’புதிய தலைமுறை’ வந்த பிறகு செய்திகள் கேட்பது கொஞ்சம் அதிகமாகி விட்டது. நேற்று - 9.செப்ட். ஒரு செய்தி கேட்டேன். இன்று தினசரியில் வருமா என்று எதிர்பார்த்தேன். அந்த செய்தி வரவில்லை. (செய்திகளை முந்தி தருகிறது புதிய தலைமுறை ..!!)
நேற்றைய செய்தியில் ப்ரணாப் முகர்ஜி சொன்ன செய்தி ஒன்று வந்தது. ஜன லோக்பாலில் சொல்லியாகி விட்டது - அடிப்படை அரசு ஊழியர்களுக்கும் இந்த சட்டத்தில் இடமுண்டு என்று. அதனால் மத்திய அரசு புதியதாக மார் தட்டிக்கொண்டு ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறதாம். அடிப்படை நிலை ஊழியர்கள் தங்கள் பதவிக் காலத்தில் ஊழல் செய்யலாம்; எந்த அளவு ஊழல் செய்கிறார்களோ அதன்படி அவர்களது பதவி இறுதிக்காலத்தில் வரும் மொத்தப் பணத்தில் சில ‘டிஸ்கவுன்ட்’ செய்யப்படும் என்று ஒரு சட்டம். செய்தியில் பார்த்த வரிகள்: சிறிய அளவில் ஊழல் செய்தால் இறுதிப் பணத்தில் 10%, அதிக அளவில் ஊழல் செய்தால் 20% எடுக்கப்படும்!
அடப்பாவிகளா! -- இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. யார் பெரிய மடையர்கள் என்று புரியவில்லை. எனக்கு வரும் வேலை முற்றுப் பணம் 10 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நான் முதலில் இருந்தே “ஒழுங்காக” கணக்கு வைத்து ஊழல் செய்ய வேண்டும் போலும். 10 question paper விற்றால் 10% = 1 லட்சம் எடுத்துக் கொள்வார்கள்; அப்போ நான் விற்கும் ஒரு question paperக்கு பத்தாயிரத்திற்கு மேல் விலை வைக்க வேண்டுமோ? பெரிய ஊழல் செய்ய வேண்டுமென்றால் ஒரு கல்லூரி வாத்தியார் என்ன செய்ய முடியும்னு தெரியலையே! சரி ... அப்படி ஒரு பெரிய ஊழல் செய்யணும்னா .. அது இரண்டு லட்சத்திற்கு மேல் வருமானம் வர்ர மாதிரி செய்யணும். எல்லாம் நல்லா யோசித்து ப்ளான் பண்ணணும் ! அப்போதான் ‘வரவுக்கும் செலவுக்கும்’ சரியா இருக்கும்.
சரி ... கடைநிலை ஊழியருக்கு இப்படி ஒரு தண்டனை. ஒரு அமைச்சன் கோடி கோடியாக ஊழல் செய்தால் அவனை என்ன செய்வார்கள். (மிஞ்சிப் போனால் நாலைந்து மாதம் ஏதாவது ஒரு சிறையில் வைத்து விட்டு அதன் பின் விடுதலை ... ஊழலில் திரட்டிய சொத்து ... அதை என்ன செய்வார்கள்? ஒன்றுமே செய்யவே மாட்டார்கள். அனைத்து சொத்தும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் ....
என்ன மடத்தனமான திட்டம். ஊழல் செஞ்சா தண்டனை உண்டு; சாதாரணமாக வரவேண்டிய பணம் எதுவும் வராது; ... இப்படி ஏதும் சொன்னால் ஒரு பயம் இருக்கலாம். மக்கள் கொஞ்சம் ஒழுங்காக இருக்க முயலலாம். ஆனால் இந்த அரசு பட்டியல் போடுவது மாதிரி போட்டால் என்ன லாபமோ தெரியவில்லை; இந்த சட்டத்தைக் கொண்டுவந்த அந்த ‘அதீத புத்திசாலியை’ என்ன சொல்லி வாழ்த்துவது; இதை ஏற்றுக் கொண்ட அரசையும், அமைச்சரையும், அதிகாரிகளையும் என்ன சொல்லி வாழ்த்துவது என்றும் புரியவேயில்லை.
வெட்கக்கேடாக இருக்கிறது.
======================
சில செய்திகள் வருகின்றன -- 2G ஊழலுக்கு பாடை கட்டியாகி விட்டது என்பது அந்தச் செய்தி.
2G ஊழலில் ராசாவும் கனிமொழியும் மன்மோகன், சிதம்பரம் பெயர்களை இழுத்ததும் மெல்ல மத்திய அரசு இதைப் பூசி மெழுகப் பார்க்கிறதாமே. C.B.I. ஒரு தகவல் தருகிறது; இந்த அமைப்பு இது வரை யாரையேனும் உருப்படியாக கழுவேற்றியுள்ளதா என்பதே ஒரு பெரிய கேள்வி. இதோடு C.A.G.சில தகவல்கள் தந்தன. ஆனால் இப்போது T.R.A.I. புதிய தகவல்களோடு வருகின்றன. 2G ஊழலில் அரசுக்கு ஏதும் நட்டமேயில்லை என்று ஒரு பெரும் போடு போடுகிறது.
ஆக, சீக்கிரம் ராசாவும், கனிமொழியும் எந்த ஊழலும் செய்யாதவர்கள் என்ற பட்டியலில் வெளிவருவார்கள்.
வெட்கக் கேடாக இருக்கிறது .......
=======================
மதுரையில் போன வாரத்தில் செய்தித் தாளில் வந்த செய்தி: வண்டிகளில் number plates சரியான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் தண்டனை என்று செய்தி.
சட்டம் என்று சொல்லி விட்டார்களே என்று யாராவது சரியாக எழுதாத தங்கள் வண்டி எண்களை மாற்றுகிறார்களா என்று பார்த்தால் அப்படி யாரும் இல்லை; அரசு ஒரு சட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்தால் மக்கள் அதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ’அட .. போங்கய்யா .. நாலைந்து நாளைக்கு போலீஸ் தேடும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டால் பிறகு என்ன’ என்ற மனப்பான்மை நம்மில் அநேகருக்கு.
ஏன் நாம் மட்டும் இப்படி சட்டங்களை மதிக்காத மாக்களாக இருந்து தொலைக்கிறோம் ...?
நம்ம ஊர் மக்களை நான் நல்லாவே பார்த்து விட்டேன். சட்டம் என்றால் மதிக்கும் மனப்பான்மையே கிடையாது. ஆனால் அரசு கொஞ்சம் ‘கையை ஓங்கினால்’ அனைத்தும் சரண்டர்! இரண்டு சான்றுகள்: இந்திராவின் அவசரகாலச் சட்டத்தில் நம் தமிழ் மக்கள் அடைந்திருந்த முட்டாள்தனமான அடிமைத் தனத்தைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். உதாரணமாக, மூன்று முறை வேலைக்குத் தாமதமாக வந்தால் தண்டனை என்று ஒரு பேச்சு - வெறும் பேச்சுதான் - அடிபட்டது. அடேயப்பா ... மக்கள் பதறிப் போய் சரியான காலத்திற்கு அலுவலகம் வந்தது எனக்கு ஒரு அவலமாகப் பட்டது. இது போல் நம் தமிழ் நாட்டில் நடந்தவைகளைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்: இந்த மக்களுக்கு முதுகெலும்பு என்பதே கிடையாது; வெறும் பூச்சிகள் .. புழுக்கள். வெட்டு வீராப்புகள்.
மதுரையிலேயே இன்றும் நடக்கும் ஒரு வழக்கம். சாலையில் ஒரு சண்டை என்று வைத்துக் கொள்ளுங்கள். யாராவது ஒருவன் ‘ஏய் .. ஆள் தெரியாம விளையாடாதே!’ என்று அடுத்தவனைப் பார்த்து முதலில் எவன் சொல்கிறானோ அவனே வின்னர்!
இரண்டாவது சான்று: ஜெயலலிதா மழைநீர் வடிகால் திட்டம் நல்ல ஒரு ‘பய முறுத்தலில்’ அழகாக நடந்தேறியது.
நமக்கு எது சரி அதன்படி நடக்க வேண்டும்; கம்பெடுத்தால் மட்டும் ஆடக்கூடாது; சட்டம் என்று ஒன்றிருந்தால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் ... இப்படியெல்லாம் நமக்கு எப்போது தோன்றும்????????
*