனால் இப்படி 'வடிகட்டிய' போதும் வெற்றி பெற்ற B.C., S.C., S.T.மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வளவு தடைகளையும் மீறி அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் தகுதியின் தரம் பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெளிவாக்குகிறது.

ஆனாலும் இப்போதும் இன்னொரு தடைக்கல் இருப்பதாக நண்பர்கள் மூலமாக அறிகிறேன்: Prelims, Mains - இவைகளில் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது மாணவர்களை random-ஆக interview boards-ல் ஏதாவது ஒன்றிற்கு அனுப்புவதே சரி. அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களது சாதி பற்றிய விவரங்கள் ஏதுமின்றி நேர்முகத் தேர்விலும் அவர்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே சரி.Prelims, Mainsதேர்வுகளில் மாணவர்களின் தனி அடையாளங்கள் எப்படி திருத்துபவர்களுக்குத் தெரியாதோ அதே போலத்தானே நேர்முகத் தேர்விலும் இருக்க வேண்டும். pedagogical principlesகளில் 'halo effect' என்று ஒன்று சொல்வார்கள். மாணவனைப் பற்றிய எவ்வித முன்முடிவுமின்றி அவனது தேர்வுத்தாள் திருத்தப்பட வேண்டும்; இல்லையெனில் மனித மனம் முதலில் மாணவன் மீது திருத்துபவர் கொண்ட முடிவின்படி மதிப்பீடு செய்யும் தன்மை கொண்டதே என்பது இந்த 'halo effect' .
UPSC நேர்முகத் தேர்வுகளில் முதலில் OC. மாணவர்கள் தொடர்ந்து அனுப்பப் பட்டு அதன் பின் ..B.C.,... S.C..... S.T....என்று சாதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டே அனுப்பப் படுகிறார்களாம். தேர்வாளர்களாக இருப்பவர்களில் இன்றைய நிலையில் யார் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இம்முறையினால் நேர்முகத் தேர்வுகள் 'halo effect' இல்லாமல் நேர்மையாக இருக்குமா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இந்த ஏமாற்று வேலை எத்தனை ஆண்டுகள் நடந்து வருகிறதோ; யாமறியோம். ஆனால் இது பற்றிய முழு விவரமும் இந்த ஏமாற்றை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் தொடர்ந்த வழக்குக்கள் பற்றிய விவரங்களோடும், முழு விபரத்தோடும் ஷரத் யாதவ் 0-7.07.2006-ல் The Hindu-வில் எழுதிய முழுக்கட்டுரையினை இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன்.


VII. ஏழாம் பகுதி

முடிவுரை:

ப்ராமணர்களை 'வந்தேறிகள்' என்றார்கள் ஒரு பிரிவினர்; இன்று human genomics பற்றிய ஆராய்ச்சிகளும், DNA பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் "நாம்' அனைவரும் ஒரே RACE என்கிறார்கள். (ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்? ) எனக்கு இந்த இரண்டாவதுதான் பிடிக்கிறது ! வந்தேறிகள் என்று அழைக்கப்படும் போது வருந்திய, கோபமுற்ற முற்படுத்திக் கொண்டோர் DNA கூற்றினை உண்மையென ஒத்துக்கொள்கிறார்களா?

நம் ஒவ்வொரு சாதியின் 'gene pool' ஒன்றும் water tight compartments இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலப்பரப்பில் வாழும் எந்த உயிரினங்களுக்குள்ளும் (community) genetic exchange நடந்தே தீரும் என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே என்னதான் சாதிப் பிரிவினைகள் என்ற கோடுகள் போட்டு மக்களைப் பிரித்து வைத்திருந்தாலும் , பாலுணர்வுக்கு ஏது வரைமுறைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்திருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குறிய gene pool 100% purity-யோடு இருக்க சாத்தியமேயில்லை. நடுவில் ராமானுஜர் தாழ்த்தப்பட்ட சாதியினரை 'முற்படுத்திய' வரலாறு வேறு உண்டு.

இப்படி வழியில் எவ்வளவோ! என்னென்னவோ !! பின் ஏன் இன்னும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்?! நம் DNAக்களில் இருக்கும் ஒற்றுமைகளை நாம் புரிந்து கொள்ளப் போகும் காலம் எப்போது? விளக்குமாறே உன் கதி; உன் தொழில் என்ற தள்ளப்பட்டு சமூகத்தின் கடைசியில் நிற்கும் ஒருவருக்கும், 'போராளி'யாய் இன்று தெருவில் விளக்குமாறோடு நிற்பவருக்கும் என்ன வேறுபாடு? இரண்டு பேருமே சொந்தக்காரர்கள்தானே !

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இது 'சாதிப்புத்தி' என்று ஒவ்வொரு சாதிக்கும் சில 'பண்பு நலன்களை' (??!!)க் கூறுவதுண்டு. இன்று அந்த மாதிரியான பேச்சு ஒருவாறு குறைந்து வந்து கொண்டிருந்தது. இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள் நம்மை மறுபடியும் 50-60 ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு கொண்டு போய்விட்டது.

இன்னும் 2000-3000 ஆண்டுக்கதைகள் எதற்கு? கடந்த 50-100 ஆண்டுகளில் எல்லோருக்கும் பொதுவான வசதி வாய்ப்புகளைப் பெரு வாரியாக ஒரு சிலர் அடைந்து விட்டனர். சாதியின் பெயரில், சாதி உயர்வு சொல்லி அதனால் வந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே கிடைத்து வந்திருக்கிறது. சாதிப் பிரிவினைகளை மட்டுமே வைத்து வந்த வாய்ப்புகள் அவை. வேறு எந்த காரணமுமில்லை. திறமை நம் எல்லோருக்கும் உண்டு. இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும். உருவாக்கப்பட வேண்டும்.ஏற்கெனவே பலன்களை corner செய்துகொண்டவர்கள்தான் இதற்காக முதலில் நேசக்கரம் நீட்ட வேண்டும்; இனியாவது எல்லோரும் முன்னேறினால்தான், எல்லோரையும் முன்னேற்றினால்தான் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது; அதுவே முறையானது; மனிதத்தனமானது என்ற உணர்வு வரவேண்டும். வருமா..?

B.C., S.C., S.T., - இவர்களுக்கு ஒரு வார்த்தை:

சமூக நீதி கிடைக்கப் பெறுவதற்குரிய வரலாற்றின் ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கிறோம். பலருக்கும் இட ஒதுக்கீடு, அதனைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கல்வி, வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் உள்ளது; அதனை ஒட்டி நடக்கும் போராட்டங்கள் யாருக்காகவோ, எதற்காகவோ நடப்பது போல் பலரும் இருப்பதாகவே படுகிறது. புரிந்து கொள்வதும், புரியாதவருக்குப் புரிய வைப்பதும் இன்றைய கால கட்டத்தில் ஒரு கட்டாயத் தேவை.

புரிந்தவர்கள், சமூக, பொருளாதார தளங்களில் மேலே வந்து விட்டவர்கள், படித்தவர்கள் - இப்படிப் பலரும் சாதிகளைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டு, தங்களைப் புனித பிம்பங்களாக கருதிக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்காதது பெரும் தவறு. எதிர் காலம் அவர்களைக் குற்றம் சொல்லும்.


இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment