Thursday, March 14, 2013

645. இதையெல்லாமா ப்ளாக்ல எழுதுவாங்க ...?




*



 ரெண்டு நாளா ஒரே போராட்டம்.


1997-ல் புது வீட்டுக்கு வந்தோம். அந்த ஏரியாவில எங்க வீடுதான் கட்டக் கடைசி. எதுத்தாப்ல ஒரு ப்ளாட். அதைத் தாண்டினா நெல் வயல். நாங்க போன நேரம் டிசம்பர் 27ம் தேதி. கொஞ்சம் மழை பெஞ்சிருந்தது. பத்தாதா ... எங்க ஏரியா முழுவதும் ஒரே சகதி. வீட்டுக்கு வரணும்னா 30 அல்லது 40 மீட்டருக்கு முன்னாலேயே செருப்பைக் கழட்டி, கால் சட்டையை முழங்காலுக்கு மேல மடிச்சி விட்டுக்கிட்டு, சர்க்கஸ் சாகசக்காரன் கயித்து மேல நடக்கிறது மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டே வரணும். இந்த லட்சணத்தில சில சமயம் தண்ணிப் பாம்பு, தவக்காளை எல்லாம் நம்ம பக்கத்தில் ஜாலியா வரும். தங்க்ஸ் கூட வந்தா இன்னொரு பெரிய சர்க்கஸ். அவங்க செருப்பு, என் செருப்பு, அவங்க பை, என் பை அப்டின்னு ஒரு நீள பட்டியல். எல்லாத்தையும் நான் தூக்கிக்கிட்டு நான் முன்னாலே போறேன் ... நீ பின்னாலே வாயேன் .. அப்டின்னு ஒருத்தர் பின்னால இன்னொருத்தரா போவோம். அதுலயும் டேஞ்சர் இருந்ததாலே அவங்கள முன்னால உட்டுக்கிட்டு நான் பின்னால, பாதுகாவலா போவோம். வண்டி வீட்டைத் தாண்டி ஒருத்தர் வீட்ல நிக்கும். காலையில் வீட்டை விட்டுப் போகும்போதே ரப்பர் செருப்பு ஒண்ணு போட்டுக்கிட்டு போய் கல்லூரியில் போய் அங்க வச்சிருகிற ஷூவை எடுத்துப் போட்டுக்கணும்.

ஒரு மழை பெஞ்சா வீடு பூரா வித விதமான பூச்சிகள் வந்திரும். ஒரு பூச்சி .. நம்ம மேல உக்காந்திருக்கேன்னு கையால தட்டி விட்டா ... அம்மாடி .. அப்படி ஒரு நாத்தம் கையில இருக்கும். கழுவினாலும் உடனே போகாது. முதல் நாள் வீட்டுக்கு வந்து சாமான்களை அடுக்கும்போது இந்தப் பூச்சிகளின் பயத்தில் கதவை சாத்தி வைத்து விட்டு அடுக்கிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க மெல்ல வெளியே வந்தேன். நம்ம த்ரில்லர் கதை எழுதுறவங்க எல்லோரும் சொல்வாங்களே .. கும் இருட்டு அப்டின்னு. அது மாதிரி வெளியே இருந்தது. அடடா மணி எட்டு ஆயிருக்கும்னு நினச்சி, டைம் பார்த்தா அப்போதான் ஆறு மணி ஆகியிருந்தது. அட ஆறு மணிக்கே இப்படி உலகம் இருட்டிடுமான்னு இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சுது. நாலு மழைத்துளி விழுந்தால் போதும் ஆரம்பிச்சுடும் இசைக் கச்சேரி. எங்கிருந்து தான் இத்தனை தவக்காளைகளோ ... பெரும் சங்கீதப் போட்டி நடக்க ஆரம்பிச்சிடும்.

இப்படி ‘இயற்கையோடு இயைந்த வாழ்க்கை’ வாழ்ந்து கொண்டிருந்தோமா ... வீட்டுக்கு சுற்றுச் சுவர் கிடையாது. எல்லா இயற்கைகளும், அதாவது பாம்பு, பல்லின்னு நிறைய வீட்டுக்குப் பக்கம் வரும் ... போகும். நண்பர்களிடமிருந்து எதற்கும் பாதுகாப்பிற்காக ஒரு நாய் வளர்த்துக் கொள் என்ற ஞான பாடம் வந்தது. வீட்டில் நால்வருக்கும் நாயென்றால் பிடிக்காது. அதையும் அப்படி கொஞ்சுவார்களே அதைப் பார்த்தால் சுத்தமாக ஆகாது. அதுவும் என் பெண்கள் உற்வினர்கள் வீட்டுக்குப் போகும் போது அவர்கள் வீட்டு நாயைப் பார்த்து பக்கத்தில் வந்தால் நாற்காலிக்கு மேல் நின்று கொள்ளும் ஆட்கள். இருந்தாலும் ஒரு நாய் இருக்கட்டுமே என்று நினைத்து நண்பர் ஒருவரிடம் கேட்டேன். நாலைந்து நாளில் ஒரு டாபர்மேன் க்ராஸ் இருக்கு .. வேணுமான்னு கேட்டார். நானும் போய் பார்த்தேன். காதெல்லாம் தொங்கிக் கொண்டு டாபர் லுக்கில் ஒரு நாய் இருந்தது. சரின்னு எடுத்து வந்தேன். நாய் நல்ல கருப்பு. நீளமாகவும் இல்லாம கொஞ்சூண்டு முடி. கருப்பு வண்டு அப்டின்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தோம். பின்னால் குட்டையா ஒரு பெயர் வேணுமேன்னு யோசிச்சி ஒரு பெயரை வச்சோம். Minky அப்டின்னு பெயர் வச்சோம். Mink coat கோட் மாதிரி எங்க ஆளு வழு வழுன்னு இருக்காம்! டாபர் மேன் அப்டின்னா வாலை குட்டையா வெட்டியாகணும்னு அமெரிக்காகாரன் சொல்லிட்டானாம். ரவி நாயைத் தூக்கிக்க வண்டியில போய் வாலையும் வெட்டிட்டி வந்திட்டோம். வாலை வெட்டியதும் அது ரேன்க் ரொம்ப கூடிப் போச்சு. பாக்குறவங்க எல்லாம் வாலை வெட்டிட்டா ரொம்ப கோவமா இருக்குமாம்; அதான் வெட்டியிருக்காங்க; தள்ளிப் போங்க அப்டின்னு சொல்ற அளவுக்கு எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சாங்க.

அதென்னமோ தெரியலை. நம்ம ஆளு ‘பைரவ குலமே’ இல்லை போலும். வளர்க்கிறவங்க கிட்ட எல்லா நாயும் எப்ப்டி அந்நியோன்யமா இருக்கும். இது சுத்தமா அப்படியில்லை. தெரியாம கால் கீல் அதுமேல பட்டிருச்சின்னு வச்சுக்குவோம். ஒரு சவுண்டு கொடுக்கும். அரட்டியா போய்டும். கழுத்தில செயினை மாட்டணும்னா அதோடு ஏதாவது பேசிக்கிட்டே ரொம்ப ஜாக்ரதையா போடணும். எங்க எல்லாத்திட்ட இருந்தும் ரொம்ப் அந்நியமா இருக்கும். யாராவது வீட்டுக்கு வந்து முன் கதவைத் திறந்தா தல உள்ளே வந்தவங்களை ஒரு கை பார்க்கும்னு நினச்சீங்கன்னா ரொம்ப தப்பு. முதல் வேலையா சுதந்திரக் காத்தை சுவாசிக்கணும்னு வெளியே போய்டும். கூப்பிட்டாலும் ஓடிடும். பக்கத்தில போனா கொஞ்சம் உருமும். பயத்தில வந்திருவோம். முதலில் வெளியே போனா திரும்பி வர அரை நாள் ஆகும். வயசு ஆக ஆக ரொம்ப சீக்கிரமே வீட்டுக்குள்ள வந்திரும். அதிலும் ஒரு விசேஷம் என்னன்னா .. இப்போ கடைசி சில மாதங்களில் வெளியே போனா திரும்பி எங்க வீட்டுக்குள்ள வர்ரதுக்குப் பதிலா பக்கத்து வீடு ரெண்டு வீடு இருக்கு. அங்க போய் அவங்க வீட்டுக் கதவை திறந்து வச்சா சீக்கிரம் அவங்க வீட்டுக்குப் போயிரும். என்னா நன்றி விசுவாசம்!

நாய்ன்னா பிடிக்காதுன்னு சொன்ன தங்க்ஸிற்கு நாள் ஆக ஆக ரொம்ப பாசமா போச்சு. இத்தனை வருசத்தில பிரிட்ஜ் ப்ரீசர்ல கட்டாயம் கோழிச் சில்லறை இருக்கணும் - வாயில்லாத ஜீவன் வயித்துக்கு! அது இல்லைன்னா தங்க்ஸ் என்ன மேஞ்சிருவாங்க. கொஞ்சம் கூட மிங்கி மேல பாசமே இல்லாம போய்ட்டேனாம். அதனால் தான் அதையெல்லாம் ஒழுங்கா வாங்கி வைக்கிறதில்லைன்னு ஒரு பெரிய ரிப்போர்ட் வரும். பயந்து போய் தொடர்ந்து அதையெல்லாம் வாங்கிக் குடுத்திர்ரது தான். கோழிக்கடைக்கு எங்களுக்காகப் போனதை விட மிங்கிக்காக போனது தான் அதிகம். அட .. கோழிக்கடைக்கார பாண்டியே, ‘என்ன சார்.. மிங்கி எப்படி இருக்கு?’ன்னு கேக்கிற அளவுக்கு ஆகிப் போச்சு.

இதில இன்னொரு பெரிய விஷயம் என்னன்னா தங்க்ஸ் தவிர வீட்ல நாங்க மூணு பேரும் தலைட்ட கடி வாங்கி ஊசியெல்லாம் போட்டுக்கிட்டோம். வெளிய யாரையும் தொட்டது கூட கிடையாது; ஆனா எங்கள் கடிச்சாச்சி ... தங்க்ஸ் மட்டும் தப்பிச்சிட்டாங்க. அதுனால் பாசம் ரொம்ப ஓவர். ஆனால் குரைக்கிற காலத்தில் அது சவுண்டுக்கு எல்லோரும் நல்லா பயப்படுவாங்க. அது ஒரு பெரிய நன்மை. அதே மாதிரி எங்க ஏரியாவின் முன்னாள் குடிமக்களான பாம்பு மவராசாக்கள் வரும் போது வேறு மாதிரி குலைக்கும். தங்க்ஸ் கண்டு பிடிச்சிடுவாங்க. மூணு தடவை நல்ல பாம்போடு சாருக்கு போட்டி நடந்திருக்கு. அதெப்படி அதுகளுக்குத் தெரியுமோ .. வேறு சில பாம்புகளை கவ்வி மொட்டை மெத்தைக்குத் தூக்கிட்டு போய்டும். ஆனால் நல்ல பாம்புன்னா தூரத்தில இருந்து குரைக்கும். அதைப் போகவும் விடாது. ரெண்டும் தூரத்தில் நின்னு மாத்தி மாத்தி ஆட்டம் காமிக்கும்.

நாளாச்சு. வழக்கமா பைரவர்களின் ஆயுசு 12 வருஷம் தானாம். அதன் ஒரு வயசு நம்ம எட்டு வயசுக்கு ஒத்திருக்கும் அப்டின்னாங்க. ஆனால் நம்ம ஆளு 15 ஆண்டுகள். ரெண்டு மூணு வருஷத்திற்கு முந்தியே கண் பார்வை போச்சு. கண்ணைப் பார்த்தால் கறுப்பு கோலி குண்டு மாதிரி இருக்கும். cataract ஆகிப் போச்சு. வழக்கமா எது சொன்னாலும் கேட்காது. ஆனால் walk போகலாமான்னு சொன்னா உடனே தல கேட் பக்கம் வந்து நிற்கும். நம்மளை ரொம்ப ஆர்வத்தோடு சுத்தும். எல்லாம் ‘சுதந்திர வேட்கை’ தான் ! நான் நடையை விட்டு விளையாடிட்டு வந்தாலும் கொஞ்ச தூரமாவது கூட்டிட்டு போகணும். நான் வர்ர நேரம் சரியா வந்து கேட் பக்கத்தில நிக்கும்.

ஆனால் இப்போ ஒரு மாசமா அதால நடக்கவே முடியலை. no walk! நடக்கவே ரொம்ப கஷ்டப்பட்டது. அதிலும் முன்னறைக்கு வந்து வழியை மறிச்சி படித்துக்கும். அதைத் தாண்டவும் பயந்து போய் தாண்டுவோம். கடைசி பத்து நாளா ரொம்ப சிரமப்பட்டது. பின்னால ஏதோ ஒரு கட்டி. அப்பவே euthanasia செஞ்சிருவோம்னு சொன்னேன். தங்க்ஸிற்கு மனசு கேக்கலை. கட்டி உடைந்து ... ஒரே சோகம். நடக்கவும் முடியலை. கடைசி இரு நாளா மிகவும் பாவமாக இருந்தது. ஒரே அழுகை. ஒரு தடவை அழுகையில் ‘ம்மா’ அப்டின்னு ஒரு சவுண்டு வந்தது. தங்க்ஸிற்குத் தாங்க முடியவில்லை. vet doctors பலரை முயற்சித்துப் பார்த்து விட்டேன். எல்லோரும் தாங்கள் அதைச் செய்வதில்லை என்றோ மருந்து இல்லை என்றோ சொல்லி விட்டார்கள். இரண்டு நாளாக முயன்று ஒருவர் வந்தார். என்னைத் தலையைப் பிடிச்சுக்க சொல்லி ஒரு பழைய காலத்து பெரிய ப்ளாஸ்டிக் syringe வைத்து கருணைக் கொலை செய்தார். முதல் syringe போடும்போது கொஞ்சம் உடல் ஆடியது. அப்போது அதன் cataract கண் வழியே என்னைப் பாவமாகப் பார்த்தது போலிருந்தது.



முடிந்தது......



வீட்டின் பின்னால் தென்னைக்கு அடியில் வச்சிருங்க என்றார்கள். அதையே செய்தோம். படுத்திருந்த இடத்தைச் சுத்தம் செய்து, உடனே குளிப்போம் என்றேன். தங்க்ஸ் மெல்ல குளிப்போம் என்றார்கள். ‘தீட்டு .. உடனே குளிக்கணும்’ என்றேன். நான் தீட்டு சொன்னதும் அவர்களுக்குஆச்சரியம். ’என்ன புதுசா இருக்கு’ அப்டின்னாங்க. இந்த மாதிரி நோய்வாய்பட்டு இறந்தவங்களுக்காகத்தான் தீட்டுன்னு ஒண்ணு வச்சிருக்காங்க. நீங்க அதை சாஸ்திரமா பாக்றீங்க. இந்த மாதிரி சாவுக்குப் பிறகு இடம், ஆள் எல்லாம் சுத்தமாகணும்னு’ ஒரு லெக்சர் கொடுத்துட்டு குளிச்சேன்.

நாலு பேத்துக்கு உடனே நியூஸ் போயிரும்ல... நான் குளிச்சிட்டு வர்ரதுக்குள்ள சொந்தகாரங்க - தங்க்ஸ் அண்ணன் தான் - ஒருத்தங்க இரண்டு தடவை நாய் வளர்த்து கருணைக் கொலை செய்து, பெரும் அழுகையோடு தங்கள் தோட்டத்தில் புதைத்தவர்கள். அவர்களிடமிருந்து தங்க்ஸிற்கு புதைத்த பிறகு ஒரு தம்ளர் பால் ஊத்திடுங்க என்ற கட்டளை வந்தது. அதற்குள் இன்னொரு இடத்திலிருந்தும் இதே அட்வைஸ். தங்க்ஸ் என்னிடம் சொன்னாங்க. ’அட போமா’ன்னு சொல்லி, இதையெல்லாம் எதுக்கு அப்டின்னு போய்ட்டேன். சில மணிநேரம் கழித்த பின் தங்க்ஸ் மெல்ல சொன்னார்கள். ‘பால் ஊத்தணும் போல் இருந்தது. நானே போய் ஊத்திட்டேன். (அவ்வளவு எளிதாக் வீட்டின் பின் பக்கமெல்லாம் போகாத ஆள்!) அதோடு, ’மாதா எண்ணெய்’ இருந்தது, அதையும் ஊத்திட்டு வந்திட்டேன் என்றார்கள். ம் .. ம் .. வளர்த்த பாசம் ..! :(

இதையெல்லாம் எழுதப் போறேன்னு சொன்னேன்.


‘இதையெல்லாமா ப்ளாக்ல எழுதுவாங்க ...?’ என்றார்கள்.





*

27 comments:

PPattian said...

Touching...

PPattian said...

Touching

thamizhparavai said...

:((

வவ்வால் said...

தருமிய்யா,

ரொம்ப வருத்தமான நிகழ்வு.

நானும் யூகலிப்டஸ் மரத்தடியில் ஜிம்மியை புதைத்த ஆளு தான்.அதுக்கு அப்புறம் நாயே வளர்ப்பதில்லை,வெளியில் இருந்து வரும் ஏதேனும் நாய்க்கு சாப்பாடு வைத்துவிடுவது வழக்கமாகிடுச்சு.

ஜிம்மிக்குட்டியாக இருக்கும் போது பெரிய வயர் கூடையில் வச்சி பஸ்ஸில் ஊருக்கெல்லாம் எடுத்து போயிருக்கேன்,பஸ்ஸில் பக்கத்து சீட்க்காரங்க முதலில் மிரண்டாலும்,அப்புறம் கண்டக்டர் பார்க்காம வச்சிக்கப்பானு சொல்லி காப்பாத்திவிட்டாங்க :-))

முதல் மின்னஞ்சல் உருவாக்கினப்போது ஜிம்மினு பாஸ்வேர்ட் வச்சேன்!!!

தருமி said...

//ஜிம்மினு பாஸ்வேர்ட் வச்சேன்!!! //

நானும் minkyன்னு வச்சிருந்தேன்.

அமர பாரதி said...

மிகவும் வருத்தமான நிகழ்வு தருமி சார். நான் இந்த நாளை எப்படி கடக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஐந்து உருப்படிகள் இருகின்றன. ஆனாலும் நான் அருகில் இருந்து பார்த்துக் கொள்வதில்லை, அனைத்தையும் கவனிப்பது என் அத்தை தான். ஆனாலும் இந்த பதிவு என்னை அதிர்வுக்குள்ளாக்கி விட்டது.

அமர பாரதி said...

மிகவும் வருத்தமான நிகழ்வு தருமி சார். நான் இந்த நாளை எப்படி கடக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஐந்து உருப்படிகள் இருகின்றன. ஆனாலும் நான் அருகில் இருந்து பார்த்துக் கொள்வதில்லை, அனைத்தையும் கவனிப்பது என் அத்தை தான். ஆனாலும் இந்த பதிவு என்னை அதிர்வுக்குள்ளாக்கி விட்டது.

அமர பாரதி said...

தவளைகள் நம் வாழ்வில் இயைந்தவை தருமி சார். தவளைகள் கொசு முட்டைகளையும் கொசு லார்வாக்களையும் சாப்பிட்டு விடுவதால் அவை வாழும் இடங்களில் கொசுத் தொந்தரவு சிறிது இருக்காது. மேலும் தவளைகள் இயற்கைச் சமநிலை உள்ள இடங்களில் மட்டுமே உயிர் வாழும். சாக்கடைகளிலும் நாற்றமடைந்த நீரிலும் அவை வாழாது. தவளைகள் இல்லாமை தான் இவ்வளவு கொசுக்களுக்குக் காரணம்.

சென்னை பித்தன் said...

சோகமான நிகழ்வு,ப்ளாக்கில் எழுத வேண்டிய பகிர்வுதான்

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
நல்ல பதிவு,

வாழ்வில் பல தருணங்களில் எது சரி,தவறு என வரையறை செய்வதில் சிக்கல் வரும்.

அதில் இப்பதிவு சார் கருணைக் கொலையும் ஒன்று!!

மனிதனோடு நாயும் பரிணாம வரலாற்றில் ,நாகரிக வாழ்வுக்கு வந்து விட்டது.மனிதன் போல் நாய்களிலும் சாதி உண்டு.அது சார்ந்து வாழும் முறையும் உண்டு.

பல வீடுகளில் நாய் இராஜ வாழ்வு வாழும். தெரு நாய்கள் சோற்றுக்கே சிங்கி அடிக்கும்.தெருநாய் முடிந்தவரை வாழும்,முடியாவிட்டால் இறந்து விடும்.

காட்டு மிருகங்களும் இப்படித்தான்.

வீட்டில் நாம் வளர்க்கும் நாய், பூனை மீது பாசம் இருந்தாலும், அவை நோய்வாய்ப்படும் சூழலில் நாம் என்ன மருத்துவம் பார்தாலும், நடக்க முடியாவிட்டால் பராமரிக்கவே முடியாது.அப்படி பராமரிபது அந்த ஜீவனுக்கு செய்யும் துன்பமே!!

இங்கு ஜீவ காருண்யம் செல்லாது.

உடனே அப்போது மனிதனுக்கும் இதை செய்யலாம் என சொல்கிறாய என மிருக ஜீவ பாசம் கொண்ட‌ சகோக்கள் கேடகலாம்.

நம் நாட்டு சட்டத்தில் மனித கருணைக் கொலைக்கு இடம் இல்லை. அவ்வளவுதான். இந்த விவாதம் முடிவுக்கு வராது!!!

தர்ம யுத்தம் தொலைக்காட்சியில் கூட இதை அலசினார்கள்.

நன்றி!!!

ILA (a) இளா said...

வெகு வருடங்கள். கிட்டதட்ட ஒரு குடும்ப உறுப்பினர் மாதிரியே ஆகியிருக்கும் :(

Agila said...

:(((
வீடு வெறுமையா இருக்குமே இப்போ?

Agila said...

:((
வீடு வெறுமையா இருக்குமே இப்போ?

Unknown said...

மனுசனுக்கே இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் !நாய் பட்ட பாடுபட்டாலும் நாயைக் காப்பாற்ற முடியாதுதான் !இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்த நீங்கள் ,ஜோக்காளியின் நேற்றைய பதிவைப் படித்து மனசை
தேற்றிக் கொள்ளுங்கள் ....
தின 'சிரி ' ஜோக்!நகரத்துப் பிள்ளைகள் வளரும் விதம் !
''பால் எப்படி கிடைக்குதுன்னு ,என் பையனீடம் கேட்டா 'டிப்போவில் இருந்துன்னு 'சொல்றான் !''
''உங்க பையன் பரவாயில்லை ,என் பையன் 'வாசலில் தொங்க விட்டிருக்கிற பையில் இருந்து ன்னு சொல்றானே !''

Unknown said...
This comment has been removed by the author.
Dr.Dolittle said...

Sir plant "siriyanangai" around ur house.snakes will not come.

Dr.Dolittle said...

Once a dog owner asked me to do euthanasia. It was a geriatric patient with renal failure. With shivering hands I ve injected thiopentone to the dog. That was a govt. Supply drug.that was not at all working. Owner was crying near by. Then I used magnesiumsulphate. Then after I never committed such cases. I used to refer such cases to some other doctors..

தருமி said...

Dr.Dolittle

சிரியாநங்கை இன்னும் சில செடிகள் சொன்னார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. எங்களது வழக்கமான சொற்றொடர்: அநியாயத்துக்கு அவங்க இடத்துல வந்து நாம் உக்காந்துட்டு அவங்க வர்ராங்கன்னு சொல்றது தப்பு!

கோமதி அரசு said...

minky குழந்தை மாதிரி வளர்ந்து இருக்கும். கூடவே வாழ்ந்த ஒரு ஜீவனை இழப்பது போல கொடுமை வேறு இல்லை.

வளர்ப்பு பிராணிகள் இறப்பது மனதை கஷ்டப்படுத்தும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-) சொல்லவே இல்லையே.

TBR. JOSPEH said...

நீங்க அந்த காலத்துல இருந்தா மாதிரிதான் நாங்களும் இப்ப (ஆவடியில) இருக்கோம். வீட்ட சுத்திலும் வெத்து இடம். பாம்புகள் அவ்வப்போது வந்து போகின்றன. ஆனால் ஊர்க்காரர்கள் அது ஒன்னும் செய்யாதுங்க என்கிறார்கள். இத்தன வருசத்துல பாம்பு கடிச்சிதுன்னு நியூச் இல்லைங்க என்கிறார்கள். சென்னையிலிருந்து 25 கி.மீ தூரமே உள்ள இடம் இது. ஆனாலும் ஒரு குட்டி கிராமம் போல்தான் இருக்கிறது. சிரியாநங்கை செடியை வைத்தால் வராது என்கிறார்கள். ஆனால் எங்குமே அந்த செடி கிடைக்கிறதில்லை.

அ. வேல்முருகன் said...



15 ஆண்டு துணை - மரணம்
வாழ்வின் இயல்புகள்
என்ன செய்ய?

மாதேவி said...

நீண்டகாலம் நம்கூடவே வாழ்ந்து பிரிவது துன்பம் தரும்.

தருமி said...

Tbr Joseph

பதினாறு ஆண்டுகள் எனக்குப் பின் தங்கி விட்டீர்கள் போலும். காலம் செல்லச் செல்ல பழகிக் கொள்வீர்கள்.
(நான் ஒன்றும் இங்கு நமது மத நம்பிக்கைகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!)

TBR. JOSPEH said...

(நான் ஒன்றும் இங்கு நமது மத நம்பிக்கைகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!)//

சொல்லித்தான் பாருங்களேன். இஸ்லாம் மதத்தின் மீதுள்ள எனது ஈடுபாட்டைப் பற்றி ஒரு தொடர் எழுதப் போகிறேன். அப்போது வாருங்கள்:))

தருமி said...

அட .. போப் பிரான்சிஸிற்கு அடுத்த ஆள் நீங்க தானா ...?!

JaY Reborn @ Jaes said...

ஏழு நாய்களை வளர்த்தேன்.
நாய்கள் சரணாலயமும் வைத்திருந்தேன்.
இப்படி பல கதைகள் உண்டு.
கண்களை கலங்க வைத்துவிட்டீர்கள்.
எழுத தூண்டுகின்றன உங்கள் வரிகள். அருமை.

Post a Comment