Wednesday, October 06, 2010

444. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*
செல்லூர் ரோடு. நித்தம் நித்தம் கல்லூரிக்குச் சென்ற வழி; ஓய்வு பெற்ற பிறகும் தங்ஸின் பள்ளிக்கு நித்தம் நித்தம் சென்ற வழி. 
வழியில் ஒரு ரயில்வே கேட்.  தாண்டிப் போகும் போது ஏறத்தாழ பாதிக்குப் பாதி தடவை ரயில்வே கேட் மூடியிருக்கும். நம் சுய ஒழுக்கம் இல்லாத மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இரட்டைச் சக்கரக்காரர்களுக்கும், மூன்று சக்கரக்காரர்களுக்கும் எப்போதும் எங்கும் எந்த ஒழுங்கும் கிடையாது. அவர்கள் 'நீச்சலடித்து' கேட்டுக்குப் பக்கத்தில் போய் விடுவார்கள். இவர்களை விட பெரிய கார்கள் - படித்த மேதாவிகள் ஓட்டும் கார்களும் - வரிசை என்று ஒன்றிருப்பதைக் கண்டு கொள்வதேயில்லை. கேட் திறந்ததும் தள்ளு முள்ளுதான். ஆம்புலன்ஸ் வண்டி வந்தால் கூட நம் மக்கள் விலகுவதில்லை. இப்படி அடைத்து வைத்த கேட் திறந்ததும் வரும் mad rush பார்க்கக் கண் கொள்ளா காட்சி. யாரையும் எதுவும் செய்யமுடியாது. தவறாக உங்கள் வண்டியை ஒட்டி யாராவது வந்து, அதை நீங்கள் கொஞ்சம் முறைத்தால் - புது கார் வைத்திருந்த நண்பர் ஒருவருக்கு நடந்தது - முறைக்கப்பட்டவர் ரொம்ப கூலாக, 'என்ன ... உரசி, ஒரு இழு இழுத்துட்டு  போகவா?' என்று அன்போடு கேட்பார். எங்கள் தினசரி வாழ்க்கையில் இது ஒரு பெரிய கண்டம். தண்ணீர் கண்டம் மாதிரி இது ஒரு கேட் கண்டம்!

ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் இங்கே ஒரு மேல்பாலம் கட்ட ஆரம்பித்தார்கள். ஆஹா! நல்ல காலமென நினைத்தோம். இதே சமயத்தில் இந்த சாலைக்கு இணையாக வற்றா வைகை நதியின் ஓரம் இன்னொரு சாலை கட்டினார்கள். இந்தப் பாலம் கட்ட ஆரம்பித்ததும் சில பாலத்தூண்கள் அந்த சாலையில் நடுவிலேயே கட்டப்பட்டு அந்த சாலை கேட்பாரற்று வெற்றுச் சாலையாக இன்றும் இருக்கிறது. ரோடு போட்டவன் ரோடு போட்டான்; பாலம் கட்டியவன் பாலம் கட்டினான் .. அவ்வளவு தான். இதுகூட பரவாயில்லை .. இன்னொரு பாலம் - ரயில் பாதைக்கு இணையாக - கட்டினார்கள். அந்த வேடிக்கைக் கதை பற்றி இங்கே பாருங்கள்.

சரி .. ஏதோ ஒரு பாலம் வரப்போகிறதே என்று எல்லோரும் மகிழ்ந்தோம். ஆனாலும் ஏழு ஆண்டுகளாக இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நடுவில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ரயில் பாதைக்குக் கீழே, கேட்டுக்குப் பக்கத்தில் ஒரு underground road கட்டினார்கள். விறு விறுவென்று கட்டி முடித்தார்கள். இனி இரு பக்க சாலைகளைச் சரி செய்து விட்டால் சிரமம் குறையுமே என்று நினைத்தோம். கட்டி முடிக்கப்பட்ட road under bridge-யை அப்படியே இன்னும் விட்டு விட்டார்கள். ஏன் அதனைக் கட்டினார்கள்; கட்டியபின் ஏன் விட்டு விட்டுப் போட்டு விட்டார்கள் -- எல்லாம் கேள்விகள் தான். பதில்தான் தெரியவில்லை.

எப்படியோ மேல் பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்களே .. அதுவாவது சீக்கிரம் வந்து விடுமென்று நினைத்தோம். ஆனால் நடுவில் நின்று போன பால வேலைகூட ஆரம்பிக்காமல் பல காலம் இருந்தது.  மு.க. அழகிரி தான் எம்.பி. ஆனதும் கொடுத்த உறுதிமொழியில் இந்தப் பாலம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்பதும் ஒன்று. அவரால் நின்றிருந்த வேலை ஆரம்பித்தது. வரும் நவம்பரில் கட்டி முடிக்கப்படும் என்றார்கள். அதே போல் வேலையும் முடியும் நிலைக்கு வந்து விட்டது. மு.க. அழகிரிக்கு மிக்க நன்றி.

கட்டி முடிக்கப்படும் நிலைக்கு வந்த இந்த நிலையில் இன்னொரு 'யாரைத்தான் நொந்து கொள்வது?' என்ற ஒரு கட்டம். பாலம் கிழக்கு - மேற்காகக் கட்டி முடிக்கப்பட உள்ளது. கிழக்குப் பாக ஆரம்பத்தில் இப்போது உள்ள சாலையில் பாலம் ஆரம்பிப்பதாக திட்டமிட்டு ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் பாலத்திலிருந்து 50 மீட்டரில் ஒரு பழைய கட்டிடம் இருக்கிறது.முன்பு ஒரு பெரியவர் ஒரு கயிற்றுக் கட்டில் போட்டு படுத்திருப்பார்; பார்த்திருக்கிறேன்.


இன்று அந்தக் கட்டிடத்தை படம் எடுக்கப் போகும்போது அருகில் இருந்த ஆட்டோக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் அந்தப் பெரியவர் இறந்து விட்டதாகவும், இப்போது அந்த கட்டிடம் எப்போதும் பூட்டியே கிடப்பதாகவும், அதன் உரிமையாளர் பக்கத்திலேயே வசிக்கிறார் என்றும் சொன்னார். அந்த உரிமையாளர் அந்த இடத்தை அரசுக்கு அளிக்க மறுப்பதால் இப்போது பாலத்தின் ஆரம்பம் ஒரு குளறுபடியான வளைவோடு திருத்தப்படுகிறது. படத்தில் பச்சைக் கோட்டில் நான் காட்டியிருப்பது திட்டமிட்ட படி இப்போது இருக்கும் சாலையையும் பாலத்தையும் இணைக்கக் கூடிய - 10 அடி நீளமுள்ள - ஒரு சின்ன சாலை. ஆனால் இக்கட்டிடம் மறைப்பதால் ஏறத்தாழ 200 அடி நீளத்திற்கும் அதிகமாக அந்தக் கட்டிடத்தைச் சுற்றி ஒரு சாலை புதியதாகப் போடுகிறார்கள். இதனைச் சிகப்பு வண்ணத்தில் காட்டியுள்ளேன்.

இதில் ஒரு நடைமுறைச் சிக்கல். பாலத்திலிருந்து கீழே இறங்கும்  ஒரு வண்டி உடனேயே ஒரு வளைவை - ஏறத்தாழ ஒரு  U - turnயை  - எதிர்கொள்ள வேண்டும். இதுவே போக்குவரத்துக்கு மிக்க இடைஞ்சலாக இருக்கும். இவ்வளவு காலம் எடுத்து ஒரு பாலம் கட்டி முடிக்கிறார்கள். அதன் ஆரம்பமே ஒரு கோணலோடு ஆரம்பிக்கப் போகிறது போலும்!

சில கேள்விகள்:
***  பாலம் கட்ட ஆரம்பிக்கும்போது அந்தக் கட்டிடம் அங்கேயேதான் இருந்தது. திட்டமிட்டவர்கள் ஏன் அந்தக் கட்டிடத்தை அப்போதே 'கண்டு கொள்ளவில்லை?'

*** அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரிடம் இக்கட்டிடத்திற்குரிய செப்புப் பட்டயம் இருக்கிறதாம். என்ன வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இப்போது அரசு அதை கைக்கொள்ள முடியாதா?

*** விரயமான ஒரு கட்டிடம். ஒரு bulldozer பக்கத்தில் போய் நின்று கொஞ்சம் உறுமினாலே அந்தக்கட்டிடம் தானே கீழே விழுந்து விடும். எந்த வித பயனுமின்றி இப்போது இடத்தை மட்டும் அடைத்துக் கொண்டு நிற்கிறது.

*** இப்படிப்பட்ட ஒரு கட்டிடத்தை இடித்துப் புறந்தள்ள அரசுக்கு, அரசு அதிகாரிகளுக்கு, நீதி மன்றத்திற்கு ஆளுமை இல்லையா?

***  அரசியல்வாதிகள், கூலிப்படைகள் தனியார் இடங்களை வளைத்துப் பிடித்து "வாங்கி' விடுவதாக அடிக்கடி செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றன. இங்கு பல மக்களின் நலனுக்காக, இடிந்து நிற்கும் ஒரு கட்டிடடம் இருக்கும் இடத்தை அரசால் கைப்பற்ற முடியாதா? இதில் நீதி மன்றத்தின் இடர்பாடு எப்படி வரமுடியும்?*** தேவையில்லாத இந்த ஒரு இடர்பாட்டை நீக்க எந்த அரசு அதிகாரியும் ஏன் முயலவில்லை? அதற்குரிய வெற்றியைத் தடுப்பது எதுவாக இருக்கும்? அரசு அதிகாரிகள் தான் என்னை பொறுத்தவரை இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியவர்கள். ஆனால் அவர்களுக்கு .. பாவம் .. என்ன பிரச்சனையோ? அவர்களால் முடியாவிட்டாலும் அரசை நிர்ப்பந்தித்து இந்த இடத்தை மீட்க வேண்டியதும் அவர்களின் கடமையே.

மூக்கைத் தொட இந்த சாலையைப் பயன்படுத்தும் நாங்கள் எல்லோரும் தலையைச் சுற்றிதான் மூக்கைத் தொடவேண்டுமா?


**
இதுபோன்ற சில சமூகக் குறைபாடுகளை ' யாரைத்தான் நொந்து கொள்வதோ?" என்ற தலைப்பில் சில பழைய இடுகைகள் உண்டு. அவைகளை இங்கே காணலாம்:

1******

2******


3******


*
CM Cell, திரு ஸ்டாலின், திரு அழகிரி  -- மூவருக்கும் இதை அனுப்பியுள்ளேன். பதிலிருந்தால், பயனிருந்தால் பின் வந்து சொல்வேன்.

12 comments:

துளசி கோபால் said...

ஏங்க தருமி,

அது என்ன பாபர் கும்மட்டமா.... சட்னு தரைமட்டம் ஆக்க!!!!


அரசுக்கு பவர் இருக்கணுமே. பொதுநலனுக்கு வேணுமுன்னா அதுக்குரிய காசைக் கொடுத்து அரசே அதை வாங்கிக்க முடியாதா?

என்ன சட்டமோ போங்க:(

கபீஷ் said...

அது கோயிலா அதத்தான் கட்டிடம்னு சொல்றீங்களா :)))

(நீங்க மட்டும்தான் கேள்வி கேப்பிங்களா)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நான் அந்தப் பக்கம் போவதில்லை இப்போதெல்லாம்.கேள்வி நியாயமாகத்தான் இருக்கிறது.அவர்கள் சொந்த உபயோகம் என்றால் கழுத்தில் கத்தியை வைத்தேனும் வாங்கி விடுவார்கள்.ஆனால் இது அரசாங்கப் பணம் என்பதால் அப்படிச் செய்ய மாட்டார்கள், மேலும் அப்படி சுற்றிப் பாலத்தைக் கட்டுவதால் பட்ஜெட் கூடும் நாலு காசு கையில பொரள வேணாமா சார்.

நிகழ்காலத்தில்... said...

அருகில் ஏதாவது அரசியல்வாதிக்கு சொந்தமான இடம் இருந்தால் இந்த வேலைகள் எல்லாம் சட்டு புட்டுனு நடக்கும்.

பலனடைவது சாதரண மக்கள், பாதிக்கப்படுவதும் சாதரணர் என்றாபோது இப்படித்தான் இருக்கும்.

யாருக்கு நட்டம் என்கிற மனநிலையில் அரசு ஊழியர்கள்..

:((

வடுவூர் குமார் said...

அந்த கட்டிடத்தை விஜயகாந்தை வாங்கச்சொல்லி “இடித்துவிடலாம்”. :-)
ரொம்ப சுலபம்.

Thamarai Selvan said...

Yenga Areavukku Yeppo sir paalam varum, naanum andha area dhan..

Thamarai Selvan said...

Yenga areala yeppo paalam varumooo??
naanum adhe area dhan sir..

Anonymous said...

மதுரையில் இது மாதிரி நிறைய அபத்தங்கள் இருக்கிறது.. என்ன செய்ய???

வால்பையன் said...

த கிரேட் அழகிரி இருந்தும் மதுரை இப்படி இருக்கா!?

SurveySan said...

did you talk to that building owner and see why he was opposing the sell?

i am sure, if he gets paid the market rate, he would be obliging.

The govt. rate may have been much less than the prevailing rates.

மணிவண்ணன் said...

இதையே வெள்ளைக்காரன் செஞ்சா ஆகா ஓகோன்னு சொல்லுவோம் ;)

இங்க பாருங்க - http://i.imgur.com/MD4Is.jpg

தருமி said...

//இதையே வெள்ளைக்காரன் செஞ்சா ...//

வெள்ளைக்காரன் அந்தப் படத்தில என்ன செஞ்சிருக்கான்??

Post a Comment